Showing posts with label குழந்தைகள். Show all posts
Showing posts with label குழந்தைகள். Show all posts

குரங்கு பெடல் என்றால் என்ன?

ஒரு வழியாக மகனுக்கு பாலன்ஸ் கிடைத்துவிட்டது. இது இரண்டாவது பாலன்ஸ். முதல் பாலன்ஸ் தவழ்கிற குழந்தை என்கிற நிலைப்பாட்டிலிருந்து ‘நடக்கிற குழந்தை’ என்கிற நிலையை அடைந்தது. அப்போது எல்லாக் குழந்தைகள் போலவும் ‘பொதக் பொதக்’ என்று நிறைய தடவை விழ வேண்டி வந்தாலும் தன் முயற்சியில் சற்றும் மனம் தளராமல் எப்படியோ நடக்கவும் பிறகும் ஓடவும் பழகிக் கொண்டான்.

ஓடப் பழகின பிறகு ஓட்டப் பழகவேண்டாமா? முதலில் வாங்கின மூன்று சக்கர சைக்கிள் மோகம் முடிந்து (நான் கூட அவ்வப்போது ஓட்டுவதுண்டு) ஹாண்டில் பாரில் அவனது முழங்கால் இடிக்க ஆரம்பித்தவுடன் மாநாடு கூட்டி அவனுக்கு பெரிய சைக்கிள் வாங்கலாம் என முடிவானது. பி.எஸ்.ஏ ராக்கெட் என்று போட்ட ஒரு சின்ன இரண்டு சக்கர சைக்கிள் (சைடு வீலையும் சேர்த்தால் நான்கு) வாங்கிவந்தோம். பேர்தான் ராக்கெட் என்று போட்டிருந்தார்களே தவிர தரையில் தான் ஓடியது.

ஆனால் அந்த சைக்கிளில் ஒரு பிரச்சனை. அது மகனைவிடப் பெரியதாக இருந்தது. அதாவது அவன் இன்னும் நான்கைந்து வருடங்கள் கழித்து ஓட்டவேண்டியதை அப்பொழுதே வாங்கிவிட்டேன். இருந்தாலும் சீட்டையும், ஹாண்டில் பாரையும் கொஞ்சம் தணித்து இறக்கித் தந்ததில் அதில் எப்படியோ ஏறப் பழகி மூன்றாவது மாடி வராந்தாவிலும், மொட்டை மாடியிலுமாக ஓட்ட முயற்சித்துக் கொண்டிருந்தான். கீழே விழாமலிருக்க சைடு வீல்கள் துணை புரிந்தாலும் அபார்ட்மெண்ட் வாசிகளுக்கு ஓட்டும்போது டர்ர்ர்ர் என்ற அதன் நாராசமான சத்தம் அத்தனை ரசிக்கவில்லை. அதற்காக அவனை ரோட்டில் போய் ஓட்ட வைக்கிற மயிர்க்கூச்செரியும் அட்வென்ஞ்சரை நான் எடுக்கத் தயாரில்லை.

சில நாட்கள் வேறு வழியில்லாமல் ஹாலுக்கும் பெட்ரூமுக்கும் கிடைத்த இடைவெளிகளில் கூட ஓட்டுவான். சில நாட்கள் இரவு உணவு முடித்துவிட்டு நடு ஜாமத்தில் ட்ராஃபிக் அடங்கின எங்கள் தெருவில் அவன் பின்னாலேயே ஓடி ஓடி உண்ட உணவு செரித்துக்கொண்டிருந்தது. அதிலும் முக்கியம் அங்கேயிருக்கிற மற்ற அபார்ட்மெண்டுகளில் பார்க்கிங் இல்லாமல் ரோட்டிலேயே நிறுத்திவைத்திருக்கும் கார்களின் மேல் அவன் சைக்கிள் மோதி கீறல் போடாமல் இருக்கவேண்டுமே என்கிற கவலை மூச்சிரைப்போடு சேர்ந்து பொங்கிவரும்.

“ப்ராண்ட் நியூ கார் ஸார் இது.. டெலிவரி எடுத்து ஒரு வாரம்கூட ஆகலை. பாருங்க எவ்ளோ பெரிய கீறல். உங்க மகனுக்கு சமூகப் பொறுப்புன்னா என்னன்னு நீங்க கத்துக் குடுத்திருக்க வேணாமா? திஸ் இஸ் ரிடிகுலஸ்.  எனக்கு மிகப் பெரிய மன உளைச்சலாயிருச்சு. கீறலுக்கான நஷ்ட ஈடா  பதினைந்தாயிரத்தை...”

