இறந்தவன் - சிறுகதை


ஃபெமினா தமிழ் – ஜூன் 1, 2012
ஆறு மாதத்திற்கு முன்பு நிகழ்ந்த பைக் விபத்தொன்றில் வசந்தன் இறந்துவிட்டானாம். இதைச் சொல்வதற்காகவே நேரங்கெட்ட நேரத்தில் சிங்கப்பூரிலிருந்து போன் பண்ணியிருந்தான் நடராஜ்.

மிகத் தாமதமாக வந்த அதிர்ச்சி செய்தி. கேட்டுவிட்டு இந்த முனையில் அஷோக் உறைந்துபோய் சில விநாடிகள் பேச்சற்று நின்றான்.
ஆறு மாசத்துக்கு முன்னாலா? எப்படி இது இத்தனை நாள் தனக்குத் தெரியாமல் போனது?

எனக்கே இப்பதாண்டா தெரியும். ரொம்ப கஷ்டமாயிருச்சு. பாவம்டா அவன். அல்பாயுசு! எப்பவும்போல பைக்-ல கண்ணு மண்ணு தெரியாமப் பறந்திருப்பான். வினையாயிருக்கும். எத்தனை தடவை படிச்சுப் படிச்சு சொல்லிருப்போம். கேட்டானா?” என்றான் நடராஜ்.

மழைக்காதல் - சிறுகதை

காதலர் தினத்தை முன்னிட்டு எங்கு பார்த்தாலும் காதல் காய்ச்சல் தொற்றிக்கொண்டிருந்த பிப்ரவரி மாதத்தில் ‘நம் தோழி’ இதழில் வெளியானது எனது சிறுகதை ஒன்று. இதுவும் ஒரு காதல் கதைதான் என்று தலைப்பே சொல்கிறதே. வேறென்ன? அதேதான்.

கதையைப் படிக்க இங்கே கிளிக்கவும் >>: மழைக்காதல்

முதல் பாடல்

‘ஆத்தாடி... ஒரு பறவ பறக்குதா...’

நான் எழுதிய முதல் திரைப்பாடல் இது. 2012 ஆம் வருடம் பிறந்த கையோடு ஒரு சுப தினத்தில் மதிப்பிற்குரிய முன்னாள் குடியரசுத் தலைவர் திரு. அப்துல் கலாம்  வெளியிட இதோ இந்தப் பாடல் இப்போது ஆங்காங்கே ஒலிக்கவும் ஆரம்பித்துவிட்டது. படம்: கிருஷ்ணவேணி பஞ்சாலை.

கல்கி இதழில் முதல் சிறுகதை வெளியானபோது மனம் எவ்விதமான குதூகலத்தில் மிதந்ததோ அதற்கு இணையாக இப்போதும் உணர்கிறேன். மனதுக்குள் ஒரு பறவை பறக்கிறது.

பரவசமும் பயமும் கலந்த ஓர் உணர்ச்சி வந்து சேர்ந்திருக்கிறது. நீண்ட வரலாறு கொண்ட தமிழ்த் திரையுலகில் எத்தனையோ கவி ஜாம்பவான்களுக்கு நடுவே ஒரு ஓரமாய் ஒரு துணுக்காக நானும் அறிமுகப்படுத்தப்படுகிறேன் என்பது பரவசம். அவர்கள் சாதித்ததில் ஒரு சில துளிகளாவது நானும் சாதிக்கவேண்டுமே என்பது பயம்.இதன் மூலகாரணமாக இருந்த நண்பரும் இயக்குநரும் ஆன தனபால் பத்மநாபனுக்கும், இசையமைப்பாளர் என். ஆர். ரகுநந்தன் அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

குழந்தையாக இருந்தது முதற்கொண்டு இன்று வரை வாழ்வின் பின்னணியில் சதா ஒலித்துக்கொண்டிருந்த பல்லாயிரம் தமிழ்த் திரைப்பாடல்களை ரசித்துத் திளைத்திருந்த எனக்கு முதன் முதலாக நான் எழுதிய வரிகள் திரை இசையால் உயிர்பெற்று அதை நானே கேட்பதை உன்னதமான தருணமாக உணர்கிறேன்.

