சென்ற வெள்ளி - சனியில் பன்றிக் காய்ச்சல் எச்சரிக்கைகளையும் மீறி என் பையன் படிக்கும் பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. அவன் படிக்கிற ’நாலாப்பு’ சார்பாக கையில் ஒரு ரிமோட் கண்ட்ரோல் எஸ்கவேட்டர் கொடுத்து ஒரு அறையில் நிற்க வைத்துவிட்டார்கள். கண்காட்சிக்கு வருகை புரிபவர்கள் அவனிருக்கிற குறிப்பிட்ட பகுதிக்கு வந்ததும் "This is called excavator. This is used for digging the trenches, holes... " என்று டீச்சர் சொல்லிக்கொடுத்த ப்ளா ப்ளா-க்களை மள மளவென ஒப்பிக்க வேண்டும். (நானே நான்கு தடவை அவனருகில் போய் நின்று “can you please explain this?" என்று கேட்க சின்ன தயக்கச் சிரிப்புடன் சளைக்காமல் விளக்கினான்)
சரி ஸயின்ஸ் எக்ஸ்போவில் அப்படி என்னதான் இருக்கிறதென்று பார்க்கலாமே என்று போனவனுக்கு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது. சும்மா சொல்லக் கூடாது. டீச்சர்களும், மாணவ மாணவிகளும், பள்ளி நிர்வாகமும் ஒன்று சேர்ந்து அற்புதமாகக் கலக்கிவிட்டார்கள். க்ரவுண்ட் ஃப்ளோரில் சிவப்புக் கம்பளம் விரித்து எல்.சி.டி. டிவியில் நிகழ்ச்சிகளின் வீடியோ விரிய, ஸ்பீக்கரில் இசை முழுங்குகிறது. இதை வந்து பாருங்கள் அதை வந்து பாருங்கள் என்று மாடிப் படிகள் முழுக்க மாணவர்கள் தயாரித்து ஒட்டிய விளம்பர நோட்டீஸ்கள். அலங்கார வளைவுகள். கலை நயம். ஜிகினா.
மெட்ரோ ரயில் சிஸ்டம், ஹைட்ரோ பவர் சிஸ்டம், டெலி கம்யூனிகேஷன் நெட்வொர்க், ரோபோட்டிக்ஸ், ஓரிகமி, டேன்கிராம்ஸ், குளோபல் வார்மிங் என்று ஒரு சப்ஜெக்டையும் விட்டு வைக்காமல் பள்ளிக் கட்டிடத்தின் மூன்று தளங்களிலும் கலக்கலான செட்டப்புகள். முக்கால்வாசி சாதனங்களை தெர்மோகோல், ஃபெவிகால், வாட்டர்கலர் கொண்டே தயாரித்து விட்டார்கள். சின்னச் சின்ன பொடிசுகள் லேப்டாப், ப்ரொஜக்டர்கள் எல்லாம் வைத்துக் கொண்டு விண்டோஸ் மூவி மேக்கரில் தயாரித்த வீடியோ படங்களை இயக்கிக் கொண்டிருந்ததைப் பார்த்தபோது ’ஆச்சரியத்தால் கண்கள் விரிந்தன’ என்று அடிக்கடி இந்த எழுத்தாளர்கள் எல்லாம் எழுதுகிறார்களே அது என்ன என்று புரிந்தது.
