ஓடிக்கொண்டிருத்தல்

மரத்தடி குளிர்காலப் போட்டியில் முதல் பரிசு பெற்ற கவிதை.

நள்ளிரவில் திடுக்கிட்டுக்
கனவோடு கரணம் தப்பிய
உறக்கத்தை
மறுபடி கண்களுக்குள் சொருக
எடுத்துக்கொண்ட பயிற்சிகள்
தோல்வியுற்றிருந்தன.

ஆக
உணர்வுநிலையில்
மல்லாந்தபடி
முதல் பறவையின்
குரலுக்காய் வெகுநேரம்
விழித்திருக்கவேண்டியிருந்தது.

மெல்ல ஒரு காகம் கரைந்தது.
தொடர்ந்து பல.

நட்சத்திர வைரங்களின்
எண்ணிக்கையை சரிபார்த்துவிட்டு
இருள் மையை
ஒரு ஆரஞ்சுக் கைக்குட்டையால்
ஆகாயம் துடைக்க ஆரம்பிக்கும்போது
எழுந்துகொண்டேன்.

இனி தாமதிக்கலாகாது.

பிறந்ததிலிருந்து எரிந்து தீர்த்த
உயிர்ப்பொருளின் மிச்சத்தில்
ஓட ஆரம்பித்தேன்.

நேற்று
விட்ட இடத்திலிருந்து.

வேகமாக. சீராக.

எனக்குமுன் ஓடியவன்
வேகத்தையும்
என்னை
முந்த நினைப்பவன் வேகத்தையும்
மிஞ்சியதா தெரியவில்லை...
உதிர்ந்து உலர்ந்த சருகுகள்
மிதிபடுகிற ஒலியுடன்
தொடரும்
என் ஒற்றை ஓட்டத்தின் உத்வேகம்.

ஓடிக்கொண்டிருக்கிறேன்.
எல்லோருடையதைப் போலவும்
தூரமும் எல்லையும்
நிச்சயமற்று நீண்டுகிடந்த
என்னுடைய பாதையில்.

காலிடறிக் கவிழ்ந்த இடத்தில்
நெற்றியின் இரத்தம்.
பெயர்ந்த நகங்களின் வலி.
நித்திரை இழந்த
கண்களின் எரிச்சல்.
உச்சந்தலை நரம்பில் எரிகிற
வெயில் தழல்.
கால் தசைகளின் பெருந்தளர்வு.
பெருக்கெடுத்த தாகம்.
எவையும் ஒரு பொருட்டல்ல.

ஓடிக்கொண்டிருத்தல் அவசியமானது.
ஒரு நதி மாதிரி...
உலரும் வரை.
அது தவிர்க்க இயலாததும் கூட.

மீண்டும் பறவைகள்
அடைகிற வேளைக்குமேலும்
கொஞ்சம் தாமதமாய்
பகலில் சேகரித்த கனவுகளோடு
வேர்கள் அடர்ந்த ஒரு
மரத்தின் மடிக்கு
இளைப்பாறத் திரும்புவேன்
என்பது நிச்சயம்.

அதுவரை
ஓடிக்கொண்டிருக்க வேண்டியிருக்கிறது.
உயிர்த்திருத்தலின்பொருட்டு.

சுஜாதா... சுஜாதா

பல வருடங்களுக்கு முன்னால் எனக்கு அவசரமாய் ஒரு பாஸ்போ¡ட் சைஸ் புகைப்படம் எடுக்க வேண்டியிருந்தது. மதியம் ஒரு மணி வெயிலில் கோவை டவுன்ஹால் அருகில் ஒரு ஸ்டுடியோவுக்கு விரைந்தேன். என் அவசரத்தைத் தெரிவித்துவிட்டு, மேக்அப் அறைக் கண்ணாடியில் முக லட்சணங்களை சரிபார்த்துவிட்டு காமிரா முன் உட்கார, பளிச் என ஒரு மின்னலை என் மேல் சொடுக்கிவிட்டு ஒரு மணி நேரம் கழிச்சு வாங்க என்றார் ஸ்டுடியோக்காரர். வரவரவென்று அடிக்கும் இந்த மத்தியான வெயிலில் ஒரு மணி நேரத்தை எங்கே தொலைப்பது என்று வெளியில் வந்தவனுக்கு பக்கத்தில் புத்தகச்சுமைதாங்கி நிற்கும் நூலகக்கட்டிடம் தென்பட்டது. ஆஹா! இதைவிட வேறென்ன வேண்டும்? உடனே உள்நுழைந்தேன். மெல்ல முதல் மாடிக்கு படிகளில் ஏற கிரவுண்ட் ஃப்ளோரில் மாடிப்படிக்கு இந்தப்பக்கம் கும்பலாய் சில பேர். உற்றுப் பார்த்தால் நடுநாயகமாய் S டைப் சேரில் எழுத்தாளர் சுஜாதா உட்கார்ந்துகொண்டிருக்கிறார். என்னவோ உரையாடல் போய்க்கொண்டிருக்கிறது. நான் ஆர்வமாய் உடனே கீழே இறங்கி வந்து கும்பலில் தலை நுழைத்து எட்டிப் பார்த்தேன். எல்லோரும் ஆளாளுக்கு கேள்விகளை அவர்மீது வீசிக்கொண்டிருக்க பதிலுக்கு பதில்களை லாவகமாய்த் திருப்பி வீசிக்கொண்டிருந்தார். எனக்குப் மிகப்பிடித்த எழுத்தாளரை மிகப் பக்கத்தில் பார்த்த வியப்பிலிருந்து மீள முடியாமல் நின்றிருந்தேன். பாஸ்போர்ட் சைஸ் போட்டோ வாழ்க.

