ரோம் - பயணக் கட்டுரை

'இத்தாலியிலுள்ள ரோம் ஒரு அழகிய நகரம். அனைவரும் வாழ்க்கையில் ஒருமுறையேனும் நிச்சயம் பார்க்கவேண்டிய இடம்' என்று ட்விட்டரில் எழுதிவிட்டுப் போய்விடலாம் என்றுதான் முதலில் நினைத்தேன். அப்படியே எழுதிப் போட்டாலும் ட்விட்டரில் இன்னும் 39 எழுத்துக்கள் மிச்சமிருக்கும் என்பதாலும், மிகத் தொன்மையான நகரமான ரோமின் உலகளாவிய பேரழகை இப்படி ஓரிரு வரிகளில் சொல்லிவிட்டுப் போனால் 16-ஆம் நூற்றாண்டு ரோமாபுரி பேரரசர்களின் ஆவிகள் என்னை மன்னிக்காது என்பதாலும் ஒரு சிறிய பதிவாகப் போட்டுவிடுகிறேன்.

நான் முதலில் சென்று இறங்கிய இடம் லியனார்டோ டாவின்ஸி ஃபியுமிசீனோ விமானநிலையம் என்றெல்லாம் எழுதி உங்களுக்கு ஆயாசத்தை உண்டு பண்ணப் போவதில்லை. இறங்கின இடமும் திரும்பிய இடமுமா முக்கியம்? எப்போதும் மெயின் பிக்சர்தானே நமக்கு முக்கியம். ஆகவே நேராக தெருவில் இறங்குகிறேன். ஒரு நகரம் என்பது தெருக்களின் தொகுப்புதானே?

இத்தாலிய மொழியில் ரோமா என்றும் செம்மொழியாம் தமிழ் மொழியில் உரோமை நகரம் என்றழைக்கப்படும் இந்நகரமானது கி.மு.753-ல் அமைக்கப்பட்டு அப்போதிருந்தே மக்கள் வசிக்க ஆரம்பித்த வரலாற்று விவரங்கள் எல்லாம் நேரமும் வாய்ப்பும் இருந்தால் இன்னொரு பதிவில் விவரமாய் எழுதி விடுகிறேன். ஏனென்றால் இது ஒரு மிகச் சிறிய பயணக்கட்டுரை மட்டுமே.

"All roads lead to Rome" என்று எதற்காகச் சொன்னார்கள் என்பது இப்போது தெள்ளத் தெளிவாகப் புரிந்துவிட்டது. உலகம் முழுவதுமுள்ள, பயணங்களை விரும்புகிற மக்கள் அனைவருக்குமான வாழ்நாள் டூரிஸ்ட் டெஸ்டினேஷன் இது. பின்னே உலகின் மொத்த அழகும் இங்கேயே கொட்டிக்கிடந்தால் மக்கள் வேறு என்னதான் செய்வார்கள்?

ரோமுக்குள் நுழைந்தவுடனேயே வாட்டிகன் மியூசியம், போர்கீஷ் காலரி மற்றும் ம்யூசி கேப்பிடோலினி, கலோசியம் ஆகிய நான்கையும் முதலில் பார்த்துவிடவேண்டுமென்று ஒரே துடிப்பாய் துடித்தது மனது. (இந்த மாதிரி இடங்களின், தெருக்களின் பெயர்களை நான் சரியாக உச்சரிக்கவில்லை எனில் இத்தாலிய மக்கள் கோபித்துக் கொள்வார்களோ என்ற பயமும் இருந்தது). ரோம் பற்றியெரிந்தபோது நீரோ மன்னன் பிடில் வாசித்துக்கொண்டிருந்த இடம் எங்கேயிருக்கிறதென்று யாரிடமாவது கேட்டால் அடிக்க வருவார்களோ என்ற யோசனையுடன் ஊர் சுற்றக் கிளம்பினேன்.

