முதல் காதல். முதல் முத்தம். முதல் சமையல்.

இந்த மு.கா, மு.மு இரண்டும் 'ப்யூர்லி பர்சனல்' ஆக இருப்பதால் அதை இங்கே தணிக்கை செய்து விட்டு தலைப்பின் மூன்றாவது விஷயத்துக்கு நேரடியாக வருகிறேன். நான் முதன் முதலில் சமையல் செய்த அனுபவம் கொஞ்சம் விட்டிருந்தால் நாளிதழில் எட்டுப்பக்க செய்தியாக மாறுகிற அபாயம் வரை போனதை யாராவது சொன்னார்களா?

தங்கமணி (மனைவியை இப்படி குறிப்பிடுவது ஜாலியாகத்தான் இருக்கிறது. வாழ்க மணிரத்னம்!) ஊருக்குப் போவதற்கு (சுமார் ஒரு மாதம் வெக்கேஷனாம்) ஒரு வாரம் முன்னரே கொஞ்சம் கிலியால் லேசாய் வயிறு புரள ஆரம்பித்துவிட்டது. சாப்பாட்டுக்கு என்ன செய்யப் போகிறேன்? மூன்று வேளை ஹோட்டலில் சாப்பிடுவதென்பது ஒத்துவராத ஒரு காரியம். ஆக வேறு வழியில்லாமல் நானே சமைத்து நானே சாப்பிட வேண்டிய நிர்பந்தத்திற்கு காலம் என்னைத் தள்ளிவிடப்போகிறதா?

"முதல்ல குக்கரை எடுத்து.." என்ற தங்கமணியை கையமர்த்தித் தடுத்தேன். "எல்லாம் நான் பார்த்துக்கொள்கிறேன் அம்மணி. இதெல்லாம் ஒரு பெரிய விஷயமேயில்லை! நீ எதுவும் சொல்ல வேண்டாம். நான் சமையல் கற்றுக்கொள்வதற்கு இது ஒரு பொன்னான வாய்ப்பு. நானாக கற்றுக்கொண்டு சமையலில் ஒரு கலக்கு கலக்குகிறேன் பார்!. நீ கவலைப்படாமல் ஊருக்குக் கிளம்பு".

தங்கமணி அப்போது பார்த்த பார்வையின் அர்த்தம் அடுத்த நாள் விடியலில் தெரிந்துவிட்டது. முதன் முதலாக வெறிச்சோடிக்கிடந்த சமையலறைக்குள் லேசான ஜேம்ஸ்பாண்ட்தனத்துடன் எட்டிப் பார்த்தேன். ஓ! இதுதான் நான் இனிமேல் இயங்க வேண்டிய களம். இந்தக் குக்கர் எங்கேயிருக்கிறது?. அதோ!. ம்! தங்கமணி சொன்னது என்ன? "முதல்ல குக்கரை எடுத்து...

எடுத்து???

'எங்கே நீ சொல்லவிட்டாய் மானிடா...!! எக்கேடோ கெட்டுப்போ! நீயாச்சு! உன் சமையலாச்சு!' என்று விட்டத்தில் அசரீரி கேட்டது.

என்றோ ஒரு நாள் நண்பர்களுடன் சேர்ந்து கூட்டு முயற்சியாய் சேர்ந்து சமைத்த அனுபவங்களை ஞாபக அடுக்கில் விரட்டி விரட்டி தேடி மனதில் ஒரு சில குறிப்புகள் தயார் செய்துகொண்டேன். இதோ ஆரம்பித்தாயிற்று. ஒரு வழியாய் ஆயத்தங்கள் முடிந்து குக்கர் நீலமாய் எரிகிற அடுப்பின்மேல் உட்கார்ந்திருக்கிறது. இன்னொரு பத்து நிமிடத்தில் சாப்பாடு ரெடி. அதற்குள் ரசம் வைத்து முடித்துவிடலாம். குழம்பு வைப்பதெல்லாம் ஒரு வேலையா என்ன? எல்லாமே தாளித்துத் தாளித்து கொட்டுவதுதானே?. சரி! ரசம். அதற்குத் தேவையான பொருட்கள், உபகரணங்கள் என்னென்ன? முதலில் புளியை ஊறவைத்து பிறகு தக்காளிக் கரைசலில்... என்று கரெக்டாக ஆரம்பித்துவிட்டேன் பாருங்கள்.

