லைவ்

இதய பலவீனமுள்ளவர்களும் குழந்தைகளும் பின்வரும் காட்சிகளைப் பார்க்க வேண்டாம் என்று கேட்டுக்கொண்டு டி.வியில் அதைக் காட்டினார்கள். தீயின் நாக்குகள் தின்று உமிழ்ந்த உயிர்கள் கரித்துண்டுகளாய் குவிந்துகிடப்பதும், பிஞ்சு மலர்களின் சாம்பல் காற்றில் பறப்பதும், கும்பகோணம் துன்பகோணம் ஆன காட்சிகள். அது இதய பலமுள்ளவர்களையும் பலவீனமாக்கிவிட்டது என்பதில் சந்தேகமில்லை. 'நெஞ்சே வெடித்துவிடும் போல் இருந்தது' என்று சாதரணமாகக் கதைகளில் எழுதுவதை உண்மையாய் உணர்ந்தது அதைப் பார்த்தபோதுதான்.

இந்த மாதிரி உலகின் மகா துயரங்களையும் கோர சம்பவங்களையும் சதுரக் காட்சிகளாய் லைவ் ரிலே அல்லது ரெகார்ட் பண்ணப்பட்ட கோப்புக் காட்சிகள் என்று வரவேற்பரைக்கு முன் கொட்டத் துவங்கிவிட்டது டி.வி சானல்கள். அதை பார்த்துப் பார்த்து அன்றாட வாழ்க்கையின் பரபரப்பை இன்னும் கொஞ்சம் அதிகரித்துக் கொண்டு தவித்துக் கிடக்கிறோம்.

முன்பு ஒரு முறை தர்மபுரியில் ஒரு பஸ்ஸுக்குள் மூன்று மாணவிகள் மரண ஓலங்களுடன் எரிவது பல கோணங்களில் காட்டப்பட்டது. 'ஐயோ' என்று நெஞ்சு பதைக்கப் பார்த்ததைத் தவிர நம்மால் ஒன்றும் செய்ய முடியவில்லை. அந்தச் சூழ்நிலையில் படமெடுத்த காமிராக்காரருக்கு ஏன் ஒரு துரும்பைக் கூட கிள்ளிப் போடத் தோன்றவில்லை என்று இன்னமும் யோசித்துக் கொண்டிருக்கிறேன்.

இதேபோல் கேரளாவில் ஒரு மதம் பிடித்த யானை தன் பாகனை துதிக்கையால் தூக்கி வீசிப் பந்தாடி கீழே போட்டு உருட்டி காலால் நசுக்கிச் சாகடித்ததை நீங்கள் நிச்சயம் பார்த்து திடுக்கிட்டிருப்பீர்கள். அதையும் மறக்காமல் திரும்பத் திரும்ப எல்லா செய்தி நேரத்தின் போதும் மறுஒளிபரப்பு பண்ணி அடிவயிற்றைப் பிசைய வைத்தார்கள். பார்த்து இரண்டு வேளை சோறு தொண்டைக்குள் இறங்கவில்லை.

