மாயாஜால மழை

பல வருடங்களாக சென்னையில்தான் இருக்கிறேன். ஆனால் பார்க்கவேண்டும் என்கிற லிஸ்டில் இன்னும் காத்திருப்பிலேயே இருக்கிற மூன்று இடங்கள் : 1) பாண்டிச்சேரி 2) கிழக்குக் கடற்கரை சாலையிலுள்ள சோழமண்டலம் ஃபைன் ஆர்ட்ஸ் வில்லேஜ் 3) மாயாஜால்.

இந்த மாயாஜாலைப் பற்றி அநேகம் பேர் சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறேன். எங்கேயோ போகும்போது வழியில் பார்த்திருக்கிறேன். ஒரு சில சினிமாக்களில் நாயக நாயகிகள் சந்திக்கும் இடமாகக் கண்டிருக்கிறேன். மற்றபடி பயணிக்கிற தூரத்திலிருந்தும் போவதற்கான வாய்ப்பு அமையவில்லை. 

போனவாரம் ஒரு நண்பர் இந்த மாயாஜால் என்னுமிடத்தில் நடந்த ஒரு சம்பவத்தை என்னிடம் விவரித்தார். மாயாஜாலில் இரவு காட்சியோ ஏதோ ஒன்றிற்கு மனைவியுடன் போயிருக்கிறார். இருவரும் வேலை நேரம் முடிந்து நேராக அங்கே சென்று திரைப்படம் ஆரம்பிக்குமுன் அங்கேயே இரவு உணவை முடித்து விடலாம் என்று திட்டமிட்டிருக்கிறார்கள். ஆனால் அவர்கள் போன நேரம் அங்கேயிருக்கிற எல்லா உணவகங்களும் மூடப்பட்டிருக்கின்றன.

நண்பர் அங்கே அரை குறையாய் மூடப்பட்டிருந்த ஒரு உணவகத்தின் முன் நின்றிருந்த இளைஞரை அணுகி சாப்பிடுவதற்கு ஏதாவது எங்கேயாவது கிடைக்குமா என்று கேட்டிருக்கிறார். அவர் அந்த உணவகத்தில் வேலை செய்பவர் போலும். ‘எல்லாமே க்ளோஸ் பண்ணியிருப்பாங்களே சார்’ என்று சொன்ன இளைஞர் சில விநாடிகள் யோசித்துவிட்டு, ’சார் நீங்க தப்பா நினைக்கலேன்னா, நான் சாப்பிடறதுக்காக கொஞ்சம் எடுத்து வெச்சிருக்கேன். அதை சாப்பிடறீங்களா?’ என்று கேட்டிருக்கிறார். நண்பரோ சங்கோஜமாய் “அய்யய்யோ.. அதெல்லாம் வேணாம்.. ஒண்ணும் ப்ராப்ளமில்ல ப்ரதர்.. நாங்க மேனேஜ் பண்ணிக்கிறோம். கேட்டதுக்கு ரொம்ப தாங்க்ஸ்” என்றிருக்கிறார்.

ஆனால் இளைஞர் விடாமல், “சார்.. இந்நேரத்துக்கு நீங்க எங்க போய் சாப்பிடுவீங்க.. வாங்க சார்.. உக்காருங்க.. நான் எடுத்துட்டு வர்ரேன்.”

“இல்லைங்க.. பரவாயில்லை.. உங்களோடதை எங்களுக்குக் குடுத்துட்டு நீங்க சாப்பிடறதுக்கு என்ன பண்ணுவீங்க?”

”நான் வெளில போய்க்கூட சாப்டுக்குவேன் சார். நீங்க வாங்க!!” 

நண்பர் எவ்வளவு மறுத்தும் வலுக்கட்டாயமாக அவர்களை அழைத்து உட்காரச் சொல்லிவிட்டு உள்ளே போயிருக்கிறார் இளைஞர். 

இதென்னடா வம்பாகப் போயிற்று என்று நண்பரும் அவர் மனைவியும் தர்மசங்கடமாகக் காத்திருந்திருக்க, உள்ளூர ஒரு சந்தேகம் ஓடிக்கொண்டுதான் இருந்திருக்கிறது. என்னடா வலுக்கட்டாயமாக இழுத்து வைத்து உபசரிக்கிறானே.. இதற்குப் பின்னால் ஏதாவது சதி வேலை இருக்குமோ? காலம் வேறு போன வாரம் வாங்கின வாழைப்பழம் கணக்காக கெட்டுக் கிடக்கிறது. 

