குரங்கு பெடல் என்றால் என்ன?

ஒரு வழியாக மகனுக்கு பாலன்ஸ் கிடைத்துவிட்டது. இது இரண்டாவது பாலன்ஸ். முதல் பாலன்ஸ் தவழ்கிற குழந்தை என்கிற நிலைப்பாட்டிலிருந்து ‘நடக்கிற குழந்தை’ என்கிற நிலையை அடைந்தது. அப்போது எல்லாக் குழந்தைகள் போலவும் ‘பொதக் பொதக்’ என்று நிறைய தடவை விழ வேண்டி வந்தாலும் தன் முயற்சியில் சற்றும் மனம் தளராமல் எப்படியோ நடக்கவும் பிறகும் ஓடவும் பழகிக் கொண்டான்.

ஓடப் பழகின பிறகு ஓட்டப் பழகவேண்டாமா? முதலில் வாங்கின மூன்று சக்கர சைக்கிள் மோகம் முடிந்து (நான் கூட அவ்வப்போது ஓட்டுவதுண்டு) ஹாண்டில் பாரில் அவனது முழங்கால் இடிக்க ஆரம்பித்தவுடன் மாநாடு கூட்டி அவனுக்கு பெரிய சைக்கிள் வாங்கலாம் என முடிவானது. பி.எஸ்.ஏ ராக்கெட் என்று போட்ட ஒரு சின்ன இரண்டு சக்கர சைக்கிள் (சைடு வீலையும் சேர்த்தால் நான்கு) வாங்கிவந்தோம். பேர்தான் ராக்கெட் என்று போட்டிருந்தார்களே தவிர தரையில் தான் ஓடியது.

ஆனால் அந்த சைக்கிளில் ஒரு பிரச்சனை. அது மகனைவிடப் பெரியதாக இருந்தது. அதாவது அவன் இன்னும் நான்கைந்து வருடங்கள் கழித்து ஓட்டவேண்டியதை அப்பொழுதே வாங்கிவிட்டேன். இருந்தாலும் சீட்டையும், ஹாண்டில் பாரையும் கொஞ்சம் தணித்து இறக்கித் தந்ததில் அதில் எப்படியோ ஏறப் பழகி மூன்றாவது மாடி வராந்தாவிலும், மொட்டை மாடியிலுமாக ஓட்ட முயற்சித்துக் கொண்டிருந்தான். கீழே விழாமலிருக்க சைடு வீல்கள் துணை புரிந்தாலும் அபார்ட்மெண்ட் வாசிகளுக்கு ஓட்டும்போது டர்ர்ர்ர் என்ற அதன் நாராசமான சத்தம் அத்தனை ரசிக்கவில்லை. அதற்காக அவனை ரோட்டில் போய் ஓட்ட வைக்கிற மயிர்க்கூச்செரியும் அட்வென்ஞ்சரை நான் எடுக்கத் தயாரில்லை.

சில நாட்கள் வேறு வழியில்லாமல் ஹாலுக்கும் பெட்ரூமுக்கும் கிடைத்த இடைவெளிகளில் கூட ஓட்டுவான். சில நாட்கள் இரவு உணவு முடித்துவிட்டு நடு ஜாமத்தில் ட்ராஃபிக் அடங்கின எங்கள் தெருவில் அவன் பின்னாலேயே ஓடி ஓடி உண்ட உணவு செரித்துக்கொண்டிருந்தது. அதிலும் முக்கியம் அங்கேயிருக்கிற மற்ற அபார்ட்மெண்டுகளில் பார்க்கிங் இல்லாமல் ரோட்டிலேயே நிறுத்திவைத்திருக்கும் கார்களின் மேல் அவன் சைக்கிள் மோதி கீறல் போடாமல் இருக்கவேண்டுமே என்கிற கவலை மூச்சிரைப்போடு சேர்ந்து பொங்கிவரும்.

“ப்ராண்ட் நியூ கார் ஸார் இது.. டெலிவரி எடுத்து ஒரு வாரம்கூட ஆகலை. பாருங்க எவ்ளோ பெரிய கீறல். உங்க மகனுக்கு சமூகப் பொறுப்புன்னா என்னன்னு நீங்க கத்துக் குடுத்திருக்க வேணாமா? திஸ் இஸ் ரிடிகுலஸ்.  எனக்கு மிகப் பெரிய மன உளைச்சலாயிருச்சு. கீறலுக்கான நஷ்ட ஈடா  பதினைந்தாயிரத்தை...”

