கோடிட்ட இடங்கள்

இந்த வாரம் முதல் தமிழோவியத்தில் 'கோடிட்ட இடங்கள்' என்ற என் தொடர் நாவல் வெளியாகிறது. அதைப் படிக்க இங்கே க்ளிக்கவும்.

ஆட்டோகிராஃப்

ஆட்டோ 1 : ஓரிரு வருடங்களுக்குமுன் நன்றாய் வெயில் கொளுத்துகிற ஒரு மதிய நேரம். நான் மற்றும் என் இரண்டு நண்பர்கள். கோவை சாயிபாபா காலனியில் உள்ள ஒரு ஹோட்டலில் தயிர் சாதமும், எலுமிச்சைச் சாதமும் இருபத்தைந்து பொட்டலங்கள் ஆர்டர் பண்ணிவிட்டுக் காத்திருக்கிறோம். அடுத்தநாள் மதுரையில் நடக்கவிருக்கும் ஒரு நண்பனின் கல்யாணத்துக்கு மதியம் ஒண்ணரை மணி ட்ரெயின் பிடித்து 25 பேர் போகிறோம். எல்லோரும் மதிய உணவை ட்ரெயினிலேயே முடித்துக்கொள்ளலாம் என்று சாப்பாடுப் பொட்டலங்களை ஏற்பாடு செய்ய வேண்டிய பொறுப்பை எங்களிடம் விட்டிருந்தார்கள். பொட்டலங்கள் வந்தன. அவற்றை சேகரித்துக்கொண்டு மணி பார்த்தபோது ஒன்று ஆகியிருந்தது. மீதி 22 பேரும் இந்நேரம் ட்ரெயினுக்கு வந்திருப்பார்கள். நாங்கள் இன்னும் அரை மணிக்குள் ரயில் நிலையம் போக வேண்டும். சரி ஒரு ஆட்டோ பிடித்துக்கொள்ளலாம் என்று முடிவு பண்ணினோம். கைதட்டினவுடன் அரை வட்டமடித்து ஆட்டோ ஒன்று வந்து நின்றது. ஏறிக்கொண்டு எங்கள் அவசரத்தைச் சொன்னோம். நிதானமாய்ப் போனால் போதும் என்றும் உபரியாய் சொல்லி வைத்தோம். ஆட்டோ கிளம்பியது.

ஒரு அரை ஃபர்லாங் கூட போயிருக்கமாட்டோம். ஒரு வளைவில் ஒரு யமஹா பைக்கில் இரண்டு பேர் ஸ்டைலாய் திரும்ப, சட்டென்று அந்தக் குறுக்கீட்டில் சுதாரிக்க முடியாமல் யமஹாவின் மீது டமால் என்று நேருக்கு நேர் மோதல். அப்புறம் நடந்ததை எப்படி வர்ணிப்பதென்று தெரியவில்லை. ஒடித்துத் திருப்பியதில் ஆட்டோ நிலை தடுமாறி சைடில் கவிழ்ந்து, இரண்டு முறை உருண்டு செத்த பல்லி மாதிரி சொத்தென்று தலைகீழாய் வீழ்ந்தது தரையில். நேராய் பார்த்தபோது வானம் தெரிந்தது. ஓ! நான் ஆட்டோவுக்கு அடியில் கீழே கிடக்கிறேன். நெஞ்சுப்பகுதி விலா எலும்பில் வலி உயிர் போகிறது. அலங்கோலமாய்க் கிடந்த எங்கள் மூவரையும் யாரோ வந்து தூக்கிவிட்டார்கள். எனக்குக் கைகால்கள் நடுங்குகின்றன. மண்டையிலிருந்து ரத்தம் வழிய மூர்ச்சையான ஆட்டோ ட்ரைவரைச் சுமந்து கொண்டு இன்னொரு ஆட்டோ ஆஸ்பத்திரிக்கு விரைகிறது. ரோடெங்கும் தயிர்சாத, எலுமிச்சைச் சாத பொட்டலங்கள் சிதறிக்கிடக்கின்றன.

ஆட்டோ 2 : நான். என் நண்பர். அவர் மனைவி, குழந்தை. சென்னை சென்ட்ரலிலிருந்து எங்களைச் சுமந்துகொண்டு தி. நகருக்கு விரைகிறது அந்த ஆட்டோ. ட்ரைவர் அப்போதுதான் ஒரு ஜேம்ஸ்பாண்ட் படம் பார்த்துவிட்டு வருகிறார் போல. கச கசவென்று வாகனங்கள் விரைகிற மெளண்ட் ரோட்டில் முறுக்கிப் பிடித்து அமுக்குகிறார் ஆக்ஸிலேட்டரை. சிக்னல்களில் ஆரஞ்சு விழுந்தாலும் மதிக்காமல் பறக்கிறது ஆட்டோ. சைக்கிள் கேப்பில் ஆட்டோ ஓட்டுவது எப்படி என்பதை அன்றுதான் தெரிந்து கொண்டேன். நண்பர் ட்ரைவரைக் கூப்பிட்டு இரண்டு மூன்று முறை சொல்லிவிட்டார். எங்களுக்கு அவசரமில்லை. மெதுவாகவே போகலாம். அதற்கப்புறம்தான் ஜேம்ஸ்பாண்டுக்கு உற்சாகம் பீறிட்டுவிட்டது. ஆக்ஸிலேட்டரே பிய்ந்துபோகுமளவுக்கு முறுக்க ஆரம்பித்துவிட்டார். முதன் முதலாய் உயிர் பயத்தை மிகவும் உணர்ந்தது அன்றுதான் எனலாம். ஒரு ரோலர் கோஸ்டர் சவாரிக்கு ஈடான த்ரில் அடி வயிற்றில் பந்தாய் உருள்கிறது. சரி! இந்தாள் பாச்சா உஸ்மான் ரோடு வந்தால் பலிக்காது. அங்கே நெரிக்கிற ட்ராஃபிக்குக்கு வேகத்தைக் குறைத்தே ஆகவேண்டும். ஆனால் நாம் வாழ்க்கையில் தப்புக்கணக்குப் போடுகிறோம்.