ஒரு சில நிமிடங்களில் அந்த இளைஞர் உணவோடு வருகிறார். அவர்கள் நினைத்ததோ அவர் சாப்பிடுவதற்காக வைத்திருந்த, ஆறிபோன எதையோ கொண்டுவரப்போகிறார் என்று. ஆனால் நடந்ததோ வேறு மாதிரி. 

பீங்கான் தட்டுக்களின் மேல் அலுமினியம் ஃபாயில்களில் அழகாக வைக்கப்பட்ட சூடான சப்பாத்தி, அதற்கு சைட் டிஷ்ஷாக இரண்டு பௌல்களில் அருமையான குருமா, இன்னும் இருவகை சட்டினிகள், கண்ணாடி தம்ளர்களில் குடிநீர், கை துடைக்க டிஷ்யூ பேப்பர் என அருமையாக கவனித்திருக்கிறார்.

எதிர்பாராத விருந்தோம்பல்தான் என்றாலும் தயக்கத்துடனும் குறுகுறுப்பான பயத்துடனும் சாப்பிட்டு முடித்திருக்கிறார்கள். சப்பாத்தியும் குருமாவும் சட்னியும் ரொம்ப சுவையாக வேறு இருந்திருக்கிறது. 

சாப்பிட்டு முடித்தபிறகு இளைஞரிடம் “இங்க பாருங்க.. இதுக்கு நாங்க பணம் குடுத்துடறோம். பாவம் நீங்க வேற வெளியே போய் சாப்பிடணுமில்ல..” என்று பர்ஸை எடுத்திருக்கிறார்.

அதற்கு இளைஞரோ பணம் எதுவும் வாங்க மறுத்து சிரித்தபடி “ச்சேச்சே... பணமெல்லாம் எதுக்கு சார்.. இது ஒரு நட்பா இருந்துட்டுப் போகட்டுமே...” என்றாராம்.

இந்த இடத்தில் “இந்த உலகத்துல இப்படியும் சில ஆத்மாக்கள் இருக்காங்க பாருங்க” என்று கதையை முடித்தார் நண்பர் என்னிடம்,

நேற்றைக்குப் பெய்த மழை அந்த இளைஞர் பொருட்டுதான் எல்லோருக்கும் பெய்ததோ என்னமோ!!

டீலக்ஸ் பஸ்


என் வீட்டிலிருந்து மகா தொலைவிலிருக்கும் சென்ட்ரல் ரயில் நிலையத்திலிற்கு இன்று காலை போக வேண்டியிருந்தது. நான் எப்பவும் தேர்ந்தெடுக்கிற பிரயாண உபாயம் முதலில் ஒரு பேருந்து பிடித்து பரங்கி மலை ரயிலடி வரை சென்று பிறகு எலெக்ட்ரிக் ட்ரெய்ன் பிடித்து ‘பார்க்’ -ல் இறங்கிக் கொள்வது.

இன்று அதேபோல் செய்ய நினைத்து வந்து நின்ற ஒரு பேருந்தில் ஏறி கண்டக்டரிடம் பத்து ரூபாயை நீட்டியபோது “இன்னும் ஒர்ருவா குடுங்க” என்றார். அதாவது ஏழு ரூபாய் டிக்கெட் இப்போது ரூபாய் பதினொன்று. வெறும் நாலேகால் கிலோமீட்டர் தூரத்திற்கு. ‘அட அநியாயமே..’ என்றார் பொது ஜனம் ஒருவர்.

பழக்க தோஷத்தில் கம்மியாக காசை நீட்டியவர்களிடமெல்லாம் ”பதினோரு ரூபா குடுங்க” என்று கட்டண உயர்வை நினைவு படுத்திக்கொண்டிருந்தார் கண்டக்டர். ஒரு மூதாட்டி “எப்பவும் ஏழு ரூவா தான? இன்னாத்துக்கு பதினோர்ரூவா கேக்குற?” என்று நியாயம் கேட்டதற்கு “இது டீலக்ஸ் பஸ்” என்றார் கண்டக்டர்.

