Showing posts with label ஜாக்கி சான். Show all posts
Showing posts with label ஜாக்கி சான். Show all posts

மறுபடியும் கணேஷ்

இதற்கு முந்தைய வலைப்பதிவில் என் நண்பனுக்குக் கொடுத்தனுப்பிய துண்டுச்சீட்டுக் கடிதம் பற்றி குறிப்பிட்டிருந்தேன். அதன் தொடர்ச்சியாய் ஒரு நிகழ்வு என் வாழ்க்கையில் சம்பவித்ததையும் இங்கே சொல்லிவிடலாம் என்று நினைக்கிறேன். அவன் பெயர் கணேஷ். இடம் உடுமலைப்பேட்டை. கவனிக்க! ஊர், பெயர் மாற்றப்படவில்லை. நான் பத்தாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த சமயம். என் வீட்டுக்கு நாலுவீடு தள்ளி அவன் வீடு இருந்ததாலும், நான் படித்த டியூசன் வாத்தியாரிடமே அவனும் படித்தான் என்பதும் நானும் அவனும் உற்ற நண்பர்களாயிருப்பதற்கு ஒரு சில காரணங்களாயிருந்தன. அப்பொழுதெல்லாம் வீட்டில் எதையாவது சொல்லிவிட்டு, கல்பனா தியேட்டரில் வாராவாரம் மாற்றும் "மிடில் ஷோ" ஆங்கிலப்படங்களை ரெண்டுபேரும் எப்படியாவது பார்த்துவிடுவோம். (அதாவது ஃபர்ஸ்ட் ஷோவிற்கும், செகண்ட் ஷோவிற்கும் நடுவில் ஒரு இடைச்சொருகலாய் ஒரு காட்சி ஓட்டுவார்கள்.) மிக முக்கியமாய் ஜாக்கிசான், ஜேம்ஸ்பாண்ட். இன்னபிற இங்கிலீஷ் ஆக்்ஷன் படங்கள்.

இன்ன தியேட்டர் என்று குறிப்பிட்டு சினிமா போலாமா என்று கேட்டு என் தம்பியிடம் மேற்படி துண்டுச்சீட்டைக் கொடுத்தனுப்புவேன். தம்பிக்காரனும் ஒரு தபால்காரரின் சிரத்தையுடன் அதை கணேஷிடம் ஒப்படைத்துவிட்டு வருவான். கணேஷ் அவன் பெற்றோர்களுடன் அது குறித்து விவாதித்து முடிவெடுத்து அதை அவன் தம்பிக்காரனிடம் எழுதிக்கொடுத்தனுப்பிவிடுவான். இப்படியாக தகவல் பரிமாற்றத்துக்கு தம்பிகளையும், துண்டுப் பேப்பர்களையும் வெகுவாக உபயோகித்து அபிமான குங்ஃபூ படங்களை தவறவிடாமல் பார்த்துக்கொண்டிருந்தோம். எந்த உலகக் கவலைகளின் சுவடையும் மிதிக்காமல், மதிக்காமல் மிக சந்தோஷமான காலகட்டம் அது.

நிற்க!. மேற்படி துண்டுச்சீட்டுகளில் ஒன்றை நான் ஞாபகமாய் பத்திரப்படுத்தி வைத்திருந்தேன். (இது போல் நிறைய உண்டு). ஓரிரு கரப்பான் பூச்சிகள் உள்நுழைந்திருந்த என் பெட்டிக்குள் அது பல வருடம் பாதுகாப்பாய் இருந்தது. கணேஷ் என்கிற என் நண்பன் அதற்கப்புறம் காலம் எட்டி உதைத்ததில் டெல்லிப்பக்கம் போய் விழுந்திருந்தான். பிறகு ஓரிரு வருடங்கள் அப்படியும் இப்படியுமாக கடிதப்போக்குவரத்தில் நட்பு ஓடிக்கொண்டிருந்தது. பிறகு என்ன ஆயிற்றோ தெரியவில்லை. அதுவும் திடீரென்று நின்றுபோய்.. 700 கோடி பேர்களுள் ஒருவனாய் அவன் காணாமல் போய்விட்டான். பெரிய படிப்பு, பெரிய வேலை என்று அவன் எல்லைகளை விஸ்தரித்துக்கொண்டு போனான். கடிகாரத்தை பார்க்கக்கூட சமயமில்லாமல் உழைத்ததில் ஒரு சில உயரங்களை அடைந்திருந்தான் என்று வேறு சில நண்பர்கள் மூலம் தெரிந்துகொண்டேன். நான்தான் அவன் வட்டத்திலிருந்து தொலைந்துவிட்டேன் போல. பிறகு அவன் எங்கேயிருக்கிறான், என்ன பண்ணிக்கொண்டிருக்கிறான் என்று தெரியாமல் ஒரு சில தேடல் முயற்சிகளுடன் நிறுத்திக்கொண்டேன். வருடங்கள் உருண்டன.

