கிழித்த கதை


ஷெல்ஃப்பில் எதையோ தேடிக்கொண்டிருந்தபோது ஒரு பழைய கிழிந்த லெதர் பை ஒன்றில் ஒரு கத்தையாக கொஞ்சம் சிறுகதைகள் கிடைத்தன. பதினைந்து வருடங்களுக்கு முன் குமுதம், விகடன், சாவி இதழ்களிலிருந்து கிழித்துத் சேர்த்துவைத்த சிறுகதைகள். கொத்துக் கொத்தாக ஸ்டேப்ளர் செய்யப்பட்டு ‘பைண்ட் செய்து வைக்கவேண்டும்’ என்கிற எண்ணம் வருடக்கணக்கில் புறக்கணிக்கப்பட்டு, தாள்கள் பழுப்பேறிச் சிதைந்து, திறந்ததும் குப்பென்று மூச்சுத் திணறவைக்கும் நெடியுடன் கிடந்தன.

குமுதத்திலும், விகடனிலும் சிறுகதைகள் அதிக அளவில் வெளியிடப்பட்டுக் கொண்டிருந்த பொற்காலம் அது. சுஜாதா, பாலகுமாரன், சுபா முதற்கொண்டு பிரபல எழுத்தாளர்கள் அனைவரும் மானாவாரியாக எழுதிக்கொண்டிருந்த நேரம். பொதுவாகவே சிறுகதைகள், தொடர்கதைகள் படிக்கிற ஆர்வத்துடன் ஒரு கூட்டமாக நாங்கள் (நான், சரசுராம், மீனாட்சி சுந்தரம், ஷாராஜ், கனகராஜன்) அலைந்துகொண்டிருந்தோம். கதைகளைப் படிப்பதும், படித்தபிறகு அவைகளைப் பற்றியும், கதாசிரியர்களைப் பற்றியும் பெருமளவில் விவாதித்துத் திரிந்த நாட்கள் ரம்மியமானவை.

சுமார் அறுபது கதைகள். சிறந்த சிறுகதைகள் என்று கிழித்து வைத்துக் கொண்டதா என்று கேட்டால் தெளிவாக நினைவில்லை. நல்லதாய் ஒரு சிறுகதையை எப்படி எழுதுவது என்கிற தேடலில் இந்த மாதிரி நிறைய கிழித்து வைக்கிற பழக்கம் எங்கள் எல்லோருக்கும் இருந்தது. இதில் சிறுகதை, குறுந்தொடர், நாவல் எல்லாம் அடங்கும். அரஸ்-ஸின் அட்டகாச ஓவியங்களுக்காகவே சுஜாதாவின் என் இனிய இயந்திராவையும், மீண்டும் ஜீனோவையும், அப்புறம் கோவி மணிசேகரன் நாவல் ஒன்றையும் கிழித்துச் சேர்த்திருந்தேன். கமலஹாசன் ஸ்டில்லுகளுக்காக விக்ரம் தொடர். இது மாதிரி நிறைய. என்னிடமிருக்கிற இந்த கதைக் கொத்தை கிழித்துத் தொகுத்தவர் சரசுராம். எப்படியோ கைமாறி என்னிடத்தில் வந்து கிடக்கிறது.

இந்த சேகர சாகரத்தில் என்னதான் இருக்கிறதென்று மூச்சை இறுக்குகிற நெடியை பொறுத்துக் கொண்டு திறந்து பார்த்தேன். பெரும்பாலும் சிறுகதைகள்தான் இருந்தன. “என் பெயர் அருண்குமார்” என்ற சாருப்ப்ரபா சுந்தரின் (நான் விரும்பிப் படித்த எழுத்தாளர் இவர்) தொடர்கதை. பாலகுமாரன், மாலனின் ஒரு சில கதைகள். அப்புறம் ராஜேஷ்குமார், சுபா, சுப்ரபாரதிமணியன், தனுஷ்கோடி ராமசாமி, சு. சமுத்திரம், பிரதிபா ராஜகோபாலன், அனுராதா ரமணன், பட்டுக்கோட்டை பிரபாகர் ஆகிய எல்லோரும் அடக்கம்.

