Showing posts with label வார இதழ்கள். Show all posts
Showing posts with label வார இதழ்கள். Show all posts

கிழித்த கதை


ஷெல்ஃப்பில் எதையோ தேடிக்கொண்டிருந்தபோது ஒரு பழைய கிழிந்த லெதர் பை ஒன்றில் ஒரு கத்தையாக கொஞ்சம் சிறுகதைகள் கிடைத்தன. பதினைந்து வருடங்களுக்கு முன் குமுதம், விகடன், சாவி இதழ்களிலிருந்து கிழித்துத் சேர்த்துவைத்த சிறுகதைகள். கொத்துக் கொத்தாக ஸ்டேப்ளர் செய்யப்பட்டு ‘பைண்ட் செய்து வைக்கவேண்டும்’ என்கிற எண்ணம் வருடக்கணக்கில் புறக்கணிக்கப்பட்டு, தாள்கள் பழுப்பேறிச் சிதைந்து, திறந்ததும் குப்பென்று மூச்சுத் திணறவைக்கும் நெடியுடன் கிடந்தன.

குமுதத்திலும், விகடனிலும் சிறுகதைகள் அதிக அளவில் வெளியிடப்பட்டுக் கொண்டிருந்த பொற்காலம் அது. சுஜாதா, பாலகுமாரன், சுபா முதற்கொண்டு பிரபல எழுத்தாளர்கள் அனைவரும் மானாவாரியாக எழுதிக்கொண்டிருந்த நேரம். பொதுவாகவே சிறுகதைகள், தொடர்கதைகள் படிக்கிற ஆர்வத்துடன் ஒரு கூட்டமாக நாங்கள் (நான், சரசுராம், மீனாட்சி சுந்தரம், ஷாராஜ், கனகராஜன்) அலைந்துகொண்டிருந்தோம். கதைகளைப் படிப்பதும், படித்தபிறகு அவைகளைப் பற்றியும், கதாசிரியர்களைப் பற்றியும் பெருமளவில் விவாதித்துத் திரிந்த நாட்கள் ரம்மியமானவை.

சுமார் அறுபது கதைகள். சிறந்த சிறுகதைகள் என்று கிழித்து வைத்துக் கொண்டதா என்று கேட்டால் தெளிவாக நினைவில்லை. நல்லதாய் ஒரு சிறுகதையை எப்படி எழுதுவது என்கிற தேடலில் இந்த மாதிரி நிறைய கிழித்து வைக்கிற பழக்கம் எங்கள் எல்லோருக்கும் இருந்தது. இதில் சிறுகதை, குறுந்தொடர், நாவல் எல்லாம் அடங்கும். அரஸ்-ஸின் அட்டகாச ஓவியங்களுக்காகவே சுஜாதாவின் என் இனிய இயந்திராவையும், மீண்டும் ஜீனோவையும், அப்புறம் கோவி மணிசேகரன் நாவல் ஒன்றையும் கிழித்துச் சேர்த்திருந்தேன். கமலஹாசன் ஸ்டில்லுகளுக்காக விக்ரம் தொடர். இது மாதிரி நிறைய. என்னிடமிருக்கிற இந்த கதைக் கொத்தை கிழித்துத் தொகுத்தவர் சரசுராம். எப்படியோ கைமாறி என்னிடத்தில் வந்து கிடக்கிறது.

இந்த சேகர சாகரத்தில் என்னதான் இருக்கிறதென்று மூச்சை இறுக்குகிற நெடியை பொறுத்துக் கொண்டு திறந்து பார்த்தேன். பெரும்பாலும் சிறுகதைகள்தான் இருந்தன. “என் பெயர் அருண்குமார்” என்ற சாருப்ப்ரபா சுந்தரின் (நான் விரும்பிப் படித்த எழுத்தாளர் இவர்) தொடர்கதை. பாலகுமாரன், மாலனின் ஒரு சில கதைகள். அப்புறம் ராஜேஷ்குமார், சுபா, சுப்ரபாரதிமணியன், தனுஷ்கோடி ராமசாமி, சு. சமுத்திரம், பிரதிபா ராஜகோபாலன், அனுராதா ரமணன், பட்டுக்கோட்டை பிரபாகர் ஆகிய எல்லோரும் அடக்கம்.

