வருஷம் 16

கோவையிலிருந்து செப்டம்பர் 13 அன்று மதியம் ஒரு ரயில் புறப்பட்டது. அதன் இரண்டாம் வகுப்புப் பெட்டியொன்றில் ஒரு ஜன்னலோர இருக்கையொன்றில் அவன் உட்கார்ந்திருந்தான். ரயில் புறப்படும்போது சென்னை வரை நீண்டிருக்கும் அதன் பாதையைப் போலவே அவன் நெற்றியில் கவலை ரேகைகள் நீண்டிருந்தன.

சென்னை ஒரு மாநகரம். அதை நோக்கிப் பயணிக்கிறோம் என்கிற பதட்டம் அவனுக்குள் லாரி குடிநீர் போல தளும்பிக்கொண்டிருந்தது. புதிய வேலை, புதிய இடம், புதிய மக்கள். புதிய தட்பவெப்பநிலை. இதைவிட மேலாக அடுத்த மாதம் குழந்தை பெறப்போகும் கர்ப்பிணி மனைவியை விட்டுப் பிரிந்து வரும் மனக்குடைச்சல்.

"சென்னைக்கா போறீங்க? அங்கெல்லாம் போய் குப்பை கொட்டறது ரொம்ப கஷ்டம்ங்க.. மறுபடி யோசிங்க"

"சென்னைத் தண்ணிய ஒரு ரெண்டு வருஷம் குடிச்சீங்கன்னா கிட்னி ஸ்டோன் வந்துரும்"

"ஆட்டோக்காரங்க, பஸ் கண்டக்டர் எல்லாம் மரியாதயில்லாம பேசுவாங்க.."

"இந்த அருமையான கோவை க்ளைமேட்டை விட்டுட்டு எங்க போறீங்க?"

அவன் பயணத் தீர்மானத்திலும், திட்டத்திலும் ஓட்டை போட நினைக்கும் வார்த்தைகள் நாலாப் பக்கமிருந்தும் வந்தன. அவன் முடிவை மாற்றிக்கொள்ளவில்லை. கனத்த மனதுடன் பிரயாணித்தான் என்பதால் கோவைக்கும் சென்னைக்குமான தூரம் தீராமல் ஒரு முடிவிலியாகப் போய்க்கொண்டிருந்தது போல உணர்ந்தான்.

சென்னைக்கு வந்ததும் முதலில் தோன்றியது உடனே ஊருக்குத் திரும்பிப் போய்விடவேண்டும் என்பதுதான்.

"ஒரு வருஷம் இருந்திட்டீன்னா அப்றம் இந்த ஊர விட்டுப் போகமாட்ட.."

இதைச் சொன்ன நண்பரின் வார்த்தைகளை இப்போது மறுபடியும் அசைபோட்டான். உண்மைதான். ஒரு வருஷம் தாக்குப் பிடிக்க முடியுமா என்று சந்தேகமாகத்தான் இருந்தது. ஆனால் சென்னை அவனை நல்ல முறையில் சுவீகரித்துக் கொண்டது. சென்னை வெயில் பழகிவிட்டது. மக்கள் பழகிவிட்டார்கள். சென்னையின் புவியியல் பழகிவிட்டது.

பதினாறு வருடங்கள் உருண்டோடிவிட்டன. இத்தனை வருடங்கள் காலண்டரைத் தவிர பெரிதாய் என்ன கிழித்தான் என்று தெரியவில்லை. ஆறு வேலை மாற்றிவிட்டான். ஓரிரு லேசான நில அதிர்வுகள், ஒரு சுனாமி, நகரத்தைக் கிட்டத்தட்ட மூழ்கடித்த ஒரு மழை வெள்ளப் பெருக்கு உட்பட ஆயிரம் அனுபவங்கள். தாடி, மீசை தலைமுடியில் நரை கண்டுவிட்டது. இளம்பெண்களும், பையன்களும் அவனை அங்க்கிள் என்று கூப்பிட ஆரம்பித்துவிட்டார்கள். பெருங்குடி டம்ப் யார்டில் (Dump yard) அவன் கொட்டிய குப்பையும் கணிசமான அளவில் சேர்ந்துவிட்டது.