உஸ்மான் ரோடு வந்ததும் ட்ரைவர் நாங்கள் மயிர்க்கூச்செரியும் வகையில் ஒரு காரியம் செய்தார். அவர் இருக்கையிலிருந்து டக் என்று எழுந்து நின்று ஓட்ட ஆரம்பித்தார். வளைந்து வளைந்து லாவகமாய் வழியில் நிறைய பேருக்கு உயிர்ப்பிச்சையிட்டபடி ஆட்டோ பாய்கிறது. ஒரு வழியாய் தப்பித்து வீடு வந்து சேர்ந்தோம். நண்பர் 'நீ ஓட்டின ஓட்டுக்கு இவ்வளவுதான் கொடுக்க முடியும்' என்று சொல்லிவிட்டு பேசினதில் பாதித் தொகையை மட்டும் கோபத்துடன் அவனிடம் வீசி விட்டு திரும்பி வீட்டுக்குள் போய்விட்டார். கொஞ்ச நேரம் புலம்பிக்கொண்டிருந்துவிட்டு ஆட்டோ அரைவட்டம் போட்டுத்திரும்பிப் போனது.

ஆட்டோ 3 : மறுபடியும் சென்ட்ரலிலிருந்து ஒரு பயணம். இந்தத் தடவை என் அக்கா குடும்பம். இரண்டு குழந்தைகள். இந்த ஆட்டோ ட்ரைவர் இன்னொரு ஜேம்ஸ்பாண்டு. சீறிப் பாய்ந்து கிளம்பிய அந்த ஆட்டோவின் ட்ரைவர் எங்களை கதிகலங்க வைக்கப் பண்ணின முதல் காரியம் சர் என்று ஒரு ஒருவழிப் பாதைக்குள் புகுந்தது. எதிர் வரும் வாகனங்கள் நிலைதடுமாறி ஒதுங்க.. ஆட்டோ ட்ரைவருக்கு எந்தக் கவலையுமில்லை. நான் அவரைக் கூப்பிட்டு சொல்லவேண்டியதைச் சொல்லிவிட்டேன். ஆனால் வேகத்தை துளியேனும் குறைப்பது அவமானமாய் போய்விடும் என்று நினைத்தார் போலும். மேலும் திடீரென்று ஹாண்டில் பாரிலிருந்து இரண்டு கையையும் விட்டு சர்ட் காலரை ஸ்டைலாய் இழுத்துவிட்டுக்கொண்டார். பிறகு ஒரு பான்பராக் பாக்கெட்டை லாவகமாய் பிரித்து வாயில் அடக்கினார். ஆட்டோ ஏதோ ஒரு சக்திக்குக் கட்டுப்பட்டார்போல அதுபாட்டுக்கு தேமே என்று போய்க்கொண்டிருக்கிறது. நான் மற்றும் என் அக்கா குடும்பம் கிடைத்த கம்பிகளையெல்லாம் இறுகப் பற்றிக்கொண்டு பேச்சு மூச்சற்றுப்போய் உட்கார்ந்திருந்தோம். போக்குவரத்து விதிகள் என்று என்னென்ன இருக்கிறதோ அது அத்தனையையும் ஒன்று விடாமல் மீறின ஒருத்தனை அன்றுதான் பார்த்தேன். ராயப்பேட்டை பாலம் தாண்டின அந்தப் பெட்ரோல் பங்க் அருகில் இன்னொரு ஆட்டோ பெட்ரோல் போட சரேலென்று திரும்ப ட்ரைவர் நிதானமிழந்து ஆட்டோவைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியடைந்து.. டமார் என்று நேருக்கு நேர் மோதி.. அதன் தாக்கத்தில் ஆட்டோ இடப்பக்கம் சாய்ந்து கிட்டத்தட்ட கவிழப்போய் பின் என்ன நினைத்ததோ இரக்கம் கொண்டு பழைய நிலைக்கே ஆடி நின்றது. அன்று குழந்தைகள் இருவரும் கத்திய கத்தல் இன்னும் காதுக்குள்ளேயே எதிரொலித்துக் கொண்டிருக்கிறது.

எனக்கு வாய்த்த இன்னும் சில மோசமான ஆட்டோ அனுபவங்களை இங்கே சொல்லவில்லை. எனக்கு மட்டும்தான் இப்படி வாய்த்ததா என்றும்கூட நினைத்ததுண்டு. குறிப்பாய் சென்ட்ரலிலிருந்து வேறு வேறு திசைகளுக்குப் பயணிக்கிற ஆட்டோக்கள் மட்டும்தான் இப்படியிருக்கிறதோ என்று ஒரு சந்தேகமும் உண்டு. திரும்பி வந்து அடுத்த ட்ரெயினிலிருந்து இறங்குகிற கூட்டத்திலிருந்து சவாரி பிடிப்பதற்கான அவசரம்தான் அவர்களை இவ்வளவு வேகமாக ஓட்டத் தூண்டுகிற காரணம் என்று நினைக்கிறேன். என்றாலும் குடும்பமாய் குழந்தைகளையும், லக்கேஜையும் சுமந்துகொண்டு நம்பிக்கையாய் பயணம்போகிறவர்களின் உணர்வுகளை ஏன் இவர்கள் கண்டுகொள்வதே இல்லை என்று புரியவில்லை. ஒரு நிதானத்துடன், பயணிகளின் மற்றும் சாலையில் நடக்கிறவர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு ஓட்டும் ஆட்டோ ட்ரைவர்கள் ரொம்பக் குறைவே என்று தோன்றுகிறது. ஒரு அவசரத்துக்கும் செளகரியத்துக்கும் நாம் தேர்ந்தெடுக்கும் இந்த ஆட்டோப் பயணம் காசையும் கொடுத்துவிட்டு கலவரத்தை அடிமடியில் கட்டிக்கொண்டு போகும் விஷயமாகவே படுகிறது. மற்ற ஊர்களில் எப்படி என்று தெரியவில்லை. நிஜமாகவே அட்வெஞ்சரில் ஆர்வமுள்ளவர்கள் இங்கே ஒரு சில ஆட்டோக்களை முயன்று பார்க்கலாம்.

