Showing posts with label கல்கி. Show all posts
Showing posts with label கல்கி. Show all posts

ஒப்பணக்கார வீதியிலிருந்து ஒரு வாசகர் கடிதம்

95-ல் என் முதல் கதை கல்கி இதழில் வெளியானபோது எனக்கு ஏற்பட்டது புல்லரிப்பு என்றால், அதற்கு வந்த வாசகர் கடிதத்தை என் முகவரிக்கு ஒரு உறையில் போட்டு கல்கி அலுவலகம் அனுப்பிவைத்தது புளகாங்கிதம் என்று சொல்லலாம். கோவை ஒப்பணக்கார வீதியிலிலிருந்து சந்திரன் என்பவர் கதையை வெகுவாகப் பாராட்டி எழுதியிருந்தார். நானும் அப்போது கோவையில்தான் இருந்தேன். முதல் வாசகர் கடிதம் என்பதால் பத்திரமாக ரொம்ப நாள் அது என் பேகிலேயே இருந்தது.

இந்தக் கடிதம் வந்த ஒரு மாதத்திற்குப் பிறகு நானும் என் நண்பன் சரவணனும் ஒரு சாயங்கால வேளையில் ஒப்பணக்கார வீதிப் பக்கம் ஒரு வேலையாகப் போனோம். வேலை முடிந்து ஒரு பேக்கரியில் தேநீர் குடித்துக் கொண்டிருந்தபோது திடீரென்று சந்திரன் என்கிற அந்த வாசகரின் நினைப்பு வந்தது. பேகிலிருந்து அவரின் அந்தக் கடிதத்தை எடுத்து முகவரியைப் பார்த்தால் பக்கத்தில்தான் எங்கேயோ இருக்கிறார் என்று தெரிந்தது. அலுவலக முகவரி போலும். தொலைபேசி எண்ணையும் கொடுத்திருந்தார். சட்டென்று ஒரு யோசனை வந்தது. சரவணனிடம் அதைச் சொன்னபோது முதலில் தயங்கிப் பின்னர் சரி என்றான். ஒரு சின்ன விளையாட்டு!

சரவணன் ஒரு பப்ளிக் டெலிஃபோன் பூத்திலிருந்து சந்திரனைக் கூப்பிட்டு, தன்னை சித்ரன் என்று அறிமுகம் செய்துகொண்டு அவரிடமிருந்து கடிதம் வந்ததைச் சொன்னான். ”உங்க ஏரியாலதான் இருக்கோம். இப்போ வந்தா உங்களப் பாக்க முடியுமா?” என்று கேட்டான். மறுமுனையில் சந்திரன் ”செம சர்ப்ரைஸ்ங்க.. வாங்க வாங்க..” என்றது எனக்கே கேட்டது.

நாங்கள் போனபோது சந்திரன் அவர் அலுவலகத்தில் எங்களுக்காக ஆவலோடு காத்துக்கொண்டிருந்தார். முன்பே பேசி வைத்துக்கொண்டபடி சரவணன் தன்னை ’சித்ரன்’ என்றும் என்னை ’சரவணன்’ என்றும் அறிமுகப்படுத்தினான். ”நீங்க என்னைப் பாக்க வந்தது ரொம்ப சந்தோஷம்..” என்று சரவணனின் கையைப் பிடித்து இறுக்கமாய்க் குலுக்கினார். என் கையை லேசாக. பின்னர் அலுவலகத்துக்குள்ளேயே அவர் தங்கியிருந்த ஒரு அறைக்கு எங்களைக் கூட்டிச் சென்றார்.

நான் ஒரு ஓரமாய் உட்கார்ந்து அங்கே கிடந்த பாக்யா வார இதழைப் புரட்ட ஆரம்பிக்க, அவர்களிருவருக்குமிடையே குதூகலமாக உரையாடல் தொடர்ந்தது. நான் சிரிப்பைக் கஷ்டப்பட்டு அடக்கிக்கொண்டு உட்கார்ந்திருந்தேன்.

சந்திரன்: “எப்படி உங்களுக்கு இந்த மாதிரி கதைக்கரு எல்லாம் தோணுது?”

சரவணன் (என்னை ஓரக்கண்ணால் பார்த்தபடியே): ”எல்லாம் அப்பப்ப அப்படி அப்படியே தோணும்! எழுதிருவேன்..”

