ஆட்டோகிராஃப்

ஆட்டோ 1 : ஓரிரு வருடங்களுக்குமுன் நன்றாய் வெயில் கொளுத்துகிற ஒரு மதிய நேரம். நான் மற்றும் என் இரண்டு நண்பர்கள். கோவை சாயிபாபா காலனியில் உள்ள ஒரு ஹோட்டலில் தயிர் சாதமும், எலுமிச்சைச் சாதமும் இருபத்தைந்து பொட்டலங்கள் ஆர்டர் பண்ணிவிட்டுக் காத்திருக்கிறோம். அடுத்தநாள் மதுரையில் நடக்கவிருக்கும் ஒரு நண்பனின் கல்யாணத்துக்கு மதியம் ஒண்ணரை மணி ட்ரெயின் பிடித்து 25 பேர் போகிறோம். எல்லோரும் மதிய உணவை ட்ரெயினிலேயே முடித்துக்கொள்ளலாம் என்று சாப்பாடுப் பொட்டலங்களை ஏற்பாடு செய்ய வேண்டிய பொறுப்பை எங்களிடம் விட்டிருந்தார்கள். பொட்டலங்கள் வந்தன. அவற்றை சேகரித்துக்கொண்டு மணி பார்த்தபோது ஒன்று ஆகியிருந்தது. மீதி 22 பேரும் இந்நேரம் ட்ரெயினுக்கு வந்திருப்பார்கள். நாங்கள் இன்னும் அரை மணிக்குள் ரயில் நிலையம் போக வேண்டும். சரி ஒரு ஆட்டோ பிடித்துக்கொள்ளலாம் என்று முடிவு பண்ணினோம். கைதட்டினவுடன் அரை வட்டமடித்து ஆட்டோ ஒன்று வந்து நின்றது. ஏறிக்கொண்டு எங்கள் அவசரத்தைச் சொன்னோம். நிதானமாய்ப் போனால் போதும் என்றும் உபரியாய் சொல்லி வைத்தோம். ஆட்டோ கிளம்பியது.

ஒரு அரை ஃபர்லாங் கூட போயிருக்கமாட்டோம். ஒரு வளைவில் ஒரு யமஹா பைக்கில் இரண்டு பேர் ஸ்டைலாய் திரும்ப, சட்டென்று அந்தக் குறுக்கீட்டில் சுதாரிக்க முடியாமல் யமஹாவின் மீது டமால் என்று நேருக்கு நேர் மோதல். அப்புறம் நடந்ததை எப்படி வர்ணிப்பதென்று தெரியவில்லை. ஒடித்துத் திருப்பியதில் ஆட்டோ நிலை தடுமாறி சைடில் கவிழ்ந்து, இரண்டு முறை உருண்டு செத்த பல்லி மாதிரி சொத்தென்று தலைகீழாய் வீழ்ந்தது தரையில். நேராய் பார்த்தபோது வானம் தெரிந்தது. ஓ! நான் ஆட்டோவுக்கு அடியில் கீழே கிடக்கிறேன். நெஞ்சுப்பகுதி விலா எலும்பில் வலி உயிர் போகிறது. அலங்கோலமாய்க் கிடந்த எங்கள் மூவரையும் யாரோ வந்து தூக்கிவிட்டார்கள். எனக்குக் கைகால்கள் நடுங்குகின்றன. மண்டையிலிருந்து ரத்தம் வழிய மூர்ச்சையான ஆட்டோ ட்ரைவரைச் சுமந்து கொண்டு இன்னொரு ஆட்டோ ஆஸ்பத்திரிக்கு விரைகிறது. ரோடெங்கும் தயிர்சாத, எலுமிச்சைச் சாத பொட்டலங்கள் சிதறிக்கிடக்கின்றன.

