பேறு

சிறுகதை
தமிழோவியம் டாட் காம் 17-04-05
அம்புஜம் வேலைக்கு வந்தால் தன்னை வந்து பார்க்குமாறு பரமேஷ் வீட்டில் சொல்லிவிட்டு வந்தான் ப்ரசன்னா. அவள் வந்தால் இரண்டில் ஒன்று கேட்டுவிட வேண்டும் என்று நினைத்துக்கொண்டான். அவள் மறுபடி வேலைக்கு வரமுடியுமா முடியாதா?. மஞ்சு இருக்கிற நிலைமைக்கு இனியும் அவளால் எந்த வேலை¨யும் இழுத்துப்போட்டுக் கொண்டு செய்தால் பிற்பாடு ப்ரச்சனையாகிவிடும். வீட்டு வேலைக்கு யாரையாவது வைத்தே தீரவேண்டும். சமத்தாய் அம்புஜம் நாளையிலிருந்து வந்துவிட்டால் தேவலை.

இரண்டு நாள் முன்பு டாக்டர் சொன்னதை நினைத்து அவனுக்குள்ளே கனன்று கொண்டிருந்த சந்தோஷம் ஒரு கவலைச் சுழலுடன் கலந்து பொங்கிக் கொண்டிருந்தது. மஞ்சுவுக்கும் அப்படித்தானிருந்திருக்க வேண்டும். அவள் எதையும் முகத்தில் காட்டிக் கொள்ளாமல்தான் வீட்டுக்குள் உலவிக்கொண்டிருக்கிறாள். முதலில் சந்தோஷப்படுவதும் பிறகு அது தங்காமல் கலைந்துவிடுவதும் என நிறைய ஆகிவிட்டது. பத்தாம் மாசம் ஒரு பிள்ளையைக் கண்ணில் பார்த்தால்தான் இனி சிரிப்பெல்லாம் என்று முடிவு பண்ணிவிட்டவள்போல் இருந்தாள் மஞ்சு. அவளும் பத்து வருடமாக கோவில் குளம் பூஜை என்று அலைந்து வேண்டுதலில் உருகி நின்றதற்குப் பலனாய் டாக்டரின் வாயிலிருந்து இதோ நல்ல சேதி கிடைத்துவிட்டது.

இந்தத் தடவை மஞ்சுவுக்கு நாள் தள்ளிப்போனபோது எல்லா எதிர்காலக் கற்பனைகளையும் தற்காலிகமாய்த் தள்ளி வைத்துவிட்டு நேரே டாக்டரிடம் போனார்கள். நல்ல செய்திதான் என்று உறுதிப்பட்டுவிட்டபோதுகூட ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டு அர்த்தமாய் புன்னகைக்க கூட பயமாயிருந்தது. டெலிவரி வரைக்கும் ரொம்ப ரொம்ப ஜாக்கிரதையாக இருக்க வேண்டுமென்று டாக்டர் சொல்லிவிட்டார். கடினமாய் எந்த வேலையையும் செய்வது பிரச்சனையை உண்டுபண்ணும் என்று கையுறைகளைக் கழற்றி வைத்துவிட்டு எச்சரித்தார் டாக்டர். மேலும் மஞ்சுவுக்கு உடம்பு பலவீனமாக இருக்கிறது. கவனமாக இருக்கவில்லையென்றால் அப்புறம் இதுவும் இல்லையென்று ஆகிவிடுமென்றார். மஞ்சுவுக்கு முப்பத்தைந்து வயதாகிவிட்டதும் ஒரு காரணம். இதற்கு முன்னால் இரண்டு தடவை அபார்ஷன் வேறு.

"ஸோ.. பாத்துக்குங்க. ஆறாவது மாசத்திலேயே உங்க ஒயிஃப்-ஐ அட்மிட் பண்ணி அப்ஸர்வேஷன்ல வெக்க அவசியம் வந்தாலும் வரலாம். பார்ப்போம்! ஆல் த பெஸ்ட்.."

