Showing posts with label கோவை. Show all posts
Showing posts with label கோவை. Show all posts

வருஷம் 16

கோவையிலிருந்து செப்டம்பர் 13 அன்று மதியம் ஒரு ரயில் புறப்பட்டது. அதன் இரண்டாம் வகுப்புப் பெட்டியொன்றில் ஒரு ஜன்னலோர இருக்கையொன்றில் அவன் உட்கார்ந்திருந்தான். ரயில் புறப்படும்போது சென்னை வரை நீண்டிருக்கும் அதன் பாதையைப் போலவே அவன் நெற்றியில் கவலை ரேகைகள் நீண்டிருந்தன.

சென்னை ஒரு மாநகரம். அதை நோக்கிப் பயணிக்கிறோம் என்கிற பதட்டம் அவனுக்குள் லாரி குடிநீர் போல தளும்பிக்கொண்டிருந்தது. புதிய வேலை, புதிய இடம், புதிய மக்கள். புதிய தட்பவெப்பநிலை. இதைவிட மேலாக அடுத்த மாதம் குழந்தை பெறப்போகும் கர்ப்பிணி மனைவியை விட்டுப் பிரிந்து வரும் மனக்குடைச்சல்.

"சென்னைக்கா போறீங்க? அங்கெல்லாம் போய் குப்பை கொட்டறது ரொம்ப கஷ்டம்ங்க.. மறுபடி யோசிங்க"

"சென்னைத் தண்ணிய ஒரு ரெண்டு வருஷம் குடிச்சீங்கன்னா கிட்னி ஸ்டோன் வந்துரும்"

"ஆட்டோக்காரங்க, பஸ் கண்டக்டர் எல்லாம் மரியாதயில்லாம பேசுவாங்க.."

"இந்த அருமையான கோவை க்ளைமேட்டை விட்டுட்டு எங்க போறீங்க?"

அவன் பயணத் தீர்மானத்திலும், திட்டத்திலும் ஓட்டை போட நினைக்கும் வார்த்தைகள் நாலாப் பக்கமிருந்தும் வந்தன. அவன் முடிவை மாற்றிக்கொள்ளவில்லை. கனத்த மனதுடன் பிரயாணித்தான் என்பதால் கோவைக்கும் சென்னைக்குமான தூரம் தீராமல் ஒரு முடிவிலியாகப் போய்க்கொண்டிருந்தது போல உணர்ந்தான்.

சென்னைக்கு வந்ததும் முதலில் தோன்றியது உடனே ஊருக்குத் திரும்பிப் போய்விடவேண்டும் என்பதுதான்.

"ஒரு வருஷம் இருந்திட்டீன்னா அப்றம் இந்த ஊர விட்டுப் போகமாட்ட.."

இதைச் சொன்ன நண்பரின் வார்த்தைகளை இப்போது மறுபடியும் அசைபோட்டான். உண்மைதான். ஒரு வருஷம் தாக்குப் பிடிக்க முடியுமா என்று சந்தேகமாகத்தான் இருந்தது. ஆனால் சென்னை அவனை நல்ல முறையில் சுவீகரித்துக் கொண்டது. சென்னை வெயில் பழகிவிட்டது. மக்கள் பழகிவிட்டார்கள். சென்னையின் புவியியல் பழகிவிட்டது.

பதினாறு வருடங்கள் உருண்டோடிவிட்டன. இத்தனை வருடங்கள் காலண்டரைத் தவிர பெரிதாய் என்ன கிழித்தான் என்று தெரியவில்லை. ஆறு வேலை மாற்றிவிட்டான். ஓரிரு லேசான நில அதிர்வுகள், ஒரு சுனாமி, நகரத்தைக் கிட்டத்தட்ட மூழ்கடித்த ஒரு மழை வெள்ளப் பெருக்கு உட்பட ஆயிரம் அனுபவங்கள். தாடி, மீசை தலைமுடியில் நரை கண்டுவிட்டது. இளம்பெண்களும், பையன்களும் அவனை அங்க்கிள் என்று கூப்பிட ஆரம்பித்துவிட்டார்கள். பெருங்குடி டம்ப் யார்டில் (Dump yard) அவன் கொட்டிய குப்பையும் கணிசமான அளவில் சேர்ந்துவிட்டது.

பிறந்ததிலிருந்தே நாடோடியாக இருந்த அவன் 'நீங்க எந்த ஊர்?' என்று யாராவது கேட்டால் ஒரு நொடி தடுமாறுவான். எந்த ஊரில் நீ அதிகமாக இருந்தாயோ அதுதான் உன் ஊர் என்று தனக்குள்ளே ஒரு கான்செப்ட் உருவாக்கிக் கொண்டான். இனிமேல் 'சென்னை' என்றே பதில் சொல்லலாமா என்று யோசிக்கிறான்.