என்று யாராவது கனவான் கேட்டில் நின்றுகொண்டு கத்துவதை கற்பனை செய்துகொண்டு அந்த பயத்துடனேயே மகனுக்கும் கார்களுக்குமிடையே இடைவெளி ஏற்படுத்துகிற முனைப்பிலேயே ஓட்டம் கழியும். சைக்கிள் அவன் உயரத்திற்குப் பொருந்தாமல் உயரமாக இருந்ததாலும், அவ்வப்போது சீறி வருகிற ஆட்டோ, பைக்வாலாக்களுக்கு பயந்து தடுமாறியதாலும் மற்றும் சென்னை சாலைகளின் பிரத்யேக அடையாளமான திடீர்க் குழிகளினாலும் அவ்வப்போது தடுமாறி விழவும் செய்தான். பாலன்ஸூம் கிடைக்காமல் சாய்ந்த நிலையிலேயே ஓட்டி ஓட்டி பக்கவாட்டுச் சக்கரங்களும் தேயத் தொடங்கியிருந்தது. நொடிகளும், நிமிடங்களும், நாட்களும், வருடங்களுமாக உருண்டோடியது. இந்த பெரு நகரத்துக்குள் வாழ்வின் அத்தியாவசிய தேவையான சைக்கிள் ஓட்டுதலைக் கற்றுக் கொடுப்பதற்குள் வுதா (இது ஒரு கெட்டவார்த்தை என யாரோ சொன்னதால் தலைகீழாக எழுதியிருக்கிறேன்) தீர்ந்து போய்விடும் என்று தான் தோன்றியது.

ஆனால் இந்தக் கோடை விடுமுறையின் போது ஊருக்குப் போய் அங்கே மரங்கள் சூழ்ந்த, சுத்தமாய் போக்குவரத்து இல்லாத, அகலமான ரோடுகள் கொண்ட மின்சார வாரிய குவார்டர்ஸூக்குள் அக்கா பசங்களின் (சைடு சக்கரங்கள் இல்லாத) சைக்கிள்களை ஓட்டி ஒரே நாளில் அட்சர சுத்தமாக நன்றாய் சைக்கிள் பழகிவிட்டான். ஆக வாழ்க்கைக்குத் தேவையான இரண்டாவது பாலன்ஸூம் ஒரு வழியாய்க் கிடைத்துவிட்டதில் அக மகிழ்வு ஏற்பட்டுவிட்டது.

இன்றைக்கு அவன் சைக்கிளை விட கொஞ்சம் உயரமாய் வளர்ந்துவிட்டான்.  சைடு வீல்களையும் நீக்கியாயிற்று. சீறுகிற ஆட்டோக்களை லாவகமாய்த் தவிர்க்கவும் பழகிவிட்டான். ரொம்ப குள்ளமாய் இருக்கிறதென்று ஸீட்டை கொஞ்சம் இன்னும் ஏற்றித்தரமுடியுமா என்று கேட்கிறான். இல்லையென்றால் கியர் எல்லாம் வைத்து மவுண்டன் பைக் டைப்பில் வேறு பெரிய சைக்கிள் வேண்டுமாம்.

நான் எண்பதுகளின் ப்ளாஷ்பேக் காட்சியொன்றை நினைவுகூர்ந்து அவனிடம் சொன்னேன். “நாங்கெல்லாம் எங்களை விட பெரிய சைக்கிள்ள குரங்கு பெடல் போட்டு ஓட்டிப் பழகினோம். இனி அந்த அனுபவமெல்லாம் உங்கள மாதிரி சிட்டிப் பசங்களுக்குக் கிடைக்காதுடா..”

“குரங்குப் பெடல்னா என்ன” என்றான்.

இந்த பதிவை போஸ்ட் பண்ணி முடித்தபிறகு விளக்குகிறேன் என்று சொல்லியிருக்கிறேன்.

இந்தியா சுடர் – கல்விக்காக ஏற்றப்பட்ட தீபம்

ஒரு மழைநாளில் ஒரு இனிய மெல்லிசை கேட்பதைவிடவும், சரவணபவனில் சாம்பார் வடையை ரசித்து ருசித்துச் சாப்பிடுவதைவிடவும், கவிழ்ந்து படுத்து ஒரு புதினம் படிப்பதைவிடவும், ஒரு சிறுகதையோ வலைப்பதிவோ எழுதுவதைவிடவும் ஒரு மகிழ்ச்சியும் நிறைவும் திருப்தியும் நேற்று கிடைத்தது.

