Showing posts with label உலகப்படம். Show all posts
Showing posts with label உலகப்படம். Show all posts

வேலிகளுக்கு அப்பால்...


2008-ல் வெளிவந்த ‘தி பாய் இன் த ஸ்ட்ரைப்டு பைஜாமாஸ்’ (The boy in the striped pajamas) என்கிற படத்தை இன்று பார்த்தேன். யூத இனப் படுகொலைகளை மையமாய் வைத்து உருவாக்கப்பட்ட எண்ணற்ற திரைப்படங்களில் இந்தப் படமும் ஒன்று என்றாலும் ஒரு வரலாற்றின் கொடுமையை இத்தனை நறுக்கென்று நெருடும்படி சொல்லிவிட முடியுமா என்று தெரியவில்லை.

இந்தப் படத்தைப் பார்த்துக்கொண்டிருக்கும் மாலை வேளையில் வெளியே ’சோ’வென்று மழை பெய்து கொண்டிருந்தது. இந்தப் படத்தின் இறுதிக் காட்சியும் மழையுடன் முடிகிறது. படம் முடிந்தவுடன் மழையும் முடிந்து ஜன்னல் வழி ஊடுறுவும் காற்றின் ஜில்லிப்பும் இந்தப் படம் பார்த்த நிகழ்வும் ஆக ஒரு இனந்தெரியாத பாரம் நெஞ்சைக் கவ்வுகிறது.

சிறுவர் சிறுமிகளை மையமாக வைத்து எடுக்கப்பட்டு வெற்றி பெற்ற கணக்கற்ற உலகப்படங்களில் இதுவும் ஒன்று என்பதை இங்கே சொல்லியாக வேண்டும். அதி அற்புதமான படங்களான “லைஃப் இஸ் பியூட்டிஃபுல், தி பியானிஸ்ட்’ வரிசையில் நிச்சயம் சேர்க்கப் படவேண்டியது இது. யூதர்களுக்கு எதிரான ஹிட்லரின் நாஜிப் படைகளின் “மரணக் கூடாரங்கள்” மற்றும் அங்கே நடைபெறும் கொடுமைகளையும் பதிவு செய்வது இந்தப்படத்திலும் களமாக இருந்தாலும் ஒரு சில மணித்துளிகள் தவிர அதையும் அது சம்பந்தப்பட்ட நடவடிக்கைகளையோ அதிகமாகக் காட்டாமலே மிக அழகான மற்ற காட்சிகளாலேயே அந்த துயரங்களை மவுனமாய் உணர்ந்து உறையச் செய்திருக்கிறார் இப்படத்தின் இயக்குநர்.

இரண்டாம் உலகப் போர் சமயத்தில் பணியாற்றும் ஒரு ஜெர்மன் ராணுவ அதிகாரியின் மகனான ஒரு எட்டு வயதுச் சிறுவனின் பார்வையில் நகருகிறது கதை. மிக ஒதுக்குப்புறமான தனியான இடத்தில் குடிவரும் ஜெர்மன் அதிகாரியின் மகனான ப்ரூனோ, காவலர்களால் நன்கு பாதுகாப்பு ஏற்படுத்தப் பட்ட வீட்டில் விளையாடத் தோழர்கள் இல்லாத சூழ்நிலையை அனுபவிக்கிறான். பெரியவனாகி உலகைச் சுற்றும் ஒரு எக்ஸ்ப்ளோரர் ஆக வேண்டும் என்பது அவனது ஆசை. திறந்திருக்கிற பக்கவாட்டுக் கதவை திறந்து யாருமறியாமல் பின் பக்கப் புதர்களையும், மரங்கள் அடர்ந்த பகுதிகளையும், சிறு ஓடையையும் கடந்து செல்கிற அவனது தேடல் ஒரு மின்சாரம் பாய்ச்சப்பட்ட வேலியருகே சென்று முடிகிறது. வேலிக்கு அந்தப்புறம் உள்ள காம்ப்-ன் உள்ளே முடி வெட்டப்பட்ட, கைதி எண்ணைத் தாங்கிய அழுக்கடைந்த பைஜாமாவை அணிந்த யூதச் சிறுவனைக் காண்கிறான். தினமும் அம்மா, அப்பாவுக்குத் தெரியாமல் ஸ்ம்யுல் என்கிற அந்தப் பையனுடன் ப்ரூனோ ஏற்படுத்திக் கொள்ளும் நட்பும் அதன் தொடர்ச்சியான விளைவுகளுமாகக் கொண்டு நகர்கிறது படம்.