ஒப்பணக்கார வீதியிலிருந்து ஒரு வாசகர் கடிதம்

95-ல் என் முதல் கதை கல்கி இதழில் வெளியானபோது எனக்கு ஏற்பட்டது புல்லரிப்பு என்றால், அதற்கு வந்த வாசகர் கடிதத்தை என் முகவரிக்கு ஒரு உறையில் போட்டு கல்கி அலுவலகம் அனுப்பிவைத்தது புளகாங்கிதம் என்று சொல்லலாம். கோவை ஒப்பணக்கார வீதியிலிலிருந்து சந்திரன் என்பவர் கதையை வெகுவாகப் பாராட்டி எழுதியிருந்தார். நானும் அப்போது கோவையில்தான் இருந்தேன். முதல் வாசகர் கடிதம் என்பதால் பத்திரமாக ரொம்ப நாள் அது என் பேகிலேயே இருந்தது.

இந்தக் கடிதம் வந்த ஒரு மாதத்திற்குப் பிறகு நானும் என் நண்பன் சரவணனும் ஒரு சாயங்கால வேளையில் ஒப்பணக்கார வீதிப் பக்கம் ஒரு வேலையாகப் போனோம். வேலை முடிந்து ஒரு பேக்கரியில் தேநீர் குடித்துக் கொண்டிருந்தபோது திடீரென்று சந்திரன் என்கிற அந்த வாசகரின் நினைப்பு வந்தது. பேகிலிருந்து அவரின் அந்தக் கடிதத்தை எடுத்து முகவரியைப் பார்த்தால் பக்கத்தில்தான் எங்கேயோ இருக்கிறார் என்று தெரிந்தது. அலுவலக முகவரி போலும். தொலைபேசி எண்ணையும் கொடுத்திருந்தார். சட்டென்று ஒரு யோசனை வந்தது. சரவணனிடம் அதைச் சொன்னபோது முதலில் தயங்கிப் பின்னர் சரி என்றான். ஒரு சின்ன விளையாட்டு!

சரவணன் ஒரு பப்ளிக் டெலிஃபோன் பூத்திலிருந்து சந்திரனைக் கூப்பிட்டு, தன்னை சித்ரன் என்று அறிமுகம் செய்துகொண்டு அவரிடமிருந்து கடிதம் வந்ததைச் சொன்னான். ”உங்க ஏரியாலதான் இருக்கோம். இப்போ வந்தா உங்களப் பாக்க முடியுமா?” என்று கேட்டான். மறுமுனையில் சந்திரன் ”செம சர்ப்ரைஸ்ங்க.. வாங்க வாங்க..” என்றது எனக்கே கேட்டது.

நாங்கள் போனபோது சந்திரன் அவர் அலுவலகத்தில் எங்களுக்காக ஆவலோடு காத்துக்கொண்டிருந்தார். முன்பே பேசி வைத்துக்கொண்டபடி சரவணன் தன்னை ’சித்ரன்’ என்றும் என்னை ’சரவணன்’ என்றும் அறிமுகப்படுத்தினான். ”நீங்க என்னைப் பாக்க வந்தது ரொம்ப சந்தோஷம்..” என்று சரவணனின் கையைப் பிடித்து இறுக்கமாய்க் குலுக்கினார். என் கையை லேசாக. பின்னர் அலுவலகத்துக்குள்ளேயே அவர் தங்கியிருந்த ஒரு அறைக்கு எங்களைக் கூட்டிச் சென்றார்.

நான் ஒரு ஓரமாய் உட்கார்ந்து அங்கே கிடந்த பாக்யா வார இதழைப் புரட்ட ஆரம்பிக்க, அவர்களிருவருக்குமிடையே குதூகலமாக உரையாடல் தொடர்ந்தது. நான் சிரிப்பைக் கஷ்டப்பட்டு அடக்கிக்கொண்டு உட்கார்ந்திருந்தேன்.

சந்திரன்: “எப்படி உங்களுக்கு இந்த மாதிரி கதைக்கரு எல்லாம் தோணுது?”

சரவணன் (என்னை ஓரக்கண்ணால் பார்த்தபடியே): ”எல்லாம் அப்பப்ப அப்படி அப்படியே தோணும்! எழுதிருவேன்..”

சந்திரன்: ”நிறைய எழுதியிருப்பீங்க போல.. உங்க எழுத்துல ரொம்ப முதிர்ச்சி தெரியுது.”

சரவணன்: “இல்ல இது என் முதல் கதைதான். போனாப் போகுதுன்னு ஏதோ போட்டிருக்காங்க போல கல்கியில..”

சந்திரன்: சேச்சே.. அது அருமையான கதைங்க. திரும்பத் திரும்பப் படிச்சேன்.. என்ன இருந்தாலும் உங்களுக்குத் தன்னடக்கம் ஜாஸ்தி..”