நாகா என்றொரு எழுத்தாளரின் சில கதைகள். கே.சித்ராபொன்னி என்பவரின் கதைகள் நிறைய இருந்தன. (இப்போது எழுதுகிறாரா?) பா.ராகவனின் கதை ஒன்று. அதுதவிர பெரும்பாலான கதைகள் அதிகம் பிரபலமாகாத, பெயர் கேள்விப்படாத எழுத்தாளர்களால் எழுதப்பட்டிருந்தது. தமிழிணி, இள.அழகிரி, ஜெரா, தார்க்‌ஷியா இப்படியாக. பவதாரிணி என்பவர் எழுதிய ரூ.5000 பரிசு பெற்ற கதை ஒன்றும் இருந்தது.

வித்யா சுப்ரமணியம், எஸ்.பி. ஹோசிமின், சங்கர்பாபு, திருவாரூர் பாபு போன்ற அடிக்கடி கண்ணில் படுகிற எழுத்தாளர்களும் இந்தக் கலெக்‌ஷனில் ஒளிந்திருந்தார்கள். இதில் பரசுராம் பிஸ்வாஸ் என்றொரு எழுத்தாளரும் இருக்கிறார். இவர் குமுதத்தில் விகடனில் ‘புதிய ஆத்திச்சூடி கதைகள்’ என்று ஒரு தொடர் எழுதிக்கொண்டிருந்தார். குமுதத்தில் விகடனில் பணிபுரிகிற யாரோ ஒருவர்தான் (அல்லது பலர்) இந்த புனைபெயரில் எழுதிக்கொண்டிருந்தார்(கள்) என்றொரு அரசல் புரசல் இருந்தது. யாராக இருந்தாலும் அற்புதமாய் எழுதிக்கொண்டிருந்த எழுத்தாளர் இவர்.

ஜெ, அரஸ், ம.செ, மாருதி, ராமு, கரோ போன்ற ஓவியர்கள் இந்தக் கதைகளுக்கு படம் வரைந்திருந்தார்கள். மருது, ஜி.கே.மூர்த்தி, ஸ்யாம் கூட இருந்தார்கள். அட்டகாசமாக வரைந்துகொண்டிருந்த அரஸ்-ஸூக்கு ஒரு கட்டத்தில் என்ன ஆயிற்று என்றே தெரியவில்லை. திடீரென்று கானா மூனாவென்று வரைந்து தள்ள ஆரம்பித்தார். இந்த இடைவெளியில் கச்சிதமாக உள்ளே நுழைந்தவரான கரோவும் (கிட்டத்தட்ட அரஸ் சாயலிலேயே) சளைக்காமல் எண்ணற்ற கதைகளுக்கு அருமையாய் படம் வரைந்து தள்ளிக் கொண்டிருந்தார். இன்னும் சில வருடங்கள் வைத்திருந்தால் உடைந்து உதிர்ந்துவிடும் என்பதுபோல் வெடவெடவென்றிருக்கிற இந்த சாணிப் பேப்பர்களில் இந்த ஓவியர்களின் பழைய ஓவியங்களை மறுபடி பார்க்கக் கிடைப்பது அழகான விஷயம்.

ஆதவனின் ’புறாக்கள் பறந்து கொண்டிருக்கும்’ என்கிற கதை இரண்டு பாகங்களாய் இந்தத் தொகுப்பில் இருக்கிறது. ஆதவனின் சிறுகதைகள் அனைத்தையும் திரட்டி “ஆதவன் சிறுகதைகள்’ என்கிற புத்தகமாக கிழக்கு பதிப்பகம் வெளியிட்டபோது இந்தக் கதையும் இருக்கிறதா என்று பா.ராகவனிடம் ஒருமுறை கேட்டது நினைவுக்கு வந்தது. அதிகபட்சமாக எல்லாக் கதைகளையும் முடிந்தவரை திரட்டிப் போட்டுவிட்டதாக அவர் சொன்னார். அந்த தொகுப்பிலிருக்கும் “புறா” என்கிற கதைதான் இது என்று ரொம்ப நாளாய் நினைத்திருந்தேன். ஆனால் இப்போது எடுத்துப்பார்த்தபோது அதுவும் இதுவும் வேறு என்பது தெரிந்தது.

