Showing posts with label சிறுகதை. Show all posts
Showing posts with label சிறுகதை. Show all posts

ஒப்பணக்கார வீதியிலிருந்து ஒரு வாசகர் கடிதம்

95-ல் என் முதல் கதை கல்கி இதழில் வெளியானபோது எனக்கு ஏற்பட்டது புல்லரிப்பு என்றால், அதற்கு வந்த வாசகர் கடிதத்தை என் முகவரிக்கு ஒரு உறையில் போட்டு கல்கி அலுவலகம் அனுப்பிவைத்தது புளகாங்கிதம் என்று சொல்லலாம். கோவை ஒப்பணக்கார வீதியிலிலிருந்து சந்திரன் என்பவர் கதையை வெகுவாகப் பாராட்டி எழுதியிருந்தார். நானும் அப்போது கோவையில்தான் இருந்தேன். முதல் வாசகர் கடிதம் என்பதால் பத்திரமாக ரொம்ப நாள் அது என் பேகிலேயே இருந்தது.

இந்தக் கடிதம் வந்த ஒரு மாதத்திற்குப் பிறகு நானும் என் நண்பன் சரவணனும் ஒரு சாயங்கால வேளையில் ஒப்பணக்கார வீதிப் பக்கம் ஒரு வேலையாகப் போனோம். வேலை முடிந்து ஒரு பேக்கரியில் தேநீர் குடித்துக் கொண்டிருந்தபோது திடீரென்று சந்திரன் என்கிற அந்த வாசகரின் நினைப்பு வந்தது. பேகிலிருந்து அவரின் அந்தக் கடிதத்தை எடுத்து முகவரியைப் பார்த்தால் பக்கத்தில்தான் எங்கேயோ இருக்கிறார் என்று தெரிந்தது. அலுவலக முகவரி போலும். தொலைபேசி எண்ணையும் கொடுத்திருந்தார். சட்டென்று ஒரு யோசனை வந்தது. சரவணனிடம் அதைச் சொன்னபோது முதலில் தயங்கிப் பின்னர் சரி என்றான். ஒரு சின்ன விளையாட்டு!

சரவணன் ஒரு பப்ளிக் டெலிஃபோன் பூத்திலிருந்து சந்திரனைக் கூப்பிட்டு, தன்னை சித்ரன் என்று அறிமுகம் செய்துகொண்டு அவரிடமிருந்து கடிதம் வந்ததைச் சொன்னான். ”உங்க ஏரியாலதான் இருக்கோம். இப்போ வந்தா உங்களப் பாக்க முடியுமா?” என்று கேட்டான். மறுமுனையில் சந்திரன் ”செம சர்ப்ரைஸ்ங்க.. வாங்க வாங்க..” என்றது எனக்கே கேட்டது.

நாங்கள் போனபோது சந்திரன் அவர் அலுவலகத்தில் எங்களுக்காக ஆவலோடு காத்துக்கொண்டிருந்தார். முன்பே பேசி வைத்துக்கொண்டபடி சரவணன் தன்னை ’சித்ரன்’ என்றும் என்னை ’சரவணன்’ என்றும் அறிமுகப்படுத்தினான். ”நீங்க என்னைப் பாக்க வந்தது ரொம்ப சந்தோஷம்..” என்று சரவணனின் கையைப் பிடித்து இறுக்கமாய்க் குலுக்கினார். என் கையை லேசாக. பின்னர் அலுவலகத்துக்குள்ளேயே அவர் தங்கியிருந்த ஒரு அறைக்கு எங்களைக் கூட்டிச் சென்றார்.

நான் ஒரு ஓரமாய் உட்கார்ந்து அங்கே கிடந்த பாக்யா வார இதழைப் புரட்ட ஆரம்பிக்க, அவர்களிருவருக்குமிடையே குதூகலமாக உரையாடல் தொடர்ந்தது. நான் சிரிப்பைக் கஷ்டப்பட்டு அடக்கிக்கொண்டு உட்கார்ந்திருந்தேன்.

சந்திரன்: “எப்படி உங்களுக்கு இந்த மாதிரி கதைக்கரு எல்லாம் தோணுது?”

சரவணன் (என்னை ஓரக்கண்ணால் பார்த்தபடியே): ”எல்லாம் அப்பப்ப அப்படி அப்படியே தோணும்! எழுதிருவேன்..”

சந்திரன்: ”நிறைய எழுதியிருப்பீங்க போல.. உங்க எழுத்துல ரொம்ப முதிர்ச்சி தெரியுது.”

சரவணன்: “இல்ல இது என் முதல் கதைதான். போனாப் போகுதுன்னு ஏதோ போட்டிருக்காங்க போல கல்கியில..”

சந்திரன்: சேச்சே.. அது அருமையான கதைங்க. திரும்பத் திரும்பப் படிச்சேன்.. என்ன இருந்தாலும் உங்களுக்குத் தன்னடக்கம் ஜாஸ்தி..”

இப்படியே மேலும் ஒரு பத்துப் பதினைந்து நிமிடங்களுக்கு சந்திரன் வீசிய கலை இலக்கிய பந்துகளை சரவணன் சரமாரியாக சமாளித்துக் கொண்டிருந்தான்.

சந்திரன் சட்டென்று “தி.ஜா படிச்சிருக்கீங்களா? நாஞ்சில் நாடன்? நம்மூருதாங்க அவரு” என்பது போன்ற டஃப்ஃபான கேள்விகளின்போது திருதிருவென்று முழித்து பிறகு ஒருவாறு சமாளித்து “பின்னே படிக்காம? என்னமா எழுதுவாங்க!” என்றான்.

சந்திரன்: “நாவல், தொடர்கதை எல்லாம் எழுதற ஐடியா இருக்கா? இல்லை சிறுகதைகள் மட்டும்தானா?”

“எழுதிட்டாப் போச்சு? என்னடா எளுத்தாளர் சித்ரன்.. என்ன சொல்ற!..” என்றான் என்னைப் பார்த்து. ”இந்தா.. இடத்தை மாத்திக்கலாம்.. இதுக்கு மேல முடியல..” என்று எழுந்தான்.

நான் பாக்யாவிலிருந்து நிமிர்ந்து சந்திரனைப் பார்க்க, அவர் புரியாமல் எங்களிருவரையும் மாறி மாறிப் பார்த்தார்.

நான் சிரித்தபடி “ஒரு சுவாரஸ்யத்துக்கு ஒரு சின்ன விளையாட்டு விளையாடலாம்னு நினைச்சோம்.. நாந்தான் சித்ரன். அவன் சரவணன். ஸாரி..” என்றேன்.

புரியாமையிலிருந்து குழப்பத்துக்குள் விழுந்து, சந்தேகத்துக்கு மாறி, ஏமாற்றத்தைத் தொட்டு பின் சட்டென்று விடுபட்ட சந்திரன் முகம் போன போக்கை விவரிக்கவே முடியாது.

”இவந்தான் இந்த ஐடியாவைச் சொன்னான். என்னைத் திட்டாதீங்க..” என்று சரவணன் என்னைக் கை காட்ட..

சந்திரன் உடனே சமாளித்துச் சிரித்து “அதான பாத்தேன்..  ஆரம்பத்திலிருந்தே எனக்கு ஏதோ சரியில்லைன்னு பட்டுச்சு..” என்றார்.

இறந்தவன் - சிறுகதை


ஃபெமினா தமிழ் – ஜூன் 1, 2012
ஆறு மாதத்திற்கு முன்பு நிகழ்ந்த பைக் விபத்தொன்றில் வசந்தன் இறந்துவிட்டானாம். இதைச் சொல்வதற்காகவே நேரங்கெட்ட நேரத்தில் சிங்கப்பூரிலிருந்து போன் பண்ணியிருந்தான் நடராஜ்.

மிகத் தாமதமாக வந்த அதிர்ச்சி செய்தி. கேட்டுவிட்டு இந்த முனையில் அஷோக் உறைந்துபோய் சில விநாடிகள் பேச்சற்று நின்றான்.
ஆறு மாசத்துக்கு முன்னாலா? எப்படி இது இத்தனை நாள் தனக்குத் தெரியாமல் போனது?

எனக்கே இப்பதாண்டா தெரியும். ரொம்ப கஷ்டமாயிருச்சு. பாவம்டா அவன். அல்பாயுசு! எப்பவும்போல பைக்-ல கண்ணு மண்ணு தெரியாமப் பறந்திருப்பான். வினையாயிருக்கும். எத்தனை தடவை படிச்சுப் படிச்சு சொல்லிருப்போம். கேட்டானா?” என்றான் நடராஜ்.

மழைக்காதல் - சிறுகதை

காதலர் தினத்தை முன்னிட்டு எங்கு பார்த்தாலும் காதல் காய்ச்சல் தொற்றிக்கொண்டிருந்த பிப்ரவரி மாதத்தில் ‘நம் தோழி’ இதழில் வெளியானது எனது சிறுகதை ஒன்று. இதுவும் ஒரு காதல் கதைதான் என்று தலைப்பே சொல்கிறதே. வேறென்ன? அதேதான்.

கதையைப் படிக்க இங்கே கிளிக்கவும் >>: மழைக்காதல்

புலம் - தீபாவளி மலர் சிறுகதை

தமிழோவியம்.காம் இணைய இதழின் தீபாவளி மலரில் எனது சிறுகதை..

ணி செண்ட்ரலில் ரயில் இறங்கி ஆட்டோ பிடித்து அபிராமபுரத்திலுள்ள கேசவனின் வீட்டுக்கு போய் இறங்கினபோது லேசாய் ஆச்சரியப்பட்டான். கேசவனின் வீடு காலி செய்யப்படுகிற முகாந்திரமாய் வீடு நிறைய மூட்டை முடிச்சுகள். அட்டைப் பெட்டிகள். அடுக்கத் தயாராயிருந்த சாமான்கள். குறுக்கும் நெடுக்குமாய் ஒழுங்கில்லாமல் சோஃபா, கவிழ்ந்த சேர்கள், நியூஸ் பேப்பர் குப்பைகள். கயிறுகள். பேக்கிங் டேப் சுருள்கள்.

மணி பொருட்குவியல்களுக்கு ஓரமாய் ட்ராவல் பேகை வைத்துவிட்டு வியப்புடன் புரியாமல் கேசவனைப் பார்த்தான். "வீடு காலி பண்றீங்களா?" என்றான்.

...

...

மேலும் படிக்க..

கிழித்த கதை


ஷெல்ஃப்பில் எதையோ தேடிக்கொண்டிருந்தபோது ஒரு பழைய கிழிந்த லெதர் பை ஒன்றில் ஒரு கத்தையாக கொஞ்சம் சிறுகதைகள் கிடைத்தன. பதினைந்து வருடங்களுக்கு முன் குமுதம், விகடன், சாவி இதழ்களிலிருந்து கிழித்துத் சேர்த்துவைத்த சிறுகதைகள். கொத்துக் கொத்தாக ஸ்டேப்ளர் செய்யப்பட்டு ‘பைண்ட் செய்து வைக்கவேண்டும்’ என்கிற எண்ணம் வருடக்கணக்கில் புறக்கணிக்கப்பட்டு, தாள்கள் பழுப்பேறிச் சிதைந்து, திறந்ததும் குப்பென்று மூச்சுத் திணறவைக்கும் நெடியுடன் கிடந்தன.

குமுதத்திலும், விகடனிலும் சிறுகதைகள் அதிக அளவில் வெளியிடப்பட்டுக் கொண்டிருந்த பொற்காலம் அது. சுஜாதா, பாலகுமாரன், சுபா முதற்கொண்டு பிரபல எழுத்தாளர்கள் அனைவரும் மானாவாரியாக எழுதிக்கொண்டிருந்த நேரம். பொதுவாகவே சிறுகதைகள், தொடர்கதைகள் படிக்கிற ஆர்வத்துடன் ஒரு கூட்டமாக நாங்கள் (நான், சரசுராம், மீனாட்சி சுந்தரம், ஷாராஜ், கனகராஜன்) அலைந்துகொண்டிருந்தோம். கதைகளைப் படிப்பதும், படித்தபிறகு அவைகளைப் பற்றியும், கதாசிரியர்களைப் பற்றியும் பெருமளவில் விவாதித்துத் திரிந்த நாட்கள் ரம்மியமானவை.

சுமார் அறுபது கதைகள். சிறந்த சிறுகதைகள் என்று கிழித்து வைத்துக் கொண்டதா என்று கேட்டால் தெளிவாக நினைவில்லை. நல்லதாய் ஒரு சிறுகதையை எப்படி எழுதுவது என்கிற தேடலில் இந்த மாதிரி நிறைய கிழித்து வைக்கிற பழக்கம் எங்கள் எல்லோருக்கும் இருந்தது. இதில் சிறுகதை, குறுந்தொடர், நாவல் எல்லாம் அடங்கும். அரஸ்-ஸின் அட்டகாச ஓவியங்களுக்காகவே சுஜாதாவின் என் இனிய இயந்திராவையும், மீண்டும் ஜீனோவையும், அப்புறம் கோவி மணிசேகரன் நாவல் ஒன்றையும் கிழித்துச் சேர்த்திருந்தேன். கமலஹாசன் ஸ்டில்லுகளுக்காக விக்ரம் தொடர். இது மாதிரி நிறைய. என்னிடமிருக்கிற இந்த கதைக் கொத்தை கிழித்துத் தொகுத்தவர் சரசுராம். எப்படியோ கைமாறி என்னிடத்தில் வந்து கிடக்கிறது.

இந்த சேகர சாகரத்தில் என்னதான் இருக்கிறதென்று மூச்சை இறுக்குகிற நெடியை பொறுத்துக் கொண்டு திறந்து பார்த்தேன். பெரும்பாலும் சிறுகதைகள்தான் இருந்தன. “என் பெயர் அருண்குமார்” என்ற சாருப்ப்ரபா சுந்தரின் (நான் விரும்பிப் படித்த எழுத்தாளர் இவர்) தொடர்கதை. பாலகுமாரன், மாலனின் ஒரு சில கதைகள். அப்புறம் ராஜேஷ்குமார், சுபா, சுப்ரபாரதிமணியன், தனுஷ்கோடி ராமசாமி, சு. சமுத்திரம், பிரதிபா ராஜகோபாலன், அனுராதா ரமணன், பட்டுக்கோட்டை பிரபாகர் ஆகிய எல்லோரும் அடக்கம்.

