ஜவ்வரிசி வடாம், உள் பனியன் மற்றும் ஒரு ரேடியோ விளம்பரம்

நான் அட்வர்டைசிங் துறைக்குள் நுழையலாம் என முடிவெடுத்த காலம். உடம்பும் மூளையும் பரபரவென்று ஆகிவிட்டது. என்னவொரு திடமான முடிவு. இதுதான் நீ வேலை செய்ய லாயக்கான துறை என்று மனசுக்குள் ஓரமாய் உறுதியாக ஒரு மணி அடித்து பல்பு தோரணமெல்லாம் எரிய ஆரம்பித்திருந்தது. உடனே நான் ஹாலோ ப்ளாக் கற்கள் அடுக்கிவைத்து மனக் கோட்டை கட்ட ஆரம்பித்துவிட்டதுடன் ஒரு புதிய அனுபவத்திற்கு வாழ்க்கையை தயார் பண்ணவும் துவங்கியிருந்தேன்.

அதற்கு முன் அட்வர்டைசிங் கம்பெனிகள் எப்படியிருக்கும் என்று நேரில் பார்த்ததில்லை. ஆனால் நண்பர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன். முற்றிலும் கிரியேட்டிவ்வான விஷூவலைசர் ஆர்ட் டைரக்டர்கள் எல்லாம் உலவுகிற இடம். குளிரூட்டப்பட்ட கண்ணாடி அறைகளுக்குள் க்ரியேட்டிவ் ஸ்டுடியோ. கிராஃபிக் டிசைன் மென்பொருள்கள் நிரம்பி வழிகிற கம்ப்யூட்டர்கள். ஷெல்ஃப்களில் வழியும் விளம்பர டிசைன் பத்திரிக்கைகள், புத்தகங்கள். ஸ்டைலாக நுனி நாக்கு ஆங்கிலம் பேசுகிற யுவதிகள். மீடியாவுடன் நெருங்கின சம்பந்தம் உள்ள வேலை. எட்செட்ரா.

நண்பர் ஒருவர் ஏதோ ஒரு கம்பெனியில் க்ராஃபிக் டிசைனர் வேலை காலியாயிருக்கிறதென்று கேள்விப்பட்டதாய் சொன்னார். உடனே நான் ஆர்வமாய் அட்ரஸ் ஃபோன் நம்பர் போன்ற தகவல் சேகரித்துக் கொண்டு அதை முயற்சித்துப் பார்த்துவிடவேண்டுமென்று தீர்மானித்துக் கொண்டேன்.

விசாரிக்க ஃபோன் செய்தபோது குயில் போன்ற இனிமையான குரலில் ஒரு இளம்பெண் எடுத்துப் பேசுவதற்குப் பதில் ஒரு வயசான கட்டைக்குரல் “சொல்லுங்க.. ஆமாங்க.. ஒரு ஆள் வேணும். காலைல பத்து மணிக்கு வந்து மேடம்-ஐ பாருங்க” என்று தமிழில் பேசியது ஏமாற்றத்தைத் தந்தாலும்.. மேடம் என்பது மேனேஜரா, எம்.டி யா என்று யோசித்துக்கொண்டே அடுத்தநாள் காலை சரியாக 9.45-க்கு அந்த அட்வர்டைஸிங் கம்பெனியிருக்கிற தெருவுக்குள் நுழைந்தேன்.

அது இரண்டாவது ஏமாற்றம். நான் ஏதோவொரு சின்னக் கண்ணாடிக் கட்டிடம் ஒரு அகலமான மெயின்ரோட்டில் இருக்கும் என்று கணக்குப் போட்டு வைத்திருந்தேன். இது என்னவென்றால் ஒரு சின்ன சந்துமாதிரி எதிரில் எருமை மாடு வந்தால் அதற்கு வழிவிட திரும்பி தெரு முனைவரை போய் அப்புறம் அது போன பிறகு மறுபடி சந்துக்குள் வருகிற அளவு மிகக் குறுகலாக இருந்தது.

