மாயாஜால மழை

பல வருடங்களாக சென்னையில்தான் இருக்கிறேன். ஆனால் பார்க்கவேண்டும் என்கிற லிஸ்டில் இன்னும் காத்திருப்பிலேயே இருக்கிற மூன்று இடங்கள் : 1) பாண்டிச்சேரி 2) கிழக்குக் கடற்கரை சாலையிலுள்ள சோழமண்டலம் ஃபைன் ஆர்ட்ஸ் வில்லேஜ் 3) மாயாஜால்.

இந்த மாயாஜாலைப் பற்றி அநேகம் பேர் சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறேன். எங்கேயோ போகும்போது வழியில் பார்த்திருக்கிறேன். ஒரு சில சினிமாக்களில் நாயக நாயகிகள் சந்திக்கும் இடமாகக் கண்டிருக்கிறேன். மற்றபடி பயணிக்கிற தூரத்திலிருந்தும் போவதற்கான வாய்ப்பு அமையவில்லை. 

போனவாரம் ஒரு நண்பர் இந்த மாயாஜால் என்னுமிடத்தில் நடந்த ஒரு சம்பவத்தை என்னிடம் விவரித்தார். மாயாஜாலில் இரவு காட்சியோ ஏதோ ஒன்றிற்கு மனைவியுடன் போயிருக்கிறார். இருவரும் வேலை நேரம் முடிந்து நேராக அங்கே சென்று திரைப்படம் ஆரம்பிக்குமுன் அங்கேயே இரவு உணவை முடித்து விடலாம் என்று திட்டமிட்டிருக்கிறார்கள். ஆனால் அவர்கள் போன நேரம் அங்கேயிருக்கிற எல்லா உணவகங்களும் மூடப்பட்டிருக்கின்றன.

நண்பர் அங்கே அரை குறையாய் மூடப்பட்டிருந்த ஒரு உணவகத்தின் முன் நின்றிருந்த இளைஞரை அணுகி சாப்பிடுவதற்கு ஏதாவது எங்கேயாவது கிடைக்குமா என்று கேட்டிருக்கிறார். அவர் அந்த உணவகத்தில் வேலை செய்பவர் போலும். ‘எல்லாமே க்ளோஸ் பண்ணியிருப்பாங்களே சார்’ என்று சொன்ன இளைஞர் சில விநாடிகள் யோசித்துவிட்டு, ’சார் நீங்க தப்பா நினைக்கலேன்னா, நான் சாப்பிடறதுக்காக கொஞ்சம் எடுத்து வெச்சிருக்கேன். அதை சாப்பிடறீங்களா?’ என்று கேட்டிருக்கிறார். நண்பரோ சங்கோஜமாய் “அய்யய்யோ.. அதெல்லாம் வேணாம்.. ஒண்ணும் ப்ராப்ளமில்ல ப்ரதர்.. நாங்க மேனேஜ் பண்ணிக்கிறோம். கேட்டதுக்கு ரொம்ப தாங்க்ஸ்” என்றிருக்கிறார்.

ஆனால் இளைஞர் விடாமல், “சார்.. இந்நேரத்துக்கு நீங்க எங்க போய் சாப்பிடுவீங்க.. வாங்க சார்.. உக்காருங்க.. நான் எடுத்துட்டு வர்ரேன்.”

“இல்லைங்க.. பரவாயில்லை.. உங்களோடதை எங்களுக்குக் குடுத்துட்டு நீங்க சாப்பிடறதுக்கு என்ன பண்ணுவீங்க?”

”நான் வெளில போய்க்கூட சாப்டுக்குவேன் சார். நீங்க வாங்க!!” 

நண்பர் எவ்வளவு மறுத்தும் வலுக்கட்டாயமாக அவர்களை அழைத்து உட்காரச் சொல்லிவிட்டு உள்ளே போயிருக்கிறார் இளைஞர். 

இதென்னடா வம்பாகப் போயிற்று என்று நண்பரும் அவர் மனைவியும் தர்மசங்கடமாகக் காத்திருந்திருக்க, உள்ளூர ஒரு சந்தேகம் ஓடிக்கொண்டுதான் இருந்திருக்கிறது. என்னடா வலுக்கட்டாயமாக இழுத்து வைத்து உபசரிக்கிறானே.. இதற்குப் பின்னால் ஏதாவது சதி வேலை இருக்குமோ? காலம் வேறு போன வாரம் வாங்கின வாழைப்பழம் கணக்காக கெட்டுக் கிடக்கிறது. 