யூதர்கள் என்பவர்கள் தங்கள் வாழ்க்கையின், நாட்டின் குடிகெடுக்க வந்தவர்கள் என்று சிறுவர்களுக்கு ஒரு ஆசிரியரால் போதிக்கப்படுவது, யூதர்கள் காம்ப்-பின் தூரத்துச் புகைபோக்கியிலிருந்து வரும் புகையும் நாற்றமும் என்ன என்று அறிந்து கொள்கிற அதிகாரியின் மனைவி உடைந்து போய் அழுவது, காம்ப்-பினுள் தூரத்தில் கேட்கும் விசில் சப்தத்தைக் கேட்டு யூதச் சிறுவன் பதறித் திரும்பி ஓடுவது போன்ற காட்சிகள் மூலமாகவே பின்புலமாய் என்ன நடக்கிறது என்பதை பார்வையாளர்களைப் புரிந்துகொள்ள வைத்திருக்கிறார் இயக்குநர்.

யூதர்களை சித்திரவதை செய்யவும், அடிமைகளாக வேலை வாங்கவும், சிறுவர்களை ஜெர்மன் டாக்டர்களின் கொடூரமான மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தவும், கும்பலாக காஸ் சேம்பர்களில் அடைத்துக் கொல்லவும் ஆக பெருமளவு பயன்படுத்தப் பட்ட Auschwitz கான்ஸண்ட்ரேஷன் காம்ப்-பை பிண்ணனியாகக் கொண்ட படம் என்று சொல்கிறார்கள். இசையும் அளவான வார்த்தைகளுடன் கூடிய வசனங்களும், ஒளிப்பதிவும் இந்தப் படத்தின் மிகப் பெரிய அம்சங்கள்.

இந்தப் படத்தைப் பார்த்து முடிக்கும் போது உங்கள் மனம் கனம் ஆகி கொஞ்ச நேரமாவது நெகிழ்வுடன் உத்தரத்தை வெறித்துக் கொண்டோ அல்லது கண்களில் துளிர்த்த கண்ணீரைத் துடைத்துக்கொண்டோ உட்கார வைக்கும் என்பது உறுதி.

இதைப்பற்றின மிக விரிவான கதை விமர்சனம் விரும்புபவர்கள் ஹாலிவுட் பாலா எழுதின பதிவைப் படிக்கலாம்.

காஞ்சிவரம்



தேன்மாவின் கொம்பத்து, மணிச்சித்ரதாழ், காலாபானி போன்ற அருமையான படங்களைத் தந்த பிரியதர்ஷனிடமிருந்து உலகத் தரத்திற்கு அருகாமையில் மற்றுமொரு படைப்பு காஞ்சிவரம். டொரன்டோ போன்ற உலகத் திரைப்படவிழாக்களில் அமர்க்களமில்லாமல் திரையிடப்பட்டுக் கொண்டாடப்பட்ட செய்திகளும், ”பிரியதர்ஷன் செதுக்கியிருக்கிறார்” என்ற வாய்வழிப் பரிந்துரைகளும் இந்தப் படத்தைக் காணும் ஆர்வத்தைத் தூண்டியது.