சுற்றி நிற்பவர்களில் ஒருவன் கேட்கிறான். "சார் குவாண்டம் தியரியை கொஞ்சம் விளக்க முடியுமா?". நான் அவனைப் பார்க்கிறேன். எல்லாரும் ஒரு முடிவுக்கு வந்துவிட்டார்கள் போல. சுஜாதா விளக்க ஆரம்பித்தார். அடுத்த ஆள் தேச ஒற்றுமை குறித்து கேட்க அதற்கும் பதில். (தேச ஒற்றுமை இருக்கிற இடங்கள் என்று சலூன் மற்றும் விபசார விடுதிகள் என்று குறிப்பிட்டது ஞாபகம் வருகிறது). ஒரு ஜீனியஸிடமிருந்து பதில்கள் கிடைத்த சந்தோ்ஷத்தில் அவர்கள் தலைகள் ஆடுகின்றன.

நான் சுஜாதாவை படிக்க ஆரம்பித்தது ஆறாம் வகுப்பு படிக்கும்போது என்று தெள்ளத் தெளிவாக ஞாபகம் இருக்கிறது. அறிமுகப்படுத்தியது அவருடைய "மறுபடியும் கணேஷ்" நாவல். மாலைமதியோ ராணிமுத்தோ நினைவில்லை. அப்போது தமிழ் அதிகம் பரிச்சியமில்லாத என் வீட்டுக்குள் அது எப்படி நுழைந்திருந்தது என்று தெரியவில்லை. கட்டிலுக்கு அடியில், அலமாரியில், அடுக்களையில் விறகு கொட்டப்பட்ட இடத்தில் என்று பூனையோல் எங்கேயாவது கிடக்கும் அதை மறுபடி மறுபடி தேடியெடுத்து கிட்டத்தட்ட 100 தடவைகளாவது படித்திருப்பேன். இன்றைய தேதிக்கு ஒப்பிடுகையில் அது ஒன்றும் சுஜாதாவின் முக்கிய படைப்பு அல்ல என்றாலும் என் அன்றைய வயசுக்கு மிகப்பெரிய ஆச்சரியத்தை அள்ளிக்கொணர்ந்தது அது. அதை ஏன் பேப்பர்காரனுக்கு போடாமல் அல்லது அடுப்பு மூட்ட உபயோகிக்காமல் வீட்டில் விட்டு வைத்தார்கள் என்பது மிக ஆச்சர்யம். இத்தனைக்கும் சுஜாதாவை வீட்டில் யாருக்கும் தெரியாது. புதுசாய் வாழ்க்கையில் எதையோ பார்த்துவிட்டமாதிரி ஏறக்குறைய பக்கங்கள் மஞ்சளாகியிருந்த அதை நேரம் கிடைத்தபோதெல்லாம் எடுத்துப் படித்தேன். அப்புறம் உடுமலை நூலகத்தில் கதைக் களஞ்சியமோ, சிறுவர் கதைப் பூங்காவோ தேடிக்கொண்டிருந்தபோது சுஜாதாவின் "மேற்கே ஒரு குற்றம்" கண்ணில் படுகிறது. ஒரு இன்ப அதிர்ச்சியுடன் அதைக் கவர்ந்துகொண்டு ஒரே பாய்ச்சலில் வீட்டுக்குவந்து அடுத்த ஒரு மணி நேரத்துக்குள் அதை படித்துமுடித்துவிட்டது ஞாபகத்துக்கு வருகிறது.