ராயபுரத்திலும், தண்டையார்ப்பேட்டையிலும் ஆக இரு அரசினர் குழந்தைகள் காப்பக மாணவர்களுக்கு எங்கள் அலுவலக நண்பர்கள் நோட்டுப்புத்தகங்கள், பென்சில், பேனா போன்றவைகளை வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன். இதை ஏற்பாடு செய்திருந்தது இந்தியா சுடர் எனும் NGO. நண்பர்களும் நானும் ஆக ஒரு சுபயோக சுபதினத்தில் இந்தியா சுடரில் உறுப்பினரான கையோடு உருப்படியாய் ஏதாவது செய்ய வேண்டுமென்று யோசித்ததின் விளைவாக மேற்கண்ட நிகழ்ச்சி.

இந்தியா சுடர் - ஒரு அரசு சாரா தொண்டு நிறுவனம். இந்தியா முழுவதும் உள்ள வசதியற்ற மாணவர்களுக்கு கல்விக்கான உதவிகளைச் செய்வதற்காக இளைஞர்களால் ஆரம்பிக்கப்பட்ட நிறுவனம். இதன் நிறுவனர்கள் உதய் மற்றும் சற்குணன் மற்றும் சில எனெர்ஜிடிக் இளைஞர்கள் தன்னலமற்ற நோக்கோடு தனது நேரத்தையும் பணத்தையும் செலவு செய்யும் இவர்களை ஒரு வரியில் பாராட்டுவதென்பதெல்லாம் இயலாத காரியம். அவ்வளவு செய்கிறார்கள்.

இந்தியா சுடரின் உறுப்பினர்கள் அனைவருமே ஏதாவது ஒரு நிறுவனத்தில் வேலை செய்துகொண்டே அவ்வப்போது ஓய்வு நாட்களில் தங்களால் இயன்ற அளவு உதவிகளைச் செய்து வருபவர்கள்தான். அது சிறு துரும்பாயினும் இந்தியாவின் எங்கோ ஒரு மூலையில் வசதியற்ற ஏதோ ஒரு சிறுவனோ அல்லது ஒரு சிறுமியோ கல்வி கிடைக்கப்பெற்று அவர்கள் அதன் மூலம் தன் வாழ்க்கையை புதுப்பித்துக் கொள்ளமுடிகிறதென்பது அருமையான விஷயம். மீனைத் தருவதற்கு பதில் மீன் பிடிக்கக் கற்றுத் தருதல்.

நலிந்த நிலையிலிருக்கும் அரசு பள்ளிகளை, குழந்தைகள் இல்லங்களைத் தேடியறிந்து அங்கே உள்ள மாணவர்களுக்குத் கல்விக்குத் தேவையானதை இந்தியா சுடர் செய்கிறது. ஆசிரியர் இல்லாத பள்ளிகளுக்கு ஆசிரியர்களை நியமித்துக் கொடுக்கிறது. கஷ்டப்படும் குடும்பங்களில் வாழும் மேற்படிப்புக்கு வசதியில்லாத மாணவர்களைக் கண்டறிந்து அவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்கிறது. இதன் பணிகள் தமிழ்நாட்டில் மட்டுமில்லாமல் இந்தியா முழுக்க விரவி நிற்கிறது. இதுவரை என்னவெல்லாம் செய்திருக்கிறார்கள் என்பதை கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்தியா சுடரின் தளத்திற்குச் சென்று அறிந்து கொள்ளலாம்.

சென்னையில் ராயபுரம் மற்றும் தண்டையார்ப்பேட்டை பகுதியில் உள்ள இல்லங்களில் சிறார்களைச் சந்தித்தது ஒரு வித்தியாசமான அனுபவம். இவர்களில் சிலர் பெற்றோர்களை இழந்தவர்கள். சில பேர் வீட்டை விட்டு எதற்காகவோ ஓடிவந்து பின் பெற்றோருடன் சேரமுடியாதவர்கள். சில பேருக்குப் பெற்றோர் இருந்தும் வறுமை காரணமாக தங்களால் பார்த்துக்கொள்ள முடியவில்லையென இந்த இல்லங்களில் விடப்பட்டவர்கள்.

ஒரு ஐநூறு குழந்தைகளுக்காவது இந்த வருடப் படிப்பிற்காக நோட்டுப்புத்தகங்கள் வழங்கவேண்டும் என்பது எங்கள் திட்டமாக இருந்தது. ஆளுக்கு ஐம்பது அல்லது நூறு ரூபாய் கொடுத்தால் போதும் என்று ஆரம்பித்து நாங்கள் நினைத்ததை விடவும் அதிக தொகை சேர்ந்தது. அலுவலக நண்பர்கள் தாராளமாக நன்கொடை தந்து உதவினார்கள். இதில் ஒவ்வொரு துளியும் சரியாகத் திட்டமிடப்பட்டு சென்னையிலுள்ள ஆறு அரசினர் மாணவர் இல்லங்களுக்கு நோட்டுப் புத்தகங்களாக சரியான முறையில் பட்டுவாடா செய்யப்பட்டுவிட்டது. இதை உற்சாகமாக முன்னின்று செயல்படுத்தியதில் நண்பர்கள் ஜான், தீனதயாளன், கார்த்திக், இங்கர்சால், பாலசரஸ்வதி, ப்ரேம், செந்தில், இந்தியா சுடர் தளபதிகள் உதய் மற்றும் சற்குணன் மற்றும் அனைத்து அலுவலக நண்பர்களும் இந்த நிகழ்வை சாத்தியமாக்குவதற்குக் காரணமாக இருந்தார்கள்.