சந்திரன்: ”நிறைய எழுதியிருப்பீங்க போல.. உங்க எழுத்துல ரொம்ப முதிர்ச்சி தெரியுது.”

சரவணன்: “இல்ல இது என் முதல் கதைதான். போனாப் போகுதுன்னு ஏதோ போட்டிருக்காங்க போல கல்கியில..”

சந்திரன்: சேச்சே.. அது அருமையான கதைங்க. திரும்பத் திரும்பப் படிச்சேன்.. என்ன இருந்தாலும் உங்களுக்குத் தன்னடக்கம் ஜாஸ்தி..”

இப்படியே மேலும் ஒரு பத்துப் பதினைந்து நிமிடங்களுக்கு சந்திரன் வீசிய கலை இலக்கிய பந்துகளை சரவணன் சரமாரியாக சமாளித்துக் கொண்டிருந்தான்.

சந்திரன் சட்டென்று “தி.ஜா படிச்சிருக்கீங்களா? நாஞ்சில் நாடன்? நம்மூருதாங்க அவரு” என்பது போன்ற டஃப்ஃபான கேள்விகளின்போது திருதிருவென்று முழித்து பிறகு ஒருவாறு சமாளித்து “பின்னே படிக்காம? என்னமா எழுதுவாங்க!” என்றான்.

சந்திரன்: “நாவல், தொடர்கதை எல்லாம் எழுதற ஐடியா இருக்கா? இல்லை சிறுகதைகள் மட்டும்தானா?”

“எழுதிட்டாப் போச்சு? என்னடா எளுத்தாளர் சித்ரன்.. என்ன சொல்ற!..” என்றான் என்னைப் பார்த்து. ”இந்தா.. இடத்தை மாத்திக்கலாம்.. இதுக்கு மேல முடியல..” என்று எழுந்தான்.

நான் பாக்யாவிலிருந்து நிமிர்ந்து சந்திரனைப் பார்க்க, அவர் புரியாமல் எங்களிருவரையும் மாறி மாறிப் பார்த்தார்.

நான் சிரித்தபடி “ஒரு சுவாரஸ்யத்துக்கு ஒரு சின்ன விளையாட்டு விளையாடலாம்னு நினைச்சோம்.. நாந்தான் சித்ரன். அவன் சரவணன். ஸாரி..” என்றேன்.

புரியாமையிலிருந்து குழப்பத்துக்குள் விழுந்து, சந்தேகத்துக்கு மாறி, ஏமாற்றத்தைத் தொட்டு பின் சட்டென்று விடுபட்ட சந்திரன் முகம் போன போக்கை விவரிக்கவே முடியாது.

”இவந்தான் இந்த ஐடியாவைச் சொன்னான். என்னைத் திட்டாதீங்க..” என்று சரவணன் என்னைக் கை காட்ட..

சந்திரன் உடனே சமாளித்துச் சிரித்து “அதான பாத்தேன்..  ஆரம்பத்திலிருந்தே எனக்கு ஏதோ சரியில்லைன்னு பட்டுச்சு..” என்றார்.

மனதில் உனது ஆதிக்கம்

'மனதில் உனது ஆதிக்கம்' என்ற எனது சிறுகதைத் தொகுப்பு இன்று வெளியாகியிருக்கிறது. இந்தப் புத்தகம் மூலம் நான் உங்களைச் சந்திப்பதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். மொத்தம் 11 சிறுகதைகளும் கல்கியில் வெளியான நான்கு வார குறுந்தொடர் ஒன்றும் அடங்கியது இத்தொகுப்பு. 95லிருந்து துவங்கி வெவ்வேறு காலகட்டங்களில் எழுதப்பட்ட சிறுகதைகள் இவை. இச்சிறுகதைகளில் அதிகபட்சம் கல்கியில் வெளியானவை. என் எழுத்தில் நம்பிக்கை கொண்டு, என்னை ஊக்குவித்து இதை வெளியிடுவதில் பெருமளவில் உதவிய பா.ராகவன் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

மனதில் உனது ஆதிக்கம்
வெளியீடு : கிழக்கு பதிப்பகம், சென்னை

அழகிய தீயே!