அப்புறம் நான் தேடாமலே சுஜாதா புத்தகங்களாய் கிடைக்க ஆரம்பித்தது லைப்ரரியில். சுஜாதாவின் வசீகரமான எழுத்து நடையும், கதைக்களங்களும், கதை மாந்தர்களும், சயின்ஸ் கலந்த புதிய கொலை உத்திகளும், கணே்ஷும் வசந்தும் ராஜேந்திரனும், வித்தியாசமான தலைப்புகளும் பெரிதும் கவர சுஜாதாவின் கதைப்புத்தகங்கள் தேடி வெறிகொண்டு அலைய ஆரம்பித்தேன். பத்தாம் வகுப்பு தேறுவதற்குள் சுஜாதா வி்ஷயத்தில் நன்கு தேறியிருந்தேன். வளர்ந்தபிறகு நண்பர்களுக்கு நான் சுவாரஸ்யமாய் கடிதங்கள் எழுத முனைந்ததிலும், பின்னர் பிற்காலத்தில் சில சிறுகதைகள் எழுதினதிலும் சுஜாதாவின் பாதிப்பு இருந்ததாகக் கொள்ளலாம். அவரின் பதினாலு நாட்கள், ஜே.கே. சொர்க்கத்தீவு, வானமென்னும் வீதியிலே, பிரிவோம் சந்திப்போம், கொலையுதிர்காலம், வைரம், காகிதச்சங்கிலிகள் போன்ற மறக்க இயலாத நாவல்களில் மிரண்டதும், மேலும் கணையாழியின் கடைசிப்பக்கங்களில் ஆழ்ந்ததும் நினைவுக்கு வருகின்றன.

பிறகு ஒருநாள் சென்னையில் தசரா கணையாழியைத் தத்தெடுத்துக்கொண்ட விழாவில் அவர் பேசினதைக் கேட்கிறபோது சுஜாதா தாண்டி என் வாசிப்பு ரசனைகள் தி.ஜா, அசோகமித்ரன், ஆதவன், வண்ணதாசன் என்று மாறிப்போயிருந்தது. அதேபோல் புக்பாயிண்ட் அரங்கில் ஒரு சி.டி வெளியீட்டு விழாவில் இருமல்களோடு சேர்த்து இருபத்தி ஐந்து நிமிடம் அவர் பேசினதை கேட்டபோதும்.

இப்படியாக பல வருடங்கள் தாண்டி இப்போது சுஜாதா வீட்டுக்குப் பத்து வீடுகள் தள்ளி என் ஆபிஸ். ஒரு நாளைக்கு நான்கு தடவை சுஜாதாவின் வீட்டைத் தாண்டித்தான் போக வேண்டியிருக்கிறது. எப்போதாவது எதேச்சையாய் லஸ் சிக்னலில் நான் நிற்கும்போது பக்கத்தில் காருக்குள் அவர் உட்கார்ந்துகொண்டிருப்பார். எல்லா நிகழ்வுகளும் ஏதோ ஒரு காரியத்தின் பொருட்டே நிகழ்கின்றன என்று தோன்றுகிறது.

சுஜாதாவுடனான அம்பலம் ஆன்லைன் அரட்டையில் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தபோது யாரோ ஒருவர் அணுசக்தி, எனர்ஜி என்று ஏதேதோ சுஜாதாவிடம் சந்தேகம் கேட்டுக்கொண்டிருந்தார். லைப்ரரியில் கேள்விகேட்ட அதே ஆள்தானோ என்று சந்தேகம் வந்தது. சுஜாதாவும் சளைக்காமல் பதில் சொல்லிக்கொண்டிருந்தார். நானும் ஆசைக்கு ஓரிரு கேள்விகள் கேட்டுவிட்டு வந்துவிட்டேன்.

என்னைப் போல ஒரு குறு எழுத்தாளன் எங்கிருந்து வருகிறான் என்று தெரியப்படுத்துவதற்கு மேற்கண்ட நினைவுகூறல்கள் தேவைப்படுகிறது. நிறைய எழுத்தாளர்களைப் போலவே சுஜாதாவின் எழுத்தைக் கூர்ந்து கவனித்து ஏதோ கற்றுக்கொண்டதில் நானும் ஒருவன் என்று சொல்லலாம்.

"மறுபடியும் கணேஷ்" என்ற அந்தப் பழைய புத்தகம் கடைசியில் எங்கே போனது என்று இப்போது யோசித்துக்கொண்டிருக்கிறேன்.

வீடு

சிறுகதை
தமிழோவியம் - தீபாவளி மலர் 2004

நந்து சென்னைக்கு வந்து இறங்கியவுடன் முதல் கேள்வியாக அதைத்தான் கேட்கப் போகிறானோ என்று பயந்து கொண்டிருந்தார் நடராஜன். ஆனால் பேக்கேஜ்களைக் சேகரித்துக்கொண்டு வெளியில் டாக்ஸியில் ஏறுகிறவரை அவனும் அவன் மனைவியும் ஒரு வார்த்தைகூட பேசவில்லை. பதிலாக ரெண்டு பேரும் வாய் கொள்ளாத சிரிப்பாக இருந்தார்கள். இனிமேல் சென்னையில்தான் இருக்கப் போகிறோம் என்கிற சந்தோஷச் சிரிப்பு. நந்து ஒரு பெரிய அஞ்ஞாதவாசத்தை முடித்துவிட்டு வந்தவன் போல் தோற்றமளித்தான். மூன்று வருடங்களில் நிறைய இளைத்திருந்தான். முகத்தில் அவன் மீசை அடர்ந்து பெரிதாய்த் தெரிந்தது. அவன் மனைவி சுபா முடியெல்லாம் குட்டையாய் வெட்டிக் கொண்டு, லிப்ஸ்டிக் போட்டுக்கொண்டு கண்ணுக்குக் கீழ் லேசாய் கருவளையங்கயோடு இருந்தாள்.