பிறந்ததிலிருந்தே நாடோடியாக இருந்த அவன் 'நீங்க எந்த ஊர்?' என்று யாராவது கேட்டால் ஒரு நொடி தடுமாறுவான். எந்த ஊரில் நீ அதிகமாக இருந்தாயோ அதுதான் உன் ஊர் என்று தனக்குள்ளே ஒரு கான்செப்ட் உருவாக்கிக் கொண்டான். இனிமேல் 'சென்னை' என்றே பதில் சொல்லலாமா என்று யோசிக்கிறான்.

யார் என்று தெரிகிறதா?

ஒரு விஷேச மொபைல் அழைப்பு வந்தது. அன்னோன் நம்பர் என்பதால் எடுக்கத் தயங்கினேன். என் மொபைலில் ஒரு போதும் சரியாக வேலை செய்திராத ட்ரூ காலர் ஆப்பானது வழக்கம்போல இந்த எண்ணையும் யாரென்று கண்டுபிடித்துக் கொடுக்கவில்லை. (பேசி முடித்தபிறகு இன்னார், அண்ணார் என்று சொல்வது அதன் வழக்கமாயிருந்தது).

விஸ்வரூபத்தில் கமல் கேட்டமாதிரி மறுமுனை புதிர் போட்டது. "யாரென்று தெரிகிறதா?"

குரல்களை வைத்து நபர்களை அடையாளம் காணும் திறமை எனக்கு இல்லை என்றும் நீங்களே சொல்லிவிடுங்கள் என்றும் சொன்னேன். ஆண் குரல் என்று மட்டும் கணிக்க முடிந்தது.

குரல் விடுவதாயில்லை. "நான் பாலு பேசறேன். உடுமலைபேட்டை. உங்கூட 6F, 7B, 8E, 9E, 10D -ல ஒண்ணாப் படிச்சேன்."

புருவங்களை நெரித்து, மூளையை அலசி, கன்னத்தில் கைவைத்து, தலை முடியைப் பிசைந்து என எப்படி யோசித்தும் இந்த அபாயகர ஞாபகக்காரனை நினைவுக்குக் கொண்டுவர முடியவில்லை. ஒரே ஒரு கேள்வியில் 'பாலு' வை அவன் கோர்ட்டுக்குத் தட்டிவிட்டேன்.

"தெரியலையே.. எந்த பாலு?"

மூளையில் ஒரே ஒரு நியூரான் உதவிக்கு வந்தது. லேசாய் பொறி தட்டி, "N. N. பாலனா?" என்றேன். சில பேர்களை இப்படி இனிஸியலோடு மட்டுமே நினைவறைகளில் சேமித்துவைத்ததால் வந்த சிக்கல்.

சரியாகத்தான் கண்டுபிடித்தேன் போலும்.

"நானேதான். பரவால்லயே.. ஞாபகம் வெச்சிருக்க."

பிறகு குசல விசாரிப்புகள். மலரும், கிளறும் நினைவுகள். "இரு.. உங்கூடப் பேச இன்னொரு ஃப்ரெண்டு வெய்ட் பண்றான். ஃபோனை அவன்ட்ட தர்ரேன்.."

மறுபடியும் ஒரு ஹலோ. மறுபடியும் ‘நான் யார் என்று தெரிகிறதா?.’ இந்தக் குரல் கொடுத்த ஒரே க்ளூ "நானு, பாலு, அய்யர் ரமேஷ் எல்லாரும் ஒண்ணாவே சுத்துவோம்.."

இந்த முறை வித்தியாசமாக இருக்கட்டுமே என்று கண்களை உருட்டி யோசித்துப் பார்த்ததில் ஒரே நாளில் இரண்டாம் முறையாகப் பொறி தட்டியது.

"மோகன்ராஜா?"

"யெஸ்"

அடடே என்று ஆச்சரிய அதிர்ச்சி ஒன்று என்னைக் கவ்வியது. மனத்திரையில் ஸ்பைரல் சுற்ற ஆரம்பித்து ஃப்ளாஷ்பேக் ஓட ஆரம்பித்தது.இந்த மோகன்ராஜ் மேற்சொன்ன எல்லா வகுப்புகளிலும் என்னோடு படித்தவன்தான் (என்று நினைக்கிறேன்). இரண்டு பேரும் ஆரம்பத்தில் நல்ல நண்பர்களாக இருந்தோம். அவன் நன்றாக வரையக்கூட செய்வான். ஆனால் எட்டாம் வகுப்பு வந்தபோது எதற்கென்றே தெரியாமல் எங்களுக்குள் போர் மூண்டது. அடிக்கடி மோதல் நிகழ ஆரம்பித்தது. என்ன காரணத்துக்காக என்று பின்னாளில் எல்லா ரூமிலும் உட்கார்ந்து யோசித்திருக்கிறேன். பிடிபடவில்லை.