என்று யாராவது கனவான் கேட்டில் நின்றுகொண்டு கத்துவதை கற்பனை செய்துகொண்டு அந்த பயத்துடனேயே மகனுக்கும் கார்களுக்குமிடையே இடைவெளி ஏற்படுத்துகிற முனைப்பிலேயே ஓட்டம் கழியும். சைக்கிள் அவன் உயரத்திற்குப் பொருந்தாமல் உயரமாக இருந்ததாலும், அவ்வப்போது சீறி வருகிற ஆட்டோ, பைக்வாலாக்களுக்கு பயந்து தடுமாறியதாலும் மற்றும் சென்னை சாலைகளின் பிரத்யேக அடையாளமான திடீர்க் குழிகளினாலும் அவ்வப்போது தடுமாறி விழவும் செய்தான். பாலன்ஸூம் கிடைக்காமல் சாய்ந்த நிலையிலேயே ஓட்டி ஓட்டி பக்கவாட்டுச் சக்கரங்களும் தேயத் தொடங்கியிருந்தது. நொடிகளும், நிமிடங்களும், நாட்களும், வருடங்களுமாக உருண்டோடியது. இந்த பெரு நகரத்துக்குள் வாழ்வின் அத்தியாவசிய தேவையான சைக்கிள் ஓட்டுதலைக் கற்றுக் கொடுப்பதற்குள் வுதா (இது ஒரு கெட்டவார்த்தை என யாரோ சொன்னதால் தலைகீழாக எழுதியிருக்கிறேன்) தீர்ந்து போய்விடும் என்று தான் தோன்றியது.

ஆனால் இந்தக் கோடை விடுமுறையின் போது ஊருக்குப் போய் அங்கே மரங்கள் சூழ்ந்த, சுத்தமாய் போக்குவரத்து இல்லாத, அகலமான ரோடுகள் கொண்ட மின்சார வாரிய குவார்டர்ஸூக்குள் அக்கா பசங்களின் (சைடு சக்கரங்கள் இல்லாத) சைக்கிள்களை ஓட்டி ஒரே நாளில் அட்சர சுத்தமாக நன்றாய் சைக்கிள் பழகிவிட்டான். ஆக வாழ்க்கைக்குத் தேவையான இரண்டாவது பாலன்ஸூம் ஒரு வழியாய்க் கிடைத்துவிட்டதில் அக மகிழ்வு ஏற்பட்டுவிட்டது.

இன்றைக்கு அவன் சைக்கிளை விட கொஞ்சம் உயரமாய் வளர்ந்துவிட்டான்.  சைடு வீல்களையும் நீக்கியாயிற்று. சீறுகிற ஆட்டோக்களை லாவகமாய்த் தவிர்க்கவும் பழகிவிட்டான். ரொம்ப குள்ளமாய் இருக்கிறதென்று ஸீட்டை கொஞ்சம் இன்னும் ஏற்றித்தரமுடியுமா என்று கேட்கிறான். இல்லையென்றால் கியர் எல்லாம் வைத்து மவுண்டன் பைக் டைப்பில் வேறு பெரிய சைக்கிள் வேண்டுமாம்.

நான் எண்பதுகளின் ப்ளாஷ்பேக் காட்சியொன்றை நினைவுகூர்ந்து அவனிடம் சொன்னேன். “நாங்கெல்லாம் எங்களை விட பெரிய சைக்கிள்ள குரங்கு பெடல் போட்டு ஓட்டிப் பழகினோம். இனி அந்த அனுபவமெல்லாம் உங்கள மாதிரி சிட்டிப் பசங்களுக்குக் கிடைக்காதுடா..”

“குரங்குப் பெடல்னா என்ன” என்றான்.

இந்த பதிவை போஸ்ட் பண்ணி முடித்தபிறகு விளக்குகிறேன் என்று சொல்லியிருக்கிறேன்.

16 comments:

 1. வாழ்க்கை சித்திரங்கள் எப்பொழுதும் படிப்பதற்கு இனிமையானவை!!!!

  ReplyDelete
 2. வாடகைக்கு எடுத்த குட்டி சைக்கிளில் குரங்கு பெடல் - அதுலேயே பர்ஸ்ட்டு குரங்கு பெடல்லதான் - கத்துக்கிட்டு சுவத்துல முட்டி மோதி நிப்பாட்டி, முட்டி விழுப்புண்ணெல்லாம் பட்டு படிச்ச சைக்கிள் கோர்ஸ் :)

  இதுதான் ஞாபகத்துல கம்மிங் !

  போட்டோ செம!!

  ReplyDelete
 3. என்னது!குரங்கு பெடல் போடறமாதிரி சைக்கிள் இப்ப கிடையாதா?

  குரங்கு பெடல் கத்துக்காம என்ன சைக்கிள் வேண்டிக்கிடக்கு:)

  ஆமா!குரங்கு பெடல்ன்னா என்னங்க:)

  ReplyDelete
 4. நன்றி ஜீவா, ஆயில்யன், ராஜ நடராஜன்.

  @ஆயில்யன்: போட்டோ நான் எடுத்ததாக்கும்.

  @ராஜ நடராஜன்: அப்பார்ட்மெண்ட்வாசிகளிடம் அதிகம் (ஏன் சுத்தமாவே) குரங்கு பெடல் சைக்கிள் இல்லை. இருந்தாலும் சிறுசுகள் அதை விரும்பறது இல்லை. எல்லோரும் கியர்டு சைக்கிள் கேக்கறாங்க.

  ReplyDelete
 5. கற்றுக் கொண்டதோ உங்கள் மகன். மீட்டெடுத்ததோ எங்கள் நினைவுகளை.