மாணவர்களில் ஒரு சில பேர், தாங்கள் நன்றாகப் படித்து நிறைய மதிப்பெண்கள் வாங்கும் பட்சத்தில் மேற்படிப்புக்கு உதவுவீர்களா என்று கேட்டது நல்ல விஷயமாகப் பட்டது. படிப்பார்வம் கொண்ட இவர்களுக்கு நிச்சயம் உதவி செய்யலாம். எந்த வசதியுமில்லாமல் படித்து பத்தாம் வகுப்பில் 84% எடுத்த பையனொருவனைப் சந்தித்தோம். இன்னொரு சிறுவன் இந்த இல்லத்தில் தங்கி படித்துக்கொண்டே, வெளியில் வேலைக்குப் போய் அதில் கிடைத்த சொற்பப் பணத்தில் ஆயிரம் ரூபாயை வீட்டுக்கும், ஆயிரம் ரூபாயை அந்த இல்லத்திற்கு நன்கொடையாகவும் அளித்திருக்கிறான். சின்ன உருவம். பெரிய மனது.

இந்தியா சுடருக்கு வந்து சேரும் நன்கொடைத் தொகைகளின் ஒவ்வொரு பைசாவும் வழங்கியவர் பெயரோடு அதன் இணைய தளத்தில் கணக்கு வழக்குகளோடு வெளியிடப்படுகிறது. தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, அஸ்ஸாம் என்று வகை பிரித்து இதுவரை செய்து முடித்த ப்ராஜக்டுகளின் விவரங்களும் இருக்கின்றன. தன்னை இன்னும் விரிவாக்கும் பொருட்டு இணைய சாத்தியங்களான ட்விட்டர், ஃபேஸ்புக், பிகாஸா வெப், ஆர்குட் என்று சகலத்திலும் இணைந்துள்ளதுடன், உறுப்பினர்களுக்கு இதன் அனைத்து செயல்பாடுகளும், தகவல்களும் யாஹூ குழுமம் மூலமாக உடனடியாகத் தெரிவிக்கப்படுகின்றன.

நம் பாக்கெட்டிலிருந்து வெளிப்படும் வெறும் ஒரு நூறு ரூபாயானது மற்றவர் வாழ்வில் எவ்வளவு பெரிய வித்தியாசத்தை அளிக்கிறதென்று நேற்று மனப்பூர்வமாய் உணர்ந்துகொண்டேன்.

மேலும் விவரங்களை இந்தியா சுடரின் தளத்திலிருந்து அறியலாம் :
http://www.indiasudar.org
http://picasaweb.google.com/indiasudar

வீட்டுக்காரர் பார்த்தால் என்ன நினைப்பார்?

சென்னையில் ஒரு வீட்டை நீங்கள் குடியிருக்க வாடகைக்குப் பிடிக்கிறீர்கள். அதுவும் நகரத்தின் இதயத்துக்கு நடுவே அல்லது அருகாமையில். உங்களுக்கு வாடகைக்கு விடுவதற்கென்று தன் வீட்டின் சுவர்களுக்கு பளபளவென டிஸ்டெம்பரோ பெயிண்ட்டோ அடித்து ஒரு புதிய வீட்டின் தோற்றத்தை அதற்கு கொடுத்து வைத்திருக்கிறார் வீட்டு உரிமையாளர்.

ஒரு நல்ல நாள் பார்த்து பால் காய்ச்சி பிறகு உங்கள் வாழ்நாள் உடைமைகளை அல்லது இப்பூவுலகில் வாழத் தேவையானதாகக் கருதும் குறைந்த பட்ச அத்தியாவசியச் சாமான்களை புதிய வீட்டிற்கு மாற்றிவிடுகிறீர்கள். எல்லாவற்றையும் அந்தந்த இடத்தில் ஒதுக்கி வைத்துவிட்டு, காலண்டர் மாட்டி, பால்கனியில் துணியுலர்த்த கொடிகட்டிவிட்டு, மின் அட்டையை சரிபார்த்து ரீடிங்கைக் குறித்து வைத்துவிட்டு, பாலுக்கும் பேப்பருக்கும் ஏற்பாடு பண்ணிவிட்டு, பக்கத்து வீட்டுக்காருக்கு எதற்கும் இருக்கட்டும் என்று ஒரு ஹலோவும் சொல்லி வைத்தாயிற்று.