இப்படியே மேலும் ஒரு பத்துப் பதினைந்து நிமிடங்களுக்கு சந்திரன் வீசிய கலை இலக்கிய பந்துகளை சரவணன் சரமாரியாக சமாளித்துக் கொண்டிருந்தான்.

சந்திரன் சட்டென்று “தி.ஜா படிச்சிருக்கீங்களா? நாஞ்சில் நாடன்? நம்மூருதாங்க அவரு” என்பது போன்ற டஃப்ஃபான கேள்விகளின்போது திருதிருவென்று முழித்து பிறகு ஒருவாறு சமாளித்து “பின்னே படிக்காம? என்னமா எழுதுவாங்க!” என்றான்.

சந்திரன்: “நாவல், தொடர்கதை எல்லாம் எழுதற ஐடியா இருக்கா? இல்லை சிறுகதைகள் மட்டும்தானா?”

“எழுதிட்டாப் போச்சு? என்னடா எளுத்தாளர் சித்ரன்.. என்ன சொல்ற!..” என்றான் என்னைப் பார்த்து. ”இந்தா.. இடத்தை மாத்திக்கலாம்.. இதுக்கு மேல முடியல..” என்று எழுந்தான்.

நான் பாக்யாவிலிருந்து நிமிர்ந்து சந்திரனைப் பார்க்க, அவர் புரியாமல் எங்களிருவரையும் மாறி மாறிப் பார்த்தார்.

நான் சிரித்தபடி “ஒரு சுவாரஸ்யத்துக்கு ஒரு சின்ன விளையாட்டு விளையாடலாம்னு நினைச்சோம்.. நாந்தான் சித்ரன். அவன் சரவணன். ஸாரி..” என்றேன்.

புரியாமையிலிருந்து குழப்பத்துக்குள் விழுந்து, சந்தேகத்துக்கு மாறி, ஏமாற்றத்தைத் தொட்டு பின் சட்டென்று விடுபட்ட சந்திரன் முகம் போன போக்கை விவரிக்கவே முடியாது.

”இவந்தான் இந்த ஐடியாவைச் சொன்னான். என்னைத் திட்டாதீங்க..” என்று சரவணன் என்னைக் கை காட்ட..

சந்திரன் உடனே சமாளித்துச் சிரித்து “அதான பாத்தேன்..  ஆரம்பத்திலிருந்தே எனக்கு ஏதோ சரியில்லைன்னு பட்டுச்சு..” என்றார்.

சுட்டது யார்?

மேட்டுப் பாளையம் மெயின் ரோட்டிலிருந்து ராமசாமிக் கவுண்டர் தோட்டம் வழியாக நாங்கள் முன்பு குடியிருந்த திருமுருகன் நகருக்குக் குறுக்கு வழி இருந்தது. பொது வழி அல்ல என்று போர்டு போட்டிருந்தாலும் நடக்கிறவர்கள் நடந்துகொண்டுதான் இருந்தார்கள். முதலில் பரந்து விரிந்த ஒரு ரோஜாத் தோட்டம் இருக்கும். கோவை பூமார்க்கெட்டுக்கு அங்கிருந்து நிறைய சப்ளை உண்டு. அதைத் தாண்டி நடந்தால் அப்புறம் கவுண்டர் வீடும் அதையொட்டின வாழைத் தோட்டமும் இருக்கும், அங்கிருந்து ஒரு தென்னந்தோப்பின் நிழல் சூழ்ந்த மண்பாதை ஆரம்பமாகும். அதெல்லாம் நான் நிறைய ரசித்து ரசித்து நடந்த வழிகள். அதிகம் ஆட்கள் நடமாட்டமற்ற தனிமையில் இத்தனை தூரம் கடந்து வந்தால் பிறகு அந்தப்பக்கம் இருக்கிற காலனியை தன் அடர்த்தியால் மறைக்கிற ஆளுயர சோளக்காடு. அதற்குள் புகுந்து நடக்க வேண்டும். சோளம் நன்றாய் வளர்ந்திருந்தால் ஒரு ஆள் நடக்கிற வழி மட்டுமே இருக்கும். இரவானால் அந்த வழியே நடப்பதானால் கொஞ்சம் ரிஸ்க்தான். துளி வெளிச்சம்கூட இல்லாத இருளடடைந்த அந்தச் சோளக்காட்டின் நடுவேயான ஒற்றையடிப்பாதையில், காலடியில் ஊரும் பாம்புகளை பயத்துடன் தவிர்த்து நடக்கையில் எதற்காக அப்பா இப்படியொரு காலனியில் வீடு பார்த்தார் என்று கோபமாய் வரும். வழியில் நடுவில் ஒரு பெரிய ஒற்றை வேப்பமரமும், அதனடியில் ஒரு பாம்புப் புற்றும் உண்டு. இப்படி ஒரு பெரிய நகரத்துக்கு நடுவில் இந்த கிராமிய சூழ்நிலை தாண்டி திடீரென்று ஒரு காலனி விரிவது கொஞ்சம் வியப்பாய்தான் இருக்கும். தள்ளித் தள்ளி தனித்தனி வீடுகள் கொண்ட காலனி.