"சார் ஆட்டோ வேணுமா?" என்று குரல் கேட்டால் இப்போதெல்லாம் வேகமாய் திரும்பி நடந்துவிடுகிறேன்.

ஹேப்பி பர்த்டே!!

அப்பா எங்கள் பிறந்த தினங்களில்
பெயரிட்ட பெரிய வட்டக் கேக்குகளை
எச்சில் காற்றால் கேண்டில் அணைத்து
வெட்டச் சொல்லி பாட்டுப்பாடினார்...
*
அங்கேயிருக்க நேரும் பத்துப்பேரிலும்
அப்பாவால் மட்டும்தான்
வெட்கத்தைவிட்டுப் பாடமுடியும்,
இது உனக்கொரு சந்தோஷமான பிறந்த தினம்...
இது உனக்கொரு சந்தோஷமான பிறந்த தினம்...
*
அப்பாவின் பிறந்த நாட்களில் பாட ஆளிருக்காது.
நாங்கள் ஒருத்தரை ஒருத்தர் பரஸ்பர நம்பிக்கையற்றுப்
பார்த்துக்கொண்டபின்
ஹாப்பி - என்று துவங்கிய நானும்
என் ஒற்றைக் குரலின் பைசாசத்திற்கு பயந்து
பாட்டை நிறுத்திப்
பேந்தப்பேந்த விழித்துக்கொண்டிருப்பேன்.
*
அப்புறம் காலப்போக்கில் எங்களுக்குத் தைரியம் வந்தது.
ஆனால் அப்போது
அப்பா எங்கள் பிறந்த தினங்களை மறந்துவிட்டிருந்தார்
நாங்கள் அவர் பிறந்த தினங்களை மறந்து போயிருந்தோம்.

"அப்பாவின் பிறந்த தினங்கள்" - கவிதை.
- சுதேசமித்திரனின் 'அப்பா' கவிதைத் தொகுப்பிலிருந்து.

*
பாலக்காடு. ஒரு குக்கிராமம். ஏராளமான மரங்களும், கோழிகள் அடைகிற கூண்டும், சில மாடுகள் அடங்கிய தொழுவத்தையும் உள்ளடக்கிய தோட்டத்தின் நடுவே ஒரு மச்சுவீடு. அங்கே முப்பத்தி மூன்று வருடங்களுக்குமுன் ஒரு புதன்கிழமை காலையில் ஒரு குழந்தை பிறந்தபோது (நான்தான்) "என்ட கொச்சு மோனே" என்று ஈன்றபொழுதில் பெரிதுவர்த்தவர்கள், இவன் பிற்காலத்தில் தமிழில் சிறுகதையெல்லாம் எழுதி, அப்புறம் தமிழ் வலைப்பதிவு எல்லாம் ஆரம்பிப்பான் என்று யோசித்திருக்கக்கூட மாட்டார்கள். வருடங்களின் சுழற்சியில் சிந்தனைகளும், சிந்திக்கிற மொழியும் மாறிவிட்டன. எந்த மொழியில் வளர்ந்தாயோ அது தாய் மொழி. எந்த இடம் உனக்கு சோறு போட்டதோ அது சொந்த பூமி என்றாகிவிட்டது. சரி அதை விடுங்கள்.

இதை இப்போது நினைவுகூர்வதற்குக் காரணம் இந்த வருடமும் என் பிறந்தநாள் வந்துவிட்டதுதான். அப்போதெல்லாம் ஒவ்வொரு வருடமும் பிறந்தநாள் வரும்போது நிறைய எதிர்பார்ப்புகளை சட்டைப்பையில் வைத்துக்கொண்டு காத்திருப்பேன். நிறைய பேர் வாழ்த்துக்கள் சொல்வார்கள். நிறைய பரிசுப்பொருள்கள் வரும். புதுசாய் உடை அணிந்து கொள்ளலாம். முக்கியமாய் ஸ்பெஷலான ஆட்கள் தரும் ஸ்பெஷலான பரிசுகளுக்காய் மனசு தவம் கிடக்கும். ஸ்பெஷல் என்றால் அப்படி ஒரு ஸ்பெஷல். நிறைய பிறந்தநாட்களில் சந்தோஷத்தில் மனசும் விழிகளும் கலங்கியிருக்கின்றன. பிறகு நண்பர்களுடன் பர்த்டே ட்ரீட்டுக்குப் போகிற இடங்களும், கழிகிற பொழுதுகளும் அடுத்த பிறந்தநாள்வரை ஞாபகம் இருக்கும். அதே போலத்தான் நான் விரும்பி அடுத்தவர் பிறந்தநாளைக் கொண்டாடுவதும்.

ஒவ்வொரு வருடமும் என் பிறந்த தேதி நெருங்க நெருங்க எனக்குப் பிடித்த, என்னைப் பிடித்த நண்பர்கள் உறவினர்கள் முதுகுப்புறம் எதையோ மறைத்துக்கொண்டு (பரிசுப்பொருட்கள்தான் வேறென்ன?) வட்டமாய் என்னை நெருங்குகிற மாதிரி கற்பனை வரும். இனிமை கலந்த நெர்வஸ் ஒன்று முதுகுத் தண்டில் ஓடும். என் பிறந்த நாளை மறந்துவிட்ட ஒரு நண்பனை ஏன்டா ஒரு விஷ்கூட பண்ணல என்று கன்னா பின்னாவென்று திட்டியிருக்கிறேன்.

