பாம்பாட்டம்

பாம்புகளைப் பற்றி இப்போது எழுதுவதன் அவசியம் சுமார் ஒண்ணரை மாதத்துக்கு முன் நிகழ்ந்தது. ஆரண்யம் இதழில் முன்பு சாரு நிவேதிதா எழுதிய "பாம்புக் கதைகளு'-க்கும்" இதற்கும் சம்பந்தமில்லையென்று முன்பே தெரிவித்துக் கொள்கிறேன். ஒரு நாள் பட்டப்பகல் 1.00 மணிக்கு என் அம்மாவை பாம்பு கடித்துவிட்டதாக பதற்றமாய் கோவையிலிருந்து டெலிபோன் கால் வந்தது. கடித்தது (கொத்தியது?) நல்ல பாம்பு என்றும் அம்மா அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும், சினிமா டயலாக் மாதிரி 'எதையுமே 48 மணி நேரம் கழித்துத்தான் சொல்ல முடியும்' என்று டாக்டர் சொன்னதாகவும் தகவல்கள் கிடைத்தன. செல்போன் கண்டுபிடித்தவன் இருக்கிற திசைக்கு நமஸ்காரம் பண்ணிவிட்டு கொட்டுவாயில் ரயிலேறி கோவை விரைந்தேன். வழியெல்லாம் காதிலிருந்து செல்போனை எடுக்காமல் நிலைமையை விசாரித்துக்கொண்டே சென்றேன். அன்றைக்கு நான் அடைந்த பதற்றமும் வேதனையும் இதற்குமுன் பட்டதில்லை. ஆஸ்பத்திரியின் அவசர சிகிச்சைப் பிரிவுக்குள் போய்ப் பார்த்தபோது அம்மாவுக்கு ஆக்ஸிஜன் மாஸ்க், ECG மற்றும் இன்னபிற ஒயர்கள் இணைக்கப்பட்டு பார்க்கவே ரொம்ப பயமாய் இருந்தது. அது நல்லபாம்பில்லை. கெட்ட பாம்பு என்று நினைத்துக்கொண்டேன். பிறகு தெரிந்தது, அது கொஞ்சூண்டு நல்ல பாம்புதான் என்று. ஏனெனில் 4 நாட்கள் அவசர சிகிச்சைப் பிரிவின் கவனிப்பில் அம்மா நலம் என்று அறிக்கைகள் வந்தன. பாம்பு கடித்த (வலது கை நடுவிரல்) இடத்துக்கு மேலே மணிக்கட்டில் உடனடியாக அப்பா இறுக்கமாக கட்டுப் போட்டுவிட்டதும், கடித்த பாம்பை உடனே கொன்று கையோடு டாக்டரிடம் கொண்டுவந்து காட்டியதும், ரூபாய் 3500 மதிப்புள்ள Anti-Venom என்கிற 10 ml ஊசி உடனடியாக போடப்பட்டதும் + மற்ற சிகிச்சைகளும் அம்மாவை காப்பாற்றின.

பிறகு தனி ரூமில் அனுமதிக்கப்பட்டு உறவினர்கள், நண்பர்கள் வந்து பார்க்க அனுமதிக்கப்பட்டதும் நிறைய பாம்புக் கதைகளைக் கேள்விப்பட நேர்ந்தது. பக்கத்து ரூமில் சிறுநீரகக் கோளாறுக்கான ஆபரேஷனுக்காக அனுமதிக்கப்பட்டிருந்தவரின் அம்மாவை 30 வருடங்களுக்குமுன் பைரானி என்கிற பாம்பு கடித்து தீவிர சிகிச்சைக்குப்பின் தப்பிப் பிழைத்தாராம். அந்தப் பாம்பு அவரது காலைக் கடித்தவாக்கிலேயே ஒரு புரண்டு புரண்டு பின் கடித்த இடத்தில் தன் வாலால் நச் நச் என்று நான்கு அடி அடித்ததாகச் சொன்னார். இதே மாதிரி என் நண்பனொருவன் தனது ஏழாவது வயதில் தன் இடுப்புயரமுள்ள ராஜ நாகம் காலில் ஒரு போடு போட்டதில் ரொம்ப அபாய நிலைக்குப் போய் ஏழு நாட்கள் கோமாவில் இருந்துவிட்டு டாக்டர்கள் முயற்சியில் இரண்டாம் ஜென்மம் எடுத்ததாகவும் தெரிவித்தான். இன்னும் அவனது வலது காலில் கொதித்த எண்ணையைக் கொட்டியது போன்ற தழும்பு விகாரமாய் உள்ளது. பாம்பு சீற்றமாய்க் கொத்தின கொத்தில் பாதம் அப்படியே ஒரு பந்துமாதிரி சுருண்டுபோய் விட்டதாகவும், பிறகு தொடையிலிருந்து சதையை எடுத்து பிளாஸ்டிக் சர்ஜரி பண்ணியிருப்பதாகவும் சொன்னான். கேட்கவே பயங்கரமாக இருந்தது.

அம்மாவுக்கான சிகிச்சையின்போது சில விஷயங்கள் தெரிந்துகொண்டேன். இரண்டு மணிக்கொருதரம் ப்ளீடிங் டைம், க்ளாட்டிங் டைம் என்று கடிபட்டவரின் ரத்தம் எடுத்துப் பரிசோதிக்கிறார்கள். ரத்தத்தின் உறைநிலையில் ஏதாவது மாற்றம் நேரிடின் கொஞ்சம் பிரச்சனைதான். இந்தமாதிரி கடிவாங்குபவர்களுக்கு இரண்டு விதமான விளைவுகள் ஏற்படுமாம். ஒன்று உடனடி விளைவு. இன்னொன்று பின் விளைவு. உடனடி விளைவானது விஷத்தால் நரம்பு மண்டலம், நுரையீரல்கள் போன்றவை பாதிக்கப்பட்டு மரணம் சம்பவித்தல். பின் விளைவு சில நாட்களுக்குப் பிறகு இதயம், சிறுநீரகம் போன்றவை பாதிப்புக்குள்ளாதல். எல்லாவற்றையும் நன்கு பரிசோதனை செய்த பிறகே வீட்டுக்கு அனுப்புகிறார்கள்.

