Showing posts with label அனுபவம். Show all posts
Showing posts with label அனுபவம். Show all posts

நார்மனின் கதவு

”சாராபாய் ஹால் எங்க இருக்கு?” சென்ற ஞாயிற்றுக்கிழமை IIT Madras Research Park வளாகத்திற்குள் குறைந்தபட்சம் ஐந்து செக்யூரிட்டி ஆசாமிகளிடமாவது இந்தக் கேள்வியைக் கேட்டிருப்பேன். கல்லூரி மாணவர்களுக்கு ஒரு வகுப்பெடுப்பதற்காக அங்கே சென்றிருந்தேன். மேற்படி கேள்விக்கான பதிலாக குணா படத்தில் ”பார்த்த விழி பார்த்தபடி” பாடல் துவங்கும்முன் கமலஹாசனுக்கு எல்லோரும் அபிராமி இருக்கும் திசையைக் கை காட்டுவார்களே, அந்த மாதிரி கை காட்டினார்கள். ஆனால் வெவ்வேறு திசைகளில்.

அவர்கள் கை நீட்டலைப் பின்பற்றி முதலில் ஒரு கட்டிடத்தை எட்டிப்பார்த்து அங்கே சாராபாய் இல்லை என்று தெரிந்து கொண்டு, பிறகு அடுத்த கட்டிடத்திற்குள் கண்ணாடிக் கதவைத் திறந்து பார்த்தால் அது ஃபுட் கோர்ட். பிறகு எதிர்பக்கமிருக்கும் கட்டிடத்திற்குச் சென்று அங்கு வாசலில் வீற்றிருக்கும் வட இந்தியக் காவலாளியிடம் கேட்டால், ”மெயின் எண்ட்ரன்ஸ் ஜாயியே” என்றான். எல்லா வாசல்களும் பார்ப்பதற்கு ஒரே மாதிரி இருக்க எது மெயின் எண்ட்ரன்ஸ் என்பதில் குழப்பமாயிருந்தது. ஒரு வழியாக கட்டிடத்தின் இன்னொரு பகுதியில் ’சாராபாய்’ என்று போர்டு போட்ட அந்தக் ஹாலை கண்டுபிடித்து விட்டேன். போர்டானாது ஒருவர் கண்ணுக்கும் தெரிந்துவிடக்கூடாது என்பதில் சிரத்தையெடுத்திருந்தார்கள். ஒரு ஜாமெட்ரி பாக்ஸ் சைஸ்தான் இருக்கும். இந்த இடத்தை அடைய ஒரு இருபது நிமிடங்களாவது தேடி நடந்திருப்பேன். என்ன காரணம்? 1) வளாகத்தில் எந்த இடத்திலும் எது எங்கே இருக்கிறது என்ற அறிவிப்புப் பலகைகளோ அம்புக்குறிகளோ இல்லை. 2) அங்கே வேலை செய்யும் வட இந்திய செக்யூரிட்டிகளுக்கு சாராபாயைத் தெரிந்திருக்கவில்லை.

சாராபாய் ஹாலுக்குள் நுழைய இரண்டு கதவுகள் இருந்தன. முதலாவது ஒரு கண்ணாடிக் கதவு. இரு புறமும் திறக்கலாம். கைப்பிடியைப்பிடித்து முன்பக்கம் இழுக்கலாம். அல்லது எதிர்ப்பக்கமாகத் தள்ளலாம். அதைத் தள்ளித் திறந்து உள்ளே சென்றேன். மூன்றடிக்கு அப்புறம் இரண்டாவது கதவு. மரத்தால் செய்யப்பட்டது. அதன் கைப்பிடியைப் பிடித்து முதலாவது கதவைத் தள்ளின மாதிரியே தள்ளினேன். திறக்கவில்லை. என் பக்கமாக இழுத்தேன். திறக்கவில்லை. பிறகு கைப்பிடியை கீழே திருப்பி உள்பக்கமாகத் தள்ளினேன். திறக்கவில்லை. மீண்டும் என் பக்கமாக இழுத்ததும் திறந்தது. இந்த என் தடுமாற்றத்தை ஏற்கெனவே ஹாலுக்கு வந்தமர்ந்திருந்த முத்துக்குமார் பார்த்துப் புன்னகைத்துக்கொண்டிருந்தார். இருவரும் ஒருவரையொருவர் பார்த்ததும் “நார்மன்ஸ் டோர்” என்று சொல்லிக்கொண்டோம்.

அதன் பிறகு ஹாலுக்கு வந்து சேர்ந்த பிற மாணவர்களும் அந்தக் கதவைத் திறக்கத் தடுமாறுவதை நாங்களிருவரும் புன்னகையுடன் பார்த்துக்கொண்டிருந்தோம். நாங்கள் மாணவர்களுக்கு எடுக்கச் சென்ற வகுப்பு, பயனர் அனுபவ வடிவமைப்பு (User Experience Design) பற்றியது. அந்த வகுப்பிற்கான எங்கள் பவர் பாயிண்ட் ப்ரசண்டேஷனில் “நார்மன்ஸ் டோர்” என்று ஒரு தலைப்பும் இருந்தது. அதுவே எங்கள் புன்னகைக்குக் காரணம். இந்தக் கதவு அனுபவத்தைப் பற்றி மாணவர்களிடமே கேட்டு இந்தத் தலைப்பு சம்பந்தமான விஷயத்தை ஒரு அரை மணிநேரம் ஓட்டினோம். இது நாம் உபயோகிக்கிற ஒவ்வொரு பொருளிலும் அனுபவிக்கிற விஷயம்தான். நார்மன் ”The design of everyday things" என்ற புத்தகத்தின் ஆசிரியர். கதவுகளைப் பற்றி அவர் என்ன சொல்கிறார் கேளுங்கள்.


டபுள் டெக்கர் டீஸண்ட் ஃபேமிலீஸ்

"ஹவ் டேர் யு டாக் லைக் திஸ்?" என்ற ஒரு கர்ஜனைக் குரல் கேட்டு திடுக்கிட்டு காதிலிருந்த ஹெட்ஃபோனைக் கழற்றினேன். பெங்களூர்-சென்னை டபுள் டெக்கர் எக்ஸ்ப்ரஸ். குரல் வந்த திசையில் உயரமாய், அகலமாய் பவுன்ஸர் போன்ற தோற்றத்துடன் ஒரு இளைஞன். அந்தக் கேள்வி வீசப்பட்டது அவனது முன்சீட்டில் உட்கார்ந்திருந்த ஒரு 35 வயது மதிக்கத்தக்க பாப் தலை யுவதியிடம்.
குரல் தாக்குதல் தொடர்ந்தது. பங்காருப் பேட்டையிலிருந்து சென்னைக்கே கேட்கும் போல கத்தினான். "டு யு திங் வி ஆர் ஃப்ரம் அன் இல்லிட்ரேட் ஃபேமிலி? ஹவ் கேன் யு ஆஸ்க் திஸ் கொஸ்ஸன் டு மை ஃபாதர் யு @#₹%&? வாட் இஸ் யுவர் ஏஜ்? வாட் இஸ் மை ஃபாதர்ஸ் ஏஜ்? அறிவில்ல ஒனக்கு? அட்ச்சி பல்லெல்லாம் ஒட்சிர்வேன். ஹவ் கேன் யு டெல் லைக் திஸ் டு மை ஃபாதர் ஹூ இஸ் ஃப்ரம் அ வெரி டீசண்ட் ஃபேமிலி அண்ட் ஆல்ஸோ வித் அ ரெஸ்பெக்டபிள் ப்ரொஃபெஸ்ஸன். எச்ச நாயி!. யு லுக் லைக் அ பிட்ச் ஃப்ரம் அ லோக்கல் இன் சென்னை." - உச்சஸ்தாயியில் கத்தினான்.
அந்தப் பெண்மணி சக பயணிகளைப் பார்த்து, "என்னங்க இவ்ரு இப்டி பேஸரார்? ஐ ஜஸ்ட் ஆஸ்க்டு ஹிம் - கொஞ்சம் நேரா உக்காருங்க, மேல படுது-ன்னு! இது தப்பா? வாட்ஸ் ராங் இன் தட்?"
கடோத்கஜ இளைஞன் இம்முறை மும்பைக்கே கேட்கும்படி இரைந்தான். "வாட் த ஃப்.. நீ எப்டி கேக்கலாம்? அவருக்கு அம்பத்து மூணு வயசு." இந்த சண்டையில் மேலே இடித்ததாகச் சொல்லப்பட்ட அவன் தந்தை "என்னப் பாத்தா உனக்கு எப்டித் தெரியுது? நான் என்ன பொறுக்கியா? யு ஸூட் மைண்ட் யுவர் வேர்ட்ஸ்."
போனை எடுத்துக் காதில் வைத்தார். கடோத்கஜன் "கமிஷனர கூப்டுங்கப்பா.. இவள சும்மா விடக்கூடாது.." இதை மூன்றாம் உலகப்போராக மாற்றியே தீருவது என்கிற தீர்மானத்துடன் அவனும் ஃபோனை எடுத்துக் காதில் வைத்தான்.
அப்பனும் மகனும் உறுமிக்கொண்டே கோச்சுக்குள் வேறு பக்கம் நகர்ந்து போனார்கள். அவர்கள் அந்தப்பக்கம் போனதும் இந்த அம்மணி நியாயம் கேட்டுக் கத்த ஆரம்பித்தாள். உடனே அந்தப் பையனின் அம்மா அவளிடம் வந்து ஏதோ காதில் சொல்ல, பாப்தலைப் பெண்மணி "நீங்க எதுக்கூ என் கால்லே வுளறீங்க. உங்க பைய்னை ஒழுங்கா வளக்கப் பார்ங்க. எப்டி இண்டீஸண்டா கத்றான் பாருங்க.. அதுவும் இன் சச் அ பப்ளிக் ப்ளேஸ்.. ஸ்கவ்ண்ட்ரல்.."
பையனும் அப்பனும் காதில் ஃபோனோடு திரும்பவும் சம்பவ இடத்துக்கு பரபரப்பாக வந்தார்கள். இருவர் கண்களிலும் கனல் பறந்தது. அந்தப் பெண்மணியை நெருப்பாகப் பார்த்தார்கள். பிறகு மீண்டும் ஃபோனில் ரயில்வே போலீஸ், கமிஷனர், ஐஜி, ஹை கோர்ட் ஜட்ஜ், 108 ஆம்புலன்ஸ், ஃபயர் சர்வீஸ், கமாண்டோ படை, சீ.பி.ஆர்.எஃப், சி.பி.ஐ, ஆளுங்கட்சி, எதிர்கட்சி, இடைக்கால முதல்வர், பிரதம மந்திரி, ராணுவ அதிகாரிகள், குடியரசுத் தலைவர், எஃப்.பி.ஐ, யு.எஸ். நேவி ஸீல், இஸ்ரேல் உளவு அமைப்புகள், அவன் ஆஃபிஸ் வாட்ச்மேன் அனைத்தையும் முயற்சி செய்துவிட்டு லைன் கிடைக்காமல் 'டிடிஆரை கூப்டுப்பா..' என்றான் கடைசியாக. "ஐ வாண்ட் திஸ் ப்ளடி லேடி டு கெட் டவுன் இன் தி நெக்ஸ்ட் ஸ்டேஷன். ஸோ தட் எவ்ரிபடி இன் திஸ் ட்ரெய்ன் கேன் கண்டின்யூ திஸ் ஜர்னி இன் அ பீஸ்ஃபுல் மேன்னர். அதர்வைஸ், நான் இவளப் புடிச்சு வெளில தள்ளி கொன்னுட்டு ஜெயிலுக்குப் போய் பத்தே நாள்ள வெளில வந்துருவேன். பாக்றீங்களா.. பாக்றீங்களா? யாருகிட்ட? இவ அத்தினி பேரு முன்னாடியும் எங்கப்பாகிட்ட மன்னிப்புக் கேக்கணும். இல்லேன்னா நான் சும்மா விட மாட்டேன். யு ஆல் டோண்ட் நோ ஹூ ஐ ஏம். ஐ வில் ஷோ நவ்.. ரைட்ட்ட் நவ்.."
அர்னாப் கோசாமியிடம் ட்ரெய்னிங்க் எடுத்ததுபோல அவன் குரல் டெஸிபல் எக்கச்சக்கமாக உயர்ந்து ரயிலின் மேற்கூரை பிளக்கும் அபாயம் எழுந்தது. அவன் ஓங்கி அடித்தால் ரயில் தடம் புரண்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
"தம்பி.. விடுப்பா.. கீப் கொயட் ஃபார் சம் டைம். தெரியாம ஏதோ சொல்லிட்டாங்க.. விடு விடு.. போய் உக்காரு" என்ற ஒருவரை.. "உங்கப்பாவ யாராச்சும் தப்பா பேசினா கேட்டுட்டு சும்மா இருப்பீங்களா?" என்று கேட்டான். கேட்டவர் காதில் நிச்சயம் ஓட்டை ஏற்பட்டிருக்கும். சத்தம் அப்படி!
பாப்தலை கோபம் தலைக்கேறி திடீரென்று "அ யம் காலிங் த போலீஸ் நவ்.."என்று அறிவித்தாள். போனை எடுத்தாள்.
" கூப்டுறீ.. பொறம்போக்கு.. வரச் சொல்லு.. நாங்க இங்கதான் இருப்போம். பெரியவங்ககிட்ட எப்டிப் பேசணும்னு தெரியாத எச்சக்கல.." துணைக்கு அப்பங்காரனும் சேர்ந்துகொண்டார்.
நான் பொறுமையிழந்து.."ப்ரதர்.. விடுங்க.. போய் உக்காருங்க. ஒரு சின்ன விஷயத்துக்கு ஏன் இப்டி கோபப்படறீங்க... அமைதியா இருங்க.." என்றேன். அவன் என்னைப் பார்த்த பார்வையில் 'உன்னையும் ரயிலிலிருந்து தள்ளி விடுவேன்" என்கிற பதில் இருந்தது.
தலையில் கைவைத்து உட்கார்ந்திருந்த அவன் அம்மா எழுந்து இருவரிடமும் "போதும் விடுங்க.. ப்ளீஸ்.." என்று கும்பிட்டுக் கெஞ்ச, பவுன்ஸர் பாய் கண்களை உருட்டி "அம்மா.. இது சும்மா வுட வேண்டிய பிரச்னயில்ல. நீ பேசாம உக்காரு.. அயம் டாக்கிங் டு அ தேர்ட் ரேட்டட் பன்னாட ஹூ ஹேஸ் டிஸ்ஹானர்ட் யுவர் ஹஸ்பண்ட் இன் அ பப்ளிக் ப்ளேஸ்.. மைண்ட் இட்... நீ இப்டி அவளுக்கு வக்காலத்து வாங்கினா மிதிச்சுட்டு போய்ட்டே இருப்பா..."
அவனை அடங்கி உட்காரச் சொல்லி ரயிலுக்குள் கண்டனக் குரல்கள் எழுந்தன. அவனோ 'அவள எங்கப்பாட்ட மன்னிப்புக் கேக்கச் சொல்லுங்க..' என்கிற ஒரே தீவிரவாதக் கோரிக்கையை திரும்பத் திரும்ப முன்வைத்துக் கொண்டிருந்தான்.' இந்தக் களேபரத்துக்கு நடுவில் "பஜ்ஜீ.. சூடான வடேய்ய்ய்ய்.." என்று இடைபுகுந்தவனுக்கு வழிவிட்டு .."நீங்க போங்கண்ணா.. போய் வ்யாபாரத்தப் பாருங்க.." என்றுவிட்டு ஆடியன்ஸிடம்.. "ஹவ் டேர் ஷீ.. " என்று மறுபடியும் முதலிலிருந்து ஆரம்பித்தான்.
ஒரு மிகப்பெரிய கோர சம்பவம் இந்த ரயிலில் நிகழப் போவதை அறியாமல் என் பக்கத்து இருக்கைக்காரர் மொபைலில் 'சங்கிலி புங்கிலி கதவத் தொற' பார்த்துக் கொண்டிருந்தார். எதிர் ஸீட்டு ஜடாமுடி இளைஞன் சரசர சத்தத்தோடு "லேஸ்' பாக்கெட்டைக் காலி செய்துகொண்டே என்னிடம் 'அயம் ப்ரெத்தி ஸ்ஸ்ஸ்யூர் தத் தீஸ் கைஸ் கான்னா எந்தத்தெய்ன்ன்ன் அஸ் ஃபார் நெக்ஸ்த் தூ அண்த் ஹாஃப் அவஸ்.." என்றான்.
"பட்டப் பகலில் ஓடும் ரயிலிலிருந்து தள்ளிவிட்டு பெண்.." என்று நான் தினத்தந்தி தலைப்பு யோசித்துக் கொண்டிருக்கும்போது டிடிஆர் வந்தார். என்ன ப்ரச்ச்னை என்று குசுகுசுவென்று கேட்டார். அவனது கத்தலை அவர் லாகவமாகக் கையாண்டார். அந்தப் பெண்மணியைப் பார்த்து "நான் உங்களுக்கு வேற ஸீட் தர்ரேன்.. வாங்க" என்று பக்கத்து கம்பார்ட்மெண்டுக்குக் கூட்டிப் போனார். கடைசிவரை மன்னிப்பெல்லாம் கேட்காமல் "பாஸ்டர்ட்ஸ்.." என்று சன்னமாய் சொல்லிக்கொண்டே டிடிஆரின் பின்னால் போனாள். தடியன் தொடர்ந்து கத்திக்கொண்டேயிருந்தான்.
அவள் போன திசையைப் பார்த்து ஹிஸ்டீரியா வந்தவனைப் போல "ஐ வில் கில் யூ" என்று கத்தினான். கொஞ்ச நேரத்தில் குரல் தளர்ந்து இருக்கையில் விழுந்தான். பிறகு ரயிலின் சப்தம் மட்டும் கேட்டுக்கொண்டிருந்தது. நான் எழுந்து பாத்ரூம் போகும் வழியில் அவனைப் பார்த்தேன். வாயைப் பிளந்து தூங்கிக் கொண்டிருந்தான். அந்நியனிலிருந்து அம்பியாக மாறியிருந்தான். ஒரு கருட புராண கபீம் குபாம் தவிர்க்கப்பட்ட நிம்மதியுடன் அனைவரும் தத்தம் மொபைல்களில் மீண்டும் அமிழத் தொடங்கினார்கள்.

யார் என்று தெரிகிறதா?

ஒரு விஷேச மொபைல் அழைப்பு வந்தது. அன்னோன் நம்பர் என்பதால் எடுக்கத் தயங்கினேன். என் மொபைலில் ஒரு போதும் சரியாக வேலை செய்திராத ட்ரூ காலர் ஆப்பானது வழக்கம்போல இந்த எண்ணையும் யாரென்று கண்டுபிடித்துக் கொடுக்கவில்லை. (பேசி முடித்தபிறகு இன்னார், அண்ணார் என்று சொல்வது அதன் வழக்கமாயிருந்தது).

விஸ்வரூபத்தில் கமல் கேட்டமாதிரி மறுமுனை புதிர் போட்டது. "யாரென்று தெரிகிறதா?"