ஒரு பெரிய ராக்கெட் ப்ராஜக்டை முடித்த அலுப்புடன் உங்கள் வரவேற்பறை சோபாவில் சாய்கிறீர்கள். எதிரில் சுவரில் புதிதாக வண்ணமடிக்கப்பட்ட சுவரில் ஒரு பெரிய கருப்புக் கீறல். என்ன அது என்று பதறி பக்கத்தில் போய்ப் பார்த்தால் அது ஒரு பென்சில் கிறுக்கல். மிகவும் கண்டிக்கத்தக்க இந்த அசட்டு வேலையைச் செய்தது உங்கள் குழந்தையாகத்தான் இருக்கும் என்று சந்தேகப்பட்டு அதைத் தேடினால் அது கையில் க்ரையான்களுடன் பெட்ரூம் சுவரில் தனது அடுத்த கட்ட வேலையை ஆரம்பித்திருக்கிறது.

உங்கள் ரியாக்‌ஷன் என்னவாக இருக்கும்? சென்னை நகரில் நம்மை நம்பி வீடு தரும்போதே ஆயிரத்து நூற்றி இருபத்து நாலு நிபந்தனைகளும் கூடவே ஒரு பதினோரு மாத அக்ரிமெண்டும் போட்டிருக்கும் வீட்டுக்காரருக்கு அவரது வீட்டை சேதாரமில்லாமல் திருப்பிக் கொடுக்க வேண்டிய கடமை உங்களுக்கு இருக்கிறபடியால் நிச்சயம் இப்போது உங்கள் ரத்த அழுத்தம் ஏறியிருக்க வாய்ப்புண்டு.

“கண்ணா இதுமாதிரியெல்லாம் சுவத்தில கிறுக்கக்கூடாது சரியா. ஹவுஸ் ஓனர் அப்பாவ திட்டுவாரு” என்று நயமாய்ச் சொல்லி பென்சில், பேனா க்ரையான்களை உடனடியாக குழந்தைக்கு எட்டாத உயரத்தில் வைத்துவிடவும் செய்வீர்கள். இப்படிச் செய்யவில்லையென்றால் வீட்டுக்காரரின் கடும் எரிச்சலுக்கு ஆளாவதுடன், வீட்டைக் காலி செய்யும்போது உங்கள் அட்வான்ஸ் தொகையிலிருந்து ஒரு பெரும் பங்கை வீட்டுச் சுவர்களை நாசப்படுத்தியதற்காக அவர் கழித்துக் கொள்ளக்கூடும்.

ஆனால் இவ்வாறான கவலைகள் எதுவுமற்று செந்தில் ஒரு நண்பர் இருந்தார். அபிராமபுரத்திலிருக்கும் அவர் வீட்டுக்கு ஒரு முறை போனேன். வாசலைத்தாண்டி உள்ளே நுழைந்ததும் ஹாலின் மொத்த சுவரையும் குத்தகைக்கு எடுத்துக்கொண்டு சுவர் கிறுக்கல்கள். அவரது ப்ரீ கேஜி குழந்தை ஹரிணியின் கைவண்ணம். பென்சில், கிரையான், இன்சுலேஸன் டேப், போஸ்டர் கலர் என்று என்ன கையில் என்ன கிடைக்கிறதோ அவைகளைக்கொண்டு தனக்கு எந்த உயரம் வரை எட்டுகிறதோ அது வரை விதவிதமான கிறுக்கல்கள். எட்டவில்லையென்றால் சோபாவின் மீது ஏறி நின்று.

ஹாலில் மட்டும் அல்ல படுக்கையறைகளில், சமையலறை சுவர்களில் என எங்கும் கிறுக்கல் மயம். ஆக அவரது வீடு ஒரு சிறிய ஆர்ட் கேலரி மாதிரி தோற்றமளித்தது.

நீங்கள் குழந்தையைக் கண்டிப்பதில்லையா என்று கேட்டதற்கு நண்பர் மெதுவாய்ச் சிரித்தார். அதோட கிரியேட்டிவிட்டியையும் சுதந்திரத்தையும் ஏன் கெடுக்கவேண்டும் என்றார். மீறிப் போனால் வீட்டுச் சொந்தக்காரர் வெள்ளையடிக்க ஒரு இருபதாயிரம் ரூபாய் கேட்பார். கொடுத்தால் போயிற்று என்றார். நான் ஆச்சரியமாகிப்போனேன்.