லேசாய் மிதக்கிற குழந்தைக் கனவுகளுடனும், கொஞ்சம் டானிக் மாத்திரைகளுடனும் வீட்டுக்குத் திரும்பி வந்தபோது மஞ்சுவை அப்படியே தூக்கி கரகரவென்று சுற்றவேண்டுமென்கிற ஆவலை அடக்கி மென்மையான முத்தத்துடன் நிறுத்திக்கொண்டான். ரொம்ப சந்தோ்ஷம் வேண்டாம். எதற்கும் உத்தரவாதமில்லை. போன தடவை மாதிரியே நடுவில் சிக்கலானால் அப்புறம் எல்லாக் கனவுகளும் சரிந்துவிடும். எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் இயல்பாய் இருப்பதே நலம்.

இனி மஞ்சுவை அதிகம் வேலை செய்யவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அவர்கள் இரண்டுபேர் மட்டும் இருக்கிற அந்த வீட்டில் அவளைப் பார்த்துக்கொள்ள ப்ரசன்னாவை விட்டால் ஆள் கிடையாது. பார்த்துக்கொள்ள ஆளில்லாவிட்டாலும் பரவாயில்லை. வேலை செய்ய யாராவது ஆள் இருந்தால் தேவலை. அம்புஜம் வரவேண்டும். பரமேஷ் வீட்டில் சொல்லிவைத்திருப்பதால் அம்புஜம் அங்கே வேலைக்கு வரும்போது தகவல் சொல்லிவிடுவார்கள். ஆனால் பழைய கோபத்தை வைத்துக்கொண்டு அவள் வராமல் இருந்துவிடுவாளா என்று யோசனையாய் இருந்தது. இருந்தாலும் கேட்டு வைத்தால் என்ன கெட்டுப்போய்விடும்? ஐம்பது ரூபாய் ஜாஸ்தியாய் தருகிறேன் என்றால் வராமலா இருப்பாள்?

அந்தப் பெண் செல்வி அத்தனை சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கொண்டு போகாமல் இருந்திருந்தால் அவளாவது இன்னும் வேலையில் இருந்திருப்பாள். இத்தனை பெரிய நகரத்தில் வீட்டு வேலைக்கு ஒரு நல்ல ஆள் கிடைப்பது எத்தனை கஷ்டமாயிருக்கிறது!

அன்றைக்கு டாக்டரிடமிருந்து திரும்பியதிலிருந்து ப்ரசன்னாவும், மஞ்சுவும் அதிகம் பேசவில்லை. அதுவும் நல்லதுதான். எதற்காகவும் மஞ்சு அதிகம் உணர்ச்சிவசப்படுவதேகூட நல்லதல்ல என்று தோன்றியது ப்ரசன்னாவுக்கு. அன்றிரவு படுக்கப் போகுமுன் அவளை மடியில் சாய்த்துக்கொண்டு லேசாய் அவளது அடிவயிற்றைத் தொட்டுப் பார்த்தான். அவனால் நம்பமுடியவில்லை. பத்து வருடத்திற்குப் பின் அத்தனை நம்பிக்கைகளும் நசித்துப் போனபின் மறுபடி உதித்திருக்கிற தளிர். மஞ்சு அவனது உள்ளங்கையில் முகத்தைப் பதித்துக்கொண்டு லேசாய் சப்தமின்றி அழுதாள். இருவருக்குமிடையே ஏற்பட்ட நெகிழ்வில் அவளை மெதுவாய் இறுக்கிக் கொண்டான். "நீ எதுக்கும் கவலப்படாதடி. நான் பாத்துக்கறேன். நாளைக்கு அம்புஜம் வேலைக்கு வந்துட்டா.. அப்றம் உனக்கு கம்ப்ளீட் ரெஸ்ட்தான்" என்று காதோரம் கிசுகிசுத்தான். அவ்வளவு நெருக்கத்தில் காதோரக் கிசுகிசுப்பாய் சொல்ல அம்புஜம் மேட்டர்தானா கிடைத்தது என்று உடனே அசந்தர்ப்பமாக உணர்ந்தான்.