இந்தப் படத்திற்காக பிரியதர்ஷன் எடுத்துக் கொண்ட காலகட்டம் (1948 ) மற்றும் களம் நிச்சயம் வித்தியாசமானதுதான். பீரியட் பட முயற்சிகளில் தன் திறமையை காலாபானியில் ஏற்கனவே பிரம்பாண்டமாய் நிலைநாட்டிவிட்டதால் அதோடு ஒப்பிடும்போது இது ரொம்ப எளிமையாகவே உணரவைக்கிறது என்றாலும் எளிமையாய்ப் பண்ணுவதுதான் எப்போதும் கஷ்டமான விஷயம் என்பதையும் மறுப்பதற்கில்லை. அந்த வகையில் பிரியதர்ஷன் ஜெயித்திருக்கிறார்.

உலகத்தரத்தை நோக்கிய இந்திய சினிமாவின் பயணத்தில் பிரியதர்ஷனும் இணைந்துகொண்டிருக்கிறார். அதோடு சாபு சிரில், திரு போன்ற திரைக் கலைஞர்களும் தம்மாலான பங்களிப்பை இந்தப் படத்தின் மூலம் அருமையாய் அளித்திருக்கிறார்கள். பிரகாஷ் ராஜ் போன்ற நல்ல நடிகர்களைத் தேர்வு செய்ததும் இந்தப் படத்திற்கு மிகப் பெரிய பலம்தான்.

இந்தப் படத்தில் பிரியதர்ஷன் எடுத்துக் கொண்ட கதையின் “இழை”, பெரிய எட்டாத ஆசைகளை மனதில் சேமித்து வைத்துக் கொண்டு அதன் மூலம் நலிந்து போன கனவுகளை எப்படியாவது பின்ன முயற்சிக்கும் சாதாரண மனிதனைப் பற்றிச் சொல்கிறது. இதையொட்டி நேர்த்தியாக அமைக்கப்பட்டிருக்கிற திரைக்கதை.

சிறையிலிருந்து கைவிலங்குடன் எதற்காகவோ பரோலில் வெளிவரும் பிரகாஷ்ராஜை, கொட்டும் மழையில் சொந்த ஊருக்கு காவலுடன் ஒரு பஸ்ஸில் அழைத்துச் செல்வதிலிருந்து துவங்குகிறது படம். இடையிடையே பஸ் அடிக்கடி ஏதாவது இடர்ப்பாடுகளில் சிக்கி நிற்க அந்த இடைவெளிகளினூடே ஃப்ளாஷ்பேக் பயணம் போகிறார் பிரகாஷ்ராஜ்.

ஒரு அவார்டு வாங்கின வங்காளப் படத்தைப் பார்ப்பது போன்ற உணர்வை ஆரம்பக் காட்சிகள் உணர வைக்கிறது. அப்புறம் இரண்டு மணி நேரம் போவதே தெரியவில்லை. காரணம் இந்தத் தலைமுறை இதுவரை பார்த்திராத அந்தக்கால வாழ்க்கைக் காட்சிகள். படம் பெரும்பாலும் மங்கிய வெளிச்சத்தில் நகர்கிறது. லாந்தர் விளக்கு வெளிச்சத்தில் நடிகர்களின் முகங்கள் பொன்னிறமாய் மின்னுகின்றன. கதாபாத்திரங்கள் பேசிக் கொள்ளும் ரஷ்யன், ஜெர்மன் மகாயுத்த விவரங்கள், பிரகாஷ்ராஜின் சைக்கிள் விளக்கு, கிராமத்துக்கு முதல் முதலாய் வரும் மோட்டார் வண்டியை ஒரு திருவிழா போலப் பார்க்கும் கூட்டம். பெரிய பொட்டு வைத்த ஸ்மிதா பட்டேல் சாயல் கொண்ட பெண்கள், கூரைவீடுகள், வெள்ளைக் காரனுக்கு ஜமீந்தாரின் (அல்லது அதிகாரியின்) உதவியாளனின் ஆங்கில மொழிபெயர்ப்பு, நான்கு பெண் குழந்தைகள் தோளில் கை போட்டுக் கொண்டு சேர்ந்து ஆடும் ஊஞ்சல், ஸ்லேட் எடுத்துக்கொண்டு கதை பேசியபடி பள்ளிக்குப் போகும் குழந்தைகள், யானையின் கால்களுக்கு இடையில் ஓடும் குழந்தைகள், பட்டாளத்துக்குப் போகும் பையன், காந்தி இறந்ததனால் ரேடியோவில் ஒலிபரப்பாகும் சோக இசை, தொழிலாளிகளை எப்போதும் சுரண்டிப் பிழைக்கிற பகட்டான முதலாளி, அடுப்பு ஊதி சமைத்துக் களைக்கிற, கணவன்பின் நடக்கிற அப்பாவி மனைவிகள், ஒரே ஒரு வாளித்தண்ணீரை ஒரு சீன் முழுக்க இறைகிற பெண் (தண்ணீர் அவ்வளவு ஆழத்தில்), மழைச் சகதியில் உருண்டு ஓடுகிற பஸ்ஸின் ஸ்டெப்னி டயர், நெசவாளர்கள் நடத்தும் கம்யூனிஸம் பூசிய முதலாளித்துவ எதிப்பு நாடகம் என சுவாரஸ்யமான விஷூவல் ட்ரீட்மெண்ட்கள் இறுதிவரை அழகாக எளிதாக படத்தை நகர்த்திவிடுகின்றன.