குரல்களை வைத்து நபர்களை அடையாளம் காணும் திறமை எனக்கு இல்லை என்றும் நீங்களே சொல்லிவிடுங்கள் என்றும் சொன்னேன். ஆண் குரல் என்று மட்டும் கணிக்க முடிந்தது.

குரல் விடுவதாயில்லை. "நான் பாலு பேசறேன். உடுமலைபேட்டை. உங்கூட 6F, 7B, 8E, 9E, 10D -ல ஒண்ணாப் படிச்சேன்."

புருவங்களை நெரித்து, மூளையை அலசி, கன்னத்தில் கைவைத்து, தலை முடியைப் பிசைந்து என எப்படி யோசித்தும் இந்த அபாயகர ஞாபகக்காரனை நினைவுக்குக் கொண்டுவர முடியவில்லை. ஒரே ஒரு கேள்வியில் 'பாலு' வை அவன் கோர்ட்டுக்குத் தட்டிவிட்டேன்.

"தெரியலையே.. எந்த பாலு?"

மூளையில் ஒரே ஒரு நியூரான் உதவிக்கு வந்தது. லேசாய் பொறி தட்டி, "N. N. பாலனா?" என்றேன். சில பேர்களை இப்படி இனிஸியலோடு மட்டுமே நினைவறைகளில் சேமித்துவைத்ததால் வந்த சிக்கல்.

சரியாகத்தான் கண்டுபிடித்தேன் போலும்.

"நானேதான். பரவால்லயே.. ஞாபகம் வெச்சிருக்க."

பிறகு குசல விசாரிப்புகள். மலரும், கிளறும் நினைவுகள். "இரு.. உங்கூடப் பேச இன்னொரு ஃப்ரெண்டு வெய்ட் பண்றான். ஃபோனை அவன்ட்ட தர்ரேன்.."

மறுபடியும் ஒரு ஹலோ. மறுபடியும் ‘நான் யார் என்று தெரிகிறதா?.’ இந்தக் குரல் கொடுத்த ஒரே க்ளூ "நானு, பாலு, அய்யர் ரமேஷ் எல்லாரும் ஒண்ணாவே சுத்துவோம்.."

இந்த முறை வித்தியாசமாக இருக்கட்டுமே என்று கண்களை உருட்டி யோசித்துப் பார்த்ததில் ஒரே நாளில் இரண்டாம் முறையாகப் பொறி தட்டியது.

"மோகன்ராஜா?"

"யெஸ்"

அடடே என்று ஆச்சரிய அதிர்ச்சி ஒன்று என்னைக் கவ்வியது. மனத்திரையில் ஸ்பைரல் சுற்ற ஆரம்பித்து ஃப்ளாஷ்பேக் ஓட ஆரம்பித்தது.



இந்த மோகன்ராஜ் மேற்சொன்ன எல்லா வகுப்புகளிலும் என்னோடு படித்தவன்தான் (என்று நினைக்கிறேன்). இரண்டு பேரும் ஆரம்பத்தில் நல்ல நண்பர்களாக இருந்தோம். அவன் நன்றாக வரையக்கூட செய்வான். ஆனால் எட்டாம் வகுப்பு வந்தபோது எதற்கென்றே தெரியாமல் எங்களுக்குள் போர் மூண்டது. அடிக்கடி மோதல் நிகழ ஆரம்பித்தது. என்ன காரணத்துக்காக என்று பின்னாளில் எல்லா ரூமிலும் உட்கார்ந்து யோசித்திருக்கிறேன். பிடிபடவில்லை.

மோகன்ராஜ் அப்போதே கராத்தேவில் ப்ளாக்பெல்ட் வாங்கியிருந்தான் என்பதால் பாதுகாப்பு காரணங்களுக்காக வெறும் வாய்ச்சண்டையுடன் நிறுத்திக்கொள்வேன். கபடி விளையாடும்போது தாட்டியான பையன்களைக் கூட மணலில் வீழ்த்தும் லாகவத்தை அறிந்திருந்தேன் என்றாலும் அவனின் அப்பர் கிக், லோயர் பஞ்ச்-சுக்கெல்லாம் அப்போதைய எனது நோஞ்சான் உடம்பு தாங்கியிராது என்பதால் ரிஸ்க் எடுக்கவில்லை. அவனோ பேஸ்கட் பால் போஸ்ட்டில் தொற்றி ஒரே மூச்சில் தொடர்ந்து ஐம்பது அறுபது புல்-அப்ஸ் எடுப்பவன்.

பெரியகடைவீதிக்கு இணையாகச் செல்லும் சந்து ஒன்றிற்குள் எங்களுக்குள் இறுதிக்கட்ட யுத்தம் நடந்தது. கெட்ட வார்த்தை ஏவுகணைகளால் (நாயே.. பன்னி போன்ற..) தாக்கிக்கொண்டோம். அதற்கப்புறம் இருவரும் பேசிக்கொள்ளவில்லை. ஏன் நிமிர்ந்து பார்த்துக்கொள்ளக்கூட இல்லை. பத்தாவது படிக்கும்போது ஒரு முறை கபடி விளையாட்டின்போது அவன் எனது எதிர் டீமில் இருந்தான். கபட் கபட் என்று சொல்லிக்கொண்டே வந்து நான் அசந்த நேரத்தில் இடது காலை நூற்றென்பது டிகிரி கோணத்தில் உயர்த்தி எனது தாடையைப் பதம் பார்த்தான். நிலைகுலைந்து நின்றேன். நான் அவுட். 0.09% மீதமிருந்த எங்கள் நட்பும் அன்றோடு மொத்தமாய் அவுட்.

பிறகு +2 முடித்தபிறகு அவன் சட்டம் படிக்கப் போனான் என்று யாரோ சொல்லிக் கேள்விப்பட்டது மட்டும் ஞாபகத்திலிருந்தது.

முப்பது வருடங்கள் கழித்து அந்த மோகன்ராஜின் குரல்.

'நம் சண்டை ஞாபகமிருக்கிறதா' என்றேன். சிரித்தான். விவரங்கள் புரியாத வயதில் எதற்கென்றே தெரியாமல் நிகழ்ந்த நிகழ்வுகள். எதற்கும் அர்த்தங்கள் கிடையாது.

பிறகு ஒரு சில கதைகள் பேசினோம். நாங்கள் படித்த பள்ளிக்கு அவன் சமீபத்தில் சென்றபோது தலைமையாசிரியர் அறைக்கு முன்னால் பலகையில் என் பெயர் இருந்ததைப் பார்த்ததாகச் சொன்னான்.

"ரொம்ப சந்தோஷம் நண்பா" என்றான்.

"விரைவில் சந்திப்போம்" என்றேன்.

உடனே ஃபேஸ்புக்கில் நட்பு அழைப்பை விடுத்தான். அவனது ஃப்ரொபல் பட முகம் என் நினைவிலிருந்த முகத்தோடு பச்சக் என்று பொருந்திப் போனது. காலம் தந்த வழுக்கையைத் தவிர.

போனை வைத்தபிறகு நீண்ட நேரம் யோசித்துக்கொண்டிருந்தேன்.
நான் படித்த வகுப்புகளில் 9E, 10D தவிர எனக்கு வேறு செக்‌ஷன்கள் நினைவுக்கு வரவில்லை என்பது உறுத்தலாக இருந்தது. ஒரு சில வகுப்புத் தோழர்கள் தவிர வேறு யாரும் ஞாபகத்திலில்லை என்பது ஒரு குற்ற உணர்வாகத் தொக்கி நிற்கிறது.

நீண்ட நெடிய நகர வாழ்க்கை பால்ய நினைவுகளை மொன்னையாக்குகிறதா என்கிற கேள்வியுடன் தூங்கப்போனேன்.

மிளகாய்ப் பொடியும் மாங்கொட்டையும்


முன்பெல்லாம் பைக்கில் போகும்போது யாராவது லிஃப்ட் கேட்டால் உடனே எனது கருணை உள்ளம் விழித்துக் கொண்டு வண்டியை நிறுத்துவேன். சில போலீஸ்காரர்கள் வண்டியை கைகாட்டி நிறுத்தி அது அவருடைய சொந்த வாகனமேபோல் ஏறி உட்கார்ந்துகொண்டு ’அந்த பூத்தாண்ட விட்ருங்க’ என்று உரிமையாகச் சொல்வார்கள். அவர் கையிலோ சட்டைப் பாக்கெட்டிலோ வைத்திருக்கும் வாக்கி டாக்கியானது சகிக்க இயலாவண்ணம் இடையிடையே ஒரு பாம்புச் சீறல் சப்தத்துடன் அடித்தொண்டையில் கமறிக்கொண்டிருக்கும். அதே போல பெரியவர்கள் யாராவது கை காட்டினால் நிறுத்திவிடுவேன். சில டாஸ்மாக் பயனர்களும் அதில் அடங்குவர். (அதாவது அடங்க மாட்டார்கள்).

எனது கோவை நண்பரொருவர் ஒரு சம்பவத்தைச் சொன்னார். கோவையில் அவர் பைக்கில் போய்க்கொண்டிருக்கும்போது லிஃப்ட் கேட்டிருக்கிறார் ஒரு டிப்டாப்(!) ஆசாமி. இவரும் கொடுத்திருக்கிறார். ஒரு இருட்டான இடம் வந்ததும் ’இங்கே இறங்கிக் கொள்கிறேன்’ என்று நிறுத்தச் சொல்லி நண்பர் சுதாரிப்பதற்குள் அவர் கண்களில் ஆச்சி மிளகாப் பொடியைத் தூவி அவரை ஸ்தம்பிக்க வைத்து கத்தி முனையில் பர்ஸ், செயின் முதலானவற்றை வழிப்பறி செய்யப்பார்க்க, ஏற்பட்ட எரிச்சலில் சடாரென்று நடுரோட்டில் வண்டியை சைடு ஸ்டாண்ட் போட்டு இறங்கி கத்திவாலாவை நண்பர் நையப் புடைக்க ஆரம்பித்தாராம். அவனைக் கீழே தள்ளி மிதி மிதியென்று மிதித்து பிறகு அவ்வழியே வந்த ஒவ்வொருவராக இக்காட்சியைக் கண்ணுற்று தன் பங்குக்கு ’பொதுமாத்துக்’கலையை பயில ஆரம்பித்தார்களாம். இத்தனைக்கும் நண்பர் சீனாவிலுள்ள ஷாலின் டெம்பிளின் முப்பத்தாறு சேம்பர்களில் எந்த ஒன்றிலும் மழைக்குக் கூட ஒதுங்காதவர். ஆனால் மரண அடி கொடுத்தாராம்.

’அதனால யாருக்கும் லிஃப்ட் குடுக்கவே குடுக்காதீங்க” என்று அறிவுறுத்தினார். அசிடிட்டி காரணமாக எனக்கு மிளகாய்ப் பொடி அவ்வளவாக ஒத்துக்கொள்ளாது என்பதால் நிறைய யோசித்து பாதுகாப்புக் காரணங்களை முன்னிட்டு இனிமேல் யாருக்கும் லிஃப்ட் கொடுப்பதில்லை என்று தீர்மானம் நிறைவேற்றினேன்.

அதன் பிறகு என் வண்டிக்கு முன் நீண்ட கரங்கள் அனைத்தும் தோல்வியுடன் கீழே விழுந்தன. யார் கட்டை விரலை உயர்த்திக் காட்டினாலும் ஒரு தலையசைப்பைக் கூட வழங்காமல் விர்ரென்று ஸ்பீடைக்கூட்டிப் போய்விடுவேன்.

இன்று காலை ஒரு சாலைத் திருப்பத்தில் என் ஹோண்டா ஆக்டிவாவைத் திருப்பும்போது ஒரு எட்டுவயது மதிக்கத்தக்க ஒரு அழுக்கான பையன் ‘ண்ணா ..ண்ணா’ என்று கை நீட்டினான். ‘அங்க விட்ருங்கண்ணா..’ என்றான். நான் எனது லிஃப்ட் மறுப்புக் கொள்கையைத் தளர்த்தாமல் ஆக்ஸிலரேட்டரை முறுக்க அவன் வலது கையில் பிடித்திருந்த மாங்கொட்டையைச் சப்பியபடி கூடவே ஓடிவந்தான். திருப்பம் என்பதால் நான் வண்டியின் வேகத்தைக் குறைத்திருக்க அவனுக்கு வசதியாகப் போய்விட்டது. ஓடும் வண்டியைப் பிடித்து ஏறப்பார்த்தான். எனக்குப் பதறிவிட்டது. எங்கேயாவது விழுந்துவிடப்போகிறானே என்று வேகத்தை இன்னும் குறைத்த மறுகணம் லாகவமாக ஏறி பில்லியனில் உட்கார்ந்துவிட்டான்.

ஏறி உட்கார்ந்த மறுகணம் அவன் என் இடுப்பைப் பிடித்துக்கொள்ளப் பார்க்க, “எலேய்.. என்னப் புடிக்காம உக்காரு.. எங்கடா போணும்?” என்றேன். நான் நெளிய என் வாகனமும் நெளிந்தது. அவன் கையில் மாம்பழச்சாறு முழங்கை வரை வழிந்துகொண்டிருந்தது. நான் போட்டிருந்ததோ வெள்ளை நிறம் கலந்த ஒரு டீ-சர்ட். கறை நல்லதுதான். ஆனால் போகாது.

அடுத்த திருப்பத்தில் இறங்குவான் என்று பார்த்தால் அவன் பயணம் முடிவிலியாக இருந்தது. எனக்கு கவனம் முழுக்க அவன் மாங்கொட்டையில் மையம் கொண்டிருந்தது. திடீரென்று முப்பது கிமீ வேகத்தில் செல்லும் என் வாகனத்தை ஓவர்டேக் செய்து ஏதோ ஒரு வஸ்து மஞ்சளாக வந்து விழுந்ததைக் கவனித்தேன். வேறொன்றுமில்லை. தன் கடைசி ருசிவரை உறிஞ்சப்பட்ட மாங்கொட்டைதான். அடுத்ததாக அவனுக்கு தன் கையை என் டீசர்ட்டில் துடைக்கும் எண்ணம் உதிக்கும் முன்னே சட்டென்று நிறுத்தினேன். ‘எறங்கிக்கடா.. நான் இங்கே எறங்கணும்..”

அவன் நிறுத்திவிட்டு “தாங்ஸ்ண்ணா..” என்று குதிநடை போட்டு இலக்கில்லாமல் அடுத்த சந்தில் திரும்பினான்.

அவனை நிறுத்தி “எப்டியோ.. என் சட்டை பூரா மாம்பழக் கையத் தொடச்சிட்ட..” என்றேன்.

’இல்லண்ணா..’ என்று சொல்லிவிட்டு தொள தொள பாக்கெட்டில் கைவிட்டு எதையோ எடுத்தான். அவன் கை கொள்ளாத இன்னொரு பெரிய மாம்பழம். அதை பந்து போல தூக்கிப் போட்டுப் பிடித்துக் கொண்டே சினிமாவில் க்ளைமேக்ஸில் வருவது போல ஆடியன்ஸூக்கு முதுகைக் காட்டியவாறு நடந்து போய்க்கொண்டேயிருந்தான்.

இதனால் அறியப்படும் நீதி

அது சினிமாவில் வரும் ஒரு ஸ்டண்ட் காட்சியை ஒத்திருந்தது. இன்று பல்லாவரம் - துரைப்பாக்கம் நெடுஞ்சாலையில் எனக்கு முன்னால் பைக்கில் போய்க்கொண்டிருந்த ஆள் திடீரென சறுக்கி, பைக் சாலையில் பல அடி தூரங்கள் சறுக்க்க்க்க்க்க்கிக்கொண்டே போக, அந்த ஆளும் வண்டியுடனேயே சர்ரென்று சாலையில் தேய்த்தவாறே இழுத்துச் செல்லப்பட்டு பிறகு ஒரு ஏழெட்டுத் தடவை கட கடவென உருண்டார்.
நல்லவேளையாக முன்னாலோ, பின்னாலோ கார்களோ, கனரக வாகனங்களோ எதுவும் இல்லை. நானும் இன்னும் ஓரிருவரும் வண்டியை நிறுத்தி அவரையும், அவர் பைக்கையும் ஓரம் கட்டினோம். அது ஒரு கல்லூரி மாணவன். முழங்கையிலும், முழங்காலும் சிராய்த்து சிவப்பாய் ரத்தத் திட்டுகள். அவனால் இடது கையைத் தூக்க முடியவில்லை. வலி முகத்தில் தெரிந்தது. ப்ராக்சர் ஆகியிருக்கலாம் என்று நினைத்தேன். தலை சுற்றுகிறது என்றான். நான் என் பையனின் கிரிக்கெட் கிட் பேகிலிருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்துக் குடிக்கக் கொடுத்தேன். பாதி மயக்கத்தில் சரிந்தவனை ஒரு லோடு அடிக்கும் மினி டெம்போவில் உட்காரவைத்தோம்.
தெளிந்தபின் ”எதுக்குப்பா இவ்ளோ வேகமா போற?” என்று கேட்டதற்கு, ”ரோட்டில் பள்ளம் இருந்ததை கவனிக்கவில்லை” என்றான். திரும்பிப் பார்த்தபோது பள்ளம் எதுவும் என் கண்ணில் படவில்லை.
உதவி செய்ய வந்த டெம்போ ட்ரைவரும், இன்னொருவரும் அவனை பக்கத்திலிருந்த மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதாகச் சொன்னார்கள். ’நீங்க கிளம்புங்க சார். நாங்க பாத்துக்கறோம்’ என்றார்கள். அவனிடம் ஃபோன் நம்பர் வாங்கிக்கொண்டு கிளம்பும்போது, ’தலைல ஏதாவது அடி பட்டுச்சாப்பா?” என்றேன். “இல்லை” என்றான்.
ஹெல்மெட் அணிந்திருந்தான்.

ஒப்பணக்கார வீதியிலிருந்து ஒரு வாசகர் கடிதம்

95-ல் என் முதல் கதை கல்கி இதழில் வெளியானபோது எனக்கு ஏற்பட்டது புல்லரிப்பு என்றால், அதற்கு வந்த வாசகர் கடிதத்தை என் முகவரிக்கு ஒரு உறையில் போட்டு கல்கி அலுவலகம் அனுப்பிவைத்தது புளகாங்கிதம் என்று சொல்லலாம். கோவை ஒப்பணக்கார வீதியிலிலிருந்து சந்திரன் என்பவர் கதையை வெகுவாகப் பாராட்டி எழுதியிருந்தார். நானும் அப்போது கோவையில்தான் இருந்தேன். முதல் வாசகர் கடிதம் என்பதால் பத்திரமாக ரொம்ப நாள் அது என் பேகிலேயே இருந்தது.

இந்தக் கடிதம் வந்த ஒரு மாதத்திற்குப் பிறகு நானும் என் நண்பன் சரவணனும் ஒரு சாயங்கால வேளையில் ஒப்பணக்கார வீதிப் பக்கம் ஒரு வேலையாகப் போனோம். வேலை முடிந்து ஒரு பேக்கரியில் தேநீர் குடித்துக் கொண்டிருந்தபோது திடீரென்று சந்திரன் என்கிற அந்த வாசகரின் நினைப்பு வந்தது. பேகிலிருந்து அவரின் அந்தக் கடிதத்தை எடுத்து முகவரியைப் பார்த்தால் பக்கத்தில்தான் எங்கேயோ இருக்கிறார் என்று தெரிந்தது. அலுவலக முகவரி போலும். தொலைபேசி எண்ணையும் கொடுத்திருந்தார். சட்டென்று ஒரு யோசனை வந்தது. சரவணனிடம் அதைச் சொன்னபோது முதலில் தயங்கிப் பின்னர் சரி என்றான். ஒரு சின்ன விளையாட்டு!