வியாபார மயமாகிப் போன பிரபல பத்திரிக்கைகளில் சிறுகதைகள் வெளியிடுவது அரிதாகிப் போன இந்தக் காலத்தில், நைந்து போன இந்தப் பேப்பர் கற்றையை எடுத்துப் பார்க்கும்போது தும்மல் கலந்த பெருமூச்சொன்று வருகிறது. முகத்தில் கர்ச்சீப் கட்டிக்கொண்டாவது இதில் உள்ள கதைகளை மறுபடி பொறுமையாய் உட்கார்ந்து முழுதாய் படித்துப் பார்க்கவேண்டும்.

பையனும் டார்வினும் பின்னே ஞானும்


சென்ற வெள்ளி - சனியில் பன்றிக் காய்ச்சல் எச்சரிக்கைகளையும் மீறி என் பையன் படிக்கும் பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. அவன் படிக்கிற ’நாலாப்பு’ சார்பாக கையில் ஒரு ரிமோட் கண்ட்ரோல் எஸ்கவேட்டர் கொடுத்து ஒரு அறையில் நிற்க வைத்துவிட்டார்கள். கண்காட்சிக்கு வருகை புரிபவர்கள் அவனிருக்கிற குறிப்பிட்ட பகுதிக்கு வந்ததும் "This is called excavator. This is used for digging the trenches, holes... " என்று டீச்சர் சொல்லிக்கொடுத்த ப்ளா ப்ளா-க்களை மள மளவென ஒப்பிக்க வேண்டும். (நானே நான்கு தடவை அவனருகில் போய் நின்று “can you please explain this?" என்று கேட்க சின்ன தயக்கச் சிரிப்புடன் சளைக்காமல் விளக்கினான்)

சரி ஸயின்ஸ் எக்ஸ்போவில் அப்படி என்னதான் இருக்கிறதென்று பார்க்கலாமே என்று போனவனுக்கு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது. சும்மா சொல்லக் கூடாது. டீச்சர்களும், மாணவ மாணவிகளும், பள்ளி நிர்வாகமும் ஒன்று சேர்ந்து அற்புதமாகக் கலக்கிவிட்டார்கள். க்ரவுண்ட் ஃப்ளோரில் சிவப்புக் கம்பளம் விரித்து எல்.சி.டி. டிவியில் நிகழ்ச்சிகளின் வீடியோ விரிய, ஸ்பீக்கரில் இசை முழுங்குகிறது. இதை வந்து பாருங்கள் அதை வந்து பாருங்கள் என்று மாடிப் படிகள் முழுக்க மாணவர்கள் தயாரித்து ஒட்டிய விளம்பர நோட்டீஸ்கள். அலங்கார வளைவுகள். கலை நயம். ஜிகினா.

மெட்ரோ ரயில் சிஸ்டம், ஹைட்ரோ பவர் சிஸ்டம், டெலி கம்யூனிகேஷன் நெட்வொர்க், ரோபோட்டிக்ஸ், ஓரிகமி, டேன்கிராம்ஸ், குளோபல் வார்மிங் என்று ஒரு சப்ஜெக்டையும் விட்டு வைக்காமல் பள்ளிக் கட்டிடத்தின் மூன்று தளங்களிலும் கலக்கலான செட்டப்புகள். முக்கால்வாசி சாதனங்களை தெர்மோகோல், ஃபெவிகால், வாட்டர்கலர் கொண்டே தயாரித்து விட்டார்கள். சின்னச் சின்ன பொடிசுகள் லேப்டாப், ப்ரொஜக்டர்கள் எல்லாம் வைத்துக் கொண்டு விண்டோஸ் மூவி மேக்கரில் தயாரித்த வீடியோ படங்களை இயக்கிக் கொண்டிருந்ததைப் பார்த்தபோது ’ஆச்சரியத்தால் கண்கள் விரிந்தன’ என்று அடிக்கடி இந்த எழுத்தாளர்கள் எல்லாம் எழுதுகிறார்களே அது என்ன என்று புரிந்தது.