நாகா என்றொரு எழுத்தாளரின் சில கதைகள். கே.சித்ராபொன்னி என்பவரின் கதைகள் நிறைய இருந்தன. (இப்போது எழுதுகிறாரா?) பா.ராகவனின் கதை ஒன்று. அதுதவிர பெரும்பாலான கதைகள் அதிகம் பிரபலமாகாத, பெயர் கேள்விப்படாத எழுத்தாளர்களால் எழுதப்பட்டிருந்தது. தமிழிணி, இள.அழகிரி, ஜெரா, தார்க்‌ஷியா இப்படியாக. பவதாரிணி என்பவர் எழுதிய ரூ.5000 பரிசு பெற்ற கதை ஒன்றும் இருந்தது.

வித்யா சுப்ரமணியம், எஸ்.பி. ஹோசிமின், சங்கர்பாபு, திருவாரூர் பாபு போன்ற அடிக்கடி கண்ணில் படுகிற எழுத்தாளர்களும் இந்தக் கலெக்‌ஷனில் ஒளிந்திருந்தார்கள். இதில் பரசுராம் பிஸ்வாஸ் என்றொரு எழுத்தாளரும் இருக்கிறார். இவர் குமுதத்தில் விகடனில் ‘புதிய ஆத்திச்சூடி கதைகள்’ என்று ஒரு தொடர் எழுதிக்கொண்டிருந்தார். குமுதத்தில் விகடனில் பணிபுரிகிற யாரோ ஒருவர்தான் (அல்லது பலர்) இந்த புனைபெயரில் எழுதிக்கொண்டிருந்தார்(கள்) என்றொரு அரசல் புரசல் இருந்தது. யாராக இருந்தாலும் அற்புதமாய் எழுதிக்கொண்டிருந்த எழுத்தாளர் இவர்.

ஜெ, அரஸ், ம.செ, மாருதி, ராமு, கரோ போன்ற ஓவியர்கள் இந்தக் கதைகளுக்கு படம் வரைந்திருந்தார்கள். மருது, ஜி.கே.மூர்த்தி, ஸ்யாம் கூட இருந்தார்கள். அட்டகாசமாக வரைந்துகொண்டிருந்த அரஸ்-ஸூக்கு ஒரு கட்டத்தில் என்ன ஆயிற்று என்றே தெரியவில்லை. திடீரென்று கானா மூனாவென்று வரைந்து தள்ள ஆரம்பித்தார். இந்த இடைவெளியில் கச்சிதமாக உள்ளே நுழைந்தவரான கரோவும் (கிட்டத்தட்ட அரஸ் சாயலிலேயே) சளைக்காமல் எண்ணற்ற கதைகளுக்கு அருமையாய் படம் வரைந்து தள்ளிக் கொண்டிருந்தார். இன்னும் சில வருடங்கள் வைத்திருந்தால் உடைந்து உதிர்ந்துவிடும் என்பதுபோல் வெடவெடவென்றிருக்கிற இந்த சாணிப் பேப்பர்களில் இந்த ஓவியர்களின் பழைய ஓவியங்களை மறுபடி பார்க்கக் கிடைப்பது அழகான விஷயம்.

ஆதவனின் ’புறாக்கள் பறந்து கொண்டிருக்கும்’ என்கிற கதை இரண்டு பாகங்களாய் இந்தத் தொகுப்பில் இருக்கிறது. ஆதவனின் சிறுகதைகள் அனைத்தையும் திரட்டி “ஆதவன் சிறுகதைகள்’ என்கிற புத்தகமாக கிழக்கு பதிப்பகம் வெளியிட்டபோது இந்தக் கதையும் இருக்கிறதா என்று பா.ராகவனிடம் ஒருமுறை கேட்டது நினைவுக்கு வந்தது. அதிகபட்சமாக எல்லாக் கதைகளையும் முடிந்தவரை திரட்டிப் போட்டுவிட்டதாக அவர் சொன்னார். அந்த தொகுப்பிலிருக்கும் “புறா” என்கிற கதைதான் இது என்று ரொம்ப நாளாய் நினைத்திருந்தேன். ஆனால் இப்போது எடுத்துப்பார்த்தபோது அதுவும் இதுவும் வேறு என்பது தெரிந்தது.

வியாபார மயமாகிப் போன பிரபல பத்திரிக்கைகளில் சிறுகதைகள் வெளியிடுவது அரிதாகிப் போன இந்தக் காலத்தில், நைந்து போன இந்தப் பேப்பர் கற்றையை எடுத்துப் பார்க்கும்போது தும்மல் கலந்த பெருமூச்சொன்று வருகிறது. முகத்தில் கர்ச்சீப் கட்டிக்கொண்டாவது இதில் உள்ள கதைகளை மறுபடி பொறுமையாய் உட்கார்ந்து முழுதாய் படித்துப் பார்க்கவேண்டும்.

விரல்கள்

சிறுகதை
தமிழோவியம் டாட் காம் - 28-03-06


அந்தப் பெண் என்னைச் சைகை காட்டிக் கூப்பிட்டமாதிரி இருந்தது. என்னைத்தானா? நான் திரும்பி தோட்டத்தில் ஷாமியானாவுக்குக் கீழே பாலிவினைல் சேர்களில் தனித் தனிக் குழுக்களாய் அமர்ந்து அரட்டையடித்துக் கொண்டிருப்பவர்களைப் பார்த்தேன். என்னைத் தாண்டி அவர்களில் யாரையாவதைத்தான் அவள் கூப்பிட்டாளா? அவள் சைகையை அவர்கள் யாரும் கவனித்ததாகத் தெரியவில்லை. அவள் என்னைத்தான் கூப்பிடுகிறாள் என்று தோன்றியது. நானும் ஒரு முறை அவளிடம் சைகையிலேயே என்னைத்தானா என்று கேட்டு உறுதிப்படுத்திக்கொண்டபின் அவளை நோக்கி நகர்ந்தேன்.

இத்தனை பேர் இருக்கிற, கல்யாணக் களைகட்டியிருக்கிற இந்த வீட்டில் எனக்கு இதற்குமுன் அறிமுகமாயிராத அந்தப் பெண் என்னை எதற்கோ கூப்பிடுகிறாள். நான் யோசனையோடு அவளை நெருங்கினேன். சுற்றிலும் ஒரு பெரிய தோட்டத்துக்கு நடுவே இருந்த அந்த வீட்டின் இடதுபுறத்தில் தோட்டத்துக்கு இறங்க இன்னொரு வாசல் இருந்தது. அந்த வாசல் படிக்கட்டில் அவள் நின்றிருந்தாள். என்னைப் பார்த்து முறுவலித்தாள். ஸ்நேகம் பூசின புன்னகை. வெகு சுமாரான ஒரு நூல் புடவையில் இருந்தாள். அவள் கையில் ஒரு பித்தளை சொம்பு இருந்தது. அவள் கைகள் ஈரமாயிருந்தன. ஏதோ வீட்டு வேலையாயிருந்தாள் போலும். ரொம்பத் திருத்தமாய் இருந்தாள்.

"நிங்ஙளுடே ச்சங்ஙாதி.. அவிடெ ஸர்திக்குந்நு.." என்று காம்பெளண்டு ஓரமாய் கை காண்பித்தாள். நான் கேரளாவின் ஒரு கிராமத்தில் வந்திறங்கியிருப்பதை மறுபடி ஒரு முறை அவள் பாஷை ஞாபகப்படுத்தினதுபோல் இருந்தது.

அவள் கை நீட்டின இடத்தில் ஒருவன் எனக்கு முதுகைக் காட்டிக்கொண்டு நின்றிருந்தான். உவ்வாக் என்று அவனிடமிருந்து சப்தம் வந்தது. அவன் மார்புவரை உயரமாயிருந்த காம்பெளண்ட்டைப் பிடித்தபடி அதற்கு அந்தப் பக்கமுள்ள காலி நிலத்தில் வாந்தியெடுத்துக்கொண்டிருந்தான். இந்த வீட்டைச் சுற்றி நாளைய கல்யாணத்தின் பொருட்டு கூடியிருக்கிற இத்தனை ஜனத்தில் யாரும் அவனைக் கவனிக்கவில்லை போல. இவள் கவனித்தது அவனுடைய அதிர்ஷ்டம்தான். அவனருகில் சென்றபோது அவன் வாந்தியால் போதம் கெட்ட அந்த நிலையிலும் அரவம் கேட்டுத் திரும்பி என்னைப் பார்த்து லேசாய்ச் சிரிக்க முற்பட்டான். அவனை எனக்கு அடையாளம் கண்டுகொள்ள முடிந்தது. பாலாவின் கல்யாணத்துக்காக என்னுடன் ட்ரெயினில் வந்த இருபத்தியெட்டு பேர்களில் அவனும் ஒருவன். அவனுடன் அவன் மனைவி மற்றும் பையனையும் பார்த்ததாக ஞாபகம்.

நான் அவனை நெருங்கி "என்ன பாஸ்... உடம்பு சரியில்லையா?" என்று கேட்கும்போதே மறுபடி ஒரு உவ்வாக். நான் அவன் தலையைப் பிடித்துக்கொண்டு பின் அவன் முதுகை லேசாய்த் தடவிக் கொடுத்தேன். முன்பொரு தடவை நான் எதனாலோ வாந்தியெடுத்தபோது என் நண்பனொருவன் எனக்கு இதே மாதிரி முதுகில் தடவிக்கொடுத்ததும், அது எனக்கு மிகப்பெரிய ஆசுவாசத்தை அளித்ததும் நினைவுக்கு வந்தது. இவனுக்கும் அது மாதிரித்தான் இருந்திருக்கவேண்டும். அவன் தன்னைத்தானே ஆசுவாசப்படுத்திக்கொள்ளும் முயற்சியில் தன் நெஞ்சில் கைவைத்திருந்தான். சாப்பிட்டது அத்தனையையும் பிரயத்தனப்பட்டு வெளிக்கொண்டுவரப்பட்டதில் அவன் கண்கள் சிகப்பாய் கலங்கியிருந்தன. உடல் பலவீனப்பட்டு கைகள் லேசாய் நடுங்கிக்கொண்டிருந்தன.

நான் திரும்பிப் பார்த்தேன். அந்தப் பெண் இன்னும் கையில் சொம்புடன் நடையிலேயே நின்றிருந்தாள். வைத்தகண் எடுக்காமல் எங்களையே பார்த்துக்கொண்டு நின்றிருந்தாள். நான் அவளிடம் 'நீ சொன்னமாதிரி இவன் என் ச்சங்ஙாதியில்லை' என்று சொல்ல விரும்பினேன். அது ஒன்றும் முக்கியமான விஷயமில்லை. நேற்று வேனில் வந்திறங்கிய கும்பலில் என்னுடன் அவனிருந்ததைப் பார்த்து இவன் என் நண்பன் என்று முடிவு பண்ணியிருப்பாள். இருக்கட்டும். இப்போது இந்த நிலையில் அவனுக்கு ஏதாவது உதவி செய்யவேண்டுமென்ற எண்ணத்தில் அவள் போகாமல் அங்கே நின்றுகொண்டிருக்கிறாள். எனக்கும் அவ்வாறான எண்ணமே இருந்ததால் மேற்கொண்டு யோசிக்காமல் காம்பெளண்டு ஓரமாய் அடுக்கப்பட்டிருந்த மீதமிருந்த பாலிவினைல் சேர்களில் ஒன்றை எடுத்துப் போட்டு 'உட்காருங்க ப்ரதர்' என்று அவனைச் சாய்த்து உட்கார வைத்தேன். அவன் ரொம்பத் தளர்ந்திருந்தான்.

"கட்டஞ்சாயா போட்டுத் தரட்டே. கொறச்சு பேதமாகும்." தமிழ் பேசுகிற ஆட்கள் என்பதையுணர்ந்து தன் பாஷையை அவள் லேசாய் மாற்ற முற்பட்டது வித்தியாசமாயிருந்தது. பேச இயலாத ஒரு நிலையில் அவள் கேட்டதற்கு அவன் வெறுமனே தலையசைத்து வைத்தான். அவள் சொம்பை படியில் வைத்துவிட்டு புடவைத் தலைப்பால் கைகளைத் துடைத்தபடி உள்ளே விரைவதைப் பார்த்தேன்.

"நேத்து பார்ட்டில கொஞ்சம் ஓவராயிருச்சு! அதான்" என்றான் அவன் நான் கேட்காமலே! அவன் சொல்லாமலே எனக்கு அது புரிந்துதான் இருந்தது. நேற்று இரவு பார்ட்டியில் அவன் நிறையக் குடித்ததால் கீழே பாயில் தூங்கிக் கொண்டிருக்கிற நிலையிலேயே வாந்தி எடுத்ததும் பிறகு மாப்பிள்ளைப் பையன் பாலாவும், சந்தோஷும் சேர்ந்து அவனை நகர்த்திக் கிடத்திவிட்டு அவ்விடத்தை சுத்தம் செய்தார்கள் என்றும் இவன் அதற்காக தென்னந்தோப்புக்குள் பாலாவை தனியாய் கூட்டிக்கொண்டு போய் மன்னிப்புக் கேட்டான் என்றும் காலையில் கேள்விப்பட்டிருந்தேன். இரவு மயக்கம் இன்னும் தெளிந்தபாடில்லை போலும். இதோ கட்டஞ்சாயாவுக்குக்காக காத்துக் கிடக்கிறான். உள்ளே போய்விட்டிருந்தாலும் எனக்கு அந்தப் பெண் இன்னும் நிலைப்படியில் நின்றுகொண்டு என்னை சைகையால் அழைப்பதுபோல் பிரமை தொடர்ந்து கொண்டிருந்தது. அந்தப் பெண்ணிடம் என்னவோ இழுக்கிற அம்சம் இருந்தது. ஒரு வேளை பொட்டு வைக்காத அவள் நெற்றியா அல்லது லேசான சோகம் விரவின கண்களா? என்னமோ ஒன்று. அவள் சாயாவுடன் வருகிறாளா என்று நான் கதவுக்குள் பார்த்துக்கொண்டிருந்தபோது அவன் சொன்னான்.

"இந்த விஷயத்தை என் ஒய்ஃப்கிட்ட சொல்ல வேணாம் பிரதர்."

நான் திரும்பிச் சிரித்தேன். அவனிடம் பயப்படவேண்டாம் என்று சொன்னேன். அவன் மனைவிக்குப் பிடிக்காத விஷயத்தை அவன் செய்திருக்கிறான். அவள் இதைக் கேள்விப்பட நேர்ந்தால் கிடைக்கும் அர்ச்சனைக்கு அவன் பயப்படுகிறான். அவனுடனேயே எனக்கு அதிகமான பரிச்சயமில்லாத போது அவன் மனைவியிடம் நான் பேச நேரிடும் என்று எப்படி நினைத்தான் என்று தெரியவில்லை.