சரவணன் ஒரு பப்ளிக் டெலிஃபோன் பூத்திலிருந்து சந்திரனைக் கூப்பிட்டு, தன்னை சித்ரன் என்று அறிமுகம் செய்துகொண்டு அவரிடமிருந்து கடிதம் வந்ததைச் சொன்னான். ”உங்க ஏரியாலதான் இருக்கோம். இப்போ வந்தா உங்களப் பாக்க முடியுமா?” என்று கேட்டான். மறுமுனையில் சந்திரன் ”செம சர்ப்ரைஸ்ங்க.. வாங்க வாங்க..” என்றது எனக்கே கேட்டது.

நாங்கள் போனபோது சந்திரன் அவர் அலுவலகத்தில் எங்களுக்காக ஆவலோடு காத்துக்கொண்டிருந்தார். முன்பே பேசி வைத்துக்கொண்டபடி சரவணன் தன்னை ’சித்ரன்’ என்றும் என்னை ’சரவணன்’ என்றும் அறிமுகப்படுத்தினான். ”நீங்க என்னைப் பாக்க வந்தது ரொம்ப சந்தோஷம்..” என்று சரவணனின் கையைப் பிடித்து இறுக்கமாய்க் குலுக்கினார். என் கையை லேசாக. பின்னர் அலுவலகத்துக்குள்ளேயே அவர் தங்கியிருந்த ஒரு அறைக்கு எங்களைக் கூட்டிச் சென்றார்.

நான் ஒரு ஓரமாய் உட்கார்ந்து அங்கே கிடந்த பாக்யா வார இதழைப் புரட்ட ஆரம்பிக்க, அவர்களிருவருக்குமிடையே குதூகலமாக உரையாடல் தொடர்ந்தது. நான் சிரிப்பைக் கஷ்டப்பட்டு அடக்கிக்கொண்டு உட்கார்ந்திருந்தேன்.

சந்திரன்: “எப்படி உங்களுக்கு இந்த மாதிரி கதைக்கரு எல்லாம் தோணுது?”

சரவணன் (என்னை ஓரக்கண்ணால் பார்த்தபடியே): ”எல்லாம் அப்பப்ப அப்படி அப்படியே தோணும்! எழுதிருவேன்..”

சந்திரன்: ”நிறைய எழுதியிருப்பீங்க போல.. உங்க எழுத்துல ரொம்ப முதிர்ச்சி தெரியுது.”

சரவணன்: “இல்ல இது என் முதல் கதைதான். போனாப் போகுதுன்னு ஏதோ போட்டிருக்காங்க போல கல்கியில..”

சந்திரன்: சேச்சே.. அது அருமையான கதைங்க. திரும்பத் திரும்பப் படிச்சேன்.. என்ன இருந்தாலும் உங்களுக்குத் தன்னடக்கம் ஜாஸ்தி..”

இப்படியே மேலும் ஒரு பத்துப் பதினைந்து நிமிடங்களுக்கு சந்திரன் வீசிய கலை இலக்கிய பந்துகளை சரவணன் சரமாரியாக சமாளித்துக் கொண்டிருந்தான்.

சந்திரன் சட்டென்று “தி.ஜா படிச்சிருக்கீங்களா? நாஞ்சில் நாடன்? நம்மூருதாங்க அவரு” என்பது போன்ற டஃப்ஃபான கேள்விகளின்போது திருதிருவென்று முழித்து பிறகு ஒருவாறு சமாளித்து “பின்னே படிக்காம? என்னமா எழுதுவாங்க!” என்றான்.

சந்திரன்: “நாவல், தொடர்கதை எல்லாம் எழுதற ஐடியா இருக்கா? இல்லை சிறுகதைகள் மட்டும்தானா?”

“எழுதிட்டாப் போச்சு? என்னடா எளுத்தாளர் சித்ரன்.. என்ன சொல்ற!..” என்றான் என்னைப் பார்த்து. ”இந்தா.. இடத்தை மாத்திக்கலாம்.. இதுக்கு மேல முடியல..” என்று எழுந்தான்.

நான் பாக்யாவிலிருந்து நிமிர்ந்து சந்திரனைப் பார்க்க, அவர் புரியாமல் எங்களிருவரையும் மாறி மாறிப் பார்த்தார்.

நான் சிரித்தபடி “ஒரு சுவாரஸ்யத்துக்கு ஒரு சின்ன விளையாட்டு விளையாடலாம்னு நினைச்சோம்.. நாந்தான் சித்ரன். அவன் சரவணன். ஸாரி..” என்றேன்.

புரியாமையிலிருந்து குழப்பத்துக்குள் விழுந்து, சந்தேகத்துக்கு மாறி, ஏமாற்றத்தைத் தொட்டு பின் சட்டென்று விடுபட்ட சந்திரன் முகம் போன போக்கை விவரிக்கவே முடியாது.

”இவந்தான் இந்த ஐடியாவைச் சொன்னான். என்னைத் திட்டாதீங்க..” என்று சரவணன் என்னைக் கை காட்ட..

சந்திரன் உடனே சமாளித்துச் சிரித்து “அதான பாத்தேன்..  ஆரம்பத்திலிருந்தே எனக்கு ஏதோ சரியில்லைன்னு பட்டுச்சு..” என்றார்.

வட போச்சே - 2

அந்தப் பிரபல எழுத்தாளர் பொள்ளாச்சியில் ஒரு லாட்ஜில் பிற திரைப்படக் கலைஞர்களுடன் தங்கியிருந்தார். அப்போது உலக நாயகன் நடித்துக்கொண்டிருந்த ஒரு திரைப்படத்தில் அவர் பணியாற்றுவதற்காக வந்திருந்தார். முன்பே கடிதத் தொடர்புகள் மூலம் நண்பர் சரசுராம் அவருக்குப் பழக்கமாயிருந்தார். நாங்கள் எழுத்தாளரின் செல்வாக்கில் படக்குழுவினருடனேயே மூன்று நாட்கள் சிங்காநல்லூர், சூலக்கல் போன்ற இடங்களில் சுற்றிக்கொண்டிருந்தோம்.

சரசுராம், மீன்ஸ், நான் - மூவரும் அவரை சந்திப்பதற்காகச் சென்றிருந்தோம். சுமாரான அந்த லாட்ஜில் எழுத்தாளருக்கு ஒரு தனி அறை ஒதுக்கப்பட்டிருந்தது. அபாரமான எழுத்தாளராகிய அவர் எங்களுடன் அவரது கதை / திரைப்பட / அனுவங்களைப் பற்றி உற்சாகமாகப் பேசிக்கொண்டிருந்தார். வந்து நின்ற லாட்ஜ் பையனிடம் வடையும், டீயும் ஆர்டர் செய்தார். ஒரு பத்து நிமிடம் கழித்து ஆர்டர் செய்த உளுந்து வடையையும், அதனுடன் தேங்காய்ச் சட்டினியையும் டேபிளில் பரப்பிவிட்டுப் போனான் லாட்ஜ் பையன்.

இலக்கியம், சிறுகதைகள், சினிமா என்று கலந்து கட்டி சுவாரஸ்யமாகப் போய்க்கொண்டிருந்தது எங்கள் பேச்சு. அப்போது மிக ஒல்லியாக ஒருவர் உள்ளே வந்தார். எழுத்தாளரைப் பார்த்துச் சிரித்தார். இருவரும் என்னவோ பேசிக்கொண்டார்கள். அப்போது எழுத்தாளர் எங்களிடம் இவர் யார் என்று தெரிகிறதா என்று கேட்டார். எனக்கு சுத்தமாகத் தெரியவில்லை. ஆனால் சரசுராமும், மீன்ஸூம் லேசாக அவரை அடையாளம் கண்டுகொண்டு, ஒரு படத்தின் பெயரைச் சொல்லி அதில் நடித்தவர்தானே என்று கேட்டார்கள். அவரும் தான் இவ்வளவு சீக்கிரம் அடையாளம் காணப்பட்டது குறித்து மகிழ்ந்து ‘ஆமாம்’ என்றார். பிறகு நண்பர்களிருவரும் வளரும் நடிகரான அவர் நடிப்பு பற்றி பாராட்டி வாழ்த்துகள் சொன்னார்கள். எளிமையான அந்த நடிகர் சுற்றுமுற்றும் பார்த்தார். பிறகு இயல்பாக டேபிளிலிருந்த வடையொன்றை படக்கென்று எடுத்து அதை சட்னியில் முக்கிவிட்டு டபக்கென்று வாய்க்குள் தள்ளினார். இந்த எதிர்பாராத செய்கையின் மூலம் வடைகளின் எண்ணிக்கையில் ஒன்று திடீரென குறைந்தது ஒரு திடுக்கிடல் சம்பவமாக இருந்தது. வடை சாப்பிட்டவுடன் நடிகர் ’வரட்டா’ என்று கிளம்பிப் போய்விட்டார். பிறகு மறுபடியும் வடையை ஆர்டர் பண்ணினோமா, இல்லை இருந்த வடைகளையே ஆளுக்குக் கொஞ்சம் பிய்த்துத் தின்றோமா என்றெல்லாம் இப்போது நினைவில்லை. ஆனால் தமிழ்கூறும் நல்லுலகிற்கு இப்படியொரு டைட்டில் கிடைத்ததே அந்த நடிகரால்தான். அந்த எழுத்தாளர்: ம.வே.சிவகுமார்.

வடைபோச்சே - 1:

வட போச்சே - 1

எழுத்தாளர் அ.முத்துலிங்கம் அவர்களின் இந்த ஸ்டேட்டஸைப் படித்ததும் முன்னொருநாள் நடந்த சம்பவம் ஒன்று ஞாபகத்திற்கு வந்தது. https://www.facebook.com/appadurai.muttulingam/posts/563785150363657:0

நானும் எனது நண்பர் ஒருவரும் ஒரு க்ளையண்டைப் பார்க்கச் சென்றிருந்தோம். க்ளையண்ட் ஆகப்பட்டவர் வீட்டிலேயே ஒரு பெட்ரூமை அலுவலகமாக மாற்றியிருந்தார். அவருடன் பேசிக்கொண்டிருந்தபோது சமையலறையிருந்து வடை சுடுகிற வாசம் வந்தது. சிறிது நேரம் கழித்து அவரது மனைவியார் ஒரு தட்டில் ஒரு பத்துப் பதினைந்து சூடான மசால் வடைகளைக் கொண்டுவந்து நாங்கள் சாப்பிடுவதற்காக வைத்தார்.
கூடவே தேநீரும். க்ளையண்ட் ரொம்ப நேரமாக நிறுத்தாமல் பேசிக்கொண்டேயிருந்ததால் இடையில் குறுக்கிடவேண்டாம் என்று நாகரிகம் கருதி நானும் நண்பரும் தட்டில் கைவைக்கவில்லை. மசால்வடை என்பது எனக்கு மிகவும் பிடித்த ஐட்டம் என்பதால் ஒரு குறுகுறுப்பு இருந்துகொண்டே இருந்தது.

இப்படியே பல நிமிடங்கள் கழிந்தன. வடைகளிலிருந்து வெளியேறும் ஆவி நின்றுபோனதை வைத்து சூடு ஆறிவிட்டதென்பதை உணர்ந்தோம். திடீரென அவர் தேநீர் ஆறுகிறது குடியுங்கள் என்று சொல்லிவிட்டு வடைகள் இருந்த தட்டை மேஜைக்கு அந்தப்பக்கம் எங்கள் கைகளுக்கு எட்டாத இடத்திற்கு நகர்த்தி வைத்துவிட்டு லாப்டாப்பில் மும்முரமாக எதையோ காண்பிக்க ஆரம்பித்தார்.

இப்படியாக இருபது நிமிடங்கள். தேநீர் முடிந்தது. மீட்டிங்கும் முடிந்தது. சரி மீண்டும் சந்திப்போம் என்று க்ளையண்ட் எழுந்து நின்றுவிட்டதால் இப்படியும் உலகத்தில் அநியாயங்கள் நடக்குமா என்று நினைத்தபடி அப்படியே வடைத்தட்டை கடைசியாக ஒருமுறை ஓரக்கண்ணால் பார்த்துவிட்டு வெளியேறினோம். கைக்கும் எட்டவில்லை. வாய்க்கும் எட்டவில்லை.

வடைபோச்சே - 2

ஜீவகாருண்யம்


எங்கள் தெருவில் நிறைய நாய்கள் இருக்கின்றன. தெருவில் என்று சொன்னதாலேயே அவைகள் தெருநாய்கள்தான் என்று உங்களுக்குத் தெரிந்திருக்கும். ஒரு பதினைந்து இருபது இருக்கலாம். ஒரே பிரசவத்தில் 15 குட்டிகளை ஈன்றுதல் போன்ற நிகழ்வுகளால் அவைகளின் வம்சம் அனுதினம் வளர்ந்துகொண்டுதான் இருக்கிறது. கடிப்பது, ஆளைப்பார்த்தால் உறுமுவது போன்ற உபத்திரவங்கள் தராத சாது நாய்கள்தான். இரவில் ஊர் அடங்கியபின் அவைகளின் இன்னிசைக் கச்சேரி ஆரம்பமாகிவிடும். அவைகளுக்கிருக்கிற டெர்ரிடரி மற்றும் இன்னபிற பிரச்சனைகள் காரணமாக கர்ணகடூரமான குறைப்புகள், ஊளையிடுதல் என்று விதம் விதமாக சப்தங்கள் கோரஸாகத் தொடரும். இந்த வீட்டுக்குக் குடிவந்த துவக்கத்தில் இது மிக மிக எரிச்சலைத் தருவதாக இருந்தது. பல தினங்களில் இரவு சரியாக 11.45க்கு நாய்களின் ஊளைச் சத்தம் ஆரம்பிக்கும். இந்த அமானுஷ்யமும் புரிபடாமலேயே இருக்கிறது. ஒரு நாள் இரவு வெகுநேரம் மொட்டைமாடிக்கு மேல் இருக்கும் தண்ணீர்த் தொட்டியின் மேலமர்ந்து நானும் என் மச்சினரும் பேசிக்கொண்டிருக்கும்போது இதேபோல் நாய்கள் ஊளையிட ஆரம்பித்தன. உடனே நான். ’சரி வாங்க கீழே போவோம். மணி பதினொன்னே முக்கால் ஆயிருச்சு’ என்று சொல்ல அவர் உடனே மொபைலில் மணி பார்த்து, ‘எப்படி இவ்வளவு சரியா சொல்ற?’ என்று கேட்டார். நாய் ஊளைச் சத்தத்தை வைத்துச் சொன்னேன். டெய்லி இதே நேரத்துக்கு சரியா ஆரம்பிக்கும்’ என்று சொன்னதும் பயந்துபோய் ’வா.. போகலாம்.’ என்று வேகமாக படியிறங்க ஆரம்பித்தார்.

விஷயம் இதுவல்ல. எதிர் அபார்ட்மெண்டில் ஒருவர் இருக்கிறார். ரிடையர்டு ஆசாமி. அவரிடம் ஒரு பேஷ்ஹௌண்ட் வகை நாய் இருக்கிறது. அதை மேய்ப்பதற்காக தினமும் ரோட்டுக்கு வரும்போது கூடவே தெருநாய்களும் அவருடன் ஊர்வலமாகப் போகும். அவரது மனைவி, வீட்டுக்குப் பக்கத்திலேயே இருக்கும் கடைக்குச் சென்று (தெரு நாய்களும் கூடவே போகும்) ரொட்டி வாங்கி அதைத் துண்டுகளாக்கி நாய்களுக்குப் போடுவார். அவரது மகள் காலேஜூக்கோ, வேலைக்கோ போய்விட்டு ஸ்கூட்டியில் திரும்பியவுடன் நேராகக் கடைக்குச் சென்று பிஸ்கட் பாக்கெட் வாங்கி அந்த நாய்களுக்கு விநியோகம் செய்துவிட்டு பிறகுதான் வீட்டுக்கே செல்வார். காலேஜ் படிப்பது போலிருக்கிற அவரது மகன் அவ்வப்போது ஒரு ஸ்ப்ரேயர் போன்ற டப்பாவுடன் வீட்டிலிருந்து வெளிப்பட்டு ஏதாவது ஒரு தெரு நாயைப் பிடித்து வைத்துக்கொண்டு, ரோட்டிலேயே குத்தவைத்து உட்கார்ந்து அதைத் தடவிக்கொடுத்து அதற்கு ஏதோ ஸ்ப்ரே எல்லாம் அடித்து, புண்களுக்கு மருந்து போட்டு, பஞ்சால் ஒற்றி வைத்தியம் செய்வதைப் பார்த்திருக்கிறேன். பராமரிப்பு முடியும்வரை நாய்களும் சொகுசாக இணங்கி நிற்கும். அவர்களுடைய காம்பவுண்ட்டுக்கு வெளியே இரண்டு சின்னத் தொட்டிகளில் தெரு நாய்கள் குடிப்பதற்கு தண்ணீர் இருக்கும். அதில் Blue Cross என்று பெயிண்டில் எழுதப்பட்டிருக்கிறது. இந்தத் தெருநாய்கள் கூட்டாகத் தூங்குவது அதிகபட்சம் அவர்களுடைய அபார்ட்மெண்ட் வாசலில்தான்.

இவையெல்லாம் தினசரி என் வீட்டு ஜன்னல்வழிக் காட்சிகள். ’உயிர்களிடத்தில் அன்பு வேண்டும்’ என்பதற்கு உதாரணமாக, ஒரு குடும்பமே இந்த தெருநாய்கள் விஷயத்தில் மிக ஈடுபாட்டுடன் இருப்பதும், அன்பு செலுத்துவதும், அவைகளுக்கு உணவளித்து, உடல்நலம் பேணுவதும் மிகவும் ஆச்சரியப்படுத்துகிறது. அது அவர்களுடைய தினசரி கடமைகளில் ஒன்றாகவே மாறிவிட்டதைப் பார்க்கிறேன்.

இப்போதெல்லாம் இரவில் தெருநாய்கள் குறைத்தாலோ ஊளையிட்டாலோ நான் எரிச்சலடைவதில்லை. ஏதோ என்னால் முடிந்தது.

மாயாஜால மழை

பல வருடங்களாக சென்னையில்தான் இருக்கிறேன். ஆனால் பார்க்கவேண்டும் என்கிற லிஸ்டில் இன்னும் காத்திருப்பிலேயே இருக்கிற மூன்று இடங்கள் : 1) பாண்டிச்சேரி 2) கிழக்குக் கடற்கரை சாலையிலுள்ள சோழமண்டலம் ஃபைன் ஆர்ட்ஸ் வில்லேஜ் 3) மாயாஜால்.

இந்த மாயாஜாலைப் பற்றி அநேகம் பேர் சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறேன். எங்கேயோ போகும்போது வழியில் பார்த்திருக்கிறேன். ஒரு சில சினிமாக்களில் நாயக நாயகிகள் சந்திக்கும் இடமாகக் கண்டிருக்கிறேன். மற்றபடி பயணிக்கிற தூரத்திலிருந்தும் போவதற்கான வாய்ப்பு அமையவில்லை. 