சிறுகதை - சித்ரன்
நன்றி : கல்கி 25-04-2004


ல வருடம் கழித்து ஆதியை நேற்று பார்க்க நேரிட்டது. ஒருவகையில் அது கொஞ்சமும் எதிர்பாராத சந்திப்புதான். பார்த்த கணத்தில் அருணாவுக்கு காலடியில் பூமி நழுவியது. முகத்தில் லேசாய் கலவரம் விரிந்தது. தியாகராயா ரோட்டில் எச்.எஸ்.பி.ஸி ஏடிஎம்-ல் பணம் எடுக்க நின்றிருந்தபோது "ஹாய்" என்று திடீரென்று எதிரே வந்து நிற்கிறான். இத்தனை காலம் எங்கிருந்தான் இவன்?

ஆரம்பத் தயக்கங்கள் தாண்டி இருவரும் இயல்புக்கு வருவதற்கே சில கணங்கள் ஆயின. இருவருக்கும் சட் சட்டென்று பழைய நினைவுகள் முகத்தில் வெளிச்சமிட்டதை இருவருமே உணர்ந்தார்கள். அப்புறம் பரஸ்பர விசாரிப்புகள் நடந்தன. அவன் சென்னையில்தான் ஒரு தனியார் ஸாஃப்ட்வேர் கம்பெனியில் ஸீனியர் மானேஜராக இருக்கிறானாம். அவனை காலேஜில் பார்த்ததற்கும் இப்போது பார்ப்பதற்கும் நிறைய வித்தியாசங்கள் இருந்ததுபோல் தோன்றியது. கோல்டு ஃப்ரேமில் கண்ணாடி. லேசாய் முன்தலை வழுக்கை. லேசாய் பூசியிருக்கிற உடம்பு. உடையில் சொற்ப மாற்றம்.

ஆதி கையில் செல்போன் சிணுங்கல்களுக்கு நடுவே அவளைப்பற்றிக் கேட்டான். காலேஜ் ப்ரண்ட்ஸ் வேறு யாரையாவது மீட் பண்ணுவதுண்டா? என்றான்.

"ம். ஜான்ஸி மட்டும் அப்பப்ப போன்ல பேசுவா"

"ஓ அந்த குட்டி வாத்து. க்ரேட் அருணா உன்னை மறுபடி பார்ப்பேன்னு நினைக்கல. வெரி சர்ப்ரைஸ். ஃப்ரியா இருக்கும்போது ஒரு நாள் சும்மா எங்கயாவது மீட் பண்ணலாமே" என்றான் ஆவலாய். கார்டு கொடுத்தான்.

மேலும் சம்பிரதாயமாய் ஒரு சில வார்த்தைகளுடன் அந்த சிறு சந்திப்பு முடிந்தது. வீட்டுக்குத்திரும்பி வரும்போது அருணாவுக்கு ஒரே யோசனையாயிருந்தது. ஆதி இப்படி திடீரென்று எதிர்ப்படுவான் என்று எதிர்பார்க்கவில்லை. பழைய விஷயங்களை மறுபடி கிளறுவானோ என்று ஒரு சின்ன பயமும் தோன்றியிருந்தது இப்போது.

தி என்கிற ஆதிராஜன். காலேஜில் எம்.ஸி.ஏ. ஒரே வகுப்பு. அப்போதும் கண்ணாடி போட்டிருந்தான். தானே வலியவந்து யாரிடமும் அறிமுகப்படுத்திக்கொள்ளும் சுபாவம் அவனுக்கு. எப்போதும் அவனைச்சுற்றி ஒரு கூட்டம் இருக்கும். சிகரெட் புகைத்து லேசாய் கவிதையெல்லாம் பேசுவான். ஆரம்பத்தில் அருணாவிடமும் நட்பாய்த்தான் இருந்தான். வருவான். பேசுவான். போவான். பிறந்தநாளுக்கு கார்டு அவனே செய்து பரிசளிப்பான். ஒருநாள் மதியம் கல்லூரி நிறுவனர் சிலைக்குப்பக்கத்தில் எல்லாரும் உட்கார்ந்து டிபன்பாக்ஸ்களை காலி செய்துகொண்டிருக்கும்போது மூக்குக் கண்ணாடிக்குள்ளிருந்து அருணாவை ஊடுருவிப்பார்த்து "சமீப நாட்களாய் நீ என்னை பாதிக்கிறாய்" என்றான். விளையாட்டு மாதிரிதான் சொன்னான். அதன் அர்த்தம் தெரிந்துகொள்ள அவள் அப்போது பெரிதாய் ஆர்வம் காட்டவில்லை.