ஒவ்வொரு பிரிவிலும் நிற்க வைக்கப்பட்டிருந்த குழந்தைகள் நாம் உள்ளே நுழைந்ததும் போட்டி போட்டுக் கொண்டு “அங்கிள்! (அல்லது ஆண்ட்டி) can I explain this?" என்று கேட்டுவிட்டு ஜெட் வேகத்தில் ஆங்கிலத்தில் குறைந்தது ஐம்பது விநாடிகள் பட்டையைக் கிளப்பிவிட்டு கடைசியில் “தேங்ங்ங்ங்க்க்க்க்க்யூ” என்று ராகம் பாடி முடித்தன. மனப்பாடம் செய்து கொண்டு ஒப்பிக்கிறதுகள் என்றாலும் ஒவ்வொரு டேபிளிலும் பொறுமையாய் அந்த மழலைக் குரல்களை ஓரிரு நிமிடங்கள் கேட்டுக் கொண்டிருப்பது மிகப் பெரிய சுகம். அநியாயத்துக்கு இத்தனை பேர் ’படிப்ஸ்’ஆக இருக்கிறார்களே என்று ஆச்சரியமாக இருந்தது. அதுவும் க்ளோபல் வார்மிங் பற்றி விளக்கின பையனிடம் நான் ஏதோ சந்தேகம் கேட்க. “இட் இஸ் தேர் இன் த இண்டெர்நெட் அங்கிள். யு கேன் டவுன்லோட் இட் ஃப்ரம் தேர்.” என்று முத்தாய்ப்பு வைத்தான். சொல்லி முடித்தபிறகு அவர்கள் நீட்டுகிற Feedback நோட்டுப் புத்தகத்தில் உங்கள் பெயரெழுதி உங்கள் கருத்தை அல்லது பாராட்டை எழுதிக் கொடுத்தீர்களானால் குழந்தைகள் முகத்தில் பொங்குகிற சந்தோஷம் இருக்கிறதே. அப்பப்பா! (சொக்கன் கவனிக்க). நான் நீட்டப்பட்ட நோட்டுகளில் எல்லாம் “excellent presentation" என்று தாராளமாக எழுதிக் கொடுத்தேன். (ஆனால் பாராட்டி கை கொடுத்தால் மட்டும் பன்றிக் காய்ச்சல் பயத்துடன் கையை பின்னுக்கு இழுத்துக் கொள்கிறார்கள். அப்புறம் என்னை நானே திட்டிக்கொண்டு அதை தவிர்க்க ஆரம்பித்தேன்.)

ஆறாங்கிளாஸ் படிக்கிற மூன்று சிறுமிகள் அவர்களின் கிளாஸ்மேட்டுகளான சில வாண்டுப் பையன்களைக் காட்டி “அங்கிள்! கன் வி எக்ஸ்ப்ளெய்ன் அபெளட் தெம்” என்று குசும்புச் சிரிப்புடன் கேட்க, நானும் என்னவென்று புரியாமல் தலையாட்ட, “தெ ஆர் ஆல் மங்கீஸ். தெ ஹவ் எஸ்கேப்ப்டு ஃப்ரம் வண்டலூர் ஜூ. தெ நார்மலி ஈட் பனானாஸ்” என்று கலாய்த்து வெடிச்சிரிப்பு சிரித்தார்கள்.

இதைக் கேட்டதும் ஒரு தடவை என் பையனுக்கும் எனக்கும் இரவு தூக்கம் வருவதற்கு முந்தைய பொழுதில் நடந்த சம்பாஷணை ஞாபகத்திற்கு வந்தது.

நான்: குரங்கிலிருந்து மனுஷன் வந்தான்னு யார் கண்டுபுடிச்சா தெரியுமா?

பையன்: ஆங்... தெரியும். லெஸன்ல இருக்கு. அது வந்து...

நான்: சார்லஸ் டார்வின்

பையன்: ஆ! ஆமா.. டார்வின் தியரி..

நான்: கரெக்ட்டு.. மில்லியன் மில்லியன் வருஷத்துக்கு முன்னால குரங்கா இருந்து அதிலேர்ந்து கொஞ்சம் கொஞ்சமா மனுஷன் வந்தான். அப்போ அவனுக்கு உடம்பு பூரா நிறைய முடி இருந்துச்சு. வால் இருந்துச்சு. கை காலெல்லாம் பெருசு பெருசா இருக்கும். மரத்துக்கு மரம் தாவிகிட்டு இருந்தான். அப்றம் அதெல்லாம் போய் இப்போ பாத்தியா இப்ப என்னை மாதிரி ஆயிட்டான்.

பையன்: (மெளனமாய் சில விநாடிகள் யோசித்துவிட்டு) “அப்ப இதுக்கு முன்னாடி நீ கொரங்கா இருந்தியா?”.

அடுத்த ஜெனரேஷன் பசங்களிடம் கொஞ்சம் அல்ல நிறையவே ஜாக்கிரதையாகத்தான் இருக்கவேண்டும் என்று தோன்றுகிறது.