போனவாரம் ஒரு நண்பர் இந்த மாயாஜால் என்னுமிடத்தில் நடந்த ஒரு சம்பவத்தை என்னிடம் விவரித்தார். மாயாஜாலில் இரவு காட்சியோ ஏதோ ஒன்றிற்கு மனைவியுடன் போயிருக்கிறார். இருவரும் வேலை நேரம் முடிந்து நேராக அங்கே சென்று திரைப்படம் ஆரம்பிக்குமுன் அங்கேயே இரவு உணவை முடித்து விடலாம் என்று திட்டமிட்டிருக்கிறார்கள். ஆனால் அவர்கள் போன நேரம் அங்கேயிருக்கிற எல்லா உணவகங்களும் மூடப்பட்டிருக்கின்றன.

நண்பர் அங்கே அரை குறையாய் மூடப்பட்டிருந்த ஒரு உணவகத்தின் முன் நின்றிருந்த இளைஞரை அணுகி சாப்பிடுவதற்கு ஏதாவது எங்கேயாவது கிடைக்குமா என்று கேட்டிருக்கிறார். அவர் அந்த உணவகத்தில் வேலை செய்பவர் போலும். ‘எல்லாமே க்ளோஸ் பண்ணியிருப்பாங்களே சார்’ என்று சொன்ன இளைஞர் சில விநாடிகள் யோசித்துவிட்டு, ’சார் நீங்க தப்பா நினைக்கலேன்னா, நான் சாப்பிடறதுக்காக கொஞ்சம் எடுத்து வெச்சிருக்கேன். அதை சாப்பிடறீங்களா?’ என்று கேட்டிருக்கிறார். நண்பரோ சங்கோஜமாய் “அய்யய்யோ.. அதெல்லாம் வேணாம்.. ஒண்ணும் ப்ராப்ளமில்ல ப்ரதர்.. நாங்க மேனேஜ் பண்ணிக்கிறோம். கேட்டதுக்கு ரொம்ப தாங்க்ஸ்” என்றிருக்கிறார்.

ஆனால் இளைஞர் விடாமல், “சார்.. இந்நேரத்துக்கு நீங்க எங்க போய் சாப்பிடுவீங்க.. வாங்க சார்.. உக்காருங்க.. நான் எடுத்துட்டு வர்ரேன்.”

“இல்லைங்க.. பரவாயில்லை.. உங்களோடதை எங்களுக்குக் குடுத்துட்டு நீங்க சாப்பிடறதுக்கு என்ன பண்ணுவீங்க?”

”நான் வெளில போய்க்கூட சாப்டுக்குவேன் சார். நீங்க வாங்க!!” 

நண்பர் எவ்வளவு மறுத்தும் வலுக்கட்டாயமாக அவர்களை அழைத்து உட்காரச் சொல்லிவிட்டு உள்ளே போயிருக்கிறார் இளைஞர். 

இதென்னடா வம்பாகப் போயிற்று என்று நண்பரும் அவர் மனைவியும் தர்மசங்கடமாகக் காத்திருந்திருக்க, உள்ளூர ஒரு சந்தேகம் ஓடிக்கொண்டுதான் இருந்திருக்கிறது. என்னடா வலுக்கட்டாயமாக இழுத்து வைத்து உபசரிக்கிறானே.. இதற்குப் பின்னால் ஏதாவது சதி வேலை இருக்குமோ? காலம் வேறு போன வாரம் வாங்கின வாழைப்பழம் கணக்காக கெட்டுக் கிடக்கிறது. 

ஒரு சில நிமிடங்களில் அந்த இளைஞர் உணவோடு வருகிறார். அவர்கள் நினைத்ததோ அவர் சாப்பிடுவதற்காக வைத்திருந்த, ஆறிபோன எதையோ கொண்டுவரப்போகிறார் என்று. ஆனால் நடந்ததோ வேறு மாதிரி. 

பீங்கான் தட்டுக்களின் மேல் அலுமினியம் ஃபாயில்களில் அழகாக வைக்கப்பட்ட சூடான சப்பாத்தி, அதற்கு சைட் டிஷ்ஷாக இரண்டு பௌல்களில் அருமையான குருமா, இன்னும் இருவகை சட்டினிகள், கண்ணாடி தம்ளர்களில் குடிநீர், கை துடைக்க டிஷ்யூ பேப்பர் என அருமையாக கவனித்திருக்கிறார்.

எதிர்பாராத விருந்தோம்பல்தான் என்றாலும் தயக்கத்துடனும் குறுகுறுப்பான பயத்துடனும் சாப்பிட்டு முடித்திருக்கிறார்கள். சப்பாத்தியும் குருமாவும் சட்னியும் ரொம்ப சுவையாக வேறு இருந்திருக்கிறது. 

சாப்பிட்டு முடித்தபிறகு இளைஞரிடம் “இங்க பாருங்க.. இதுக்கு நாங்க பணம் குடுத்துடறோம். பாவம் நீங்க வேற வெளியே போய் சாப்பிடணுமில்ல..” என்று பர்ஸை எடுத்திருக்கிறார்.

அதற்கு இளைஞரோ பணம் எதுவும் வாங்க மறுத்து சிரித்தபடி “ச்சேச்சே... பணமெல்லாம் எதுக்கு சார்.. இது ஒரு நட்பா இருந்துட்டுப் போகட்டுமே...” என்றாராம்.

இந்த இடத்தில் “இந்த உலகத்துல இப்படியும் சில ஆத்மாக்கள் இருக்காங்க பாருங்க” என்று கதையை முடித்தார் நண்பர் என்னிடம்,

நேற்றைக்குப் பெய்த மழை அந்த இளைஞர் பொருட்டுதான் எல்லோருக்கும் பெய்ததோ என்னமோ!!

என் கண்ணில் உன்னைக் கண்டேன்

தலைப்பைப் பார்த்தால் ஏதோ பருவ விடலை எழுதிய காதல் கவிதையின் தலைப்பு மாதிரிதான் இருக்கும். ஆனால் தலைப்புக்கான விஷயம் கொஞ்சம் பேஜாரானது.

உங்களிடம் ஒரு பைக் இருக்கிறது. அதை தினமும் அலுவலகம் போகும் பொருட்டு குறைந்தது ஒரு பத்து கிலோமீட்டராவது ஓட்டவேண்டியிருக்கிறது. எதிர்பாராத குழிகள், பள்ளங்கள், சாலையெங்கும் பறக்கிற புழுதி, சடாரென முன்னறிவிப்பின்றி உங்கள் வழியில் குறுக்கிடுகிற வாகனங்கள். எல்லாவற்றிலும் புரண்டெழுந்து அரசாங்க இயந்திரம் சரியாக செயல்படவில்லையே என்ற மன உளைச்சல்களோடு, இடுப்பொடிய மேற்கொள்கிற பயணத்தில் சடாரென்று உங்கள் கண்ணுக்குள் என்னவோ விழுந்து விடுகிறது.

ஏதாவது சின்ன புழுதித் துகள் விழுந்திருக்கும், வீட்டுக்குப் போய் முகம் கழுவினால் வெளியே போய்விடும் என்று நினைத்து இன்னும் வேகமாய் ஆக்ஸிலேட்டரை முறுக்குகிறீர்கள். கண்ணில் உறுத்தல் தொடர்கிறது.

இப்படித்தான் இன்று நிகழ்ந்தது. வீட்டுக்கு வந்து பல தடவை முகம் கழுவியும் உறுத்தல் தொடர, உருவங்களை ஓரிரு மடங்கு பெரிதாக்கிக் காட்டுகிற முகம் பார்க்கும் கண்ணாடி, சோனி எரிக்ஸ்ஸன் கே எழுநூற்று ஐம்பது என்கிற செல்பேசியில் அடங்கியிருக்கிற குட்டி லைட் சகிதமாய் இடது கண்ணை ஆராய்ந்தபோது கருவிழியின் நடுவே ஏதோ ஒட்டிக்கொண்டிருப்பதைக் கண்டேன். ஒட்டியிருக்கிறதா, குத்தியிருக்கிறதா? கண்ணுக்குத் தெரிந்தும் தெரியாமலும் அறிந்தும் அறியாமலும். ஒவ்வொரு முறை இமைக்கும்போதும் உறுத்தலாக இருந்தது.

இதற்கு முன் இதே மாதிரி ஏற்பட்ட ஓரிரு அனுபவங்கள் ஞாபகம் வர உடனே கண் மருத்துவமனையொன்றைச் சரணடைவது உசிதம் என்று தோன்றியது. இரவு மணி ஒன்பது. உடனே கிளம்பினேன்.

ஒரு ஃப்ளாஷ்பேக்:

நான்: டாக்டர், இடது கண்ணுல என்னவோ உறுத்துது. ப்ளிங்ங் பண்ணும்போது வலிக்குது.

டாக்டர் கண்ணில் ஒரு பூதக் கண்ணாடியை மாட்டிக்கொண்டு கண்ணுக்குள் டார்ச் அடித்துப்பார்த்து. “ஆமா. ஃபாரின் பாடி இருக்கு. எடுத்துரலாம்.”

ஒரு குப்பியை எடுத்து என் இடது கண்ணில் இரண்டு துளிகள் கவிழ்க்கிறார். “அனஸ்தீஸியா ட்ராப்ஸ்.. வலிக்காது. அங்க உக்காருங்க..”

ஒரு மைக்ரோஸ்கோபிக் சாதனத்தின் முன் அமரவைத்து என் மோவாக்கட்டையை அதில் நிலை நிறுத்துகிறார். கண்ணுக்குள் அதிபிரகாசமான ஒரு லைட்டைப் பாய்ச்சிவிட்டு ஒரு ஊசியை எடுக்கிறார். நான் மிரள்கிறேன்.

“இமைக்காம நேரா என்னையே பாருங்க..”


மெல்ல கண்ணுக்கு அருகில் கொண்டுவந்து, கண்ணில் மாட்டியிருக்கும் துகளை நிரடுகிறார். ஊசி நிரடுகிற உணர்வு தெரிந்து செய்தியாய் மூளைக்கு அனுப்பப்பட நான் விருட்டென்று பின் வாங்குகிறேன். டாக்டர் துணுக்குற்று “ஊசி ஃபீலிங் தெரியுதா?”

“ஆமா”

”அனஸ்தீஸியா போட்டுமா?” ஆச்சரியத்துடன் மறுபடி அந்த குப்பியை எடுத்து இன்னும் கொஞ்சம் கண்ணுக்குள் கவிழ்க்கிறார். மீண்டும் நிரடல். இந்த முறை குத்துகிற இடத்தில் எந்த உணர்வும் இல்லை. ஊசியால் நோண்டி எடுத்த சின்ன கருப்புத் துகளை எனக்கு காண்பிக்கிறார். “மெட்டல் பீஸ்தான். எடுத்துட்டேன். மறுபடி பிரச்சனைன்னா வாங்க. இப்போ போய் டி.வி, கம்ப்யூட்டர் எல்லாம் பாக்காம ரெஸ்ட் எடுங்க” கண்ணில் பஞ்சு வைத்து பெரிதாக கட்டுப்போட்டு அனுப்புகிறார். ஒற்றைக் கண்ணால் பைக் ஓட்டியபடி வீடு வந்து சேர்கிறேன்.

இன்று நிகழ்காலத்தில் பேஷண்டுகள் காத்திருக்க, இரவு டின்னரை முடித்துவிட்டு சாவகாசமாக வந்த லேடி கண் டாக்டரிடம் “மேடம், கண்ல என்னவோ குத்தியிருக்கு. ரெட்டினா-க்கு நடுவுல..டார்ச் அடிச்சுப் பாத்தேன்.. எனக்கே தெரிஞ்சுது.”

“ஓ.. நீங்களே பாத்துட்டீங்களா? நல்லது..” டார்ச் அடித்துப் பார்த்து.. “ஆமா.. இருக்கு.. ஒயிட் பார்ட்டிக்கிள்.. ஆனா அது குத்தியிருக்கறது ரெட்டினா இல்ல. கார்னியா..” என்று சிரிக்கிறார்.

பழைய ப்ளாஷ்பேக்கில் கண்ட அதே மாதிரி ட்ராப்ஸ். அதே மைக்ரோஸ்கோப், ஊசி. ஓரிரு விநாடிகளில் வேலை முடிந்தது. குத்திய இடம் செப்டிக் ஆகாமல் இருக்க ஒரு சில கண் மருந்துகளைப் பரிந்துரைத்து ஃபீஸ் வாங்கிக் கொண்டார். ஆனால் நல்லவேளை இந்த முறை கண்ணை மறைக்கும் பெரிய கட்டு இல்லை.

வீட்டுக்கு வந்து சோனி எரிக்ஸனின் டார்ச் அடித்துப் பார்த்தேன். போயே போச்சு, போயல்லோ, போயிந்தே, இட்ஸ் கான்ன்ன்ன்ன்ன்.

இதனால் அறியப்படும் நீதி?

நீதியெல்லாம் பெரிதாக சொல்வதற்கு ஒன்றுமில்லை. அரசாங்க ரோடுகள் அப்படி இப்படித்தான் இருக்கும். நீங்கள்தான் உங்கள் கண்களை பத்திரமாக பார்த்துக்கொள்ளவேண்டும். 

படித்ததும் பிடித்ததும்

எப்பவோ ஒரு காலத்தில் நமக்குப் பிடித்தது இப்போது பிடிக்காமல் போவதும், அப்போது பிடிக்காமல் இருந்தது இப்போது பிடித்துவிடுவதும் நிகழத்தான் செய்கிறது. இதைத்தான் வேறு விதமாக “இப்பப் பாத்த புதுசு பாக்கப் பாக்கப் பழசாகி எப்பவுமே பாக்காத பழசு பாத்தவுடனே புதுசாத் தெரியும்” என்று மீனாட்சி சுந்தரனார் கூற முயற்சித்தார். ஆனால் இது முதல் வரிக்கு சம்பந்தமில்லாமல் இருப்பதால் அதிகம் யோசிக்காமல் அடுத்த பாராவுக்குப் போய்விடலாம்.

பொள்ளாச்சி சேரன் போக்குவரத்துக் கழகத்திலிருந்து யாரோ கொடுத்த 1988- ஆம் ஆண்டு டயரி, எதையோ தேடும்போது கண்ணில் பட்டது. புரட்டிப் பார்த்தபோது அதில் மணி மணியான கையெழுத்தில் அப்போது படித்தவைகளிலிருந்து பிடித்த பேராக்கள் அல்லது வரிகளை ’படித்ததில் பிடித்தது’ என்று போட்டு எழுதி வைத்திருந்தேன். என் அப்போதைய வாசிப்பானுபவ ரசனை ரொம்ப தத்துப் பித்தென்றெல்லாம் இல்லாமல் கொஞ்சம் பரவாயில்லையாக இருந்ததாக நிழலடிக்கிறது. இப்போது அவைகளைத் திரும்பப் படித்துப் பார்க்கும்போது எனக்குப் பிடித்ததை எழுதியவர்களின் பெயர்கள் எல்லாம் ஒரு கலவையாக அவியல் போல இருக்கிறது.

கார்த்திகா ராஜ்குமார், காண்டேகர், பாப்ரியா, அனுராதா ரமணன், இந்திரன், காப்ரியேல் ஒகாரா, சுந்தர ராமசாமி, லே ஹண்ட், மு.மேத்தா, மாலன், கார்ல் மார்க்ஸ், வண்ண நிலவன், சி.சு. செல்லப்பா, க.நா.சு, அப்புறம் ஜப்பானிய பழமொழிகள், பெயரில்லாத தத்துவங்கள் ஒன்றிரண்டு. யாரோ என்று போட்டு சில. இந்த யாரோ என்பது யாராக இருக்கும் என்று ரொம்ப நாட்களாக யோசித்துக் கொண்டிருக்கிறேன். இதில் லே ஹண்ட், ஒகாரா, மார்க்ஸ், காண்டேகர் போன்றவர்களின் பெயர்களைப் பார்த்து யாரும் பயப்படவேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன். அது சும்மாவாச்சும் அவர்களுடைய ஏதாவது ஒரு பேரா எங்கேயாவது தட்டுப்பட்டதை டயரியில் எழுதி வைத்திருப்பேன். மற்றபடி ரொம்ப தடிமனான புத்தகங்கள் படிக்கிற கெட்ட பழக்கம் எதுவும் அப்போது எனக்கு இருந்ததில்லை. பொன்னியின் செல்வன் கூட ரிடையர்மெண்டுக்கு அப்புறம் படிக்கலாம் என்று எடுத்துவைத்திருக்கிறேன்.

ஆனால் கிடைத்ததையெல்லாம் வாசிக்கிற வெறி ஒரு மானாவாரித்தனத்தைக் (பார்த்தீர்களா! தமிழில் புதிய சொல்லாடல்) கொடுத்திருந்தது. பாலகுமாரனை விழுந்து விழுந்து படித்துக் கொண்டிருந்த அதே நேரம் சைடுவாக்கில் க.நா.சு வருகிறார். கி.ராஜநாராயணன், தி.ஜா என்று வாசிப்பு அனுபவத்தை அடுத்த தளத்திற்குக் கொண்டு போகவேண்டுமென்று பிரயத்தனம் மேற்கொண்ட காலகட்டம் அது. பிடித்த எழுத்தாளர்கள் என்று ஒரு இறுதிப் பட்டியல் உருவாகுவதற்கு முன் வரை எல்லோருமே இதுபோல சகட்டுமேனிக்குப படித்து வைத்திருக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகியிருப்பார்கள்.

பொள்ளாச்சி லைப்ரரியில் மேற்படி இலக்கிய எழுத்தாளர்களின் புத்தகங்கள் இருக்கும். ஆனால் எல்லா புத்தகங்களிலும் வாசகர்கள் தனக்குப் பிடித்த வரிகளை பென்சிலாலோ பேனாவாலோ அடிக்கோடிட்டு அடிக்கோடிட்டு புத்தகம் முழுவதும் கோடு கோடாக இருக்கும். போதாதற்கு கடைசி பக்கத்தில் ‘அருமையான புத்தகம்” என்றோ, “மரணக் கடி. படிக்காதே” (இதை முதல் பக்கத்திலல்லவா எழுதியிருக்கவேண்டும்) என்றோ தங்களது உண்மையான விமர்சனத்தை பதிந்தும் வைத்திருப்பார்கள். ஆக அடிக்கோடு போடுகிற வேலையை நான் செய்யவேண்டாம் என்று படித்ததில் பிடித்ததை தனியாக சேரன் போக்குவரத்துக் கழக டயரிக்கு அனுப்பிக் கொண்டிருந்தேன்.

இந்த மாதிரி படித்ததில் பிடித்ததை தொகுத்து பொள்ளாச்சியிலிருந்து வெளிவந்து கொண்டிருந்த ‘மனிதம் செய்திகள்’ என்கிற சிற்றிதழில்(!) போட்டுக் கொண்டிருந்தோம். கோபால் பில்டிங் பக்கத்தில் கடை வைத்திருந்தவர்கள் எல்லாருக்கும் ஒரு காப்பி போகும்.