பாம்புக்கடிக்கான சிகிச்சை அரசு மருத்துவமனைகளில்தான் சரியாக அளிக்கப்படுகிறது என்று ஒரு தரப்பு விவரம் சொல்லி பயமுறுத்தியது. சரியான விஷமுறிவு மருந்துகளை அவர்கள்தான் வைத்திருப்பார்களாம். தனியார் மருத்துவமனைகளில் சில சமயம் அவைகள் கிடைக்காது என்றும் சொன்னார்கள். அம்மா அனுமதிக்கப்பட்டிருந்து ஒரு தனியார் மருத்துவமனை என்பதால் லேசாய் கவலையாயிருந்தது. ஆனால் எதுவும் பிரச்சினைகளின்றி குறிப்பிட்ட மருந்துகள் சரியான சமயத்துக்கு கிடைத்தன என்றுதான் சொல்ல வேண்டும்.

சிறுவயதில் அம்மா வாழ்ந்து வளர்ந்த வீடு பாம்புகள் அதிகம் நடமாடும் ஒரு பெரிய தோட்டத்துக்கு நடுவேதான் இருந்தது. பள்ளி விடுமுறையின் போது அங்கே போகும்போது பெரிய முற்றத்தில் போட்டிருக்கிற மலர்க் கோலத்தைக் கலைத்தபடி சாரைப் பாம்புகள் ஊர்ந்து செல்வதைப் பார்த்திருக்கிறேன். மேலும் வீட்டின் உள்ளே மரப்படிகள் கொண்டு போய்ச் சேர்க்கும் மச்சின் மேல் ஏறி எட்டிப் பார்த்தால் இஸ்.. இஸ்.. என்று பாம்புகள் சீறுகிற சப்தம் கேட்கும். சாரைப் பாம்பில் ஆரம்பித்து கட்டுவிரியன், நாகப் பாம்பு, கூழைப்பாம்பு என்று அத்தனை வெரைட்டிகளும் மனிதர்களோடு சேர்ந்து புழங்குகிற இடம் அது. அங்கேயெல்லாம் தப்பித்து செடிகளும், மரங்களும் அருகிப்போன நகரத்தில் ஒரு கான்கிரீட் காலனியில் வந்து கடிவாங்க நேரிட்டதை என்ன சொல்ல?

கோவையில் ஒரு பெரிய மருத்துவமனை மருந்தகத்தில் பணிபுரியும் என் உறவினர் 'இதெல்லாம் சின்ன கேஸுங்க. உங்களுக்கு முப்பதாயிரம் ரூபாய் செலவுல ட்ரீட்மெண்ட் முடிஞ்சிருச்சு. எங்க ஆஸ்பத்திரில Anti-Venom எல்லாம் பெட்டி பெட்டியா வாங்கிட்டுப் போவாங்க" என்று அம்மாவிடம் சொல்லிக்கொண்டிருந்தார். விஸிட்டராக வந்த இன்னொருவர் தந்த தகவல்: ஒரு 35 வயது இளைஞன் உடலில் எத்தனை புரோட்டின் இருக்குமோ அத்தனை புரோட்டினை பாம்பு கொத்தும்போது மனித உடலினுள் செலுத்துகிறது. இம்மாதிரி செலுத்தப்படும் கூடுதல் புரோட்டின்தான் அதன் பல்லில் இருக்கும் விஷமாக மனிதர்களை கொல்கிறது என்றார். உண்மையா தெரியவில்லை. அதே மாதிரி ஆளைக் கடித்த பாம்பு மயக்கமடைந்து கடித்த இடத்திலேயே கிடக்குமாம். ஏனென்றால் நமது ரத்தம் அதற்கு விஷமாம். இதையும் யாராவது தெளிவுபடுத்தவேண்டும். இதற்குமுன் நாங்கள் குடியிருந்த வீட்டுக்கு குறுக்கு வழியாக இருளடைந்த ஒரு சோளக்காடு, தென்னந்தோப்பைத் தாண்டிச் செல்லவேண்டும். ராத்திரி பதினொரு மணிக்கு பயமின்றி கையில் வைத்திருக்கிற ஒரு பென் டார்ச்சுடன் கீழே குனிந்தபடி ஒற்றையடிப் பாதையில் பளபளப்பாக நகரும் பாம்புகளைத் தவிர்த்து நடந்த அனுபவங்களை இப்போது அசைபோட்டால் உடல் குலுங்குகிறது.

கையில் கடிபட்ட இடத்தில் காயம் இன்னும் ஆறாத நிலையில் சிறிது ஓய்வெடுத்துக்கொள்ளலாம் என்று சென்னை வந்த அம்மாவை கிண்டி பாம்புப் பண்ணைக்கு அழைத்துச் சென்றேன். பாம்புகளைப் பற்றி நேஷனல் ஜியாகரஃபி, அனிமல் ப்ளானட், டிஸ்கவரி சேனல்கள் கற்றுக் கொடுத்ததுபோக மீதி விஷயங்களை அங்கே போனபோது தெரிந்துகொள்ள முடிந்தது. பாம்புகள் பற்றி நம்பப்படும் மூட நம்பிக்கைகளுக்கெல்லாம் விளக்கம் அளித்து போர்டு வைத்திருந்தார்கள். சில உதாரணங்கள்:

ஒரு பாம்பை அடித்தால் இன்னொரு பாம்பு பழிவாங்கும் - நிச்சயமாக இல்லை.
கொம்பேறி மூர்க்கன் ஆளைக் கடித்தபிறகு மரத்தின் மேலேறி பிணம் எரிகிறவரை பார்க்கும். - தவறு. கொ.மூர்க்கனுக்கு விஷம் கிடையாது.
பாம்பு விஷத்தை மந்திரம் ஜெபித்து இறக்கிவிடலாம். - நிச்சயமாய் முடியாது.
பறக்கும் பாம்பென்று ஒரு வெரைட்டி கிடையவே கிடையாது.