மோகன்ராஜ் அப்போதே கராத்தேவில் ப்ளாக்பெல்ட் வாங்கியிருந்தான் என்பதால் பாதுகாப்பு காரணங்களுக்காக வெறும் வாய்ச்சண்டையுடன் நிறுத்திக்கொள்வேன். கபடி விளையாடும்போது தாட்டியான பையன்களைக் கூட மணலில் வீழ்த்தும் லாகவத்தை அறிந்திருந்தேன் என்றாலும் அவனின் அப்பர் கிக், லோயர் பஞ்ச்-சுக்கெல்லாம் அப்போதைய எனது நோஞ்சான் உடம்பு தாங்கியிராது என்பதால் ரிஸ்க் எடுக்கவில்லை. அவனோ பேஸ்கட் பால் போஸ்ட்டில் தொற்றி ஒரே மூச்சில் தொடர்ந்து ஐம்பது அறுபது புல்-அப்ஸ் எடுப்பவன்.

பெரியகடைவீதிக்கு இணையாகச் செல்லும் சந்து ஒன்றிற்குள் எங்களுக்குள் இறுதிக்கட்ட யுத்தம் நடந்தது. கெட்ட வார்த்தை ஏவுகணைகளால் (நாயே.. பன்னி போன்ற..) தாக்கிக்கொண்டோம். அதற்கப்புறம் இருவரும் பேசிக்கொள்ளவில்லை. ஏன் நிமிர்ந்து பார்த்துக்கொள்ளக்கூட இல்லை. பத்தாவது படிக்கும்போது ஒரு முறை கபடி விளையாட்டின்போது அவன் எனது எதிர் டீமில் இருந்தான். கபட் கபட் என்று சொல்லிக்கொண்டே வந்து நான் அசந்த நேரத்தில் இடது காலை நூற்றென்பது டிகிரி கோணத்தில் உயர்த்தி எனது தாடையைப் பதம் பார்த்தான். நிலைகுலைந்து நின்றேன். நான் அவுட். 0.09% மீதமிருந்த எங்கள் நட்பும் அன்றோடு மொத்தமாய் அவுட்.

பிறகு +2 முடித்தபிறகு அவன் சட்டம் படிக்கப் போனான் என்று யாரோ சொல்லிக் கேள்விப்பட்டது மட்டும் ஞாபகத்திலிருந்தது.

முப்பது வருடங்கள் கழித்து அந்த மோகன்ராஜின் குரல்.

'நம் சண்டை ஞாபகமிருக்கிறதா' என்றேன். சிரித்தான். விவரங்கள் புரியாத வயதில் எதற்கென்றே தெரியாமல் நிகழ்ந்த நிகழ்வுகள். எதற்கும் அர்த்தங்கள் கிடையாது.

பிறகு ஒரு சில கதைகள் பேசினோம். நாங்கள் படித்த பள்ளிக்கு அவன் சமீபத்தில் சென்றபோது தலைமையாசிரியர் அறைக்கு முன்னால் பலகையில் என் பெயர் இருந்ததைப் பார்த்ததாகச் சொன்னான்.

"ரொம்ப சந்தோஷம் நண்பா" என்றான்.

"விரைவில் சந்திப்போம்" என்றேன்.

உடனே ஃபேஸ்புக்கில் நட்பு அழைப்பை விடுத்தான். அவனது ஃப்ரொபல் பட முகம் என் நினைவிலிருந்த முகத்தோடு பச்சக் என்று பொருந்திப் போனது. காலம் தந்த வழுக்கையைத் தவிர.

போனை வைத்தபிறகு நீண்ட நேரம் யோசித்துக்கொண்டிருந்தேன்.
நான் படித்த வகுப்புகளில் 9E, 10D தவிர எனக்கு வேறு செக்‌ஷன்கள் நினைவுக்கு வரவில்லை என்பது உறுத்தலாக இருந்தது. ஒரு சில வகுப்புத் தோழர்கள் தவிர வேறு யாரும் ஞாபகத்திலில்லை என்பது ஒரு குற்ற உணர்வாகத் தொக்கி நிற்கிறது.