அவள் வாசற்படியில் மீண்டும் தென்பட்டாள். படிகள் தாண்டி முற்றம் வரை சாயா டம்ளருடன் நடந்து எங்களை அணுகினாள். இப்போது பரவாயில்லையா என்று விசாரித்தபடி சாயாவை நீட்டினாள். நான் அதை அவளிடமிருந்து வாங்கும்போது பட்ட விரல்களை அவள் இயல்பாக எடுத்துக்கொண்டிருக்கக் கூடும் என்று தோன்றியது. ஆனால் எனக்கு ஏன் இன்னும் குறுகுறுப்பாக இருக்கிறது? தன் வேலை முடிந்தது என்பது மாதிரியும், தன் எல்லைக் கோட்டை கொஞ்சம் தாண்டி வந்துவிட்ட மாதிரியும் அவள் இரண்டடி பின்னால் நகர்ந்து நின்று கொண்டாள். என்னைப் பார்த்து முன்பு மாதிரியே முறுவலித்தாள். நான் அந்தக் கணத்திலிருந்துதான் அவளைக் கவனிக்க ஆரம்பித்திருக்கவேண்டும். அல்லது அவளைக் கவனிக்க வேண்டும் என்கிற ஒரு சின்ன உந்துதல் அந்தக் கணத்திலிருந்துதான் என்னுள்ளிருந்து புறப்பட்டிருக்கவேண்டும். என்னவோ ஒரு எளிமையும், சாந்தமும் கலந்த கலவையாய் அவள் அப்படி நின்றுகொண்டிருந்தது என்னை லேசாய் ஈர்த்தது. நான் அவளை அத்தனை உற்றுப் பார்த்திருக்கக்கூடாதோ என்று பிறகுதான் தோன்றியது. அவள் சட்டென்று என் பார்வையைச் சுதாரித்துக்கொண்டு "கொறச்சு பணியுண்டு" என்று சரசரவென்று இரண்டு தாவலில் படிகளைக் கடந்து உள்மறைந்தாள்.

என்னிடமிருந்து வெளிப்பட்டு மறைந்துபோன பெருமூச்சின் நதிமூலம் எனக்குப் பிடிபடவில்லை. நான் மெல்லத் திரும்பி அவனைப் பார்த்தேன். பதிநான்கு மணிநேரப் பிரயாணம் செய்து இங்கே வந்ததே இந்தக் கட்டஞ்சாயாவைக் குடிக்கத்தான் என்கிற மாதிரி துளித்துளியாய் நிதானமாய் அவன் அதை உறிஞ்சிக் கொண்டிருந்தான். இப்போது அவன் உடல் படபடப்பும், முக வாட்டமும் கொஞ்சம் மறைந்து கொஞ்சம் தெம்பு பிறந்திருந்தது.

அவன் குடித்து முடித்துத் தந்த டம்ளரை நிலைப்படியில் அந்த சொம்புக்குப் பக்கத்தில் வைத்துவிட்டு கதவினுள் லேசாய் பார்வையைச் செலுத்தினேன். அந்தக் கதவை ஒட்டியிருந்தது சமையலறை என்று பிறகுதான் புரிந்தது. உள்ளே நாலைந்து பெண்கள் நின்று கொண்டிருந்தார்கள். அவர்களில் அவளைத் தேடுகிற அளவு அவகாசம் இருப்பதாய்த் தோன்றவில்லை. யாரேனும் கவனித்தால் அவன் அங்கே நின்றுகொண்டிருப்பதன் காரணம் பற்றி அநாவசியமாய் கேள்வி எழுப்பக்கூடும். நான் திரும்பி வந்தபோது அவன் எழுந்திருந்தான். 'ரொம்ப நன்றி தலைவா!' என்றான். நான் புன்னகைத்து அவன் தோளில் தட்டிக் கொடுத்தேன். என்னை மாதிரியே அவனும் வாசற்கதவைத் அடிக்கடி பார்க்கிறானோ என்று தோன்றியது. அவனைக் கூட்டிக் கோண்டு தோட்டத்தில் ஷாமியானாவுக்கு வந்தேன். அவன் மனைவி, பையனைப் பற்றி விசாரித்தபோது அவர்கள் அந்த வீட்டுக்குள் பெண்கள் தங்கவைக்கப்பட்டிருக்கும் அறைக்குள் இருப்பதாகச் சொன்னான். முகூர்த்தத்துக்கு நேரமாகிவிட்டபடியால் அநேகமாக அவர்கள் உடைமாற்றி புறப்படத் தயாராகிக்கொண்டிருக்கலாம் என்றும் உபரியாய் தெரிவித்தான்.

இங்கிருந்து ஒரு கூட்டம் எட்டு மணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பஸ்ஸில் கிளம்பி பெண் வீட்டிலேயே நடக்கவிருக்கும் கல்யாணத்துக்குப் போவதாக ஏற்பாடு. தோட்டத்திலேயே வரிசையாய் சேர் டேபிள் போட்டு வந்திருந்தவர்களுக்கு காலை டிபன் முடிந்துவிட்டது. நிறைய சந்தனப்பொட்டு யுவதிகளும், முண்டு உடுத்திய சேட்டன்மார்களும் பரபரப்பாய் அலைந்து கொண்டிருந்த அந்த வீட்டுக்குள் பாலா எங்கேயிருக்கிறான் என்று தெரியவில்லை. நேற்று சாயங்காலம் முதற்கொண்டே அவன் ரொம்ப பிஸியாய்த்தான் இருந்தான். அவன் வீட்டிலிருந்து கொஞ்ச தூரம் தள்ளியிருந்த, காலியாயிருந்த அவன் மாமா வீட்டில்தான் மற்ற பேருடன் நான் தங்கியிருந்தேன். அங்கே பசங்களுக்கு 2T ஆயில் கேனில் கள்ளும், அப்புறம் மற்ற சரக்கு பாட்டில்களும் கொண்டுவந்து கொடுத்துவிட்டு "என்ஜாய்" என்று பாலா சொல்லிவிட்டு கிளம்பும்போதுதான் அவனை கடைசியாய் பார்த்தது.

பஸ் வந்துவிட்டதாகவும் புறப்பட்டுத் தயாராயிருப்பவர்கள் போய் ஏறிக்கொள்ளலாம் என்றும் ஒரு வெற்றிலை வாயர் அறிவித்துவிட்டுப் போனார். கிட்டத்தட்ட எல்லாருமே தயாராகத்தான் இருந்தார்கள் போல. பளபளவென்று குளித்து உடைமாற்றிக்கொண்டு என்னுடன் ரயிலில் வந்திருந்தவர்கள் எல்லோரும்கூட இவ்விடத்துக்கு வந்து சேர்ந்துவிட்டார்கள். திடீரென்று பாலாகூட வீட்டுக்குள்ளிருந்து கல்யாணக்கோலத்தில் வெளிப்பட்டு அரசியல்வாதிபோல நண்பர்களுக்கு கையாட்டிவிட்டு அவனது சேச்சி குடும்பத்துடன் ரோஜாப்பூக்கள் ஒட்டியிருந்த ஒரு டாடா சுமோவுக்குள் ஏறிக்கொண்டான். நான் பஸ் எங்கே என்று விசாரித்தேன். ரோடு குறுகலாக இருப்பதால் ரொம்ப தூரத்துக்கு முன்னமே திருப்பி நிறுத்தப்பட்டிருப்பதாய் சொன்னார்கள். வீட்டிலிருந்து கிளம்பி ஒரு சின்ன ஊர்வலம் போல மெதுவாய் எல்லோரும் பஸ் இருக்கிற திசை பார்த்து நடக்க ஆரம்பித்தார்கள். எல்லோரையும் மிக அலங்காரமாய் சுறுசுறுப்பாய், புத்துணர்ச்சியுடன் ஒரு கல்யாண வீட்டில்தான் பார்க்க முடியும் என்று தோன்றியது. நடக்கிற பெண்கள் கூட்டத்துக்குள் நான் அவளைத் தேடினேன். எங்கேயும் தென்படவில்லை. அவள் இன்னும் கிளம்பவில்லையா?

பஸ்ஸை அடைந்தபோது ஏற்கெனவே ஒரு கூட்டம் இருக்கைகளை நிரப்பியிருந்தது. அதுதவிர இன்னும் இத்தனை பேர். கல்யாணம் நடக்கிற இடத்துக்கு இரண்டு மணி நேரம் நின்று கொண்டுதான் போகவேண்டும்போல. நான் அந்த மெயின் ரோட்டில் நின்றுகொண்டு பஸ் கிளம்பும்போது தொற்றிக்கொள்ளலாம் என்று காத்திருந்தேன். கிளம்ப இன்னும் ஒரு பத்து நிமிடம் ஆகுமென்று யாரோ சொன்னார்கள். பின் இருக்கையில் அவன் சாய்ந்திருப்பதைப் பார்த்தேன். அவனெப்படியோ ஒரு இருக்கையைப் பிடித்துவிட்டான். பக்கத்தில் அவன் மனைவியும், அவன் பையனும். எனக்கு மறுபடி அவன் வாந்தியும், அந்த புறவாசற்கதவும், படிகளும் ஞாபகத்துக்கு வந்தன. அவளை மறுபடி பார்க்கவேண்டும் என்கிற ஆவல் திடீரென்று தோன்றியது.

நான் மெல்ல பாலாவின் வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தேன். அங்கே யாரெல்லாம் இன்னும் கிளம்பாமல் இருப்பார்கள்? நடக்கும்போதே ஏதோ ஒரு விவகாரமான யோசனையில் வாட்சை கழற்றிப் பாக்கெட்டில் போட்டுக்கொண்டேன். பாலாவின் வீட்டையடைந்தபோது அதிகம் அரவமில்லாமலிருந்தது. கிட்டத்தட்ட எல்லோரும் கிளம்பி விட்டார்கள் போல. தோட்டத்தில் ஷாமியானாவையும், டேபிள்களையும் பிரித்துக் கொண்டிருந்த ஒரு சில வேலையாட்களைத் தவிர வேறு யாரையும் காணோம். நான் எதற்கு இத்தனை தூரம் மெனக்கெட்டு வந்தேன் என்று எனக்கே புரியாமல் இருந்தது. கேட்டைத் தாண்டி பக்கவாட்டிலிருந்த வாசலை அடைந்தபோது அவள் படிகளில் ஓய்வாய் உட்கார்ந்திருந்தாள். என்னைப் பார்த்து லேசாய் அவள் கண்களில் ஆச்சரியம் விரிந்து மெதுவாய் எழுந்தாள். நான் எதுவும் பேசத் துவங்கும் முன்பாக அவள் கேட்டாள். "இப்போ நல்லா இருக்காரா நிங்ஙளுடெ ச்சங்ஙாதி?"

அவன் என் ச்சங்ஙாதியில்லை என்று மீண்டும் அவளிடம் சொல்ல விரும்பினேன். பதிலாக 'அவனுக்கு இப்போது ஒன்றும் பிரச்சனையில்லை' என்றேன். கூடவே அவள் கல்யாணத்துக்குக் கிளம்பாமல் இப்படி நடையில் உட்கார்ந்திருப்பது எனக்கு ஆச்சரியத்தை அளிப்பதாகத் தெரிவித்தேன். அவள் ஒரு மெல்லிய புன்முறுவலை உதடுகளில் படரவிட்டாள்.

"ஞான் அதிகம் இம்மாதிரி எடத்துக்கு போறதில்ல.." என்றாள். கொஞ்சம் இடைவெளிவிட்டுப் பின்னர் தயக்கத்துடன்.. "சொல்றதுக்கென்ன? பர்த்தாவு மரிச்சதினு சேஷம்தான்" என்று சேர்த்துக்கொண்டாள். அவள் மறைக்க விரும்பின வருத்தம் லேசாய் அவள் முகத்தில் கோடிட்டுக் காட்டிவிட்டது. எனக்கு ஏதேதோ உணர்ச்சிகளைப் பூசிக்கொண்டு ஒரு இனம்புரியாத அதிர்வொன்று மனதிற்குள் ஓடியது. ஓரிரு விநாடிகள் செய்வதறியாது நின்றிருந்தேன்.

"ஆனா என்டெ மோள் கல்யாணத்தினு போய்ட்டுண்டு.." என்றாள் முகம் மலர்ந்து. பின்னர் ஓரிரு விநாடிகள் அவள் மெளனமாய் எதையோ யோசித்துவிட்டு சட்டென்று "எந்தா நிங்ஙள் புறப்பட்டில்லே?!!" என்றாள்.

நான் யோசித்து "போகணும். என் வாட்சைக் காணோம். இங்க எங்காவது கழண்டு விழுந்ததான்னு பாக்க வந்தேன். நீங்க ஏதாவது பாத்தீங்களா?" என்றேன். எதற்காக என் வாயிலிருந்து பொய் இத்தனை சரளமாக வருகிறது? அவள் ஒரு நிமிடம் என்னை உற்றுப் பார்த்தது எனக்கு என்னவோ போல் இருந்தது. என் முகத்திலிருந்து ஏதாவது கள்ளத்தனத்தை கண்டுபிடித்துவிட்டாளா என்று லேசாய் சந்தேகம் எழுந்தது.

அவள் சட்டென்று அவளின் மூடிய வலது கை விரல்களை என் முன் நீட்டினாள்.

"'இதுவா பாருங்க"

எனக்குள் ஒரு சின்ன திடுக்கிடல் நிகழ்ந்து குழப்பமாய் அவளை நோக்கிக் கைநீட்டினேன். என் நீட்டிய என் விரல்களின் மேலாக வைத்து அவள் விரல்களைப் பிரித்தாள். வெறும் விரல்கள். நான் ஏமாந்ததைப் பார்த்து வரிசைப் பற்கள் தெரிய ரொம்ப அழகாய்ச் சிரித்தாள்.

"இதுதான்" என்றேன் திடீரென்று.

நான் அவளிடமிருந்து பெற்றுக்கொண்டதை என் விரல்களுக்குள் இறுக்கமாக மூடிக்கொள்வதைப் பார்த்து அவள் சிரிப்பின் வீரியம் குறைந்து வேறு ஏதேதோ உணர்ச்சிகள் அவளது முகத்தை நிறைத்தன. இறுக்கின கையைப் பிரிக்காமல் அவளை நோக்கி ஒரு அர்த்தப் புன்னகை பூத்துவிட்டு மனசில்லாமல் வாசலை நோக்கி நடந்தேன். நான் மறையும்வரை என்னையே பார்த்துக்கொண்டிருந்தாள் என்பது நான் திரும்பிப் பார்த்தபோதெல்லாம் தெரிந்தது.