பாம்பு கடித்ததினால் ஏற்படும் மரணங்களில் 75 சதவீதம் அதிர்ச்சியால் ஏற்படுவதாம். தகுந்த முதலுதவி, பாதிக்கப்பட்டவர் நம்பிக்கையிழக்காமல் பார்த்துக்கொள்ளுதல், பதற்றமடையாமல் இருத்தல் போன்றவற்றின் மூலம் அதிகபட்சம் காப்பாற்றிவிடமுடியும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. சில இடங்களில் கடிபட்டவரைப் படுக்க வைத்து மந்திரம் ஜெபிப்பார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். என் நண்பரின் அண்ணனுடைய நண்பனின் அக்காவுக்கு வயலில் பாம்பு கடித்து ஒரு முழு இரவும் படுக்கவைத்து மந்திரம் சொல்லிக்கொண்டிருந்ததில் காலையில் அவர் இறந்துபோனது நினைவுக்கு வந்தது. அதுதவிர கோவை மாவட்டம் சோமனூர் அருகே இருக்கும் வாழைத்தோட்ட ஐயன் கோவிலுக்குப் போய் வருவதன் மூலம் பாம்பு தோஷங்களிலிருந்து விடுபட முடியும் என்றும் நம்பிக்கை நிலவுகிறது. அம்மாவை பாம்பு கடிப்பதற்கு ஒரு வாரம் முன்பு நானும் என் நான்கு வயது வாண்டும் இரவு பத்தரைக்கு பரமபதம் விளையாண்டு கொண்டிருந்ததுகூட காரணமாயிருக்கலாம் என்று என் மனைவிக்கு லேசான சந்தேகம்கூட இருக்கிறது.

அம்மா வந்திருந்தபோது போரடிக்கிறது என்று காலையில் டி.வி போட்டபோது முதலில் திரையில் தெரிந்தது சூர்யா டி.வியில் பாம்புகள் பற்றின ஒரு நிகழ்ச்சி. 'நம்மள் தம்மில்' என்று ஸ்ரீகண்டன் நாயர் என்பவர் நடத்துவது. அதில் 25 தடவைகள் அரணை (பாப்பராணி) கடித்த பெண்மணி, 32 தடவை பாம்புக்கடி வாங்கிய ஒரு நடுத்தர வயது பெண்மணி, ஒரு பாம்பு சாஸ்திர நிபுணர், பாம்புக்கடி மருத்துவ நிபுணர், 100க்கும் மேற்பட்ட விஷப் பாம்புகளைப் பிடித்து வளர்த்துகிற ஒரு வீரப்பன் மீசைக்காரர். கொஞ்சம் ஆடியன்ஸ் இவர்களை வைத்து ஒரு நிகழ்ச்சி. அந்தப் பெண்மணி சென்ற இடமெல்லாம் பாம்புகள் தேடிவந்து கடித்துவிட்டுப் போகிறதாம். அதற்கு விளக்கம் கேட்டதற்கு மருத்துவர் அந்தப் பெண்மணியின் உடலிலிருந்து வருகிற மணம் இப்படி பாம்புகளை ஈர்த்து அழைக்கிற தன்மையைப் பெற்றிருக்கலாம் என்று சந்தேகமாய் பதில் சொன்னார். தவிர கேள்வி கேட்டுவிட்டு யாராவது பதில் சொல்வதற்குள் அவர்களை ஓவர்லேப் அல்லது ஓவர்டேக் பண்ணி பேச ஆரம்பிக்கிற ஸ்ரீகண்டன் நாயரின் குணத்தால் - பாம்புக்கு காது கிடையாது, மகுடி இசை அதற்கு கேட்காது. மகுடியின் அசைவுக்கு ஏற்ப தலையசைப்பது அது இசைக்கு ஆடுவதுபோல் தோன்றுகிறது; நில அதிர்வுகளை வைத்தே ஆள் நெருங்குவதைக் தெரிந்துகொள்கிறது - என்கிற அடிப்படை விஷயங்களைத் தவிர எக்ஸ்பர்டுகள் தெரிவிக்க நினைத்த பாம்பு விவரங்களைத் தெரிந்துகொள்ள முடியாமல் போய்விட்டது.

பாம்புகள் பற்றி மேலும் தெரிந்து கொள்ளவதற்கு இணையம் சிறந்த இடமென்று தெரியும். இன்னும் உள்ளே போகவில்லை. என் பயோ டேட்டாவில் 'ஹாபி' என்பதற்கு நேராக பாம்பு ஆராய்ச்சி என்று போடாலாமா என்றும் யோசனை. மேற்படி நான் கேள்விப்பட நேர்ந்த விஷயங்களில் ஏதேனும் தவறிருப்பினும் கூடுதல் விவரம் தெரிந்து வைத்திருப்பவர்கள் சுட்டிக் காட்டவும்.

எப்படியோ நான் இப்போதெல்லாம் தரையில் ஒரு மண்புழு ஊர்ந்தால்கூட சந்தேகமாய்ப் பார்க்க ஆரம்பித்துவிட்டேன். பின்னே இருக்காதா?

சொர்க்கத்தின் குழந்தைகள்

போனவாரம் ஒரு சில பிற மொழிப் படங்களைப் பார்த்தேன். சில்ட்ரன் ஆஃப் ஹெவன், நோ மேன்ஸ் லேண்ட், சேவியர் மற்றும் சிக்ஸ்த் சென்ஸ். இதில் சில்ட்ரன். ஆஃப் ஹெவனும், நோ மேன்ஸ் லேண்ட்டும் ஏற்கனவே பார்த்தவைகள்தான். ஆனால் மறுபடி பார்க்கத் தூண்டுகிற படங்கள்.

'சில்ரன் ஆஃப் ஹெவன்' பற்றி சிலாகித்தே ஆகவேண்டும். இது ஒரு ஈரானியப் படம். இத் திரைப்படத்தின் முக்கியப் பாத்திரங்கள் ஸ்கூல் போகிற ஒரு பையனும் அவன் தங்கையும், அப்புறம் ஒரு ஜோடி ஷூவும்தான். இன்னும் சொல்லப் போனால் ஷூதான் படத்தில் ஹீரோ. சின்னச் சின்ன உணர்வுக் கலவைகளோடு ரசிக்கத்தக்க வகையில் சுவாரஸ்யமாய் இப்படிக்கூட கதை சொல்ல முடியுமாவென்று ஆச்சரியமாய் மறுபடி மறுபடி பார்த்தேன். நம்மூர் புது இயக்குநர்கள் சில்ரன் ஆஃப் ஹெவனை பத்து தடவையாவது போட்டுப் பார்த்துக் கற்றுக் கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது. எந்த ஆர்ப்பாட்டமும் கூத்தும் இல்லாத எளிய திரைக்கதை அமைப்பைக் கொண்ட இப்படத்தைப் பார்த்து முடிக்கும்போது ஒரு நல்ல சிறுகதை அல்லது குறுநாவல் படித்த உணர்வு நிச்சயம் எழும் என்பதற்கு நான் கியாரண்டி தருகிறேன்.