மகன் சொந்த ஊருக்கே திரும்பிவந்துவிட்டான் என்ற சந்தோஷத்தின் பிரமிப்பில் சரசுவுக்கு வாயெல்லாம் பல்லாக இருந்தது. 'வந்திட்டியாடா' என்று நந்துவைத் தொட்டுத் தொட்டுப் பார்த்துக்கொண்டிருந்தாள். இருக்காதா பின்னே. நடராஜனுக்கும் ரொம்ப சந்தோஷம்தான். ஆனாலும் அது முழுமையாக மனசில் தங்காமல் ஒரு கவலை தோய்ந்த பயத்தின் பிடியில் இருந்தது. அவன் இன்னும் சிறிது நேரத்தில் அவன் அதை கேட்கப் போகிறான். நடராஜன் அவனிடம் சொல்வதற்கு எந்த பதிலையும் தயாரிக்காமல்தான் வந்திருந்தார். அவனானால் கோபக்காரன் வேறு. அவன் கேட்கட்டும். கேட்கும்போது என்ன தோன்றுகிறதோ அதைச் சொல்லலாம் என்று நினைத்தார்.

அவன் அஸ்ஸாமிலிருந்து புறப்படுவதற்குமுன் போன் பண்ணினபோதுகூட மறக்காமல் கேட்டான்.

"வீடு எப்பப்பா காலியாகுது?"

"சொல்லியிருக்கேன். பண்ணிருவாங்க" என்றார். பொய்தான். கீழ் போர்ஷனில் குடியிருக்கிற ராமநாதனிடம் இன்னும் அதைச் சொல்லவில்லை. மகன் வருகிறான் என்று தகவல் சொன்னதோடு சரி! சமீபமாய் நந்து அங்கிருந்து போன் பண்ணுகிற சமயத்தில் எல்லாம் அதை எப்பவும் தவறாமல் கேட்க ஆரம்பித்திருந்தான். சொந்த ஊருக்குத் திரும்பலாம் என்று அவன் முடிவு பண்ணியவுடனேயே கூப்பிட்டுச் சொல்லிவிட்டான். 'கீழ் போர்ஷனைக் காலி பண்ணி வெச்சிருங்கப்பா. இப்பவே சொல்லி வெச்சீங்கன்னாத்தான் நாங்க வர்ரதுக்கும் அவங்க காலி பண்றதுக்கும் கரெக்டா இருக்கும்.'

அவன் போகிறபோதே 'இந்த வேலை மூணு வருஷ காண்ட்ராக்ட்! அதுக்குள்ள எத்தனை சம்பாதிக்கறனோ அத்தனை போதும். முடிஞ்சதும் ரிஸைன் பண்ணிட்டு திரும்பி வந்து ஏதாச்சும் பிஸினஸ் ஆரம்பிக்கணும்.' என்று உறுதியாய் சொல்லிவிட்டுப் போனான். அசுர வேகத்தில் வருடங்கள் ஓடிவிட்டன. இதோ சொன்னபடி திரும்பியும் வந்துவிட்டான். கல்யாணம் ஆன கையோடு சுபாவையும் கூட்டிக்கொண்டு போயிருந்தான் அப்போது. மூன்று வருடங்களாய் குழந்தை பெற்றுக் கொள்கிற தீர்மானத்திலிருந்து விலகியிருந்தார்கள் போல. நந்துவின் முகத்தைப் பார்த்தால் இங்கே வந்தபிறகு ஏகப்பட்ட திட்டம் வைத்திருப்பான் போலிருக்கிறது. அவனுக்கென்று தனி குடும்பமாகிவிட்டது. இனி அவன் குடியிருப்பதற்கு தனி ஜாகை வேண்டும். அதற்கு ராமநாதன் காலிபண்ணவேண்டும். யோசிக்கப் போனால் நந்து சொந்தவீட்டை விட்டுவிட்டு வேறெங்கும் வாடகைக்கு போய் இருக்க வேண்டுமென்கிற அவசியமும் இல்லைதான்.

"சென்னைல வெயில் எப்பதான் முடியும்?" என்றான் நந்து. ரொம்ப நாளைக்கப்புறம் அவன் அப்பாவிடம் பேசுகிற முதல் வார்த்தை. போனிலேயே பேசிக்கொண்டிருந்துவிட்டு நேரில் பேசுவதற்கு ஒன்றுமில்லாததுபோல் இருக்கிறது. அவன் பேசட்டும். வீடு விஷயம் தவிர வேறு என்ன வேண்டுமானாலும் பேசட்டும். 'அவங்கிட்ட எதயும் தத்துப் பித்துன்னு ஒளறி வெக்காத' என்று சரசுவிடமும்கூட சொல்லித்தான் ரயில்வே ஸ்டேஷனுக்குக் கூட்டிக்கொண்டு வந்தார் நடராஜன். எதுவானாலும் வீட்டுக்குப் போய் பேசிக்கொள்வது உத்தமம். இப்போது எதையாவது சொல்லித் தொலைத்தால் அப்புறம் இங்கேயே அவன் வாள் வாள் என்று கத்த ஆரம்பித்துவிடுவான். அவன் சுபாவம் தெரிந்ததுதானே. எதிலும் அப்படியொரு பிடிவாதம். எப்போதும் பிடித்த பிடியில் நிற்பான். வேண்டுமென்றால் வேண்டும். வேண்டாமென்றால் வேண்டாம். நடராஜன் அமைதியாய் வந்தார். டாக்ஸி ஜெமினி மேம்பாலம் ஏறும்போது அவர் பயந்துகொண்டிருந்ததை கேட்டே விட்டான்.