ப.பி-இல் ஒரு சில இப்போது படித்தாலும் பிடிக்கத்தான் செய்கிறது. அவைகளில் சில தத்துவார்த்தமாக இருப்பதே காரணம் என நினைக்கிறேன். ஒரு சிலது மரண மொக்கை.

படித்ததில் பிடித்ததில் சில இங்கே..

****
குழந்தைகள் உலக சத்தியங்கள். கையுயர்த்தித் தந்ததெல்லாம் கடைசிவரை காப்பாற்றுவேன் என்னும் நியாயப் பிரமாணங்கள். வாழ்க்கையையே விளையாட்டாய் கழித்ததுபோல் குதிபோடும் பையன் நாட்கள். இலக்குகள் பதுங்கியிருக்க அவற்றைக் கண் கட்டித் தேடக் கிளம்பும் வாழ்க்கை. ஜரூராய் இருந்து இடமாறிப் பிழைக்கும் கிளித்தட்டு. ஏமாந்தவனை எழுப்பிவிட்டுத் தான் உட்கார்ந்து கொள்ளும் கொக்கோ. மூச்சுப் பிடித்து மூலைவரை சென்று எதிரியை கால் தாக்கி எற்றித் திரும்பும் சடுகுடு. வளைத்து வளைத்து இரண்டு சக்கரத்தையும் பாலன்ஸ் செய்து ஓட்டிச் செல்லும் வாடகை சைக்கிள். வாழ்க்கை விளையாட்டாய்த்தான் ஆரம்பிக்கிறது.

- மாலன், நந்தலாலா நாவலில்

*****

எனது பூப்பு நாளில்
நான் கட்டிய பச்சைப் பட்டு
இன்னனும் நெஞ்சுக்குள் பசுமையாய்
நினைவிருக்க..
காலையில் சாப்பிட்டது நினைவில்லை.
மறதி.. பனித்துளி போல மறதி.
காலம் கரையுது. காலம் கரையுது.
காதுக்குள் பேரொலி.
என்னுள் என்னை நான் இழந்திருக்கையிலே..
உலகம் என்னை இழந்து கொண்டிருக்கிறது.

- அனுராதா ரமணன்

***

கொஞ்சமாக தெரிந்து வைத்துக் கொண்டிருக்கும்போது தெரிந்து கொண்டுவிட்டோம் என்றும், அதிகமாகத் தெரிந்துகொண்டிருக்கும்போது தெரிந்து கொள்ளவில்லை என்ற எண்ணமும் ஏற்படுகிறது. ஒரு கதவு திறக்கும்போது திறக்காத பல கதவுகள் தெரியும் விசித்திரக் கோட்டை இது. அவற்றையும் திறக்கும்போது, மேலும் பல கதவுகள் மூடிக்கிடப்பதைப் பார்க்கிறோம். அப்படியானால் இதற்கு முடிவு என்ன? திறப்பதே திறக்காத கதவுகளைப் பார்க்கத்தானா? பெரிய சவால்தான் இது.

- சுந்தர ராமசாமி, ‘ஜே.ஜே சில குறிப்புகள்’ நாவலில்.

***

கடைசிக் கதவும் திறக்கப் போகிறது. நான் ஒரு சுதந்திர மனிதன் ஆகிவிடுவேன். அந்தக் கதவு நிலையிலிருந்து ஒரு எட்டு வெளியே எட்டிப் போட்டதும் என் இருதயம் நிரம்பி இருந்தது. நிம்மதியா அல்லது கனமா? இரண்டும் அல்ல. அது ஓர் அபிமான இருதயத்தின் அடியிலிருந்து எழும் அனுதாபக் குரலின் தொனி போல எனக்குப் பட்டது. அந்தத் தொனியோடு கடைசிக் கதவும் திறந்து கொண்டது. எதையும் நான் சொல்லிவிடக்கூடும். அந்த க்ஷணத்து உணர்ச்சியை மட்டும் சொல்ல முடியாது. அது இருதயத்தின் தனிச் சொத்து. அதற்கு பாஷையே இல்லை.

-சி.சு. செல்லப்பா

***

மூன்றாம் முறை முகத்தில் அறைந்தால் புத்தருக்கும் கோபம் வரும்.

-யாரோ

குரங்கு பெடல் என்றால் என்ன?

ஒரு வழியாக மகனுக்கு பாலன்ஸ் கிடைத்துவிட்டது. இது இரண்டாவது பாலன்ஸ். முதல் பாலன்ஸ் தவழ்கிற குழந்தை என்கிற நிலைப்பாட்டிலிருந்து ‘நடக்கிற குழந்தை’ என்கிற நிலையை அடைந்தது. அப்போது எல்லாக் குழந்தைகள் போலவும் ‘பொதக் பொதக்’ என்று நிறைய தடவை விழ வேண்டி வந்தாலும் தன் முயற்சியில் சற்றும் மனம் தளராமல் எப்படியோ நடக்கவும் பிறகும் ஓடவும் பழகிக் கொண்டான்.

ஓடப் பழகின பிறகு ஓட்டப் பழகவேண்டாமா? முதலில் வாங்கின மூன்று சக்கர சைக்கிள் மோகம் முடிந்து (நான் கூட அவ்வப்போது ஓட்டுவதுண்டு) ஹாண்டில் பாரில் அவனது முழங்கால் இடிக்க ஆரம்பித்தவுடன் மாநாடு கூட்டி அவனுக்கு பெரிய சைக்கிள் வாங்கலாம் என முடிவானது. பி.எஸ்.ஏ ராக்கெட் என்று போட்ட ஒரு சின்ன இரண்டு சக்கர சைக்கிள் (சைடு வீலையும் சேர்த்தால் நான்கு) வாங்கிவந்தோம். பேர்தான் ராக்கெட் என்று போட்டிருந்தார்களே தவிர தரையில் தான் ஓடியது.

ஆனால் அந்த சைக்கிளில் ஒரு பிரச்சனை. அது மகனைவிடப் பெரியதாக இருந்தது. அதாவது அவன் இன்னும் நான்கைந்து வருடங்கள் கழித்து ஓட்டவேண்டியதை அப்பொழுதே வாங்கிவிட்டேன். இருந்தாலும் சீட்டையும், ஹாண்டில் பாரையும் கொஞ்சம் தணித்து இறக்கித் தந்ததில் அதில் எப்படியோ ஏறப் பழகி மூன்றாவது மாடி வராந்தாவிலும், மொட்டை மாடியிலுமாக ஓட்ட முயற்சித்துக் கொண்டிருந்தான். கீழே விழாமலிருக்க சைடு வீல்கள் துணை புரிந்தாலும் அபார்ட்மெண்ட் வாசிகளுக்கு ஓட்டும்போது டர்ர்ர்ர் என்ற அதன் நாராசமான சத்தம் அத்தனை ரசிக்கவில்லை. அதற்காக அவனை ரோட்டில் போய் ஓட்ட வைக்கிற மயிர்க்கூச்செரியும் அட்வென்ஞ்சரை நான் எடுக்கத் தயாரில்லை.

சில நாட்கள் வேறு வழியில்லாமல் ஹாலுக்கும் பெட்ரூமுக்கும் கிடைத்த இடைவெளிகளில் கூட ஓட்டுவான். சில நாட்கள் இரவு உணவு முடித்துவிட்டு நடு ஜாமத்தில் ட்ராஃபிக் அடங்கின எங்கள் தெருவில் அவன் பின்னாலேயே ஓடி ஓடி உண்ட உணவு செரித்துக்கொண்டிருந்தது. அதிலும் முக்கியம் அங்கேயிருக்கிற மற்ற அபார்ட்மெண்டுகளில் பார்க்கிங் இல்லாமல் ரோட்டிலேயே நிறுத்திவைத்திருக்கும் கார்களின் மேல் அவன் சைக்கிள் மோதி கீறல் போடாமல் இருக்கவேண்டுமே என்கிற கவலை மூச்சிரைப்போடு சேர்ந்து பொங்கிவரும்.

“ப்ராண்ட் நியூ கார் ஸார் இது.. டெலிவரி எடுத்து ஒரு வாரம்கூட ஆகலை. பாருங்க எவ்ளோ பெரிய கீறல். உங்க மகனுக்கு சமூகப் பொறுப்புன்னா என்னன்னு நீங்க கத்துக் குடுத்திருக்க வேணாமா? திஸ் இஸ் ரிடிகுலஸ்.  எனக்கு மிகப் பெரிய மன உளைச்சலாயிருச்சு. கீறலுக்கான நஷ்ட ஈடா  பதினைந்தாயிரத்தை...”

என்று யாராவது கனவான் கேட்டில் நின்றுகொண்டு கத்துவதை கற்பனை செய்துகொண்டு அந்த பயத்துடனேயே மகனுக்கும் கார்களுக்குமிடையே இடைவெளி ஏற்படுத்துகிற முனைப்பிலேயே ஓட்டம் கழியும். சைக்கிள் அவன் உயரத்திற்குப் பொருந்தாமல் உயரமாக இருந்ததாலும், அவ்வப்போது சீறி வருகிற ஆட்டோ, பைக்வாலாக்களுக்கு பயந்து தடுமாறியதாலும் மற்றும் சென்னை சாலைகளின் பிரத்யேக அடையாளமான திடீர்க் குழிகளினாலும் அவ்வப்போது தடுமாறி விழவும் செய்தான். பாலன்ஸூம் கிடைக்காமல் சாய்ந்த நிலையிலேயே ஓட்டி ஓட்டி பக்கவாட்டுச் சக்கரங்களும் தேயத் தொடங்கியிருந்தது. நொடிகளும், நிமிடங்களும், நாட்களும், வருடங்களுமாக உருண்டோடியது. இந்த பெரு நகரத்துக்குள் வாழ்வின் அத்தியாவசிய தேவையான சைக்கிள் ஓட்டுதலைக் கற்றுக் கொடுப்பதற்குள் வுதா (இது ஒரு கெட்டவார்த்தை என யாரோ சொன்னதால் தலைகீழாக எழுதியிருக்கிறேன்) தீர்ந்து போய்விடும் என்று தான் தோன்றியது.

ஆனால் இந்தக் கோடை விடுமுறையின் போது ஊருக்குப் போய் அங்கே மரங்கள் சூழ்ந்த, சுத்தமாய் போக்குவரத்து இல்லாத, அகலமான ரோடுகள் கொண்ட மின்சார வாரிய குவார்டர்ஸூக்குள் அக்கா பசங்களின் (சைடு சக்கரங்கள் இல்லாத) சைக்கிள்களை ஓட்டி ஒரே நாளில் அட்சர சுத்தமாக நன்றாய் சைக்கிள் பழகிவிட்டான். ஆக வாழ்க்கைக்குத் தேவையான இரண்டாவது பாலன்ஸூம் ஒரு வழியாய்க் கிடைத்துவிட்டதில் அக மகிழ்வு ஏற்பட்டுவிட்டது.

இன்றைக்கு அவன் சைக்கிளை விட கொஞ்சம் உயரமாய் வளர்ந்துவிட்டான்.  சைடு வீல்களையும் நீக்கியாயிற்று. சீறுகிற ஆட்டோக்களை லாவகமாய்த் தவிர்க்கவும் பழகிவிட்டான். ரொம்ப குள்ளமாய் இருக்கிறதென்று ஸீட்டை கொஞ்சம் இன்னும் ஏற்றித்தரமுடியுமா என்று கேட்கிறான். இல்லையென்றால் கியர் எல்லாம் வைத்து மவுண்டன் பைக் டைப்பில் வேறு பெரிய சைக்கிள் வேண்டுமாம்.

நான் எண்பதுகளின் ப்ளாஷ்பேக் காட்சியொன்றை நினைவுகூர்ந்து அவனிடம் சொன்னேன். “நாங்கெல்லாம் எங்களை விட பெரிய சைக்கிள்ள குரங்கு பெடல் போட்டு ஓட்டிப் பழகினோம். இனி அந்த அனுபவமெல்லாம் உங்கள மாதிரி சிட்டிப் பசங்களுக்குக் கிடைக்காதுடா..”

“குரங்குப் பெடல்னா என்ன” என்றான்.

இந்த பதிவை போஸ்ட் பண்ணி முடித்தபிறகு விளக்குகிறேன் என்று சொல்லியிருக்கிறேன்.

ரோம் - பயணக் கட்டுரை

'இத்தாலியிலுள்ள ரோம் ஒரு அழகிய நகரம். அனைவரும் வாழ்க்கையில் ஒருமுறையேனும் நிச்சயம் பார்க்கவேண்டிய இடம்' என்று ட்விட்டரில் எழுதிவிட்டுப் போய்விடலாம் என்றுதான் முதலில் நினைத்தேன். அப்படியே எழுதிப் போட்டாலும் ட்விட்டரில் இன்னும் 39 எழுத்துக்கள் மிச்சமிருக்கும் என்பதாலும், மிகத் தொன்மையான நகரமான ரோமின் உலகளாவிய பேரழகை இப்படி ஓரிரு வரிகளில் சொல்லிவிட்டுப் போனால் 16-ஆம் நூற்றாண்டு ரோமாபுரி பேரரசர்களின் ஆவிகள் என்னை மன்னிக்காது என்பதாலும் ஒரு சிறிய பதிவாகப் போட்டுவிடுகிறேன்.

நான் முதலில் சென்று இறங்கிய இடம் லியனார்டோ டாவின்ஸி ஃபியுமிசீனோ விமானநிலையம் என்றெல்லாம் எழுதி உங்களுக்கு ஆயாசத்தை உண்டு பண்ணப் போவதில்லை. இறங்கின இடமும் திரும்பிய இடமுமா முக்கியம்? எப்போதும் மெயின் பிக்சர்தானே நமக்கு முக்கியம். ஆகவே நேராக தெருவில் இறங்குகிறேன். ஒரு நகரம் என்பது தெருக்களின் தொகுப்புதானே?

இத்தாலிய மொழியில் ரோமா என்றும் செம்மொழியாம் தமிழ் மொழியில் உரோமை நகரம் என்றழைக்கப்படும் இந்நகரமானது கி.மு.753-ல் அமைக்கப்பட்டு அப்போதிருந்தே மக்கள் வசிக்க ஆரம்பித்த வரலாற்று விவரங்கள் எல்லாம் நேரமும் வாய்ப்பும் இருந்தால் இன்னொரு பதிவில் விவரமாய் எழுதி விடுகிறேன். ஏனென்றால் இது ஒரு மிகச் சிறிய பயணக்கட்டுரை மட்டுமே.

"All roads lead to Rome" என்று எதற்காகச் சொன்னார்கள் என்பது இப்போது தெள்ளத் தெளிவாகப் புரிந்துவிட்டது. உலகம் முழுவதுமுள்ள, பயணங்களை விரும்புகிற மக்கள் அனைவருக்குமான வாழ்நாள் டூரிஸ்ட் டெஸ்டினேஷன் இது. பின்னே உலகின் மொத்த அழகும் இங்கேயே கொட்டிக்கிடந்தால் மக்கள் வேறு என்னதான் செய்வார்கள்?

ரோமுக்குள் நுழைந்தவுடனேயே வாட்டிகன் மியூசியம், போர்கீஷ் காலரி மற்றும் ம்யூசி கேப்பிடோலினி, கலோசியம் ஆகிய நான்கையும் முதலில் பார்த்துவிடவேண்டுமென்று ஒரே துடிப்பாய் துடித்தது மனது. (இந்த மாதிரி இடங்களின், தெருக்களின் பெயர்களை நான் சரியாக உச்சரிக்கவில்லை எனில் இத்தாலிய மக்கள் கோபித்துக் கொள்வார்களோ என்ற பயமும் இருந்தது). ரோம் பற்றியெரிந்தபோது நீரோ மன்னன் பிடில் வாசித்துக்கொண்டிருந்த இடம் எங்கேயிருக்கிறதென்று யாரிடமாவது கேட்டால் அடிக்க வருவார்களோ என்ற யோசனையுடன் ஊர் சுற்றக் கிளம்பினேன்.

ரோமர்கள் அவர்களது ஆட்சிக்காலத்தில் ரொம்ப போரடித்தால் உயர உயரமாய் தூண்கள் வைத்து வானளாவிய கட்டிடங்களை எழுப்புவார்கள் என்று கருதத்தக்க வகையில் பிரம்மாண்டங்கள், சிதிலங்கள், வரலாற்று மிச்சங்கள், புராதனம், வெள்ளையும் கருப்புமாய் மிகப் பெரிய சிலைகள். நம்மூரின் கட்டிடங்களுக்கும் ரோமாபுரியின் கட்டிடங்களுக்கும்தான் எத்தனை வித்தியாசங்கள்!! ரோமர்களின் ஆர்க்கிடெக்ச்சர் நுட்பங்கள் அப்படி வியப்பளிப்பதாக இருக்கிறது. அதுவும் கட்டிடங்களில் இந்தத் தூண்கள் இருக்கிறதே! அப்படி ஒரு ஆகிருதி. ஒவ்வொரு தூணும் பத்து பேர் சேர்ந்து கட்டிப்பிடிக்கவேண்டும் என்பது போல் இருக்கின்றன. ஆனால் எட்டிப் பிடிக்க வேண்டும் என்றால் அது நடக்காது. அவ்வளவு உயரம். ஆக ரோம்-ஐ தூண்களின் நகரம் என்று சொன்னால் அது மிகையாகாது.

ரோமன் ஹாலிடேஸ் என்னும் கருப்பு வெள்ளைத் திரைப்படத்தில் நான் கண்ணுற்ற ரோம் இப்படி வண்ணமயமாய் காணக் கிடைக்குமென்று கனவிலும் நினைக்கவில்லை. இதை நினைக்கும் இதே நேரம் அந்தப் படத்தில் நடித்த அந்நாள் அழகுப் பதுமை ஆட்ரே ஹெப்பர்ன் (Audrey Hepburn) பற்றியும் ஒரிரு விநாடிகள் மறைந்த எழுத்தாளர் ஆதவன் உபயத்தால் நினைவு கூர முடிந்தது.

Piazza Venezia (நகரத்தின் இதயம் என்று பொருள்படும்) என்கிற இடத்தில் Altare Della Patria என்ற புராதன வரலாற்று கட்டிடம்... ச்சே!! அதை கட்டிடம் என்று சொல்லுவது ரோமாபுரிவாழ் மக்களைக் கேவலப்படுத்துவது போலாகும் - ஆகவே அரண்மனை? சரி.. ஏதோ ஒன்று. இங்கும் மறுபடி பிரம்மாண்ட தூண்கள். இதற்குமுன் இருக்கும் ஒரு மிகப் பெரிய சிலையருகே என்னைப் போலவே உலகமெங்குமிருந்தும் வருகை புரிந்திருக்கும் சுற்றுலாப் பயணிகளை பெருமளவில் காணமுடிந்தது. இதுபோல எண்ணற்ற கட்டமைப்புகள். எண்ணற்ற பழங்காலச் சின்னங்கள். எண்ணற்ற.. எண்ணற்ற.. ம்ம்.. சரி விடுங்கள்.