இதே மாதிரி தி சிக்ஸ்த் சென்ஸ். 1999 ல் பல ஆஸ்கார்களை வென்று குவித்த இந்தப் படத்தை ரொம்ப லேட்டாகப் பார்க்க நேரிட்டது என் துரதிருஷ்டம். புத்திசாலித்தனமான திரைக்கதை அமைப்பு, சைக்கலாஜிகல் திரில்லர் என்றெல்லாம் உலகலாவிய பாராட்டைப் பெற்ற இந்தப் படம் தியேட்டரில் ஓடிக்கொண்டிருந்தபோது ஏனோ பார்க்கவில்லை. படத்தில் என்ன கதை என்பதை வரிந்து வரிந்து நண்பனொருவன் விளக்கிச் சொன்னதும்கூட நான் சுவாரஸ்யமிழக்கக் காரணமாயிருந்திருக்கலாம். இப்போது காணக் கிடைத்தபோது நிஜமாய் பிரமிப்பாய் இருந்தது. டை-ஹார்ட்-ல் கிழிந்த பனியனும் கையில் துப்பாக்கியுமாக அட்வென்சர் ஆசாமியாகப் பார்த்த ப்ரூஸ் வில்லீஸை, டாக்டர் மேல்கம் க்ராவ் என்ற பாத்திரத்தில் அமைதியான உணர்ச்சிகரமான ஒரு குழந்தைகள் சைக்காலஜிஸ்ட்டாகப் பார்ப்பதற்கு நன்றாகத்தான் இருக்கிறது. ப்ரூஸ் வில்லீஸூடன் போட்டி போட்டு நடித்திருக்கும் அந்தப் பையன் ஹேலி ஜோயல் ஆஸ்மெண்ட்-ன் முகம் மனசைவிட்டு அகல மறுக்கிறது. (இப்போது பெரிய பையனாகிவிட்டான் போல!) இந்தப் படத்திலும் எல்லாவற்றையும்விட, புருவத்தை உயரவைக்கும் திரைக்கதைதான் ஹீரோ என்பதில் சந்தேகமில்லை. பார்த்த அன்று இரவு தூக்கம் வரவில்லை. இருட்டிக்குள் போக லேசாய் பயமாயிருந்தது. ஏனென்பது படம் பார்த்தவர்களுக்குத் தெரியும். ரொம்ப லேட்டாய்ப் பார்த்தாலும் மிகவும் அசத்திய இந்தப் படத்தின் விவரங்களை நெட்டில் தேடிக்கொண்டிருந்தபோது திடீரென்று அதன் ஸ்க்ரிப்ட் அகப்பட்டதும் மனம் புளகாங்கிதமடைந்துவிட்டது. டெளன்லோடு பண்ணி ஒரே மூச்சில் படித்து முடித்தேன். படிக்கப் படிக்க ஆச்சரியம் உயர்ந்துகொண்டே போகிறது. என்னமாய் எழுதியிருக்கிறார். ஒரு நல்ல தரமான திரில்லர் நாவல் படித்து முடித்த திருப்தி கிடைத்தது. (இந்தத் திரைக்கதையின் நோட்பேடு வடிவத்தைப் பார்த்தால் மூவி மேஜிக் அல்லது அல்லது ஃபைனல் ட்ராஃப்ட் போன்ற மென்பொருள்களின் உதவியால் எழுதப்பட்டிருக்கலாம் என்று தோன்றியது.)

தி சிக்ஸ்த் சென்ஸ் போல இன்னும் நிறைய புகழ்பெற்ற ஹாலிவுட் திரைக்கதைகள் html, pdf அல்லது txt வடிவங்களில் கிடைக்கின்றன. இந்த மாதிரி சிலவற்றை என் கணினியில் இறக்கி வைத்திருக்கிறேன். அவற்றில் சில - American Beauty, Gladiator, Breave Heart, Rush Hour, Face/Off, Signs, Cast Away, Terninator 2, Trueman show, Saving Private Ryan, etc. Roberto Benigni-யின் "Life is beautiful" என்ற படத்தின் திரைக்கதையை தேடிக் கொண்டிருக்கிறேன். இன்னும் கிடைக்கவில்லை. இம்மாதிரி திரைக்கதைகளில் எது திரைப்படமாக்கப்பட்ட இறுதி வடிவம் என்று தேடிப் பார்த்து இறக்குமதி செய்ய வேண்டியது அவசியம். சிலவற்றில் "third draft" என்றோ "Shooting script" என்றோ கூட போட்டிருக்கும். சிலவற்றை இறக்குமதி செய்ய பைசா கேட்கிறார்கள். திரைக்கதை எழுதுவது எப்படி என்பதற்கு புத்தகங்களைத் தேடித் தேடிப் படித்துக்கொண்டிருக்கும் வருங்கால இயக்குநர்கள் கூடுமானால் இந்த ஸ்கிரிப்டுகள் எல்லாவற்றையும் ஒரு புரட்டு புரட்டிப் பார்த்தால் அவர்களுக்கும் மக்களுக்கும் உதவியாயிருக்கும் என்று நினைக்கிறேன். தமிழில்கூட வெற்றி பெற்ற / பெறாத சில படங்களின் திரைக்கதைகள் புத்தகமாக வெளிவந்திருப்பதை அறிவேன். (உதா : சேது, ஹே ராம்.) ஹாலிவுட் ஸ்கிரிப்ட்கள் மாதிரி நல்ல தமிழ்த் திரைக்கதைகளையும் எப்போது வலையில் இறக்குமதி செய்கிற வசதி கிடைக்குமென்பதையும், அப்படி ஏதேனும் முயற்சிகள் நடக்கின்றனவாவென்பதையும் அறிய அவா!