சிலோன் ரேடியோவில் "பிறந்த நாள்.... இன்று பிற....ந்...த நாள்!" என்று பாட்டு போட்டு யாருக்காவது பிறந்தநாள் வாழ்த்துக்கள் சொல்வதைக் கேட்கும்போது ஆஹா! என்றிருக்கும். தாத்தா, பாட்டி, பெரியப்பா, சித்தப்பா, அம்மும்மா, அக்கக்கா என்று வாழ்த்தியவர்கள் லிஸ்ட்டை நீளமாய்ப் படிப்பதைக் கேட்கும்போது ஒருத்தன் பிறந்ததற்கு இத்தனை பேர் சந்தோஷப்படுகிறார்களே என்று வியப்பாக இருக்கும்.

வாழ்வின் நிறைய வருடங்கள் அதற்குள்ளாகக் கடந்துவிட்டன என்று ஏதோ ஒரு நாள் திடீரென்று ஏனோ உணர்ந்துவிட்டேன் போலும். பிறகு பி.நாள் கொண்டாடுவதன் சுவாரஸ்யம் லேசாய் குறைந்துபோய்விட்டது. நான் இன்னும் என்னைச் சின்னப்பையனாதான் ஃபீல் பண்றேன் என்று சொல்கிற பொய், கண்ணாடியைப் பார்க்கும்போது உடைந்து சிதறிவிடுகிறது. (இதைப்படிக்கிற அன்பர்கள் உடனே என்னை ஒரு குடுகுடு கிழவனாக கற்பனை செய்து ஏமாந்து போகாதீர்கள் என்று எச்சரிக்கிறேன்).

எனக்கொரு மகன் பிறந்தபிறகு சென்டர் ஆஃப் அட்ராக்ஷன் மாறியதில் என் பிறந்தநாளின் முக்கியத்துவம் பங்கு மார்க்கெட் மாதிரி சரிந்தது. நல்லது! அதையேதான் நானும் எதிர்பார்த்தேன். பெரிய வட்ட கேக். நடுவே நம்பர் கேண்டில் வைத்து குவிந்த வாயால் குழந்தை சுடரை ஊதிக் கைதட்டுகிற குதூகல தருணங்களில் முடிவு செய்துகொண்டேன். இனி நான் என் பிறந்த நாளைக் கொண்டாடுவதில்லை. இனியென்ன? இதோ இப்போது வரப்போகிற பி.நாள் தானாகக் கடந்துபோகட்டும். அப்படியும் நினைவு வைத்துக்கொண்டு வாழ்த்துபவர்களுக்கு சின்னதாய் ஒரு தேங்க்யூ சொல்லி முடித்துவிடவேண்டும். ட்ரீட் என்று நிர்பந்தித்தால் நான் பிறந்தநாள் கொண்டாடுவதில்லை என்று அறிவத்துவிட்டு ஒரு காஃபி பைட்டோ, காஃபியோ வாங்கிக்கொடுத்துவிட்டு நைஸாய் கழன்று கொள்ள வேண்டும். எல்லா நாளையும்போல இது இன்னொருநாள் அவ்வளவே!

இதோ என் இருப்பை ஞாபகப்படுத்தும் இந்த வருடத்திற்கான பிறந்ததினம் வந்துவிட்டது. வயது ஏற ஏற டென்ஷனும், டெக்னாலஜியும் அதிகமாகிவிட்டது பாருங்கள். காலை 5.30க்கு 'மெனி மோர் ஹேப்பி ரிடர்ன்ஸ் ஆஃப் தி டே!' என்று SMS வருகிறது. தொடர்ந்து பல இப்படியே. பிறகு தட்டப்பட்ட கதவைத்திறந்தால் நண்பர்கள். கையில் கிஃப்ட் பேக். மலங்க முழித்துநின்ற என்னைப்பார்த்து "வாழ்த்துக்கள்! என்றார்கள். 'இந்த சிகப்பு டி-சர்ட் உனக்கு எடுப்பாக இருக்குமென்று வாங்கினேன்.' நண்பன் சொல்கிறான். பிரித்த கிஃப்ட் கவர்களிலிருந்து புத்தகங்களை உருவி எடுக்கிறேன். "ப்ஷீர் வரலாறு". அப்புறம் "முகவீதி" - ராஜசுந்தரராஜன் கவிதைகள். நான் படிக்க வேண்டும் என்று நினைத்திருந்த புத்தகங்கள். நன்றி. நன்றி. நன்றி!

டெலிபோன் அடிக்கிறது. எடுத்தால் மறுமுனையில் கோயமுத்தூரிலிருந்து ராகம் போட்டு பையனின் பாட்டு.. "ஹாப்பி பர்த்டே டூ யூ". லேசாய் நெகிழ்கிறது. "கே.பி.என் பார்சல் சர்வீஸ்ல உனக்கு ஒரு பார்சல் கிப்ஃட் அனுப்பியிருக்கேன்.. மறக்காமப் போய் வாங்கிக்கோ" என்கிறாள் மனைவி. பிறகு ஆஃபீஸ் கிளம்புகிற வரை நிறைய போன்கள். நிறைய வாழ்த்துக்கள். கடவுளே!