இதைக் கேட்டதும் நான் பேருந்துக்குள் சுற்றுமுற்றும் பார்த்து ஏதாவது டீலக்ஸ்தனமான விஷயம் அகப்படுகிறதா என்று தேடினேன். சொல்லிக்கொள்கிறார்ப்போல் பெரிதாக ஒன்றும் இல்லை. சும்மா கைப்பிடிக் கம்பிகளுக்கு மஞ்சள் பெயிண்ட் அடித்து கல் மாதிரியிருக்கிற ரெக்ஸின் இருக்கைகள். அவ்வளவுதான். மற்றபடிக்கு சாதா பேருந்திற்கும் இதற்கும் என்ன வித்தியாசம் என்று புரியவில்லை. மாறாக, மெதுவாக ஓட்டினாலே அந்த பேருந்தை உருவாக்கப் பயன்படுத்தியிருந்த மொத்த தகரமும், ஃபைபர் சமாச்சாரங்களும், இன்னபிற முக்கிய உதிரி பாகங்களும் அநியாயத்துக்குத் தடதடத்தன. ட்ரைவர் ஒவ்வொரு தடவை கியர் மாற்றும் போதும் பிருஷ்டத்தில் “நங்”-கென்று ஒரு அதிர்வு ஓடியது. தவிர ஒவ்வொரு ஸ்டாப்பில் நின்று கிளம்பும் போதும் ”தடங்” என்று நடு ரோட்டில் எஞ்ஜின் தற்காலிக மரணமடைந்து கொண்டிருந்தது. “இன்னாப்பா ட்ரைவர்.. உன் டீலக்ஸ் வண்டிய எறங்கி தள்ளணுமா?” என்று பின்னாலிருந்து யாரோ குரல் கொடுத்தார்கள்.

கட்டணம் உயர்த்தப்பட்டு மூன்று நாட்களாகியும் மக்கள் அதிர்ச்சியிலிருந்து மீளவில்லையென்பது பேருந்தினுள்ளே கேட்ட சில சம்பாஷணைகளிலிருந்து தெரிந்தது. ஒரு சில பொதுஜனக் குமுறல்கள் நிஜமாகவே வருத்தத்தை வரவழைத்தன. விலைவாசி உயர்வு என்கிற ஏவுகணை நேரடியாக வந்து தாக்குமிடம் நடுத்தர மற்றும் அடித்தட்டு மக்களின் வயிறுதான் என்பது அவர்களின் பேச்சின் ஒவ்வொரு வரியிலும் வெளிப்பட்டுக்கொண்டிருந்தது. அங்கலாய்ப்புகளுக்குப் பிறகு அரசாங்கத்தைச் சபிக்கும் வார்த்தைகளும் வந்து விழுந்தன. நாலேகால் கிலோமீட்டரைக் கடப்பதற்குள் பேருந்துக் கட்டண உயர்வு பற்றி அநேகம் பேர் தங்களின் ஏகோபித்த எதிர்ப்பை காற்றில் பதிவு செய்திருந்தார்கள்.

பரங்கிமலை ரயிலடியில் இறங்கி மீதமுள்ள பதினேழேமுக்கால் கிலோமீட்டரை எலெக்ட்ரிக் ட்ரெய்னில் வெறும் ஐந்தே ரூபாய் மட்டும் கொடுத்து சென்றடைந்தேன். கூடிய விரைவில் இதையும் இரண்டுமடங்காக உயர்த்திவிட்டால் உலக அரங்கில் தமிழ்நாடு வல்லரசாக மாற பிரகாசமான வாய்ப்புள்ளது.

மக்களின் இந்தக் கட்டண உயர்வுக் கவலைகளை மறக்க நவீன எலைட் மதுபான பார்களைத் திறக்கவும் அரசு முடிவு செய்திருக்கிறதாகச் செய்திகள் கூறுகின்றன.

‘குடி’யுயர கோல் உயரும்தான்.

காலிக்கட்

ஒரு சில தினங்கள் முன்பு மாமா பெண்ணிற்குத் திருமணம் என்ற வகையில் நீண்ட காலத்திற்குப் பிறகு கடவுளின் சொந்த நாடான கேரளாவுக்குள் பிரவேசிக்க வாய்ப்புக் கிடைத்தது.  நடந்த இடம்: காலிக்கட் என்று பிரிட்டீஷாரால் திரிக்கப்பட்ட கோழிக்கோடு.