நான் குடியிருக்கிற வீட்டில் என் பையன் இப்படிக் கிறுக்கத் தலைப்பட்டபோது அவனை தடுத்தாட்கொண்டது ஞாபகம் வந்தது.  நான் முடிந்த அளவு வீட்டுக்காரர் குறை சொல்லாமல் நடந்துகொள்ளவேண்டும் என்று நினைக்கிற ஆசாமி. அதற்காக செய்கிற தியாகங்களில் அதுவும் ஒன்று.

குழந்தைகளுக்கு சுவரில் கிறுக்குதல் சந்தோஷம். ஆனால் ஒரு சில நிர்பந்தங்களின் பொருட்டு அவ்வாறு செய்யவிடாமல் அடக்கி ஆள்கிறோம். அதை என் நண்பர் செய்ய முயற்சிக்கவில்லை என்பது நல்ல பாராட்டத்தக்க விஷயமாகப்பட்டது. அவரது குழந்தை தனக்கு மனதில் தோன்றுவதை எல்லாம் எங்கே வேண்டுமானாலும் சுதந்திரமாகக் கிறுக்கிக் கொள்ள அனுமதியளித்திருக்கிறார். அதன் வெளிப்பாடாக சுவர் முழுவதும் குறுக்கும் நெடுக்கும் பலவிதமான கோடுகளால் ஹரிணிக்கு தன் உலகத்தை விரியச் செய்ய முடிகிறது.

அவைகளை சாதாரணக் கண்களோடு பார்த்தால் வெறும் கிறுக்கல்களாக மட்டுமே தெரியும். ஹரிணியின் மாய உலகத்தில் அவள் கற்பனைகளில் மிதக்கும் உருவங்கள் கோடுகளாக வெளிப்பட்டிருக்கிறதென்று ஏன் சொல்லமுடியாது?. அந்த உலகத்திற்கு நீங்கள் பயணிக்க வேண்டுமென்றால் அந்தக் கிறுக்கல்களை புரிந்து கொள்ளவேண்டுமென்றால் உங்கள் வயதை மூன்றாக மாற்றினால் மட்டுமே முடியும்.

குழந்தைகள் பிற்காலத்தில் என்னவாக ஆவார்கள் என்று யாராலும் சரியாகக் கணிக்க முடியாது. பெரும்பாலானவர்களின் வாழ்க்கையிலும் அதுவே நிகழ்ந்திருக்கிறது. நான் என்னவாக ஆவேன் என்று எப்படி என் அப்பாவுக்குத் தெரியாமல் போனதோ அதே மாதிரி என் மகன் பிற்காலத்தில் எதுவாக மாறுவான் என்று என்னாலும் சொல்ல முடியாது. வேண்டுமென்றால் அவன் எதுவாக ஆகவேண்டுமென்று நினைக்கிறானோ அதற்கான அடித்தளத்தையும், உதவிகளையும், ஆலோசனைகளையும் வழங்கலாம்.

நியூயார்க்கில் குழந்தை மேதாவியான மார்லா ஆம்ஸ்டெட் (Marla Olmstead) என்கிற ஒரு சின்னக் குழந்தை உலகின் முன்னணி ஓவியர்கள் மூக்கில் விரலை வைக்குமளவுக்கு மாடர்ன் ஆர்ட் ஓவியங்களை வரைந்து பல லட்சம் டாலர்களுக்கு அவைகளை விற்றுக்கொண்டிருப்பதையும் டாக்குமெண்டரியாக டிவியில் ஒரு நிகழ்ச்சியில் பார்த்தேன். அது சின்ன வயதிலிருந்தே இப்படி சுவரில் கிறுக்கிய குழந்தையாகக்கூட இருக்கலாம்.

இன்றைய சும்மா சுவர்க் கிறுக்கல்கள் நாளைய கலைப்படைப்புகளாக மாற நிறையவே வாய்ப்பிருக்கிறது. குழந்தைகள் செய்வதையும் சொல்வதையும் முற்றும் சரியல்ல என்று புறந்தள்ளுவதும் நல்லதல்ல என்று தோன்றுகிறது. வளரும் வயதில் லேசான கண்டிப்புடன் கொஞ்சம் சுதந்தரத்தையும் வழங்கும் பட்சத்தில் குழந்தைகள் தங்களின் படைப்புத்திறனை நல்ல முறையில் கூராக்கிக் கொள்ள இயலும். நண்பர் அதை செவ்வனே செய்கிறார்.