பிறகு சில நாட்களிலேயே அவன் சொன்னதன் தீவிரம் புரிந்துபோது அவள் அவனிடமிருந்து லேசாய் விலகினாள். ஆனால் ஒரே க்ளாஸ் என்பதால் பொதுவாய்ப் பார்ப்பதும் பேசுவதும் தவிர்க்கமுடியாததாய் இருந்தது. "ஆதி உன்னை ஸீரியசா லவ் பண்றான்னு நினைக்கிறேன்" என்று ஜான்ஸி சொன்னாள். வேறு சிலரிடமிருந்துகூட அதைக் கேள்விப்பட்டாள். "அதுக்கு நான் என்ன பண்ணனும்;?" என்று கேட்டாள். கோபமாய் வந்தது. அவனிடம் எனக்கு என்ன ஈர்ப்பு? ஒருகணம் அதையும் அவன் நினைத்து பார்த்திருக்கவேண்டும். இந்த காதல் மண்ணாங்கட்டி எல்லாம் எப்படியோ இவன்களுக்கு வந்து தொலைத்து விடுகிறது. நான்சென்ஸ்.

ஒரு தடவை ஒரு நோட்டு நிறைய கவிதைகள் எழுதி கொண்டுவந்து கொடுத்தான். உனக்கே உனக்காக எழுதினது என்றான். முதல் பக்கத்தில் "அருணோதயம்" என்று டைட்டில் எழுதியிருந்தது. கவிதைகள் என்னமோ நன்றாகத்தான் இருந்தன. அதைப்படித்து எனக்குக் காதல் வரும் என்று நம்பினான் போலும். பாவம். ஆனால் சுற்றி வளைக்காமல் முகத்துக்கு நேரே தைரியமாய் மனதிலிருப்பதைச் சொல்கிற அவனின் நேரடியான அணுகுமுறையைப் பாராட்டத்தான் வேண்டும். அருணா அதை படித்துவிட்டு பாலுவிடம் திருப்பிக்கொடுத்தனுப்பிவிட்டாள்.

"இங்க பார் பாலு. ஆதியைப்பார்த்து எனக்கு எந்தவிதமான ரசாயன மாற்றமும் ஏற்படலை. எனக்கு படிக்கிறதுலதான் கவனம். அவன் நல்ல டைப்தான். நட்பான பையன். படிக்கிற பையன். எல்லாம் ஓ.கே. எனக்கு அவன் மேல காதல் வர்ல பாலு. நீயாவது எடுத்துச் சொல்லு"

அவளின் இந்த எதிர்மறை பதிலுக்கப்புறமும்கூட ஆதியின் முயற்சி தளர்ந்தபாடில்லை. கிடைத்த இடைவெளிகளில் எல்லாம் அவன் மறுபடி மறுபடி வந்து நிறைய பேசினான். நீயில்லாமல் நானில்லையென்றான். நிறைய சினிமா பார்ப்பான் போல.

காலேஜின் கடைசி நாள். எல்லோரும் பிரியப் போகிற தருணம். ஆதிக்கு அது கடைசி சந்தர்ப்பம். நேராக அவளிடம் வந்தான். நூற்றி இருபதாவது தடவையாக அருணாவிடம்
"யோசிச்சு சொல்லு. உன் பதிலுக்காக மூணு ஜென்மமா காத்திருக்கேன். உன்னை ரொம்ப தொந்தரவு செய்யறேன்னு நினைக்காத. சாதகமான பதில் சொன்னா சந்தோஷம். இல்லைன்னா என்கூட கடைசி கடைசியா அபிநயா கஃபேல வந்து ஒரு கப் காபி சாப்பிடு போதும். ப்ரண்ட்லியா பிரிவோம்" என்றான். சிறிதும் நம்பிக்கையிழக்காத கடைசி முயற்சி.

அன்று மாலை இருவரும் அபிநயா கஃபேயில் காபி சாப்பிட்டார்கள். அதற்குப்பிறகு அவள் கண்ணில் அவன் தென்படவேயில்லை.

