யார் என்று தெரிகிறதா?

ஒரு விஷேச மொபைல் அழைப்பு வந்தது. அன்னோன் நம்பர் என்பதால் எடுக்கத் தயங்கினேன். என் மொபைலில் ஒரு போதும் சரியாக வேலை செய்திராத ட்ரூ காலர் ஆப்பானது வழக்கம்போல இந்த எண்ணையும் யாரென்று கண்டுபிடித்துக் கொடுக்கவில்லை. (பேசி முடித்தபிறகு இன்னார், அண்ணார் என்று சொல்வது அதன் வழக்கமாயிருந்தது).

விஸ்வரூபத்தில் கமல் கேட்டமாதிரி மறுமுனை புதிர் போட்டது. "யாரென்று தெரிகிறதா?"

குரல்களை வைத்து நபர்களை அடையாளம் காணும் திறமை எனக்கு இல்லை என்றும் நீங்களே சொல்லிவிடுங்கள் என்றும் சொன்னேன். ஆண் குரல் என்று மட்டும் கணிக்க முடிந்தது.

குரல் விடுவதாயில்லை. "நான் பாலு பேசறேன். உடுமலைபேட்டை. உங்கூட 6F, 7B, 8E, 9E, 10D -ல ஒண்ணாப் படிச்சேன்."

புருவங்களை நெரித்து, மூளையை அலசி, கன்னத்தில் கைவைத்து, தலை முடியைப் பிசைந்து என எப்படி யோசித்தும் இந்த அபாயகர ஞாபகக்காரனை நினைவுக்குக் கொண்டுவர முடியவில்லை. ஒரே ஒரு கேள்வியில் 'பாலு' வை அவன் கோர்ட்டுக்குத் தட்டிவிட்டேன்.

"தெரியலையே.. எந்த பாலு?"

மூளையில் ஒரே ஒரு நியூரான் உதவிக்கு வந்தது. லேசாய் பொறி தட்டி, "N. N. பாலனா?" என்றேன். சில பேர்களை இப்படி இனிஸியலோடு மட்டுமே நினைவறைகளில் சேமித்துவைத்ததால் வந்த சிக்கல்.

சரியாகத்தான் கண்டுபிடித்தேன் போலும்.

"நானேதான். பரவால்லயே.. ஞாபகம் வெச்சிருக்க."

பிறகு குசல விசாரிப்புகள். மலரும், கிளறும் நினைவுகள். "இரு.. உங்கூடப் பேச இன்னொரு ஃப்ரெண்டு வெய்ட் பண்றான். ஃபோனை அவன்ட்ட தர்ரேன்.."

மறுபடியும் ஒரு ஹலோ. மறுபடியும் ‘நான் யார் என்று தெரிகிறதா?.’ இந்தக் குரல் கொடுத்த ஒரே க்ளூ "நானு, பாலு, அய்யர் ரமேஷ் எல்லாரும் ஒண்ணாவே சுத்துவோம்.."

இந்த முறை வித்தியாசமாக இருக்கட்டுமே என்று கண்களை உருட்டி யோசித்துப் பார்த்ததில் ஒரே நாளில் இரண்டாம் முறையாகப் பொறி தட்டியது.

"மோகன்ராஜா?"

"யெஸ்"

அடடே என்று ஆச்சரிய அதிர்ச்சி ஒன்று என்னைக் கவ்வியது. மனத்திரையில் ஸ்பைரல் சுற்ற ஆரம்பித்து ஃப்ளாஷ்பேக் ஓட ஆரம்பித்தது.



இந்த மோகன்ராஜ் மேற்சொன்ன எல்லா வகுப்புகளிலும் என்னோடு படித்தவன்தான் (என்று நினைக்கிறேன்). இரண்டு பேரும் ஆரம்பத்தில் நல்ல நண்பர்களாக இருந்தோம். அவன் நன்றாக வரையக்கூட செய்வான். ஆனால் எட்டாம் வகுப்பு வந்தபோது எதற்கென்றே தெரியாமல் எங்களுக்குள் போர் மூண்டது. அடிக்கடி மோதல் நிகழ ஆரம்பித்தது. என்ன காரணத்துக்காக என்று பின்னாளில் எல்லா ரூமிலும் உட்கார்ந்து யோசித்திருக்கிறேன். பிடிபடவில்லை.