கல்யாணம் முடிந்து அன்று மத்தியானமே ட்ரெயின் ஏறிவேண்டியிருந்தது. இங்கிருந்து சென்னைக்கு பதினாலு மணி நேரம் ஆகும். இப்போது என் எதிர்சீட்டிலேயே அவன் சிரித்தவாறு உட்கார்ந்து கொண்டிருந்தான். அவன் முகம் இப்போது ரொம்பத் தெளிவாய் இருந்தது. பக்கத்தில் அவன் மனைவியும் பையனும். வெளியே கேரளத்தின் தென்னந்தோப்புகள் பின்னோக்கி விரைந்து கொண்டிருந்தன. அந்தப் பையன் என்னையே இமைக்காமல் பார்த்துக்கொண்டிருந்தான். என்னிடம் கேட்பதற்கு அவனுக்கு என்னவோ இருப்பதுபோலொரு பாவனை அந்தப் பையன் முகத்தில் தெரிந்தது.

"என்னடா கண்ணா?" என்றேன்.

அவன் இறுக்கமாய் மூடியிருந்த என் வலது கை விரல்களை உற்றுப் பார்த்துவிட்டுக் கேட்டான்.

"கைல என்ன வெச்சிருக்கீங்க அங்கிள்?"

நான் சுதாரித்து சட்டென்று அவனிடம் விரல்களைப் பிரித்துக் காண்பித்து "ஒண்ணுமில்லடா.."என்றேன்.
(முற்றும்)

பேறு

சிறுகதை
தமிழோவியம் டாட் காம் 17-04-05
அம்புஜம் வேலைக்கு வந்தால் தன்னை வந்து பார்க்குமாறு பரமேஷ் வீட்டில் சொல்லிவிட்டு வந்தான் ப்ரசன்னா. அவள் வந்தால் இரண்டில் ஒன்று கேட்டுவிட வேண்டும் என்று நினைத்துக்கொண்டான். அவள் மறுபடி வேலைக்கு வரமுடியுமா முடியாதா?. மஞ்சு இருக்கிற நிலைமைக்கு இனியும் அவளால் எந்த வேலை¨யும் இழுத்துப்போட்டுக் கொண்டு செய்தால் பிற்பாடு ப்ரச்சனையாகிவிடும். வீட்டு வேலைக்கு யாரையாவது வைத்தே தீரவேண்டும். சமத்தாய் அம்புஜம் நாளையிலிருந்து வந்துவிட்டால் தேவலை.

இரண்டு நாள் முன்பு டாக்டர் சொன்னதை நினைத்து அவனுக்குள்ளே கனன்று கொண்டிருந்த சந்தோஷம் ஒரு கவலைச் சுழலுடன் கலந்து பொங்கிக் கொண்டிருந்தது. மஞ்சுவுக்கும் அப்படித்தானிருந்திருக்க வேண்டும். அவள் எதையும் முகத்தில் காட்டிக் கொள்ளாமல்தான் வீட்டுக்குள் உலவிக்கொண்டிருக்கிறாள். முதலில் சந்தோஷப்படுவதும் பிறகு அது தங்காமல் கலைந்துவிடுவதும் என நிறைய ஆகிவிட்டது. பத்தாம் மாசம் ஒரு பிள்ளையைக் கண்ணில் பார்த்தால்தான் இனி சிரிப்பெல்லாம் என்று முடிவு பண்ணிவிட்டவள்போல் இருந்தாள் மஞ்சு. அவளும் பத்து வருடமாக கோவில் குளம் பூஜை என்று அலைந்து வேண்டுதலில் உருகி நின்றதற்குப் பலனாய் டாக்டரின் வாயிலிருந்து இதோ நல்ல சேதி கிடைத்துவிட்டது.

இந்தத் தடவை மஞ்சுவுக்கு நாள் தள்ளிப்போனபோது எல்லா எதிர்காலக் கற்பனைகளையும் தற்காலிகமாய்த் தள்ளி வைத்துவிட்டு நேரே டாக்டரிடம் போனார்கள். நல்ல செய்திதான் என்று உறுதிப்பட்டுவிட்டபோதுகூட ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டு அர்த்தமாய் புன்னகைக்க கூட பயமாயிருந்தது. டெலிவரி வரைக்கும் ரொம்ப ரொம்ப ஜாக்கிரதையாக இருக்க வேண்டுமென்று டாக்டர் சொல்லிவிட்டார். கடினமாய் எந்த வேலையையும் செய்வது பிரச்சனையை உண்டுபண்ணும் என்று கையுறைகளைக் கழற்றி வைத்துவிட்டு எச்சரித்தார் டாக்டர். மேலும் மஞ்சுவுக்கு உடம்பு பலவீனமாக இருக்கிறது. கவனமாக இருக்கவில்லையென்றால் அப்புறம் இதுவும் இல்லையென்று ஆகிவிடுமென்றார். மஞ்சுவுக்கு முப்பத்தைந்து வயதாகிவிட்டதும் ஒரு காரணம். இதற்கு முன்னால் இரண்டு தடவை அபார்ஷன் வேறு.

"ஸோ.. பாத்துக்குங்க. ஆறாவது மாசத்திலேயே உங்க ஒயிஃப்-ஐ அட்மிட் பண்ணி அப்ஸர்வேஷன்ல வெக்க அவசியம் வந்தாலும் வரலாம். பார்ப்போம்! ஆல் த பெஸ்ட்.."

லேசாய் மிதக்கிற குழந்தைக் கனவுகளுடனும், கொஞ்சம் டானிக் மாத்திரைகளுடனும் வீட்டுக்குத் திரும்பி வந்தபோது மஞ்சுவை அப்படியே தூக்கி கரகரவென்று சுற்றவேண்டுமென்கிற ஆவலை அடக்கி மென்மையான முத்தத்துடன் நிறுத்திக்கொண்டான். ரொம்ப சந்தோ்ஷம் வேண்டாம். எதற்கும் உத்தரவாதமில்லை. போன தடவை மாதிரியே நடுவில் சிக்கலானால் அப்புறம் எல்லாக் கனவுகளும் சரிந்துவிடும். எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் இயல்பாய் இருப்பதே நலம்.

இனி மஞ்சுவை அதிகம் வேலை செய்யவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அவர்கள் இரண்டுபேர் மட்டும் இருக்கிற அந்த வீட்டில் அவளைப் பார்த்துக்கொள்ள ப்ரசன்னாவை விட்டால் ஆள் கிடையாது. பார்த்துக்கொள்ள ஆளில்லாவிட்டாலும் பரவாயில்லை. வேலை செய்ய யாராவது ஆள் இருந்தால் தேவலை. அம்புஜம் வரவேண்டும். பரமேஷ் வீட்டில் சொல்லிவைத்திருப்பதால் அம்புஜம் அங்கே வேலைக்கு வரும்போது தகவல் சொல்லிவிடுவார்கள். ஆனால் பழைய கோபத்தை வைத்துக்கொண்டு அவள் வராமல் இருந்துவிடுவாளா என்று யோசனையாய் இருந்தது. இருந்தாலும் கேட்டு வைத்தால் என்ன கெட்டுப்போய்விடும்? ஐம்பது ரூபாய் ஜாஸ்தியாய் தருகிறேன் என்றால் வராமலா இருப்பாள்?

அந்தப் பெண் செல்வி அத்தனை சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கொண்டு போகாமல் இருந்திருந்தால் அவளாவது இன்னும் வேலையில் இருந்திருப்பாள். இத்தனை பெரிய நகரத்தில் வீட்டு வேலைக்கு ஒரு நல்ல ஆள் கிடைப்பது எத்தனை கஷ்டமாயிருக்கிறது!

அன்றைக்கு டாக்டரிடமிருந்து திரும்பியதிலிருந்து ப்ரசன்னாவும், மஞ்சுவும் அதிகம் பேசவில்லை. அதுவும் நல்லதுதான். எதற்காகவும் மஞ்சு அதிகம் உணர்ச்சிவசப்படுவதேகூட நல்லதல்ல என்று தோன்றியது ப்ரசன்னாவுக்கு. அன்றிரவு படுக்கப் போகுமுன் அவளை மடியில் சாய்த்துக்கொண்டு லேசாய் அவளது அடிவயிற்றைத் தொட்டுப் பார்த்தான். அவனால் நம்பமுடியவில்லை. பத்து வருடத்திற்குப் பின் அத்தனை நம்பிக்கைகளும் நசித்துப் போனபின் மறுபடி உதித்திருக்கிற தளிர். மஞ்சு அவனது உள்ளங்கையில் முகத்தைப் பதித்துக்கொண்டு லேசாய் சப்தமின்றி அழுதாள். இருவருக்குமிடையே ஏற்பட்ட நெகிழ்வில் அவளை மெதுவாய் இறுக்கிக் கொண்டான். "நீ எதுக்கும் கவலப்படாதடி. நான் பாத்துக்கறேன். நாளைக்கு அம்புஜம் வேலைக்கு வந்துட்டா.. அப்றம் உனக்கு கம்ப்ளீட் ரெஸ்ட்தான்" என்று காதோரம் கிசுகிசுத்தான். அவ்வளவு நெருக்கத்தில் காதோரக் கிசுகிசுப்பாய் சொல்ல அம்புஜம் மேட்டர்தானா கிடைத்தது என்று உடனே அசந்தர்ப்பமாக உணர்ந்தான்.

மறுநாள் காலை எட்டு மணிக்கு அழைப்பு மணி அடித்தபோது அம்புஜமாகத்தான் இருக்கும் என்று ஏனோ நினைத்துக் கொண்டு கதவைத் திறந்தான் ப்ரசன்னா. அங்கே செல்வி நின்று கொண்டிருந்தாள். அவனைப் பார்த்ததும் தயக்கத்துடன் கொஞ்சம் பின்வாங்கி நின்று கொண்டு "நல்லாருக்கீங்களாண்ணே!!" என்றாள்.

முகத்தில் திகைப்பை விடுவித்துவிட்டு "என்ன செல்வி! ஏது இவ்ளோ தூரம்?" என்றான்.

அவளை திடீரென மறுபடி பார்த்ததில் ஆச்சரியமாயிருந்தது அவனுக்கு. அவன் கதவைத் திறக்குமுன்னரே பழைய பழக்கத்தில் அவள் செருப்பை ஓரமாய்க் கழற்றி வைத்துவிட்டு நின்றிருந்ததைப் பார்த்தான்.

"அண்ணே! வேலைக்கு ஆள் வேணும்னு சொன்னீங்களாமே..." என்றாள் மேலும் தயங்கியபடி.

"உனக்கு யார் சொன்னாங்க? உள்ள வா!" என்று வழிவிட்டான்.

செல்வி உள்ளே வந்து சுவரோரமாய் ஒடுங்கி நின்றாள். ஒண்ணரை வருஷமிருக்குமா இவள் வேலையைவிட்டுப் போய்? ரொம்பவே மாறியிருந்தாள். முதலில் தாவணியோ சுரிதாரோ போட்டுக்கொண்டுதான் வேலைக்கு வருவாள். இப்போது சேலை. முகத்தில் லேசாய் பவுடர் பூச்சு. வகிட்டில் தீற்றிய குங்குமம். பழைய குழந்தைத்தனம் போய் லேசாய் பெரிய மனுஷித்தனம் தெரிந்தது இப்போது.

குரல்கள் கேட்டு மஞ்சு வெளியே வந்து செல்வியைப் பார்த்து சிரித்தாள்.

"உம் புருஷன் எப்படியிருக்காம்மா?" என்றான் ப்ரசன்னா.

"இருக்குது" என்றாள் சுரத்தில்லாமல். சொன்ன மறுமணம் அவள் முகம் மிகவும் சோர்ந்து போய்விட்டது.

"எங்க வேலைக்கு போறாரு?"

"இப்ப வேல இல்லக்கா! மின்ன போயிட்டிருந்த ஆபிசுல மொதலாளி அவரை வேலையிலிருந்து நிப்பாட்டிருச்சு. இப்ப சும்மா கெடக்குது வூட்ல. வேறெங்கியும் வேல தேடக் காணம். அதுக்கொரு வேல கெடைக்கற வரைக்கும் நான் வேலைக்கு போலாம்னு.." என்றாள்.

"கொழந்த?"

"ஒரு பொண்ணுக்கா! கொளந்தைய அவரு பாத்துக்குவாரு. ஒண்ணும் பிரச்சினையில்ல"

ப்ரசன்னாவும் மஞ்சுவும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டார்கள். திடீரென்று அவள் இப்படி வந்து நின்றதில் இருவருக்கும் ஒன்றும் புரியவில்லை. பரமேஷ் வீட்டிலிருந்து இவளுக்கு விஷயம் தெரிந்திருக்கவேண்டும். அவள் நிலைமையை யோசித்தால் பரிதாபமாக இருக்கிறது. மேலும் செல்வி மேல் ப்ரசன்னாவுக்கு எப்போதுமே ஒரு அனுதாபம் உண்டு.

"எப்படியும் ஒரு ஆள் வேணும் செல்வி. அம்புஜத்தை கேட்டிருந்தோம். ஒனக்கு முடியும்னா வா! என்ன சொல்ற?!" என்றாள் மஞ்சு.

செல்வி உடனே அகமகிழ்ந்துவிட்டு 'வூட்ல சொல்லிட்டு இப்பவே வந்துடறேன்' என்று நகர்ந்தாள். ப்ரசன்னாவுக்கு லேசாய் நிம்மதிப் பெருமூச்சு வந்து போனது. மஞ்சுவுக்கும்கூட!

