ஒப்பணக்கார வீதியிலிருந்து ஒரு வாசகர் கடிதம்

95-ல் என் முதல் கதை கல்கி இதழில் வெளியானபோது எனக்கு ஏற்பட்டது புல்லரிப்பு என்றால், அதற்கு வந்த வாசகர் கடிதத்தை என் முகவரிக்கு ஒரு உறையில் போட்டு கல்கி அலுவலகம் அனுப்பிவைத்தது புளகாங்கிதம் என்று சொல்லலாம். கோவை ஒப்பணக்கார வீதியிலிலிருந்து சந்திரன் என்பவர் கதையை வெகுவாகப் பாராட்டி எழுதியிருந்தார். நானும் அப்போது கோவையில்தான் இருந்தேன். முதல் வாசகர் கடிதம் என்பதால் பத்திரமாக ரொம்ப நாள் அது என் பேகிலேயே இருந்தது.

இந்தக் கடிதம் வந்த ஒரு மாதத்திற்குப் பிறகு நானும் என் நண்பன் சரவணனும் ஒரு சாயங்கால வேளையில் ஒப்பணக்கார வீதிப் பக்கம் ஒரு வேலையாகப் போனோம். வேலை முடிந்து ஒரு பேக்கரியில் தேநீர் குடித்துக் கொண்டிருந்தபோது திடீரென்று சந்திரன் என்கிற அந்த வாசகரின் நினைப்பு வந்தது. பேகிலிருந்து அவரின் அந்தக் கடிதத்தை எடுத்து முகவரியைப் பார்த்தால் பக்கத்தில்தான் எங்கேயோ இருக்கிறார் என்று தெரிந்தது. அலுவலக முகவரி போலும். தொலைபேசி எண்ணையும் கொடுத்திருந்தார். சட்டென்று ஒரு யோசனை வந்தது. சரவணனிடம் அதைச் சொன்னபோது முதலில் தயங்கிப் பின்னர் சரி என்றான். ஒரு சின்ன விளையாட்டு!

சரவணன் ஒரு பப்ளிக் டெலிஃபோன் பூத்திலிருந்து சந்திரனைக் கூப்பிட்டு, தன்னை சித்ரன் என்று அறிமுகம் செய்துகொண்டு அவரிடமிருந்து கடிதம் வந்ததைச் சொன்னான். ”உங்க ஏரியாலதான் இருக்கோம். இப்போ வந்தா உங்களப் பாக்க முடியுமா?” என்று கேட்டான். மறுமுனையில் சந்திரன் ”செம சர்ப்ரைஸ்ங்க.. வாங்க வாங்க..” என்றது எனக்கே கேட்டது.

நாங்கள் போனபோது சந்திரன் அவர் அலுவலகத்தில் எங்களுக்காக ஆவலோடு காத்துக்கொண்டிருந்தார். முன்பே பேசி வைத்துக்கொண்டபடி சரவணன் தன்னை ’சித்ரன்’ என்றும் என்னை ’சரவணன்’ என்றும் அறிமுகப்படுத்தினான். ”நீங்க என்னைப் பாக்க வந்தது ரொம்ப சந்தோஷம்..” என்று சரவணனின் கையைப் பிடித்து இறுக்கமாய்க் குலுக்கினார். என் கையை லேசாக. பின்னர் அலுவலகத்துக்குள்ளேயே அவர் தங்கியிருந்த ஒரு அறைக்கு எங்களைக் கூட்டிச் சென்றார்.

நான் ஒரு ஓரமாய் உட்கார்ந்து அங்கே கிடந்த பாக்யா வார இதழைப் புரட்ட ஆரம்பிக்க, அவர்களிருவருக்குமிடையே குதூகலமாக உரையாடல் தொடர்ந்தது. நான் சிரிப்பைக் கஷ்டப்பட்டு அடக்கிக்கொண்டு உட்கார்ந்திருந்தேன்.

சந்திரன்: “எப்படி உங்களுக்கு இந்த மாதிரி கதைக்கரு எல்லாம் தோணுது?”

சரவணன் (என்னை ஓரக்கண்ணால் பார்த்தபடியே): ”எல்லாம் அப்பப்ப அப்படி அப்படியே தோணும்! எழுதிருவேன்..”

சந்திரன்: ”நிறைய எழுதியிருப்பீங்க போல.. உங்க எழுத்துல ரொம்ப முதிர்ச்சி தெரியுது.”

சரவணன்: “இல்ல இது என் முதல் கதைதான். போனாப் போகுதுன்னு ஏதோ போட்டிருக்காங்க போல கல்கியில..”

சந்திரன்: சேச்சே.. அது அருமையான கதைங்க. திரும்பத் திரும்பப் படிச்சேன்.. என்ன இருந்தாலும் உங்களுக்குத் தன்னடக்கம் ஜாஸ்தி..”

இப்படியே மேலும் ஒரு பத்துப் பதினைந்து நிமிடங்களுக்கு சந்திரன் வீசிய கலை இலக்கிய பந்துகளை சரவணன் சரமாரியாக சமாளித்துக் கொண்டிருந்தான்.

சந்திரன் சட்டென்று “தி.ஜா படிச்சிருக்கீங்களா? நாஞ்சில் நாடன்? நம்மூருதாங்க அவரு” என்பது போன்ற டஃப்ஃபான கேள்விகளின்போது திருதிருவென்று முழித்து பிறகு ஒருவாறு சமாளித்து “பின்னே படிக்காம? என்னமா எழுதுவாங்க!” என்றான்.

சந்திரன்: “நாவல், தொடர்கதை எல்லாம் எழுதற ஐடியா இருக்கா? இல்லை சிறுகதைகள் மட்டும்தானா?”

“எழுதிட்டாப் போச்சு? என்னடா எளுத்தாளர் சித்ரன்.. என்ன சொல்ற!..” என்றான் என்னைப் பார்த்து. ”இந்தா.. இடத்தை மாத்திக்கலாம்.. இதுக்கு மேல முடியல..” என்று எழுந்தான்.

நான் பாக்யாவிலிருந்து நிமிர்ந்து சந்திரனைப் பார்க்க, அவர் புரியாமல் எங்களிருவரையும் மாறி மாறிப் பார்த்தார்.

நான் சிரித்தபடி “ஒரு சுவாரஸ்யத்துக்கு ஒரு சின்ன விளையாட்டு விளையாடலாம்னு நினைச்சோம்.. நாந்தான் சித்ரன். அவன் சரவணன். ஸாரி..” என்றேன்.

புரியாமையிலிருந்து குழப்பத்துக்குள் விழுந்து, சந்தேகத்துக்கு மாறி, ஏமாற்றத்தைத் தொட்டு பின் சட்டென்று விடுபட்ட சந்திரன் முகம் போன போக்கை விவரிக்கவே முடியாது.

”இவந்தான் இந்த ஐடியாவைச் சொன்னான். என்னைத் திட்டாதீங்க..” என்று சரவணன் என்னைக் கை காட்ட..

சந்திரன் உடனே சமாளித்துச் சிரித்து “அதான பாத்தேன்..  ஆரம்பத்திலிருந்தே எனக்கு ஏதோ சரியில்லைன்னு பட்டுச்சு..” என்றார்.