எளிய உழைப்பாளிகளின் வாழ்க்கையின் வலியை அழகாக நறுக்கென்று சொல்ல முயற்சித்திருக்கிறார் பிரியதர்ஷன். ஆனால் இது அவரின் “பெஞ்ச் மார்க்” படமா என்று யோசித்தால் இல்லையென்றுதான் தோன்றுகிறது. படத்தின் “prelude"-ல் கோடிகாட்டிச் சொல்லப்படும் விஷயங்களும், பிரகாஷ் ராஜின் நடவடிக்கைகளும் முடிவு இப்படித்தான் இருக்கவேண்டுமென்று ஊகிக்க வைத்துவிட்டது. மேலும் பிரகாஷ்ராஜுக்கு இது முக்கியமான படமாகக் கொண்டாலும், அவரின் உச்சபட்ச நடிப்புத்திறனை வெளிக் கொணர்ந்த படமென்றும் சொல்லிவிட முடியாது. இதைவிடச் சிறப்பாக எத்தனையோ செய்திருக்கிறார். எம்.ஜி. ஸ்ரீகுமாரின் இசையில் மலையாளச் சாயலுடனான ஒரு பாடலும், பின்னணி இசையும் மோசமில்லையென்று சொல்லலாம். ஸ்ரேயா ரெட்டி, ஷம்மு போன்றவர்களின் மிகையில்லாத இயல்பான நடிப்பும் படத்தின் காட்சிகளுக்கு ஒரு புதிய வண்ணத்தைச் சேர்க்கிறது.

மழையினூடான பஸ் பயணத்தில் காவலரின் தொப்பியில் பேட்ஜ் அறுந்துவிட அது இல்லாமல் அதிகாரியின் முன்னால் போய் நின்றால் வேலை போய்விடும் அபாயம். பிரகாஷ் ராஜின் ஃப்ளாஷ்பேக் பகுதிகள் ஒவ்வொன்றாய் நிறைவுபெறும் இடைவெளிகளில் காவலர் பேட்ஜை தைக்கிற முயற்சிகளை மேற்கொள்கிறார். இறுதியில் அவரது பிரயாசை தோல்வியில் முடிகிறது. பிரதான படத்தை விட்டு விலகியிருந்தாலும் ஒரு சிறுகதைக்கான அல்லது குறும்படத்துக்கான விஷயமாக அநாயாசமாக வந்துபோகிறது இது.

பார்த்து முடித்தபிறகு மனசுக்குள் நான் எதிர்பார்த்திருந்த ஏதோ ஒரு பெரிய “இம்பேக்ட்” இதில் மிஸ்ஸிங் போலத்தோன்றியது. (ஒரு வேளை இளையராஜாவாக இருக்குமோ?) முக்கியமாக சோகமான காட்சிகள் ஒரு பெரிய நெகிழ்வை ஏற்படுத்தத் தவறியது போலொரு உணர்வு.