செல்வி திரும்பவும் வந்து அன்றைக்கே வேலையை ஆரம்பித்துவிட்டாள். உடனே அடுக்களைக்குப் போய் பழைய துணி ஒன்றை சேகரித்துக்கொண்டு வந்து டி.வி ஸ்டேண்ட் மேலுள்ள புத்தர் சிலையை எடுத்துத் துடைக்க ஆரம்பித்தாள். ப்ரசன்னாவுக்கு ஆச்சரியம் தாங்கவில்லை. அவள் முன்பு வேலைக்கு வந்துகொண்டிருந்த போதுகூட இதே மாதிரிதான் பண்ணுவாள். அப்போதெல்லாம் வாரத்துக்கொருமுறை வீடு முழுக்கத் தூசி தட்டி சுத்தம் பண்ணுகிற சமயங்களில் அவள் தவறாமல் இந்த புத்தர் சிலையிலிருந்துதான் வேலையை ஆரம்பிப்பாள். நேராய் வந்து முதலில் டி.வி ஸ்டாண்டின் மேலிருந்து புத்தரை எடுத்து பளபளவென்று துடைத்து வைத்துவிட்டுப் பிறகு ஓரிரு விநாடிகள் அதன் மெட்டாலிக் பளபளப்பைப் பார்த்துக்கொண்டிருப்பாள். பிறகுதான் மற்ற பொருளெல்லாம். இதை ப்ரசன்னா எத்தனையோ தடவைகள் கவனித்திருக்கிறான். புத்தர் சிலையிலிருந்து ஆரம்பிப்பது என்ன கணக்கென்று புரியவில்லை. இல்லை அவளுக்கு அது ரொம்பப் பிடித்திருக்கிறதோ என்னமோ. ஒரு நாள் கேட்க வேண்டும் என்று நினைத்துக்கொண்டான்.

****************

செல்வியைப் பற்றி யோசித்துக்கொண்டே கிளம்பி ஒரு சின்ன வேலையாய் ஆடிட்டரைப் பார்க்கப் போனான். அவர் வருவதற்கு கொஞ்சம் காத்திருக்க வேண்டியிருந்தது. இடைப்பட்ட நேரத்தில் ஒரு வேலைக்காரி துடைப்பத்துடன் வந்து 'கொஞ்சம் எந்திரிச்சீங்கன்னா.. ரூம க்ளீன் பண்ணிர்ரேன்.' என்றபோது அவனுக்கு மறுபடி செல்வி ஞாபகம் வந்துவிட்டது. பாவம் எத்தனை சின்னப்பெண். படிப்பும் விளையாட்டுமாய் இருக்கவேண்டிய இந்த சின்ன வயசில் கல்யாணம் பண்ணிக்கொண்டு.. ச்சே! நினைக்கவே கோபமாய் வருகிறது. மனசளவில் எந்த முதிர்ச்சியும் இல்லாத அவள் கையில் இப்போது ஒரு குழந்தை. அந்தப் பெண்ணுக்கு மீறிப் போனால் இப்போது ஒரு பதினெட்டு வயது இருக்குமா? அவள் புரு்ஷன் அவளை விட ஒரு வயசோ ரெண்டு வயசோ பெரியவன். அவ்வளவுதான்.

செல்வி வேலைக்கு வருவதற்கு முன் அவளது அம்மாதான் ப்ரசன்னா வீட்டில் வேலை செய்துகொண்டிருந்தாள். கொஞ்சம் சுறுசுறுப்பான ஆள்தான். 'கெட்டிக்காரி பொம்பளை' என்று மஞ்சு அடிக்கடி சொல்லுவாள். துவைப்பது, பெருக்குவது, பாத்திரம் கழுவுவது என்று எந்த வேலையானாலும் எக்ஸ்பிரஸ் வேகத்தில் முடித்துவிட்டு அடுத்த வீட்டுக்குப் போய்விடுவாள். அப்படியே பிஸியாகி தன் நெட்வொர்க்கை விஸ்தரித்துவிட்டாள். முதலில் ஒன்றிரண்டு வீட்டில் வேலை செய்து கொண்டிருந்தவள் குறுகிய காலத்திலேயே வளர்ந்து பதிமூன்று வீட்டுக்கு வேலை செய்ய ஆரம்பித்தாள். ஒருநாள் திடீரென்று 'இனிமே உங்க வூட்டுக்கு எம்பொண்ணுதான் வேலைக்கு வரும்' என்று அறிவித்த கையோடு செல்வியை அனுப்பி வைத்தாள். வந்து நின்ற செல்விப் பெண்ணுக்கு அப்போது பதினைந்து வயதுதான் இருக்கும். பத்தாம் கிளாஸ் பாஸ் செய்த கையோடு வேலைக்கு வந்திருந்தது. அம்மாவுக்கு எந்த விதத்திலும் சளைக்காமல் பம்பரமாய் சுழன்று வேலை செய்ய ஆரம்பித்தாள். செல்வியோ அவள் அம்மாவோ யாராவது ஒருவர்! ஒழுங்காய் வேலை நடந்தால் சரி என்று ப்ரசன்னாவும் மஞ்சுவும் அந்த திடீர் ஆள் மாற்றலைப் பற்றி அதிகம் அலட்டிக் கொள்ளவில்லை.

செல்வியிடம் "ஏன் மேல படிக்கல" என்று கேட்டபோது. 'வசதியில்லீங்க' என்று பதில் வந்தது. இத்தனைக்கும் அவள் எஸ்.எஸ்.எல்.ஸி பாஸ் செய்திருக்கிறாள் எனும்போது அவள் படிப்பைப் பாதியில் விட்டுவிட்டாள் என்கிற செய்தி அத்தனை ரசிக்கவில்லை ப்ரசன்னாவுக்கு. அவள் அம்மாவை ஒருநாள் வரச்சொல்லிப் பேசினான்.

"இங்க பாரும்மா.. பத்தாங்கிளாஸோட படிப்ப நிறுத்திட்டு பாத்திரம் கழுவி முந்நூறு ரூபா சம்பாதிக்கறதுக்கு பதிலா.. செல்வி அட்லீஸ்ட் ப்ளஸ் டூ முடிச்சான்னா ஏதாவது கடையில சேல்ஸ் கேர்ள் மாதிரி வேலைக்கு போலாமில்ல. கொறஞ்சது ஆயிரம் ரூபாயாச்சும் சம்பாதிக்கலாம். வசதியில்லன்னா சொல்லு. நான் என் செலவுல படிக்க வெக்கறேன். ஸ்கூல் படிப்பு நேரம் போக மீதி நேரம் இங்க வந்து வேல செய்யட்டும். பொண்ணு படிச்ச மாதிரியுமாச்சு. வேல செஞ்சமாதிரியும் ஆச்சு!!

நிறைய வாக்குவாதத்துக்கப்புறம்தான் செல்வியின் அம்மா ஒத்துக்கொண்டாள். ப்ரசன்னா மற்றும் மஞ்சுவின் தாராள மனத்தை நினைத்து கண்களைத் துடைத்தவாறே அரை மனதாய் தலையாட்டினாள். உடனே அவன் மள மளவென்று எல்லா ஏற்பாடுகளையும் செய்து முடித்துவிட்டான். செல்விக்கு புத்தகங்கள் வாங்கிக் கொடுத்தான். செல்வி ஸ்கூலில் ப்ளஸ் ஒன் சேர்ந்த முதள் நாள் அதிகாலையில் வந்து இருவரையும் தூக்கத்திலிருந்து எழுப்பி திடீரென்று காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கிப் போனாள். அதற்கடுத்த கால் பரீட்சையில் நல்ல மார்க் எல்லாம்கூட எடுத்து ரிப்போர்ட்டை இருவரிடமும் காட்டினபோது உருப்படியான காரியம்தான் பண்ணியிருக்கிறோம் என்று திருப்தியாயிருந்தது ப்ரசன்னாவுக்கு.

ஆனால் அரைப்பரீட்சை வருவதற்குள் நிலைமை மாறிவிட்டது. ஒரு நாள் திடீரென்று செல்வியுடன் அவள் அம்மா வந்தாள். செல்விக்கு சொந்தத்தில் மாப்பிள்ளை பார்த்துவிட்டதாகவும் அடுத்த மாசம் கல்யாணம் எனவும் சொல்லிவிட்டு "எம்பொண்ணு படிப்புக்கு எத்தனயோ செஞ்சிருக்கீங்க சாமி. இனி அவ வேலைக்கு வர மாட்டா. மன்னிச்சுக்குங்க!!" என்றாள்.

"என்னம்மா இது? அவளுக்கு இன்னும் வயசு பதினாறுகூட முடியல. அதுக்குள்ள கல்யாணமா?"

"தப்பா நெனச்சுக்காதீங்க. நெலம அப்படித்தான். இத தாட்டிவுட்டாதான் அடுத்து இருக்கற ரெண்டு பொட்டப் புள்ளைங்களை கரயேத்த முடியும். ஏதோ இவளுக்கு அதிஸ்டமா தானா வந்து அமைஞ்சுருக்கு. சட்டுப் புட்டுன்னு முடிச்சுர்றதுதான நல்லது." என்றாள்.

ஒரு சுபமுகூர்த்தச் சுப தினத்தில் செல்வி கல்யாணம் பண்ணிக்கொண்டு போய்விட்டாள்.

*********

இப்போது மீண்டும் செல்வியின் வரவு. ஒரு வேலைக்காரியின் மிக அவசியத் தேவையின் சமயத்தில் நிகழ்ந்திருக்கிற அவள் பிரவேசம் கொஞ்சம் சந்தோஷமாகத்தான் இருக்கிறது. குறைந்த பட்சம் ஒரு வருஷத்திற்காவது இவள் இங்கே தங்கினால் நல்லது. இல்லையேல் வேறு யாரையாவது தேடி மறுபடி அலைய வேண்டியிருக்கும். பழைய சம்பளத்துடன் கூட நூறு ரூபாய் வேண்டுமானால் ஜாஸ்தியாகப் போட்டுக்கொடுத்துவிடலாம் என்று தோன்றியது. பாவம்! இப்போது அவள் சின்னப் பெண் இல்லை. குடும்பஸ்தி! அப்புறம் அவன் புருஷன் வேலையில்லாமலிருக்கிறதாகச் சொன்னாளே! அவனையும் வரச்சொல்லி ரெண்டு அதட்டு அதட்டி உருப்பட வைக்கமுடியுமா என்று பார்க்கவேண்டும். மஞ்சுவின் டெலிவரி வரை செல்வி ஒத்தாசையாய் இருந்து அவளை அலுங்காமல் பார்த்துக்கொள்வாளேயாயின் அவள் குடும்பத்துக்கு என்ன வேண்டுமானாலும் செய்யலாம். இந்த மாதிரி ஒரு உணர்ச்சி வேகத்தில் ப்ரசன்னாவுக்கு என்னென்னவோ சிந்தனைகள் வந்து விழுந்தன.

சாயங்காலம் வீட்டுக்குப் போனபோது மஞ்சு கதவைத் திறந்துவிட்டு விட்டு அடுக்களைக்குப் போய், விட்ட இடத்திலிருந்து மறுபடி பாத்திரம் கழுவ ஆரம்பித்தாள். ப்ரசன்னாவுக்கு ஒன்றும் புரியவில்லை.

உள்ளே வந்து "மஞ்சு இதெல்லாம் நீ எதுக்கு பண்ற? எதுக்கு இப்படி ரிஸ்க் எடுத்து உடம்பை அலட்டிக்கிற? நாளைக்கு செல்வி வந்து இதெல்லாம் பண்ணுவால்ல!" என்றான் அவன் லேசான கோபத்துடன்.

"செல்வியை நாளையிலேர்ந்து வர வேண்டான்னு சொல்லிட்டேன்" என்றாள் மஞ்சு.

ப்ரசன்னா புரியாமல் நின்றான். முகத்தில் குழப்பம் சூழ ஏனென்று கேட்க வாய் திறக்குமுன் மஞ்சுவே சொன்னாள்.

"ஏன் தெரியுமா? செல்வியும் முழுகாம இருக்கா!"

ப்ரசன்னா லேசான பெருமூச்சுடன் திரும்பி டி.வி ஸ்டாண்ட் மேலிருக்கிற புத்தர் சிலையை அமைதியாய் வெறிக்கத் தொடங்கினான்.

அர்த்தமண்டபக்காரர்

கோவையிலிருக்கும் என் எழுத்தாள நண்பர் சுதேசமித்திரன் வலைப்பதிவு ஆரம்பித்திருக்கிறார். தன் வலைப்பதிவுக்கு அர்த்த மண்டபம் (Hall of Meaning) என்று பெயரிட்டு முதலில் ஒரு சிறுகதையுடன் இணையத்தில் தன் பயணத்தைத் துவக்கியிருக்கிறார். சுதேசமித்திரன் இலக்கிய உலகில் பரவலாக அறியப்படுபவர். ஒரு தேர்ந்த எழுத்தாளர். தமிழ் இலக்கியத்தின் முன்னணி எழுத்தாளர்களின் படைப்புகளைத் தாங்கி வந்துகொண்டிருந்த 'ஆரண்யம்' என்னும் கலை இலக்கிய காலாண்டிதழின் ஆசிரியர்களில் ஒருவர். ஆரண்யத்தின் ஒவ்வொரு இதழிலும் எம்.டி. வாசுதேவன் நாயர், சத்யஜித் ரே போன்றவர்களின் பல புகழ்பெற்ற திரைக்கதைகள் தமிழாக்கம் செய்யப்பட்டு வெளிவந்துகொண்டிருந்தது மிகச் சிறப்பான விஷயம். இந்த இலக்கியப் பத்திரிக்கையில் வெளியான படைப்புகளுக்கு நான் ஓவியம் வரைந்திருக்கிறேன் என்கிற வகையில் என் பங்கும் உண்டு. சுதேசமித்திரன் இப்போது கோவையிலிருந்து 'சாம்பல்' என்னும் இலக்கியப் பத்திரிக்கையை வெளியிட்டு நடத்திக்கொண்டிருக்கிறார். (இது பற்றி பா.ரா ஒரு முறை தன் வலைப்பதிவில் குறிப்பிட்டிருக்கிறார்.)

சுதேசமித்திரன் ஒரு நல்ல கவிஞரும்கூட. இதற்குமுன் "அப்பா" என்ற இவரது கவிதைத் தொகுதி வெளியாகியுள்ளது. விரைவில் இவரது ஒரு சிறுகதைத் தொகுப்பும், ஒரு நாவலும் வெளியாகவிருக்கின்றன. விகடன் குமுதம் போன்ற முன்னணி வார இதழ்களில் இவர் நிறைய அருமையான சிறுகதைகள் எழுதியுள்ளார். சுதேசமித்திரன் ஒரு நல்ல ஓவியரும்கூட. இவரைப் போன்ற நல்ல படைப்பாளிகள் இணைய நீரோடையில் இணைவது நல்ல விஷயம். சுதேசமித்திரனை வரவேற்போம்.

அழகிய தீயே!