ஸ்பென்ஸரில் இன்று மறுபடி அந்த சின்ன கஃபேயில் ஹிந்துஸ்தானி இசைக்கு நடுவே இருவரும் உட்கார்ந்திருந்தார்கள். இவனை மறுபடி எதற்கு பார்க்க வந்தேன் என்று யோசித்துக்கொண்டிருந்தாள் அருணா. பேரர் வந்து ஃப்ரெஞ்ச் ஃப்ரைஸ், பாவ் பாஜியை டேபிளில் பரப்பிவிட்டுப் போனான். கொஞ்சம் பேச்சு. கொஞ்சம் அமைதி என நேரம் போனது. பேசியது எல்லாமே பொதுவான விஷயங்கள். பிறகு ஆதி சிறிது நேரம் ஸீரியஸாய் இருந்துவிட்டு "நீ ஏன் இன்னும் கல்யாணம் செய்துக்கல?" என்று கேட்டான். அருணா அவனை கேள்வியாய்ப் பார்த்தாள்.

"அப்பா நிறைய ஜாதகம் பார்த்தார். ப்ச்! எதுவும் அமையல" என்றாள். "நீ ஏன் பண்ணிக்கல?"

"வீட்ல சொல்லி சொல்லி அலுத்துட்டாங்க. நான்தான் வேண்டாம்னு சொல்லி தட்டிக் கழிச்சுட்டிருக்கேன்." என்றவன்.. கொஞ்சம் மௌனமாயிருந்துவிட்டு....

"அருணா உனக்கு ஒரு ஆச்சரியமான விஷயம் சொல்லட்டா? நான் இன்னும் உன்னதான் நெனச்சிட்டிருக்கேன்" என்றான் மெதுவாய்.

சிலீரென்றது. முதல்முதலாய் மனசில்.. ச்சே!. என்னது இது..! அவள் அமைதியாயிருக்க முயற்சித்தாள். அவன் என்ன சொல்ல நினைக்கிறான் என்று தெரிந்து கொள்வதில் அவளுக்கு விருப்பமாயிருந்தது. முகத்தில் எந்த உணர்வையும் காட்டாமல் இருக்க முயற்சித்தாள்.

தொண்டையை செறுமிவிட்டு சொன்னான். "இந்த பொன் மாலைப் பொழுதை வீணாக்காம சுருக்கமா சொல்றேன். காலேஜ்ல பிரியும் போது சாப்பிட்ட காபியோட என் காதல் விஷயம் சூடு ஆறிப் போயிடுச்சுன்னு நீ நினைச்சிருக்கலாம். ஆனா என்னால உன்னை மறக்க முடியல. ரொம்ப அவஸ்தையாயிருச்சு. நீ சென்னைலதான் இருக்கேன்னு தெரியும். ஆனா உன்னை மறுபடி தொந்தரவு பண்ண வேணான்னு விட்டுட்டேன். ஆனாலும் மனசோரத்துல நீ ஒட்டிக்கிட்டுதான் இருந்தே. இப்ப கூட அப்படித்தான். ரெண்டு தடவை உன்னை தூரத்திலேர்ந்து பார்த்தேன்;. என்னடா கிடைக்கலையேன்னு கொஞ்சம் வருத்தம் வந்தது. இப்ப ஒரு நல்ல வேலையும் சொந்தமாய் வீடும் இருக்கு. நான் வீட்ல ஒரே பையன். நான் ஆசைப்பட்டதை நிறைவேத்தற அம்மா, அப்பா. உன்னைப்பத்தி நிறைய சொல்லியிருக்கேன். நீ கிடைச்சா அதைவிட சந்தோஷம் எனக்கு கிடையாது. இந்த சந்திப்பு எனக்கு கிடைச்ச இன்னொரு பொன்னான சந்தர்ப்பம்ங்கிறதுனால நழுவவிட மனசில்லை. மறுபடி ஒரு முயற்சி. அதான் சொல்லிட்டேன். நீ மறுத்தாகூட உன் நினைப்பிலயே வாழ்ந்துட்டுப் போறது அப்படியொன்னும் கஷ்டமா தோணலை. என்னைப் பத்திதான் உனக்குத் தெரியுமே." சொல்லிவிட்டு ஆதி அவளை நேராகப் பார்த்தான்.