என்னை மீறி இவையெல்லாம் நிகழ்ந்துவிட்டது. சரி! அலுவலகத்திலாவது யாருக்கும் இதைப் பற்றி நான் ப்ரஸ்தாபிக்காமல் இருத்தல் நலம். அங்கே யாருக்கும் இது தெரியாது. அலுவலகத்திற்கு நண்பன் கொடுத்த டி-சர்ட்டைப் போட்டுக்கொண்டு நல்ல பிள்ளையாய் போய் தேமே என்று வேலை பார்க்க ஆரம்பித்துவிட்டேன். அலுவலக முகவரிக்கு குரியரில் வந்த க்ரீட்டிங் கார்டுகளை மற்றவர்கள் பார்க்காமல் பிரித்துப் பார்த்து பின் ஒளித்தும் வைத்துவிட்டேன். மின் அஞ்சலில் வந்த ஒரு சில வாழ்த்துக்களை ப்ரவுசர் மினிமைஸ் பண்ணிவைத்துப் படித்தேன். பிறகு அலுவலக போனிலும் செல் போனிலும் வந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள். எல்லாவற்றிற்கும் மற்றவர்கள் கேட்காமல் குரலைத் தணித்துப் பேசிச் சமாளித்தேன். போதாக்குறைக்கு "Airtel wishes a very happy birthday" என்று செல்போன் ப்ரொவைடரின் ஆட்டோமேட்டட் வாய்ஸ் வேறு. அப்படியும் ஒருத்தன் ஆஃபிஸில் கேட்டுவிட்டான். "இன்னைக்கு என்ன ரொம்ப உற்சாகமா இருக்கீங்க?". நான் சிரித்து மழுப்பினேன்.

ஹா! எப்படியோ நாலு மணி வரையிலும் இப்படியே ஓட்டியாயிற்று!

பிறகு 123greetings.com-ல் இருந்து ஒரு வாழ்த்து வந்தது பாருங்கள்! யாருக்கும் தெரியாமல் லேசாய் அதைத் திறந்தபோது.. அடப்பாவி அதில்.. மிடி ஃபைலாக அதில் ம்யூசிக் வேறு இணைத்து அனுப்பியிருக்கிறான். டி...டி... டீ....டி. டீ... டீ! என்று ஹேப்பி பர்த்டே ட்யூன். என் ஸ்பீக்கர் வால்யூமை நான் ஏன் இத்தனை வைத்துத் தொலைத்தேன்? அருகில் இருந்தவன் சடாரென்று திரும்பினான். என்னது? என்றான். நான் வால்யூமை சடாலென்று குறைப்பதற்குள் புரிந்து கொண்டுவிட்டான். "ஷிட்.. மறந்தே போயிட்டேன்.." என்று அவன் அருகில் வந்து கைகுலுக்க... நிமிடத்தில் என்னைச்சுற்றிக் கூட்டம். 'ஆனாலும் நீ இத்தனை கமுக்கமாய் இருக்கக்கூடாது' என்றார்கள். ட்ரீட்க்கு எங்கே போகலாம் என்று பேரம் நடந்தது. முடிவாய் திருமயிலை அடையாறு ஆனந்த பவனில் என் பிறந்த நாள் ட்ரீட் இனிதே முடிந்தது.

ஆக இந்த வருடம் இந்த நாள் அபாரமாய்க் கழிந்துவிட்டது. இந்த நாளின் மகிழ்ச்சி வயதொன்று ஏறிவிட்ட சோகத்தை தற்காலிகமாய் மழுங்கடித்துவிட்டதுதான்

'அதெல்லாம் சரிதான். இந்த தினத்தை நிறைவானதாக ஆக்கும் பொருட்டு அடுத்தவேளை சோற்றுக்கு வழியில்லாத, உன்னிலும் மிக ஏழ்மையான யாருக்கேனும்.. பத்து ரூபாய்க்கோ, ஒரு பிடி அரிசிக்கோ ஏதாவது வழிவகை செய்து உதவினாயா? அப்படியொன்றை நினைத்தாவது பார்த்தாயா?'

எதிர்பாராத (பார்த்த?) வகையில் இத்தனை சிறப்பாய் கழிந்த நாளின் இறுதியில் எழுந்த இந்தக் கேள்வி சுருக்கென்று ஆழமாய்த் தைக்கிறது மனதை.

ஹேப்பி பர்த்டே டு மி!

முதல் காதல். முதல் முத்தம். முதல் சமையல்.

இந்த மு.கா, மு.மு இரண்டும் 'ப்யூர்லி பர்சனல்' ஆக இருப்பதால் அதை இங்கே தணிக்கை செய்து விட்டு தலைப்பின் மூன்றாவது விஷயத்துக்கு நேரடியாக வருகிறேன். நான் முதன் முதலில் சமையல் செய்த அனுபவம் கொஞ்சம் விட்டிருந்தால் நாளிதழில் எட்டுப்பக்க செய்தியாக மாறுகிற அபாயம் வரை போனதை யாராவது சொன்னார்களா?

தங்கமணி (மனைவியை இப்படி குறிப்பிடுவது ஜாலியாகத்தான் இருக்கிறது. வாழ்க மணிரத்னம்!) ஊருக்குப் போவதற்கு (சுமார் ஒரு மாதம் வெக்கேஷனாம்) ஒரு வாரம் முன்னரே கொஞ்சம் கிலியால் லேசாய் வயிறு புரள ஆரம்பித்துவிட்டது. சாப்பாட்டுக்கு என்ன செய்யப் போகிறேன்? மூன்று வேளை ஹோட்டலில் சாப்பிடுவதென்பது ஒத்துவராத ஒரு காரியம். ஆக வேறு வழியில்லாமல் நானே சமைத்து நானே சாப்பிட வேண்டிய நிர்பந்தத்திற்கு காலம் என்னைத் தள்ளிவிடப்போகிறதா?

"முதல்ல குக்கரை எடுத்து.." என்ற தங்கமணியை கையமர்த்தித் தடுத்தேன். "எல்லாம் நான் பார்த்துக்கொள்கிறேன் அம்மணி. இதெல்லாம் ஒரு பெரிய விஷயமேயில்லை! நீ எதுவும் சொல்ல வேண்டாம். நான் சமையல் கற்றுக்கொள்வதற்கு இது ஒரு பொன்னான வாய்ப்பு. நானாக கற்றுக்கொண்டு சமையலில் ஒரு கலக்கு கலக்குகிறேன் பார்!. நீ கவலைப்படாமல் ஊருக்குக் கிளம்பு".

