Showing posts with label சைக்கிள். Show all posts
Showing posts with label சைக்கிள். Show all posts

குரங்கு பெடல் என்றால் என்ன?

ஒரு வழியாக மகனுக்கு பாலன்ஸ் கிடைத்துவிட்டது. இது இரண்டாவது பாலன்ஸ். முதல் பாலன்ஸ் தவழ்கிற குழந்தை என்கிற நிலைப்பாட்டிலிருந்து ‘நடக்கிற குழந்தை’ என்கிற நிலையை அடைந்தது. அப்போது எல்லாக் குழந்தைகள் போலவும் ‘பொதக் பொதக்’ என்று நிறைய தடவை விழ வேண்டி வந்தாலும் தன் முயற்சியில் சற்றும் மனம் தளராமல் எப்படியோ நடக்கவும் பிறகும் ஓடவும் பழகிக் கொண்டான்.

ஓடப் பழகின பிறகு ஓட்டப் பழகவேண்டாமா? முதலில் வாங்கின மூன்று சக்கர சைக்கிள் மோகம் முடிந்து (நான் கூட அவ்வப்போது ஓட்டுவதுண்டு) ஹாண்டில் பாரில் அவனது முழங்கால் இடிக்க ஆரம்பித்தவுடன் மாநாடு கூட்டி அவனுக்கு பெரிய சைக்கிள் வாங்கலாம் என முடிவானது. பி.எஸ்.ஏ ராக்கெட் என்று போட்ட ஒரு சின்ன இரண்டு சக்கர சைக்கிள் (சைடு வீலையும் சேர்த்தால் நான்கு) வாங்கிவந்தோம். பேர்தான் ராக்கெட் என்று போட்டிருந்தார்களே தவிர தரையில் தான் ஓடியது.

ஆனால் அந்த சைக்கிளில் ஒரு பிரச்சனை. அது மகனைவிடப் பெரியதாக இருந்தது. அதாவது அவன் இன்னும் நான்கைந்து வருடங்கள் கழித்து ஓட்டவேண்டியதை அப்பொழுதே வாங்கிவிட்டேன். இருந்தாலும் சீட்டையும், ஹாண்டில் பாரையும் கொஞ்சம் தணித்து இறக்கித் தந்ததில் அதில் எப்படியோ ஏறப் பழகி மூன்றாவது மாடி வராந்தாவிலும், மொட்டை மாடியிலுமாக ஓட்ட முயற்சித்துக் கொண்டிருந்தான். கீழே விழாமலிருக்க சைடு வீல்கள் துணை புரிந்தாலும் அபார்ட்மெண்ட் வாசிகளுக்கு ஓட்டும்போது டர்ர்ர்ர் என்ற அதன் நாராசமான சத்தம் அத்தனை ரசிக்கவில்லை. அதற்காக அவனை ரோட்டில் போய் ஓட்ட வைக்கிற மயிர்க்கூச்செரியும் அட்வென்ஞ்சரை நான் எடுக்கத் தயாரில்லை.

சில நாட்கள் வேறு வழியில்லாமல் ஹாலுக்கும் பெட்ரூமுக்கும் கிடைத்த இடைவெளிகளில் கூட ஓட்டுவான். சில நாட்கள் இரவு உணவு முடித்துவிட்டு நடு ஜாமத்தில் ட்ராஃபிக் அடங்கின எங்கள் தெருவில் அவன் பின்னாலேயே ஓடி ஓடி உண்ட உணவு செரித்துக்கொண்டிருந்தது. அதிலும் முக்கியம் அங்கேயிருக்கிற மற்ற அபார்ட்மெண்டுகளில் பார்க்கிங் இல்லாமல் ரோட்டிலேயே நிறுத்திவைத்திருக்கும் கார்களின் மேல் அவன் சைக்கிள் மோதி கீறல் போடாமல் இருக்கவேண்டுமே என்கிற கவலை மூச்சிரைப்போடு சேர்ந்து பொங்கிவரும்.