அது ஒரு நல்ல வீடு. அப்பாவின் ட்ரான்ஸ்ஃபர் பந்தாடல்களுக்கு நடுவில் நாங்கள் இருக்க நேரிட்ட இன்னொரு ஜாகை. எனக்கு மிகவும் பிடித்த வீடு அது. முன்னால் வட்டவடிவில் ஒரு சிட் அவுட், சின்ன தோட்டத்துடன் கொஞ்சம் அழகாகத்தான் இருக்கும். வீட்டின் பின்புறமும் உபரி ரம்மியமாய் கொஞ்சம் தென்னந்தோப்புகள், அதன் பின் புலத்தில் நீல நிறத்தில் ஒரு குட்டி மலைத்தொடர்.

அன்றைக்கு எதற்கோ வேலைக்கு லீவு போட்டு வீட்டில் இருந்தேன். ஒரு நல்ல வெயிலடிக்கிற பகல் பொழுது அது. எதேச்சையாக வீட்டு ஜன்னலின் வழியே பார்வை ஓட்டியபோது அவர்களைக் பார்த்தேன். இரண்டு பேர் என் வீட்டுக்கு எதிரில் நின்றிருந்தார்கள். அவர்கள் என் வீட்டைச் சுட்டிக்காட்டி என்னவோ பேசிக்கொண்டிருக்கிறார்கள். நான் வெகுநேரம் அவர்களைக் கவனித்துக்கொண்டிருந்தேன். யார் அவர்கள்? என்ன பேசுகிறார்கள்? என்று புதிராய் இருந்தது. அதில் ஒரு ஆள் லேசாய் வீட்டருகில் வந்து சுற்றுமுற்றும் பார்வையால் அளந்துவிட்டு பின் மறுபடி இன்னொரு ஆளிடம் போய் என்னவோ சொல்வதைப் பார்த்தேன். எனக்கு லேசாய் சந்தேகமாய் இருந்தது. பின்னர் இருவருமாக மேலும் நெருங்கி மறுபடி வீட்டை நோட்டம் பார்க்க ஆரம்பித்தார்கள். நான் இருக்கக் கொள்ளாமல் டக்கென்று கதவு திறந்து வெளியே வந்தேன்.

என்னைப் பார்த்ததும் அவர்கள் மையமாய் சிரித்தார்கள். நான் சிரிக்காமல், யார் நீங்க? என்ன வேணும்? என்றேன்.

"விஜய் டி.விக்காக ஒரு சீரியல் ஷூட்டிங் பக்கத்துல நடந்துட்டிருக்கு தம்பி. நாங்கதான் அதுக்கு ப்ரொடியூசர்ஸ். உங்க வீடு அமைப்பு நல்லா இருக்கு. இங்க ரெண்டு மூணு ஷாட்ஸ் எடுக்கலாமான்னு டிஸ்கஸ் பண்ணிட்டு இருந்தோம்." என்றார் ஒருவர். ஓஹோ என்றேன் நான். அவர்கள் வீட்டுக்கு எதிரில் நின்று உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தது சந்தேகம் வரவழைத்ததைச் சொன்னேன். சிரித்தார்கள்.

"சொல்லுங்க தம்பி ரெண்டு மூணு சீன் இங்க எடுத்துக்கலாமா?" என்றார். எனக்கு என்ன சொல்வதென்று தெரியாவிட்டாலும் கொஞ்சம் ஆர்வமாய்த்தான் இருந்தது. 'தேவர் மகன்' ஷூட்டிங் யூனிட்டுடன் பொள்ளாச்சி சூலக்கல், ஊத்துக்குளி வட்டார படப்பிடிப்பிலெல்லாம் மூன்று நாட்கள் அலைந்தது ஞாபகம் வந்தது. ஆஹா இப்போது என் வீடே படப்பிடிப்புத்தளமாகிவிட்ட பாக்கியம் கிடைத்துவிட்டது. இதோ நான் அனுமதித்தால் விஜய் டி.வி.யில் என் வீடு தெரியும். எனக்கு பயங்கர திரில்லாகிவிட்டது. அப்பா ஆபிஸ் போயிருக்கிறார். அம்மாவிடம் ஓடி விஷயத்தைச் சொன்னேன். அம்மாவுக்கு அது பற்றியெல்லாம் தெளிவான ஞானம் இருக்கவில்லை. என்னமோ நம்மளை தொந்தரவு பண்ணாம நடத்தினாங்கன்னா சரி என்றாள்.