தங்கமணி அப்போது பார்த்த பார்வையின் அர்த்தம் அடுத்த நாள் விடியலில் தெரிந்துவிட்டது. முதன் முதலாக வெறிச்சோடிக்கிடந்த சமையலறைக்குள் லேசான ஜேம்ஸ்பாண்ட்தனத்துடன் எட்டிப் பார்த்தேன். ஓ! இதுதான் நான் இனிமேல் இயங்க வேண்டிய களம். இந்தக் குக்கர் எங்கேயிருக்கிறது?. அதோ!. ம்! தங்கமணி சொன்னது என்ன? "முதல்ல குக்கரை எடுத்து...

எடுத்து???

'எங்கே நீ சொல்லவிட்டாய் மானிடா...!! எக்கேடோ கெட்டுப்போ! நீயாச்சு! உன் சமையலாச்சு!' என்று விட்டத்தில் அசரீரி கேட்டது.

என்றோ ஒரு நாள் நண்பர்களுடன் சேர்ந்து கூட்டு முயற்சியாய் சேர்ந்து சமைத்த அனுபவங்களை ஞாபக அடுக்கில் விரட்டி விரட்டி தேடி மனதில் ஒரு சில குறிப்புகள் தயார் செய்துகொண்டேன். இதோ ஆரம்பித்தாயிற்று. ஒரு வழியாய் ஆயத்தங்கள் முடிந்து குக்கர் நீலமாய் எரிகிற அடுப்பின்மேல் உட்கார்ந்திருக்கிறது. இன்னொரு பத்து நிமிடத்தில் சாப்பாடு ரெடி. அதற்குள் ரசம் வைத்து முடித்துவிடலாம். குழம்பு வைப்பதெல்லாம் ஒரு வேலையா என்ன? எல்லாமே தாளித்துத் தாளித்து கொட்டுவதுதானே?. சரி! ரசம். அதற்குத் தேவையான பொருட்கள், உபகரணங்கள் என்னென்ன? முதலில் புளியை ஊறவைத்து பிறகு தக்காளிக் கரைசலில்... என்று கரெக்டாக ஆரம்பித்துவிட்டேன் பாருங்கள்.

நான் தடுத்ததையும் மீறி தங்கமணி "குக்கர் நாலு விசில் அடிச்சா அடுப்பை ஆஃப் பண்ணிருங்க" என்று கோவை எக்ஸ்பிரஸ் கிளம்பும் போது ஜன்னல் வழியே சொன்னது நினைவுக்கு வருகிறது. நான் விசிலுக்காகக் காத்திருந்தேன். இன்னும் வரவில்லை. மாறாக என்ன இது லேசாய் ரப்பர் கருகுகிற வாசம்?. நான் மெதுவாய் குக்கரை அணுகினேன். என்னவோ தப்பு. அதன் மூடி மற்றும் இன்னபிற விஷயங்களைச் சோதித்தேன். நேரமாக ஆக குக்கரின் மகா மெளனம் என்னை சோதிக்க ஆரம்பித்தது. கிட்டத்தட்ட முக்கால் மணி நேரத்துக்கும் மேலாகிவிட்டது. எங்கே விசில்? விசிலடிப்பதெல்லாம் அதற்குப் பிடிக்காதோ என்னவோ..!!

திறந்து பார்த்துவிடலாமா என்று யோசிக்கும்போது.. குக்கரிலிருந்து வரக்கூடாத இடத்திலிருந்தெல்லாம் நீராவி கசிய ஆரம்பித்ததை பார்த்தேன். ஏய்!! என்னிடம் மட்டும் இது என்ன விளையாட்டு? ரப்பர் வாசம் வீடெங்கும் பரவ ஆரம்பித்தது. எனக்கு உடனே தீபாவளியன்று வெடிக்கும் பச்சை நிற அணுகுண்டும், எரிமலை வெடிப்பதற்குமுன் லேசாய் புகைவதும் நினைவுக்குவர... சட்டென்று தீர்மானித்து குக்கர் மூடியை சடால் என்று திறந்தேன். அத்தனை நேரம் அடக்கி வைத்த மகாகோபம் புஸ் என்று நீராவியாய் சீறி முகத்தில் அடிக்க நான் பத்தடி எகிறி நின்றேன். இன்னும் ஒரு ஐந்து நிமிடம் பொறுத்திருந்தால் அது நிச்சயம் வெடித்துச் சிதறியிருக்கக்கூடிய அபாயம் ரொம்ப லேட்டாய் உறைத்தது. இப்போது இன்னும் அதிகமாய் ரப்பர் வாசம்.

சுதாரித்து மெதுவாய் குக்கர் மூடியை ஆராய்ந்தேன். வெப்பம் தாங்காமல் வால்வ் ஓட்டையாகியிருக்கிறது பார்! இத்தனை நேரமாகியும் சாப்பாடு வெந்திருக்கவில்லை. நான் யோசனையாய் நின்றேன். ப்ரெஷர் குக்கர் வேலை செய்யும் முறைபற்றி தீவிரமாய் யோசிக்க ஆரம்பித்தேன். இன்றைக்கு ஹவ் ஸ்டஃப் ஒர்க்ஸ் டாட் காமில் தேட வேண்டும். எங்கேயோ லாஜிக் இடிக்கிறது. பாஃர்முலா வேலை செய்யவில்லை.