நீண்ட நெடிய நகர வாழ்க்கை பால்ய நினைவுகளை மொன்னையாக்குகிறதா என்கிற கேள்வியுடன் தூங்கப்போனேன்.

மிளகாய்ப் பொடியும் மாங்கொட்டையும்


முன்பெல்லாம் பைக்கில் போகும்போது யாராவது லிஃப்ட் கேட்டால் உடனே எனது கருணை உள்ளம் விழித்துக் கொண்டு வண்டியை நிறுத்துவேன். சில போலீஸ்காரர்கள் வண்டியை கைகாட்டி நிறுத்தி அது அவருடைய சொந்த வாகனமேபோல் ஏறி உட்கார்ந்துகொண்டு ’அந்த பூத்தாண்ட விட்ருங்க’ என்று உரிமையாகச் சொல்வார்கள். அவர் கையிலோ சட்டைப் பாக்கெட்டிலோ வைத்திருக்கும் வாக்கி டாக்கியானது சகிக்க இயலாவண்ணம் இடையிடையே ஒரு பாம்புச் சீறல் சப்தத்துடன் அடித்தொண்டையில் கமறிக்கொண்டிருக்கும். அதே போல பெரியவர்கள் யாராவது கை காட்டினால் நிறுத்திவிடுவேன். சில டாஸ்மாக் பயனர்களும் அதில் அடங்குவர். (அதாவது அடங்க மாட்டார்கள்).

எனது கோவை நண்பரொருவர் ஒரு சம்பவத்தைச் சொன்னார். கோவையில் அவர் பைக்கில் போய்க்கொண்டிருக்கும்போது லிஃப்ட் கேட்டிருக்கிறார் ஒரு டிப்டாப்(!) ஆசாமி. இவரும் கொடுத்திருக்கிறார். ஒரு இருட்டான இடம் வந்ததும் ’இங்கே இறங்கிக் கொள்கிறேன்’ என்று நிறுத்தச் சொல்லி நண்பர் சுதாரிப்பதற்குள் அவர் கண்களில் ஆச்சி மிளகாப் பொடியைத் தூவி அவரை ஸ்தம்பிக்க வைத்து கத்தி முனையில் பர்ஸ், செயின் முதலானவற்றை வழிப்பறி செய்யப்பார்க்க, ஏற்பட்ட எரிச்சலில் சடாரென்று நடுரோட்டில் வண்டியை சைடு ஸ்டாண்ட் போட்டு இறங்கி கத்திவாலாவை நண்பர் நையப் புடைக்க ஆரம்பித்தாராம். அவனைக் கீழே தள்ளி மிதி மிதியென்று மிதித்து பிறகு அவ்வழியே வந்த ஒவ்வொருவராக இக்காட்சியைக் கண்ணுற்று தன் பங்குக்கு ’பொதுமாத்துக்’கலையை பயில ஆரம்பித்தார்களாம். இத்தனைக்கும் நண்பர் சீனாவிலுள்ள ஷாலின் டெம்பிளின் முப்பத்தாறு சேம்பர்களில் எந்த ஒன்றிலும் மழைக்குக் கூட ஒதுங்காதவர். ஆனால் மரண அடி கொடுத்தாராம்.

’அதனால யாருக்கும் லிஃப்ட் குடுக்கவே குடுக்காதீங்க” என்று அறிவுறுத்தினார். அசிடிட்டி காரணமாக எனக்கு மிளகாய்ப் பொடி அவ்வளவாக ஒத்துக்கொள்ளாது என்பதால் நிறைய யோசித்து பாதுகாப்புக் காரணங்களை முன்னிட்டு இனிமேல் யாருக்கும் லிஃப்ட் கொடுப்பதில்லை என்று தீர்மானம் நிறைவேற்றினேன்.

அதன் பிறகு என் வண்டிக்கு முன் நீண்ட கரங்கள் அனைத்தும் தோல்வியுடன் கீழே விழுந்தன. யார் கட்டை விரலை உயர்த்திக் காட்டினாலும் ஒரு தலையசைப்பைக் கூட வழங்காமல் விர்ரென்று ஸ்பீடைக்கூட்டிப் போய்விடுவேன்.