மோகன்ராஜ் அப்போதே கராத்தேவில் ப்ளாக்பெல்ட் வாங்கியிருந்தான் என்பதால் பாதுகாப்பு காரணங்களுக்காக வெறும் வாய்ச்சண்டையுடன் நிறுத்திக்கொள்வேன். கபடி விளையாடும்போது தாட்டியான பையன்களைக் கூட மணலில் வீழ்த்தும் லாகவத்தை அறிந்திருந்தேன் என்றாலும் அவனின் அப்பர் கிக், லோயர் பஞ்ச்-சுக்கெல்லாம் அப்போதைய எனது நோஞ்சான் உடம்பு தாங்கியிராது என்பதால் ரிஸ்க் எடுக்கவில்லை. அவனோ பேஸ்கட் பால் போஸ்ட்டில் தொற்றி ஒரே மூச்சில் தொடர்ந்து ஐம்பது அறுபது புல்-அப்ஸ் எடுப்பவன்.

பெரியகடைவீதிக்கு இணையாகச் செல்லும் சந்து ஒன்றிற்குள் எங்களுக்குள் இறுதிக்கட்ட யுத்தம் நடந்தது. கெட்ட வார்த்தை ஏவுகணைகளால் (நாயே.. பன்னி போன்ற..) தாக்கிக்கொண்டோம். அதற்கப்புறம் இருவரும் பேசிக்கொள்ளவில்லை. ஏன் நிமிர்ந்து பார்த்துக்கொள்ளக்கூட இல்லை. பத்தாவது படிக்கும்போது ஒரு முறை கபடி விளையாட்டின்போது அவன் எனது எதிர் டீமில் இருந்தான். கபட் கபட் என்று சொல்லிக்கொண்டே வந்து நான் அசந்த நேரத்தில் இடது காலை நூற்றென்பது டிகிரி கோணத்தில் உயர்த்தி எனது தாடையைப் பதம் பார்த்தான். நிலைகுலைந்து நின்றேன். நான் அவுட். 0.09% மீதமிருந்த எங்கள் நட்பும் அன்றோடு மொத்தமாய் அவுட்.

பிறகு +2 முடித்தபிறகு அவன் சட்டம் படிக்கப் போனான் என்று யாரோ சொல்லிக் கேள்விப்பட்டது மட்டும் ஞாபகத்திலிருந்தது.

முப்பது வருடங்கள் கழித்து அந்த மோகன்ராஜின் குரல்.

'நம் சண்டை ஞாபகமிருக்கிறதா' என்றேன். சிரித்தான். விவரங்கள் புரியாத வயதில் எதற்கென்றே தெரியாமல் நிகழ்ந்த நிகழ்வுகள். எதற்கும் அர்த்தங்கள் கிடையாது.

பிறகு ஒரு சில கதைகள் பேசினோம். நாங்கள் படித்த பள்ளிக்கு அவன் சமீபத்தில் சென்றபோது தலைமையாசிரியர் அறைக்கு முன்னால் பலகையில் என் பெயர் இருந்ததைப் பார்த்ததாகச் சொன்னான்.

"ரொம்ப சந்தோஷம் நண்பா" என்றான்.

"விரைவில் சந்திப்போம்" என்றேன்.

உடனே ஃபேஸ்புக்கில் நட்பு அழைப்பை விடுத்தான். அவனது ஃப்ரொபல் பட முகம் என் நினைவிலிருந்த முகத்தோடு பச்சக் என்று பொருந்திப் போனது. காலம் தந்த வழுக்கையைத் தவிர.

போனை வைத்தபிறகு நீண்ட நேரம் யோசித்துக்கொண்டிருந்தேன்.
நான் படித்த வகுப்புகளில் 9E, 10D தவிர எனக்கு வேறு செக்‌ஷன்கள் நினைவுக்கு வரவில்லை என்பது உறுத்தலாக இருந்தது. ஒரு சில வகுப்புத் தோழர்கள் தவிர வேறு யாரும் ஞாபகத்திலில்லை என்பது ஒரு குற்ற உணர்வாகத் தொக்கி நிற்கிறது.

நீண்ட நெடிய நகர வாழ்க்கை பால்ய நினைவுகளை மொன்னையாக்குகிறதா என்கிற கேள்வியுடன் தூங்கப்போனேன்.