ரோமிலுள்ள ஒவ்வொரு வீட்டுக்குள்ளும் கட்டிடத்துக்குள்ளும் சென்று சுற்றிப் பார்த்துவிட்டு வரவேண்டும் (விடுவார்களா தெரியவில்லை) என்கிற அளவுக்கு எல்லாமே அழகழகாய் இருக்கின்றன. நம்புங்கள்!! ரோம்-ல் உள்ள எல்லா இடங்களையும் ரசித்து அனுபவித்துப் பார்க்க வேண்டுமென்றால் நம் ஆயுள் போதாது என்று தோன்றிவிட்டது. ஏனென்றால் அவைகளையெல்லாம் கட்டி முடிப்பதற்கே அவர்கள் ஆயுள் போதவில்லை பாருங்கள். எனக்குக் கூட எதை சொல்வது எதை விடுவது என்று தெரியாமல் தடுமாறுகிறது. அத்தனை அத்தனை..

அதே மாதிரி சர்ச்சுகளை எடுத்துக்கொண்டால் ஒரு பெரிய லிஸ்ட்டே போடுமளவுக்கு இருக்கிறது என்றார்கள். யாராவது ஏற்கனவே அந்த லிஸ்ட்டைப் போட்டிருப்பார்கள் என்பதால் நான் அதை செய்யவேண்டாமென்று தீர்மானித்தேன். ஆனால் நான் பார்த்தவரையில் எனக்கு எந்தச் சர்ச்சும் கண்ணில் படவில்லை. அல்லது பார்த்தது எல்லாமே சர்ச்தானா?

சிங்கப்பூர் மாதிரியே சாலைகள் படு சுத்தம். எல்லோரும் தூங்கிக் கொண்டிருக்கும்போது வானத்திலிருந்து யாரோ கூட்டமாய் இறங்கிவந்து இரவோடு இரவாக குப்பைகளை அள்ளித் துடைத்துவிட்டுப் போய்விடுவார்கள் என்று நினைக்கும்படிக்கு அபார சுத்தம். ஆனால் பார்த்த சில இடங்களில் உறுத்தின ஒரே விஷயம் கார்களும் ஸ்கூட்டர்களும் (டூ வீலரில் அதிகம் ஸ்கூட்டர்கள் போன்ற வாகனங்களைத்தான் பயன்படுத்துகிறார்கள்) பல இடங்களில் ஒழுங்கு இல்லாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதுதான். நேனோ மாதிரி குறுங்கார்கள் நிறைய கண்ணில் பட்டன. சர்வசாதாரணமாக ஏழு எட்டு சாலைகள் ஒருங்கே சந்திக்கும் வீதி முக்குகள் இருக்கின்றன. இந்த மாதிரி முக்குகள் நம்மூரில் இருந்து வீதி முனையில் ட்ராஃபிக் போலீசை நிற்கவைத்தால் முழி பிதுங்கிவிடுவார் என்று நினைக்கும் போது பாவமாக இருந்தது. ரோமில் மக்கள் தொகை குறைவு என்பதால் ’பாரத் பந்த்’ தினம் மாதிரி நிறைய சாலைகள் வெறிச்சோடிக் கிடக்கின்றன.

எங்கேயும் போக்குவரத்து நெரிசலே இல்லை. Iron Man, Saw IV போன்ற ஆங்கிலப் படங்கள் ஓடிக்கொண்டிருந்த தியேட்டர் வாசலில் நான்கே நான்கு இருசக்கர வாகனங்கள் மட்டுமே இருக்க மொத்தமாய் காற்று வாங்கிக் கொண்டிருப்பதைக் காண முடிந்தது. நம்மூர் தாழ்தள சொகுசுப் பேருந்தின் பத்தாவது வெர்ஷன் மாதிரியான பஸ்கள் நல்ல சிவப்பு நிறங்களில் சாலையெங்கும் ஓடுகின்றன. மக்கள் நவீனமாக வண்ணமயமாக உடையணிகிறார்கள். பெரிய கொட்டை எழுத்துக்களில் பார்கள் நம்மை இழுத்து வரவேற்கின்றன.

ரோமில் பார்க்க வேண்டிய சுற்றுலாத் தலங்கள் யாவை என்று குத்துமதிப்பாக ஆராய்ந்ததில் கீழ்கண்ட லிஸ்ட் கிடைத்தது. மேற்சொன்ன வாட்டிகன் ம்யூசியம் இன்னபிற இடங்கள் தவிர Colosseum, Trevi Fountain, Spanish Steps, Villa Borghese, Galleria Doria Pamphilj, Castel Sant'Angelo, Via Condotti, Piazza del Popolo, Imperial Forum, St. Peter's Basilica, Piazza Navona என்று பட்டியல் நீண்டுகொண்டே போனது. வாயிலும் பிறகு ஞாபகத்திலும் நுழையாத பெயர்கள் என்றாலும் எல்லாவற்றையும் எப்போது பார்த்து முடிப்பது என்று மலைப்பாக இருந்தது. ஷாப்பிங் போகவேண்டும் என்றால் Piazza Spagna என்ற இடத்திற்கருகிலுள்ள (ஸ்பானிஷ் ஸ்டெப்ஸ்-க்கும் கூட இது பக்கந்தான்) ஷாப்பிங் ஏரியா மிகப் பிரபலமாம். சிங்கப்பூர் முஸ்தபா சென்டர் மாதிரி ஏதேனும் சல்லிசாகக் கிடைக்குமா என்று விசாரிக்கவேண்டும்.

Piazza Spagna என்றதும் பீட்சா ஞாபகம் வந்து திடீரென பசிக்கிற மாதிரி இருந்தது. எங்கேயாவது நல்ல பீட்சா கார்னர் தென்படுகிறதா என்று Via Cola di Rienzo பக்கத்தில் தேடிக் கொண்டிருந்தபோது தோளில் ஒரு கை விழுந்தது. திரும்பிப் பார்த்தால் என் மனைவி. கண்கள் விரிய ஆச்சரியப்பட்டு “ஏய்.. நீ எப்படி இங்க.. ரோமாபுரி-ல?” என்று கேட்பதற்குள் மனைவி முறைத்தபடி.. “ஒக்காந்த எடத்துலயே ஒலகம் சுத்தினது போதும்.. தோசை ஆறுது. வந்து சாப்டுங்க”.

எனக்கும் கூட கூகுள் மேப்ஸ் Street View-இல் உரோமிய வீதிகளைச் சுற்றிச் சுற்றி வலது கை ஆள்காட்டி விரல் ரொம்ப வலியெடுக்க ஆரம்பிக்க (மவுசை கிளிக்கி கிளிக்கி) கம்ப்யூட்டரை ஆஃப் செய்துவிட்டு தோசை சாப்பிடக் கிளம்பினேன். நாளைக்கும் இதே மாதிரி ஒரு நடை ஸ்விட்சர்லாந்து போய்வரவேண்டும்.

அவர்

எதிர் ஃப்ளாட் பெரியவர் இறந்துவிட்டார். மற்ற ஃப்ளாட்வாசிகள் அறியாதவண்ணம் இன்று பல்ஸ் குறைந்து கடைசி கணத்தை மவுனமாகவோ சிரமமாகவோ வாழ்ந்து முடித்துச் சென்றுவிட்டார்.

நான் இதுவரை அவரைப் பார்த்ததில்லை.

எதிர்க்கதவாக இருப்பதனால், சென்று துக்கம் விசாரித்து வருதல் நாகரிகம் என்பதால் சென்றேன். பெரியவர் 10 சதவிகிதம் கண்கள் திறந்த நிலையில் அமைதியாய் கண்ணாடிப் பெட்டிக்குள் படுத்திருந்தார். நல்ல உயரம். நார்மலான உடம்பு. ரொம்ப நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் கஷ்டப்பட்டுவந்தது போன்ற தோற்றம் எதுவும் இல்லாமல் முகத்தில் மிஞ்சியிருந்த சிறு தேஜஸ்.

அவரது மகனிடம் ‘ஐயம் சாரி.. எத்தனை மணிக்கு இறந்தார்?” என்றேன். சம்பிரதாயமான கேள்வி.

‘டூ. தர்ட்டிக்கு! ஆஸ்பத்திரிக்கு எடுத்துட்டுப் போனோம். ஐ டவுட்.. வீட்லயே மூச்சு நின்னிருக்கும்னு..”

சம்பிரதாயமான பதில்.

”என்ன வயசு அவருக்கு?”

”எய்ட்டி ஒன்!”

மேலும் ஓரிரு சம்பிரதாயமான கேள்விகளைக் கேட்டுவிட்டு ”ஏதாவது உதவி தேவைன்னா தயங்காம சொல்லுங்க சார்..” என்று சொல்லிவிட்டு, கண்ணாடிப் பெட்டியருகே நின்று மனசுக்குள் மரியாதை செலுத்திவிட்டு வந்துவிட்டேன்.

மொத்தமாய் ஐந்து நிமிடங்களுக்குள் எனது கடமை முடிந்துவிட்டது.

ஒருவர் காலமாகிவிட்டார் என்கிற ஆர்ப்பாட்டங்கள் ஏதுமில்லாமல் அமைதி காத்து நிற்கிறது அப்பார்ட்மெண்ட். ஷாமியானா இல்லை. சங்கு இல்லை. தென்னை ஓலைகள் கிடையாது. மடக்கு நாற்காலிகள் இல்லை. ஒப்பாரி அழுகை இல்லை. அதிகமாய் யாருக்கும் அவர் இருந்ததும் தெரியாது. இறந்ததும் தெரியாது.

உறவினர்களின் வருகையைத் தெரிவிக்கும் ஏழெட்டு ஜோடி செருப்புகள் மட்டும் கதவின் முன்னால். ’சாப்பிடாம இருக்காதீங்கோ. ரெண்டு இட்லியாவது சாப்பிடுங்கோ. பையன்ட்ட வாங்கிட்டு வரச் சொல்றேன்’ என்று யாரோ யாரிடமோ சொல்லிக்கொண்டிருந்தார்கள்.

இந்த மரணத்தினால் இம்மி அளவு கூட இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படாமல் மற்ற ஃப்ளாட்டுகளில் டி.வி. சீரியல் சப்தங்கள், தாளிக்கும் வாசனை, சின்னப்பையன்கள் விளையாடும் உற்சாகக் குரல்கள், லிஃப்ட்டின் கிராதி கேட்டை அறைந்து மூடும் சப்தம். எஃப். எம் ரேடியோ.

நாளைக் காலை ஃப்யூனரல் சர்விஸ் மாருதி ஆம்னி வந்து அமைதியாய் எடுத்துப் போய் எலெக்ட்ரிக் க்ரிமடோரியத்தில் இறுதி அஞ்சலி முடிந்துவிடும்.

அபார்ட்மெண்ட் சுவர்களுக்குள் அடைபட்ட நகரமயமாக்கப்பட்ட வாழ்வு உறுத்தல்களற்றுத் தொடரும்.

ஜவ்வரிசி வடாம், உள் பனியன் மற்றும் ஒரு ரேடியோ விளம்பரம்

நான் அட்வர்டைசிங் துறைக்குள் நுழையலாம் என முடிவெடுத்த காலம். உடம்பும் மூளையும் பரபரவென்று ஆகிவிட்டது. என்னவொரு திடமான முடிவு. இதுதான் நீ வேலை செய்ய லாயக்கான துறை என்று மனசுக்குள் ஓரமாய் உறுதியாக ஒரு மணி அடித்து பல்பு தோரணமெல்லாம் எரிய ஆரம்பித்திருந்தது. உடனே நான் ஹாலோ ப்ளாக் கற்கள் அடுக்கிவைத்து மனக் கோட்டை கட்ட ஆரம்பித்துவிட்டதுடன் ஒரு புதிய அனுபவத்திற்கு வாழ்க்கையை தயார் பண்ணவும் துவங்கியிருந்தேன்.

அதற்கு முன் அட்வர்டைசிங் கம்பெனிகள் எப்படியிருக்கும் என்று நேரில் பார்த்ததில்லை. ஆனால் நண்பர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன். முற்றிலும் கிரியேட்டிவ்வான விஷூவலைசர் ஆர்ட் டைரக்டர்கள் எல்லாம் உலவுகிற இடம். குளிரூட்டப்பட்ட கண்ணாடி அறைகளுக்குள் க்ரியேட்டிவ் ஸ்டுடியோ. கிராஃபிக் டிசைன் மென்பொருள்கள் நிரம்பி வழிகிற கம்ப்யூட்டர்கள். ஷெல்ஃப்களில் வழியும் விளம்பர டிசைன் பத்திரிக்கைகள், புத்தகங்கள். ஸ்டைலாக நுனி நாக்கு ஆங்கிலம் பேசுகிற யுவதிகள். மீடியாவுடன் நெருங்கின சம்பந்தம் உள்ள வேலை. எட்செட்ரா.

நண்பர் ஒருவர் ஏதோ ஒரு கம்பெனியில் க்ராஃபிக் டிசைனர் வேலை காலியாயிருக்கிறதென்று கேள்விப்பட்டதாய் சொன்னார். உடனே நான் ஆர்வமாய் அட்ரஸ் ஃபோன் நம்பர் போன்ற தகவல் சேகரித்துக் கொண்டு அதை முயற்சித்துப் பார்த்துவிடவேண்டுமென்று தீர்மானித்துக் கொண்டேன்.

விசாரிக்க ஃபோன் செய்தபோது குயில் போன்ற இனிமையான குரலில் ஒரு இளம்பெண் எடுத்துப் பேசுவதற்குப் பதில் ஒரு வயசான கட்டைக்குரல் “சொல்லுங்க.. ஆமாங்க.. ஒரு ஆள் வேணும். காலைல பத்து மணிக்கு வந்து மேடம்-ஐ பாருங்க” என்று தமிழில் பேசியது ஏமாற்றத்தைத் தந்தாலும்.. மேடம் என்பது மேனேஜரா, எம்.டி யா என்று யோசித்துக்கொண்டே அடுத்தநாள் காலை சரியாக 9.45-க்கு அந்த அட்வர்டைஸிங் கம்பெனியிருக்கிற தெருவுக்குள் நுழைந்தேன்.

அது இரண்டாவது ஏமாற்றம். நான் ஏதோவொரு சின்னக் கண்ணாடிக் கட்டிடம் ஒரு அகலமான மெயின்ரோட்டில் இருக்கும் என்று கணக்குப் போட்டு வைத்திருந்தேன். இது என்னவென்றால் ஒரு சின்ன சந்துமாதிரி எதிரில் எருமை மாடு வந்தால் அதற்கு வழிவிட திரும்பி தெரு முனைவரை போய் அப்புறம் அது போன பிறகு மறுபடி சந்துக்குள் வருகிற அளவு மிகக் குறுகலாக இருந்தது.

அந்த அட்ரஸை ஒரு வழியாகக் கண்டுபிடித்து அதன் முன் போய் நின்றபோது மலைத்துப் போனேன். கசகசவென்று வீடுகளும் கடைகளுமாய் இருந்த அந்தச் சந்தில் நெரிசலில் சிக்கியதுபோல ஒரு மாடிவீடு விழி பிதுங்கி நின்று என்னை வரவேற்றது. வாசலில் கொடியில் உள்பாவாடை, வேட்டி எல்லாம் காய்ந்துகொண்டிருக்க ஓரமாய் ஜவ்வரிசி வடாம் காயப்போட்டிருந்தது. பக்கத்து மண்டியிலிருந்து மளிகைப்பொருட்களால் ஆன கதம்ப வாசனை. வீட்டின் முன்னால் அங்கே ஒரு கம்பெனி இருப்பதற்கான அடையாளமோ போர்டோ எதுவும் இல்லை. விசாரித்தபோது வீட்டை ஒட்டியிருந்த இருட்டுச் சந்துக்குள் போய் மரப்படிக்கட்டு வழியாக மேலே போகச் சொன்னார்கள். போனேன். படி முடிகிற இடத்தில் மேலே ஓட்டுக் கூரையுடன் கூடிய ஒரு தளத்தில் ஒரு பெரியவர் நெற்றியில் பட்டை போட்டுக் கொண்டு ஒரு மர டேபிளின் முன் ஒரே ஒரு ஃபைலை வைத்துக்கொண்டு உட்கார்ந்து கொண்டிருந்தார்.

இண்டர்வ்யூக்கு வந்திருப்பதாய் அவரிடம் தகவல் தெரிவித்தவுடன் ஒரு கால் லேசாய் ஆடுகிற ஸ்டூலை நகர்த்திப் போட்டு காத்திருக்கச் சொல்லிவிட்டு அந்த ஒரே ஒரு ஃபைலை மறுபடி பார்க்க ஆரம்பித்தார். இன்னொரு இருட்டறையிலிருந்து பாதமிரண்டில் பொன்மணிச் சலங்கை கீதம் பாட கிண்கிணியாட என்று பாட்டு வந்தது. நான் உட்கார்ந்திருந்த அறையை மலங்க மலங்கப் பார்த்தேன். அந்த அறையின் குறுக்கே ஒரு கயிறு கட்டப் பட்டிருக்க அதில் சின்ன சைசில் சில உள் பனியன்களைப் பார்த்து புருவம் உயர்ந்தது. நான் பெரியவரைப் பார்க்க அவர் கருமமே கண்ணாக ஃபைலில் நெருக்கி நெருக்கி என்னவோ எழுதிக் கொண்டிருந்தார். அவர் நிச்சயமாக ஒரு ஆர்ட் டைரக்டராக இருக்க வாய்ப்பில்லை என்று தோன்றியது. அட்ரஸ் மாறி வந்துவிட்டேனோ என்று சந்தேகமும் வந்தது.

போய்விடலாமா என்று யோசிப்பதற்குள் திடீரென்று உள்ளறையிலிருந்து ஒரு நாற்பத்தி ஐந்து வயது அம்மாள் காட்டன் புடவையில் தோன்றினார். ’வாங்க தம்பி’ என்றார். நான் ஸ்டூலிலிருந்து எழுந்து நிற்க.. ”உங்க சாம்பிள் ஒர்க் எல்லாம் கொண்டுவந்தீங்களா” என்றார். நான் கையோடு கொண்டு போயிருந்த ஒரு சின்ன ஃபோல்டரை நீட்டினேன். நின்றபடியே ஒவ்வொரு பக்கமாகப் பார்க்க ஆரம்பித்தார்.

“எக்ஸ்பீரியன்ஸ் இருக்கா?”

“அவ்வளவா இல்ல”

“நல்லா வரையறீங்க”

”தேங்க்ஸ் மேடம்”

சட்டென்று உடம்பில் ஒரு டவுசர் தவிர வேறு எதுவும் அணியாத ஒரு பையன் ஓடிவந்து கொடியிலிருந்த உள்பனியனை உருவி அதை தலைவழியே இறக்கி அணிந்தான். அந்த அம்மாள் அவனிடம் புளகாங்கிதமாய்த் திரும்பி “அங்கிள் ட்ராயிங் எல்லாம் சூப்பரா இருக்கு பாரு.. நீ அங்கிள் கிட்ட கத்துக்கோ.. சரியா” என்றார்.

நான் கலவரமடைந்து.. “ஆஃபிஸ் எங்க இருக்கு?” என்றேன்.

“இதான் ஆஃபிஸ்.. அவரு அக்கவுண்டண்ட்.. ரேடியோக்கு ஜிங்கிள்ஸ் நிறைய பண்ணிருக்கோம். நிறைய துணிக்கடை எங்க கிளையண்டு. ரேடியோல திருமணப் பண்டிகை மங்கலப் பட்டு-ன்னு ஒரு விளம்பரப் பாட்டு கேட்டிருப்பீங்களே. அது நானே ட்யூன் போட்டுப் பாடினது என்றுவிட்டு தொண்டையை செறுமி அதை பாடிக்காட்ட ஆரம்பித்தார்.