மறுநாள் காலை எட்டு மணிக்கு அழைப்பு மணி அடித்தபோது அம்புஜமாகத்தான் இருக்கும் என்று ஏனோ நினைத்துக் கொண்டு கதவைத் திறந்தான் ப்ரசன்னா. அங்கே செல்வி நின்று கொண்டிருந்தாள். அவனைப் பார்த்ததும் தயக்கத்துடன் கொஞ்சம் பின்வாங்கி நின்று கொண்டு "நல்லாருக்கீங்களாண்ணே!!" என்றாள்.

முகத்தில் திகைப்பை விடுவித்துவிட்டு "என்ன செல்வி! ஏது இவ்ளோ தூரம்?" என்றான்.

அவளை திடீரென மறுபடி பார்த்ததில் ஆச்சரியமாயிருந்தது அவனுக்கு. அவன் கதவைத் திறக்குமுன்னரே பழைய பழக்கத்தில் அவள் செருப்பை ஓரமாய்க் கழற்றி வைத்துவிட்டு நின்றிருந்ததைப் பார்த்தான்.

"அண்ணே! வேலைக்கு ஆள் வேணும்னு சொன்னீங்களாமே..." என்றாள் மேலும் தயங்கியபடி.

"உனக்கு யார் சொன்னாங்க? உள்ள வா!" என்று வழிவிட்டான்.

செல்வி உள்ளே வந்து சுவரோரமாய் ஒடுங்கி நின்றாள். ஒண்ணரை வருஷமிருக்குமா இவள் வேலையைவிட்டுப் போய்? ரொம்பவே மாறியிருந்தாள். முதலில் தாவணியோ சுரிதாரோ போட்டுக்கொண்டுதான் வேலைக்கு வருவாள். இப்போது சேலை. முகத்தில் லேசாய் பவுடர் பூச்சு. வகிட்டில் தீற்றிய குங்குமம். பழைய குழந்தைத்தனம் போய் லேசாய் பெரிய மனுஷித்தனம் தெரிந்தது இப்போது.

குரல்கள் கேட்டு மஞ்சு வெளியே வந்து செல்வியைப் பார்த்து சிரித்தாள்.

"உம் புருஷன் எப்படியிருக்காம்மா?" என்றான் ப்ரசன்னா.

"இருக்குது" என்றாள் சுரத்தில்லாமல். சொன்ன மறுமணம் அவள் முகம் மிகவும் சோர்ந்து போய்விட்டது.

"எங்க வேலைக்கு போறாரு?"

"இப்ப வேல இல்லக்கா! மின்ன போயிட்டிருந்த ஆபிசுல மொதலாளி அவரை வேலையிலிருந்து நிப்பாட்டிருச்சு. இப்ப சும்மா கெடக்குது வூட்ல. வேறெங்கியும் வேல தேடக் காணம். அதுக்கொரு வேல கெடைக்கற வரைக்கும் நான் வேலைக்கு போலாம்னு.." என்றாள்.

"கொழந்த?"

"ஒரு பொண்ணுக்கா! கொளந்தைய அவரு பாத்துக்குவாரு. ஒண்ணும் பிரச்சினையில்ல"

ப்ரசன்னாவும் மஞ்சுவும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டார்கள். திடீரென்று அவள் இப்படி வந்து நின்றதில் இருவருக்கும் ஒன்றும் புரியவில்லை. பரமேஷ் வீட்டிலிருந்து இவளுக்கு விஷயம் தெரிந்திருக்கவேண்டும். அவள் நிலைமையை யோசித்தால் பரிதாபமாக இருக்கிறது. மேலும் செல்வி மேல் ப்ரசன்னாவுக்கு எப்போதுமே ஒரு அனுதாபம் உண்டு.

"எப்படியும் ஒரு ஆள் வேணும் செல்வி. அம்புஜத்தை கேட்டிருந்தோம். ஒனக்கு முடியும்னா வா! என்ன சொல்ற?!" என்றாள் மஞ்சு.

செல்வி உடனே அகமகிழ்ந்துவிட்டு 'வூட்ல சொல்லிட்டு இப்பவே வந்துடறேன்' என்று நகர்ந்தாள். ப்ரசன்னாவுக்கு லேசாய் நிம்மதிப் பெருமூச்சு வந்து போனது. மஞ்சுவுக்கும்கூட!