ஒரு சில நிமிடங்களில் அந்த இளைஞர் உணவோடு வருகிறார். அவர்கள் நினைத்ததோ அவர் சாப்பிடுவதற்காக வைத்திருந்த, ஆறிபோன எதையோ கொண்டுவரப்போகிறார் என்று. ஆனால் நடந்ததோ வேறு மாதிரி. 

பீங்கான் தட்டுக்களின் மேல் அலுமினியம் ஃபாயில்களில் அழகாக வைக்கப்பட்ட சூடான சப்பாத்தி, அதற்கு சைட் டிஷ்ஷாக இரண்டு பௌல்களில் அருமையான குருமா, இன்னும் இருவகை சட்டினிகள், கண்ணாடி தம்ளர்களில் குடிநீர், கை துடைக்க டிஷ்யூ பேப்பர் என அருமையாக கவனித்திருக்கிறார்.

எதிர்பாராத விருந்தோம்பல்தான் என்றாலும் தயக்கத்துடனும் குறுகுறுப்பான பயத்துடனும் சாப்பிட்டு முடித்திருக்கிறார்கள். சப்பாத்தியும் குருமாவும் சட்னியும் ரொம்ப சுவையாக வேறு இருந்திருக்கிறது. 

சாப்பிட்டு முடித்தபிறகு இளைஞரிடம் “இங்க பாருங்க.. இதுக்கு நாங்க பணம் குடுத்துடறோம். பாவம் நீங்க வேற வெளியே போய் சாப்பிடணுமில்ல..” என்று பர்ஸை எடுத்திருக்கிறார்.

அதற்கு இளைஞரோ பணம் எதுவும் வாங்க மறுத்து சிரித்தபடி “ச்சேச்சே... பணமெல்லாம் எதுக்கு சார்.. இது ஒரு நட்பா இருந்துட்டுப் போகட்டுமே...” என்றாராம்.

இந்த இடத்தில் “இந்த உலகத்துல இப்படியும் சில ஆத்மாக்கள் இருக்காங்க பாருங்க” என்று கதையை முடித்தார் நண்பர் என்னிடம்,

நேற்றைக்குப் பெய்த மழை அந்த இளைஞர் பொருட்டுதான் எல்லோருக்கும் பெய்ததோ என்னமோ!!

டீலக்ஸ் பஸ்


என் வீட்டிலிருந்து மகா தொலைவிலிருக்கும் சென்ட்ரல் ரயில் நிலையத்திலிற்கு இன்று காலை போக வேண்டியிருந்தது. நான் எப்பவும் தேர்ந்தெடுக்கிற பிரயாண உபாயம் முதலில் ஒரு பேருந்து பிடித்து பரங்கி மலை ரயிலடி வரை சென்று பிறகு எலெக்ட்ரிக் ட்ரெய்ன் பிடித்து ‘பார்க்’ -ல் இறங்கிக் கொள்வது.

இன்று அதேபோல் செய்ய நினைத்து வந்து நின்ற ஒரு பேருந்தில் ஏறி கண்டக்டரிடம் பத்து ரூபாயை நீட்டியபோது “இன்னும் ஒர்ருவா குடுங்க” என்றார். அதாவது ஏழு ரூபாய் டிக்கெட் இப்போது ரூபாய் பதினொன்று. வெறும் நாலேகால் கிலோமீட்டர் தூரத்திற்கு. ‘அட அநியாயமே..’ என்றார் பொது ஜனம் ஒருவர்.

பழக்க தோஷத்தில் கம்மியாக காசை நீட்டியவர்களிடமெல்லாம் ”பதினோரு ரூபா குடுங்க” என்று கட்டண உயர்வை நினைவு படுத்திக்கொண்டிருந்தார் கண்டக்டர். ஒரு மூதாட்டி “எப்பவும் ஏழு ரூவா தான? இன்னாத்துக்கு பதினோர்ரூவா கேக்குற?” என்று நியாயம் கேட்டதற்கு “இது டீலக்ஸ் பஸ்” என்றார் கண்டக்டர்.