நண்பர் வீட்டுக்குப் போன நேரம் கையில் டிஜிட்டல் கேமரா இருந்ததால் குழந்தை ஹரிணியின் சுவரோவியங்களைப் படமாக்கி பிறகு கம்ப்யூட்டரில் அவைகளுக்குப் ஃப்ரேம் எல்லாம் போட்டு மின்னஞ்சலில் அவருக்கு அனுப்பி வைத்தபோது நெகிழ்ந்து சந்தோஷப்பட்டார். பிறகு அவைகளையே கலந்துகட்டி எனது வலைத்தளமான சித்ரன்.காம்-மில் (http://chithran.com) தலைப்பு பேனரிலும் உபயோகப்படுத்திக்கொண்டேன்.ஹரிணியின் அந்த சுவரோவியங்களை இந்தப் பதிவில் ஆங்காங்கே கொடுத்திருக்கிறேன். எப்படியிருக்கிறதென்று சொல்லுங்களேன்!

பையனும் டார்வினும் பின்னே ஞானும்


சென்ற வெள்ளி - சனியில் பன்றிக் காய்ச்சல் எச்சரிக்கைகளையும் மீறி என் பையன் படிக்கும் பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. அவன் படிக்கிற ’நாலாப்பு’ சார்பாக கையில் ஒரு ரிமோட் கண்ட்ரோல் எஸ்கவேட்டர் கொடுத்து ஒரு அறையில் நிற்க வைத்துவிட்டார்கள். கண்காட்சிக்கு வருகை புரிபவர்கள் அவனிருக்கிற குறிப்பிட்ட பகுதிக்கு வந்ததும் "This is called excavator. This is used for digging the trenches, holes... " என்று டீச்சர் சொல்லிக்கொடுத்த ப்ளா ப்ளா-க்களை மள மளவென ஒப்பிக்க வேண்டும். (நானே நான்கு தடவை அவனருகில் போய் நின்று “can you please explain this?" என்று கேட்க சின்ன தயக்கச் சிரிப்புடன் சளைக்காமல் விளக்கினான்)

சரி ஸயின்ஸ் எக்ஸ்போவில் அப்படி என்னதான் இருக்கிறதென்று பார்க்கலாமே என்று போனவனுக்கு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது. சும்மா சொல்லக் கூடாது. டீச்சர்களும், மாணவ மாணவிகளும், பள்ளி நிர்வாகமும் ஒன்று சேர்ந்து அற்புதமாகக் கலக்கிவிட்டார்கள். க்ரவுண்ட் ஃப்ளோரில் சிவப்புக் கம்பளம் விரித்து எல்.சி.டி. டிவியில் நிகழ்ச்சிகளின் வீடியோ விரிய, ஸ்பீக்கரில் இசை முழுங்குகிறது. இதை வந்து பாருங்கள் அதை வந்து பாருங்கள் என்று மாடிப் படிகள் முழுக்க மாணவர்கள் தயாரித்து ஒட்டிய விளம்பர நோட்டீஸ்கள். அலங்கார வளைவுகள். கலை நயம். ஜிகினா.

மெட்ரோ ரயில் சிஸ்டம், ஹைட்ரோ பவர் சிஸ்டம், டெலி கம்யூனிகேஷன் நெட்வொர்க், ரோபோட்டிக்ஸ், ஓரிகமி, டேன்கிராம்ஸ், குளோபல் வார்மிங் என்று ஒரு சப்ஜெக்டையும் விட்டு வைக்காமல் பள்ளிக் கட்டிடத்தின் மூன்று தளங்களிலும் கலக்கலான செட்டப்புகள். முக்கால்வாசி சாதனங்களை தெர்மோகோல், ஃபெவிகால், வாட்டர்கலர் கொண்டே தயாரித்து விட்டார்கள். சின்னச் சின்ன பொடிசுகள் லேப்டாப், ப்ரொஜக்டர்கள் எல்லாம் வைத்துக் கொண்டு விண்டோஸ் மூவி மேக்கரில் தயாரித்த வீடியோ படங்களை இயக்கிக் கொண்டிருந்ததைப் பார்த்தபோது ’ஆச்சரியத்தால் கண்கள் விரிந்தன’ என்று அடிக்கடி இந்த எழுத்தாளர்கள் எல்லாம் எழுதுகிறார்களே அது என்ன என்று புரிந்தது.