செல்வி திரும்பவும் வந்து அன்றைக்கே வேலையை ஆரம்பித்துவிட்டாள். உடனே அடுக்களைக்குப் போய் பழைய துணி ஒன்றை சேகரித்துக்கொண்டு வந்து டி.வி ஸ்டேண்ட் மேலுள்ள புத்தர் சிலையை எடுத்துத் துடைக்க ஆரம்பித்தாள். ப்ரசன்னாவுக்கு ஆச்சரியம் தாங்கவில்லை. அவள் முன்பு வேலைக்கு வந்துகொண்டிருந்த போதுகூட இதே மாதிரிதான் பண்ணுவாள். அப்போதெல்லாம் வாரத்துக்கொருமுறை வீடு முழுக்கத் தூசி தட்டி சுத்தம் பண்ணுகிற சமயங்களில் அவள் தவறாமல் இந்த புத்தர் சிலையிலிருந்துதான் வேலையை ஆரம்பிப்பாள். நேராய் வந்து முதலில் டி.வி ஸ்டாண்டின் மேலிருந்து புத்தரை எடுத்து பளபளவென்று துடைத்து வைத்துவிட்டுப் பிறகு ஓரிரு விநாடிகள் அதன் மெட்டாலிக் பளபளப்பைப் பார்த்துக்கொண்டிருப்பாள். பிறகுதான் மற்ற பொருளெல்லாம். இதை ப்ரசன்னா எத்தனையோ தடவைகள் கவனித்திருக்கிறான். புத்தர் சிலையிலிருந்து ஆரம்பிப்பது என்ன கணக்கென்று புரியவில்லை. இல்லை அவளுக்கு அது ரொம்பப் பிடித்திருக்கிறதோ என்னமோ. ஒரு நாள் கேட்க வேண்டும் என்று நினைத்துக்கொண்டான்.

****************

செல்வியைப் பற்றி யோசித்துக்கொண்டே கிளம்பி ஒரு சின்ன வேலையாய் ஆடிட்டரைப் பார்க்கப் போனான். அவர் வருவதற்கு கொஞ்சம் காத்திருக்க வேண்டியிருந்தது. இடைப்பட்ட நேரத்தில் ஒரு வேலைக்காரி துடைப்பத்துடன் வந்து 'கொஞ்சம் எந்திரிச்சீங்கன்னா.. ரூம க்ளீன் பண்ணிர்ரேன்.' என்றபோது அவனுக்கு மறுபடி செல்வி ஞாபகம் வந்துவிட்டது. பாவம் எத்தனை சின்னப்பெண். படிப்பும் விளையாட்டுமாய் இருக்கவேண்டிய இந்த சின்ன வயசில் கல்யாணம் பண்ணிக்கொண்டு.. ச்சே! நினைக்கவே கோபமாய் வருகிறது. மனசளவில் எந்த முதிர்ச்சியும் இல்லாத அவள் கையில் இப்போது ஒரு குழந்தை. அந்தப் பெண்ணுக்கு மீறிப் போனால் இப்போது ஒரு பதினெட்டு வயது இருக்குமா? அவள் புரு்ஷன் அவளை விட ஒரு வயசோ ரெண்டு வயசோ பெரியவன். அவ்வளவுதான்.

செல்வி வேலைக்கு வருவதற்கு முன் அவளது அம்மாதான் ப்ரசன்னா வீட்டில் வேலை செய்துகொண்டிருந்தாள். கொஞ்சம் சுறுசுறுப்பான ஆள்தான். 'கெட்டிக்காரி பொம்பளை' என்று மஞ்சு அடிக்கடி சொல்லுவாள். துவைப்பது, பெருக்குவது, பாத்திரம் கழுவுவது என்று எந்த வேலையானாலும் எக்ஸ்பிரஸ் வேகத்தில் முடித்துவிட்டு அடுத்த வீட்டுக்குப் போய்விடுவாள். அப்படியே பிஸியாகி தன் நெட்வொர்க்கை விஸ்தரித்துவிட்டாள். முதலில் ஒன்றிரண்டு வீட்டில் வேலை செய்து கொண்டிருந்தவள் குறுகிய காலத்திலேயே வளர்ந்து பதிமூன்று வீட்டுக்கு வேலை செய்ய ஆரம்பித்தாள். ஒருநாள் திடீரென்று 'இனிமே உங்க வூட்டுக்கு எம்பொண்ணுதான் வேலைக்கு வரும்' என்று அறிவித்த கையோடு செல்வியை அனுப்பி வைத்தாள். வந்து நின்ற செல்விப் பெண்ணுக்கு அப்போது பதினைந்து வயதுதான் இருக்கும். பத்தாம் கிளாஸ் பாஸ் செய்த கையோடு வேலைக்கு வந்திருந்தது. அம்மாவுக்கு எந்த விதத்திலும் சளைக்காமல் பம்பரமாய் சுழன்று வேலை செய்ய ஆரம்பித்தாள். செல்வியோ அவள் அம்மாவோ யாராவது ஒருவர்! ஒழுங்காய் வேலை நடந்தால் சரி என்று ப்ரசன்னாவும் மஞ்சுவும் அந்த திடீர் ஆள் மாற்றலைப் பற்றி அதிகம் அலட்டிக் கொள்ளவில்லை.