தென்னக ரயில்வேயின் இரண்டாம் வகுப்புப் பயணப் பெட்டியில் சென்னையிலிருந்து பன்னிரண்டு மணி நேர பயணம். இடையிடையே ஏதேதோ ஸ்டேஷன்களில் ஏறி ரிசர்வேஷன் ஸீட்டுக்களை அனுமதியில்லாமல் ஆக்கிரமிக்கிற பிரயாணிகள், கழிப்பறை நாற்றம், குடும்ப சமேதம் இருக்கைகள் முழுக்க ஊர்கிற கரப்பான் பூச்சிகள், நடு இரவில் மற்றவர் தூக்கத்தைப் பொருட்படுத்தாமல் இரைந்து பேசுகிற ஹிந்திக்காரர்கள், மொபைலில் FM பாட்டு போன்ற எல்லா உபாதைகளும் காலையில் கேரளத்தின் கோடானு கோடி தென்னை மரங்களைப் பார்த்ததும் மறந்துவிட்டது. பசுமை, மரங்கள், நீர் நிலைகள், பரந்து விரிந்து கிடந்த கல்லாயி ஆறு, வயல்கள், வரப்புகள், தோப்புகளுக்கு நடுவே தரவாட்டு மச்சுவீடுகள் என குளுமையாய் விரிகிற காட்சிகளில் மனம் மயங்கிவிட்டது.

Vasco da Gama
கோழிக்கோடு ஒரு சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த இடம். போர்ச்சுகீசிய மாலுமியான வாஸ்கோடா காமா 1498-ல் மூன்று கப்பல், 170 ஆட்கள் சகிதம் கடல்வழிப் பயணமாக இங்குதான் வந்திறங்கினார். முன்னாளில் மலபாரின் பகுதியாக இருந்த ஒரு நகரம்.

வசிப்பிடங்கள் பற்றிய ஒரு ஆய்வில் கோழிக்கோடு என்பது இந்தியாவில் வசிப்பதற்கேற்ற இரண்டாவது சிறந்த நகரம் என்று சொல்கிறார்கள். அது உண்மைதான் என்று நினைக்கும் வகையில் ஓரிரு விஷயங்கள் தென்பட்டன. சுத்தமாக இருக்கும் சாலைகள். மீட்டர் போடும் ஆட்டோக்கள். ரொம்ப இரைச்சல்கள் இல்லாமல் லேசாகத் தெரியும் சிறு சதவிகித சிங்கப்பூர்த்தனம்.

எங்கு பார்த்தாலும் ”ஊதும் அத்தரும்” என்று மலையாளத்தில் எழுதப்பட்ட ஏராளமான செண்ட் கடைகள் இருக்கின்றன. பக்கத்தில் போனால் கமகமவென்று மணக்கிறது. சவுதியிலிருந்து இறக்குமதியாகிற பொருட்கள் போலும். அடுத்த நாள் பக்ரீத் அன்று கோழிக்கோட்டின் பெரும்பாலான கடைகள் விடுமுறையாக இருந்தன. எங்கேயும் எப்போதும், 7ஆம் அறிவு, வேலாயுதம் என தமிழ்ப்பட போஸ்டர்களைக் காண முடிந்தது.

Calicut Beach
இரண்டு நாள் பயணம் என்பதால் திருமண மண்டபத்தைவிட்டு அதிகம் வெளியே செல்ல முடியாத சூழல் இருந்தது. கிடைத்த அவகாசத்தில் ஆட்டோவுக்கு ரூ 22.50 கொடுத்து இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் இருந்த தென்னைமரங்களுடன் கூடிய ஒரு கடற்கரைக்கு மட்டுமே செல்ல முடிந்தது. அதிகம் அலைகளில்லாமல் அமைதியான அரபிக்கடல். மேலே வட்டமிடும் ஏகப்பட்ட பருந்துகள் மற்றும் காக்கைகள். என்னடாவென்று உற்றுப் பார்த்தால், ரோமங்களுடன் கூடிய இரைச்சித் துண்டங்கள், குடல்கள், எலும்புகள் என்று எக்கச்சக்கமாய் கரை ஒதுங்க ஆரம்பித்தன. ஏதோ ஒரு பெரிய விலங்கினை துண்டு துண்டாய் வெட்டி கடலில் தூக்கி எறிந்த மாதிரி. அவைகளைக் கொத்திக் கொண்டு பறக்கும் காக்கைகளும் பருந்துகளும்.

