ஜீவகாருண்யம்


எங்கள் தெருவில் நிறைய நாய்கள் இருக்கின்றன. தெருவில் என்று சொன்னதாலேயே அவைகள் தெருநாய்கள்தான் என்று உங்களுக்குத் தெரிந்திருக்கும். ஒரு பதினைந்து இருபது இருக்கலாம். ஒரே பிரசவத்தில் 15 குட்டிகளை ஈன்றுதல் போன்ற நிகழ்வுகளால் அவைகளின் வம்சம் அனுதினம் வளர்ந்துகொண்டுதான் இருக்கிறது. கடிப்பது, ஆளைப்பார்த்தால் உறுமுவது போன்ற உபத்திரவங்கள் தராத சாது நாய்கள்தான். இரவில் ஊர் அடங்கியபின் அவைகளின் இன்னிசைக் கச்சேரி ஆரம்பமாகிவிடும். அவைகளுக்கிருக்கிற டெர்ரிடரி மற்றும் இன்னபிற பிரச்சனைகள் காரணமாக கர்ணகடூரமான குறைப்புகள், ஊளையிடுதல் என்று விதம் விதமாக சப்தங்கள் கோரஸாகத் தொடரும். இந்த வீட்டுக்குக் குடிவந்த துவக்கத்தில் இது மிக மிக எரிச்சலைத் தருவதாக இருந்தது. பல தினங்களில் இரவு சரியாக 11.45க்கு நாய்களின் ஊளைச் சத்தம் ஆரம்பிக்கும். இந்த அமானுஷ்யமும் புரிபடாமலேயே இருக்கிறது. ஒரு நாள் இரவு வெகுநேரம் மொட்டைமாடிக்கு மேல் இருக்கும் தண்ணீர்த் தொட்டியின் மேலமர்ந்து நானும் என் மச்சினரும் பேசிக்கொண்டிருக்கும்போது இதேபோல் நாய்கள் ஊளையிட ஆரம்பித்தன. உடனே நான். ’சரி வாங்க கீழே போவோம். மணி பதினொன்னே முக்கால் ஆயிருச்சு’ என்று சொல்ல அவர் உடனே மொபைலில் மணி பார்த்து, ‘எப்படி இவ்வளவு சரியா சொல்ற?’ என்று கேட்டார். நாய் ஊளைச் சத்தத்தை வைத்துச் சொன்னேன். டெய்லி இதே நேரத்துக்கு சரியா ஆரம்பிக்கும்’ என்று சொன்னதும் பயந்துபோய் ’வா.. போகலாம்.’ என்று வேகமாக படியிறங்க ஆரம்பித்தார்.

விஷயம் இதுவல்ல. எதிர் அபார்ட்மெண்டில் ஒருவர் இருக்கிறார். ரிடையர்டு ஆசாமி. அவரிடம் ஒரு பேஷ்ஹௌண்ட் வகை நாய் இருக்கிறது. அதை மேய்ப்பதற்காக தினமும் ரோட்டுக்கு வரும்போது கூடவே தெருநாய்களும் அவருடன் ஊர்வலமாகப் போகும். அவரது மனைவி, வீட்டுக்குப் பக்கத்திலேயே இருக்கும் கடைக்குச் சென்று (தெரு நாய்களும் கூடவே போகும்) ரொட்டி வாங்கி அதைத் துண்டுகளாக்கி நாய்களுக்குப் போடுவார். அவரது மகள் காலேஜூக்கோ, வேலைக்கோ போய்விட்டு ஸ்கூட்டியில் திரும்பியவுடன் நேராகக் கடைக்குச் சென்று பிஸ்கட் பாக்கெட் வாங்கி அந்த நாய்களுக்கு விநியோகம் செய்துவிட்டு பிறகுதான் வீட்டுக்கே செல்வார். காலேஜ் படிப்பது போலிருக்கிற அவரது மகன் அவ்வப்போது ஒரு ஸ்ப்ரேயர் போன்ற டப்பாவுடன் வீட்டிலிருந்து வெளிப்பட்டு ஏதாவது ஒரு தெரு நாயைப் பிடித்து வைத்துக்கொண்டு, ரோட்டிலேயே குத்தவைத்து உட்கார்ந்து அதைத் தடவிக்கொடுத்து அதற்கு ஏதோ ஸ்ப்ரே எல்லாம் அடித்து, புண்களுக்கு மருந்து போட்டு, பஞ்சால் ஒற்றி வைத்தியம் செய்வதைப் பார்த்திருக்கிறேன். பராமரிப்பு முடியும்வரை நாய்களும் சொகுசாக இணங்கி நிற்கும். அவர்களுடைய காம்பவுண்ட்டுக்கு வெளியே இரண்டு சின்னத் தொட்டிகளில் தெரு நாய்கள் குடிப்பதற்கு தண்ணீர் இருக்கும். அதில் Blue Cross என்று பெயிண்டில் எழுதப்பட்டிருக்கிறது. இந்தத் தெருநாய்கள் கூட்டாகத் தூங்குவது அதிகபட்சம் அவர்களுடைய அபார்ட்மெண்ட் வாசலில்தான்.

இவையெல்லாம் தினசரி என் வீட்டு ஜன்னல்வழிக் காட்சிகள். ’உயிர்களிடத்தில் அன்பு வேண்டும்’ என்பதற்கு உதாரணமாக, ஒரு குடும்பமே இந்த தெருநாய்கள் விஷயத்தில் மிக ஈடுபாட்டுடன் இருப்பதும், அன்பு செலுத்துவதும், அவைகளுக்கு உணவளித்து, உடல்நலம் பேணுவதும் மிகவும் ஆச்சரியப்படுத்துகிறது. அது அவர்களுடைய தினசரி கடமைகளில் ஒன்றாகவே மாறிவிட்டதைப் பார்க்கிறேன்.

இப்போதெல்லாம் இரவில் தெருநாய்கள் குறைத்தாலோ ஊளையிட்டாலோ நான் எரிச்சலடைவதில்லை. ஏதோ என்னால் முடிந்தது.