"கீழ்ப் போர்ஷன் என்னாச்சுப்பா?"

நடராஜனுக்குக் கருக்கென்றது. பேசாமல் காது கேட்கவில்லை என்பதுபோல் திரும்பாமலே உட்கார்ந்துவிடலாமா என்று யோசித்தார். ஆனால் மெதுவாய் மென்று விழுங்கிவிட்டு திரும்பாமலேயே "கொஞ்சம் டைம் கேட்ருக்காங்கடா. வேற வீடு பாத்திட்டிருக்காங்க" என்று மறுபடி பொய் சொன்னார். 'பையன் வர்ரான். நீங்க வீட்டைக் காலிபண்ணனும்' என்று ராமநாதனிடம் எப்படிப் போய் சொல்வதென்று ரொம்ப நாளாகவே குழப்பமாய்த்தான் இருந்தது நடராஜனுக்கு. ராமநாதனின் முகத்தைப் பார்த்து நிச்சயம் அதை அவரால் சொல்ல முடியாது. அது ஒரு தர்மசங்கடமான விஷயம். ராமநாதன் மாதிரி அருமையான மனிதரை எங்கேயும் பார்க்கமுடியாதென்பது அவர் அபிப்பிராயம். அவர் மாதிரி ஒரு நல்ல டெனன்ட் கிடைத்ததை சந்தோஷம் எனவும் அதிர்ஷ்டம் எனவும் ஒரு சிலரிடம்கூட நடராஜன் சொல்லியிருக்கிறார்.

கரெக்டாக நந்து வேலை கிடைத்து கெளகாத்திக்குக் கிளம்பின ஒரு வாரத்தில்தான் ராமநாதன் குடும்பம் கீழ்ப் போர்ஷனுக்குக் குடி வந்தது. ராமநாதனுக்கு ஒரு நாற்பத்தைந்து வயதிருக்கும். கணவன், மனைவி, ஒரு பெண், ஒரு பையன் என்று கச்சிதமான குடும்பம். ராமநாதன் ஏதோ பிஸினஸ் பண்ணிக்கொண்டிருந்தார். மனைவி மின்சார வாரியத்தில் உதவிப் பொறியாளர். நியாயமாய்ப் பார்த்தால் பிஸினெஸெல்லாம் பண்ணிக்கொண்டு இத்தனை வயசுக்கு ராமநாதன் சொந்த வீடு கட்டி செட்டிலாகியிருக்கவேண்டும். ஒரு முறை நடராஜன் அதைப்பற்றிக் கேட்டபோது 'வீடு கட்டலாம்னுதான் கோயமுத்தூர்ல லேண்ட் வாங்கிப் போட்டேன். நடுவுல பிஸினஸ் அடிவாங்கி நிறைய நட்டமாச்சு. பொண்டாட்டிக்கு வேலை இருக்கறதால ஏதோ கொஞ்சம் சமாளிச்சேன். ஒரு வழியா பிரச்சனையெல்லாம் முடிஞ்சு இப்பதான் எந்திரிச்சு நின்னிருக்கேன். கடன்ல லேண்ட்டெல்லாம் வித்தாச்சு சார்!" என்றார் ராமநாதன்.