“மேடம்.. கம்ப்யூட்டர்...?”

”கம்ப்யூட்டர் எதும் இல்லை. வேணும்னா வாங்கிடலாம். என்ன விலை வரும்?”

திடீரென்று வீட்டுக்குள் சாம்பார் கொதிக்கிற வாசம் பலமாய் வந்தது. என்னை சந்தேகமாய்ப் பார்த்துக்கொண்டே ஒரு சாம்பல் நிறப் பூனை மியாவ் என்று கடந்தது. அந்த அம்மாள் ஃபோல்டரை திருப்பிக் கொடுத்தார். அக்கவுண்டண்டட் ஃபைலில் முற்றிலுமாய் மூழ்கி முத்தெடுத்துக் கொண்டிருந்தார்.

ரொம்ப நம்பிக்கையுடன் ”நீங்க மண்டேவே ஜாயின் பண்ணிக்கலாம். மண்டே வரும்போது அவர்ட்ட அப்பாயிண்ட் லெட்டர் தரச்சொல்றேன்” என்றார் மர டேபிள் மனிதரைக் காட்டி.

அந்த அம்மணியிடம் வெகு அவசரமாய் விடைபெற்றுக் கொண்டு மரப்படி இருட்டில் தடுமாறாமல் கவனமாய் இறங்கி வெளியே வந்து எருமைச் சாணியை மிதிக்காமல் வீட்டுக்குத் திரும்பும் வழியில் திருமணப் பண்டிகை மங்கலப் பட்டு என்று வாய் தன்னிச்சையாகப் பாடிக்கொண்டிருந்ததை உணர்ந்தேன்.

வீட்டுக்காரர் பார்த்தால் என்ன நினைப்பார்?

சென்னையில் ஒரு வீட்டை நீங்கள் குடியிருக்க வாடகைக்குப் பிடிக்கிறீர்கள். அதுவும் நகரத்தின் இதயத்துக்கு நடுவே அல்லது அருகாமையில். உங்களுக்கு வாடகைக்கு விடுவதற்கென்று தன் வீட்டின் சுவர்களுக்கு பளபளவென டிஸ்டெம்பரோ பெயிண்ட்டோ அடித்து ஒரு புதிய வீட்டின் தோற்றத்தை அதற்கு கொடுத்து வைத்திருக்கிறார் வீட்டு உரிமையாளர்.

ஒரு நல்ல நாள் பார்த்து பால் காய்ச்சி பிறகு உங்கள் வாழ்நாள் உடைமைகளை அல்லது இப்பூவுலகில் வாழத் தேவையானதாகக் கருதும் குறைந்த பட்ச அத்தியாவசியச் சாமான்களை புதிய வீட்டிற்கு மாற்றிவிடுகிறீர்கள். எல்லாவற்றையும் அந்தந்த இடத்தில் ஒதுக்கி வைத்துவிட்டு, காலண்டர் மாட்டி, பால்கனியில் துணியுலர்த்த கொடிகட்டிவிட்டு, மின் அட்டையை சரிபார்த்து ரீடிங்கைக் குறித்து வைத்துவிட்டு, பாலுக்கும் பேப்பருக்கும் ஏற்பாடு பண்ணிவிட்டு, பக்கத்து வீட்டுக்காருக்கு எதற்கும் இருக்கட்டும் என்று ஒரு ஹலோவும் சொல்லி வைத்தாயிற்று.

ஒரு பெரிய ராக்கெட் ப்ராஜக்டை முடித்த அலுப்புடன் உங்கள் வரவேற்பறை சோபாவில் சாய்கிறீர்கள். எதிரில் சுவரில் புதிதாக வண்ணமடிக்கப்பட்ட சுவரில் ஒரு பெரிய கருப்புக் கீறல். என்ன அது என்று பதறி பக்கத்தில் போய்ப் பார்த்தால் அது ஒரு பென்சில் கிறுக்கல். மிகவும் கண்டிக்கத்தக்க இந்த அசட்டு வேலையைச் செய்தது உங்கள் குழந்தையாகத்தான் இருக்கும் என்று சந்தேகப்பட்டு அதைத் தேடினால் அது கையில் க்ரையான்களுடன் பெட்ரூம் சுவரில் தனது அடுத்த கட்ட வேலையை ஆரம்பித்திருக்கிறது.

உங்கள் ரியாக்‌ஷன் என்னவாக இருக்கும்? சென்னை நகரில் நம்மை நம்பி வீடு தரும்போதே ஆயிரத்து நூற்றி இருபத்து நாலு நிபந்தனைகளும் கூடவே ஒரு பதினோரு மாத அக்ரிமெண்டும் போட்டிருக்கும் வீட்டுக்காரருக்கு அவரது வீட்டை சேதாரமில்லாமல் திருப்பிக் கொடுக்க வேண்டிய கடமை உங்களுக்கு இருக்கிறபடியால் நிச்சயம் இப்போது உங்கள் ரத்த அழுத்தம் ஏறியிருக்க வாய்ப்புண்டு.

“கண்ணா இதுமாதிரியெல்லாம் சுவத்தில கிறுக்கக்கூடாது சரியா. ஹவுஸ் ஓனர் அப்பாவ திட்டுவாரு” என்று நயமாய்ச் சொல்லி பென்சில், பேனா க்ரையான்களை உடனடியாக குழந்தைக்கு எட்டாத உயரத்தில் வைத்துவிடவும் செய்வீர்கள். இப்படிச் செய்யவில்லையென்றால் வீட்டுக்காரரின் கடும் எரிச்சலுக்கு ஆளாவதுடன், வீட்டைக் காலி செய்யும்போது உங்கள் அட்வான்ஸ் தொகையிலிருந்து ஒரு பெரும் பங்கை வீட்டுச் சுவர்களை நாசப்படுத்தியதற்காக அவர் கழித்துக் கொள்ளக்கூடும்.

ஆனால் இவ்வாறான கவலைகள் எதுவுமற்று செந்தில் ஒரு நண்பர் இருந்தார். அபிராமபுரத்திலிருக்கும் அவர் வீட்டுக்கு ஒரு முறை போனேன். வாசலைத்தாண்டி உள்ளே நுழைந்ததும் ஹாலின் மொத்த சுவரையும் குத்தகைக்கு எடுத்துக்கொண்டு சுவர் கிறுக்கல்கள். அவரது ப்ரீ கேஜி குழந்தை ஹரிணியின் கைவண்ணம். பென்சில், கிரையான், இன்சுலேஸன் டேப், போஸ்டர் கலர் என்று என்ன கையில் என்ன கிடைக்கிறதோ அவைகளைக்கொண்டு தனக்கு எந்த உயரம் வரை எட்டுகிறதோ அது வரை விதவிதமான கிறுக்கல்கள். எட்டவில்லையென்றால் சோபாவின் மீது ஏறி நின்று.

ஹாலில் மட்டும் அல்ல படுக்கையறைகளில், சமையலறை சுவர்களில் என எங்கும் கிறுக்கல் மயம். ஆக அவரது வீடு ஒரு சிறிய ஆர்ட் கேலரி மாதிரி தோற்றமளித்தது.

நீங்கள் குழந்தையைக் கண்டிப்பதில்லையா என்று கேட்டதற்கு நண்பர் மெதுவாய்ச் சிரித்தார். அதோட கிரியேட்டிவிட்டியையும் சுதந்திரத்தையும் ஏன் கெடுக்கவேண்டும் என்றார். மீறிப் போனால் வீட்டுச் சொந்தக்காரர் வெள்ளையடிக்க ஒரு இருபதாயிரம் ரூபாய் கேட்பார். கொடுத்தால் போயிற்று என்றார். நான் ஆச்சரியமாகிப்போனேன்.

நான் குடியிருக்கிற வீட்டில் என் பையன் இப்படிக் கிறுக்கத் தலைப்பட்டபோது அவனை தடுத்தாட்கொண்டது ஞாபகம் வந்தது.  நான் முடிந்த அளவு வீட்டுக்காரர் குறை சொல்லாமல் நடந்துகொள்ளவேண்டும் என்று நினைக்கிற ஆசாமி. அதற்காக செய்கிற தியாகங்களில் அதுவும் ஒன்று.

குழந்தைகளுக்கு சுவரில் கிறுக்குதல் சந்தோஷம். ஆனால் ஒரு சில நிர்பந்தங்களின் பொருட்டு அவ்வாறு செய்யவிடாமல் அடக்கி ஆள்கிறோம். அதை என் நண்பர் செய்ய முயற்சிக்கவில்லை என்பது நல்ல பாராட்டத்தக்க விஷயமாகப்பட்டது. அவரது குழந்தை தனக்கு மனதில் தோன்றுவதை எல்லாம் எங்கே வேண்டுமானாலும் சுதந்திரமாகக் கிறுக்கிக் கொள்ள அனுமதியளித்திருக்கிறார். அதன் வெளிப்பாடாக சுவர் முழுவதும் குறுக்கும் நெடுக்கும் பலவிதமான கோடுகளால் ஹரிணிக்கு தன் உலகத்தை விரியச் செய்ய முடிகிறது.

அவைகளை சாதாரணக் கண்களோடு பார்த்தால் வெறும் கிறுக்கல்களாக மட்டுமே தெரியும். ஹரிணியின் மாய உலகத்தில் அவள் கற்பனைகளில் மிதக்கும் உருவங்கள் கோடுகளாக வெளிப்பட்டிருக்கிறதென்று ஏன் சொல்லமுடியாது?. அந்த உலகத்திற்கு நீங்கள் பயணிக்க வேண்டுமென்றால் அந்தக் கிறுக்கல்களை புரிந்து கொள்ளவேண்டுமென்றால் உங்கள் வயதை மூன்றாக மாற்றினால் மட்டுமே முடியும்.

குழந்தைகள் பிற்காலத்தில் என்னவாக ஆவார்கள் என்று யாராலும் சரியாகக் கணிக்க முடியாது. பெரும்பாலானவர்களின் வாழ்க்கையிலும் அதுவே நிகழ்ந்திருக்கிறது. நான் என்னவாக ஆவேன் என்று எப்படி என் அப்பாவுக்குத் தெரியாமல் போனதோ அதே மாதிரி என் மகன் பிற்காலத்தில் எதுவாக மாறுவான் என்று என்னாலும் சொல்ல முடியாது. வேண்டுமென்றால் அவன் எதுவாக ஆகவேண்டுமென்று நினைக்கிறானோ அதற்கான அடித்தளத்தையும், உதவிகளையும், ஆலோசனைகளையும் வழங்கலாம்.

நியூயார்க்கில் குழந்தை மேதாவியான மார்லா ஆம்ஸ்டெட் (Marla Olmstead) என்கிற ஒரு சின்னக் குழந்தை உலகின் முன்னணி ஓவியர்கள் மூக்கில் விரலை வைக்குமளவுக்கு மாடர்ன் ஆர்ட் ஓவியங்களை வரைந்து பல லட்சம் டாலர்களுக்கு அவைகளை விற்றுக்கொண்டிருப்பதையும் டாக்குமெண்டரியாக டிவியில் ஒரு நிகழ்ச்சியில் பார்த்தேன். அது சின்ன வயதிலிருந்தே இப்படி சுவரில் கிறுக்கிய குழந்தையாகக்கூட இருக்கலாம்.

இன்றைய சும்மா சுவர்க் கிறுக்கல்கள் நாளைய கலைப்படைப்புகளாக மாற நிறையவே வாய்ப்பிருக்கிறது. குழந்தைகள் செய்வதையும் சொல்வதையும் முற்றும் சரியல்ல என்று புறந்தள்ளுவதும் நல்லதல்ல என்று தோன்றுகிறது. வளரும் வயதில் லேசான கண்டிப்புடன் கொஞ்சம் சுதந்தரத்தையும் வழங்கும் பட்சத்தில் குழந்தைகள் தங்களின் படைப்புத்திறனை நல்ல முறையில் கூராக்கிக் கொள்ள இயலும். நண்பர் அதை செவ்வனே செய்கிறார்.

நண்பர் வீட்டுக்குப் போன நேரம் கையில் டிஜிட்டல் கேமரா இருந்ததால் குழந்தை ஹரிணியின் சுவரோவியங்களைப் படமாக்கி பிறகு கம்ப்யூட்டரில் அவைகளுக்குப் ஃப்ரேம் எல்லாம் போட்டு மின்னஞ்சலில் அவருக்கு அனுப்பி வைத்தபோது நெகிழ்ந்து சந்தோஷப்பட்டார். பிறகு அவைகளையே கலந்துகட்டி எனது வலைத்தளமான சித்ரன்.காம்-மில் (http://chithran.com) தலைப்பு பேனரிலும் உபயோகப்படுத்திக்கொண்டேன்.ஹரிணியின் அந்த சுவரோவியங்களை இந்தப் பதிவில் ஆங்காங்கே கொடுத்திருக்கிறேன். எப்படியிருக்கிறதென்று சொல்லுங்களேன்!

நெருப்பில்லாமல் புகைகிறது

மதிய உணவு இடைவேளையில் நண்பர் ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்தபோது சின்ன வயதில் நடந்த ஒரு சம்பவத்தைச் சொன்னார். நண்பர் சிகரெட் பிடிக்கும் பழக்கம் உள்ளவர். அவரது நண்பரொருவர் “இதை பாக்கெட்டில் வைத்திரு. அப்புறம் வாங்கிக் கொள்கிறேன்” என்று கொடுத்து வைத்திருந்த ஒற்றை சிகரெட்டை பாக்கெட்டில் போட்டு அப்புறம் மறந்துபோய் வீட்டுக்கு எடுத்துப் போய்விட்டாராம். சிகரெட் பிடிப்பதோடு அப்பாவின் சட்டையையும் அவ்வப்போது எடுத்துப் போட்டுக்கொண்டு போகும் பழக்கமுடையவர் இவர். வீட்டுக்கு வந்து ஹாங்கரில் மாட்டின சட்டையை அப்பா துவைக்கப் போடுவதற்காக எடுத்தபோது சொன்னாராம். “எலே.. சட்டப்பாக்கெட்ல ஒரு சிகரெட் இருக்குலே”.

கட்டிலில் ஒய்யாரமாய் படுத்து அரைத்தூக்கத்தில் இருந்த நண்பர். “அத வெளிய தூக்கிப் போடுங்கப்பா!”

அப்பாவும் வேறு கேள்விகள் ஏதும் கேட்காமல் தூக்கிப் போட்டுவிட்டுப் போய்விட்டாராம். இந்தச் சம்பவத்தை விவரித்த நண்பர் சொன்னது “அப்பா என்னை எதுவுமே கேக்கல. அது தவிர நான் சிகரெட் பிடிப்பனா இல்லையான்னு என்பது இன்னிக்கு வரைக்கும் அப்பாவுக்கு தெரியாது. தெரிஞ்சிருந்தாலும் இதுவரைக்கும் என்கிட்ட அதப் பத்திக் கேட்டதில்ல.”

இந்த மாதிரி தன் கட்டுப்பாடுகளிலிருந்து மகன்களுக்கு முழு சுதந்திரம் வழங்கியிருக்கிற அல்லது அவ்வப்போது கண்டுகொள்ளாத அப்பாக்கள் ஓரிரு பேரை நான் கண்டிருக்கிறேன். இத்தனைக்கும் அந்த அப்பாக்கள் சிகரெட் பழக்கம் இல்லாதவர்கள். சிகரெட் பிடித்தல் உடல்நலத்திற்குத் தீங்கானது என்கிற அரசாங்க வாசகத்தை அவர்கள் தெளிவாக அறிந்து வைத்திருப்பவர்கள்.

ஒரு முறை என்னுடைய (இன்னொரு) நண்பனின் வீட்டுக்குப் போனபோது வாசலில் ஈஸி சேரில் அவன் அப்பா சாய்ந்து படுத்திருந்தார். அவன் இல்லையா என்று அவரிடம் விசாரித்தபோது ஆள்காட்டி விரலால் உத்தரத்தை நோக்கிக் காட்டிவிட்டு, பிறகு இரண்டு விரல்களை “v" மாதிரி உதட்டில் வைத்து ஊதிக் காட்டினார். நான் ஒரு நிமிடம் தேமே என்று விழித்துவிட்டுப் பின்னர் அதன் பொருள் புரிந்து சைடு படிக்கட்டு வழியாக மொட்டை மாடிக்குச் சென்றேன். அங்கே சுற்றுச் சுவரில் உட்கார்ந்து வானத்தைப் பார்த்துக் கொண்டு புகைவிட்டுக் கொண்டிருந்தான் நண்பன். “என்னடா வீட்லயே தம்மா? அப்பா இருக்காரே!” என்றதற்கு மூக்கு வழியாக புகையை வெளியே விட்டுவிட்டு “கண்டுக்க மாட்டார்” என்றான். மீண்டும் ஒரு இழுப்பு இழுத்துவிட்டு.. “அம்மாவும்தான்” என்றான்.

இந்த இடத்தில் நீங்கள் எல்லாரும் “ரோஜா” படத்தில் அரவிந்தசாமி அம்மா முன்னிலையிலேயே சிகரெட் பற்ற வைத்துப் புகைப்பதை தவறாமல் நினைவுகூறுவீர்கள் என்று தெரியும். (நினைவு கூறாதவர்கள் இந்த வரியைப் படித்துவிட்டு ஒருமுறை நினைவு கூறுங்கள்.) இதைப்பார்த்து சிலபேர் அதிர்ச்சியும் சில பேர் ஆச்சரியமும், சில பேர் இரண்டையும் ஒருங்கே அடைந்தார்கள்.

என் அப்பா சிகரெட்டெல்லாம் பிடிக்கற பழக்கம் வெச்சுக்காதே என்று என்றைக்காவது எனக்கு எச்சரிக்கை விடுத்திருக்கிறாரா என்று யோசித்துப் பார்த்தால் அப்படி எதுவும் நினைவில் புகையாடவில்லை. பையன் தம் எல்லாம் அடிக்கிறானா என்று யாரிடமாவது விசாரித்திருப்பாரா என்பது கூட நிச்சயமாகத் தெரியவில்லை.

எனக்கு சிகரெட் பிடிக்கிற நண்பர்கள் நிறைய பேர் உண்டு. என்னிடமே ரெண்டே முக்கால் ரூபாய் வாங்கி ‘கிங்ஸ்’ வாங்கியவர்கள் இருக்கிறார்கள். (இப்போ எவ்ளோ?) அவர்கள் சில நேரம் அளவுக்கு அதிகமாக புகைப்பதுபோல தோன்றும் சமயங்களில் “ஏம்ப்பா இந்தக் கருமத்த விட்டுற வேண்டியதுதான?” என்று கேட்டிருக்கிறேன். அதற்கு விதவிதமான பதில்கள் வந்திருக்கின்றன.