ஹாலிவுட் பிரியர்களுக்கு எனக்கு தெரிந்த ஏதோ சில உபரி தகவல்களையும் சொல்லிவிடலாமென்று நினைக்கிறேன். www.imdb.com என்கிற வலைத்தளம் உலகளாவிய வகையில் திரைப்படங்கள், அவற்றின் இயக்குநர்கள், மற்றும் இன்னபிற விவரங்களைத் தொகுத்துத் தருகிறது. மணிரத்னம் என்று தேடினாலும் கிடைக்கிறது. ஸ்பீல்பெர்க் என்று தேடினாலும் கிடைக்கிறது. இந்த மகா வலைத்தளத்தை உருவாக்கிய புண்ணியவானுக்கு என் வந்தனங்கள். அது மாதிரி www.apple.com/trailers என்று போட்டுப் பாருங்கள். இப்போது ஹாலிவுட்டில் தயாரிக்கப்பட்ட அத்தனை புத்தம்புது படங்களின் ட்ரைலர்களைப் அவரவர் Band Width செளகரியத்தில் பார்க்க அருமையான வலைத்தளம். இங்கிருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஆங்கிலப் படங்களின் ட்ரைலர்கள் சிறியதும் பெரியதுமாக சுமார் 70 வைத்திருக்கிறேன். ஒவ்வொன்றும் ஒரு சிறுகதை மாதிரி மிரட்டக்கூடியவை. முன்பு கிடைத்துக்கொண்டிருந்த Broad Band நெட் வசதி என் வாழ்விலிருந்து துண்டிக்கப்பட்டதும் இந்த ட்ரைலர் சேகரிக்கிற பழக்கம் நின்று போனது. மீண்டும் கிடைத்தால் தொடர விருப்பம்.

இது மாதிரி இணையப் பெருங்கடலில் நிறைய ஆழ்ந்து கிடக்கின்றன. ஆழமாய் மூழ்கிப் பொறுமையாய்த் தேடினால் நிறைய ஆச்சரியங்கள் கிடைக்கும்.

அர்த்தமண்டபக்காரர்

கோவையிலிருக்கும் என் எழுத்தாள நண்பர் சுதேசமித்திரன் வலைப்பதிவு ஆரம்பித்திருக்கிறார். தன் வலைப்பதிவுக்கு அர்த்த மண்டபம் (Hall of Meaning) என்று பெயரிட்டு முதலில் ஒரு சிறுகதையுடன் இணையத்தில் தன் பயணத்தைத் துவக்கியிருக்கிறார். சுதேசமித்திரன் இலக்கிய உலகில் பரவலாக அறியப்படுபவர். ஒரு தேர்ந்த எழுத்தாளர். தமிழ் இலக்கியத்தின் முன்னணி எழுத்தாளர்களின் படைப்புகளைத் தாங்கி வந்துகொண்டிருந்த 'ஆரண்யம்' என்னும் கலை இலக்கிய காலாண்டிதழின் ஆசிரியர்களில் ஒருவர். ஆரண்யத்தின் ஒவ்வொரு இதழிலும் எம்.டி. வாசுதேவன் நாயர், சத்யஜித் ரே போன்றவர்களின் பல புகழ்பெற்ற திரைக்கதைகள் தமிழாக்கம் செய்யப்பட்டு வெளிவந்துகொண்டிருந்தது மிகச் சிறப்பான விஷயம். இந்த இலக்கியப் பத்திரிக்கையில் வெளியான படைப்புகளுக்கு நான் ஓவியம் வரைந்திருக்கிறேன் என்கிற வகையில் என் பங்கும் உண்டு. சுதேசமித்திரன் இப்போது கோவையிலிருந்து 'சாம்பல்' என்னும் இலக்கியப் பத்திரிக்கையை வெளியிட்டு நடத்திக்கொண்டிருக்கிறார். (இது பற்றி பா.ரா ஒரு முறை தன் வலைப்பதிவில் குறிப்பிட்டிருக்கிறார்.)

சுதேசமித்திரன் ஒரு நல்ல கவிஞரும்கூட. இதற்குமுன் "அப்பா" என்ற இவரது கவிதைத் தொகுதி வெளியாகியுள்ளது. விரைவில் இவரது ஒரு சிறுகதைத் தொகுப்பும், ஒரு நாவலும் வெளியாகவிருக்கின்றன. விகடன் குமுதம் போன்ற முன்னணி வார இதழ்களில் இவர் நிறைய அருமையான சிறுகதைகள் எழுதியுள்ளார். சுதேசமித்திரன் ஒரு நல்ல ஓவியரும்கூட. இவரைப் போன்ற நல்ல படைப்பாளிகள் இணைய நீரோடையில் இணைவது நல்ல விஷயம். சுதேசமித்திரனை வரவேற்போம்.

லைவ்

இதய பலவீனமுள்ளவர்களும் குழந்தைகளும் பின்வரும் காட்சிகளைப் பார்க்க வேண்டாம் என்று கேட்டுக்கொண்டு டி.வியில் அதைக் காட்டினார்கள். தீயின் நாக்குகள் தின்று உமிழ்ந்த உயிர்கள் கரித்துண்டுகளாய் குவிந்துகிடப்பதும், பிஞ்சு மலர்களின் சாம்பல் காற்றில் பறப்பதும், கும்பகோணம் துன்பகோணம் ஆன காட்சிகள். அது இதய பலமுள்ளவர்களையும் பலவீனமாக்கிவிட்டது என்பதில் சந்தேகமில்லை. 'நெஞ்சே வெடித்துவிடும் போல் இருந்தது' என்று சாதரணமாகக் கதைகளில் எழுதுவதை உண்மையாய் உணர்ந்தது அதைப் பார்த்தபோதுதான்.

இந்த மாதிரி உலகின் மகா துயரங்களையும் கோர சம்பவங்களையும் சதுரக் காட்சிகளாய் லைவ் ரிலே அல்லது ரெகார்ட் பண்ணப்பட்ட கோப்புக் காட்சிகள் என்று வரவேற்பரைக்கு முன் கொட்டத் துவங்கிவிட்டது டி.வி சானல்கள். அதை பார்த்துப் பார்த்து அன்றாட வாழ்க்கையின் பரபரப்பை இன்னும் கொஞ்சம் அதிகரித்துக் கொண்டு தவித்துக் கிடக்கிறோம்.

முன்பு ஒரு முறை தர்மபுரியில் ஒரு பஸ்ஸுக்குள் மூன்று மாணவிகள் மரண ஓலங்களுடன் எரிவது பல கோணங்களில் காட்டப்பட்டது. 'ஐயோ' என்று நெஞ்சு பதைக்கப் பார்த்ததைத் தவிர நம்மால் ஒன்றும் செய்ய முடியவில்லை. அந்தச் சூழ்நிலையில் படமெடுத்த காமிராக்காரருக்கு ஏன் ஒரு துரும்பைக் கூட கிள்ளிப் போடத் தோன்றவில்லை என்று இன்னமும் யோசித்துக் கொண்டிருக்கிறேன்.