இதைக் கேட்டதும் நான் பேருந்துக்குள் சுற்றுமுற்றும் பார்த்து ஏதாவது டீலக்ஸ்தனமான விஷயம் அகப்படுகிறதா என்று தேடினேன். சொல்லிக்கொள்கிறார்ப்போல் பெரிதாக ஒன்றும் இல்லை. சும்மா கைப்பிடிக் கம்பிகளுக்கு மஞ்சள் பெயிண்ட் அடித்து கல் மாதிரியிருக்கிற ரெக்ஸின் இருக்கைகள். அவ்வளவுதான். மற்றபடிக்கு சாதா பேருந்திற்கும் இதற்கும் என்ன வித்தியாசம் என்று புரியவில்லை. மாறாக, மெதுவாக ஓட்டினாலே அந்த பேருந்தை உருவாக்கப் பயன்படுத்தியிருந்த மொத்த தகரமும், ஃபைபர் சமாச்சாரங்களும், இன்னபிற முக்கிய உதிரி பாகங்களும் அநியாயத்துக்குத் தடதடத்தன. ட்ரைவர் ஒவ்வொரு தடவை கியர் மாற்றும் போதும் பிருஷ்டத்தில் “நங்”-கென்று ஒரு அதிர்வு ஓடியது. தவிர ஒவ்வொரு ஸ்டாப்பில் நின்று கிளம்பும் போதும் ”தடங்” என்று நடு ரோட்டில் எஞ்ஜின் தற்காலிக மரணமடைந்து கொண்டிருந்தது. “இன்னாப்பா ட்ரைவர்.. உன் டீலக்ஸ் வண்டிய எறங்கி தள்ளணுமா?” என்று பின்னாலிருந்து யாரோ குரல் கொடுத்தார்கள்.

கட்டணம் உயர்த்தப்பட்டு மூன்று நாட்களாகியும் மக்கள் அதிர்ச்சியிலிருந்து மீளவில்லையென்பது பேருந்தினுள்ளே கேட்ட சில சம்பாஷணைகளிலிருந்து தெரிந்தது. ஒரு சில பொதுஜனக் குமுறல்கள் நிஜமாகவே வருத்தத்தை வரவழைத்தன. விலைவாசி உயர்வு என்கிற ஏவுகணை நேரடியாக வந்து தாக்குமிடம் நடுத்தர மற்றும் அடித்தட்டு மக்களின் வயிறுதான் என்பது அவர்களின் பேச்சின் ஒவ்வொரு வரியிலும் வெளிப்பட்டுக்கொண்டிருந்தது. அங்கலாய்ப்புகளுக்குப் பிறகு அரசாங்கத்தைச் சபிக்கும் வார்த்தைகளும் வந்து விழுந்தன. நாலேகால் கிலோமீட்டரைக் கடப்பதற்குள் பேருந்துக் கட்டண உயர்வு பற்றி அநேகம் பேர் தங்களின் ஏகோபித்த எதிர்ப்பை காற்றில் பதிவு செய்திருந்தார்கள்.

பரங்கிமலை ரயிலடியில் இறங்கி மீதமுள்ள பதினேழேமுக்கால் கிலோமீட்டரை எலெக்ட்ரிக் ட்ரெய்னில் வெறும் ஐந்தே ரூபாய் மட்டும் கொடுத்து சென்றடைந்தேன். கூடிய விரைவில் இதையும் இரண்டுமடங்காக உயர்த்திவிட்டால் உலக அரங்கில் தமிழ்நாடு வல்லரசாக மாற பிரகாசமான வாய்ப்புள்ளது.

மக்களின் இந்தக் கட்டண உயர்வுக் கவலைகளை மறக்க நவீன எலைட் மதுபான பார்களைத் திறக்கவும் அரசு முடிவு செய்திருக்கிறதாகச் செய்திகள் கூறுகின்றன.

‘குடி’யுயர கோல் உயரும்தான்.

காலிக்கட்

ஒரு சில தினங்கள் முன்பு மாமா பெண்ணிற்குத் திருமணம் என்ற வகையில் நீண்ட காலத்திற்குப் பிறகு கடவுளின் சொந்த நாடான கேரளாவுக்குள் பிரவேசிக்க வாய்ப்புக் கிடைத்தது.  நடந்த இடம்: காலிக்கட் என்று பிரிட்டீஷாரால் திரிக்கப்பட்ட கோழிக்கோடு.