நான் வெளியில் வந்து "ஷாட்ஸ் எடுத்துக்கோங்க ஆனா வீட்டுக்குள்ள எல்லாம் வேண்டாம்" என்றேன் அவர்களிடம். ஒத்துக்கொண்டார்கள். தோ வந்துர்றோம் என்று மறைந்தார்கள். திரும்பி வரும்போது கேமரா, ரிஃப்ளக்டர், லைட்டுகள் சகிதம் ஒரு படையே வந்தது. நடுவில் நடுநாயகமாய் ஆறேழு வீடுகள் தள்ளி குடியிருக்கிற பாலன் குட்டி பளபளவென்று நடந்து வருகிறார். அவர் முகத்தில் ரோஸ் பவுடர், உதட்டில் லேசாய் லிப்ஸ்டிக். ஜெல் போட்டு தலையை படிய வாரி, கோட்டெல்லாம் போட்டிருந்தார். என்னைப் பார்த்து மந்தாரமாய் மேக்கப் கலையாமல் சிரித்தார். விஜய் டி.வி. சீரியலில் அவர்தான் ஹீரோ என்றார். எனக்கு பகீரென்றது. அவருக்கு ஒரு ஐம்பது வயதிருக்கும். அவர் தமிழ் பேசினால் கேரளா பார்டரில் இருக்கிறமாதிரி ஃபீலிங் வந்துவிடும். ஆங்காங்கே மலையாள சமாஜ் ப்ரோக்ராம்களில் நன்றாய் கதகளி எல்லாம் ஆடுவார் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். சரிதான். அவர் கலை ஆர்வம் டி.வி. வரை வந்துவிட்டதுபோலிருக்கிறது என்று நினைத்தேன். நான் ஆவல் மேலிட என்ன கதைங்க? என்றேன்.

துப்பறியும் கதை தம்பி. கொஞ்சம் காமெடியா பண்றோம். சுட்டது யார்னு டைட்டில் என்றார் தயாரிப்பாளர். பின்னர் பரபரவென்று சுற்றுமுற்றும் ஆராய்ந்துவிட்டு. "தம்பி உங்க டேப்ரிக்கார்டரோட ஸ்பீக்கர் கொஞ்சம் கழட்டித் தாங்க வீட்டு வாசல்ல மாட்டணும். கதைப் பிரகாரம் இதுதான் துப்பறியும் நிபுணர் வீடு" என்றார். நான் என்னடா ப்ரொடியூஸர்தான் டைரக்ஷணும் பண்ணுகிறாரா என்று வியந்து கொண்டே கழற்றிக் கொடுத்தேன். அதை வீட்டு வாசலில் தொங்க விட்டார்கள். அதற்கு மேல் ஒரு புலியின் படத்தை ஒட்டினார்கள். பாலன் குட்டி தயாரானார். லைட்ஸ்! கேமரா! ஆக்ஷன். கேமரா ஓட ஆரம்பித்தது. என் வீட்டு ப்ளக் பாயிண்டில் ஒயர்கள் சொருகப்பட்டு பளிச்சென்று 2KVA விளக்கு எரிந்தது. இன்னொரு நடிகர் ஒருவர் எங்கிருந்தோ என் வீட்டு வாசலுக்கு வந்து நின்றார். மிஸ்டர் துளசிங்கம் என்று கூப்பிட்டார். உடனே ஸ்பீக்கரிலிருந்து குரல் வருவது மாதிரி யூனிட்டின் மினி டேப்பிலிருந்து ஒரு புலியின் உறுமல் கேட்டுவிட்டு 'எஸ்.. ஐ ஏம் கமிங்' என்று குரல் கேட்டது. பாலன் குட்டி என் வீட்டுக்குள்ளிருந்து வெளிப்பட்டார். அப்புறம் வந்த ஆளை நோக்கி ஒரு டயலாக் சொல்லவேண்டும்.. "நான்தான் உலகப் புகழ்பெற்ற துப்பறியும் டைகர் துளசிங்கம். நீங்க யாரு?" என்பதுதான் அந்த டயலாக். நான் டைகருக்கும் சிங்கத்துக்கும் என்ன சம்பந்தம் என்று யோசித்துக் கொண்டிருந்தபோது பாலன் குட்டி டையை சரிபண்ணிக்கொண்டு சொன்னார். "நாந்தான் உழகப் புஹழ்பெற்ற துப்பறியும் டைகர் துழசிம்ஹம். நிங்ஙள் யாரு?"