ரோமர்கள் அவர்களது ஆட்சிக்காலத்தில் ரொம்ப போரடித்தால் உயர உயரமாய் தூண்கள் வைத்து வானளாவிய கட்டிடங்களை எழுப்புவார்கள் என்று கருதத்தக்க வகையில் பிரம்மாண்டங்கள், சிதிலங்கள், வரலாற்று மிச்சங்கள், புராதனம், வெள்ளையும் கருப்புமாய் மிகப் பெரிய சிலைகள். நம்மூரின் கட்டிடங்களுக்கும் ரோமாபுரியின் கட்டிடங்களுக்கும்தான் எத்தனை வித்தியாசங்கள்!! ரோமர்களின் ஆர்க்கிடெக்ச்சர் நுட்பங்கள் அப்படி வியப்பளிப்பதாக இருக்கிறது. அதுவும் கட்டிடங்களில் இந்தத் தூண்கள் இருக்கிறதே! அப்படி ஒரு ஆகிருதி. ஒவ்வொரு தூணும் பத்து பேர் சேர்ந்து கட்டிப்பிடிக்கவேண்டும் என்பது போல் இருக்கின்றன. ஆனால் எட்டிப் பிடிக்க வேண்டும் என்றால் அது நடக்காது. அவ்வளவு உயரம். ஆக ரோம்-ஐ தூண்களின் நகரம் என்று சொன்னால் அது மிகையாகாது.

ரோமன் ஹாலிடேஸ் என்னும் கருப்பு வெள்ளைத் திரைப்படத்தில் நான் கண்ணுற்ற ரோம் இப்படி வண்ணமயமாய் காணக் கிடைக்குமென்று கனவிலும் நினைக்கவில்லை. இதை நினைக்கும் இதே நேரம் அந்தப் படத்தில் நடித்த அந்நாள் அழகுப் பதுமை ஆட்ரே ஹெப்பர்ன் (Audrey Hepburn) பற்றியும் ஒரிரு விநாடிகள் மறைந்த எழுத்தாளர் ஆதவன் உபயத்தால் நினைவு கூர முடிந்தது.

Piazza Venezia (நகரத்தின் இதயம் என்று பொருள்படும்) என்கிற இடத்தில் Altare Della Patria என்ற புராதன வரலாற்று கட்டிடம்... ச்சே!! அதை கட்டிடம் என்று சொல்லுவது ரோமாபுரிவாழ் மக்களைக் கேவலப்படுத்துவது போலாகும் - ஆகவே அரண்மனை? சரி.. ஏதோ ஒன்று. இங்கும் மறுபடி பிரம்மாண்ட தூண்கள். இதற்குமுன் இருக்கும் ஒரு மிகப் பெரிய சிலையருகே என்னைப் போலவே உலகமெங்குமிருந்தும் வருகை புரிந்திருக்கும் சுற்றுலாப் பயணிகளை பெருமளவில் காணமுடிந்தது. இதுபோல எண்ணற்ற கட்டமைப்புகள். எண்ணற்ற பழங்காலச் சின்னங்கள். எண்ணற்ற.. எண்ணற்ற.. ம்ம்.. சரி விடுங்கள்.

ரோமிலுள்ள ஒவ்வொரு வீட்டுக்குள்ளும் கட்டிடத்துக்குள்ளும் சென்று சுற்றிப் பார்த்துவிட்டு வரவேண்டும் (விடுவார்களா தெரியவில்லை) என்கிற அளவுக்கு எல்லாமே அழகழகாய் இருக்கின்றன. நம்புங்கள்!! ரோம்-ல் உள்ள எல்லா இடங்களையும் ரசித்து அனுபவித்துப் பார்க்க வேண்டுமென்றால் நம் ஆயுள் போதாது என்று தோன்றிவிட்டது. ஏனென்றால் அவைகளையெல்லாம் கட்டி முடிப்பதற்கே அவர்கள் ஆயுள் போதவில்லை பாருங்கள். எனக்குக் கூட எதை சொல்வது எதை விடுவது என்று தெரியாமல் தடுமாறுகிறது. அத்தனை அத்தனை..

அதே மாதிரி சர்ச்சுகளை எடுத்துக்கொண்டால் ஒரு பெரிய லிஸ்ட்டே போடுமளவுக்கு இருக்கிறது என்றார்கள். யாராவது ஏற்கனவே அந்த லிஸ்ட்டைப் போட்டிருப்பார்கள் என்பதால் நான் அதை செய்யவேண்டாமென்று தீர்மானித்தேன். ஆனால் நான் பார்த்தவரையில் எனக்கு எந்தச் சர்ச்சும் கண்ணில் படவில்லை. அல்லது பார்த்தது எல்லாமே சர்ச்தானா?