ஒவ்வொரு பிரிவிலும் நிற்க வைக்கப்பட்டிருந்த குழந்தைகள் நாம் உள்ளே நுழைந்ததும் போட்டி போட்டுக் கொண்டு “அங்கிள்! (அல்லது ஆண்ட்டி) can I explain this?" என்று கேட்டுவிட்டு ஜெட் வேகத்தில் ஆங்கிலத்தில் குறைந்தது ஐம்பது விநாடிகள் பட்டையைக் கிளப்பிவிட்டு கடைசியில் “தேங்ங்ங்ங்க்க்க்க்க்யூ” என்று ராகம் பாடி முடித்தன. மனப்பாடம் செய்து கொண்டு ஒப்பிக்கிறதுகள் என்றாலும் ஒவ்வொரு டேபிளிலும் பொறுமையாய் அந்த மழலைக் குரல்களை ஓரிரு நிமிடங்கள் கேட்டுக் கொண்டிருப்பது மிகப் பெரிய சுகம். அநியாயத்துக்கு இத்தனை பேர் ’படிப்ஸ்’ஆக இருக்கிறார்களே என்று ஆச்சரியமாக இருந்தது. அதுவும் க்ளோபல் வார்மிங் பற்றி விளக்கின பையனிடம் நான் ஏதோ சந்தேகம் கேட்க. “இட் இஸ் தேர் இன் த இண்டெர்நெட் அங்கிள். யு கேன் டவுன்லோட் இட் ஃப்ரம் தேர்.” என்று முத்தாய்ப்பு வைத்தான். சொல்லி முடித்தபிறகு அவர்கள் நீட்டுகிற Feedback நோட்டுப் புத்தகத்தில் உங்கள் பெயரெழுதி உங்கள் கருத்தை அல்லது பாராட்டை எழுதிக் கொடுத்தீர்களானால் குழந்தைகள் முகத்தில் பொங்குகிற சந்தோஷம் இருக்கிறதே. அப்பப்பா! (சொக்கன் கவனிக்க). நான் நீட்டப்பட்ட நோட்டுகளில் எல்லாம் “excellent presentation" என்று தாராளமாக எழுதிக் கொடுத்தேன். (ஆனால் பாராட்டி கை கொடுத்தால் மட்டும் பன்றிக் காய்ச்சல் பயத்துடன் கையை பின்னுக்கு இழுத்துக் கொள்கிறார்கள். அப்புறம் என்னை நானே திட்டிக்கொண்டு அதை தவிர்க்க ஆரம்பித்தேன்.)
ஆறாங்கிளாஸ் படிக்கிற மூன்று சிறுமிகள் அவர்களின் கிளாஸ்மேட்டுகளான சில வாண்டுப் பையன்களைக் காட்டி “அங்கிள்! கன் வி எக்ஸ்ப்ளெய்ன் அபெளட் தெம்” என்று குசும்புச் சிரிப்புடன் கேட்க, நானும் என்னவென்று புரியாமல் தலையாட்ட, “தெ ஆர் ஆல் மங்கீஸ். தெ ஹவ் எஸ்கேப்ப்டு ஃப்ரம் வண்டலூர் ஜூ. தெ நார்மலி ஈட் பனானாஸ்” என்று கலாய்த்து வெடிச்சிரிப்பு சிரித்தார்கள்.
இதைக் கேட்டதும் ஒரு தடவை என் பையனுக்கும் எனக்கும் இரவு தூக்கம் வருவதற்கு முந்தைய பொழுதில் நடந்த சம்பாஷணை ஞாபகத்திற்கு வந்தது.
நான்: குரங்கிலிருந்து மனுஷன் வந்தான்னு யார் கண்டுபுடிச்சா தெரியுமா?
பையன்: ஆங்... தெரியும். லெஸன்ல இருக்கு. அது வந்து...
நான்: சார்லஸ் டார்வின்
பையன்: ஆ! ஆமா.. டார்வின் தியரி..
நான்: கரெக்ட்டு.. மில்லியன் மில்லியன் வருஷத்துக்கு முன்னால குரங்கா இருந்து அதிலேர்ந்து கொஞ்சம் கொஞ்சமா மனுஷன் வந்தான். அப்போ அவனுக்கு உடம்பு பூரா நிறைய முடி இருந்துச்சு. வால் இருந்துச்சு. கை காலெல்லாம் பெருசு பெருசா இருக்கும். மரத்துக்கு மரம் தாவிகிட்டு இருந்தான். அப்றம் அதெல்லாம் போய் இப்போ பாத்தியா இப்ப என்னை மாதிரி ஆயிட்டான்.
பையன்: (மெளனமாய் சில விநாடிகள் யோசித்துவிட்டு) “அப்ப இதுக்கு முன்னாடி நீ கொரங்கா இருந்தியா?”.
அடுத்த ஜெனரேஷன் பசங்களிடம் கொஞ்சம் அல்ல நிறையவே ஜாக்கிரதையாகத்தான் இருக்கவேண்டும் என்று தோன்றுகிறது.
Dear Chitran Sir, Thank you for sharing the wonderful experience you had with our future generation wiz kids.
ReplyDeleteWhat you said is very correct, we have to be extra extra careful with current generation kids.
Thanks again.
மிக நன்றாக எழுதியிருக்கிறீர்கள் சித்ரன், நன்றி!