  நானும் கிராமத்தில் காலியான ரோட்டில் கற்றுக் கொண்டேன். கற்றுக் கொடுத்த அண்ணன் உடன் ஓடிவர சற்று வேகமெடுத்து ஓட்டிக் கொண்டிருந்தேன். திடீரென்று பிரேக் பிடிக்கவில்லை. அண்ணனையும் அருகில் காணவில்லை. பெருங்குரலெடுத்து ’அண்ணா’ என நான் கதற, பின்னாலே கேரியரிலிருந்து தொப்பென குதித்து சைக்கிளை நிறுத்தினார் அண்ணன் :)

  ReplyDelete
 6. இரகு நலமா ? என்று கேட்டுக்கொண்டு முதலில் ஒரு உள்ளேன் அய்யா போட்டுக்கொள்கிறேன்.
  :-)

  சீட்டில் உட்கார்ந்தால் கால் எட்டாது என்பதால சைக்கிளின் ஃப்ரேமின் மேல் ஒருமாதிரி :-) உட்கார்ந்துகொண்டு ஓட்டுவதை நாங்கள் முக்கால் பெடல் என்றும் ஓட்டுபவர்(ன்/ள் ? :-) )
  இன்னும் குள்ளமாக இருந்தால் ஃப்ரேமின் கீழ் இரு கால்களாலும் ஓட்டுவதை அரை பெடல் என்றும் சொல்வோம்.

  நீங்கள் குரங்கு பெடல் என்று எதைக் குறிப்பிடுகிறீர்கள் என்று தெரியவில்லை.
  :-)

  ReplyDelete
 7. சித்ரன், இனிமை. தலைப்பு ஒன்றே போதும். உட்சென்று நினைவுகளை மீட்ட. நல்ல அனுபவப் பதிவு. பகிர்வு.

  ReplyDelete
 8. @ரகுராம்: நீங்கள் சைக்கிள் கற்றுக்கொண்டது சிரிப்பை வரவழைத்த காமெடி.

  @பாலராஜன்: நலமே. நீங்கள்?

  குரங்கு பெடல் என்று நாங்கள் சொல்வது சைக்கிளின் முக்கோண ப்ரேமிக்குள் ஒரு காலை நுழைத்து வலப்பக்கப் பெடலிலும், மறுகாலை இடப்பக்கப் பெடலிலும் முறையே வைத்து இடது கையில் ஹாண்டில் பாரின் இடது கைப்பிடியையும், வலது கையில் ஸீட்டையும் அணைத்துப் பிடித்துக்கொண்டும் அபாயகரமாக 15 டிகிரி சாய்த்து ஓட்டுதல்.

  ReplyDelete
 9. கார்த்தி27/6/10 2:36 PM

  //அதற்காக அவனை ரோட்டில் போய் ஓட்ட வைக்கிற மயிர்க்கூச்செரியும் அட்வென்ஞ்சரை நான் எடுக்கத் தயாரில்லை// -- நல்ல பஞ்ச்.

  கடைசில குரங்கு பெடல்னா என்னன்னு சொல்லிட்டீங்க :). அடுத்த பதிவுல தான் சொல்லுவீங்களோன்னு இருந்தேன்.

  அது ஏன் “குரங்குப் பெடல்”ன்னு பெயர் காரணம் அறிவீர்களா ? :)

  ReplyDelete
 10. @கார்த்தி: குரங்கு மாதிரி தொற்றிக்கொண்டு ஓட்டுவதால் ஆக இருக்கலாம். வேறு ஏதேனும் காரணங்கள் இருந்தால் யாராவது சொல்லலாம்.

  ReplyDelete
 11. @இரா.செல்வராசு: நன்றி.

  ReplyDelete
 12. யாருக்குமே எதிர் வீட்டுப் பெண்ணுக்கு கற்றுக் கொடுத்ததெல்லாம் நினைவுக்கு வரலையா? :-)

  ReplyDelete
 13. @SRK: புரியுது. நீங்க ஏன் இந்தக் கேள்வியைக் கேட்டீங்கன்னு. அந்தப் பொண்ணு கரெக்டா கத்துக்கிச்சா இல்லையா?

  ReplyDelete
 14. சித்ரன்ஜி, குரங்குப் பெடல் பதிவு அருமை. SRK வின் கேள்வி பக்கத்து தெரு பெண்ணுக்கு கற்றூக் கொடுத்ததெல்லாம் நிணைவுக்கு கொண்டு வந்து விட்டது.

  ReplyDelete
 15. அருமையா இருக்குங்க. சைக்கிள் படமும் அருமை.
  குரங்கு பெடல் எனக்குத் தெரியும்ங்க.

  ReplyDelete
 16. புன்னகையுடன் படித்து முடித்தேன்.. காரணம், இதை படிக்கையில் சைக்கிள் கற்றுத்தருகிறேன் என்ற பெயரில் என் தம்பியை நான் அடித்த அனுபவங்கள்.. :) நல்ல பதிவு. நல்ல புகைப்படம்.. வாழ்த்துக்கள் ரகு.

  ReplyDelete

இந்தப் பதிவைப் பற்றிய உங்கள் கருத்து?