உலக சினிமாக்களின் தரத்துக்கு இணையாக இப்போதைக்கு காஞ்சிவரத்தை உயர்த்திப் பேசமுடியாது என்றாலும் நம் ஆட்களின் அபார சிந்தனைகளும் இது போன்ற முயற்சிகளும், நம் இந்திய சினிமா ரசிகர்களை அபத்தமான குத்துப் பாட்டுகளிலிருந்தும், ஹீரோயிச பில்டப்களிலிருந்தும், காதல் காட்சிகளிலிருந்தும் மீட்டு, ரசனையின் தரத்தை நிச்சயம் உயர்த்தும்.

ஒரு நாள் நம் சினிமாவும் உலக சினிமா ஆகும் என்கிற நம்பிக்கையை மீண்டும் அளித்த பிரியதர்ஷனுக்கு என் பாராட்டுக்கள்.

இந்தப்படத்தைப் பார்த்து முடித்ததும் எப்போதோ படித்த கவிதை ஒன்று ஞாபகத்திலிருந்து குதித்தது. படத்திற்கும் இதற்கும் ஏதோ சம்பந்தமிருப்பதுபோலக் கூடத் தோன்றியது. எழுதியவர் பெயர் “மார்க்ஸ்” (Marx) என்று குறித்து வைத்திருக்கிறேன்.

”பட்டுப்பூச்சி பட்டிழை நூற்கிறது.
பட்டிழையை நெய்வது
அதன் இயல்பாகிவிட்டது.
நூற்காமல் அதனால் இருக்க முடியாது.
வாழ முடியாது.
நூற்பதனால் அதற்கு
சாவு விதிக்கப் பட்டிருக்கிறது.
வேண்டாம் என்றால் கேட்காது.
நூற்பதே வாழ்வு.
சாவு ஒரு பொருட்டல்ல என்பது
அதன் பதிலாக இருக்கக் கூடும்.
பட்டு அழகானது!! அற்புதமானது!!
அதற்காக உயிரைக் கொடுக்கலாம்.
தப்பில்லை.”

சொர்க்கத்தின் குழந்தைகள்

போனவாரம் ஒரு சில பிற மொழிப் படங்களைப் பார்த்தேன். சில்ட்ரன் ஆஃப் ஹெவன், நோ மேன்ஸ் லேண்ட், சேவியர் மற்றும் சிக்ஸ்த் சென்ஸ். இதில் சில்ட்ரன். ஆஃப் ஹெவனும், நோ மேன்ஸ் லேண்ட்டும் ஏற்கனவே பார்த்தவைகள்தான். ஆனால் மறுபடி பார்க்கத் தூண்டுகிற படங்கள்.

'சில்ரன் ஆஃப் ஹெவன்' பற்றி சிலாகித்தே ஆகவேண்டும். இது ஒரு ஈரானியப் படம். இத் திரைப்படத்தின் முக்கியப் பாத்திரங்கள் ஸ்கூல் போகிற ஒரு பையனும் அவன் தங்கையும், அப்புறம் ஒரு ஜோடி ஷூவும்தான். இன்னும் சொல்லப் போனால் ஷூதான் படத்தில் ஹீரோ. சின்னச் சின்ன உணர்வுக் கலவைகளோடு ரசிக்கத்தக்க வகையில் சுவாரஸ்யமாய் இப்படிக்கூட கதை சொல்ல முடியுமாவென்று ஆச்சரியமாய் மறுபடி மறுபடி பார்த்தேன். நம்மூர் புது இயக்குநர்கள் சில்ரன் ஆஃப் ஹெவனை பத்து தடவையாவது போட்டுப் பார்த்துக் கற்றுக் கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது. எந்த ஆர்ப்பாட்டமும் கூத்தும் இல்லாத எளிய திரைக்கதை அமைப்பைக் கொண்ட இப்படத்தைப் பார்த்து முடிக்கும்போது ஒரு நல்ல சிறுகதை அல்லது குறுநாவல் படித்த உணர்வு நிச்சயம் எழும் என்பதற்கு நான் கியாரண்டி தருகிறேன்.