எனக்கு குபீர் என்று சிரிப்பு வந்தது. நல்ல காமெடி சீரியல்தான் போலும். இதே டயலாக்கை திரும்பத்திரும்ப சொல்லி பத்து பன்னிரெண்டு தடவை டேக் எடுத்தார்கள். அவர் வாயில் கடிபட்டு சிங்கமும் புலியும் செத்தே போயிற்று. அப்புறம் எல்லாவற்றையும் கழற்றிவிட்டு, தென்னந்தோப்பில் வில்லனை துளசிங்கம் ஸ்கூட்டரில் துரத்துகிற சீன் எடுக்கப் போய்விட்டார்கள். சுற்றிலும் ஷூட்டிங்கை வேடிக்கை பார்க்க கூடியிருந்த கும்பல் என் வீட்டை ஆச்சரியமாய் பார்ப்பதை கவனித்தேன். மானசீகமாய் நான் காலரைத் தூக்கிவிட்டுக் கொண்டேன். ஷூட்டிங்கெல்லாம் நடந்த வீடு என்றால் சும்மாவா? நான் ஸ்பீக்கரை தூக்கிக் கொண்டு வீட்டுக்குள் போனேன்.

அப்பா வந்தார். விஷயம் கேள்விப்பட்டு என்னை முறைத்தார். பணம் ஏதாவது கொடுத்தார்களா என்றார். நான் இல்லை என்றேன். உடனே போய் E.B மீட்டரைப் பார்த்தார். 2000 வாட்ஸ் பல்புகள் அரை நாள் எரிந்ததில் மீட்டர் ரீடிங் எகிறியிருந்தது. அய்யய்யோ இதை நான் யோசிக்கவேயில்லை. அப்பா டென்்ஷனாய் திரும்பி என்னைத் திட்டுவதற்கு தேடும்போது நான் கவுண்டர் தோட்டமெல்லாம் தாண்டி மெயின் ரோட்டுக்குப் பறந்து வந்திருந்தேன்.

சுட்டது யார் என்ற அந்த காமெடி சீரியலை எப்போதாவது யாராவது விஜய் டி.வியில் பார்த்தீர்களா? எங்கள் வீடு தெரிந்ததா? சொல்லுங்க.

ஆட்டோகிராஃப்

ஆட்டோ 1 : ஓரிரு வருடங்களுக்குமுன் நன்றாய் வெயில் கொளுத்துகிற ஒரு மதிய நேரம். நான் மற்றும் என் இரண்டு நண்பர்கள். கோவை சாயிபாபா காலனியில் உள்ள ஒரு ஹோட்டலில் தயிர் சாதமும், எலுமிச்சைச் சாதமும் இருபத்தைந்து பொட்டலங்கள் ஆர்டர் பண்ணிவிட்டுக் காத்திருக்கிறோம். அடுத்தநாள் மதுரையில் நடக்கவிருக்கும் ஒரு நண்பனின் கல்யாணத்துக்கு மதியம் ஒண்ணரை மணி ட்ரெயின் பிடித்து 25 பேர் போகிறோம். எல்லோரும் மதிய உணவை ட்ரெயினிலேயே முடித்துக்கொள்ளலாம் என்று சாப்பாடுப் பொட்டலங்களை ஏற்பாடு செய்ய வேண்டிய பொறுப்பை எங்களிடம் விட்டிருந்தார்கள். பொட்டலங்கள் வந்தன. அவற்றை சேகரித்துக்கொண்டு மணி பார்த்தபோது ஒன்று ஆகியிருந்தது. மீதி 22 பேரும் இந்நேரம் ட்ரெயினுக்கு வந்திருப்பார்கள். நாங்கள் இன்னும் அரை மணிக்குள் ரயில் நிலையம் போக வேண்டும். சரி ஒரு ஆட்டோ பிடித்துக்கொள்ளலாம் என்று முடிவு பண்ணினோம். கைதட்டினவுடன் அரை வட்டமடித்து ஆட்டோ ஒன்று வந்து நின்றது. ஏறிக்கொண்டு எங்கள் அவசரத்தைச் சொன்னோம். நிதானமாய்ப் போனால் போதும் என்றும் உபரியாய் சொல்லி வைத்தோம். ஆட்டோ கிளம்பியது.