அப்புறம் திடீரென்று ஒருநாள் திடுதிப்பென்று என் வாழ்வில் டெக்னலாஜிக்கல் மாற்றங்கள் நிகழ்ந்துவிட்டன. வலது கையில் மெளசும் இடது கையில் கீபோர்டுமாக கம்ப்யூட்டர் திரையை வெறித்துப்பார்க்கும் வேலையொன்று எனக்கு அமைந்துவிட்டது. அந்தப்பக்கம் இந்தப்பக்கம் அசையவிடாமல் என் இருக்கையைச்சுற்றி இன்டெர்நெட்டும் வலை பின்னத்தொடங்கியிருந்தது அதன் மகா ஆச்சரியப்பக்கங்களை விலக்கி விலக்கி தேடிக்கொண்டிருந்தபோது கண்ணில் பட்டது ஒரு வலைத்தளம். அலும்னி டாட் நெட்! வாழ்க்கையில் தொலைந்து போன உங்கள் மனதிற்கினிய க்ளாஸ்மேட்டுகளை இந்த வலைத்தளத்தின் மூலம் கண்டுபிடிக்க முடியும் என்று பறைசாற்றுகிற அதை முதன் முதலில் பார்த்தபோது கணேஷ் ஞாபகம்தான் வந்தது. உடனே விரல்கள் பரபரப்பாகி அந்த வலைத்தள கடலுக்குள் டைவ் அடித்துவிட்டேன். ஆனால் ஒன்று நினைவு வந்தது. அவன் என் க்ளாஸ்மேட்டும் அல்ல. அப்புறம் எப்படி கண்டுபிடிப்பது? இருந்தாலும் விடாமுயற்சியுடன் தேடியதில் கணேஷ் என்கிற பெயர் ஒரு விவரப்பக்கத்தில் அகப்பட்டது. ஆயிரம் கணேஷ்களில் அவன்தானா அது? தெரியாது. 50-50. இருந்தாலும் என்ன கெட்டுப்போயிற்று என்று அங்கே கிடைத்த மின்னஞ்சல் முகவரிக்கு கீழ்க்கண்டவாறு எழுதினேன். "நீ நெல்லுக்கடை வீதி முக்கு வீட்டுல குடியிருந்த கணேஷ் எனில் பதில் எழுதவும். இல்லையேல் சிரமத்திற்கு மன்னிக்கவும்."

இண்டர்நெட் என்கிற வேதாளம் எப்படி பாதாளம்வரை பாய்கிறது என்பதை கண்கள் விரிய, மயிர்கால்கள் சிலிர்க்க கண்ணுற்ற சம்பவம் மறுநாள் நிகழ்ந்தேவிட்டது. "நான் அதே கணேஷ்தான். நீ எங்கடா இருக்கே?" என்று பதில் வந்திருந்தது. துண்டுச்சீட்டு, மிடில் ஷோ ஜாக்கிசான் இன்னபிற விஷயங்களை லேசாய் கேட்டு அவன்தான் என்று உறுதிப்படுத்திக்கொண்டேன். உட்கார்ந்த இடத்திலிருந்து அவனைக் கண்டுபிடித்துவிட்ட ஆச்சரியம் ஒரு இரண்டு மூன்று நாட்களுக்கு இருந்தது. என்னிடம் அவன் பிடிபட்டபோது பக்ரைனில் இருந்தான். கல்யாணமாகி ரெண்டு குழந்தைகள் என்றான். உடனே அவன் குடும்பப் புகைப்படங்களை JPG -களாக ஆன்லைனில் பகிர்ந்துகொண்டான். என் புகைப்படங்களையும் கேட்டிருந்தான். அனுப்பிவைத்தேன். கூடவே பல வருடங்களுக்கு முந்தைய அந்தத் துண்டுச்சீட்டை ஸ்கேன் பண்ணி அவனுக்கு அவனுக்கு மின்னஞ்சலில் அனுப்பிவைத்தேன். அதில் லேசாய் கசங்கியிருந்த இங்க் பேனாவால் எழுதப்பட்ட அவன் கையெழுத்து. "ஞாபகமிருக்கிறதா?" என்று ஒற்றை வரியில் கேட்டிருந்தேன். மறுநாள் பதில் வந்தது. "எப்படி மறக்கமுடியும்? கல்பனா தியேட்டர்ல மிடில் ஷோ போன கதைகளை அடிக்கடி ஒய்ஃப் கிட்ட சொல்வேண்டா!"

அது சரி!!

இப்போது ஜப்பானில் இருக்கிறானாம். ஜாக்கிசானை அப்ப நேர்ல பாத்தா கேட்டதா சொல்லு என்றேன். சிரித்தான். கணேஷ் இப்போது எப்போதும் ஆன்லைனில்தான் இருக்கிறான். எப்போதும் அவன் ஸ்டேட்டஸ்ஸில் பிஸி என்று இருப்பதை காணமுடிகிறது. நல்லது. அதனால் என்ன? இப்போது அவன் என் பக்கத்திலேயே அல்லது பக்கத்து வீட்டிலேயே உட்கார்ந்துகொண்டிருப்பதுபோன்ற உணர்வு. எப்போதாவது ஹாய் சொன்னால் நிச்சயம் வந்து பேசுகிறான். அதுபோதும். இதைக்கூட இப்போது அவன் படித்துச் சிரித்துக்கொண்டிருக்கலாம்.

அவன் மறுபடி என்னிடமிருந்து தொலைந்து போகாமலிருக்க எல்லாம் வல்ல அருள்மிகு இண்டர்நெட்டேஸ்வரன் திருக்கோயிலுக்கு நேர்ந்திருக்கிறேன்.