சிறுகதை - சித்ரன்
நன்றி : கல்கி 25-04-2004


ல வருடம் கழித்து ஆதியை நேற்று பார்க்க நேரிட்டது. ஒருவகையில் அது கொஞ்சமும் எதிர்பாராத சந்திப்புதான். பார்த்த கணத்தில் அருணாவுக்கு காலடியில் பூமி நழுவியது. முகத்தில் லேசாய் கலவரம் விரிந்தது. தியாகராயா ரோட்டில் எச்.எஸ்.பி.ஸி ஏடிஎம்-ல் பணம் எடுக்க நின்றிருந்தபோது "ஹாய்" என்று திடீரென்று எதிரே வந்து நிற்கிறான். இத்தனை காலம் எங்கிருந்தான் இவன்?

ஆரம்பத் தயக்கங்கள் தாண்டி இருவரும் இயல்புக்கு வருவதற்கே சில கணங்கள் ஆயின. இருவருக்கும் சட் சட்டென்று பழைய நினைவுகள் முகத்தில் வெளிச்சமிட்டதை இருவருமே உணர்ந்தார்கள். அப்புறம் பரஸ்பர விசாரிப்புகள் நடந்தன. அவன் சென்னையில்தான் ஒரு தனியார் ஸாஃப்ட்வேர் கம்பெனியில் ஸீனியர் மானேஜராக இருக்கிறானாம். அவனை காலேஜில் பார்த்ததற்கும் இப்போது பார்ப்பதற்கும் நிறைய வித்தியாசங்கள் இருந்ததுபோல் தோன்றியது. கோல்டு ஃப்ரேமில் கண்ணாடி. லேசாய் முன்தலை வழுக்கை. லேசாய் பூசியிருக்கிற உடம்பு. உடையில் சொற்ப மாற்றம்.

ஆதி கையில் செல்போன் சிணுங்கல்களுக்கு நடுவே அவளைப்பற்றிக் கேட்டான். காலேஜ் ப்ரண்ட்ஸ் வேறு யாரையாவது மீட் பண்ணுவதுண்டா? என்றான்.

"ம். ஜான்ஸி மட்டும் அப்பப்ப போன்ல பேசுவா"

"ஓ அந்த குட்டி வாத்து. க்ரேட் அருணா உன்னை மறுபடி பார்ப்பேன்னு நினைக்கல. வெரி சர்ப்ரைஸ். ஃப்ரியா இருக்கும்போது ஒரு நாள் சும்மா எங்கயாவது மீட் பண்ணலாமே" என்றான் ஆவலாய். கார்டு கொடுத்தான்.

மேலும் சம்பிரதாயமாய் ஒரு சில வார்த்தைகளுடன் அந்த சிறு சந்திப்பு முடிந்தது. வீட்டுக்குத்திரும்பி வரும்போது அருணாவுக்கு ஒரே யோசனையாயிருந்தது. ஆதி இப்படி திடீரென்று எதிர்ப்படுவான் என்று எதிர்பார்க்கவில்லை. பழைய விஷயங்களை மறுபடி கிளறுவானோ என்று ஒரு சின்ன பயமும் தோன்றியிருந்தது இப்போது.

தி என்கிற ஆதிராஜன். காலேஜில் எம்.ஸி.ஏ. ஒரே வகுப்பு. அப்போதும் கண்ணாடி போட்டிருந்தான். தானே வலியவந்து யாரிடமும் அறிமுகப்படுத்திக்கொள்ளும் சுபாவம் அவனுக்கு. எப்போதும் அவனைச்சுற்றி ஒரு கூட்டம் இருக்கும். சிகரெட் புகைத்து லேசாய் கவிதையெல்லாம் பேசுவான். ஆரம்பத்தில் அருணாவிடமும் நட்பாய்த்தான் இருந்தான். வருவான். பேசுவான். போவான். பிறந்தநாளுக்கு கார்டு அவனே செய்து பரிசளிப்பான். ஒருநாள் மதியம் கல்லூரி நிறுவனர் சிலைக்குப்பக்கத்தில் எல்லாரும் உட்கார்ந்து டிபன்பாக்ஸ்களை காலி செய்துகொண்டிருக்கும்போது மூக்குக் கண்ணாடிக்குள்ளிருந்து அருணாவை ஊடுருவிப்பார்த்து "சமீப நாட்களாய் நீ என்னை பாதிக்கிறாய்" என்றான். விளையாட்டு மாதிரிதான் சொன்னான். அதன் அர்த்தம் தெரிந்துகொள்ள அவள் அப்போது பெரிதாய் ஆர்வம் காட்டவில்லை.

பிறகு சில நாட்களிலேயே அவன் சொன்னதன் தீவிரம் புரிந்துபோது அவள் அவனிடமிருந்து லேசாய் விலகினாள். ஆனால் ஒரே க்ளாஸ் என்பதால் பொதுவாய்ப் பார்ப்பதும் பேசுவதும் தவிர்க்கமுடியாததாய் இருந்தது. "ஆதி உன்னை ஸீரியசா லவ் பண்றான்னு நினைக்கிறேன்" என்று ஜான்ஸி சொன்னாள். வேறு சிலரிடமிருந்துகூட அதைக் கேள்விப்பட்டாள். "அதுக்கு நான் என்ன பண்ணனும்;?" என்று கேட்டாள். கோபமாய் வந்தது. அவனிடம் எனக்கு என்ன ஈர்ப்பு? ஒருகணம் அதையும் அவன் நினைத்து பார்த்திருக்கவேண்டும். இந்த காதல் மண்ணாங்கட்டி எல்லாம் எப்படியோ இவன்களுக்கு வந்து தொலைத்து விடுகிறது. நான்சென்ஸ்.

ஒரு தடவை ஒரு நோட்டு நிறைய கவிதைகள் எழுதி கொண்டுவந்து கொடுத்தான். உனக்கே உனக்காக எழுதினது என்றான். முதல் பக்கத்தில் "அருணோதயம்" என்று டைட்டில் எழுதியிருந்தது. கவிதைகள் என்னமோ நன்றாகத்தான் இருந்தன. அதைப்படித்து எனக்குக் காதல் வரும் என்று நம்பினான் போலும். பாவம். ஆனால் சுற்றி வளைக்காமல் முகத்துக்கு நேரே தைரியமாய் மனதிலிருப்பதைச் சொல்கிற அவனின் நேரடியான அணுகுமுறையைப் பாராட்டத்தான் வேண்டும். அருணா அதை படித்துவிட்டு பாலுவிடம் திருப்பிக்கொடுத்தனுப்பிவிட்டாள்.

"இங்க பார் பாலு. ஆதியைப்பார்த்து எனக்கு எந்தவிதமான ரசாயன மாற்றமும் ஏற்படலை. எனக்கு படிக்கிறதுலதான் கவனம். அவன் நல்ல டைப்தான். நட்பான பையன். படிக்கிற பையன். எல்லாம் ஓ.கே. எனக்கு அவன் மேல காதல் வர்ல பாலு. நீயாவது எடுத்துச் சொல்லு"

அவளின் இந்த எதிர்மறை பதிலுக்கப்புறமும்கூட ஆதியின் முயற்சி தளர்ந்தபாடில்லை. கிடைத்த இடைவெளிகளில் எல்லாம் அவன் மறுபடி மறுபடி வந்து நிறைய பேசினான். நீயில்லாமல் நானில்லையென்றான். நிறைய சினிமா பார்ப்பான் போல.

காலேஜின் கடைசி நாள். எல்லோரும் பிரியப் போகிற தருணம். ஆதிக்கு அது கடைசி சந்தர்ப்பம். நேராக அவளிடம் வந்தான். நூற்றி இருபதாவது தடவையாக அருணாவிடம்
"யோசிச்சு சொல்லு. உன் பதிலுக்காக மூணு ஜென்மமா காத்திருக்கேன். உன்னை ரொம்ப தொந்தரவு செய்யறேன்னு நினைக்காத. சாதகமான பதில் சொன்னா சந்தோஷம். இல்லைன்னா என்கூட கடைசி கடைசியா அபிநயா கஃபேல வந்து ஒரு கப் காபி சாப்பிடு போதும். ப்ரண்ட்லியா பிரிவோம்" என்றான். சிறிதும் நம்பிக்கையிழக்காத கடைசி முயற்சி.

அன்று மாலை இருவரும் அபிநயா கஃபேயில் காபி சாப்பிட்டார்கள். அதற்குப்பிறகு அவள் கண்ணில் அவன் தென்படவேயில்லை.

ஸ்பென்ஸரில் இன்று மறுபடி அந்த சின்ன கஃபேயில் ஹிந்துஸ்தானி இசைக்கு நடுவே இருவரும் உட்கார்ந்திருந்தார்கள். இவனை மறுபடி எதற்கு பார்க்க வந்தேன் என்று யோசித்துக்கொண்டிருந்தாள் அருணா. பேரர் வந்து ஃப்ரெஞ்ச் ஃப்ரைஸ், பாவ் பாஜியை டேபிளில் பரப்பிவிட்டுப் போனான். கொஞ்சம் பேச்சு. கொஞ்சம் அமைதி என நேரம் போனது. பேசியது எல்லாமே பொதுவான விஷயங்கள். பிறகு ஆதி சிறிது நேரம் ஸீரியஸாய் இருந்துவிட்டு "நீ ஏன் இன்னும் கல்யாணம் செய்துக்கல?" என்று கேட்டான். அருணா அவனை கேள்வியாய்ப் பார்த்தாள்.

"அப்பா நிறைய ஜாதகம் பார்த்தார். ப்ச்! எதுவும் அமையல" என்றாள். "நீ ஏன் பண்ணிக்கல?"

"வீட்ல சொல்லி சொல்லி அலுத்துட்டாங்க. நான்தான் வேண்டாம்னு சொல்லி தட்டிக் கழிச்சுட்டிருக்கேன்." என்றவன்.. கொஞ்சம் மௌனமாயிருந்துவிட்டு....

"அருணா உனக்கு ஒரு ஆச்சரியமான விஷயம் சொல்லட்டா? நான் இன்னும் உன்னதான் நெனச்சிட்டிருக்கேன்" என்றான் மெதுவாய்.

சிலீரென்றது. முதல்முதலாய் மனசில்.. ச்சே!. என்னது இது..! அவள் அமைதியாயிருக்க முயற்சித்தாள். அவன் என்ன சொல்ல நினைக்கிறான் என்று தெரிந்து கொள்வதில் அவளுக்கு விருப்பமாயிருந்தது. முகத்தில் எந்த உணர்வையும் காட்டாமல் இருக்க முயற்சித்தாள்.

தொண்டையை செறுமிவிட்டு சொன்னான். "இந்த பொன் மாலைப் பொழுதை வீணாக்காம சுருக்கமா சொல்றேன். காலேஜ்ல பிரியும் போது சாப்பிட்ட காபியோட என் காதல் விஷயம் சூடு ஆறிப் போயிடுச்சுன்னு நீ நினைச்சிருக்கலாம். ஆனா என்னால உன்னை மறக்க முடியல. ரொம்ப அவஸ்தையாயிருச்சு. நீ சென்னைலதான் இருக்கேன்னு தெரியும். ஆனா உன்னை மறுபடி தொந்தரவு பண்ண வேணான்னு விட்டுட்டேன். ஆனாலும் மனசோரத்துல நீ ஒட்டிக்கிட்டுதான் இருந்தே. இப்ப கூட அப்படித்தான். ரெண்டு தடவை உன்னை தூரத்திலேர்ந்து பார்த்தேன்;. என்னடா கிடைக்கலையேன்னு கொஞ்சம் வருத்தம் வந்தது. இப்ப ஒரு நல்ல வேலையும் சொந்தமாய் வீடும் இருக்கு. நான் வீட்ல ஒரே பையன். நான் ஆசைப்பட்டதை நிறைவேத்தற அம்மா, அப்பா. உன்னைப்பத்தி நிறைய சொல்லியிருக்கேன். நீ கிடைச்சா அதைவிட சந்தோஷம் எனக்கு கிடையாது. இந்த சந்திப்பு எனக்கு கிடைச்ச இன்னொரு பொன்னான சந்தர்ப்பம்ங்கிறதுனால நழுவவிட மனசில்லை. மறுபடி ஒரு முயற்சி. அதான் சொல்லிட்டேன். நீ மறுத்தாகூட உன் நினைப்பிலயே வாழ்ந்துட்டுப் போறது அப்படியொன்னும் கஷ்டமா தோணலை. என்னைப் பத்திதான் உனக்குத் தெரியுமே." சொல்லிவிட்டு ஆதி அவளை நேராகப் பார்த்தான்.

"ஓ மை காட்!" என்றாள் அருணா. அவளுக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. தொடர்ந்து மேலும் சில சிலீர்களும் ஓடிவிட்டிருந்தன மனதுக்குள். அவன் ஊடுறுவும் பார்வை என்னவோ செய்தது. "கொஞ்சம் வசீகரமான பையன்தாண்டி" என்று காலேஜ் படிக்கும்போது ஜான்ஸி சொன்னது ஞாபகத்துக்கு வந்தது. பைத்தியமாய் வருடக்கணக்கில் இப்படி ஒருத்திக்காக காத்திருக்கிறதென்றால்.

அவள் எதுவும் பேசாமல் உட்கார்ந்திருந்தாள். குழப்ப யோசனைகள் ஓடின. ரொம்ப லேட்டாய் அவன் மேல் ஒரு ஈர்ப்பை உணர்கிறேனோ? கடவுளே! எனக்கு என்ன ஆயிற்று? அன்றைக்கு மாதிரியே உன்மேல் எனக்கு எதுவும் இல்லை என்று பட்டென்று சொல்லிவிட முதன் முதலாய் ஏன் ஒரு தயக்கம் எழுகிறது?

அவன் மேலும் சொன்னான். "நிதானமா யோசிச்சுச் சொன்னாப் போதும். பாஸிட்டிவ்வான பதில்னா செல்போன்ல கூப்பிடு. வீட்டுக்கு வந்து பெண் கேட்கிறேன். நெகட்டிவ்வான பதில்னா இதே இடம். என்னோட ஒரு கப் காஃபி. ஓகே?"