ReplyDeleteஎன் மகளின் (வயது ஐந்தரை) பள்ளியில் ஓவியங்கள், குட்டிச் சிற்பங்கள் என்று அவர்களே உருவாக்கியவற்றைப் பாதுகாத்துவைத்து, மூன்று மாதத்துக்கு ஒருமுறை பெற்றோர் - ஆசிரியர் கூட்டத்தில் எங்களிடம் தருவார்கள். அப்போது அதை வீட்டுக்குக் கொண்டுவந்தால் ஒவ்வொன்றாக எடுத்துவைத்து அது எப்போது செய்தது, எப்படிச் செய்தது என்று அவள் விவரிக்கும்போது, ‘நாமும்தான் படிச்சோம், ஹூம்’ என்றிருக்கிறது :) இப்போதெல்லாம் பாடப்புத்தகத்தைவிட இதுபோன்ற சமாசாரங்களுக்கு அதிக முக்கியத்துவம் தருவது ரொம்ப நல்ல விஷயம்.
- என். சொக்கன்,
பெங்களூர்.
அருமையானப் பதிவு நண்பரே. பிள்ளைகளுக்கு சிறுவயது முதலே அறிவியல் அறிவை வளர்க்க நாம்தான் வழிவகுக்க வேண்டும். அதனால் தான் சினிமா அது இதுவென்று பதிவுகள் போட்டுக்கொண்டிருந்த நான், இப்போதெல்லாம் வெறும் விஞ்ஞானப் பதிவுகளையே பதிவிடுகிறேன்,.... வரவேற்ப்பு இருக்கிறதோ இல்லயோ! வாழ்த்துக்கள்.
ReplyDeleteநன்றி! செந்தில், சொக்கன், M.S.E.R.K.
ReplyDelete@சொக்கன் : போன வாரம் பையனின் வகுப்பில் river system என்று ஒன்றை செய்து கொண்டு வரச்சொன்னார்கள். நானும் மனைவியும் உட்கார்ந்து தெர்மோல் எல்லாம் கட் பண்ணி மாங்கு மாங்கென்று உருவாக்கினோம். இந்தக் காலத்தில் அதிகபட்ச பள்ளிக்கூட ஹோம் ஒர்க்குகள் பெற்றோர்களுக்குத்தான் என்பதையும் இங்கே சொல்லியாக வேண்டும்.
@MSERK: நேரம் கிடைக்கும் போது நிச்சயம் உங்கள் விஞ்ஞான வலைப் பதிவுகளைப் படிக்கிறேன். தொடர்ந்து எழுதுங்கள்.
reminds me of our school days and the science exhibitions we used to do.... super-ah solirukeenga, just brought those days before eyes..
ReplyDeleteand ROFL about the last conversation :-))))))))))))))))))
// ஆனால் பாராட்டி கை கொடுத்தால் மட்டும் பன்றிக் காய்ச்சல் பயத்துடன் கையை பின்னுக்கு இழுத்துக் கொள்கிறார்கள். //
ReplyDeleteYou could have taken some anti germ clean handwash liquid ( non washable ) with you... All doctors use. FYI. Schools can be suggested.
நேற்றைக்கு இங்கே பின்னூட்டம் இட்டபோது ஒரு விஷயம் சொல்ல மறந்துபோனது:
ReplyDeleteஆப்பிள் நிறுவனர்களில் ஒருவரான ஸ்டீவ் வாஜ்னியாக் பள்ளி மாணவராக இருந்தபோது இதுபோன்ற அறிவியல் கண்காட்சிகளில் ஆர்வத்துடன் பங்குபெற்றிருக்கிறார், கிட்டத்தட்ட அவருடைய கண்டுபிடிப்பு ஆர்வம் மொத்தமும் கண்காட்சிகளில் பங்கேற்பது, பரிசு பெறுவது என்று தொடங்கியதுதான், பின்னர் சொந்தமாகக் கம்ப்யூட்டர் வடிவமைப்பதில் போய் நின்றது, இதையெல்லாம் அவர் தனது சுயசரிதையான ‘iWoz'ல் விரிவாகவும் சுவாரஸ்யமாகவும் எழுதியிருக்கிறார்!
- என். சொக்கன்,
பெங்களூர்.
சொக்கன், ஸ்டீவ் வாஜ்னியாக் பற்றிய தகவலுக்கு நன்றி. வாழ்க்கையின் மிகப் பெரிய சுவாரஸ்யமே (அல்லது திகிலே) பிள்ளைகள் வளர்ந்து என்னவாக ஆவார்கள் என்பது இப்போதே தெரியாமல் இருப்பதுதான் என்று நினைக்கிறேன். எதுவானாலும் ஆர்வத்தை வளர்ப்போம்.
ReplyDelete