நடராஜன் அடிக்கடி அந்த வீட்டில் குடியிருந்தவர்கள் பற்றியெல்லாம் நினைவுகளை வரிசையாய் மனத்திரையில் ஓட்டிப் பார்ப்பார். எத்தனை பேர் எத்தனை விதமாக. முதலில் நடராஜனேதான் அங்கே குடியிருந்தார். அது முதலில் ஒரு சின்ன போர்ஷனாக இருந்தது. அப்புறம் வசதி பெருகினதுக்கப்புறம் மாடியில் இன்னொரு போர்ஷன் கட்டி அங்கே குடிபோய் கீழ்ப் போர்ஷனை வாடகைக்கு விட்டார். கீழே முதலில் குடிவந்தவர்கள் இரண்டே மாசத்தில் மாற்றலாகி வடக்கே போய்விட்டார்கள். அப்புறம் நாலு பேச்சிலர்கள். அப்புறம் ·பார்மா கம்பெனி மேனேஜர் ஒருத்தர். ரொம்ப டீசன்டான நல்ல மனிதர். பாதி நாள் டூரிலேயே இருப்பார். ஒரு நாள் அவரின் சம்சாரம் யாருடனோ ஓடிப்போய்விட்டது. அந்தத் தெருவில் அது பற்றின பேச்சில் அடிபட்டு வாழ்ந்து கொண்டிருந்த மேனேஜர் திடீரென்று சொல்லாமல் கொள்ளாமல் காலி பண்ணிக்கொண்டு போனார் ஒரு நாள். அதைவிட விவகாரமான விஷயம் இரண்டு வெளியூர் பெண்கள் அக்கா தங்கச்சி என்று சொல்லிக் குடிவந்தது. காலேஜ் ஹாஸ்டல் பிடிக்கல. அதனாலதான் தனியா வீடு பாத்துத் தங்கறோம் என்று என்னவோ காரணம் சொல்லித்தான் வந்தார்கள். பார்த்தால் நல்ல மாதிரி தெரிகிறதே என்றுதான் அவரும் வீட்டைக் கொடுத்தார். ஒரு நாள் எலெக்ட்ரிக் கடை தங்கராஜ் வந்து "என்ன நடராஜ்.. சைடுல தோல் பிஸினெஸெல்லாம் ஆரம்பிச்சிருக்கீங்க போல.." என்று கேட்டான். என்னடா என்று விசாரித்துப் பார்த்தால்.. "நீ வாடகைக்கு விட்டிருக்கிற வீட்டுல.. கமுக்கமா மேட்டர் நடக்குது ஓய்! அது காலேஜ் படிக்கிற பொண்ணுங்க இல்ல" என்று ஆதாரங்களை முன் வைத்தான். அடுத்தநாளே ரெண்டுகளையும் விரட்டி அனுப்பிவிட்டார். ராமனாதன் குடி வருவதற்கு முன் ஆர்.டி.ஓ ஒருத்தரும்கூட இருந்தார். அவருக்கு ஜந்து பெண்கள், நான்கு பையன்கள். பெரிய குடும்பம். எப்படித்தான் சமாளிக்கிறாரோ மனிதர் என்று பார்க்கும்போதெல்லாம் ஒவ்வொரு நாளும் வியந்து கொண்டிருந்தார் நடராஜன். அதிக குடும்ப உறுப்பினர்களால் அவர்கள் காம்பெளண்டு கொஞ்சம் கசகசப்பாக இருந்ததும், தண்ணீர் அதிகம் செலவானதும் தவிர அவர்களால் பெரிய உபத்திரவம் எதுவும் இருந்ததில்லை. அவர்கள் கூட அதிகம் காலம் இருக்கவில்லை. நாகர்கோவில் பக்கம் எங்கேயோ போய்விட்டதாகத் தகவல்.

கடைசியாய் வந்த ராமநாதன் குடும்பம் ரொம்ப வருடங்களாக இருக்கிறது. வருடங்களின் உருளளில் ஊறிப் போன நட்பு. பார்த்துப் பழகிய முகங்கள். பழகிப் பழகி இறுகின உறவு. எத்தனையோ சந்தர்ப்பங்கள். எத்தனையோ நிகழ்வுகள். பரிமாறிக்கொண்ட துக்கங்கள் சந்தோஷங்கள், பொழுதுகள். ராமனாதன் குடும்பம் மட்டும் இல்லாமல் இருந்திருந்தால் தனிமையின் கோரக் கைகள் எல்லாவற்றையும் பிய்த்துப் போட்டிருக்குமோ என்னவோ என்றெல்லாம் யோசனை வரும் நடராஜனுக்கு. ஏனையபிற உறவினர்களையும்விட வாழ்க்கையின் வழியில் பார்த்துப் பழகின மனிதர்கள் நெருக்கமாய் இருக்கிறார்கள் என்றால் அது பெரிய கொடுப்பினைதான் என்று அடிக்கடி நினைத்துக்கொள்வார்.

எப்போதும் சரசுவும் ராமநாதனின் மனைவியும் ஒன்றாகவே கோவிலுக்கும் மார்க்கெட்டுக்கும் போவதும், ராமனாதனின் பையனும் பெண்ணும் தாத்தா தாத்தா என்று நடராஜன் வீட்டுக்குள்தான் எப்போதும் வளைய வருவதும், சார் வரீங்களா என்று ராமநாதன் இவரையும் போகிற இடங்களுக்கெல்லாம் துணை சேர்த்துக்கொண்டு சுற்றுவதும் ஆக அன்றாட நிகழ்வுகள். சில சமயம் ஞாயிற்றுக் கிழமைகளில் இரண்டு வீட்டுக்கும் சேர்த்து ஒரே சமையல் நடக்கும். வீட்டு ஓனர், குடியிருப்பவன் என்கிற எல்லை எப்போதோ தகர்ந்து ஒரு ரெண்டு குடும்பத்துக்குள்ளேயும் அனுசரனையான உறவு இருந்தது. நிறைய பேச்சு! நிறைய சிரிப்பு! நிறைய உரிமை!