நடந்த கதை - குறும்படம்

நண்பர் பொன்.சுதா இயக்கியிருக்கிற “நடந்த கதை” என்னும் குறும்படத்தின் திரையிடல் மற்றும் அறிமுக விழா நேற்று மாலை சென்னை தென்னிந்திய திரைப்பட வர்த்தக வளாகத்தில் நடைபெற்றது. இதில் எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன், எழுத்தாளர் சிவகாமி, எழுத்தாளர் அழகிய பெரியவன், தோழர் விடுதலை ராசேந்திரன், ஓசை காளிதாசன் ஆகியோர் கலந்து கொண்டனர். சுமார் 20 நிமிடங்கள் ஓடும் இந்தக் குறும்படம் குறித்தும் பொதுவாக குறும்படங்கள் பற்றியும் நான் எழுதின ஒரு பதிவு சென்னை ஆன்லைன் - தமிழ் வலைத்தளத்தில் வெளியாகியிருக்கிறது.

அதைப் படிக்க இங்கே கிளிக்கவும்: நடந்த கதை

ஓம் சாந்தி!


கடந்த சில நாட்களாக எனக்கு ஒரு பிரச்சினை. அதுவும் எனக்கு அது அடிக்கடி நிகழ்வதாகவும் தோன்றுகிறது. அது என்னவென்றால் யாரையாவது பிடித்து சகட்டு மேனிக்குத் திட்டுவது. இதற்கு முன்பு இப்படி செய்ததற்கு பெரிய முன் அனுபவம் எதுவும் அதிகமாய் இல்லை. இது என் இயல்புக்கு மாறான விஷயமாகவும் கூட அடிக்கடி தோன்றுகிறது. என் இயல்பையும் சுபாவத்தையும் நெருக்கமாய் அறிந்தவர்கள் இதைப் பார்த்தால் நிச்சயம் ஆச்சரியப்படுவார்கள்.

திட்டுவதென்றவுடன் ஏதோ தணிக்கை செய்யப்பட்ட, படாத வார்த்தைகளை இட்டு நிரப்பி, பரம்பரைகளை வம்பிக்கிழுத்து அல்லது பிறப்பு பற்றின சந்தேகங்களைக் கிளப்புகிறேன் என்று தயவு செய்து தவறாக நினைத்துவிடாதீர்கள். சென்னையில் சுமார் எட்டு ஆண்டுகள் வாழ்ந்தும் அந்த அளவு முன்னேற்றத்திற்கு மனதளவில் நான் தயாரில்லை. அதற்காக சும்மா வாய்க்குள் யாருக்கும் கேட்காத மாதிரி முணுமுணுத்துவிட்டு நகர்ந்துவிடுவேன் என்றில்லாமல் நாகரிக உலகில் அங்கீகரிக்கப்பட்ட ஒரு சில சொற்பதங்களுடன் பக்கத்தில் நிற்பவர், நடப்பவர் அல்லது உட்கார்ந்திருப்பவர் என்று எல்லோர் காதிலும் விழுவதுமாதிரி நன்றாக சத்தமாக இரைதல்.

இதன் காரணமாக என்ன மாதிரி விளைவுகள் எனக்கு நேருகிறதென்று சொல்கிறேன். 1. உடலில் ரத்த ஓட்டம் அதிகரித்து நரம்புகள் லேசாக புடைத்துக்கொள்கிறது. 2. நின்றுகொண்டு திட்டுவதென்றால் அநிச்சையாய் நடு நெற்றியை விரல்களால் தீவிரமாகத் தேய்த்துக்கொண்டு குறிவைக்கப்பட்ட எதிராளியை நோக்கி உர்ரென்று ஒரு பார்வையை வீசுதல். 3. ஆப்தல்மாலஜிஸ்ட்-கள் சொல்வது போல கோபத்தில் கருவிழிக்குள்ளே பாப்பா விரிதல் 4. அதிக டென்ஷன் ஏற்படுவதால் லேசாய் பெருமூச்சு வாங்குதல். 5. கோபத்தால் உடலானது இன்னபிற வேதியியல் மாற்றங்களுக்கு உட்படுத்தப்படுதல். 6. சூழ்நிலை மறத்தல்.

