அவர்

எதிர் ஃப்ளாட் பெரியவர் இறந்துவிட்டார். மற்ற ஃப்ளாட்வாசிகள் அறியாதவண்ணம் இன்று பல்ஸ் குறைந்து கடைசி கணத்தை மவுனமாகவோ சிரமமாகவோ வாழ்ந்து முடித்துச் சென்றுவிட்டார்.

நான் இதுவரை அவரைப் பார்த்ததில்லை.

எதிர்க்கதவாக இருப்பதனால், சென்று துக்கம் விசாரித்து வருதல் நாகரிகம் என்பதால் சென்றேன். பெரியவர் 10 சதவிகிதம் கண்கள் திறந்த நிலையில் அமைதியாய் கண்ணாடிப் பெட்டிக்குள் படுத்திருந்தார். நல்ல உயரம். நார்மலான உடம்பு. ரொம்ப நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் கஷ்டப்பட்டுவந்தது போன்ற தோற்றம் எதுவும் இல்லாமல் முகத்தில் மிஞ்சியிருந்த சிறு தேஜஸ்.

அவரது மகனிடம் ‘ஐயம் சாரி.. எத்தனை மணிக்கு இறந்தார்?” என்றேன். சம்பிரதாயமான கேள்வி.

‘டூ. தர்ட்டிக்கு! ஆஸ்பத்திரிக்கு எடுத்துட்டுப் போனோம். ஐ டவுட்.. வீட்லயே மூச்சு நின்னிருக்கும்னு..”

சம்பிரதாயமான பதில்.

”என்ன வயசு அவருக்கு?”

”எய்ட்டி ஒன்!”

மேலும் ஓரிரு சம்பிரதாயமான கேள்விகளைக் கேட்டுவிட்டு ”ஏதாவது உதவி தேவைன்னா தயங்காம சொல்லுங்க சார்..” என்று சொல்லிவிட்டு, கண்ணாடிப் பெட்டியருகே நின்று மனசுக்குள் மரியாதை செலுத்திவிட்டு வந்துவிட்டேன்.

மொத்தமாய் ஐந்து நிமிடங்களுக்குள் எனது கடமை முடிந்துவிட்டது.

ஒருவர் காலமாகிவிட்டார் என்கிற ஆர்ப்பாட்டங்கள் ஏதுமில்லாமல் அமைதி காத்து நிற்கிறது அப்பார்ட்மெண்ட். ஷாமியானா இல்லை. சங்கு இல்லை. தென்னை ஓலைகள் கிடையாது. மடக்கு நாற்காலிகள் இல்லை. ஒப்பாரி அழுகை இல்லை. அதிகமாய் யாருக்கும் அவர் இருந்ததும் தெரியாது. இறந்ததும் தெரியாது.

உறவினர்களின் வருகையைத் தெரிவிக்கும் ஏழெட்டு ஜோடி செருப்புகள் மட்டும் கதவின் முன்னால். ’சாப்பிடாம இருக்காதீங்கோ. ரெண்டு இட்லியாவது சாப்பிடுங்கோ. பையன்ட்ட வாங்கிட்டு வரச் சொல்றேன்’ என்று யாரோ யாரிடமோ சொல்லிக்கொண்டிருந்தார்கள்.

இந்த மரணத்தினால் இம்மி அளவு கூட இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படாமல் மற்ற ஃப்ளாட்டுகளில் டி.வி. சீரியல் சப்தங்கள், தாளிக்கும் வாசனை, சின்னப்பையன்கள் விளையாடும் உற்சாகக் குரல்கள், லிஃப்ட்டின் கிராதி கேட்டை அறைந்து மூடும் சப்தம். எஃப். எம் ரேடியோ.

நாளைக் காலை ஃப்யூனரல் சர்விஸ் மாருதி ஆம்னி வந்து அமைதியாய் எடுத்துப் போய் எலெக்ட்ரிக் க்ரிமடோரியத்தில் இறுதி அஞ்சலி முடிந்துவிடும்.

அபார்ட்மெண்ட் சுவர்களுக்குள் அடைபட்ட நகரமயமாக்கப்பட்ட வாழ்வு உறுத்தல்களற்றுத் தொடரும்.

9 comments:

 1. யதார்த்தத்தை பிரதிபலிக்கும் பதிவு. நாம் ஏன் இப்படி மாறிக்கொண்டிருக்கிறோம்?

  ரேகா ராகவன்.
  (now at Los Angeles)

  ReplyDelete
 2. சித்ரன்ஜி, வரவு, உரவு, பிரிவு அனைத்தும் இப்போது இப்படி தான் சம்பிரதாயம் ஆகி விட்டது. இதையும் தாண்டி ஆர்ப்பாட்ங்கள் இருந்தால், கவனியுங்கள் அது பெரும்பாலும் செயற்க்கையாக இருக்கும்.

  ReplyDelete
 3. மற்ற ப்ளாட்வாசிகள், குறைந்த பட்சம் டி.வி-ஐயாவது அணைத்து வைக்கலாம். மற்றவரைப் பற்றிய எண்ணங்கள் அடியோடு வற்றிப் போவது, எதிர்காலத்தில் எத்தகைய சந்ததியை உருவாக்கும் என்று கவலையாக இருக்கிறது.

  ReplyDelete
 4. வாழ்க்கை ஓடும் ஓட்டத்தில், எதைப்பற்றியும் சிந்திக்கும் நிலையில் எவரும் இல்லாமல் போகிறது வருந்தத்தக்கது. உங்களுடன் சேர்ந்து ஒரு இறுதிச்சடங்கிற்க்கு சென்ற அனுபவம் கிடைகிறது இதனை படிக்கும் போது! மிகவும் யதார்தமாக இருக்கிறது சித்ரன் - இப்படிக்கு குகைமனிதன் - நியாபகம் இருகிறதா??

  ReplyDelete
 5. @anonymous குகை மனிதனை நினைவில்லாமலா? அதுசரி.. குகை மனிதன் வலைப்பதிவு இன்னும் இருக்கிறதா?

  ReplyDelete
 6. அனைவருக்கும் நன்றிகள்.

  ReplyDelete
 7. போன வாரம் சிறந்தப் பதிவு என்பார்வையில, இந்த இடுகைய சேர்த்திருக்கேன்.இந்த இடுகையைச் சேர்த்திருக்கேன்

  ReplyDelete
 8. @இளா: உங்கள் இடுகையைப் பார்த்தேன். மிக்க நன்றி!

  ReplyDelete

இந்தப் பதிவைப் பற்றிய உங்கள் கருத்து?