புதிய முகங்கள். புதிய கதைகள்.

இருபத்தைந்து வருடங்களுக்குமுன் நான் படித்த கல்லூரியின் வகுப்பு தோழர்களுடன் சுத்தமாக தொடர்பு அற்றுப்போயிருந்த நிலையில் திடீரென்று இந்த இரண்டு நாட்களாக ஏகப்பட்ட தொலைபேசி அழைப்புகள். எப்படியெப்படியோ என்னைத் தேடிக் கண்டுபிடித்து ஒவ்வொருவராக பேசிக்கொண்டிருந்தார்கள். நான் எப்படி அவர்களைத் தேடிக்கொண்டிருந்தேனோ, அதே மாதிரி சில பேர் என்னையும் வெகுநாட்களாகத் தேடிக்கொண்டிருந்திருக்கிறார்கள். கூடப் படித்தவர்களில் ஒருவர் கூட தொடர்பிலில்லை என்ற நிலை மாறி இப்போது கிட்டத்தட்ட எழுபது பேரின் தொலைபேசி எண்கள் கிடைத்திருக்கின்றன.

நானும் சிலரை தொடர்புகொண்டு பேசினேன். பேச்சில் நிறைய பழைய, புதிய சுவாரஸ்யமான கதைகள் வலம் வந்தன. அதே உற்சாகம், அதே நட்பு, சில பேர் உழைப்பால் உயர்ந்த நிலைக்குப் போயிருக்கிறார்கள். சிலருக்கு வாழ்க்கை வேறுவிதமான அனுபவங்களைக் கொடுத்திருக்கிறது. காலம் ஒவ்வொருவரையும் ஒவ்வொரு இடத்தில் ஒவ்வொரு சூழ்நிலைகளில் ஒவ்வொரு மாதிரி வைத்திருக்கிறது என்பதை உணரமுடிந்தது.

’ரங்கராஜ் எங்கடா இருக்கான். அவனுக்கு நான் ரெண்டாயிரம் ரூபா கடன் தரணும்..” என்று எண்பதுகளின் இறுதியில் வாங்கின கடனை இப்போது திருப்பிச் செலுத்தத் துடிக்கிற ஒருவன். நான்கடி உயரத்தில் ஒல்லியாக, குள்ளமாக, ’ஷை’ டைப்பாக இருந்த, “குட்டி மணி” என்று ஒரு காலத்தில் அழைக்கப்பட்ட, ஆனால் இப்போது உயரமாய், வளர்த்தியாய் தமிழ்ப்பட ஆந்திரா வில்லன் போல சுமோவில் வந்திறங்கும் ஒருவன் என பலப்பல கதாபாத்திரங்கள். தோற்றங்களை மாற்றுவதற்கான சாத்தியக்கூறுகளை மீசை தாடியில்தான் ஆரம்பிக்கிறது இயற்கை. பின்னர் முன்வழுக்கையாக, தொந்தியாக தொடர்கிறது. அவர்களின் ஃபேஸ்புக் புகைப்படங்களிலிருந்து இன்னார் என்று அடையாளப்படுத்திக்கொள்வதே சிரமமாக உள்ளது. சிலபேர் அப்படியே இருக்கிறார்கள். அல்லது அது பழைய புகைப்படங்களாக இருக்கவேண்டும். ஓரிரு நண்பர்கள் இறந்துவிட்டார்கள்.

தொலைபேசியில் நண்பர்கள் “ஆனந்த் தெரியும்ல, செந்தில்குமார் நினைவிருக்கா.. அப்புறம் நம்ம மாணிக்கவாசகம் இருக்கான்ல..” என்றெல்லாம் கேட்கும்போது அவர்களின் முகங்கள் சட்டென்று ஞாபகத்தில் அகப்படாமல் மனதில் அலைக்கழிப்பு நிகழ்வது தர்மசங்கடம்தான். செந்தில்குமார் போன்ற பொதுவான பெயர்கள் தரும் குழப்பம் ஒரு புறம் இருக்க, நினைவில் பதிந்து போன முகங்கள் ஞாபகமறதியால் தேய்ந்துபோய்விட்டன. நண்பர்களுக்கும் அப்படித்தான். இருபத்தைந்து வருடங்கள் நிறைவதை முன்னிட்டு 2014-ல் ஒரு அலும்னி சந்திப்புக்கு ஏற்பாடுகள் நடக்கின்றன. பழைய நட்பின் புதிய முகங்களைக் காணவும், இன்னும் புதிய கதைகளைக் கேட்கவும் காத்துக்கொண்டிருக்கிறேன்.