"ஓ மை காட்!" என்றாள் அருணா. அவளுக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. தொடர்ந்து மேலும் சில சிலீர்களும் ஓடிவிட்டிருந்தன மனதுக்குள். அவன் ஊடுறுவும் பார்வை என்னவோ செய்தது. "கொஞ்சம் வசீகரமான பையன்தாண்டி" என்று காலேஜ் படிக்கும்போது ஜான்ஸி சொன்னது ஞாபகத்துக்கு வந்தது. பைத்தியமாய் வருடக்கணக்கில் இப்படி ஒருத்திக்காக காத்திருக்கிறதென்றால்.

அவள் எதுவும் பேசாமல் உட்கார்ந்திருந்தாள். குழப்ப யோசனைகள் ஓடின. ரொம்ப லேட்டாய் அவன் மேல் ஒரு ஈர்ப்பை உணர்கிறேனோ? கடவுளே! எனக்கு என்ன ஆயிற்று? அன்றைக்கு மாதிரியே உன்மேல் எனக்கு எதுவும் இல்லை என்று பட்டென்று சொல்லிவிட முதன் முதலாய் ஏன் ஒரு தயக்கம் எழுகிறது?

அவன் மேலும் சொன்னான். "நிதானமா யோசிச்சுச் சொன்னாப் போதும். பாஸிட்டிவ்வான பதில்னா செல்போன்ல கூப்பிடு. வீட்டுக்கு வந்து பெண் கேட்கிறேன். நெகட்டிவ்வான பதில்னா இதே இடம். என்னோட ஒரு கப் காஃபி. ஓகே?"

எதுவும் சொல்லாமல் ஒரு சிரிப்புடன் விடைபெற்றாள். வீட்டுக்கு திரும்புகிறபோது ஒரே யோசனைக்குவியல். திடீரென்று வந்து எல்லாவற்றையும் கலைத்துப்போட்டுவிட்டுப் போய்விட்டான். அவனுக்கு அங்கேயே ஏன் பதில் சொல்ல முடியவில்லை? இந்தத்தடவை வித்தியாசமாய் ஏதேனும் பதில் சொல்ல விரும்புகிறேனா? என்ன இது குழப்பம். புன்னகையுடன் கூடிய அவன் மலர்ந்த முகம் மீண்டும் மீண்டும் நினைவில் ஓடியது. அவன் ஒரு நல்ல டைப்தான். பின்னாலேயே நாய் மாதிரி சுற்றினான் என்பதை வைத்து அவனை மோசம் என்று சொல்லிவிட முடியாது. என்ன ஒரு நம்பிக்கை அவனுக்கு. குரலில் ஒரு சின்ன கம்பீரம். அவனை கடைசியில் ஜெயிக்கவிடலாமா? இரு! முதலில் என்னை நானே கேட்டுக்கொள்ள நிறைய கேள்விகள் இருக்கிறது. முதல் கேள்வி இத்தனை வருடம் கழித்து எனக்கு அவன்மேல் ஈர்ப்பு ஏதேனும் ஏற்பட்டுள்ளதா என்பது.

சில தயக்க யோசனைகளுக்குப் பின் ஆமாம் என்று மனது தீர்மானம் நிறைவேற்றியது. அவளையறியாமல் உதட்டோரம் ஒரு புன்னகை அரும்பி மறைந்தது. காதலின் பயாலஜி விதிகள் என்னென்ன? அவனை லேசாய் பிடிக்க ஆரம்பித்திருக்கிறது. அல்லது பிடித்துவிட்டது. அன்றிரவு பொட்டுத் தூக்கம்கூட வரவில்லை. நடுநிசியில் அவன் விஸிட்டிங் கார்டை எடுத்துப்பார்த்தாள்.

நான் இன்னும் உன்னதான் நெனச்சிட்டிருக்கேன் என்று அவன் சொன்னது திரும்பத்திரும்ப ரிவைண்ட் ஆகிக் கொண்டிருந்தது. எங்கேயோ முன்னமே போடப்பட்ட பூர்வ ஜென்ம முடிச்சா இது? நினைக்க நினைக்க ஆச்சாரியமாய் மனதில் விரிகிற கனவுச்சாரல்.