இதேபோல் கேரளாவில் ஒரு மதம் பிடித்த யானை தன் பாகனை துதிக்கையால் தூக்கி வீசிப் பந்தாடி கீழே போட்டு உருட்டி காலால் நசுக்கிச் சாகடித்ததை நீங்கள் நிச்சயம் பார்த்து திடுக்கிட்டிருப்பீர்கள். அதையும் மறக்காமல் திரும்பத் திரும்ப எல்லா செய்தி நேரத்தின் போதும் மறுஒளிபரப்பு பண்ணி அடிவயிற்றைப் பிசைய வைத்தார்கள். பார்த்து இரண்டு வேளை சோறு தொண்டைக்குள் இறங்கவில்லை.

அதே மாதிரி ஒரு மனநோயாளி ஒரு கோயில் பணியாளரை தெப்பக்குளத்துக்குள் பார்ப்பவர்களின் கண் முன்னே மூழ்கடித்துக் கொன்ற கொடூரக் காட்சி. காமிரா சுழன்று அதை விலாவாரியாய் பதிவு பண்ணி நமக்குக் காட்டியது. இது மாதிரி இன்னும் நிறைய. 'ஐயோ கொல பண்றாங்க' என்ற ஓலத்துடன் கலைஞரை கைது செய்யும் காட்சியை ஐந்து நிமிடங்களுக்கொருமுறை ஒளிபரப்பி இயல்பு வாழ்க்கையை ஸ்தம்பிக்கச் செய்தது ஒரு சேனல். பார்லிமெண்டில் நுழைந்த தீவிரவாதிகள் தூண்களுக்குப் பின் மறைந்து சுடும் காட்சியும் இறுதியில் புல்லட் துளைக்கப்பட்ட அவர்களின் உடல்களையும் பார்த்தோம். மும்பை இண்டியா கேட் அருகே வெடிகுண்டு விபத்தில் சிதறினவர்கள். கோவை தொடர் வெடிகுண்டு விபத்துக்களின் நேரடி ஒளிபரப்பு. ராஜீவ் காந்தி கொலை, அஸ்ஸாம் புயல் சேதம், ஏர்வாடி தீ விபத்து, ஆயிரக்கணக்கான உயிர்களைப் பலிகொண்ட குஜராத் நிலநடுக்கம், பாலங்களில் ரயில் பெட்டிகள் தடம்புரண்டு கவிழந்து தொங்குவது. மெரீனா காந்தி சிலையருகே நடந்த பேரணியில் நிகழ்ந்த கலவரத்தில் ஒருத்தனை ஓட ஓட விரட்டி நடுமுதுகில் வெட்டுகிற காட்சி. குஜராத் ரயில் பெட்டி எரிப்பும் அதைத் தொடர்ந்த கலவரங்கள். விமானங்கள் தகர்த்துப் பிளந்த WTC கட்டிடங்கள் சுமார் ஆறாயிரம் பேருடன் இடிந்து தரை தட்டல். லேசர் குண்டுகளால் ஈராக்கைத் துளைத்தெடுக்கிற போர் விமானங்கள். இந்திய விமானம் ஆப்கனுக்கு கடத்தப்பட்டபோது கொன்று வீசப்பட்ட புது மணமகனின் உடல். அப்புறம் இது போதாதென்று ஒரு பணயக் கைதியின் தலையை தனியே அறுத்தெடுக்கும் கோரக் காட்சி. போலீஸ் என்கெளண்டர்கள் என பதற வைக்கும் காட்சிகள் டி.வி என்கிற அபார சாதனத்தின் உபயத்தில் கண் முன்னே விரிகின்றன. இது போல் இன்ன பிற.

சம்பவ இடங்களில் உடனுக்குடன் பதிவுசெய்யப்படும் 'நேரடிக் காட்சிகள்' டி.வி சேனல்களின் வேகமான டெக்னாலஜி திறமையை பறைசாற்றாமலில்லை. இத்தனை காலம் ரேடியோவில் கேட்டுக் கொண்டிருந்த இந்த கோர துயர நிகழ்ச்சிகளை இப்போது சிவப்பு வண்ணம் பூசின கோப்புக் காட்சிகளாக அல்லது லைவ்வாக இயக்கமற்றுப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். எத்தனை தவிர்த்தாலும் இறந்த உடல்களையும், ஓடுகிற ரத்த ஆறையும் குழந்தைகளும் கூட சர்வ சாதாரணமாய் பார்க்க ஆரம்பித்துவிட்டன. அவர்கள் வளர்கிற போது காணக்கிடைக்கிற நிஜம் அப்படியொன்றும் அவர்களிடம் அதிர்வுகளை ஏற்படுத்திவிடாது என்று தோன்றுகிறது. இந்தச் செய்திகள் எல்லாம் மக்களுக்கு உடனுக்குடன் யார் முந்தித் தருவது என்ற போட்டியில் மரணங்களையும், கலவரங்களையும், விபத்துக்களையும், ரத்தச் சிவப்பையும் தேடி காமிராக்கள் அலைகின்றன. எடுக்கப்பட்ட வீடியோக்கள், சேனல்களில் திரும்பத் திரும்ப ஓட்டப்பட்டு மெல்லிதயங்களைக் கலக்குகின்றன. உறைந்த மனங்களோடு இப்போது இவைகளைப் பார்த்துக் கொண்டிருக்கிற நமக்கு ஒரு நாள் மரத்துப் போய் விடும் என்றே தோன்றுகிறது.

பார்க்கவும் முடியவில்லை. தவிர்க்கவும் முடியவில்லை. இந்த லைவ் ரிலேக்களை என்ன செய்வதென்றும் புரியவில்லை.

சுட்டது யார்?