பதில் 1: பதினெட்டு வயசில காலேஜ்ல ஆரம்பிச்சதுடா.. உடம்புல ஊறிப்போச்சு. விடறது கஷ்டம்.
பதில் 2: எந்த ******க்கு விடணும்னு சொல்லு.
பதில் 3: புகை உடலுக்குப் பகைங்கறதுனாலதான் உள்ள வச்சுக்காம வெளிய விட்டுர்றேன். ஹிஹி!
பதில் 4: வுட்டுட்டா உளுந்துரும்ஜி!
பதில் 5: எனக்கு ஆக்ஸிஜனே இதுதான். எப்டி வுடறது?

இன்னபிற.

சிகரெட் பிடிக்கிற அப்பாக்கள் சிலபேரைப் பார்த்திருக்கிறேன். தன்னிடமிருந்து மகனோ மகளோ சிகரெட் பிடிப்பதைக் கற்றுக் கொண்டுவிடக்கூடாதென்கிற முன்னெச்சரிக்கையுடன் வீட்டுக்கு வெளியே சற்றுத் தள்ளி தெருமுனையில் அல்லது டீக்கடையில் என்று கமுக்கமாக முடித்துவிட்டு வந்துவிடுவார்கள். வாசம் தெரியாமலிருக்க ஹால்ஸ் அல்லது நிஜாம் பாக்கு.

பதில் 1-ஐ சொன்ன நண்பரிடம் முன்னெல்லாம் ஏதாவது ஒரு இடத்தைக் குறிப்பிட்டு அது எங்கேயிருக்கிறதென்று கேட்டால், இந்த பஸ்ஸில் ஏறி, அந்த ஸ்டாப்பிங்கில் இறங்கி அப்றம் ஒரு சிகரெட் பத்த வெச்சு நடக்க ஆரம்பிச்சீன்னா அது தீர்றதுக்குள்ள போயிரலாம் என்பான். இது எனக்கு ஒரு விதத்தில் இன்ஸ்பையர் ஆகி 96-ல் கல்கியில் வெளிவந்த ஒரு சிறுகதையில் இதை ஒரு வரியாக வைத்தேன். கதை நாயகி காயத்ரியின் கணவன் ராம்குமார் என்பவன் தினம் காலை ஒரு சிகரெட் பற்றவைத்துக்கொண்டு மனைவியை நடக்கிற தூரத்தில் இருக்கிற ஆபிஸ் வரை விட்டுவிட்டுத் திரும்புவான். ‘ஒரு சிகரெட் தூரம்’ என்று கூட தலைப்பு வைத்து பிறகு ‘நடக்கிற தூரம்’ என்று மாறிவிட்டது.

கோவையில் ஒரு அட்வர்டைஸிங் கம்பெனியில் பணிபுரிந்தபோது அங்கே வேலை செய்த ஒரு பத்துப் பன்னிரண்டு பேரில் பெண்கள் தவிர முக்கால்வாசிப் பேர் புகை மன்னர்களாக இருந்தார்கள். கம்பெனியின் வைஸ் பிரஸிடெண்ட் உட்பட. கிரியேட்டிவ் ஏரியாவில் ஆர்ட் டைரக்டர், உதவி ஆர்டிஸ்ட், க்ளையண்ட் சர்வீஸ் எக்ஸிக்யூட்டிவ், அக்கவுண்ட் ஹெட் என்று எல்லாருமே ஒரே அறையில் உட்கார்ந்து கொண்டு மாற்றி மாற்றி பற்றவைத்துக் கொண்டிருப்பார்கள். வத்திப் பெட்டி இருக்கா என்று என்னிடம் வேண்டுமென்றே கேட்பார்கள்.

புகைபிடித்தல் என்பது கிரியேட்டிவ்-ஆன ஆசாமிகளின் தலையாய லைஃப் ஸ்டைல் என்பதை ஸ்தாபிக்க முனைபவர்கள் அவர்கள். நான் திருவிளையாடல் படத்தில் கைலாயக் காட்சி மாதிரி புகை மண்டலத்துக்கு நடுவே மூச்சுத் திணறி உட்கார்ந்து கொண்டிருப்பேன். இதற்கல்லவா அறிஞர்கள் பாஸ்ஸிவ் ஸ்மோக்கிங் (Passive Smoking) என்று பெயர் வைத்திருக்கிறார்கள்!! இதில் என்ன வேடிக்கை என்றால் மாத ஆரம்பத்தில் டப்பா டப்பாவாக கைமாறுகிற சிகரெட், மாத இறுதியில் பட்ஜெட் காரணமாக மல்லிசேரி பீடியாகத் தேய்ந்து ஆளாளுக்குக் காட்டமாய் உதட்டில் வைத்து இழுத்துக் கொண்டிருப்பார்கள். வைஸ் பிரஸிடெண்ட் வந்து “யோவ், பீடி குடுய்யா” என்று ஆர்ட் டைரக்டரிடம் வந்து வாங்கிப் போவார். நான் எழுந்து வெளியே வந்துவிடுவேன். (அந்த சமயங்களில் அவர்களின் கிரியேட்டிவிட்டி இன்னும் அதிகமானதா என்பதை நான் கவனித்திருக்கவில்லை)

பொள்ளாச்சியில் தேவர் மகன் படப்பிடிப்புக்கு வந்திருந்த ஒரு பிரபல எழுத்தாளரை அவர் தங்கியிருந்த லாட்ஜ் அறையில் சந்திந்தபோது கையில் புகைகிற சிகரெட்டுடன் வரவேற்றார். ஒரு நான்கைந்து மணி நேரமிருக்கும். ஒரு சிகரெட் தீர்ந்து போகும் போது அதிலேயே இன்னொன்றை பற்றவைத்துக் கொண்டு இடைவெளி விடாமல் தொடர்ந்து அவர் புகைத்ததைப் பார்த்து அரண்டும் மிரண்டும் போயிருந்தேன். எனக்குத் தெரிந்து குறைந்தது 25 சிகரெட்டுகளாவது தீர்ந்திருக்கும். செயின் ஸ்மோக்கிங் என்றால் என்ன என்று டெமோ-வுடன் தெரிந்து கொண்டது அன்றுதான். என் வீட்டுக்குப் பக்கத்தில் கூட ஒருவர் காலர் தூக்கிவிடப்பட்ட டி-சர்ட் மற்றும் வேட்டியுடன் எப்போதும் சதா விரலிடுக்கில் புகைகிற சிகரெட்டுடன் காம்பவுண்டுக்கு வெளியே நின்றிருப்பார். எங்கேயாவது போகும்போதும் வரும்போதும் எந்நேரமும் அவரை அந்த இடத்தில் அந்த நிலையிலேயே பார்த்துக்கொண்டிருக்கிறேன். தம் அடிப்பதை ஒரு வேலையாகவே செய்ய முடியுமா என்று ஆச்சரியமாகவும் இருக்கிறது.

சிகரெட் பிடிக்கிற ஆண்கள் பெட்டிக்கடையில் “பிரதர்.. நெருப்பு குடுங்க” என்று பக்கத்தில் நிற்கிறவரிடம் இயல்பாகக் கேட்கும் கேள்வியில் முன்பின் பழக்கம் இல்லாதவர்கூட மனமுவந்து தன் கொள்ளியைத் தந்து உதவி பின் தோழமையுடன் பேசிக்கொண்டிருப்பதைக் கூட பார்த்திருக்கிறேன். நட்பு வளர்க்க உதவும் நெருப்பு.

வாழ்க்கையில் அவ்வப்போது தொட்டுக்கொள்ள சிகரெட், பான் பராக், சுவிங்கம் என்று ஏதாவது ஒரு ஐட்டம் ஏன் எப்போதும் சிலருக்குத் தேவைப்படுகிறதென்று சில நேரம் யோசித்துப் பார்த்திருக்கிறேன். இது ஒரு உளவியல் சம்பந்தப்பட்ட விஷயம் என்றுதான் தோன்றுகிறது. ஸீரியசாய் எப்போதும் யோசிப்பவர்கள் கையில் சிகரெட் புகைகிறது. அது அவர்கள் சிந்தனையைத் தூண்டுகிறதா என்று உலகமெங்கும் யாராவது கருத்துக் கணிப்பு நடத்திக் கொண்டுதான் இருக்கிறார்கள். தொழிலாளிகள் தன் உழைப்பை, வியர்வையை, அலுப்பை மறக்க ஓரமாய் உட்கார்ந்து ஒரு பீடியை ஒரு இழுப்பு. சிலருக்கு பெண்களிடம் தான் ஒரு ஹீரோவாக நிரூபணம் செய்வதற்கு. சிலருக்கு தான் ஒரு வில்லன் என்று மற்றவர்களுக்குத் பிரகடனப்படுத்துவதற்கு. சிலருக்கு தான் ஒரு ஆண் என்று நிரூபணம் செய்வதற்கு. இந்த லிஸ்டை இன்னும் விரிக்கலாம்.

பிறரிடம் தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்துவதற்கு. தன்னுடைய தாழ்வு மனப்பான்மையை மறைப்பதற்கு. அப்பாவை எதிர்ப்பதற்கு. தன்னிடமிருக்கிற இண்டெலெக்சுவல்தனத்தை வெளிப்படுத்துவதற்கு. கை நடுக்கத்தை மறைப்பதற்கு. மதுவருந்தும்போது சும்மா ஒரு உப கிக் ஏற்படுத்துவதற்கு. சிலருக்கு சும்மா ஸ்டைலுக்கு. சிகரெட் என்றால் என்ன என்று ஒரு முறை தெரிந்துகொள்வதற்கு. தன் படைப்பாற்றலை அதிகரித்துக் கொள்வதற்கு. சிலருக்கு சாப்பாட்டுக்கு பதிலாக. சிலர் தன் நண்பர்களுடன் சும்மா கம்பெனிக்கு. தன் கணவனையோ, காதலனையோவிட தானும் குறைந்து போய்விடவில்லை என்று தெரிவிப்பதற்கு. சிலருக்கு துக்கத்தைக் கரைக்க. சிலருக்கு தூக்கத்தை அழைக்க. சிலருக்கு குளிரைத் தடுக்க. சிலருக்கு மழையை ரசிக்க. இப்படியாக ஒவ்வொருவருக்கும் புகைபிடிப்பதற்கான தனிப்பட்ட காரணங்கள் நீண்டுகொண்டே போகும்.

உதடு வழி நுழைகிற புகை நெஞ்சாங்கூட்டில் இறங்கிப் பரவி மனதிலும் உடம்பிலும் என்னெல்லாம் மாயம் செய்கிறது என்பதை சிகரெட்டை நுனி முதல் அடிவரை அனுபவித்துப் பிறகு ஃபில்டரைக் கடாசுபவர்களுக்குத்தான் வெளிச்சம்.

சிலர் தொட நினைக்கிறார்கள். சிலர் விட நினைக்கிறார்கள். சிகரெட் பிடிப்பது என்பது தனிப்பட்ட நபரின் விருப்பமும், சுதந்திரமும், உரிமையும், கொள்கையும் ஆகவும் இருக்கிறது. சிலருக்கு அதுவே ஒரு மோனத்தவமும், தியானமும், வாழ்வியல் வழியும் ஆக பரிமாணம் கொண்டிருக்கிறது. டாக்டர் எக்ஸ்ரேவை சுட்டிக் காட்டி “உங்க நுரையீரல்ல... என்று ஏதோ சொல்ல ஆரம்பிக்கும்வரை.

பையனும் டார்வினும் பின்னே ஞானும்


சென்ற வெள்ளி - சனியில் பன்றிக் காய்ச்சல் எச்சரிக்கைகளையும் மீறி என் பையன் படிக்கும் பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. அவன் படிக்கிற ’நாலாப்பு’ சார்பாக கையில் ஒரு ரிமோட் கண்ட்ரோல் எஸ்கவேட்டர் கொடுத்து ஒரு அறையில் நிற்க வைத்துவிட்டார்கள். கண்காட்சிக்கு வருகை புரிபவர்கள் அவனிருக்கிற குறிப்பிட்ட பகுதிக்கு வந்ததும் "This is called excavator. This is used for digging the trenches, holes... " என்று டீச்சர் சொல்லிக்கொடுத்த ப்ளா ப்ளா-க்களை மள மளவென ஒப்பிக்க வேண்டும். (நானே நான்கு தடவை அவனருகில் போய் நின்று “can you please explain this?" என்று கேட்க சின்ன தயக்கச் சிரிப்புடன் சளைக்காமல் விளக்கினான்)

சரி ஸயின்ஸ் எக்ஸ்போவில் அப்படி என்னதான் இருக்கிறதென்று பார்க்கலாமே என்று போனவனுக்கு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது. சும்மா சொல்லக் கூடாது. டீச்சர்களும், மாணவ மாணவிகளும், பள்ளி நிர்வாகமும் ஒன்று சேர்ந்து அற்புதமாகக் கலக்கிவிட்டார்கள். க்ரவுண்ட் ஃப்ளோரில் சிவப்புக் கம்பளம் விரித்து எல்.சி.டி. டிவியில் நிகழ்ச்சிகளின் வீடியோ விரிய, ஸ்பீக்கரில் இசை முழுங்குகிறது. இதை வந்து பாருங்கள் அதை வந்து பாருங்கள் என்று மாடிப் படிகள் முழுக்க மாணவர்கள் தயாரித்து ஒட்டிய விளம்பர நோட்டீஸ்கள். அலங்கார வளைவுகள். கலை நயம். ஜிகினா.

மெட்ரோ ரயில் சிஸ்டம், ஹைட்ரோ பவர் சிஸ்டம், டெலி கம்யூனிகேஷன் நெட்வொர்க், ரோபோட்டிக்ஸ், ஓரிகமி, டேன்கிராம்ஸ், குளோபல் வார்மிங் என்று ஒரு சப்ஜெக்டையும் விட்டு வைக்காமல் பள்ளிக் கட்டிடத்தின் மூன்று தளங்களிலும் கலக்கலான செட்டப்புகள். முக்கால்வாசி சாதனங்களை தெர்மோகோல், ஃபெவிகால், வாட்டர்கலர் கொண்டே தயாரித்து விட்டார்கள். சின்னச் சின்ன பொடிசுகள் லேப்டாப், ப்ரொஜக்டர்கள் எல்லாம் வைத்துக் கொண்டு விண்டோஸ் மூவி மேக்கரில் தயாரித்த வீடியோ படங்களை இயக்கிக் கொண்டிருந்ததைப் பார்த்தபோது ’ஆச்சரியத்தால் கண்கள் விரிந்தன’ என்று அடிக்கடி இந்த எழுத்தாளர்கள் எல்லாம் எழுதுகிறார்களே அது என்ன என்று புரிந்தது.

ஒவ்வொரு பிரிவிலும் நிற்க வைக்கப்பட்டிருந்த குழந்தைகள் நாம் உள்ளே நுழைந்ததும் போட்டி போட்டுக் கொண்டு “அங்கிள்! (அல்லது ஆண்ட்டி) can I explain this?" என்று கேட்டுவிட்டு ஜெட் வேகத்தில் ஆங்கிலத்தில் குறைந்தது ஐம்பது விநாடிகள் பட்டையைக் கிளப்பிவிட்டு கடைசியில் “தேங்ங்ங்ங்க்க்க்க்க்யூ” என்று ராகம் பாடி முடித்தன. மனப்பாடம் செய்து கொண்டு ஒப்பிக்கிறதுகள் என்றாலும் ஒவ்வொரு டேபிளிலும் பொறுமையாய் அந்த மழலைக் குரல்களை ஓரிரு நிமிடங்கள் கேட்டுக் கொண்டிருப்பது மிகப் பெரிய சுகம். அநியாயத்துக்கு இத்தனை பேர் ’படிப்ஸ்’ஆக இருக்கிறார்களே என்று ஆச்சரியமாக இருந்தது. அதுவும் க்ளோபல் வார்மிங் பற்றி விளக்கின பையனிடம் நான் ஏதோ சந்தேகம் கேட்க. “இட் இஸ் தேர் இன் த இண்டெர்நெட் அங்கிள். யு கேன் டவுன்லோட் இட் ஃப்ரம் தேர்.” என்று முத்தாய்ப்பு வைத்தான். சொல்லி முடித்தபிறகு அவர்கள் நீட்டுகிற Feedback நோட்டுப் புத்தகத்தில் உங்கள் பெயரெழுதி உங்கள் கருத்தை அல்லது பாராட்டை எழுதிக் கொடுத்தீர்களானால் குழந்தைகள் முகத்தில் பொங்குகிற சந்தோஷம் இருக்கிறதே. அப்பப்பா! (சொக்கன் கவனிக்க). நான் நீட்டப்பட்ட நோட்டுகளில் எல்லாம் “excellent presentation" என்று தாராளமாக எழுதிக் கொடுத்தேன். (ஆனால் பாராட்டி கை கொடுத்தால் மட்டும் பன்றிக் காய்ச்சல் பயத்துடன் கையை பின்னுக்கு இழுத்துக் கொள்கிறார்கள். அப்புறம் என்னை நானே திட்டிக்கொண்டு அதை தவிர்க்க ஆரம்பித்தேன்.)

ஆறாங்கிளாஸ் படிக்கிற மூன்று சிறுமிகள் அவர்களின் கிளாஸ்மேட்டுகளான சில வாண்டுப் பையன்களைக் காட்டி “அங்கிள்! கன் வி எக்ஸ்ப்ளெய்ன் அபெளட் தெம்” என்று குசும்புச் சிரிப்புடன் கேட்க, நானும் என்னவென்று புரியாமல் தலையாட்ட, “தெ ஆர் ஆல் மங்கீஸ். தெ ஹவ் எஸ்கேப்ப்டு ஃப்ரம் வண்டலூர் ஜூ. தெ நார்மலி ஈட் பனானாஸ்” என்று கலாய்த்து வெடிச்சிரிப்பு சிரித்தார்கள்.

இதைக் கேட்டதும் ஒரு தடவை என் பையனுக்கும் எனக்கும் இரவு தூக்கம் வருவதற்கு முந்தைய பொழுதில் நடந்த சம்பாஷணை ஞாபகத்திற்கு வந்தது.

நான்: குரங்கிலிருந்து மனுஷன் வந்தான்னு யார் கண்டுபுடிச்சா தெரியுமா?

பையன்: ஆங்... தெரியும். லெஸன்ல இருக்கு. அது வந்து...

நான்: சார்லஸ் டார்வின்

பையன்: ஆ! ஆமா.. டார்வின் தியரி..

நான்: கரெக்ட்டு.. மில்லியன் மில்லியன் வருஷத்துக்கு முன்னால குரங்கா இருந்து அதிலேர்ந்து கொஞ்சம் கொஞ்சமா மனுஷன் வந்தான். அப்போ அவனுக்கு உடம்பு பூரா நிறைய முடி இருந்துச்சு. வால் இருந்துச்சு. கை காலெல்லாம் பெருசு பெருசா இருக்கும். மரத்துக்கு மரம் தாவிகிட்டு இருந்தான். அப்றம் அதெல்லாம் போய் இப்போ பாத்தியா இப்ப என்னை மாதிரி ஆயிட்டான்.

பையன்: (மெளனமாய் சில விநாடிகள் யோசித்துவிட்டு) “அப்ப இதுக்கு முன்னாடி நீ கொரங்கா இருந்தியா?”.

அடுத்த ஜெனரேஷன் பசங்களிடம் கொஞ்சம் அல்ல நிறையவே ஜாக்கிரதையாகத்தான் இருக்கவேண்டும் என்று தோன்றுகிறது.