இன்று காலை ஒரு சாலைத் திருப்பத்தில் என் ஹோண்டா ஆக்டிவாவைத் திருப்பும்போது ஒரு எட்டுவயது மதிக்கத்தக்க ஒரு அழுக்கான பையன் ‘ண்ணா ..ண்ணா’ என்று கை நீட்டினான். ‘அங்க விட்ருங்கண்ணா..’ என்றான். நான் எனது லிஃப்ட் மறுப்புக் கொள்கையைத் தளர்த்தாமல் ஆக்ஸிலரேட்டரை முறுக்க அவன் வலது கையில் பிடித்திருந்த மாங்கொட்டையைச் சப்பியபடி கூடவே ஓடிவந்தான். திருப்பம் என்பதால் நான் வண்டியின் வேகத்தைக் குறைத்திருக்க அவனுக்கு வசதியாகப் போய்விட்டது. ஓடும் வண்டியைப் பிடித்து ஏறப்பார்த்தான். எனக்குப் பதறிவிட்டது. எங்கேயாவது விழுந்துவிடப்போகிறானே என்று வேகத்தை இன்னும் குறைத்த மறுகணம் லாகவமாக ஏறி பில்லியனில் உட்கார்ந்துவிட்டான்.

ஏறி உட்கார்ந்த மறுகணம் அவன் என் இடுப்பைப் பிடித்துக்கொள்ளப் பார்க்க, “எலேய்.. என்னப் புடிக்காம உக்காரு.. எங்கடா போணும்?” என்றேன். நான் நெளிய என் வாகனமும் நெளிந்தது. அவன் கையில் மாம்பழச்சாறு முழங்கை வரை வழிந்துகொண்டிருந்தது. நான் போட்டிருந்ததோ வெள்ளை நிறம் கலந்த ஒரு டீ-சர்ட். கறை நல்லதுதான். ஆனால் போகாது.

அடுத்த திருப்பத்தில் இறங்குவான் என்று பார்த்தால் அவன் பயணம் முடிவிலியாக இருந்தது. எனக்கு கவனம் முழுக்க அவன் மாங்கொட்டையில் மையம் கொண்டிருந்தது. திடீரென்று முப்பது கிமீ வேகத்தில் செல்லும் என் வாகனத்தை ஓவர்டேக் செய்து ஏதோ ஒரு வஸ்து மஞ்சளாக வந்து விழுந்ததைக் கவனித்தேன். வேறொன்றுமில்லை. தன் கடைசி ருசிவரை உறிஞ்சப்பட்ட மாங்கொட்டைதான். அடுத்ததாக அவனுக்கு தன் கையை என் டீசர்ட்டில் துடைக்கும் எண்ணம் உதிக்கும் முன்னே சட்டென்று நிறுத்தினேன். ‘எறங்கிக்கடா.. நான் இங்கே எறங்கணும்..”

அவன் நிறுத்திவிட்டு “தாங்ஸ்ண்ணா..” என்று குதிநடை போட்டு இலக்கில்லாமல் அடுத்த சந்தில் திரும்பினான்.

அவனை நிறுத்தி “எப்டியோ.. என் சட்டை பூரா மாம்பழக் கையத் தொடச்சிட்ட..” என்றேன்.

’இல்லண்ணா..’ என்று சொல்லிவிட்டு தொள தொள பாக்கெட்டில் கைவிட்டு எதையோ எடுத்தான். அவன் கை கொள்ளாத இன்னொரு பெரிய மாம்பழம். அதை பந்து போல தூக்கிப் போட்டுப் பிடித்துக் கொண்டே சினிமாவில் க்ளைமேக்ஸில் வருவது போல ஆடியன்ஸூக்கு முதுகைக் காட்டியவாறு நடந்து போய்க்கொண்டேயிருந்தான்.

நான் ஏரிக்கரை மேலிருந்து..

சென்னையில் மடிப்பாக்கம் என்னும் ஊர் உண்டு. அதில் ஓர் ஏரி உண்டு. சுமார் முக்கால் கிலோமீட்டர் நீளம். இந்த ஏரிக்கரையில், ஒரு காலத்தில் அந்தப் பகுதியில் குடியிருப்பவர்களைத் தவிர வேறு ஆள் நடமாட்டமில்லாமல் இருக்கும்.  இப்போது அதே ஏரிக்கரை வேறு மாதிரி உருக்கொண்டுவிட்டது.