மேட்டுப் பாளையம் மெயின் ரோட்டிலிருந்து ராமசாமிக் கவுண்டர் தோட்டம் வழியாக நாங்கள் முன்பு குடியிருந்த திருமுருகன் நகருக்குக் குறுக்கு வழி இருந்தது. பொது வழி அல்ல என்று போர்டு போட்டிருந்தாலும் நடக்கிறவர்கள் நடந்துகொண்டுதான் இருந்தார்கள். முதலில் பரந்து விரிந்த ஒரு ரோஜாத் தோட்டம் இருக்கும். கோவை பூமார்க்கெட்டுக்கு அங்கிருந்து நிறைய சப்ளை உண்டு. அதைத் தாண்டி நடந்தால் அப்புறம் கவுண்டர் வீடும் அதையொட்டின வாழைத் தோட்டமும் இருக்கும், அங்கிருந்து ஒரு தென்னந்தோப்பின் நிழல் சூழ்ந்த மண்பாதை ஆரம்பமாகும். அதெல்லாம் நான் நிறைய ரசித்து ரசித்து நடந்த வழிகள். அதிகம் ஆட்கள் நடமாட்டமற்ற தனிமையில் இத்தனை தூரம் கடந்து வந்தால் பிறகு அந்தப்பக்கம் இருக்கிற காலனியை தன் அடர்த்தியால் மறைக்கிற ஆளுயர சோளக்காடு. அதற்குள் புகுந்து நடக்க வேண்டும். சோளம் நன்றாய் வளர்ந்திருந்தால் ஒரு ஆள் நடக்கிற வழி மட்டுமே இருக்கும். இரவானால் அந்த வழியே நடப்பதானால் கொஞ்சம் ரிஸ்க்தான். துளி வெளிச்சம்கூட இல்லாத இருளடடைந்த அந்தச் சோளக்காட்டின் நடுவேயான ஒற்றையடிப்பாதையில், காலடியில் ஊரும் பாம்புகளை பயத்துடன் தவிர்த்து நடக்கையில் எதற்காக அப்பா இப்படியொரு காலனியில் வீடு பார்த்தார் என்று கோபமாய் வரும். வழியில் நடுவில் ஒரு பெரிய ஒற்றை வேப்பமரமும், அதனடியில் ஒரு பாம்புப் புற்றும் உண்டு. இப்படி ஒரு பெரிய நகரத்துக்கு நடுவில் இந்த கிராமிய சூழ்நிலை தாண்டி திடீரென்று ஒரு காலனி விரிவது கொஞ்சம் வியப்பாய்தான் இருக்கும். தள்ளித் தள்ளி தனித்தனி வீடுகள் கொண்ட காலனி.

அது ஒரு நல்ல வீடு. அப்பாவின் ட்ரான்ஸ்ஃபர் பந்தாடல்களுக்கு நடுவில் நாங்கள் இருக்க நேரிட்ட இன்னொரு ஜாகை. எனக்கு மிகவும் பிடித்த வீடு அது. முன்னால் வட்டவடிவில் ஒரு சிட் அவுட், சின்ன தோட்டத்துடன் கொஞ்சம் அழகாகத்தான் இருக்கும். வீட்டின் பின்புறமும் உபரி ரம்மியமாய் கொஞ்சம் தென்னந்தோப்புகள், அதன் பின் புலத்தில் நீல நிறத்தில் ஒரு குட்டி மலைத்தொடர்.

அன்றைக்கு எதற்கோ வேலைக்கு லீவு போட்டு வீட்டில் இருந்தேன். ஒரு நல்ல வெயிலடிக்கிற பகல் பொழுது அது. எதேச்சையாக வீட்டு ஜன்னலின் வழியே பார்வை ஓட்டியபோது அவர்களைக் பார்த்தேன். இரண்டு பேர் என் வீட்டுக்கு எதிரில் நின்றிருந்தார்கள். அவர்கள் என் வீட்டைச் சுட்டிக்காட்டி என்னவோ பேசிக்கொண்டிருக்கிறார்கள். நான் வெகுநேரம் அவர்களைக் கவனித்துக்கொண்டிருந்தேன். யார் அவர்கள்? என்ன பேசுகிறார்கள்? என்று புதிராய் இருந்தது. அதில் ஒரு ஆள் லேசாய் வீட்டருகில் வந்து சுற்றுமுற்றும் பார்வையால் அளந்துவிட்டு பின் மறுபடி இன்னொரு ஆளிடம் போய் என்னவோ சொல்வதைப் பார்த்தேன். எனக்கு லேசாய் சந்தேகமாய் இருந்தது. பின்னர் இருவருமாக மேலும் நெருங்கி மறுபடி வீட்டை நோட்டம் பார்க்க ஆரம்பித்தார்கள். நான் இருக்கக் கொள்ளாமல் டக்கென்று கதவு திறந்து வெளியே வந்தேன்.

என்னைப் பார்த்ததும் அவர்கள் மையமாய் சிரித்தார்கள். நான் சிரிக்காமல், யார் நீங்க? என்ன வேணும்? என்றேன்.

"விஜய் டி.விக்காக ஒரு சீரியல் ஷூட்டிங் பக்கத்துல நடந்துட்டிருக்கு தம்பி. நாங்கதான் அதுக்கு ப்ரொடியூசர்ஸ். உங்க வீடு அமைப்பு நல்லா இருக்கு. இங்க ரெண்டு மூணு ஷாட்ஸ் எடுக்கலாமான்னு டிஸ்கஸ் பண்ணிட்டு இருந்தோம்." என்றார் ஒருவர். ஓஹோ என்றேன் நான். அவர்கள் வீட்டுக்கு எதிரில் நின்று உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தது சந்தேகம் வரவழைத்ததைச் சொன்னேன். சிரித்தார்கள்.

"சொல்லுங்க தம்பி ரெண்டு மூணு சீன் இங்க எடுத்துக்கலாமா?" என்றார். எனக்கு என்ன சொல்வதென்று தெரியாவிட்டாலும் கொஞ்சம் ஆர்வமாய்த்தான் இருந்தது. 'தேவர் மகன்' ஷூட்டிங் யூனிட்டுடன் பொள்ளாச்சி சூலக்கல், ஊத்துக்குளி வட்டார படப்பிடிப்பிலெல்லாம் மூன்று நாட்கள் அலைந்தது ஞாபகம் வந்தது. ஆஹா இப்போது என் வீடே படப்பிடிப்புத்தளமாகிவிட்ட பாக்கியம் கிடைத்துவிட்டது. இதோ நான் அனுமதித்தால் விஜய் டி.வி.யில் என் வீடு தெரியும். எனக்கு பயங்கர திரில்லாகிவிட்டது. அப்பா ஆபிஸ் போயிருக்கிறார். அம்மாவிடம் ஓடி விஷயத்தைச் சொன்னேன். அம்மாவுக்கு அது பற்றியெல்லாம் தெளிவான ஞானம் இருக்கவில்லை. என்னமோ நம்மளை தொந்தரவு பண்ணாம நடத்தினாங்கன்னா சரி என்றாள்.