ஒவ்வொரு பிரிவிலும் நிற்க வைக்கப்பட்டிருந்த குழந்தைகள் நாம் உள்ளே நுழைந்ததும் போட்டி போட்டுக் கொண்டு “அங்கிள்! (அல்லது ஆண்ட்டி) can I explain this?" என்று கேட்டுவிட்டு ஜெட் வேகத்தில் ஆங்கிலத்தில் குறைந்தது ஐம்பது விநாடிகள் பட்டையைக் கிளப்பிவிட்டு கடைசியில் “தேங்ங்ங்ங்க்க்க்க்க்யூ” என்று ராகம் பாடி முடித்தன. மனப்பாடம் செய்து கொண்டு ஒப்பிக்கிறதுகள் என்றாலும் ஒவ்வொரு டேபிளிலும் பொறுமையாய் அந்த மழலைக் குரல்களை ஓரிரு நிமிடங்கள் கேட்டுக் கொண்டிருப்பது மிகப் பெரிய சுகம். அநியாயத்துக்கு இத்தனை பேர் ’படிப்ஸ்’ஆக இருக்கிறார்களே என்று ஆச்சரியமாக இருந்தது. அதுவும் க்ளோபல் வார்மிங் பற்றி விளக்கின பையனிடம் நான் ஏதோ சந்தேகம் கேட்க. “இட் இஸ் தேர் இன் த இண்டெர்நெட் அங்கிள். யு கேன் டவுன்லோட் இட் ஃப்ரம் தேர்.” என்று முத்தாய்ப்பு வைத்தான். சொல்லி முடித்தபிறகு அவர்கள் நீட்டுகிற Feedback நோட்டுப் புத்தகத்தில் உங்கள் பெயரெழுதி உங்கள் கருத்தை அல்லது பாராட்டை எழுதிக் கொடுத்தீர்களானால் குழந்தைகள் முகத்தில் பொங்குகிற சந்தோஷம் இருக்கிறதே. அப்பப்பா! (சொக்கன் கவனிக்க). நான் நீட்டப்பட்ட நோட்டுகளில் எல்லாம் “excellent presentation" என்று தாராளமாக எழுதிக் கொடுத்தேன். (ஆனால் பாராட்டி கை கொடுத்தால் மட்டும் பன்றிக் காய்ச்சல் பயத்துடன் கையை பின்னுக்கு இழுத்துக் கொள்கிறார்கள். அப்புறம் என்னை நானே திட்டிக்கொண்டு அதை தவிர்க்க ஆரம்பித்தேன்.)

ஆறாங்கிளாஸ் படிக்கிற மூன்று சிறுமிகள் அவர்களின் கிளாஸ்மேட்டுகளான சில வாண்டுப் பையன்களைக் காட்டி “அங்கிள்! கன் வி எக்ஸ்ப்ளெய்ன் அபெளட் தெம்” என்று குசும்புச் சிரிப்புடன் கேட்க, நானும் என்னவென்று புரியாமல் தலையாட்ட, “தெ ஆர் ஆல் மங்கீஸ். தெ ஹவ் எஸ்கேப்ப்டு ஃப்ரம் வண்டலூர் ஜூ. தெ நார்மலி ஈட் பனானாஸ்” என்று கலாய்த்து வெடிச்சிரிப்பு சிரித்தார்கள்.

இதைக் கேட்டதும் ஒரு தடவை என் பையனுக்கும் எனக்கும் இரவு தூக்கம் வருவதற்கு முந்தைய பொழுதில் நடந்த சம்பாஷணை ஞாபகத்திற்கு வந்தது.

நான்: குரங்கிலிருந்து மனுஷன் வந்தான்னு யார் கண்டுபுடிச்சா தெரியுமா?

பையன்: ஆங்... தெரியும். லெஸன்ல இருக்கு. அது வந்து...

நான்: சார்லஸ் டார்வின்

பையன்: ஆ! ஆமா.. டார்வின் தியரி..

நான்: கரெக்ட்டு.. மில்லியன் மில்லியன் வருஷத்துக்கு முன்னால குரங்கா இருந்து அதிலேர்ந்து கொஞ்சம் கொஞ்சமா மனுஷன் வந்தான். அப்போ அவனுக்கு உடம்பு பூரா நிறைய முடி இருந்துச்சு. வால் இருந்துச்சு. கை காலெல்லாம் பெருசு பெருசா இருக்கும். மரத்துக்கு மரம் தாவிகிட்டு இருந்தான். அப்றம் அதெல்லாம் போய் இப்போ பாத்தியா இப்ப என்னை மாதிரி ஆயிட்டான்.

பையன்: (மெளனமாய் சில விநாடிகள் யோசித்துவிட்டு) “அப்ப இதுக்கு முன்னாடி நீ கொரங்கா இருந்தியா?”.

அடுத்த ஜெனரேஷன் பசங்களிடம் கொஞ்சம் அல்ல நிறையவே ஜாக்கிரதையாகத்தான் இருக்கவேண்டும் என்று தோன்றுகிறது.