செல்வியிடம் "ஏன் மேல படிக்கல" என்று கேட்டபோது. 'வசதியில்லீங்க' என்று பதில் வந்தது. இத்தனைக்கும் அவள் எஸ்.எஸ்.எல்.ஸி பாஸ் செய்திருக்கிறாள் எனும்போது அவள் படிப்பைப் பாதியில் விட்டுவிட்டாள் என்கிற செய்தி அத்தனை ரசிக்கவில்லை ப்ரசன்னாவுக்கு. அவள் அம்மாவை ஒருநாள் வரச்சொல்லிப் பேசினான்.

"இங்க பாரும்மா.. பத்தாங்கிளாஸோட படிப்ப நிறுத்திட்டு பாத்திரம் கழுவி முந்நூறு ரூபா சம்பாதிக்கறதுக்கு பதிலா.. செல்வி அட்லீஸ்ட் ப்ளஸ் டூ முடிச்சான்னா ஏதாவது கடையில சேல்ஸ் கேர்ள் மாதிரி வேலைக்கு போலாமில்ல. கொறஞ்சது ஆயிரம் ரூபாயாச்சும் சம்பாதிக்கலாம். வசதியில்லன்னா சொல்லு. நான் என் செலவுல படிக்க வெக்கறேன். ஸ்கூல் படிப்பு நேரம் போக மீதி நேரம் இங்க வந்து வேல செய்யட்டும். பொண்ணு படிச்ச மாதிரியுமாச்சு. வேல செஞ்சமாதிரியும் ஆச்சு!!

நிறைய வாக்குவாதத்துக்கப்புறம்தான் செல்வியின் அம்மா ஒத்துக்கொண்டாள். ப்ரசன்னா மற்றும் மஞ்சுவின் தாராள மனத்தை நினைத்து கண்களைத் துடைத்தவாறே அரை மனதாய் தலையாட்டினாள். உடனே அவன் மள மளவென்று எல்லா ஏற்பாடுகளையும் செய்து முடித்துவிட்டான். செல்விக்கு புத்தகங்கள் வாங்கிக் கொடுத்தான். செல்வி ஸ்கூலில் ப்ளஸ் ஒன் சேர்ந்த முதள் நாள் அதிகாலையில் வந்து இருவரையும் தூக்கத்திலிருந்து எழுப்பி திடீரென்று காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கிப் போனாள். அதற்கடுத்த கால் பரீட்சையில் நல்ல மார்க் எல்லாம்கூட எடுத்து ரிப்போர்ட்டை இருவரிடமும் காட்டினபோது உருப்படியான காரியம்தான் பண்ணியிருக்கிறோம் என்று திருப்தியாயிருந்தது ப்ரசன்னாவுக்கு.

ஆனால் அரைப்பரீட்சை வருவதற்குள் நிலைமை மாறிவிட்டது. ஒரு நாள் திடீரென்று செல்வியுடன் அவள் அம்மா வந்தாள். செல்விக்கு சொந்தத்தில் மாப்பிள்ளை பார்த்துவிட்டதாகவும் அடுத்த மாசம் கல்யாணம் எனவும் சொல்லிவிட்டு "எம்பொண்ணு படிப்புக்கு எத்தனயோ செஞ்சிருக்கீங்க சாமி. இனி அவ வேலைக்கு வர மாட்டா. மன்னிச்சுக்குங்க!!" என்றாள்.