ராமனாதன் அடிக்கடி சொல்வார். "உங்க வீட்டுல குடியிருக்கிறதே சொந்த வீட்டுல குடியிருக்கிற ·பீலிங் தருது தார். ஐம் லக்கி. நான் சொந்தமா வீடு கட்டினாக்கூட அதை வாடகைக்கு விட்டுட்டு ஒங்க வீட்டுலதான் இருப்பேன்". அதைக் கேட்பதில் நடராஜனுக்கும் பிடி கொள்ளாத சந்தோஷம். ராமநாதன் பிஸினெஸ் பிஸினெஸ் என்று எப்போதும் அலைகிற மனிதர். ஆனால் கொஞ்சம் ஓய்வாக இருக்கிற மாலை நேரங்களில் கண்ணில் பட்டால் வாங்க சார் வாக்கிங் போலாம் என்று நடராஜனுடன் கிளம்பிவிடுவார். இருவரும் ராகவேந்திரா நகர் தெருக்களில் உலவிவிட்டு அங்கேயிருக்கிற குட்டிப் பூங்காவுக்கு வந்து உட்கார்ந்து விடுவார்கள். நடராஜனுக்கு அப்படியொரு துணை அவசியம் வேண்டியிருந்தது. "உங்களை மாதிரி ரெண்டா பெத்திருக்கலாம் ராமநாதன். ஒண்ணே ஒண்ணைப் பெத்துட்டு.... பாருங்க....! அவஸ்தை! அவனும் பக்கத்தில இல்ல. முதுமைல தனிமைன்னு சொல்வாங்களே...."

"அப்படியெல்லாம் நினைச்சுக்காதீங்க சார். நாங்கெல்லாம் எதுக்கு இருக்கோம்." என்றார் ராமநாதன். அதென்னமோ தெரியவில்லை அவர்கள் குடிவந்த நாள் முதலாகவே அப்படியொரு ஒட்டுதலாகிவிட்டது. 'நாங்க இருக்கோம்' என்பது எப்போதும் எந்தச் சூழ்நிலையிலும் மிகப்பெரிய வார்த்தைகள். அது தரும் அர்த்தமும் பலமும் மிக சுகமானவை. நடராஜன் எப்போதும் மனிதர்கள் முக்கியம் என்று நினைக்கிற ஜாதி.

அந்த நினைப்புக்குக் குந்தகமாய் ஒரு மாசம் முன்பே நந்து போன் பண்ணிச் சொல்லிவிட்டான். 'வீட்டைக் காலி பண்ணி வைய்ங்கப்பா!! நான் வர்ரேன்'

சான்ஸே இல்லை.

நந்து அவன் பெண்டாட்டியுடன் சென்னை திரும்புகிறான். அவனுக்கு தனியாக நிச்சயம் ஒரு வீடு வேண்டும். அதற்காக ராமநாதனை காலி பண்ணச் சொல்வது நிச்சயம் தன்னால் முடியவே முடியாதென்று உறுதியாகத் தோன்றியது நடராஜனுக்கு. இதை நந்துவிடம் லேசாய் கோடி காட்டியபோது அவன் "பல வருஷம் ஒரே ஆளைக் குடிவெச்சா இதுதான் பிரச்சனை. நமக்குத் தேவைப்படும்போது நகர்த்தறது கஷ்டம்" என்று டெலிபோனிலேயே சலித்துக் கொண்டான். அதற்கப்புறம் அதுபற்றி அவனிடம் பேசவில்லை. அவன் வரும்போது பார்த்துக்கொள்ளலாம் என்று பிரச்சனையை தள்ளிப் போட்டுவிட்டார். சரசுவுக்கும் அவர்களைக் காலி பண்ணச்சொல்வதில் நடராஜனைப் போலவே உடன்பாடு இல்லைதான். ஒரு முறை ராமநாதனிடம் எதற்கும் சொல்லி வைக்கலாமா என்று நடராஜன் படியிறங்கிக் கீழே போனபோது நினைத்தபடி தொண்டைக்குள்ளேயிருந்து வார்த்தைகள் வரவில்லை. பேச வந்த விஷயத்தின் சாரத்தை அப்படியே விழுங்கிவிட்டு "என்.டி.டி.வி பாத்தீங்களா.. நேத்து ஆந்திராவில.. " என்று எங்கேயோ திசை திரும்பிவிட்டு வந்துவிட்டார். சொன்னால் புரிந்து கொண்டு ராமநாதன் ஒரு வேளை வேறு வீடு பார்த்துக்கொண்டு போகக்கூடும். ஆனால் வேண்டாம் என்று தோன்றிவிட்டது. இப்படியொரு பிணைப்பை ஒரு வார்த்தையில் அறுத்துப் போட்டுவிட விரும்பவில்லை. நந்துவிற்கு இந்த விஷயம் தெரியவே தெரியாது. அவன் வந்தவுடன் உடனே அந்த வீடு காலியாயிருக்கும் அல்லது காலியாகிவிடும் என்கிற நினைப்போடுதான் வந்திருப்பான். அவனிடம் தன் முடிவை இன்றிரவுக்குள் உடனடியாகத் தெரிவித்துவிட வேண்டியது அவசியம்.