இதே மாதிரி தி சிக்ஸ்த் சென்ஸ். 1999 ல் பல ஆஸ்கார்களை வென்று குவித்த இந்தப் படத்தை ரொம்ப லேட்டாகப் பார்க்க நேரிட்டது என் துரதிருஷ்டம். புத்திசாலித்தனமான திரைக்கதை அமைப்பு, சைக்கலாஜிகல் திரில்லர் என்றெல்லாம் உலகலாவிய பாராட்டைப் பெற்ற இந்தப் படம் தியேட்டரில் ஓடிக்கொண்டிருந்தபோது ஏனோ பார்க்கவில்லை. படத்தில் என்ன கதை என்பதை வரிந்து வரிந்து நண்பனொருவன் விளக்கிச் சொன்னதும்கூட நான் சுவாரஸ்யமிழக்கக் காரணமாயிருந்திருக்கலாம். இப்போது காணக் கிடைத்தபோது நிஜமாய் பிரமிப்பாய் இருந்தது. டை-ஹார்ட்-ல் கிழிந்த பனியனும் கையில் துப்பாக்கியுமாக அட்வென்சர் ஆசாமியாகப் பார்த்த ப்ரூஸ் வில்லீஸை, டாக்டர் மேல்கம் க்ராவ் என்ற பாத்திரத்தில் அமைதியான உணர்ச்சிகரமான ஒரு குழந்தைகள் சைக்காலஜிஸ்ட்டாகப் பார்ப்பதற்கு நன்றாகத்தான் இருக்கிறது. ப்ரூஸ் வில்லீஸூடன் போட்டி போட்டு நடித்திருக்கும் அந்தப் பையன் ஹேலி ஜோயல் ஆஸ்மெண்ட்-ன் முகம் மனசைவிட்டு அகல மறுக்கிறது. (இப்போது பெரிய பையனாகிவிட்டான் போல!) இந்தப் படத்திலும் எல்லாவற்றையும்விட, புருவத்தை உயரவைக்கும் திரைக்கதைதான் ஹீரோ என்பதில் சந்தேகமில்லை. பார்த்த அன்று இரவு தூக்கம் வரவில்லை. இருட்டிக்குள் போக லேசாய் பயமாயிருந்தது. ஏனென்பது படம் பார்த்தவர்களுக்குத் தெரியும். ரொம்ப லேட்டாய்ப் பார்த்தாலும் மிகவும் அசத்திய இந்தப் படத்தின் விவரங்களை நெட்டில் தேடிக்கொண்டிருந்தபோது திடீரென்று அதன் ஸ்க்ரிப்ட் அகப்பட்டதும் மனம் புளகாங்கிதமடைந்துவிட்டது. டெளன்லோடு பண்ணி ஒரே மூச்சில் படித்து முடித்தேன். படிக்கப் படிக்க ஆச்சரியம் உயர்ந்துகொண்டே போகிறது. என்னமாய் எழுதியிருக்கிறார். ஒரு நல்ல தரமான திரில்லர் நாவல் படித்து முடித்த திருப்தி கிடைத்தது. (இந்தத் திரைக்கதையின் நோட்பேடு வடிவத்தைப் பார்த்தால் மூவி மேஜிக் அல்லது அல்லது ஃபைனல் ட்ராஃப்ட் போன்ற மென்பொருள்களின் உதவியால் எழுதப்பட்டிருக்கலாம் என்று தோன்றியது.)