அந்த அட்ரஸை ஒரு வழியாகக் கண்டுபிடித்து அதன் முன் போய் நின்றபோது மலைத்துப் போனேன். கசகசவென்று வீடுகளும் கடைகளுமாய் இருந்த அந்தச் சந்தில் நெரிசலில் சிக்கியதுபோல ஒரு மாடிவீடு விழி பிதுங்கி நின்று என்னை வரவேற்றது. வாசலில் கொடியில் உள்பாவாடை, வேட்டி எல்லாம் காய்ந்துகொண்டிருக்க ஓரமாய் ஜவ்வரிசி வடாம் காயப்போட்டிருந்தது. பக்கத்து மண்டியிலிருந்து மளிகைப்பொருட்களால் ஆன கதம்ப வாசனை. வீட்டின் முன்னால் அங்கே ஒரு கம்பெனி இருப்பதற்கான அடையாளமோ போர்டோ எதுவும் இல்லை. விசாரித்தபோது வீட்டை ஒட்டியிருந்த இருட்டுச் சந்துக்குள் போய் மரப்படிக்கட்டு வழியாக மேலே போகச் சொன்னார்கள். போனேன். படி முடிகிற இடத்தில் மேலே ஓட்டுக் கூரையுடன் கூடிய ஒரு தளத்தில் ஒரு பெரியவர் நெற்றியில் பட்டை போட்டுக் கொண்டு ஒரு மர டேபிளின் முன் ஒரே ஒரு ஃபைலை வைத்துக்கொண்டு உட்கார்ந்து கொண்டிருந்தார்.

இண்டர்வ்யூக்கு வந்திருப்பதாய் அவரிடம் தகவல் தெரிவித்தவுடன் ஒரு கால் லேசாய் ஆடுகிற ஸ்டூலை நகர்த்திப் போட்டு காத்திருக்கச் சொல்லிவிட்டு அந்த ஒரே ஒரு ஃபைலை மறுபடி பார்க்க ஆரம்பித்தார். இன்னொரு இருட்டறையிலிருந்து பாதமிரண்டில் பொன்மணிச் சலங்கை கீதம் பாட கிண்கிணியாட என்று பாட்டு வந்தது. நான் உட்கார்ந்திருந்த அறையை மலங்க மலங்கப் பார்த்தேன். அந்த அறையின் குறுக்கே ஒரு கயிறு கட்டப் பட்டிருக்க அதில் சின்ன சைசில் சில உள் பனியன்களைப் பார்த்து புருவம் உயர்ந்தது. நான் பெரியவரைப் பார்க்க அவர் கருமமே கண்ணாக ஃபைலில் நெருக்கி நெருக்கி என்னவோ எழுதிக் கொண்டிருந்தார். அவர் நிச்சயமாக ஒரு ஆர்ட் டைரக்டராக இருக்க வாய்ப்பில்லை என்று தோன்றியது. அட்ரஸ் மாறி வந்துவிட்டேனோ என்று சந்தேகமும் வந்தது.

போய்விடலாமா என்று யோசிப்பதற்குள் திடீரென்று உள்ளறையிலிருந்து ஒரு நாற்பத்தி ஐந்து வயது அம்மாள் காட்டன் புடவையில் தோன்றினார். ’வாங்க தம்பி’ என்றார். நான் ஸ்டூலிலிருந்து எழுந்து நிற்க.. ”உங்க சாம்பிள் ஒர்க் எல்லாம் கொண்டுவந்தீங்களா” என்றார். நான் கையோடு கொண்டு போயிருந்த ஒரு சின்ன ஃபோல்டரை நீட்டினேன். நின்றபடியே ஒவ்வொரு பக்கமாகப் பார்க்க ஆரம்பித்தார்.

“எக்ஸ்பீரியன்ஸ் இருக்கா?”

“அவ்வளவா இல்ல”

“நல்லா வரையறீங்க”

”தேங்க்ஸ் மேடம்”

சட்டென்று உடம்பில் ஒரு டவுசர் தவிர வேறு எதுவும் அணியாத ஒரு பையன் ஓடிவந்து கொடியிலிருந்த உள்பனியனை உருவி அதை தலைவழியே இறக்கி அணிந்தான். அந்த அம்மாள் அவனிடம் புளகாங்கிதமாய்த் திரும்பி “அங்கிள் ட்ராயிங் எல்லாம் சூப்பரா இருக்கு பாரு.. நீ அங்கிள் கிட்ட கத்துக்கோ.. சரியா” என்றார்.

நான் கலவரமடைந்து.. “ஆஃபிஸ் எங்க இருக்கு?” என்றேன்.

“இதான் ஆஃபிஸ்.. அவரு அக்கவுண்டண்ட்.. ரேடியோக்கு ஜிங்கிள்ஸ் நிறைய பண்ணிருக்கோம். நிறைய துணிக்கடை எங்க கிளையண்டு. ரேடியோல திருமணப் பண்டிகை மங்கலப் பட்டு-ன்னு ஒரு விளம்பரப் பாட்டு கேட்டிருப்பீங்களே. அது நானே ட்யூன் போட்டுப் பாடினது என்றுவிட்டு தொண்டையை செறுமி அதை பாடிக்காட்ட ஆரம்பித்தார்.