வட போச்சே - 2

அந்தப் பிரபல எழுத்தாளர் பொள்ளாச்சியில் ஒரு லாட்ஜில் பிற திரைப்படக் கலைஞர்களுடன் தங்கியிருந்தார். அப்போது உலக நாயகன் நடித்துக்கொண்டிருந்த ஒரு திரைப்படத்தில் அவர் பணியாற்றுவதற்காக வந்திருந்தார். முன்பே கடிதத் தொடர்புகள் மூலம் நண்பர் சரசுராம் அவருக்குப் பழக்கமாயிருந்தார். நாங்கள் எழுத்தாளரின் செல்வாக்கில் படக்குழுவினருடனேயே மூன்று நாட்கள் சிங்காநல்லூர், சூலக்கல் போன்ற இடங்களில் சுற்றிக்கொண்டிருந்தோம்.

சரசுராம், மீன்ஸ், நான் - மூவரும் அவரை சந்திப்பதற்காகச் சென்றிருந்தோம். சுமாரான அந்த லாட்ஜில் எழுத்தாளருக்கு ஒரு தனி அறை ஒதுக்கப்பட்டிருந்தது. அபாரமான எழுத்தாளராகிய அவர் எங்களுடன் அவரது கதை / திரைப்பட / அனுவங்களைப் பற்றி உற்சாகமாகப் பேசிக்கொண்டிருந்தார். வந்து நின்ற லாட்ஜ் பையனிடம் வடையும், டீயும் ஆர்டர் செய்தார். ஒரு பத்து நிமிடம் கழித்து ஆர்டர் செய்த உளுந்து வடையையும், அதனுடன் தேங்காய்ச் சட்டினியையும் டேபிளில் பரப்பிவிட்டுப் போனான் லாட்ஜ் பையன்.

இலக்கியம், சிறுகதைகள், சினிமா என்று கலந்து கட்டி சுவாரஸ்யமாகப் போய்க்கொண்டிருந்தது எங்கள் பேச்சு. அப்போது மிக ஒல்லியாக ஒருவர் உள்ளே வந்தார். எழுத்தாளரைப் பார்த்துச் சிரித்தார். இருவரும் என்னவோ பேசிக்கொண்டார்கள். அப்போது எழுத்தாளர் எங்களிடம் இவர் யார் என்று தெரிகிறதா என்று கேட்டார். எனக்கு சுத்தமாகத் தெரியவில்லை. ஆனால் சரசுராமும், மீன்ஸூம் லேசாக அவரை அடையாளம் கண்டுகொண்டு, ஒரு படத்தின் பெயரைச் சொல்லி அதில் நடித்தவர்தானே என்று கேட்டார்கள். அவரும் தான் இவ்வளவு சீக்கிரம் அடையாளம் காணப்பட்டது குறித்து மகிழ்ந்து ‘ஆமாம்’ என்றார். பிறகு நண்பர்களிருவரும் வளரும் நடிகரான அவர் நடிப்பு பற்றி பாராட்டி வாழ்த்துகள் சொன்னார்கள். எளிமையான அந்த நடிகர் சுற்றுமுற்றும் பார்த்தார். பிறகு இயல்பாக டேபிளிலிருந்த வடையொன்றை படக்கென்று எடுத்து அதை சட்னியில் முக்கிவிட்டு டபக்கென்று வாய்க்குள் தள்ளினார். இந்த எதிர்பாராத செய்கையின் மூலம் வடைகளின் எண்ணிக்கையில் ஒன்று திடீரென குறைந்தது ஒரு திடுக்கிடல் சம்பவமாக இருந்தது. வடை சாப்பிட்டவுடன் நடிகர் ’வரட்டா’ என்று கிளம்பிப் போய்விட்டார். பிறகு மறுபடியும் வடையை ஆர்டர் பண்ணினோமா, இல்லை இருந்த வடைகளையே ஆளுக்குக் கொஞ்சம் பிய்த்துத் தின்றோமா என்றெல்லாம் இப்போது நினைவில்லை. ஆனால் தமிழ்கூறும் நல்லுலகிற்கு இப்படியொரு டைட்டில் கிடைத்ததே அந்த நடிகரால்தான். அந்த எழுத்தாளர்: ம.வே.சிவகுமார்.