சிங்கப்பூர் மாதிரியே சாலைகள் படு சுத்தம். எல்லோரும் தூங்கிக் கொண்டிருக்கும்போது வானத்திலிருந்து யாரோ கூட்டமாய் இறங்கிவந்து இரவோடு இரவாக குப்பைகளை அள்ளித் துடைத்துவிட்டுப் போய்விடுவார்கள் என்று நினைக்கும்படிக்கு அபார சுத்தம். ஆனால் பார்த்த சில இடங்களில் உறுத்தின ஒரே விஷயம் கார்களும் ஸ்கூட்டர்களும் (டூ வீலரில் அதிகம் ஸ்கூட்டர்கள் போன்ற வாகனங்களைத்தான் பயன்படுத்துகிறார்கள்) பல இடங்களில் ஒழுங்கு இல்லாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதுதான். நேனோ மாதிரி குறுங்கார்கள் நிறைய கண்ணில் பட்டன. சர்வசாதாரணமாக ஏழு எட்டு சாலைகள் ஒருங்கே சந்திக்கும் வீதி முக்குகள் இருக்கின்றன. இந்த மாதிரி முக்குகள் நம்மூரில் இருந்து வீதி முனையில் ட்ராஃபிக் போலீசை நிற்கவைத்தால் முழி பிதுங்கிவிடுவார் என்று நினைக்கும் போது பாவமாக இருந்தது. ரோமில் மக்கள் தொகை குறைவு என்பதால் ’பாரத் பந்த்’ தினம் மாதிரி நிறைய சாலைகள் வெறிச்சோடிக் கிடக்கின்றன.

எங்கேயும் போக்குவரத்து நெரிசலே இல்லை. Iron Man, Saw IV போன்ற ஆங்கிலப் படங்கள் ஓடிக்கொண்டிருந்த தியேட்டர் வாசலில் நான்கே நான்கு இருசக்கர வாகனங்கள் மட்டுமே இருக்க மொத்தமாய் காற்று வாங்கிக் கொண்டிருப்பதைக் காண முடிந்தது. நம்மூர் தாழ்தள சொகுசுப் பேருந்தின் பத்தாவது வெர்ஷன் மாதிரியான பஸ்கள் நல்ல சிவப்பு நிறங்களில் சாலையெங்கும் ஓடுகின்றன. மக்கள் நவீனமாக வண்ணமயமாக உடையணிகிறார்கள். பெரிய கொட்டை எழுத்துக்களில் பார்கள் நம்மை இழுத்து வரவேற்கின்றன.

ரோமில் பார்க்க வேண்டிய சுற்றுலாத் தலங்கள் யாவை என்று குத்துமதிப்பாக ஆராய்ந்ததில் கீழ்கண்ட லிஸ்ட் கிடைத்தது. மேற்சொன்ன வாட்டிகன் ம்யூசியம் இன்னபிற இடங்கள் தவிர Colosseum, Trevi Fountain, Spanish Steps, Villa Borghese, Galleria Doria Pamphilj, Castel Sant'Angelo, Via Condotti, Piazza del Popolo, Imperial Forum, St. Peter's Basilica, Piazza Navona என்று பட்டியல் நீண்டுகொண்டே போனது. வாயிலும் பிறகு ஞாபகத்திலும் நுழையாத பெயர்கள் என்றாலும் எல்லாவற்றையும் எப்போது பார்த்து முடிப்பது என்று மலைப்பாக இருந்தது. ஷாப்பிங் போகவேண்டும் என்றால் Piazza Spagna என்ற இடத்திற்கருகிலுள்ள (ஸ்பானிஷ் ஸ்டெப்ஸ்-க்கும் கூட இது பக்கந்தான்) ஷாப்பிங் ஏரியா மிகப் பிரபலமாம். சிங்கப்பூர் முஸ்தபா சென்டர் மாதிரி ஏதேனும் சல்லிசாகக் கிடைக்குமா என்று விசாரிக்கவேண்டும்.