வால்வின் ஈயம் உருகி சாப்பாட்டோடு கலந்திருக்கும் என்பதால் இனி அதை வைத்துக்கொண்டு மேற்கொண்டு எதையும் யோசிப்பது உசிதமல்ல என்று பட்டது. இதோ ரசம் கூட இப்போது கொதிநிலைக்கு வந்துவிட்டது. ரசப்பொடியை ஸ்பூனில் எடுக்கும்போதுதான் இந்தக் குக்கரின் அபாய நிலை உணர்ந்து அருகில் போய்ப்பார்த்தது. பொடியை போட்டேனா இல்லையா? திடீர் சந்தேகம்! அப்புறம் ரசத்தை கொஞ்சமாய் கரண்டியில் எடுத்து ருசி பார்க்க.. உவ்வே!

எல்லாவற்றையும் அப்படியே போட்டுவிட்டு வசந்தபவனுக்குப்போய் ரெண்டு இட்டிலி, ஒரு கல்தோசையை உள்ளே தள்ளி பசியாற்றிக்கொண்டேன்.

நலமாய் ஊர் போய் சேர்ந்துவிட்டதாக தங்கமணியிடமிருந்து இரவு போன் வந்தது. பிரயாண செளகரியங்கள் பற்றியெல்லாம் பொதுவாய் கேட்டறிந்துவிட்டு அப்புறம் குரலைத் தணித்துக்கொண்டு மெதுவாய் கேட்டேன். "முதல்ல குக்கரை எடுத்து...சொல்லு.! அப்பறம் என்ன பண்ணனும்?"

மறுபடியும் கணேஷ்

இதற்கு முந்தைய வலைப்பதிவில் என் நண்பனுக்குக் கொடுத்தனுப்பிய துண்டுச்சீட்டுக் கடிதம் பற்றி குறிப்பிட்டிருந்தேன். அதன் தொடர்ச்சியாய் ஒரு நிகழ்வு என் வாழ்க்கையில் சம்பவித்ததையும் இங்கே சொல்லிவிடலாம் என்று நினைக்கிறேன். அவன் பெயர் கணேஷ். இடம் உடுமலைப்பேட்டை. கவனிக்க! ஊர், பெயர் மாற்றப்படவில்லை. நான் பத்தாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த சமயம். என் வீட்டுக்கு நாலுவீடு தள்ளி அவன் வீடு இருந்ததாலும், நான் படித்த டியூசன் வாத்தியாரிடமே அவனும் படித்தான் என்பதும் நானும் அவனும் உற்ற நண்பர்களாயிருப்பதற்கு ஒரு சில காரணங்களாயிருந்தன. அப்பொழுதெல்லாம் வீட்டில் எதையாவது சொல்லிவிட்டு, கல்பனா தியேட்டரில் வாராவாரம் மாற்றும் "மிடில் ஷோ" ஆங்கிலப்படங்களை ரெண்டுபேரும் எப்படியாவது பார்த்துவிடுவோம். (அதாவது ஃபர்ஸ்ட் ஷோவிற்கும், செகண்ட் ஷோவிற்கும் நடுவில் ஒரு இடைச்சொருகலாய் ஒரு காட்சி ஓட்டுவார்கள்.) மிக முக்கியமாய் ஜாக்கிசான், ஜேம்ஸ்பாண்ட். இன்னபிற இங்கிலீஷ் ஆக்்ஷன் படங்கள்.

இன்ன தியேட்டர் என்று குறிப்பிட்டு சினிமா போலாமா என்று கேட்டு என் தம்பியிடம் மேற்படி துண்டுச்சீட்டைக் கொடுத்தனுப்புவேன். தம்பிக்காரனும் ஒரு தபால்காரரின் சிரத்தையுடன் அதை கணேஷிடம் ஒப்படைத்துவிட்டு வருவான். கணேஷ் அவன் பெற்றோர்களுடன் அது குறித்து விவாதித்து முடிவெடுத்து அதை அவன் தம்பிக்காரனிடம் எழுதிக்கொடுத்தனுப்பிவிடுவான். இப்படியாக தகவல் பரிமாற்றத்துக்கு தம்பிகளையும், துண்டுப் பேப்பர்களையும் வெகுவாக உபயோகித்து அபிமான குங்ஃபூ படங்களை தவறவிடாமல் பார்த்துக்கொண்டிருந்தோம். எந்த உலகக் கவலைகளின் சுவடையும் மிதிக்காமல், மதிக்காமல் மிக சந்தோஷமான காலகட்டம் அது.

நிற்க!. மேற்படி துண்டுச்சீட்டுகளில் ஒன்றை நான் ஞாபகமாய் பத்திரப்படுத்தி வைத்திருந்தேன். (இது போல் நிறைய உண்டு). ஓரிரு கரப்பான் பூச்சிகள் உள்நுழைந்திருந்த என் பெட்டிக்குள் அது பல வருடம் பாதுகாப்பாய் இருந்தது. கணேஷ் என்கிற என் நண்பன் அதற்கப்புறம் காலம் எட்டி உதைத்ததில் டெல்லிப்பக்கம் போய் விழுந்திருந்தான். பிறகு ஓரிரு வருடங்கள் அப்படியும் இப்படியுமாக கடிதப்போக்குவரத்தில் நட்பு ஓடிக்கொண்டிருந்தது. பிறகு என்ன ஆயிற்றோ தெரியவில்லை. அதுவும் திடீரென்று நின்றுபோய்.. 700 கோடி பேர்களுள் ஒருவனாய் அவன் காணாமல் போய்விட்டான். பெரிய படிப்பு, பெரிய வேலை என்று அவன் எல்லைகளை விஸ்தரித்துக்கொண்டு போனான். கடிகாரத்தை பார்க்கக்கூட சமயமில்லாமல் உழைத்ததில் ஒரு சில உயரங்களை அடைந்திருந்தான் என்று வேறு சில நண்பர்கள் மூலம் தெரிந்துகொண்டேன். நான்தான் அவன் வட்டத்திலிருந்து தொலைந்துவிட்டேன் போல. பிறகு அவன் எங்கேயிருக்கிறான், என்ன பண்ணிக்கொண்டிருக்கிறான் என்று தெரியாமல் ஒரு சில தேடல் முயற்சிகளுடன் நிறுத்திக்கொண்டேன். வருடங்கள் உருண்டன.