எதுவும் சொல்லாமல் ஒரு சிரிப்புடன் விடைபெற்றாள். வீட்டுக்கு திரும்புகிறபோது ஒரே யோசனைக்குவியல். திடீரென்று வந்து எல்லாவற்றையும் கலைத்துப்போட்டுவிட்டுப் போய்விட்டான். அவனுக்கு அங்கேயே ஏன் பதில் சொல்ல முடியவில்லை? இந்தத்தடவை வித்தியாசமாய் ஏதேனும் பதில் சொல்ல விரும்புகிறேனா? என்ன இது குழப்பம். புன்னகையுடன் கூடிய அவன் மலர்ந்த முகம் மீண்டும் மீண்டும் நினைவில் ஓடியது. அவன் ஒரு நல்ல டைப்தான். பின்னாலேயே நாய் மாதிரி சுற்றினான் என்பதை வைத்து அவனை மோசம் என்று சொல்லிவிட முடியாது. என்ன ஒரு நம்பிக்கை அவனுக்கு. குரலில் ஒரு சின்ன கம்பீரம். அவனை கடைசியில் ஜெயிக்கவிடலாமா? இரு! முதலில் என்னை நானே கேட்டுக்கொள்ள நிறைய கேள்விகள் இருக்கிறது. முதல் கேள்வி இத்தனை வருடம் கழித்து எனக்கு அவன்மேல் ஈர்ப்பு ஏதேனும் ஏற்பட்டுள்ளதா என்பது.

சில தயக்க யோசனைகளுக்குப் பின் ஆமாம் என்று மனது தீர்மானம் நிறைவேற்றியது. அவளையறியாமல் உதட்டோரம் ஒரு புன்னகை அரும்பி மறைந்தது. காதலின் பயாலஜி விதிகள் என்னென்ன? அவனை லேசாய் பிடிக்க ஆரம்பித்திருக்கிறது. அல்லது பிடித்துவிட்டது. அன்றிரவு பொட்டுத் தூக்கம்கூட வரவில்லை. நடுநிசியில் அவன் விஸிட்டிங் கார்டை எடுத்துப்பார்த்தாள்.

நான் இன்னும் உன்னதான் நெனச்சிட்டிருக்கேன் என்று அவன் சொன்னது திரும்பத்திரும்ப ரிவைண்ட் ஆகிக் கொண்டிருந்தது. எங்கேயோ முன்னமே போடப்பட்ட பூர்வ ஜென்ம முடிச்சா இது? நினைக்க நினைக்க ஆச்சாரியமாய் மனதில் விரிகிற கனவுச்சாரல்.

ஆனால் அதை கொஞ்சநேரம்கூட நீடிக்க விடாமல் திடீரென்று வேறொரு எண்ணம் வந்து குறுக்கிட்டு நின்றது. இன்றைய தேதிக்கு எனக்கு மாப்பிள்ளை பார்த்து பாவம் அப்பாவும். அம்மாவும் களைத்து ஓய்ந்து போய்விட்டார்கள். இப்படி எனக்கு இன்னும் வரன் கூடாமல் தள்ளித் தள்ளிப் போனது எல்லாருக்குமேகூட வருத்தம்தான். இந்த நிலைமையில் திடீரென்று ஆதியின் வருகை. அவன் பைத்தியமாய் அவள் பின்னால் சுற்றியபோதெல்லாம் பாராமுகமாய் இருந்துவிட்டு இப்போது போய் அவனிடம் உன்னைப் பிடித்திருக்கிறதென்று நான் சொன்னால் அது வேறு வழியில்லாமல் ஒரு கல்யாணத்தேவைக்கு என்று ஆகிவிடாதா? அவன்மேல் நிஜமாவே ஒரு பிடிப்பு வந்துவிட்டது என்றே இருந்தால்கூட இத்தனை காலம் கழித்து இப்போது போய் உன்னை ஏற்றுக்கொள்கிறேன் என்று சொல்வது சுயநலமில்லையா?

சட்டென்று அவளின் முந்தைய எண்ணங்களின் மீது ரிவர்ஸ் கியர் விழுந்ததுபோல் இருந்தது. ரொம்பத் திகைப்பாய் இருந்தது. இப்படியொரு கோணத்தில்கூட இதை யோசித்துப் பார்த்தே ஆகவேண்டும். அருணாவுக்குப் பிரமை பிடித்தது மாதிரி இருந்தது.

மறுநாள் குளித்துவிட்டு ஸ்டிக்கர் பொட்டை நிலைக் கண்ணாடியில் சாரிபாக்கும்போது தலையில் மறுபடி அந்த நரைமுடியைப் பார்த்தாள். முப்பத்தைந்தை நெருங்கின வயது. லேசான பெருமூச்சு வந்துபோனது.

நிறைய யோசனைகளுடன் ஆபிஸுக்கு கிளம்பிப்போனாள். வேலையில் கவனம் ஓடவில்லை. ஆதி சொன்னது மண்டையைக் குடைந்தது. மதிய இடைவேளையில் ஹேண்ட் பேகிலிருந்து ஆதியின் விஸிட்டிங்கார்டை தேடி எடுத்தாள். ரிசப்ஷனைக் கூப்பிட்டு அவன் செல்போன் நம்பருக்கு லைன் வாங்கினாள்.

"சாயங்காலம் பார்ப்போமா ஆதி ? ஜஸ்ட் ஒரு காஃபி. ஓகே?"

*

வீடு

சிறுகதை
தமிழோவியம் - தீபாவளி மலர் 2004

நந்து சென்னைக்கு வந்து இறங்கியவுடன் முதல் கேள்வியாக அதைத்தான் கேட்கப் போகிறானோ என்று பயந்து கொண்டிருந்தார் நடராஜன். ஆனால் பேக்கேஜ்களைக் சேகரித்துக்கொண்டு வெளியில் டாக்ஸியில் ஏறுகிறவரை அவனும் அவன் மனைவியும் ஒரு வார்த்தைகூட பேசவில்லை. பதிலாக ரெண்டு பேரும் வாய் கொள்ளாத சிரிப்பாக இருந்தார்கள். இனிமேல் சென்னையில்தான் இருக்கப் போகிறோம் என்கிற சந்தோஷச் சிரிப்பு. நந்து ஒரு பெரிய அஞ்ஞாதவாசத்தை முடித்துவிட்டு வந்தவன் போல் தோற்றமளித்தான். மூன்று வருடங்களில் நிறைய இளைத்திருந்தான். முகத்தில் அவன் மீசை அடர்ந்து பெரிதாய்த் தெரிந்தது. அவன் மனைவி சுபா முடியெல்லாம் குட்டையாய் வெட்டிக் கொண்டு, லிப்ஸ்டிக் போட்டுக்கொண்டு கண்ணுக்குக் கீழ் லேசாய் கருவளையங்கயோடு இருந்தாள்.

மகன் சொந்த ஊருக்கே திரும்பிவந்துவிட்டான் என்ற சந்தோஷத்தின் பிரமிப்பில் சரசுவுக்கு வாயெல்லாம் பல்லாக இருந்தது. 'வந்திட்டியாடா' என்று நந்துவைத் தொட்டுத் தொட்டுப் பார்த்துக்கொண்டிருந்தாள். இருக்காதா பின்னே. நடராஜனுக்கும் ரொம்ப சந்தோஷம்தான். ஆனாலும் அது முழுமையாக மனசில் தங்காமல் ஒரு கவலை தோய்ந்த பயத்தின் பிடியில் இருந்தது. அவன் இன்னும் சிறிது நேரத்தில் அவன் அதை கேட்கப் போகிறான். நடராஜன் அவனிடம் சொல்வதற்கு எந்த பதிலையும் தயாரிக்காமல்தான் வந்திருந்தார். அவனானால் கோபக்காரன் வேறு. அவன் கேட்கட்டும். கேட்கும்போது என்ன தோன்றுகிறதோ அதைச் சொல்லலாம் என்று நினைத்தார்.

அவன் அஸ்ஸாமிலிருந்து புறப்படுவதற்குமுன் போன் பண்ணினபோதுகூட மறக்காமல் கேட்டான்.

"வீடு எப்பப்பா காலியாகுது?"

"சொல்லியிருக்கேன். பண்ணிருவாங்க" என்றார். பொய்தான். கீழ் போர்ஷனில் குடியிருக்கிற ராமநாதனிடம் இன்னும் அதைச் சொல்லவில்லை. மகன் வருகிறான் என்று தகவல் சொன்னதோடு சரி! சமீபமாய் நந்து அங்கிருந்து போன் பண்ணுகிற சமயத்தில் எல்லாம் அதை எப்பவும் தவறாமல் கேட்க ஆரம்பித்திருந்தான். சொந்த ஊருக்குத் திரும்பலாம் என்று அவன் முடிவு பண்ணியவுடனேயே கூப்பிட்டுச் சொல்லிவிட்டான். 'கீழ் போர்ஷனைக் காலி பண்ணி வெச்சிருங்கப்பா. இப்பவே சொல்லி வெச்சீங்கன்னாத்தான் நாங்க வர்ரதுக்கும் அவங்க காலி பண்றதுக்கும் கரெக்டா இருக்கும்.'

அவன் போகிறபோதே 'இந்த வேலை மூணு வருஷ காண்ட்ராக்ட்! அதுக்குள்ள எத்தனை சம்பாதிக்கறனோ அத்தனை போதும். முடிஞ்சதும் ரிஸைன் பண்ணிட்டு திரும்பி வந்து ஏதாச்சும் பிஸினஸ் ஆரம்பிக்கணும்.' என்று உறுதியாய் சொல்லிவிட்டுப் போனான். அசுர வேகத்தில் வருடங்கள் ஓடிவிட்டன. இதோ சொன்னபடி திரும்பியும் வந்துவிட்டான். கல்யாணம் ஆன கையோடு சுபாவையும் கூட்டிக்கொண்டு போயிருந்தான் அப்போது. மூன்று வருடங்களாய் குழந்தை பெற்றுக் கொள்கிற தீர்மானத்திலிருந்து விலகியிருந்தார்கள் போல. நந்துவின் முகத்தைப் பார்த்தால் இங்கே வந்தபிறகு ஏகப்பட்ட திட்டம் வைத்திருப்பான் போலிருக்கிறது. அவனுக்கென்று தனி குடும்பமாகிவிட்டது. இனி அவன் குடியிருப்பதற்கு தனி ஜாகை வேண்டும். அதற்கு ராமநாதன் காலிபண்ணவேண்டும். யோசிக்கப் போனால் நந்து சொந்தவீட்டை விட்டுவிட்டு வேறெங்கும் வாடகைக்கு போய் இருக்க வேண்டுமென்கிற அவசியமும் இல்லைதான்.

"சென்னைல வெயில் எப்பதான் முடியும்?" என்றான் நந்து. ரொம்ப நாளைக்கப்புறம் அவன் அப்பாவிடம் பேசுகிற முதல் வார்த்தை. போனிலேயே பேசிக்கொண்டிருந்துவிட்டு நேரில் பேசுவதற்கு ஒன்றுமில்லாததுபோல் இருக்கிறது. அவன் பேசட்டும். வீடு விஷயம் தவிர வேறு என்ன வேண்டுமானாலும் பேசட்டும். 'அவங்கிட்ட எதயும் தத்துப் பித்துன்னு ஒளறி வெக்காத' என்று சரசுவிடமும்கூட சொல்லித்தான் ரயில்வே ஸ்டேஷனுக்குக் கூட்டிக்கொண்டு வந்தார் நடராஜன். எதுவானாலும் வீட்டுக்குப் போய் பேசிக்கொள்வது உத்தமம். இப்போது எதையாவது சொல்லித் தொலைத்தால் அப்புறம் இங்கேயே அவன் வாள் வாள் என்று கத்த ஆரம்பித்துவிடுவான். அவன் சுபாவம் தெரிந்ததுதானே. எதிலும் அப்படியொரு பிடிவாதம். எப்போதும் பிடித்த பிடியில் நிற்பான். வேண்டுமென்றால் வேண்டும். வேண்டாமென்றால் வேண்டாம். நடராஜன் அமைதியாய் வந்தார். டாக்ஸி ஜெமினி மேம்பாலம் ஏறும்போது அவர் பயந்துகொண்டிருந்ததை கேட்டே விட்டான்.

"கீழ்ப் போர்ஷன் என்னாச்சுப்பா?"

நடராஜனுக்குக் கருக்கென்றது. பேசாமல் காது கேட்கவில்லை என்பதுபோல் திரும்பாமலே உட்கார்ந்துவிடலாமா என்று யோசித்தார். ஆனால் மெதுவாய் மென்று விழுங்கிவிட்டு திரும்பாமலேயே "கொஞ்சம் டைம் கேட்ருக்காங்கடா. வேற வீடு பாத்திட்டிருக்காங்க" என்று மறுபடி பொய் சொன்னார். 'பையன் வர்ரான். நீங்க வீட்டைக் காலிபண்ணனும்' என்று ராமநாதனிடம் எப்படிப் போய் சொல்வதென்று ரொம்ப நாளாகவே குழப்பமாய்த்தான் இருந்தது நடராஜனுக்கு. ராமநாதனின் முகத்தைப் பார்த்து நிச்சயம் அதை அவரால் சொல்ல முடியாது. அது ஒரு தர்மசங்கடமான விஷயம். ராமநாதன் மாதிரி அருமையான மனிதரை எங்கேயும் பார்க்கமுடியாதென்பது அவர் அபிப்பிராயம். அவர் மாதிரி ஒரு நல்ல டெனன்ட் கிடைத்ததை சந்தோஷம் எனவும் அதிர்ஷ்டம் எனவும் ஒரு சிலரிடம்கூட நடராஜன் சொல்லியிருக்கிறார்.

கரெக்டாக நந்து வேலை கிடைத்து கெளகாத்திக்குக் கிளம்பின ஒரு வாரத்தில்தான் ராமநாதன் குடும்பம் கீழ்ப் போர்ஷனுக்குக் குடி வந்தது. ராமநாதனுக்கு ஒரு நாற்பத்தைந்து வயதிருக்கும். கணவன், மனைவி, ஒரு பெண், ஒரு பையன் என்று கச்சிதமான குடும்பம். ராமநாதன் ஏதோ பிஸினஸ் பண்ணிக்கொண்டிருந்தார். மனைவி மின்சார வாரியத்தில் உதவிப் பொறியாளர். நியாயமாய்ப் பார்த்தால் பிஸினெஸெல்லாம் பண்ணிக்கொண்டு இத்தனை வயசுக்கு ராமநாதன் சொந்த வீடு கட்டி செட்டிலாகியிருக்கவேண்டும். ஒரு முறை நடராஜன் அதைப்பற்றிக் கேட்டபோது 'வீடு கட்டலாம்னுதான் கோயமுத்தூர்ல லேண்ட் வாங்கிப் போட்டேன். நடுவுல பிஸினஸ் அடிவாங்கி நிறைய நட்டமாச்சு. பொண்டாட்டிக்கு வேலை இருக்கறதால ஏதோ கொஞ்சம் சமாளிச்சேன். ஒரு வழியா பிரச்சனையெல்லாம் முடிஞ்சு இப்பதான் எந்திரிச்சு நின்னிருக்கேன். கடன்ல லேண்ட்டெல்லாம் வித்தாச்சு சார்!" என்றார் ராமநாதன்.