ஒரு அரை ஃபர்லாங் கூட போயிருக்கமாட்டோம். ஒரு வளைவில் ஒரு யமஹா பைக்கில் இரண்டு பேர் ஸ்டைலாய் திரும்ப, சட்டென்று அந்தக் குறுக்கீட்டில் சுதாரிக்க முடியாமல் யமஹாவின் மீது டமால் என்று நேருக்கு நேர் மோதல். அப்புறம் நடந்ததை எப்படி வர்ணிப்பதென்று தெரியவில்லை. ஒடித்துத் திருப்பியதில் ஆட்டோ நிலை தடுமாறி சைடில் கவிழ்ந்து, இரண்டு முறை உருண்டு செத்த பல்லி மாதிரி சொத்தென்று தலைகீழாய் வீழ்ந்தது தரையில். நேராய் பார்த்தபோது வானம் தெரிந்தது. ஓ! நான் ஆட்டோவுக்கு அடியில் கீழே கிடக்கிறேன். நெஞ்சுப்பகுதி விலா எலும்பில் வலி உயிர் போகிறது. அலங்கோலமாய்க் கிடந்த எங்கள் மூவரையும் யாரோ வந்து தூக்கிவிட்டார்கள். எனக்குக் கைகால்கள் நடுங்குகின்றன. மண்டையிலிருந்து ரத்தம் வழிய மூர்ச்சையான ஆட்டோ ட்ரைவரைச் சுமந்து கொண்டு இன்னொரு ஆட்டோ ஆஸ்பத்திரிக்கு விரைகிறது. ரோடெங்கும் தயிர்சாத, எலுமிச்சைச் சாத பொட்டலங்கள் சிதறிக்கிடக்கின்றன.

ஆட்டோ 2 : நான். என் நண்பர். அவர் மனைவி, குழந்தை. சென்னை சென்ட்ரலிலிருந்து எங்களைச் சுமந்துகொண்டு தி. நகருக்கு விரைகிறது அந்த ஆட்டோ. ட்ரைவர் அப்போதுதான் ஒரு ஜேம்ஸ்பாண்ட் படம் பார்த்துவிட்டு வருகிறார் போல. கச கசவென்று வாகனங்கள் விரைகிற மெளண்ட் ரோட்டில் முறுக்கிப் பிடித்து அமுக்குகிறார் ஆக்ஸிலேட்டரை. சிக்னல்களில் ஆரஞ்சு விழுந்தாலும் மதிக்காமல் பறக்கிறது ஆட்டோ. சைக்கிள் கேப்பில் ஆட்டோ ஓட்டுவது எப்படி என்பதை அன்றுதான் தெரிந்து கொண்டேன். நண்பர் ட்ரைவரைக் கூப்பிட்டு இரண்டு மூன்று முறை சொல்லிவிட்டார். எங்களுக்கு அவசரமில்லை. மெதுவாகவே போகலாம். அதற்கப்புறம்தான் ஜேம்ஸ்பாண்டுக்கு உற்சாகம் பீறிட்டுவிட்டது. ஆக்ஸிலேட்டரே பிய்ந்துபோகுமளவுக்கு முறுக்க ஆரம்பித்துவிட்டார். முதன் முதலாய் உயிர் பயத்தை மிகவும் உணர்ந்தது அன்றுதான் எனலாம். ஒரு ரோலர் கோஸ்டர் சவாரிக்கு ஈடான த்ரில் அடி வயிற்றில் பந்தாய் உருள்கிறது. சரி! இந்தாள் பாச்சா உஸ்மான் ரோடு வந்தால் பலிக்காது. அங்கே நெரிக்கிற ட்ராஃபிக்குக்கு வேகத்தைக் குறைத்தே ஆகவேண்டும். ஆனால் நாம் வாழ்க்கையில் தப்புக்கணக்குப் போடுகிறோம்.

உஸ்மான் ரோடு வந்ததும் ட்ரைவர் நாங்கள் மயிர்க்கூச்செரியும் வகையில் ஒரு காரியம் செய்தார். அவர் இருக்கையிலிருந்து டக் என்று எழுந்து நின்று ஓட்ட ஆரம்பித்தார். வளைந்து வளைந்து லாவகமாய் வழியில் நிறைய பேருக்கு உயிர்ப்பிச்சையிட்டபடி ஆட்டோ பாய்கிறது. ஒரு வழியாய் தப்பித்து வீடு வந்து சேர்ந்தோம். நண்பர் 'நீ ஓட்டின ஓட்டுக்கு இவ்வளவுதான் கொடுக்க முடியும்' என்று சொல்லிவிட்டு பேசினதில் பாதித் தொகையை மட்டும் கோபத்துடன் அவனிடம் வீசி விட்டு திரும்பி வீட்டுக்குள் போய்விட்டார். கொஞ்ச நேரம் புலம்பிக்கொண்டிருந்துவிட்டு ஆட்டோ அரைவட்டம் போட்டுத்திரும்பிப் போனது.