எதனால் திட்டவேண்டியிருக்கிறது? கோபம் வருவதால். எதனால் கோபம் வருகிறது? யாரோ என்னவோ செய்வது என்னை பாதிப்பதால். ஆனால் அவையெல்லாம் நியாயமான விஷயங்களுக்கான நியாயமான கோபங்கள் என்று எனக்கு நன்றாய்த் தெரியும். இது கூட வராவிட்டால் அப்புறம் என்ன மனுஷன் நீ என்று என்னை நானே சில நேரம் கேட்டுக்கொள்வதன் பின்விளைவாகத்தான் மேற்படி விஷயங்கள் அரங்கேறுகின்றன. அதைக்கூட பண்ணமுடியவில்லையெனில் இளிச்சவாயன் என்கிற பட்டம் கட்டி அப்படியே கட்டம் கட்டிவிட மாட்டார்களா மக்கள் என்றொரு எண்ணமும் கூடவே எழுகிறது. தவிர நான் புத்தனோ அல்லது புத்தனின் வழியைக் கடைபிடிப்பவனும் அல்லன். மூன்றாம் முறை முகத்தில் அறைந்தால் புத்தனுக்கும் கோபம் வரும் என்று படித்ததில்லையா நீங்கள்?

வாசற்படியில் கட்டிப்போட்டிருக்கிற நாயைக் காட்டி “ஒண்ணும் பண்ணாதுங்க” என்று சொல்கிற மாதிரி நம்மையும் இனியும் யாரும் சொல்லிக் கொண்டிருக்கக்கூடாது என்கிற முனைப்பின் எதிரொலி இது. இவன் ஒரு அப்பாவி, பிள்ளைப்பூச்சி என்கிற மாதிரி பெயர்கள் நமக்கு அடைமொழியாகவோ, புனைபெயராகவோ வந்து சேராமலிருக்கவேண்டுமென்றால் நாம் கிடைத்த சந்தர்ப்பங்களில் குரல் உயர்த்தி நிரூபணம் செய்துகொண்டால்தான் ஆயிற்று இல்லையா?

இப்படிப் புலம்புகிற அளவுக்கு அப்படி என்ன ஆயிற்று? சொல்கிறேன். ஒரு பிரபல மொபைல் மற்றும் இன்டர்நெட் சேவை நிறுவனம் இந்த மாசம் காரணமில்லாமல் உங்கள் பில்தொகையை இரட்டிப்பாக அனுப்புகிறது. காரணம் கேட்டால் கூலாக ‘டெக்னிகல் எர்ரர்’ என்கிறார்கள். நீங்கள் சர்வீஸூக்குக் கொடுத்திருந்த வாகனத்தில் நீங்கள் சொல்லியிருந்த குறைகளை சரியாகச் செய்யாமல் விடுவதுடன் புதிதாக ஒரு சில குறைகளை உண்டுபண்ணி அனுப்புகிறார்கள். நீங்கள் ஒரு எலெக்ட்ரானிக் இசைக்கருவியை சரிசெய்ய ஆழ்வார்பேட்டையிலுள்ள ஒரு சர்வீஸ் சென்டரில் கொடுக்கிறீர்கள். 10 நாட்களாகியும் அவர்களிடமிருந்து எந்தத் தகவலும் இல்லையே என்று, நீங்கள் நேரில் போனபோது அதி முட்டாள்தனமான (அல்லது அதி புத்திசாலித்தனமான) காரியத்தைச் செய்து வைத்திருக்கிறார்கள். உங்கள் அபார்ட்மெண்டில் டூவீலர் ஸ்டாண்டுக்கு நேர் மேலே உள்ள வீட்டின் பால்கனியில் அவர்கள் காகத்துக்காக குழம்பு சோறு வைக்கிறார்கள். (நல்ல விஷயந்தான்) மறுநாள் நீங்கள் குழந்தையுடன் ஸ்கூலுக்கு அவசரமாய் கிளம்பும்போது உங்கள் டூ வீலரைப் பார்த்தால் அது தலையிலிருந்து கால் வரை குழம்பு சோறால் நாறியிருக்கிறது. அதை கழுவ நிச்சயம் ஒரு பக்கெட் தண்ணீர் தேவைப்படும். காக்கைகளின் கைங்கரியம்தான் அது என்றாலும் தப்பு யாருடையது என்று உணர்ந்து நீங்கள் மேலே பால்கனியைப் நிமிர்ந்து பார்க்கிறீர்கள். ரோட்டில் போகும்போது யாரோ செய்த ஒரு சாலை விதிமுறை மீறலுக்காக பக்கத்து வாகனக்காரன் உங்களைப் பார்த்து கைநீட்டி“அறிவேயில்லையா?” என்று கேட்டு விடுகிறான். இன்னொரு பைக்வாலா ஒருவன் அவன் சென்று கொண்டிருக்கிற ஒரு ரோட்டை அவன் முப்பாட்டன் காலத்திலேயே பட்டா போட்டு எழுதிவாங்கிக் கொண்ட மனோபாவத்தோடு பான் பராக் எச்சிலை அண்ணாந்து பாத்து வலப்புறமாகத் துப்ப ஒரு திடீர் ப்ரேக் அடித்து நீங்கள் அந்தச் சாரலிலிருந்து தப்பித்தது மட்டுமல்லாமல் சறுக்கி விழ இருந்த ஒரு பெரும் விபத்திலிருந்தும் அதிர்ஷ்டவசமாகத் தப்பித்து விட்டீர்கள்.