தென்னக ரயில்வேயின் இரண்டாம் வகுப்புப் பயணப் பெட்டியில் சென்னையிலிருந்து பன்னிரண்டு மணி நேர பயணம். இடையிடையே ஏதேதோ ஸ்டேஷன்களில் ஏறி ரிசர்வேஷன் ஸீட்டுக்களை அனுமதியில்லாமல் ஆக்கிரமிக்கிற பிரயாணிகள், கழிப்பறை நாற்றம், குடும்ப சமேதம் இருக்கைகள் முழுக்க ஊர்கிற கரப்பான் பூச்சிகள், நடு இரவில் மற்றவர் தூக்கத்தைப் பொருட்படுத்தாமல் இரைந்து பேசுகிற ஹிந்திக்காரர்கள், மொபைலில் FM பாட்டு போன்ற எல்லா உபாதைகளும் காலையில் கேரளத்தின் கோடானு கோடி தென்னை மரங்களைப் பார்த்ததும் மறந்துவிட்டது. பசுமை, மரங்கள், நீர் நிலைகள், பரந்து விரிந்து கிடந்த கல்லாயி ஆறு, வயல்கள், வரப்புகள், தோப்புகளுக்கு நடுவே தரவாட்டு மச்சுவீடுகள் என குளுமையாய் விரிகிற காட்சிகளில் மனம் மயங்கிவிட்டது.

Vasco da Gama
கோழிக்கோடு ஒரு சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த இடம். போர்ச்சுகீசிய மாலுமியான வாஸ்கோடா காமா 1498-ல் மூன்று கப்பல், 170 ஆட்கள் சகிதம் கடல்வழிப் பயணமாக இங்குதான் வந்திறங்கினார். முன்னாளில் மலபாரின் பகுதியாக இருந்த ஒரு நகரம்.

வசிப்பிடங்கள் பற்றிய ஒரு ஆய்வில் கோழிக்கோடு என்பது இந்தியாவில் வசிப்பதற்கேற்ற இரண்டாவது சிறந்த நகரம் என்று சொல்கிறார்கள். அது உண்மைதான் என்று நினைக்கும் வகையில் ஓரிரு விஷயங்கள் தென்பட்டன. சுத்தமாக இருக்கும் சாலைகள். மீட்டர் போடும் ஆட்டோக்கள். ரொம்ப இரைச்சல்கள் இல்லாமல் லேசாகத் தெரியும் சிறு சதவிகித சிங்கப்பூர்த்தனம்.

எங்கு பார்த்தாலும் ”ஊதும் அத்தரும்” என்று மலையாளத்தில் எழுதப்பட்ட ஏராளமான செண்ட் கடைகள் இருக்கின்றன. பக்கத்தில் போனால் கமகமவென்று மணக்கிறது. சவுதியிலிருந்து இறக்குமதியாகிற பொருட்கள் போலும். அடுத்த நாள் பக்ரீத் அன்று கோழிக்கோட்டின் பெரும்பாலான கடைகள் விடுமுறையாக இருந்தன. எங்கேயும் எப்போதும், 7ஆம் அறிவு, வேலாயுதம் என தமிழ்ப்பட போஸ்டர்களைக் காண முடிந்தது.

Calicut Beach
இரண்டு நாள் பயணம் என்பதால் திருமண மண்டபத்தைவிட்டு அதிகம் வெளியே செல்ல முடியாத சூழல் இருந்தது. கிடைத்த அவகாசத்தில் ஆட்டோவுக்கு ரூ 22.50 கொடுத்து இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் இருந்த தென்னைமரங்களுடன் கூடிய ஒரு கடற்கரைக்கு மட்டுமே செல்ல முடிந்தது. அதிகம் அலைகளில்லாமல் அமைதியான அரபிக்கடல். மேலே வட்டமிடும் ஏகப்பட்ட பருந்துகள் மற்றும் காக்கைகள். என்னடாவென்று உற்றுப் பார்த்தால், ரோமங்களுடன் கூடிய இரைச்சித் துண்டங்கள், குடல்கள், எலும்புகள் என்று எக்கச்சக்கமாய் கரை ஒதுங்க ஆரம்பித்தன. ஏதோ ஒரு பெரிய விலங்கினை துண்டு துண்டாய் வெட்டி கடலில் தூக்கி எறிந்த மாதிரி. அவைகளைக் கொத்திக் கொண்டு பறக்கும் காக்கைகளும் பருந்துகளும்.

ஒரு பரவசமான மனநிலைக்கு திருஷ்டியாய் அமைந்தது இந்தக் காட்சி மட்டுமே.