மக்கள் மேல் அக்கறை கொண்ட இந்தப் பகுதியின் கவுன்சிலரோ யாரோ ஏரிக்கரையோரமாக இருந்த சாலையை சரி செய்து, மின் கம்பங்கள் அமைத்து, பெஞ்சுகள் போட்டு மெருகூட்டியதில் அதிகாலையில் வாக்கிங், ஜாக்கிங் என களைகட்ட ஆரம்பித்தது. மாலையில் ஏகப்பட்ட குடும்பங்கள் காற்று வாங்க அங்கே வர ஆரம்பிக்க ஒரு மினி கடற்கரை போல் மாறிவிட்டது இந்த ஏரிக்கரை.

கூட்டம் சேர்ந்ததும் சூப், காளான் ஃப்ரை, பேல் பூரி, பானிப்பூரி கடைகள் முளைக்கத் தொடங்கின. நடைபாதையில் நடக்க முடியாத அளவுக்குக் கூட்டம்.

இன்று குடும்பத்துடன் ஒரு நடை போய்வந்தேன். கண்ணுக்கெட்டிய தூரம் வரை மக்கள் தலைகள். வரிசையாக டூவீலர்கள், கார்கள். நிறைய கல்லூரி மாணவர்களுக்கு ‘ஹாங்க் அவுட்’ இடமாகவும் இது மாறிக்கொண்டிருப்பதைக் காணமுடிந்தது. ஆனால் அவர்களெல்லோரும் தத்தம் நண்பர்களுடன் வந்திருந்தாலும் ஆளுக்கொரு மொபைலில் ஆழ்ந்திருந்தார்கள்.

ஏரியானது டிசம்பரில் பெய்த பெருமழையின் மிச்சத்தை இன்னும் தன் மடியில் தேக்கிவைத்து மின்விளக்குகளை அழகாய் பிரதிபலித்துக்கொண்டிருந்தது. ஜிலுஜிலுவென்று காற்று வீசியது. ஏரிக்குள் இருட்டில் அசை போட்டபடி எருமைகள் மிதந்தன. நிறைய குப்பைத் தொட்டிகள் இருக்க, காகித, ப்ளாஸ்டிக் குப்பைகள் ஏரிக்கரை சரிவில் பெருமளவில் வீசப்பட்டிருந்ததையும் காண முடிந்தது. அலங்கோலமாக இருக்கும் ஒரு இடத்தை அழகாக்கி மறுபடி அதை வேறுவிதத்தில் அலங்கோலமாக்குவதில் நம் மக்களுக்கு ஈடு இணை கிடையாது.

நடைபாதையில் ஓரிடத்தில் வரிசையாக ஆறு இளைஞர்கள்  உட்கார்ந்திருந்தார்கள். அவர்களை முதுகுப் பக்கமாக நாங்கள் கடக்கும்போது, ஆறு பேர் கையிலும் ஒவ்வொரு மொபைல் இருப்பது கண்ணில் பட்டது. ஆறையும் “லாண்ட்ஸ்கேப்” பொசிஷனில் வைத்திருந்தார்கள். ஆறிலும் ஒரே வீடியோ, ஒரே காட்சி ஓடிக்கொண்டிருந்தது. ஆறுபேரும் அதை வைத்தகண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்தார்கள்.

நான் என் மகனிடம் “ஒரே வீடியோவை தனித்தனியா ஒரே நேரத்துல ஓடவிட்டுப் பாக்கறாங்க. அதுக்கு எல்லோரும் ஒரே மொபைல்ல பாத்தா பேட்டரியாவது மிச்சமாகும்.” என்றேன்.

அதற்கு அவன் “அது வீடியோ இல்ல. மினி மிலிஷியான்னு ஒரு கேம். ஒரே நேரத்துல எல்லாரும் விளையாடறது. குண்டு போட்டுக்கிட்டே சுட்டுக்கிட்டே இருக்கணும். கடைசி வரை யார் தாக்குப் பிடிக்கறாங்களோ அவங்கதான் வின்னு.”

“அதுக்கு அவங்கவங்க வீட்லயே ஒக்காந்து விளையாடலாமில்ல..” என்றேன்.

பிறகு “நாங்கெல்லாம் அந்தக் காலத்துல..” என்று ஆரம்பிக்க வாய் துடித்ததை அடக்கிக்கொண்டேன். அப்புறம் அடுத்த தடவை ஏரிக்கரைக்குக் கூப்பிட்டால் வர யோசிப்பான்.