வடைபோச்சே - 1:

வட போச்சே - 1

எழுத்தாளர் அ.முத்துலிங்கம் அவர்களின் இந்த ஸ்டேட்டஸைப் படித்ததும் முன்னொருநாள் நடந்த சம்பவம் ஒன்று ஞாபகத்திற்கு வந்தது. https://www.facebook.com/appadurai.muttulingam/posts/563785150363657:0

நானும் எனது நண்பர் ஒருவரும் ஒரு க்ளையண்டைப் பார்க்கச் சென்றிருந்தோம். க்ளையண்ட் ஆகப்பட்டவர் வீட்டிலேயே ஒரு பெட்ரூமை அலுவலகமாக மாற்றியிருந்தார். அவருடன் பேசிக்கொண்டிருந்தபோது சமையலறையிருந்து வடை சுடுகிற வாசம் வந்தது. சிறிது நேரம் கழித்து அவரது மனைவியார் ஒரு தட்டில் ஒரு பத்துப் பதினைந்து சூடான மசால் வடைகளைக் கொண்டுவந்து நாங்கள் சாப்பிடுவதற்காக வைத்தார்.
கூடவே தேநீரும். க்ளையண்ட் ரொம்ப நேரமாக நிறுத்தாமல் பேசிக்கொண்டேயிருந்ததால் இடையில் குறுக்கிடவேண்டாம் என்று நாகரிகம் கருதி நானும் நண்பரும் தட்டில் கைவைக்கவில்லை. மசால்வடை என்பது எனக்கு மிகவும் பிடித்த ஐட்டம் என்பதால் ஒரு குறுகுறுப்பு இருந்துகொண்டே இருந்தது.

இப்படியே பல நிமிடங்கள் கழிந்தன. வடைகளிலிருந்து வெளியேறும் ஆவி நின்றுபோனதை வைத்து சூடு ஆறிவிட்டதென்பதை உணர்ந்தோம். திடீரென அவர் தேநீர் ஆறுகிறது குடியுங்கள் என்று சொல்லிவிட்டு வடைகள் இருந்த தட்டை மேஜைக்கு அந்தப்பக்கம் எங்கள் கைகளுக்கு எட்டாத இடத்திற்கு நகர்த்தி வைத்துவிட்டு லாப்டாப்பில் மும்முரமாக எதையோ காண்பிக்க ஆரம்பித்தார்.

இப்படியாக இருபது நிமிடங்கள். தேநீர் முடிந்தது. மீட்டிங்கும் முடிந்தது. சரி மீண்டும் சந்திப்போம் என்று க்ளையண்ட் எழுந்து நின்றுவிட்டதால் இப்படியும் உலகத்தில் அநியாயங்கள் நடக்குமா என்று நினைத்தபடி அப்படியே வடைத்தட்டை கடைசியாக ஒருமுறை ஓரக்கண்ணால் பார்த்துவிட்டு வெளியேறினோம். கைக்கும் எட்டவில்லை. வாய்க்கும் எட்டவில்லை.

வடைபோச்சே - 2

ஜீவகாருண்யம்


எங்கள் தெருவில் நிறைய நாய்கள் இருக்கின்றன. தெருவில் என்று சொன்னதாலேயே அவைகள் தெருநாய்கள்தான் என்று உங்களுக்குத் தெரிந்திருக்கும். ஒரு பதினைந்து இருபது இருக்கலாம். ஒரே பிரசவத்தில் 15 குட்டிகளை ஈன்றுதல் போன்ற நிகழ்வுகளால் அவைகளின் வம்சம் அனுதினம் வளர்ந்துகொண்டுதான் இருக்கிறது. கடிப்பது, ஆளைப்பார்த்தால் உறுமுவது போன்ற உபத்திரவங்கள் தராத சாது நாய்கள்தான். இரவில் ஊர் அடங்கியபின் அவைகளின் இன்னிசைக் கச்சேரி ஆரம்பமாகிவிடும். அவைகளுக்கிருக்கிற டெர்ரிடரி மற்றும் இன்னபிற பிரச்சனைகள் காரணமாக கர்ணகடூரமான குறைப்புகள், ஊளையிடுதல் என்று விதம் விதமாக சப்தங்கள் கோரஸாகத் தொடரும். இந்த வீட்டுக்குக் குடிவந்த துவக்கத்தில் இது மிக மிக எரிச்சலைத் தருவதாக இருந்தது. பல தினங்களில் இரவு சரியாக 11.45க்கு நாய்களின் ஊளைச் சத்தம் ஆரம்பிக்கும். இந்த அமானுஷ்யமும் புரிபடாமலேயே இருக்கிறது. ஒரு நாள் இரவு வெகுநேரம் மொட்டைமாடிக்கு மேல் இருக்கும் தண்ணீர்த் தொட்டியின் மேலமர்ந்து நானும் என் மச்சினரும் பேசிக்கொண்டிருக்கும்போது இதேபோல் நாய்கள் ஊளையிட ஆரம்பித்தன. உடனே நான். ’சரி வாங்க கீழே போவோம். மணி பதினொன்னே முக்கால் ஆயிருச்சு’ என்று சொல்ல அவர் உடனே மொபைலில் மணி பார்த்து, ‘எப்படி இவ்வளவு சரியா சொல்ற?’ என்று கேட்டார். நாய் ஊளைச் சத்தத்தை வைத்துச் சொன்னேன். டெய்லி இதே நேரத்துக்கு சரியா ஆரம்பிக்கும்’ என்று சொன்னதும் பயந்துபோய் ’வா.. போகலாம்.’ என்று வேகமாக படியிறங்க ஆரம்பித்தார்.