ஒரு பரவசமான மனநிலைக்கு திருஷ்டியாய் அமைந்தது இந்தக் காட்சி மட்டுமே.

திரும்பிப் பார்த்தல்

2004 ஏப்ரல் ஐந்தாம் தேதியை சுபதினமாக பாவித்து வலைப்பதிவு எழுத ஆரம்பித்தேன். ‘புள்ளி’ என்று பெயர் சூட்டுவிழா நடத்தி பொட்டு பூவெல்லாம் வைத்து அமர்க்களமாகத்தான் துவங்கியது. அப்போதிருந்த சக வலைப்பதிவர்களுடன் போட்டிபோட்டு (அப்போது சுமார் 50 பேர் தேறுவார்கள் என்று நினைக்கிறேன். குறுகிய காலத்திற்குள்ளேயே மளமளவென்று நான்கு ஐந்து பதிவுகள் எழுதிக் குவித்தேன்!) இதோ இத்தோடு 7 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. பல்லாயிரக்கணக்கான பதிவுகள் எழுதப்பட்டுவிட்டன. (அட எல்லோருடையதையும் சேர்த்துத்தான் சொல்கிறேன்). அதில் என்னுடையது எவ்வளவு என்று பார்த்தால் சற்றேறக்குறைய ஆயிரத்திலிருந்து தொள்ளாயிரத்தைம்பதை கழித்தால் எவ்வளவு வருமோ அவ்வளவு.

எண்ணிக்கையா முக்கியம்? என்ன எழுதினோம் என்பதுதானே முக்கியம் என்று எனக்கு நானே சமாதானம் செய்துகொள்கிறேன். முத்தோ குப்பையோ அவ்வப்போது எதையாவது கிறுக்கிக்கொண்டு, இன்னும் இழுத்து சாத்தப்படாத ப்ளாக்கர் மற்றும் வேர்டுப்ரஸ் கடைகள் உபயத்தில் என் வலைப்பதிவுகள் வாழ்ந்துகொண்டிருக்கின்றன. ஒரு நாளைக்கு தோராயமாக என்னையும் சேர்த்து பதினேழரைப் பேர் பார்க்கிறார்கள்.

புள்ளி என்ற இந்த வலைத்தளம் தவிர சித்ரன்.காம் மற்றும் “இன்று” தளங்களிலும் அவ்வவ்போது எழுதிக்கொண்டிருந்தேன். ‘இன்று’ என்பது ஒரு கூட்டு வலைப்பதிவு என்பதால் இதைவிட அங்கே வாசகர்கள் ஜாஸ்தி.

ஏன் அதிகம் எழுதுவதில்லை என்று நண்பர்கள் என்னிடம் கேட்கும்போது அதை ஒரு எதிரொலி போல உடனே என்னிடமே கேட்டுவிடுவேன். அப்போது வந்து குதிக்கும் பாருங்கள் சால்ஜாப்புகள்!! அப்பப்பா! எல்லோரும் பொதுவாகச் சொல்கிற காரணமான “எங்க சார்? எதுக்குமே டைமே கிடைக்கறதில்ல” என்ற ஒரு அருமையான சாக்கு இருக்கிறதே! சில சமயம் “ரைட்டர்ஸ் ப்ளாக்” (Writer's block) என்கிற மிகப்பெரிய சவுகரிய வட்டத்துக்குள் உட்கார்ந்துகொண்டு பெரும்பாலும் வாழ்வாதாரத்திற்கான வேலைகளை மட்டும் சிரமேற்கொண்டிருந்தேன்.