நாகா என்றொரு எழுத்தாளரின் சில கதைகள். கே.சித்ராபொன்னி என்பவரின் கதைகள் நிறைய இருந்தன. (இப்போது எழுதுகிறாரா?) பா.ராகவனின் கதை ஒன்று. அதுதவிர பெரும்பாலான கதைகள் அதிகம் பிரபலமாகாத, பெயர் கேள்விப்படாத எழுத்தாளர்களால் எழுதப்பட்டிருந்தது. தமிழிணி, இள.அழகிரி, ஜெரா, தார்க்‌ஷியா இப்படியாக. பவதாரிணி என்பவர் எழுதிய ரூ.5000 பரிசு பெற்ற கதை ஒன்றும் இருந்தது.

வித்யா சுப்ரமணியம், எஸ்.பி. ஹோசிமின், சங்கர்பாபு, திருவாரூர் பாபு போன்ற அடிக்கடி கண்ணில் படுகிற எழுத்தாளர்களும் இந்தக் கலெக்‌ஷனில் ஒளிந்திருந்தார்கள். இதில் பரசுராம் பிஸ்வாஸ் என்றொரு எழுத்தாளரும் இருக்கிறார். இவர் குமுதத்தில் விகடனில் ‘புதிய ஆத்திச்சூடி கதைகள்’ என்று ஒரு தொடர் எழுதிக்கொண்டிருந்தார். குமுதத்தில் விகடனில் பணிபுரிகிற யாரோ ஒருவர்தான் (அல்லது பலர்) இந்த புனைபெயரில் எழுதிக்கொண்டிருந்தார்(கள்) என்றொரு அரசல் புரசல் இருந்தது. யாராக இருந்தாலும் அற்புதமாய் எழுதிக்கொண்டிருந்த எழுத்தாளர் இவர்.

ஜெ, அரஸ், ம.செ, மாருதி, ராமு, கரோ போன்ற ஓவியர்கள் இந்தக் கதைகளுக்கு படம் வரைந்திருந்தார்கள். மருது, ஜி.கே.மூர்த்தி, ஸ்யாம் கூட இருந்தார்கள். அட்டகாசமாக வரைந்துகொண்டிருந்த அரஸ்-ஸூக்கு ஒரு கட்டத்தில் என்ன ஆயிற்று என்றே தெரியவில்லை. திடீரென்று கானா மூனாவென்று வரைந்து தள்ள ஆரம்பித்தார். இந்த இடைவெளியில் கச்சிதமாக உள்ளே நுழைந்தவரான கரோவும் (கிட்டத்தட்ட அரஸ் சாயலிலேயே) சளைக்காமல் எண்ணற்ற கதைகளுக்கு அருமையாய் படம் வரைந்து தள்ளிக் கொண்டிருந்தார். இன்னும் சில வருடங்கள் வைத்திருந்தால் உடைந்து உதிர்ந்துவிடும் என்பதுபோல் வெடவெடவென்றிருக்கிற இந்த சாணிப் பேப்பர்களில் இந்த ஓவியர்களின் பழைய ஓவியங்களை மறுபடி பார்க்கக் கிடைப்பது அழகான விஷயம்.

ஆதவனின் ’புறாக்கள் பறந்து கொண்டிருக்கும்’ என்கிற கதை இரண்டு பாகங்களாய் இந்தத் தொகுப்பில் இருக்கிறது. ஆதவனின் சிறுகதைகள் அனைத்தையும் திரட்டி “ஆதவன் சிறுகதைகள்’ என்கிற புத்தகமாக கிழக்கு பதிப்பகம் வெளியிட்டபோது இந்தக் கதையும் இருக்கிறதா என்று பா.ராகவனிடம் ஒருமுறை கேட்டது நினைவுக்கு வந்தது. அதிகபட்சமாக எல்லாக் கதைகளையும் முடிந்தவரை திரட்டிப் போட்டுவிட்டதாக அவர் சொன்னார். அந்த தொகுப்பிலிருக்கும் “புறா” என்கிற கதைதான் இது என்று ரொம்ப நாளாய் நினைத்திருந்தேன். ஆனால் இப்போது எடுத்துப்பார்த்தபோது அதுவும் இதுவும் வேறு என்பது தெரிந்தது.

வியாபார மயமாகிப் போன பிரபல பத்திரிக்கைகளில் சிறுகதைகள் வெளியிடுவது அரிதாகிப் போன இந்தக் காலத்தில், நைந்து போன இந்தப் பேப்பர் கற்றையை எடுத்துப் பார்க்கும்போது தும்மல் கலந்த பெருமூச்சொன்று வருகிறது. முகத்தில் கர்ச்சீப் கட்டிக்கொண்டாவது இதில் உள்ள கதைகளை மறுபடி பொறுமையாய் உட்கார்ந்து முழுதாய் படித்துப் பார்க்கவேண்டும்.