ராமநாதனை காலிபண்ணச் சொல்லப் போவதில்லை.

நந்தனம் சிக்னலில் டாக்ஸி நிற்கும்போது நந்து மறுபடி ஆரம்பித்தான்.. "அப்பா ராமநாதன்கிட்ட நிஜமாகவே அந்த வீட்டைக் காலி பண்ணச் சொல்லிட்டீங்களா?"

நடராஜனுக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை. வந்ததிலிருந்து இதையே கேட்கிறான். ஒழுங்கான பதில் தெரியாமல் இவன் விடமாட்டான் போலிருக்கிறது. நடராஜன் மெல்லத் திரும்பி சரசுவைப் பார்த்தார். அவள் 'நீங்களாச்சு உங்க பையனாச்சு' என்பது போல் சட்டென்று ஜன்னல் குளிர்காற்றுப் பக்கம் முகத்தைத் திருப்பிக்கொண்டாள். நடராஜன் தீர்மானித்தார். இப்போதே அவனிடம் விஷயத்தைச் சொல்லிவிடலாம். அவன் என்ன நினைத்துக்கொண்டாலும் சரி! அவர் மெல்லத் தொண்டையை செறுமிவிட்டு வாயைத் திறக்கமுற்படும்போது நந்து இடைமறித்துச் சொன்னான்.

"ஏற்கனவே சொல்லியிருந்தீங்கன்னா.. அவங்களைக் காலி பண்ணவேண்டாம்னு சொல்லிருங்கப்பா.. நாம மேல் போர்ஷன்ல ஒண்ணாவே இருந்துக்கலாம்!!."

நடராஜன் நம்பாமல் திரும்பி அவனைப் பார்த்தார். "ஏண்டா திடீர்னு..."

"இல்லப்பா.. நாங்க கெளஹாத்தில குடியிருந்தோமில்லையா? அந்த வீட்டுச் சொந்தக்காரர் நாங்க காலி பண்ணிட்டுக் கிளம்பும்போது சட்டுன்னு அழுதுட்டார்ப்பா!. வி மிஸ் யூ. மிஸ் யூன்னு நூறுதரம் சொன்னார். வெறும் மூணு வருஷப் பழக்கம்தான். மனசெல்லாம் ரொம்பக் கஷ்டமாயிருச்சு. ட்ரெயின்ல வரும்போது ஒரே யோசனை. ராமநாதன் நம்ம வீட்ல எத்தனையோ வருஷமா குடியிருக்கறவர். நம்ம குடும்பத்தோட ரொம்ப அட்டாச் ஆன குடும்பம். அவங்களை திடீர்னு காலி பண்ணச் சொன்னா அவங்களுக்கு எப்படியிருக்கும்? அது உங்களுக்கும் அம்மாவுக்கும்கூட ரொம்ப கஷ்டமாயிருக்கும்னு தெரியும். வீடு ஈஸியா கிடைக்கும். இந்த மாதிரி மனுஷங்க கிடைக்கறதுதான்ப்பா கஷ்டம். அவங்க நம்ம வீட்டிலயே குடியிருக்கட்டுமே! என்ன சொல்றீங்க?" என்றான்.

புள்ளி

இதோ இந்தப்புள்ளியிலிருந்து ஆரம்பிக்கிறேன். நட்சத்திரங்கள் மாதிரி பரந்து சிதறிக்கிடக்கும் கோடானுகோடி வலைத்தளங்களுக்கிடையே இந்தப் புள்ளியைத் தேர்ந்தெடுத்து வந்து உட்கார்ந்திருக்கிறேன். பல ஒளியாண்டுகள் பயணித்து இதை அணுகுகிறவருக்கு இங்கு என்ன கிடைக்கும் என்று தெரியவில்லை. எனது இந்த வலைப்பதிவு முயற்சி எதையாவது எழுது என சதா யோசனைகளை பிராண்டுகிற மனதை சமாதானப்படுத்துவதற்கு என்று வேண்டுமானால் வைத்துக்கொள்ளுங்களேன்.

தெரியாத்தனமாய் எனக்குள் ஒளிந்திருந்த ஒரு எழுத்தாளனைக் கண்டுபிடித்து முதன்முதலாய் சிறுகதை எழுதுவது எப்படி என்று எனக்குக் கற்றுத்தந்த நண்பர் சரசுராமையும், என் கதைகளை அதிகம் வெளியிட்டு என்னை வளர்த்திய கல்கி இதழையும் மற்றும் என் எழுத்தில் நம்பிக்கை வைத்து என்னை ஊக்கப்படுத்திய திரு. பா.ராகவன் அவர்களையும் நன்றியுடன் நினைத்து என் வலைப்பதியலை துவக்குகிறேன்.

இனி உங்கள் பாடு.