நான் தடுத்ததையும் மீறி தங்கமணி "குக்கர் நாலு விசில் அடிச்சா அடுப்பை ஆஃப் பண்ணிருங்க" என்று கோவை எக்ஸ்பிரஸ் கிளம்பும் போது ஜன்னல் வழியே சொன்னது நினைவுக்கு வருகிறது. நான் விசிலுக்காகக் காத்திருந்தேன். இன்னும் வரவில்லை. மாறாக என்ன இது லேசாய் ரப்பர் கருகுகிற வாசம்?. நான் மெதுவாய் குக்கரை அணுகினேன். என்னவோ தப்பு. அதன் மூடி மற்றும் இன்னபிற விஷயங்களைச் சோதித்தேன். நேரமாக ஆக குக்கரின் மகா மெளனம் என்னை சோதிக்க ஆரம்பித்தது. கிட்டத்தட்ட முக்கால் மணி நேரத்துக்கும் மேலாகிவிட்டது. எங்கே விசில்? விசிலடிப்பதெல்லாம் அதற்குப் பிடிக்காதோ என்னவோ..!!

திறந்து பார்த்துவிடலாமா என்று யோசிக்கும்போது.. குக்கரிலிருந்து வரக்கூடாத இடத்திலிருந்தெல்லாம் நீராவி கசிய ஆரம்பித்ததை பார்த்தேன். ஏய்!! என்னிடம் மட்டும் இது என்ன விளையாட்டு? ரப்பர் வாசம் வீடெங்கும் பரவ ஆரம்பித்தது. எனக்கு உடனே தீபாவளியன்று வெடிக்கும் பச்சை நிற அணுகுண்டும், எரிமலை வெடிப்பதற்குமுன் லேசாய் புகைவதும் நினைவுக்குவர... சட்டென்று தீர்மானித்து குக்கர் மூடியை சடால் என்று திறந்தேன். அத்தனை நேரம் அடக்கி வைத்த மகாகோபம் புஸ் என்று நீராவியாய் சீறி முகத்தில் அடிக்க நான் பத்தடி எகிறி நின்றேன். இன்னும் ஒரு ஐந்து நிமிடம் பொறுத்திருந்தால் அது நிச்சயம் வெடித்துச் சிதறியிருக்கக்கூடிய அபாயம் ரொம்ப லேட்டாய் உறைத்தது. இப்போது இன்னும் அதிகமாய் ரப்பர் வாசம்.

சுதாரித்து மெதுவாய் குக்கர் மூடியை ஆராய்ந்தேன். வெப்பம் தாங்காமல் வால்வ் ஓட்டையாகியிருக்கிறது பார்! இத்தனை நேரமாகியும் சாப்பாடு வெந்திருக்கவில்லை. நான் யோசனையாய் நின்றேன். ப்ரெஷர் குக்கர் வேலை செய்யும் முறைபற்றி தீவிரமாய் யோசிக்க ஆரம்பித்தேன். இன்றைக்கு ஹவ் ஸ்டஃப் ஒர்க்ஸ் டாட் காமில் தேட வேண்டும். எங்கேயோ லாஜிக் இடிக்கிறது. பாஃர்முலா வேலை செய்யவில்லை.

வால்வின் ஈயம் உருகி சாப்பாட்டோடு கலந்திருக்கும் என்பதால் இனி அதை வைத்துக்கொண்டு மேற்கொண்டு எதையும் யோசிப்பது உசிதமல்ல என்று பட்டது. இதோ ரசம் கூட இப்போது கொதிநிலைக்கு வந்துவிட்டது. ரசப்பொடியை ஸ்பூனில் எடுக்கும்போதுதான் இந்தக் குக்கரின் அபாய நிலை உணர்ந்து அருகில் போய்ப்பார்த்தது. பொடியை போட்டேனா இல்லையா? திடீர் சந்தேகம்! அப்புறம் ரசத்தை கொஞ்சமாய் கரண்டியில் எடுத்து ருசி பார்க்க.. உவ்வே!

எல்லாவற்றையும் அப்படியே போட்டுவிட்டு வசந்தபவனுக்குப்போய் ரெண்டு இட்டிலி, ஒரு கல்தோசையை உள்ளே தள்ளி பசியாற்றிக்கொண்டேன்.

நலமாய் ஊர் போய் சேர்ந்துவிட்டதாக தங்கமணியிடமிருந்து இரவு போன் வந்தது. பிரயாண செளகரியங்கள் பற்றியெல்லாம் பொதுவாய் கேட்டறிந்துவிட்டு அப்புறம் குரலைத் தணித்துக்கொண்டு மெதுவாய் கேட்டேன். "முதல்ல குக்கரை எடுத்து...சொல்லு.! அப்பறம் என்ன பண்ணனும்?"

No comments:

Post a Comment

இந்தப் பதிவைப் பற்றிய உங்கள் கருத்து?