"என்னம்மா இது? அவளுக்கு இன்னும் வயசு பதினாறுகூட முடியல. அதுக்குள்ள கல்யாணமா?"

"தப்பா நெனச்சுக்காதீங்க. நெலம அப்படித்தான். இத தாட்டிவுட்டாதான் அடுத்து இருக்கற ரெண்டு பொட்டப் புள்ளைங்களை கரயேத்த முடியும். ஏதோ இவளுக்கு அதிஸ்டமா தானா வந்து அமைஞ்சுருக்கு. சட்டுப் புட்டுன்னு முடிச்சுர்றதுதான நல்லது." என்றாள்.

ஒரு சுபமுகூர்த்தச் சுப தினத்தில் செல்வி கல்யாணம் பண்ணிக்கொண்டு போய்விட்டாள்.

*********

இப்போது மீண்டும் செல்வியின் வரவு. ஒரு வேலைக்காரியின் மிக அவசியத் தேவையின் சமயத்தில் நிகழ்ந்திருக்கிற அவள் பிரவேசம் கொஞ்சம் சந்தோஷமாகத்தான் இருக்கிறது. குறைந்த பட்சம் ஒரு வருஷத்திற்காவது இவள் இங்கே தங்கினால் நல்லது. இல்லையேல் வேறு யாரையாவது தேடி மறுபடி அலைய வேண்டியிருக்கும். பழைய சம்பளத்துடன் கூட நூறு ரூபாய் வேண்டுமானால் ஜாஸ்தியாகப் போட்டுக்கொடுத்துவிடலாம் என்று தோன்றியது. பாவம்! இப்போது அவள் சின்னப் பெண் இல்லை. குடும்பஸ்தி! அப்புறம் அவன் புருஷன் வேலையில்லாமலிருக்கிறதாகச் சொன்னாளே! அவனையும் வரச்சொல்லி ரெண்டு அதட்டு அதட்டி உருப்பட வைக்கமுடியுமா என்று பார்க்கவேண்டும். மஞ்சுவின் டெலிவரி வரை செல்வி ஒத்தாசையாய் இருந்து அவளை அலுங்காமல் பார்த்துக்கொள்வாளேயாயின் அவள் குடும்பத்துக்கு என்ன வேண்டுமானாலும் செய்யலாம். இந்த மாதிரி ஒரு உணர்ச்சி வேகத்தில் ப்ரசன்னாவுக்கு என்னென்னவோ சிந்தனைகள் வந்து விழுந்தன.

சாயங்காலம் வீட்டுக்குப் போனபோது மஞ்சு கதவைத் திறந்துவிட்டு விட்டு அடுக்களைக்குப் போய், விட்ட இடத்திலிருந்து மறுபடி பாத்திரம் கழுவ ஆரம்பித்தாள். ப்ரசன்னாவுக்கு ஒன்றும் புரியவில்லை.

உள்ளே வந்து "மஞ்சு இதெல்லாம் நீ எதுக்கு பண்ற? எதுக்கு இப்படி ரிஸ்க் எடுத்து உடம்பை அலட்டிக்கிற? நாளைக்கு செல்வி வந்து இதெல்லாம் பண்ணுவால்ல!" என்றான் அவன் லேசான கோபத்துடன்.

"செல்வியை நாளையிலேர்ந்து வர வேண்டான்னு சொல்லிட்டேன்" என்றாள் மஞ்சு.

ப்ரசன்னா புரியாமல் நின்றான். முகத்தில் குழப்பம் சூழ ஏனென்று கேட்க வாய் திறக்குமுன் மஞ்சுவே சொன்னாள்.

"ஏன் தெரியுமா? செல்வியும் முழுகாம இருக்கா!"

ப்ரசன்னா லேசான பெருமூச்சுடன் திரும்பி டி.வி ஸ்டாண்ட் மேலிருக்கிற புத்தர் சிலையை அமைதியாய் வெறிக்கத் தொடங்கினான்.