ஆட்டோ 3 : மறுபடியும் சென்ட்ரலிலிருந்து ஒரு பயணம். இந்தத் தடவை என் அக்கா குடும்பம். இரண்டு குழந்தைகள். இந்த ஆட்டோ ட்ரைவர் இன்னொரு ஜேம்ஸ்பாண்டு. சீறிப் பாய்ந்து கிளம்பிய அந்த ஆட்டோவின் ட்ரைவர் எங்களை கதிகலங்க வைக்கப் பண்ணின முதல் காரியம் சர் என்று ஒரு ஒருவழிப் பாதைக்குள் புகுந்தது. எதிர் வரும் வாகனங்கள் நிலைதடுமாறி ஒதுங்க.. ஆட்டோ ட்ரைவருக்கு எந்தக் கவலையுமில்லை. நான் அவரைக் கூப்பிட்டு சொல்லவேண்டியதைச் சொல்லிவிட்டேன். ஆனால் வேகத்தை துளியேனும் குறைப்பது அவமானமாய் போய்விடும் என்று நினைத்தார் போலும். மேலும் திடீரென்று ஹாண்டில் பாரிலிருந்து இரண்டு கையையும் விட்டு சர்ட் காலரை ஸ்டைலாய் இழுத்துவிட்டுக்கொண்டார். பிறகு ஒரு பான்பராக் பாக்கெட்டை லாவகமாய் பிரித்து வாயில் அடக்கினார். ஆட்டோ ஏதோ ஒரு சக்திக்குக் கட்டுப்பட்டார்போல அதுபாட்டுக்கு தேமே என்று போய்க்கொண்டிருக்கிறது. நான் மற்றும் என் அக்கா குடும்பம் கிடைத்த கம்பிகளையெல்லாம் இறுகப் பற்றிக்கொண்டு பேச்சு மூச்சற்றுப்போய் உட்கார்ந்திருந்தோம். போக்குவரத்து விதிகள் என்று என்னென்ன இருக்கிறதோ அது அத்தனையையும் ஒன்று விடாமல் மீறின ஒருத்தனை அன்றுதான் பார்த்தேன். ராயப்பேட்டை பாலம் தாண்டின அந்தப் பெட்ரோல் பங்க் அருகில் இன்னொரு ஆட்டோ பெட்ரோல் போட சரேலென்று திரும்ப ட்ரைவர் நிதானமிழந்து ஆட்டோவைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியடைந்து.. டமார் என்று நேருக்கு நேர் மோதி.. அதன் தாக்கத்தில் ஆட்டோ இடப்பக்கம் சாய்ந்து கிட்டத்தட்ட கவிழப்போய் பின் என்ன நினைத்ததோ இரக்கம் கொண்டு பழைய நிலைக்கே ஆடி நின்றது. அன்று குழந்தைகள் இருவரும் கத்திய கத்தல் இன்னும் காதுக்குள்ளேயே எதிரொலித்துக் கொண்டிருக்கிறது.

எனக்கு வாய்த்த இன்னும் சில மோசமான ஆட்டோ அனுபவங்களை இங்கே சொல்லவில்லை. எனக்கு மட்டும்தான் இப்படி வாய்த்ததா என்றும்கூட நினைத்ததுண்டு. குறிப்பாய் சென்ட்ரலிலிருந்து வேறு வேறு திசைகளுக்குப் பயணிக்கிற ஆட்டோக்கள் மட்டும்தான் இப்படியிருக்கிறதோ என்று ஒரு சந்தேகமும் உண்டு. திரும்பி வந்து அடுத்த ட்ரெயினிலிருந்து இறங்குகிற கூட்டத்திலிருந்து சவாரி பிடிப்பதற்கான அவசரம்தான் அவர்களை இவ்வளவு வேகமாக ஓட்டத் தூண்டுகிற காரணம் என்று நினைக்கிறேன். என்றாலும் குடும்பமாய் குழந்தைகளையும், லக்கேஜையும் சுமந்துகொண்டு நம்பிக்கையாய் பயணம்போகிறவர்களின் உணர்வுகளை ஏன் இவர்கள் கண்டுகொள்வதே இல்லை என்று புரியவில்லை. ஒரு நிதானத்துடன், பயணிகளின் மற்றும் சாலையில் நடக்கிறவர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு ஓட்டும் ஆட்டோ ட்ரைவர்கள் ரொம்பக் குறைவே என்று தோன்றுகிறது. ஒரு அவசரத்துக்கும் செளகரியத்துக்கும் நாம் தேர்ந்தெடுக்கும் இந்த ஆட்டோப் பயணம் காசையும் கொடுத்துவிட்டு கலவரத்தை அடிமடியில் கட்டிக்கொண்டு போகும் விஷயமாகவே படுகிறது. மற்ற ஊர்களில் எப்படி என்று தெரியவில்லை. நிஜமாகவே அட்வெஞ்சரில் ஆர்வமுள்ளவர்கள் இங்கே ஒரு சில ஆட்டோக்களை முயன்று பார்க்கலாம்.

"சார் ஆட்டோ வேணுமா?" என்று குரல் கேட்டால் இப்போதெல்லாம் வேகமாய் திரும்பி நடந்துவிடுகிறேன்.