நடராஜன் அடிக்கடி அந்த வீட்டில் குடியிருந்தவர்கள் பற்றியெல்லாம் நினைவுகளை வரிசையாய் மனத்திரையில் ஓட்டிப் பார்ப்பார். எத்தனை பேர் எத்தனை விதமாக. முதலில் நடராஜனேதான் அங்கே குடியிருந்தார். அது முதலில் ஒரு சின்ன போர்ஷனாக இருந்தது. அப்புறம் வசதி பெருகினதுக்கப்புறம் மாடியில் இன்னொரு போர்ஷன் கட்டி அங்கே குடிபோய் கீழ்ப் போர்ஷனை வாடகைக்கு விட்டார். கீழே முதலில் குடிவந்தவர்கள் இரண்டே மாசத்தில் மாற்றலாகி வடக்கே போய்விட்டார்கள். அப்புறம் நாலு பேச்சிலர்கள். அப்புறம் ·பார்மா கம்பெனி மேனேஜர் ஒருத்தர். ரொம்ப டீசன்டான நல்ல மனிதர். பாதி நாள் டூரிலேயே இருப்பார். ஒரு நாள் அவரின் சம்சாரம் யாருடனோ ஓடிப்போய்விட்டது. அந்தத் தெருவில் அது பற்றின பேச்சில் அடிபட்டு வாழ்ந்து கொண்டிருந்த மேனேஜர் திடீரென்று சொல்லாமல் கொள்ளாமல் காலி பண்ணிக்கொண்டு போனார் ஒரு நாள். அதைவிட விவகாரமான விஷயம் இரண்டு வெளியூர் பெண்கள் அக்கா தங்கச்சி என்று சொல்லிக் குடிவந்தது. காலேஜ் ஹாஸ்டல் பிடிக்கல. அதனாலதான் தனியா வீடு பாத்துத் தங்கறோம் என்று என்னவோ காரணம் சொல்லித்தான் வந்தார்கள். பார்த்தால் நல்ல மாதிரி தெரிகிறதே என்றுதான் அவரும் வீட்டைக் கொடுத்தார். ஒரு நாள் எலெக்ட்ரிக் கடை தங்கராஜ் வந்து "என்ன நடராஜ்.. சைடுல தோல் பிஸினெஸெல்லாம் ஆரம்பிச்சிருக்கீங்க போல.." என்று கேட்டான். என்னடா என்று விசாரித்துப் பார்த்தால்.. "நீ வாடகைக்கு விட்டிருக்கிற வீட்டுல.. கமுக்கமா மேட்டர் நடக்குது ஓய்! அது காலேஜ் படிக்கிற பொண்ணுங்க இல்ல" என்று ஆதாரங்களை முன் வைத்தான். அடுத்தநாளே ரெண்டுகளையும் விரட்டி அனுப்பிவிட்டார். ராமனாதன் குடி வருவதற்கு முன் ஆர்.டி.ஓ ஒருத்தரும்கூட இருந்தார். அவருக்கு ஜந்து பெண்கள், நான்கு பையன்கள். பெரிய குடும்பம். எப்படித்தான் சமாளிக்கிறாரோ மனிதர் என்று பார்க்கும்போதெல்லாம் ஒவ்வொரு நாளும் வியந்து கொண்டிருந்தார் நடராஜன். அதிக குடும்ப உறுப்பினர்களால் அவர்கள் காம்பெளண்டு கொஞ்சம் கசகசப்பாக இருந்ததும், தண்ணீர் அதிகம் செலவானதும் தவிர அவர்களால் பெரிய உபத்திரவம் எதுவும் இருந்ததில்லை. அவர்கள் கூட அதிகம் காலம் இருக்கவில்லை. நாகர்கோவில் பக்கம் எங்கேயோ போய்விட்டதாகத் தகவல்.

கடைசியாய் வந்த ராமநாதன் குடும்பம் ரொம்ப வருடங்களாக இருக்கிறது. வருடங்களின் உருளளில் ஊறிப் போன நட்பு. பார்த்துப் பழகிய முகங்கள். பழகிப் பழகி இறுகின உறவு. எத்தனையோ சந்தர்ப்பங்கள். எத்தனையோ நிகழ்வுகள். பரிமாறிக்கொண்ட துக்கங்கள் சந்தோஷங்கள், பொழுதுகள். ராமனாதன் குடும்பம் மட்டும் இல்லாமல் இருந்திருந்தால் தனிமையின் கோரக் கைகள் எல்லாவற்றையும் பிய்த்துப் போட்டிருக்குமோ என்னவோ என்றெல்லாம் யோசனை வரும் நடராஜனுக்கு. ஏனையபிற உறவினர்களையும்விட வாழ்க்கையின் வழியில் பார்த்துப் பழகின மனிதர்கள் நெருக்கமாய் இருக்கிறார்கள் என்றால் அது பெரிய கொடுப்பினைதான் என்று அடிக்கடி நினைத்துக்கொள்வார்.

எப்போதும் சரசுவும் ராமநாதனின் மனைவியும் ஒன்றாகவே கோவிலுக்கும் மார்க்கெட்டுக்கும் போவதும், ராமனாதனின் பையனும் பெண்ணும் தாத்தா தாத்தா என்று நடராஜன் வீட்டுக்குள்தான் எப்போதும் வளைய வருவதும், சார் வரீங்களா என்று ராமநாதன் இவரையும் போகிற இடங்களுக்கெல்லாம் துணை சேர்த்துக்கொண்டு சுற்றுவதும் ஆக அன்றாட நிகழ்வுகள். சில சமயம் ஞாயிற்றுக் கிழமைகளில் இரண்டு வீட்டுக்கும் சேர்த்து ஒரே சமையல் நடக்கும். வீட்டு ஓனர், குடியிருப்பவன் என்கிற எல்லை எப்போதோ தகர்ந்து ஒரு ரெண்டு குடும்பத்துக்குள்ளேயும் அனுசரனையான உறவு இருந்தது. நிறைய பேச்சு! நிறைய சிரிப்பு! நிறைய உரிமை!

ராமனாதன் அடிக்கடி சொல்வார். "உங்க வீட்டுல குடியிருக்கிறதே சொந்த வீட்டுல குடியிருக்கிற ·பீலிங் தருது தார். ஐம் லக்கி. நான் சொந்தமா வீடு கட்டினாக்கூட அதை வாடகைக்கு விட்டுட்டு ஒங்க வீட்டுலதான் இருப்பேன்". அதைக் கேட்பதில் நடராஜனுக்கும் பிடி கொள்ளாத சந்தோஷம். ராமநாதன் பிஸினெஸ் பிஸினெஸ் என்று எப்போதும் அலைகிற மனிதர். ஆனால் கொஞ்சம் ஓய்வாக இருக்கிற மாலை நேரங்களில் கண்ணில் பட்டால் வாங்க சார் வாக்கிங் போலாம் என்று நடராஜனுடன் கிளம்பிவிடுவார். இருவரும் ராகவேந்திரா நகர் தெருக்களில் உலவிவிட்டு அங்கேயிருக்கிற குட்டிப் பூங்காவுக்கு வந்து உட்கார்ந்து விடுவார்கள். நடராஜனுக்கு அப்படியொரு துணை அவசியம் வேண்டியிருந்தது. "உங்களை மாதிரி ரெண்டா பெத்திருக்கலாம் ராமநாதன். ஒண்ணே ஒண்ணைப் பெத்துட்டு.... பாருங்க....! அவஸ்தை! அவனும் பக்கத்தில இல்ல. முதுமைல தனிமைன்னு சொல்வாங்களே...."

"அப்படியெல்லாம் நினைச்சுக்காதீங்க சார். நாங்கெல்லாம் எதுக்கு இருக்கோம்." என்றார் ராமநாதன். அதென்னமோ தெரியவில்லை அவர்கள் குடிவந்த நாள் முதலாகவே அப்படியொரு ஒட்டுதலாகிவிட்டது. 'நாங்க இருக்கோம்' என்பது எப்போதும் எந்தச் சூழ்நிலையிலும் மிகப்பெரிய வார்த்தைகள். அது தரும் அர்த்தமும் பலமும் மிக சுகமானவை. நடராஜன் எப்போதும் மனிதர்கள் முக்கியம் என்று நினைக்கிற ஜாதி.

அந்த நினைப்புக்குக் குந்தகமாய் ஒரு மாசம் முன்பே நந்து போன் பண்ணிச் சொல்லிவிட்டான். 'வீட்டைக் காலி பண்ணி வைய்ங்கப்பா!! நான் வர்ரேன்'

சான்ஸே இல்லை.

நந்து அவன் பெண்டாட்டியுடன் சென்னை திரும்புகிறான். அவனுக்கு தனியாக நிச்சயம் ஒரு வீடு வேண்டும். அதற்காக ராமநாதனை காலி பண்ணச் சொல்வது நிச்சயம் தன்னால் முடியவே முடியாதென்று உறுதியாகத் தோன்றியது நடராஜனுக்கு. இதை நந்துவிடம் லேசாய் கோடி காட்டியபோது அவன் "பல வருஷம் ஒரே ஆளைக் குடிவெச்சா இதுதான் பிரச்சனை. நமக்குத் தேவைப்படும்போது நகர்த்தறது கஷ்டம்" என்று டெலிபோனிலேயே சலித்துக் கொண்டான். அதற்கப்புறம் அதுபற்றி அவனிடம் பேசவில்லை. அவன் வரும்போது பார்த்துக்கொள்ளலாம் என்று பிரச்சனையை தள்ளிப் போட்டுவிட்டார். சரசுவுக்கும் அவர்களைக் காலி பண்ணச்சொல்வதில் நடராஜனைப் போலவே உடன்பாடு இல்லைதான். ஒரு முறை ராமநாதனிடம் எதற்கும் சொல்லி வைக்கலாமா என்று நடராஜன் படியிறங்கிக் கீழே போனபோது நினைத்தபடி தொண்டைக்குள்ளேயிருந்து வார்த்தைகள் வரவில்லை. பேச வந்த விஷயத்தின் சாரத்தை அப்படியே விழுங்கிவிட்டு "என்.டி.டி.வி பாத்தீங்களா.. நேத்து ஆந்திராவில.. " என்று எங்கேயோ திசை திரும்பிவிட்டு வந்துவிட்டார். சொன்னால் புரிந்து கொண்டு ராமநாதன் ஒரு வேளை வேறு வீடு பார்த்துக்கொண்டு போகக்கூடும். ஆனால் வேண்டாம் என்று தோன்றிவிட்டது. இப்படியொரு பிணைப்பை ஒரு வார்த்தையில் அறுத்துப் போட்டுவிட விரும்பவில்லை. நந்துவிற்கு இந்த விஷயம் தெரியவே தெரியாது. அவன் வந்தவுடன் உடனே அந்த வீடு காலியாயிருக்கும் அல்லது காலியாகிவிடும் என்கிற நினைப்போடுதான் வந்திருப்பான். அவனிடம் தன் முடிவை இன்றிரவுக்குள் உடனடியாகத் தெரிவித்துவிட வேண்டியது அவசியம்.

ராமநாதனை காலிபண்ணச் சொல்லப் போவதில்லை.

நந்தனம் சிக்னலில் டாக்ஸி நிற்கும்போது நந்து மறுபடி ஆரம்பித்தான்.. "அப்பா ராமநாதன்கிட்ட நிஜமாகவே அந்த வீட்டைக் காலி பண்ணச் சொல்லிட்டீங்களா?"

நடராஜனுக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை. வந்ததிலிருந்து இதையே கேட்கிறான். ஒழுங்கான பதில் தெரியாமல் இவன் விடமாட்டான் போலிருக்கிறது. நடராஜன் மெல்லத் திரும்பி சரசுவைப் பார்த்தார். அவள் 'நீங்களாச்சு உங்க பையனாச்சு' என்பது போல் சட்டென்று ஜன்னல் குளிர்காற்றுப் பக்கம் முகத்தைத் திருப்பிக்கொண்டாள். நடராஜன் தீர்மானித்தார். இப்போதே அவனிடம் விஷயத்தைச் சொல்லிவிடலாம். அவன் என்ன நினைத்துக்கொண்டாலும் சரி! அவர் மெல்லத் தொண்டையை செறுமிவிட்டு வாயைத் திறக்கமுற்படும்போது நந்து இடைமறித்துச் சொன்னான்.

"ஏற்கனவே சொல்லியிருந்தீங்கன்னா.. அவங்களைக் காலி பண்ணவேண்டாம்னு சொல்லிருங்கப்பா.. நாம மேல் போர்ஷன்ல ஒண்ணாவே இருந்துக்கலாம்!!."

நடராஜன் நம்பாமல் திரும்பி அவனைப் பார்த்தார். "ஏண்டா திடீர்னு..."

"இல்லப்பா.. நாங்க கெளஹாத்தில குடியிருந்தோமில்லையா? அந்த வீட்டுச் சொந்தக்காரர் நாங்க காலி பண்ணிட்டுக் கிளம்பும்போது சட்டுன்னு அழுதுட்டார்ப்பா!. வி மிஸ் யூ. மிஸ் யூன்னு நூறுதரம் சொன்னார். வெறும் மூணு வருஷப் பழக்கம்தான். மனசெல்லாம் ரொம்பக் கஷ்டமாயிருச்சு. ட்ரெயின்ல வரும்போது ஒரே யோசனை. ராமநாதன் நம்ம வீட்ல எத்தனையோ வருஷமா குடியிருக்கறவர். நம்ம குடும்பத்தோட ரொம்ப அட்டாச் ஆன குடும்பம். அவங்களை திடீர்னு காலி பண்ணச் சொன்னா அவங்களுக்கு எப்படியிருக்கும்? அது உங்களுக்கும் அம்மாவுக்கும்கூட ரொம்ப கஷ்டமாயிருக்கும்னு தெரியும். வீடு ஈஸியா கிடைக்கும். இந்த மாதிரி மனுஷங்க கிடைக்கறதுதான்ப்பா கஷ்டம். அவங்க நம்ம வீட்டிலயே குடியிருக்கட்டுமே! என்ன சொல்றீங்க?" என்றான்.