Piazza Spagna என்றதும் பீட்சா ஞாபகம் வந்து திடீரென பசிக்கிற மாதிரி இருந்தது. எங்கேயாவது நல்ல பீட்சா கார்னர் தென்படுகிறதா என்று Via Cola di Rienzo பக்கத்தில் தேடிக் கொண்டிருந்தபோது தோளில் ஒரு கை விழுந்தது. திரும்பிப் பார்த்தால் என் மனைவி. கண்கள் விரிய ஆச்சரியப்பட்டு “ஏய்.. நீ எப்படி இங்க.. ரோமாபுரி-ல?” என்று கேட்பதற்குள் மனைவி முறைத்தபடி.. “ஒக்காந்த எடத்துலயே ஒலகம் சுத்தினது போதும்.. தோசை ஆறுது. வந்து சாப்டுங்க”.

எனக்கும் கூட கூகுள் மேப்ஸ் Street View-இல் உரோமிய வீதிகளைச் சுற்றிச் சுற்றி வலது கை ஆள்காட்டி விரல் ரொம்ப வலியெடுக்க ஆரம்பிக்க (மவுசை கிளிக்கி கிளிக்கி) கம்ப்யூட்டரை ஆஃப் செய்துவிட்டு தோசை சாப்பிடக் கிளம்பினேன். நாளைக்கும் இதே மாதிரி ஒரு நடை ஸ்விட்சர்லாந்து போய்வரவேண்டும்.

13 comments:

 1. Simply superb... The way you have completed is so nice...

  ReplyDelete
 2. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்! :)))

  கூகுள் காரன் பில் அனுப்பப்போறான் ஊர் சுத்தினதுக்கு மட்டுமில்ல எக்ஸ்ட்ரா தகவல்களுக்கும் கண்டிப்பா பில் வரும் :)

  ReplyDelete
 3. Very nice presentation with an unexpected ending Scenario. Thanks for sharing.

  ReplyDelete
 4. ங்கொய்யால....

  ReplyDelete
 5. ரொம்ப நல்லாவே சுத்தரீங்க...., ஊர...

  ReplyDelete
 6. முடியல...ஹ ஹ நல்ல கற்பனை. தகவல்களை சேகரித்து வழங்கியது பாராட்டத்தக்கது..ஸ்விட்சர்லாந்து தகவல்களை மின்னச்சலில் அனுப்பவும்..

  ReplyDelete
 7. இன்னும் கொஞ்சம் பழுது பார்த்து சிறுகதையாக எழுதி இருக்கலாம். சுஜாதா பாணி என்று கருதப்படக்கூடிய ஒரு சிறுகதையை இப்படி வீணாக்குவது தவறு. இப்போதும் ஒன்றும் குடி முழுகி போகவில்லை. நீங்கள் நினைத்தால் செய்யலாம்.

  ReplyDelete
 8. நன்றி. நன்றி!

  ReplyDelete
 9. I wanted to write this , u wrote first , but idea same.

  ReplyDelete
 10. அழைப்பிதழ்:

  இன்றைய வலைச்சரத்தில் உங்களது வலைப்பூவினை, வலையுலக நண்பர்களுக்கு அறிமுகம் செய்திருக்கிறேன்.

  ”செண்பகப்பூ - சுற்றுலாச்சரம்” என்ற தலைப்பில் பயணக் கட்டுரைகள் பற்றிய அறிமுகம் காணச் சுட்டி கீழே:

  http://blogintamil.blogspot.in/2012/04/blog-post_03.html

  ReplyDelete
 11. வலைச்சரம் மூலம் அறிந்து இங்கு வந்தேன். அனைவரும் அறிய விரும்பும் ரோம் பற்றி விரிவாய் எழுதியமைக்கு நன்றி

  ReplyDelete
 12. எனக்கும் கூட கூகுள் மேப்ஸ் Street View-இல் உரோமிய வீதிகளைச் சுற்றிச் சுற்றி வலது கை ஆள்காட்டி விரல் ரொம்ப வலியெடுக்க ஆரம்பிக்க (மவுசை கிளிக்கி கிளிக்கி) கம்ப்யூட்டரை ஆஃப் செய்துவிட்டு தோசை சாப்பிடக் கிளம்பினேன். நாளைக்கும் இதே மாதிரி ஒரு நடை ஸ்விட்சர்லாந்து போய்வரவேண்டும்.

  செலவில்லாத அலைச்சலில்லாத இனிய பயணத்திற்குப் பாராட்டுக்கள்..

  ReplyDelete
 13. Good one Raghuji. This gives better idea, where to go in Rome, shall keep you update.

  ReplyDelete

இந்தப் பதிவைப் பற்றிய உங்கள் கருத்து?