இல்லாத ஒன்றை இருப்பதாகச் சொல்கிற சப்பைக்கட்டு அது என்று எனக்கே தெரியும்தான். ரொம்ப யோசித்துப் பார்த்தால் ஏதோ ஒரு சின்ன ஆயாசம். வாழ்க்கையில் எதையோ தேடி ஓடுகிற அவசரத்தில் “எழுத்துதானே? கிடக்கட்டும் கழுதை!” என்கிற அலட்சியம். இன்னும் பல காரணங்களைச் சொல்லலாம். எதுவும் எழுதாமலே “எழுத்தாளர்” என்கிற பட்டத்தைச் சுமப்பது தர்மசங்கடத்திற்குரியது. ஒரு நாளைக்கு ஐந்து KB கூட எழுதாதவன் எப்படி எழுத்தாளர் என்று சொல்லிக்கொள்ள முடியும்?

“சிறுகதை எழுதுதல்” என்கிற விஷயத்தில்தான் என் எழுத்துலகப் பிரவேசம் நிகழ்ந்தது. முன்னணிப் பத்திரிக்கைகளில் நிறைய சிறுகதைகள் வெளியானதும், ஒரு சிறுகதைத் தொகுப்பு பதிப்பிக்கப்பட்டதும் தவிர சொல்லிக்கொள்கிற மாதிரி வேறு கின்னஸ் சாதனைகள் இல்லை. அதுவும் பத்திரிக்கைகள் யாவும் சிறுகதைகளுக்கான இடத்தை சினிமா செய்திகளுக்காக ஒதுக்கியதும் சுவாரஸ்யம் குறைந்து போய் சிறுகதை எழுதுகிற பேனாவை மூடிவைத்துவிட்டேன்.

ஆயிரத்தெட்டு வேலைகளுக்கு நடுவில் ஆயிரெத்தெட்டு வலைப்பதிவுகளும், தொடர்களும், கதைகளும், புத்தகங்களும் எழுதிக் குவிப்பவர்கள் எப்போதுமே எனது பொறாமைக்குரியவர்களாகவே இருக்கிறார்கள். அவர்களுக்கு மட்டும் எப்படி ஒரு நாளைக்கு இருபத்தைந்து மணி நேரம் வாய்க்கிறது?

ஆனாலும் இந்த எழுத்துக் கழுதை கூடவே வருகிற பிராணியாக இருக்கிறது. அதற்கு ஆகாரம், குடியிருக்கக் கொட்டாரம் என்றெல்லாம் கொடுத்து ரொம்பவும் சிஷ்ருஷை செய்ய முடியாவிட்டாலும் ஒரு ஓரமாய் படுத்துக்கிடக்கட்டுமே என்று தோன்றுகிறது. எதையாவது எழுதித் தொலையேண்டா என்று அரற்றுகிற மனக் குரல் இதனால் கொஞ்சம் சமாதானமடையலாம்.

குப்பையாக இருந்தாலும் எதையாவது எழுதிக்கொண்டேயிருப்பது என்பது ஒரு பயிற்சிதான். அது இரண்டு வரி ட்வீட்-ஆக இருந்தாலும் சரி, இறுநூறு பக்க நாவலாக இருந்தாலும் சரி. ஆகவே இனி அடிக்கடி என் வலைத்தளம் என்னால் இயன்ற வரையில் அப்டேட் செய்யப்படும் என்று சொல்லவே இந்தப் பதிவு. சின்னச் சின்னதாக சுவாரஸ்யமாக எதையாவது எழுதுவது என்று தீர்மானித்திருக்கிறேன். ஃபேஸ்புக்கிலோ, கூகுள் ப்ளஸ்ஸிலோ பகிர்வது மாதிரி. மைக்ரோ ப்ளாகிங் வகையறா மாதிரி. விஷயங்களின் சாராம்சத்தைப் பொறுத்து அது இங்கேயோ அல்லது “இன்று” வலைப்பதிவிலோ போடப்படும்.

அவ்வப்போது என் வலைத்தளங்களுக்கு வந்து நான் எழுதுகிறேனா என்று கண்காணித்து இல்லையெனில் “ஏன் இப்பல்லாம் எழுதறதில்ல? என்று கேள்விகேட்டு அடிக்கடி தொல்லை செய்யும் பொறுப்பை வழக்கம்போல உங்களிடமே விட்டுவிடுகிறேன்.