ஆனால் அதை கொஞ்சநேரம்கூட நீடிக்க விடாமல் திடீரென்று வேறொரு எண்ணம் வந்து குறுக்கிட்டு நின்றது. இன்றைய தேதிக்கு எனக்கு மாப்பிள்ளை பார்த்து பாவம் அப்பாவும். அம்மாவும் களைத்து ஓய்ந்து போய்விட்டார்கள். இப்படி எனக்கு இன்னும் வரன் கூடாமல் தள்ளித் தள்ளிப் போனது எல்லாருக்குமேகூட வருத்தம்தான். இந்த நிலைமையில் திடீரென்று ஆதியின் வருகை. அவன் பைத்தியமாய் அவள் பின்னால் சுற்றியபோதெல்லாம் பாராமுகமாய் இருந்துவிட்டு இப்போது போய் அவனிடம் உன்னைப் பிடித்திருக்கிறதென்று நான் சொன்னால் அது வேறு வழியில்லாமல் ஒரு கல்யாணத்தேவைக்கு என்று ஆகிவிடாதா? அவன்மேல் நிஜமாவே ஒரு பிடிப்பு வந்துவிட்டது என்றே இருந்தால்கூட இத்தனை காலம் கழித்து இப்போது போய் உன்னை ஏற்றுக்கொள்கிறேன் என்று சொல்வது சுயநலமில்லையா?

சட்டென்று அவளின் முந்தைய எண்ணங்களின் மீது ரிவர்ஸ் கியர் விழுந்ததுபோல் இருந்தது. ரொம்பத் திகைப்பாய் இருந்தது. இப்படியொரு கோணத்தில்கூட இதை யோசித்துப் பார்த்தே ஆகவேண்டும். அருணாவுக்குப் பிரமை பிடித்தது மாதிரி இருந்தது.

மறுநாள் குளித்துவிட்டு ஸ்டிக்கர் பொட்டை நிலைக் கண்ணாடியில் சாரிபாக்கும்போது தலையில் மறுபடி அந்த நரைமுடியைப் பார்த்தாள். முப்பத்தைந்தை நெருங்கின வயது. லேசான பெருமூச்சு வந்துபோனது.

நிறைய யோசனைகளுடன் ஆபிஸுக்கு கிளம்பிப்போனாள். வேலையில் கவனம் ஓடவில்லை. ஆதி சொன்னது மண்டையைக் குடைந்தது. மதிய இடைவேளையில் ஹேண்ட் பேகிலிருந்து ஆதியின் விஸிட்டிங்கார்டை தேடி எடுத்தாள். ரிசப்ஷனைக் கூப்பிட்டு அவன் செல்போன் நம்பருக்கு லைன் வாங்கினாள்.

"சாயங்காலம் பார்ப்போமா ஆதி ? ஜஸ்ட் ஒரு காஃபி. ஓகே?"

*

புள்ளி

இதோ இந்தப்புள்ளியிலிருந்து ஆரம்பிக்கிறேன். நட்சத்திரங்கள் மாதிரி பரந்து சிதறிக்கிடக்கும் கோடானுகோடி வலைத்தளங்களுக்கிடையே இந்தப் புள்ளியைத் தேர்ந்தெடுத்து வந்து உட்கார்ந்திருக்கிறேன். பல ஒளியாண்டுகள் பயணித்து இதை அணுகுகிறவருக்கு இங்கு என்ன கிடைக்கும் என்று தெரியவில்லை. எனது இந்த வலைப்பதிவு முயற்சி எதையாவது எழுது என சதா யோசனைகளை பிராண்டுகிற மனதை சமாதானப்படுத்துவதற்கு என்று வேண்டுமானால் வைத்துக்கொள்ளுங்களேன்.

தெரியாத்தனமாய் எனக்குள் ஒளிந்திருந்த ஒரு எழுத்தாளனைக் கண்டுபிடித்து முதன்முதலாய் சிறுகதை எழுதுவது எப்படி என்று எனக்குக் கற்றுத்தந்த நண்பர் சரசுராமையும், என் கதைகளை அதிகம் வெளியிட்டு என்னை வளர்த்திய கல்கி இதழையும் மற்றும் என் எழுத்தில் நம்பிக்கை வைத்து என்னை ஊக்கப்படுத்திய திரு. பா.ராகவன் அவர்களையும் நன்றியுடன் நினைத்து என் வலைப்பதியலை துவக்குகிறேன்.

இனி உங்கள் பாடு.