“ப்ராண்ட் நியூ கார் ஸார் இது.. டெலிவரி எடுத்து ஒரு வாரம்கூட ஆகலை. பாருங்க எவ்ளோ பெரிய கீறல். உங்க மகனுக்கு சமூகப் பொறுப்புன்னா என்னன்னு நீங்க கத்துக் குடுத்திருக்க வேணாமா? திஸ் இஸ் ரிடிகுலஸ்.  எனக்கு மிகப் பெரிய மன உளைச்சலாயிருச்சு. கீறலுக்கான நஷ்ட ஈடா  பதினைந்தாயிரத்தை...”

என்று யாராவது கனவான் கேட்டில் நின்றுகொண்டு கத்துவதை கற்பனை செய்துகொண்டு அந்த பயத்துடனேயே மகனுக்கும் கார்களுக்குமிடையே இடைவெளி ஏற்படுத்துகிற முனைப்பிலேயே ஓட்டம் கழியும். சைக்கிள் அவன் உயரத்திற்குப் பொருந்தாமல் உயரமாக இருந்ததாலும், அவ்வப்போது சீறி வருகிற ஆட்டோ, பைக்வாலாக்களுக்கு பயந்து தடுமாறியதாலும் மற்றும் சென்னை சாலைகளின் பிரத்யேக அடையாளமான திடீர்க் குழிகளினாலும் அவ்வப்போது தடுமாறி விழவும் செய்தான். பாலன்ஸூம் கிடைக்காமல் சாய்ந்த நிலையிலேயே ஓட்டி ஓட்டி பக்கவாட்டுச் சக்கரங்களும் தேயத் தொடங்கியிருந்தது. நொடிகளும், நிமிடங்களும், நாட்களும், வருடங்களுமாக உருண்டோடியது. இந்த பெரு நகரத்துக்குள் வாழ்வின் அத்தியாவசிய தேவையான சைக்கிள் ஓட்டுதலைக் கற்றுக் கொடுப்பதற்குள் வுதா (இது ஒரு கெட்டவார்த்தை என யாரோ சொன்னதால் தலைகீழாக எழுதியிருக்கிறேன்) தீர்ந்து போய்விடும் என்று தான் தோன்றியது.

ஆனால் இந்தக் கோடை விடுமுறையின் போது ஊருக்குப் போய் அங்கே மரங்கள் சூழ்ந்த, சுத்தமாய் போக்குவரத்து இல்லாத, அகலமான ரோடுகள் கொண்ட மின்சார வாரிய குவார்டர்ஸூக்குள் அக்கா பசங்களின் (சைடு சக்கரங்கள் இல்லாத) சைக்கிள்களை ஓட்டி ஒரே நாளில் அட்சர சுத்தமாக நன்றாய் சைக்கிள் பழகிவிட்டான். ஆக வாழ்க்கைக்குத் தேவையான இரண்டாவது பாலன்ஸூம் ஒரு வழியாய்க் கிடைத்துவிட்டதில் அக மகிழ்வு ஏற்பட்டுவிட்டது.

இன்றைக்கு அவன் சைக்கிளை விட கொஞ்சம் உயரமாய் வளர்ந்துவிட்டான்.  சைடு வீல்களையும் நீக்கியாயிற்று. சீறுகிற ஆட்டோக்களை லாவகமாய்த் தவிர்க்கவும் பழகிவிட்டான். ரொம்ப குள்ளமாய் இருக்கிறதென்று ஸீட்டை கொஞ்சம் இன்னும் ஏற்றித்தரமுடியுமா என்று கேட்கிறான். இல்லையென்றால் கியர் எல்லாம் வைத்து மவுண்டன் பைக் டைப்பில் வேறு பெரிய சைக்கிள் வேண்டுமாம்.

நான் எண்பதுகளின் ப்ளாஷ்பேக் காட்சியொன்றை நினைவுகூர்ந்து அவனிடம் சொன்னேன். “நாங்கெல்லாம் எங்களை விட பெரிய சைக்கிள்ள குரங்கு பெடல் போட்டு ஓட்டிப் பழகினோம். இனி அந்த அனுபவமெல்லாம் உங்கள மாதிரி சிட்டிப் பசங்களுக்குக் கிடைக்காதுடா..”

“குரங்குப் பெடல்னா என்ன” என்றான்.

இந்த பதிவை போஸ்ட் பண்ணி முடித்தபிறகு விளக்குகிறேன் என்று சொல்லியிருக்கிறேன்.