அதே மாதிரி ஒரு மனநோயாளி ஒரு கோயில் பணியாளரை தெப்பக்குளத்துக்குள் பார்ப்பவர்களின் கண் முன்னே மூழ்கடித்துக் கொன்ற கொடூரக் காட்சி. காமிரா சுழன்று அதை விலாவாரியாய் பதிவு பண்ணி நமக்குக் காட்டியது. இது மாதிரி இன்னும் நிறைய. 'ஐயோ கொல பண்றாங்க' என்ற ஓலத்துடன் கலைஞரை கைது செய்யும் காட்சியை ஐந்து நிமிடங்களுக்கொருமுறை ஒளிபரப்பி இயல்பு வாழ்க்கையை ஸ்தம்பிக்கச் செய்தது ஒரு சேனல். பார்லிமெண்டில் நுழைந்த தீவிரவாதிகள் தூண்களுக்குப் பின் மறைந்து சுடும் காட்சியும் இறுதியில் புல்லட் துளைக்கப்பட்ட அவர்களின் உடல்களையும் பார்த்தோம். மும்பை இண்டியா கேட் அருகே வெடிகுண்டு விபத்தில் சிதறினவர்கள். கோவை தொடர் வெடிகுண்டு விபத்துக்களின் நேரடி ஒளிபரப்பு. ராஜீவ் காந்தி கொலை, அஸ்ஸாம் புயல் சேதம், ஏர்வாடி தீ விபத்து, ஆயிரக்கணக்கான உயிர்களைப் பலிகொண்ட குஜராத் நிலநடுக்கம், பாலங்களில் ரயில் பெட்டிகள் தடம்புரண்டு கவிழந்து தொங்குவது. மெரீனா காந்தி சிலையருகே நடந்த பேரணியில் நிகழ்ந்த கலவரத்தில் ஒருத்தனை ஓட ஓட விரட்டி நடுமுதுகில் வெட்டுகிற காட்சி. குஜராத் ரயில் பெட்டி எரிப்பும் அதைத் தொடர்ந்த கலவரங்கள். விமானங்கள் தகர்த்துப் பிளந்த WTC கட்டிடங்கள் சுமார் ஆறாயிரம் பேருடன் இடிந்து தரை தட்டல். லேசர் குண்டுகளால் ஈராக்கைத் துளைத்தெடுக்கிற போர் விமானங்கள். இந்திய விமானம் ஆப்கனுக்கு கடத்தப்பட்டபோது கொன்று வீசப்பட்ட புது மணமகனின் உடல். அப்புறம் இது போதாதென்று ஒரு பணயக் கைதியின் தலையை தனியே அறுத்தெடுக்கும் கோரக் காட்சி. போலீஸ் என்கெளண்டர்கள் என பதற வைக்கும் காட்சிகள் டி.வி என்கிற அபார சாதனத்தின் உபயத்தில் கண் முன்னே விரிகின்றன. இது போல் இன்ன பிற.

சம்பவ இடங்களில் உடனுக்குடன் பதிவுசெய்யப்படும் 'நேரடிக் காட்சிகள்' டி.வி சேனல்களின் வேகமான டெக்னாலஜி திறமையை பறைசாற்றாமலில்லை. இத்தனை காலம் ரேடியோவில் கேட்டுக் கொண்டிருந்த இந்த கோர துயர நிகழ்ச்சிகளை இப்போது சிவப்பு வண்ணம் பூசின கோப்புக் காட்சிகளாக அல்லது லைவ்வாக இயக்கமற்றுப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். எத்தனை தவிர்த்தாலும் இறந்த உடல்களையும், ஓடுகிற ரத்த ஆறையும் குழந்தைகளும் கூட சர்வ சாதாரணமாய் பார்க்க ஆரம்பித்துவிட்டன. அவர்கள் வளர்கிற போது காணக்கிடைக்கிற நிஜம் அப்படியொன்றும் அவர்களிடம் அதிர்வுகளை ஏற்படுத்திவிடாது என்று தோன்றுகிறது. இந்தச் செய்திகள் எல்லாம் மக்களுக்கு உடனுக்குடன் யார் முந்தித் தருவது என்ற போட்டியில் மரணங்களையும், கலவரங்களையும், விபத்துக்களையும், ரத்தச் சிவப்பையும் தேடி காமிராக்கள் அலைகின்றன. எடுக்கப்பட்ட வீடியோக்கள், சேனல்களில் திரும்பத் திரும்ப ஓட்டப்பட்டு மெல்லிதயங்களைக் கலக்குகின்றன. உறைந்த மனங்களோடு இப்போது இவைகளைப் பார்த்துக் கொண்டிருக்கிற நமக்கு ஒரு நாள் மரத்துப் போய் விடும் என்றே தோன்றுகிறது.

பார்க்கவும் முடியவில்லை. தவிர்க்கவும் முடியவில்லை. இந்த லைவ் ரிலேக்களை என்ன செய்வதென்றும் புரியவில்லை.

No comments:

Post a Comment

இந்தப் பதிவைப் பற்றிய உங்கள் கருத்து?