“மேடம்.. கம்ப்யூட்டர்...?”

”கம்ப்யூட்டர் எதும் இல்லை. வேணும்னா வாங்கிடலாம். என்ன விலை வரும்?”

திடீரென்று வீட்டுக்குள் சாம்பார் கொதிக்கிற வாசம் பலமாய் வந்தது. என்னை சந்தேகமாய்ப் பார்த்துக்கொண்டே ஒரு சாம்பல் நிறப் பூனை மியாவ் என்று கடந்தது. அந்த அம்மாள் ஃபோல்டரை திருப்பிக் கொடுத்தார். அக்கவுண்டண்டட் ஃபைலில் முற்றிலுமாய் மூழ்கி முத்தெடுத்துக் கொண்டிருந்தார்.

ரொம்ப நம்பிக்கையுடன் ”நீங்க மண்டேவே ஜாயின் பண்ணிக்கலாம். மண்டே வரும்போது அவர்ட்ட அப்பாயிண்ட் லெட்டர் தரச்சொல்றேன்” என்றார் மர டேபிள் மனிதரைக் காட்டி.

அந்த அம்மணியிடம் வெகு அவசரமாய் விடைபெற்றுக் கொண்டு மரப்படி இருட்டில் தடுமாறாமல் கவனமாய் இறங்கி வெளியே வந்து எருமைச் சாணியை மிதிக்காமல் வீட்டுக்குத் திரும்பும் வழியில் திருமணப் பண்டிகை மங்கலப் பட்டு என்று வாய் தன்னிச்சையாகப் பாடிக்கொண்டிருந்ததை உணர்ந்தேன்.

உதவி தேவை

முத்துராமன். அறியப்பட்ட எழுத்தாளர். நல்ல சிறுகதையாளர். வயது 33. கிழக்கு பதிப்பகத்திலும், ‘தமிழக அரசியல்’ இதழிலும் பணியாற்றியவர். ’சதுரங்கச் சிப்பாய்கள்’ என்கிற அருமையான சிறுகதைத் தொகுப்புக்கு சொந்தக்காரர்.

தற்போது இரண்டு சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்ட நிலையில் அறுவை சிகிச்சையை எதிர்நோக்கியுள்ளார். போரூர் ஸ்ரீராமச்சந்திரா மருத்துவமனையில் டாக்டர். சௌந்தரராஜனிடம் ஆலோசனை பெற்று வருகிறார். கடந்த நான்கு மாதங்களாக நண்பர்கள் உதவியினால் டயாலிஸிஸ் சிகிச்சை பெற்று வருகிறார்.

முத்துராமனின் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு அவரது தாயார் ஜெகதீஸ்வரி தனது சிறுநீரகத்தை அளிக்க இருக்கிறார். இந்த சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கான பணம் கிடைக்கும் பட்சத்தில், ஏப்ரல் 2010லேயே அதற்கான ஏற்பாடுகளைச் செய்துவிட முடியும்.

அறுவை சிகிச்சைக்கும், அதற்குப் பிறகான மருத்துவச் செலவுகளுக்கும் சேர்த்து சுமார் நான்கு லட்சம் ரூபாய் வரை ஆகும் என்று தெரிய வருகிறது. உதவ விரும்பும் நண்பர்கள் முத்துராமன் குறித்து மேலும் விவரங்கள் அறிய :

ஜெ. ராம்கி – ramkij@gmail.com
பாலபாரதி – kuilbala@gmail.com
முகில் – mugil.siva@gmail.com – 99400 84450

முத்துராமனுடைய வங்கிக் கணக்கு எண் :

SBI Mogappair Branch – A/c No: 30963258849
Branch Code : 5090
MICR No: 600002118
IFS Code : SBIN0005090

MUTHURAMAN என்ற பெயரில் காசோலை / டிராஃப்ட்கள் கொடுக்கலாம்.

முகவரி :

முத்துராமன்,
22, எச்.ஐ.ஜி. ப்ளாட்,
7வது தெரு, ஏரித்திட்டம்,
முகப்பேர் மேற்கு,
சென்னை – 600037.
muthuraman@gmail.com

அல்லது கிழக்கு பதிப்பக முகவரிக்கும் அனுப்பலாம்.

முகில்
கிழக்கு பதிப்பகம்
33/15, எல்டாம்ஸ் ரோடு,
ஆழ்வார்பேட்டை,
சென்னை – 600 018.
044 – 4200 9601 / 03/ 04.

முத்துராமனுக்கு அறுவை சிகிச்சை வெற்றியடைந்து வெகுவிரைவில் பூரண குணமடைய மனமார்ந்த பிரார்த்தனைகள்.