இந்தப் பாடல் ஒரு ரொமான்ஸ் டூயட்-டாக அமைந்தது நல்ல விஷயம். ஒரு பஞ்சாலையை பின்னணிக் களமாகக் கொண்டது. முதலில் திருகலான வரிகளுடன் கொஞ்சம் கவித்துவமாகத்தான் எழுதிக்கொடுத்தேன். இசையமைப்பாளரும் இயக்குநரும் எல்லோருக்கும் புரியும்படி எளிமையாக இருக்கட்டுமே என்று கேட்டுக்கொண்டதிற்கிணங்க முயற்சித்ததில் அனைத்து தரப்பினருக்கும் பிடிக்கும் ஒரு பாடலை எழுத முடிந்திருக்கிறது என்று நம்புகிறேன். இந்தப் பாடலைக் கேட்டுவிட்டு நண்பர்களிடமிருந்து வந்த பெரும்பாலான கருத்துக்களின் சாரம் இவ்வாறு இருக்கிறது. “தெளிவான, எளிமையான, சுகமான இசையுடன் என்பதுகளின் திரைப்பாடல் கேட்பதுபோன்ற இதமான அனுபவம்”. இந்தப் பாடல் பரவலாக எல்லோராலும் ரசிக்கப்படும் என்கிற நம்பிக்கையைத் தருகிறது இது.

பயணங்கள் முடிவதில்லை, நான் பாடும் பாடல் போன்ற படங்களில் மட்டுமே பார்த்திருந்த ரெக்கார்டிங் ஸ்டுடியோக்களில் விஜய் பிரகாஷ், சித்தாரா போன்ற முன்னணிப் பாடகர்கள் பாட அருகிலிருந்து பார்த்த பாடல் பதிவுகள் கூடுதல் அனுபவம்.

தென்மேற்குப் பருவக்காற்று திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளரான என். ஆர். ரகுநந்தன் மிகத் துடிப்பான ஒரு மனிதர். தமிழ் திரையிசையின் நுணுக்கங்களை விரல் நுனியில் வைத்திருப்பவர். தெ.மே.பருவக்காற்றுக்கு அப்புறம் வரிசையாய் நிறைய படங்கள் கைவசம் சேர ஆரம்பித்தாலும், நல்ல ப்ராஜெக்ட்டுகளை மட்டும் தேர்ந்தெடுத்து கவனமாக இசையமைத்துக்கொண்டிருக்கிறார். கிருஷ்ணவேணி பஞ்சாலை படத்தின் பாடல்கள் தவிர இவர் அதற்கு அமைத்திருக்கும் பின்னணி இசையும் ரசிகர்களிடையே தனித்த கவனம் பெறும் என்பதிலும், ஒரு முன்னணி இசையமைப்பாளராக இவர் உருவாகிக் கொண்டிருக்கிறார் என்பதிலும் சந்தேகமே இல்லை.

தனபால் பத்மநாபன் வித்தியாசமான பின்னணியுடன் அமைந்த இத்திரைப்படத்தினை மிகுந்த சிரத்தையுடன் உருவாக்கியிருக்கிறார். தமிழ்த் திரைப்பட வரலாற்றில் முதல் முதலாக காஸ்டிங் டைரக்டர் என்ற ஒரு பதவியில் நடிகர் திரு சண்முகராஜாவை இப்படத்தில் அறிமுகப்படுத்தியிருக்கிறார். பாடல்களுக்கான காட்சிகளும் அதிசயராஜ் மற்றும் சுரேஷ் பார்கவ்-வின் ஒளிப்பதிவில் அருமையாக வந்துள்ளது. பிப்ரவரியில் வெளிவந்துவிடும் என்று தெரிகிறது.

பாடலைக் கேட்க:. http://soundcloud.com/info4u-chennai/aathaadi-oru