நான் வெளியில் வந்து "ஷாட்ஸ் எடுத்துக்கோங்க ஆனா வீட்டுக்குள்ள எல்லாம் வேண்டாம்" என்றேன் அவர்களிடம். ஒத்துக்கொண்டார்கள். தோ வந்துர்றோம் என்று மறைந்தார்கள். திரும்பி வரும்போது கேமரா, ரிஃப்ளக்டர், லைட்டுகள் சகிதம் ஒரு படையே வந்தது. நடுவில் நடுநாயகமாய் ஆறேழு வீடுகள் தள்ளி குடியிருக்கிற பாலன் குட்டி பளபளவென்று நடந்து வருகிறார். அவர் முகத்தில் ரோஸ் பவுடர், உதட்டில் லேசாய் லிப்ஸ்டிக். ஜெல் போட்டு தலையை படிய வாரி, கோட்டெல்லாம் போட்டிருந்தார். என்னைப் பார்த்து மந்தாரமாய் மேக்கப் கலையாமல் சிரித்தார். விஜய் டி.வி. சீரியலில் அவர்தான் ஹீரோ என்றார். எனக்கு பகீரென்றது. அவருக்கு ஒரு ஐம்பது வயதிருக்கும். அவர் தமிழ் பேசினால் கேரளா பார்டரில் இருக்கிறமாதிரி ஃபீலிங் வந்துவிடும். ஆங்காங்கே மலையாள சமாஜ் ப்ரோக்ராம்களில் நன்றாய் கதகளி எல்லாம் ஆடுவார் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். சரிதான். அவர் கலை ஆர்வம் டி.வி. வரை வந்துவிட்டதுபோலிருக்கிறது என்று நினைத்தேன். நான் ஆவல் மேலிட என்ன கதைங்க? என்றேன்.

துப்பறியும் கதை தம்பி. கொஞ்சம் காமெடியா பண்றோம். சுட்டது யார்னு டைட்டில் என்றார் தயாரிப்பாளர். பின்னர் பரபரவென்று சுற்றுமுற்றும் ஆராய்ந்துவிட்டு. "தம்பி உங்க டேப்ரிக்கார்டரோட ஸ்பீக்கர் கொஞ்சம் கழட்டித் தாங்க வீட்டு வாசல்ல மாட்டணும். கதைப் பிரகாரம் இதுதான் துப்பறியும் நிபுணர் வீடு" என்றார். நான் என்னடா ப்ரொடியூஸர்தான் டைரக்ஷணும் பண்ணுகிறாரா என்று வியந்து கொண்டே கழற்றிக் கொடுத்தேன். அதை வீட்டு வாசலில் தொங்க விட்டார்கள். அதற்கு மேல் ஒரு புலியின் படத்தை ஒட்டினார்கள். பாலன் குட்டி தயாரானார். லைட்ஸ்! கேமரா! ஆக்ஷன். கேமரா ஓட ஆரம்பித்தது. என் வீட்டு ப்ளக் பாயிண்டில் ஒயர்கள் சொருகப்பட்டு பளிச்சென்று 2KVA விளக்கு எரிந்தது. இன்னொரு நடிகர் ஒருவர் எங்கிருந்தோ என் வீட்டு வாசலுக்கு வந்து நின்றார். மிஸ்டர் துளசிங்கம் என்று கூப்பிட்டார். உடனே ஸ்பீக்கரிலிருந்து குரல் வருவது மாதிரி யூனிட்டின் மினி டேப்பிலிருந்து ஒரு புலியின் உறுமல் கேட்டுவிட்டு 'எஸ்.. ஐ ஏம் கமிங்' என்று குரல் கேட்டது. பாலன் குட்டி என் வீட்டுக்குள்ளிருந்து வெளிப்பட்டார். அப்புறம் வந்த ஆளை நோக்கி ஒரு டயலாக் சொல்லவேண்டும்.. "நான்தான் உலகப் புகழ்பெற்ற துப்பறியும் டைகர் துளசிங்கம். நீங்க யாரு?" என்பதுதான் அந்த டயலாக். நான் டைகருக்கும் சிங்கத்துக்கும் என்ன சம்பந்தம் என்று யோசித்துக் கொண்டிருந்தபோது பாலன் குட்டி டையை சரிபண்ணிக்கொண்டு சொன்னார். "நாந்தான் உழகப் புஹழ்பெற்ற துப்பறியும் டைகர் துழசிம்ஹம். நிங்ஙள் யாரு?"

எனக்கு குபீர் என்று சிரிப்பு வந்தது. நல்ல காமெடி சீரியல்தான் போலும். இதே டயலாக்கை திரும்பத்திரும்ப சொல்லி பத்து பன்னிரெண்டு தடவை டேக் எடுத்தார்கள். அவர் வாயில் கடிபட்டு சிங்கமும் புலியும் செத்தே போயிற்று. அப்புறம் எல்லாவற்றையும் கழற்றிவிட்டு, தென்னந்தோப்பில் வில்லனை துளசிங்கம் ஸ்கூட்டரில் துரத்துகிற சீன் எடுக்கப் போய்விட்டார்கள். சுற்றிலும் ஷூட்டிங்கை வேடிக்கை பார்க்க கூடியிருந்த கும்பல் என் வீட்டை ஆச்சரியமாய் பார்ப்பதை கவனித்தேன். மானசீகமாய் நான் காலரைத் தூக்கிவிட்டுக் கொண்டேன். ஷூட்டிங்கெல்லாம் நடந்த வீடு என்றால் சும்மாவா? நான் ஸ்பீக்கரை தூக்கிக் கொண்டு வீட்டுக்குள் போனேன்.

அப்பா வந்தார். விஷயம் கேள்விப்பட்டு என்னை முறைத்தார். பணம் ஏதாவது கொடுத்தார்களா என்றார். நான் இல்லை என்றேன். உடனே போய் E.B மீட்டரைப் பார்த்தார். 2000 வாட்ஸ் பல்புகள் அரை நாள் எரிந்ததில் மீட்டர் ரீடிங் எகிறியிருந்தது. அய்யய்யோ இதை நான் யோசிக்கவேயில்லை. அப்பா டென்்ஷனாய் திரும்பி என்னைத் திட்டுவதற்கு தேடும்போது நான் கவுண்டர் தோட்டமெல்லாம் தாண்டி மெயின் ரோட்டுக்குப் பறந்து வந்திருந்தேன்.

சுட்டது யார் என்ற அந்த காமெடி சீரியலை எப்போதாவது யாராவது விஜய் டி.வியில் பார்த்தீர்களா? எங்கள் வீடு தெரிந்ததா? சொல்லுங்க.