மேற்கண்ட விஷயங்கள் எல்லாம் ஒரு சிறு சாம்பிள் சாஷே பாக்கெட் மட்டுமே. இது போல நிறைய! நிறைய! நிறைய! இவையெல்லாம் இந்த வருஷம் ஆடிக்கு ஒன்றும் அடுத்த வருஷ அமாவாசைக்கொன்றுமாக இனிதே நடந்தேறி வந்தால் பரவாயில்லையே. விதி வீடியோ கேம் விளையாடியது போல எல்லாமே ஒரு இருபது நாட்களுக்குள் தொடர்ந்து நடந்துவந்தது.

நீங்கள் இந்த சூழ்நிலைகளில் என்ன செய்வீர்கள் என்று உங்களைப் பார்த்து ஒரு கேள்வியை இங்கே வீசுவதன் மூலம் என் நியாயமான கோபங்கள் குறித்தான ஆதரவுக்கு உங்களையும் இழுத்துக் கொள்ளலாம் என்று நினைக்கிறேன். நான் என்ன பண்ணினேன் என்றால் உடனே ரெளத்திரம் பழகி குரலுயர்த்திப் பார்த்ததுதான். என்னதான் நடக்கிறதென்று பார்ப்போமே! இது ஒரு மாதிரி பரிசோதனை முயற்சி. இதன் விளைவாக மூன்றாவது பாராவில் சொல்லப்பட்டது தவிர வேறெதாவது நடந்ததா? ம்ஹூம்! ஒரு சில இடங்கள் தவிர “பெரிதாய் ஒன்றும் இல்லை. தொண்டை வறண்டதுதான் மிச்சம்” என்று கொட்டை எழுத்துக்களில் வருத்தமாக சொல்ல வேண்டியிருக்கிறது.

இந்த விஷயங்கள் இன்றைய நகர நெரிசல் வாழ்க்கையில் பரபரத்துத் திரியும் மக்களின் பொதுவான மனோபாவத்தைக் குறித்து சிந்திக்கவைக்கிறது. மேற்கூறிய சம்பவங்களில் ஒரு சிலது நகர மனிதர்களுக்கு அடுத்தவர் மேலுள்ள அக்கறையின் கிராஃப் இறங்கிவிட்டதைக் குறிக்கிறது. ஒரு சில சம்பவங்கள் வாடிக்கையாளரின் திருப்தியை முன்னிறுத்திய சேவையை பொருட்படுத்தாமல் தேமே என்று வேலை செய்யும் பெருவாரியான கூட்டத்தை அடையாளம் காட்டுகிறது. அண்டை அயலார் மீதான பொதுவான நேசம் அல்லது சகோதரத்துவம் அருகி விட்டதென்பதை இன்னும் சிலது எடுத்துக்காட்டுகின்றன.

இந்த நிலைப்பாட்டை தினசரி எதிர்கொள்ள நேரிடுகிற சலிப்பை, எரிச்சலோ கோபமோ கலந்த வார்த்தைகளிலோ செயல்களிலோ வெளிப்படுத்திக் கொண்டிருந்தால் இந்த ஆயுள் போதாது என்றும் தோன்றுகிறது.

ஆகவே சாந்தி சாந்தி ஓம் சாந்தி.