விஷயம் இதுவல்ல. எதிர் அபார்ட்மெண்டில் ஒருவர் இருக்கிறார். ரிடையர்டு ஆசாமி. அவரிடம் ஒரு பேஷ்ஹௌண்ட் வகை நாய் இருக்கிறது. அதை மேய்ப்பதற்காக தினமும் ரோட்டுக்கு வரும்போது கூடவே தெருநாய்களும் அவருடன் ஊர்வலமாகப் போகும். அவரது மனைவி, வீட்டுக்குப் பக்கத்திலேயே இருக்கும் கடைக்குச் சென்று (தெரு நாய்களும் கூடவே போகும்) ரொட்டி வாங்கி அதைத் துண்டுகளாக்கி நாய்களுக்குப் போடுவார். அவரது மகள் காலேஜூக்கோ, வேலைக்கோ போய்விட்டு ஸ்கூட்டியில் திரும்பியவுடன் நேராகக் கடைக்குச் சென்று பிஸ்கட் பாக்கெட் வாங்கி அந்த நாய்களுக்கு விநியோகம் செய்துவிட்டு பிறகுதான் வீட்டுக்கே செல்வார். காலேஜ் படிப்பது போலிருக்கிற அவரது மகன் அவ்வப்போது ஒரு ஸ்ப்ரேயர் போன்ற டப்பாவுடன் வீட்டிலிருந்து வெளிப்பட்டு ஏதாவது ஒரு தெரு நாயைப் பிடித்து வைத்துக்கொண்டு, ரோட்டிலேயே குத்தவைத்து உட்கார்ந்து அதைத் தடவிக்கொடுத்து அதற்கு ஏதோ ஸ்ப்ரே எல்லாம் அடித்து, புண்களுக்கு மருந்து போட்டு, பஞ்சால் ஒற்றி வைத்தியம் செய்வதைப் பார்த்திருக்கிறேன். பராமரிப்பு முடியும்வரை நாய்களும் சொகுசாக இணங்கி நிற்கும். அவர்களுடைய காம்பவுண்ட்டுக்கு வெளியே இரண்டு சின்னத் தொட்டிகளில் தெரு நாய்கள் குடிப்பதற்கு தண்ணீர் இருக்கும். அதில் Blue Cross என்று பெயிண்டில் எழுதப்பட்டிருக்கிறது. இந்தத் தெருநாய்கள் கூட்டாகத் தூங்குவது அதிகபட்சம் அவர்களுடைய அபார்ட்மெண்ட் வாசலில்தான்.

இவையெல்லாம் தினசரி என் வீட்டு ஜன்னல்வழிக் காட்சிகள். ’உயிர்களிடத்தில் அன்பு வேண்டும்’ என்பதற்கு உதாரணமாக, ஒரு குடும்பமே இந்த தெருநாய்கள் விஷயத்தில் மிக ஈடுபாட்டுடன் இருப்பதும், அன்பு செலுத்துவதும், அவைகளுக்கு உணவளித்து, உடல்நலம் பேணுவதும் மிகவும் ஆச்சரியப்படுத்துகிறது. அது அவர்களுடைய தினசரி கடமைகளில் ஒன்றாகவே மாறிவிட்டதைப் பார்க்கிறேன்.

இப்போதெல்லாம் இரவில் தெருநாய்கள் குறைத்தாலோ ஊளையிட்டாலோ நான் எரிச்சலடைவதில்லை. ஏதோ என்னால் முடிந்தது.