அப்புறம் திடீரென்று ஒருநாள் திடுதிப்பென்று என் வாழ்வில் டெக்னலாஜிக்கல் மாற்றங்கள் நிகழ்ந்துவிட்டன. வலது கையில் மெளசும் இடது கையில் கீபோர்டுமாக கம்ப்யூட்டர் திரையை வெறித்துப்பார்க்கும் வேலையொன்று எனக்கு அமைந்துவிட்டது. அந்தப்பக்கம் இந்தப்பக்கம் அசையவிடாமல் என் இருக்கையைச்சுற்றி இன்டெர்நெட்டும் வலை பின்னத்தொடங்கியிருந்தது அதன் மகா ஆச்சரியப்பக்கங்களை விலக்கி விலக்கி தேடிக்கொண்டிருந்தபோது கண்ணில் பட்டது ஒரு வலைத்தளம். அலும்னி டாட் நெட்! வாழ்க்கையில் தொலைந்து போன உங்கள் மனதிற்கினிய க்ளாஸ்மேட்டுகளை இந்த வலைத்தளத்தின் மூலம் கண்டுபிடிக்க முடியும் என்று பறைசாற்றுகிற அதை முதன் முதலில் பார்த்தபோது கணேஷ் ஞாபகம்தான் வந்தது. உடனே விரல்கள் பரபரப்பாகி அந்த வலைத்தள கடலுக்குள் டைவ் அடித்துவிட்டேன். ஆனால் ஒன்று நினைவு வந்தது. அவன் என் க்ளாஸ்மேட்டும் அல்ல. அப்புறம் எப்படி கண்டுபிடிப்பது? இருந்தாலும் விடாமுயற்சியுடன் தேடியதில் கணேஷ் என்கிற பெயர் ஒரு விவரப்பக்கத்தில் அகப்பட்டது. ஆயிரம் கணேஷ்களில் அவன்தானா அது? தெரியாது. 50-50. இருந்தாலும் என்ன கெட்டுப்போயிற்று என்று அங்கே கிடைத்த மின்னஞ்சல் முகவரிக்கு கீழ்க்கண்டவாறு எழுதினேன். "நீ நெல்லுக்கடை வீதி முக்கு வீட்டுல குடியிருந்த கணேஷ் எனில் பதில் எழுதவும். இல்லையேல் சிரமத்திற்கு மன்னிக்கவும்."

இண்டர்நெட் என்கிற வேதாளம் எப்படி பாதாளம்வரை பாய்கிறது என்பதை கண்கள் விரிய, மயிர்கால்கள் சிலிர்க்க கண்ணுற்ற சம்பவம் மறுநாள் நிகழ்ந்தேவிட்டது. "நான் அதே கணேஷ்தான். நீ எங்கடா இருக்கே?" என்று பதில் வந்திருந்தது. துண்டுச்சீட்டு, மிடில் ஷோ ஜாக்கிசான் இன்னபிற விஷயங்களை லேசாய் கேட்டு அவன்தான் என்று உறுதிப்படுத்திக்கொண்டேன். உட்கார்ந்த இடத்திலிருந்து அவனைக் கண்டுபிடித்துவிட்ட ஆச்சரியம் ஒரு இரண்டு மூன்று நாட்களுக்கு இருந்தது. என்னிடம் அவன் பிடிபட்டபோது பக்ரைனில் இருந்தான். கல்யாணமாகி ரெண்டு குழந்தைகள் என்றான். உடனே அவன் குடும்பப் புகைப்படங்களை JPG -களாக ஆன்லைனில் பகிர்ந்துகொண்டான். என் புகைப்படங்களையும் கேட்டிருந்தான். அனுப்பிவைத்தேன். கூடவே பல வருடங்களுக்கு முந்தைய அந்தத் துண்டுச்சீட்டை ஸ்கேன் பண்ணி அவனுக்கு அவனுக்கு மின்னஞ்சலில் அனுப்பிவைத்தேன். அதில் லேசாய் கசங்கியிருந்த இங்க் பேனாவால் எழுதப்பட்ட அவன் கையெழுத்து. "ஞாபகமிருக்கிறதா?" என்று ஒற்றை வரியில் கேட்டிருந்தேன். மறுநாள் பதில் வந்தது. "எப்படி மறக்கமுடியும்? கல்பனா தியேட்டர்ல மிடில் ஷோ போன கதைகளை அடிக்கடி ஒய்ஃப் கிட்ட சொல்வேண்டா!"

அது சரி!!

இப்போது ஜப்பானில் இருக்கிறானாம். ஜாக்கிசானை அப்ப நேர்ல பாத்தா கேட்டதா சொல்லு என்றேன். சிரித்தான். கணேஷ் இப்போது எப்போதும் ஆன்லைனில்தான் இருக்கிறான். எப்போதும் அவன் ஸ்டேட்டஸ்ஸில் பிஸி என்று இருப்பதை காணமுடிகிறது. நல்லது. அதனால் என்ன? இப்போது அவன் என் பக்கத்திலேயே அல்லது பக்கத்து வீட்டிலேயே உட்கார்ந்துகொண்டிருப்பதுபோன்ற உணர்வு. எப்போதாவது ஹாய் சொன்னால் நிச்சயம் வந்து பேசுகிறான். அதுபோதும். இதைக்கூட இப்போது அவன் படித்துச் சிரித்துக்கொண்டிருக்கலாம்.

அவன் மறுபடி என்னிடமிருந்து தொலைந்து போகாமலிருக்க எல்லாம் வல்ல அருள்மிகு இண்டர்நெட்டேஸ்வரன் திருக்கோயிலுக்கு நேர்ந்திருக்கிறேன்.