கணினி என்பது அலைபேசியாகவும், டேப்லட்-ஆகவும் சுருங்கிவிட்ட இந்தக் காலத்தில் தேவைப்பட்டாலொழிய நீளமான வலைப்பதிவுகள் எழுதுவதில்லை என்பது தீர்மானம். (இத்தோடு போகட்டும்). இந்த துரித உணவு உலகில் இரண்டு பேராக்களுக்குமேல் ஒரு வாசகரை உட்கார வைப்பது பாவச் செயல். அப்படிச் செய்தால் அடுத்த ஜென்மத்தில் கிண்டி உயிரியல் பூங்காவில் ஆமையாகப் பிறந்து ஊர்ந்து ஊர்ந்தே நூற்றைம்பது வருடங்கள் வாழவேண்டியிருக்கும்.

என் கண்ணில் உன்னைக் கண்டேன்

தலைப்பைப் பார்த்தால் ஏதோ பருவ விடலை எழுதிய காதல் கவிதையின் தலைப்பு மாதிரிதான் இருக்கும். ஆனால் தலைப்புக்கான விஷயம் கொஞ்சம் பேஜாரானது.

உங்களிடம் ஒரு பைக் இருக்கிறது. அதை தினமும் அலுவலகம் போகும் பொருட்டு குறைந்தது ஒரு பத்து கிலோமீட்டராவது ஓட்டவேண்டியிருக்கிறது. எதிர்பாராத குழிகள், பள்ளங்கள், சாலையெங்கும் பறக்கிற புழுதி, சடாரென முன்னறிவிப்பின்றி உங்கள் வழியில் குறுக்கிடுகிற வாகனங்கள். எல்லாவற்றிலும் புரண்டெழுந்து அரசாங்க இயந்திரம் சரியாக செயல்படவில்லையே என்ற மன உளைச்சல்களோடு, இடுப்பொடிய மேற்கொள்கிற பயணத்தில் சடாரென்று உங்கள் கண்ணுக்குள் என்னவோ விழுந்து விடுகிறது.

ஏதாவது சின்ன புழுதித் துகள் விழுந்திருக்கும், வீட்டுக்குப் போய் முகம் கழுவினால் வெளியே போய்விடும் என்று நினைத்து இன்னும் வேகமாய் ஆக்ஸிலேட்டரை முறுக்குகிறீர்கள். கண்ணில் உறுத்தல் தொடர்கிறது.

இப்படித்தான் இன்று நிகழ்ந்தது. வீட்டுக்கு வந்து பல தடவை முகம் கழுவியும் உறுத்தல் தொடர, உருவங்களை ஓரிரு மடங்கு பெரிதாக்கிக் காட்டுகிற முகம் பார்க்கும் கண்ணாடி, சோனி எரிக்ஸ்ஸன் கே எழுநூற்று ஐம்பது என்கிற செல்பேசியில் அடங்கியிருக்கிற குட்டி லைட் சகிதமாய் இடது கண்ணை ஆராய்ந்தபோது கருவிழியின் நடுவே ஏதோ ஒட்டிக்கொண்டிருப்பதைக் கண்டேன். ஒட்டியிருக்கிறதா, குத்தியிருக்கிறதா? கண்ணுக்குத் தெரிந்தும் தெரியாமலும் அறிந்தும் அறியாமலும். ஒவ்வொரு முறை இமைக்கும்போதும் உறுத்தலாக இருந்தது.

இதற்கு முன் இதே மாதிரி ஏற்பட்ட ஓரிரு அனுபவங்கள் ஞாபகம் வர உடனே கண் மருத்துவமனையொன்றைச் சரணடைவது உசிதம் என்று தோன்றியது. இரவு மணி ஒன்பது. உடனே கிளம்பினேன்.

ஒரு ஃப்ளாஷ்பேக்:

நான்: டாக்டர், இடது கண்ணுல என்னவோ உறுத்துது. ப்ளிங்ங் பண்ணும்போது வலிக்குது.

டாக்டர் கண்ணில் ஒரு பூதக் கண்ணாடியை மாட்டிக்கொண்டு கண்ணுக்குள் டார்ச் அடித்துப்பார்த்து. “ஆமா. ஃபாரின் பாடி இருக்கு. எடுத்துரலாம்.”