ஆட்டோ 2 : நான். என் நண்பர். அவர் மனைவி, குழந்தை. சென்னை சென்ட்ரலிலிருந்து எங்களைச் சுமந்துகொண்டு தி. நகருக்கு விரைகிறது அந்த ஆட்டோ. ட்ரைவர் அப்போதுதான் ஒரு ஜேம்ஸ்பாண்ட் படம் பார்த்துவிட்டு வருகிறார் போல. கச கசவென்று வாகனங்கள் விரைகிற மெளண்ட் ரோட்டில் முறுக்கிப் பிடித்து அமுக்குகிறார் ஆக்ஸிலேட்டரை. சிக்னல்களில் ஆரஞ்சு விழுந்தாலும் மதிக்காமல் பறக்கிறது ஆட்டோ. சைக்கிள் கேப்பில் ஆட்டோ ஓட்டுவது எப்படி என்பதை அன்றுதான் தெரிந்து கொண்டேன். நண்பர் ட்ரைவரைக் கூப்பிட்டு இரண்டு மூன்று முறை சொல்லிவிட்டார். எங்களுக்கு அவசரமில்லை. மெதுவாகவே போகலாம். அதற்கப்புறம்தான் ஜேம்ஸ்பாண்டுக்கு உற்சாகம் பீறிட்டுவிட்டது. ஆக்ஸிலேட்டரே பிய்ந்துபோகுமளவுக்கு முறுக்க ஆரம்பித்துவிட்டார். முதன் முதலாய் உயிர் பயத்தை மிகவும் உணர்ந்தது அன்றுதான் எனலாம். ஒரு ரோலர் கோஸ்டர் சவாரிக்கு ஈடான த்ரில் அடி வயிற்றில் பந்தாய் உருள்கிறது. சரி! இந்தாள் பாச்சா உஸ்மான் ரோடு வந்தால் பலிக்காது. அங்கே நெரிக்கிற ட்ராஃபிக்குக்கு வேகத்தைக் குறைத்தே ஆகவேண்டும். ஆனால் நாம் வாழ்க்கையில் தப்புக்கணக்குப் போடுகிறோம்.

உஸ்மான் ரோடு வந்ததும் ட்ரைவர் நாங்கள் மயிர்க்கூச்செரியும் வகையில் ஒரு காரியம் செய்தார். அவர் இருக்கையிலிருந்து டக் என்று எழுந்து நின்று ஓட்ட ஆரம்பித்தார். வளைந்து வளைந்து லாவகமாய் வழியில் நிறைய பேருக்கு உயிர்ப்பிச்சையிட்டபடி ஆட்டோ பாய்கிறது. ஒரு வழியாய் தப்பித்து வீடு வந்து சேர்ந்தோம். நண்பர் 'நீ ஓட்டின ஓட்டுக்கு இவ்வளவுதான் கொடுக்க முடியும்' என்று சொல்லிவிட்டு பேசினதில் பாதித் தொகையை மட்டும் கோபத்துடன் அவனிடம் வீசி விட்டு திரும்பி வீட்டுக்குள் போய்விட்டார். கொஞ்ச நேரம் புலம்பிக்கொண்டிருந்துவிட்டு ஆட்டோ அரைவட்டம் போட்டுத்திரும்பிப் போனது.

ஆட்டோ 3 : மறுபடியும் சென்ட்ரலிலிருந்து ஒரு பயணம். இந்தத் தடவை என் அக்கா குடும்பம். இரண்டு குழந்தைகள். இந்த ஆட்டோ ட்ரைவர் இன்னொரு ஜேம்ஸ்பாண்டு. சீறிப் பாய்ந்து கிளம்பிய அந்த ஆட்டோவின் ட்ரைவர் எங்களை கதிகலங்க வைக்கப் பண்ணின முதல் காரியம் சர் என்று ஒரு ஒருவழிப் பாதைக்குள் புகுந்தது. எதிர் வரும் வாகனங்கள் நிலைதடுமாறி ஒதுங்க.. ஆட்டோ ட்ரைவருக்கு எந்தக் கவலையுமில்லை. நான் அவரைக் கூப்பிட்டு சொல்லவேண்டியதைச் சொல்லிவிட்டேன். ஆனால் வேகத்தை துளியேனும் குறைப்பது அவமானமாய் போய்விடும் என்று நினைத்தார் போலும். மேலும் திடீரென்று ஹாண்டில் பாரிலிருந்து இரண்டு கையையும் விட்டு சர்ட் காலரை ஸ்டைலாய் இழுத்துவிட்டுக்கொண்டார். பிறகு ஒரு பான்பராக் பாக்கெட்டை லாவகமாய் பிரித்து வாயில் அடக்கினார். ஆட்டோ ஏதோ ஒரு சக்திக்குக் கட்டுப்பட்டார்போல அதுபாட்டுக்கு தேமே என்று போய்க்கொண்டிருக்கிறது. நான் மற்றும் என் அக்கா குடும்பம் கிடைத்த கம்பிகளையெல்லாம் இறுகப் பற்றிக்கொண்டு பேச்சு மூச்சற்றுப்போய் உட்கார்ந்திருந்தோம். போக்குவரத்து விதிகள் என்று என்னென்ன இருக்கிறதோ அது அத்தனையையும் ஒன்று விடாமல் மீறின ஒருத்தனை அன்றுதான் பார்த்தேன். ராயப்பேட்டை பாலம் தாண்டின அந்தப் பெட்ரோல் பங்க் அருகில் இன்னொரு ஆட்டோ பெட்ரோல் போட சரேலென்று திரும்ப ட்ரைவர் நிதானமிழந்து ஆட்டோவைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியடைந்து.. டமார் என்று நேருக்கு நேர் மோதி.. அதன் தாக்கத்தில் ஆட்டோ இடப்பக்கம் சாய்ந்து கிட்டத்தட்ட கவிழப்போய் பின் என்ன நினைத்ததோ இரக்கம் கொண்டு பழைய நிலைக்கே ஆடி நின்றது. அன்று குழந்தைகள் இருவரும் கத்திய கத்தல் இன்னும் காதுக்குள்ளேயே எதிரொலித்துக் கொண்டிருக்கிறது.