தி சிக்ஸ்த் சென்ஸ் போல இன்னும் நிறைய புகழ்பெற்ற ஹாலிவுட் திரைக்கதைகள் html, pdf அல்லது txt வடிவங்களில் கிடைக்கின்றன. இந்த மாதிரி சிலவற்றை என் கணினியில் இறக்கி வைத்திருக்கிறேன். அவற்றில் சில - American Beauty, Gladiator, Breave Heart, Rush Hour, Face/Off, Signs, Cast Away, Terninator 2, Trueman show, Saving Private Ryan, etc. Roberto Benigni-யின் "Life is beautiful" என்ற படத்தின் திரைக்கதையை தேடிக் கொண்டிருக்கிறேன். இன்னும் கிடைக்கவில்லை. இம்மாதிரி திரைக்கதைகளில் எது திரைப்படமாக்கப்பட்ட இறுதி வடிவம் என்று தேடிப் பார்த்து இறக்குமதி செய்ய வேண்டியது அவசியம். சிலவற்றில் "third draft" என்றோ "Shooting script" என்றோ கூட போட்டிருக்கும். சிலவற்றை இறக்குமதி செய்ய பைசா கேட்கிறார்கள். திரைக்கதை எழுதுவது எப்படி என்பதற்கு புத்தகங்களைத் தேடித் தேடிப் படித்துக்கொண்டிருக்கும் வருங்கால இயக்குநர்கள் கூடுமானால் இந்த ஸ்கிரிப்டுகள் எல்லாவற்றையும் ஒரு புரட்டு புரட்டிப் பார்த்தால் அவர்களுக்கும் மக்களுக்கும் உதவியாயிருக்கும் என்று நினைக்கிறேன். தமிழில்கூட வெற்றி பெற்ற / பெறாத சில படங்களின் திரைக்கதைகள் புத்தகமாக வெளிவந்திருப்பதை அறிவேன். (உதா : சேது, ஹே ராம்.) ஹாலிவுட் ஸ்கிரிப்ட்கள் மாதிரி நல்ல தமிழ்த் திரைக்கதைகளையும் எப்போது வலையில் இறக்குமதி செய்கிற வசதி கிடைக்குமென்பதையும், அப்படி ஏதேனும் முயற்சிகள் நடக்கின்றனவாவென்பதையும் அறிய அவா!

ஹாலிவுட் பிரியர்களுக்கு எனக்கு தெரிந்த ஏதோ சில உபரி தகவல்களையும் சொல்லிவிடலாமென்று நினைக்கிறேன். www.imdb.com என்கிற வலைத்தளம் உலகளாவிய வகையில் திரைப்படங்கள், அவற்றின் இயக்குநர்கள், மற்றும் இன்னபிற விவரங்களைத் தொகுத்துத் தருகிறது. மணிரத்னம் என்று தேடினாலும் கிடைக்கிறது. ஸ்பீல்பெர்க் என்று தேடினாலும் கிடைக்கிறது. இந்த மகா வலைத்தளத்தை உருவாக்கிய புண்ணியவானுக்கு என் வந்தனங்கள். அது மாதிரி www.apple.com/trailers என்று போட்டுப் பாருங்கள். இப்போது ஹாலிவுட்டில் தயாரிக்கப்பட்ட அத்தனை புத்தம்புது படங்களின் ட்ரைலர்களைப் அவரவர் Band Width செளகரியத்தில் பார்க்க அருமையான வலைத்தளம். இங்கிருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஆங்கிலப் படங்களின் ட்ரைலர்கள் சிறியதும் பெரியதுமாக சுமார் 70 வைத்திருக்கிறேன். ஒவ்வொன்றும் ஒரு சிறுகதை மாதிரி மிரட்டக்கூடியவை. முன்பு கிடைத்துக்கொண்டிருந்த Broad Band நெட் வசதி என் வாழ்விலிருந்து துண்டிக்கப்பட்டதும் இந்த ட்ரைலர் சேகரிக்கிற பழக்கம் நின்று போனது. மீண்டும் கிடைத்தால் தொடர விருப்பம்.

இது மாதிரி இணையப் பெருங்கடலில் நிறைய ஆழ்ந்து கிடக்கின்றன. ஆழமாய் மூழ்கிப் பொறுமையாய்த் தேடினால் நிறைய ஆச்சரியங்கள் கிடைக்கும்.