ஒரு குப்பியை எடுத்து என் இடது கண்ணில் இரண்டு துளிகள் கவிழ்க்கிறார். “அனஸ்தீஸியா ட்ராப்ஸ்.. வலிக்காது. அங்க உக்காருங்க..”

ஒரு மைக்ரோஸ்கோபிக் சாதனத்தின் முன் அமரவைத்து என் மோவாக்கட்டையை அதில் நிலை நிறுத்துகிறார். கண்ணுக்குள் அதிபிரகாசமான ஒரு லைட்டைப் பாய்ச்சிவிட்டு ஒரு ஊசியை எடுக்கிறார். நான் மிரள்கிறேன்.

“இமைக்காம நேரா என்னையே பாருங்க..”


மெல்ல கண்ணுக்கு அருகில் கொண்டுவந்து, கண்ணில் மாட்டியிருக்கும் துகளை நிரடுகிறார். ஊசி நிரடுகிற உணர்வு தெரிந்து செய்தியாய் மூளைக்கு அனுப்பப்பட நான் விருட்டென்று பின் வாங்குகிறேன். டாக்டர் துணுக்குற்று “ஊசி ஃபீலிங் தெரியுதா?”

“ஆமா”

”அனஸ்தீஸியா போட்டுமா?” ஆச்சரியத்துடன் மறுபடி அந்த குப்பியை எடுத்து இன்னும் கொஞ்சம் கண்ணுக்குள் கவிழ்க்கிறார். மீண்டும் நிரடல். இந்த முறை குத்துகிற இடத்தில் எந்த உணர்வும் இல்லை. ஊசியால் நோண்டி எடுத்த சின்ன கருப்புத் துகளை எனக்கு காண்பிக்கிறார். “மெட்டல் பீஸ்தான். எடுத்துட்டேன். மறுபடி பிரச்சனைன்னா வாங்க. இப்போ போய் டி.வி, கம்ப்யூட்டர் எல்லாம் பாக்காம ரெஸ்ட் எடுங்க” கண்ணில் பஞ்சு வைத்து பெரிதாக கட்டுப்போட்டு அனுப்புகிறார். ஒற்றைக் கண்ணால் பைக் ஓட்டியபடி வீடு வந்து சேர்கிறேன்.

இன்று நிகழ்காலத்தில் பேஷண்டுகள் காத்திருக்க, இரவு டின்னரை முடித்துவிட்டு சாவகாசமாக வந்த லேடி கண் டாக்டரிடம் “மேடம், கண்ல என்னவோ குத்தியிருக்கு. ரெட்டினா-க்கு நடுவுல..டார்ச் அடிச்சுப் பாத்தேன்.. எனக்கே தெரிஞ்சுது.”

“ஓ.. நீங்களே பாத்துட்டீங்களா? நல்லது..” டார்ச் அடித்துப் பார்த்து.. “ஆமா.. இருக்கு.. ஒயிட் பார்ட்டிக்கிள்.. ஆனா அது குத்தியிருக்கறது ரெட்டினா இல்ல. கார்னியா..” என்று சிரிக்கிறார்.

பழைய ப்ளாஷ்பேக்கில் கண்ட அதே மாதிரி ட்ராப்ஸ். அதே மைக்ரோஸ்கோப், ஊசி. ஓரிரு விநாடிகளில் வேலை முடிந்தது. குத்திய இடம் செப்டிக் ஆகாமல் இருக்க ஒரு சில கண் மருந்துகளைப் பரிந்துரைத்து ஃபீஸ் வாங்கிக் கொண்டார். ஆனால் நல்லவேளை இந்த முறை கண்ணை மறைக்கும் பெரிய கட்டு இல்லை.

வீட்டுக்கு வந்து சோனி எரிக்ஸனின் டார்ச் அடித்துப் பார்த்தேன். போயே போச்சு, போயல்லோ, போயிந்தே, இட்ஸ் கான்ன்ன்ன்ன்ன்.

இதனால் அறியப்படும் நீதி?

நீதியெல்லாம் பெரிதாக சொல்வதற்கு ஒன்றுமில்லை. அரசாங்க ரோடுகள் அப்படி இப்படித்தான் இருக்கும். நீங்கள்தான் உங்கள் கண்களை பத்திரமாக பார்த்துக்கொள்ளவேண்டும்.