எனக்கு வாய்த்த இன்னும் சில மோசமான ஆட்டோ அனுபவங்களை இங்கே சொல்லவில்லை. எனக்கு மட்டும்தான் இப்படி வாய்த்ததா என்றும்கூட நினைத்ததுண்டு. குறிப்பாய் சென்ட்ரலிலிருந்து வேறு வேறு திசைகளுக்குப் பயணிக்கிற ஆட்டோக்கள் மட்டும்தான் இப்படியிருக்கிறதோ என்று ஒரு சந்தேகமும் உண்டு. திரும்பி வந்து அடுத்த ட்ரெயினிலிருந்து இறங்குகிற கூட்டத்திலிருந்து சவாரி பிடிப்பதற்கான அவசரம்தான் அவர்களை இவ்வளவு வேகமாக ஓட்டத் தூண்டுகிற காரணம் என்று நினைக்கிறேன். என்றாலும் குடும்பமாய் குழந்தைகளையும், லக்கேஜையும் சுமந்துகொண்டு நம்பிக்கையாய் பயணம்போகிறவர்களின் உணர்வுகளை ஏன் இவர்கள் கண்டுகொள்வதே இல்லை என்று புரியவில்லை. ஒரு நிதானத்துடன், பயணிகளின் மற்றும் சாலையில் நடக்கிறவர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு ஓட்டும் ஆட்டோ ட்ரைவர்கள் ரொம்பக் குறைவே என்று தோன்றுகிறது. ஒரு அவசரத்துக்கும் செளகரியத்துக்கும் நாம் தேர்ந்தெடுக்கும் இந்த ஆட்டோப் பயணம் காசையும் கொடுத்துவிட்டு கலவரத்தை அடிமடியில் கட்டிக்கொண்டு போகும் விஷயமாகவே படுகிறது. மற்ற ஊர்களில் எப்படி என்று தெரியவில்லை. நிஜமாகவே அட்வெஞ்சரில் ஆர்வமுள்ளவர்கள் இங்கே ஒரு சில ஆட்டோக்களை முயன்று பார்க்கலாம்.

"சார் ஆட்டோ வேணுமா?" என்று குரல் கேட்டால் இப்போதெல்லாம் வேகமாய் திரும்பி நடந்துவிடுகிறேன்.

1 comment:

  1. உங்கள் ‘ஆட்டோ’கிராஃப் திகிலூட்டுகிறது சித்ரன் - நல்லவேளையாக எனக்கு ஆட்டோவில் பண இழப்புமட்டும்தான் நேர்ந்திருக்கிறது, யாரும் இப்படி உயிர் பயம் ஏற்படுத்தியதில்லை :)

    - என். சொக்கன்,
    பெங்களூர்.

    ReplyDelete

இந்தப் பதிவைப் பற்றிய உங்கள் கருத்து?