இந்தியா சுடர் – கல்விக்காக ஏற்றப்பட்ட தீபம்

ஒரு மழைநாளில் ஒரு இனிய மெல்லிசை கேட்பதைவிடவும், சரவணபவனில் சாம்பார் வடையை ரசித்து ருசித்துச் சாப்பிடுவதைவிடவும், கவிழ்ந்து படுத்து ஒரு புதினம் படிப்பதைவிடவும், ஒரு சிறுகதையோ வலைப்பதிவோ எழுதுவதைவிடவும் ஒரு மகிழ்ச்சியும் நிறைவும் திருப்தியும் நேற்று கிடைத்தது.

ராயபுரத்திலும், தண்டையார்ப்பேட்டையிலும் ஆக இரு அரசினர் குழந்தைகள் காப்பக மாணவர்களுக்கு எங்கள் அலுவலக நண்பர்கள் நோட்டுப்புத்தகங்கள், பென்சில், பேனா போன்றவைகளை வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன். இதை ஏற்பாடு செய்திருந்தது இந்தியா சுடர் எனும் NGO. நண்பர்களும் நானும் ஆக ஒரு சுபயோக சுபதினத்தில் இந்தியா சுடரில் உறுப்பினரான கையோடு உருப்படியாய் ஏதாவது செய்ய வேண்டுமென்று யோசித்ததின் விளைவாக மேற்கண்ட நிகழ்ச்சி.

இந்தியா சுடர் - ஒரு அரசு சாரா தொண்டு நிறுவனம். இந்தியா முழுவதும் உள்ள வசதியற்ற மாணவர்களுக்கு கல்விக்கான உதவிகளைச் செய்வதற்காக இளைஞர்களால் ஆரம்பிக்கப்பட்ட நிறுவனம். இதன் நிறுவனர்கள் உதய் மற்றும் சற்குணன் மற்றும் சில எனெர்ஜிடிக் இளைஞர்கள் தன்னலமற்ற நோக்கோடு தனது நேரத்தையும் பணத்தையும் செலவு செய்யும் இவர்களை ஒரு வரியில் பாராட்டுவதென்பதெல்லாம் இயலாத காரியம். அவ்வளவு செய்கிறார்கள்.

இந்தியா சுடரின் உறுப்பினர்கள் அனைவருமே ஏதாவது ஒரு நிறுவனத்தில் வேலை செய்துகொண்டே அவ்வப்போது ஓய்வு நாட்களில் தங்களால் இயன்ற அளவு உதவிகளைச் செய்து வருபவர்கள்தான். அது சிறு துரும்பாயினும் இந்தியாவின் எங்கோ ஒரு மூலையில் வசதியற்ற ஏதோ ஒரு சிறுவனோ அல்லது ஒரு சிறுமியோ கல்வி கிடைக்கப்பெற்று அவர்கள் அதன் மூலம் தன் வாழ்க்கையை புதுப்பித்துக் கொள்ளமுடிகிறதென்பது அருமையான விஷயம். மீனைத் தருவதற்கு பதில் மீன் பிடிக்கக் கற்றுத் தருதல்.

நலிந்த நிலையிலிருக்கும் அரசு பள்ளிகளை, குழந்தைகள் இல்லங்களைத் தேடியறிந்து அங்கே உள்ள மாணவர்களுக்குத் கல்விக்குத் தேவையானதை இந்தியா சுடர் செய்கிறது. ஆசிரியர் இல்லாத பள்ளிகளுக்கு ஆசிரியர்களை நியமித்துக் கொடுக்கிறது. கஷ்டப்படும் குடும்பங்களில் வாழும் மேற்படிப்புக்கு வசதியில்லாத மாணவர்களைக் கண்டறிந்து அவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்கிறது. இதன் பணிகள் தமிழ்நாட்டில் மட்டுமில்லாமல் இந்தியா முழுக்க விரவி நிற்கிறது. இதுவரை என்னவெல்லாம் செய்திருக்கிறார்கள் என்பதை கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்தியா சுடரின் தளத்திற்குச் சென்று அறிந்து கொள்ளலாம்.

சென்னையில் ராயபுரம் மற்றும் தண்டையார்ப்பேட்டை பகுதியில் உள்ள இல்லங்களில் சிறார்களைச் சந்தித்தது ஒரு வித்தியாசமான அனுபவம். இவர்களில் சிலர் பெற்றோர்களை இழந்தவர்கள். சில பேர் வீட்டை விட்டு எதற்காகவோ ஓடிவந்து பின் பெற்றோருடன் சேரமுடியாதவர்கள். சில பேருக்குப் பெற்றோர் இருந்தும் வறுமை காரணமாக தங்களால் பார்த்துக்கொள்ள முடியவில்லையென இந்த இல்லங்களில் விடப்பட்டவர்கள்.

ஒரு ஐநூறு குழந்தைகளுக்காவது இந்த வருடப் படிப்பிற்காக நோட்டுப்புத்தகங்கள் வழங்கவேண்டும் என்பது எங்கள் திட்டமாக இருந்தது. ஆளுக்கு ஐம்பது அல்லது நூறு ரூபாய் கொடுத்தால் போதும் என்று ஆரம்பித்து நாங்கள் நினைத்ததை விடவும் அதிக தொகை சேர்ந்தது. அலுவலக நண்பர்கள் தாராளமாக நன்கொடை தந்து உதவினார்கள். இதில் ஒவ்வொரு துளியும் சரியாகத் திட்டமிடப்பட்டு சென்னையிலுள்ள ஆறு அரசினர் மாணவர் இல்லங்களுக்கு நோட்டுப் புத்தகங்களாக சரியான முறையில் பட்டுவாடா செய்யப்பட்டுவிட்டது. இதை உற்சாகமாக முன்னின்று செயல்படுத்தியதில் நண்பர்கள் ஜான், தீனதயாளன், கார்த்திக், இங்கர்சால், பாலசரஸ்வதி, ப்ரேம், செந்தில், இந்தியா சுடர் தளபதிகள் உதய் மற்றும் சற்குணன் மற்றும் அனைத்து அலுவலக நண்பர்களும் இந்த நிகழ்வை சாத்தியமாக்குவதற்குக் காரணமாக இருந்தார்கள்.

மாணவர்களில் ஒரு சில பேர், தாங்கள் நன்றாகப் படித்து நிறைய மதிப்பெண்கள் வாங்கும் பட்சத்தில் மேற்படிப்புக்கு உதவுவீர்களா என்று கேட்டது நல்ல விஷயமாகப் பட்டது. படிப்பார்வம் கொண்ட இவர்களுக்கு நிச்சயம் உதவி செய்யலாம். எந்த வசதியுமில்லாமல் படித்து பத்தாம் வகுப்பில் 84% எடுத்த பையனொருவனைப் சந்தித்தோம். இன்னொரு சிறுவன் இந்த இல்லத்தில் தங்கி படித்துக்கொண்டே, வெளியில் வேலைக்குப் போய் அதில் கிடைத்த சொற்பப் பணத்தில் ஆயிரம் ரூபாயை வீட்டுக்கும், ஆயிரம் ரூபாயை அந்த இல்லத்திற்கு நன்கொடையாகவும் அளித்திருக்கிறான். சின்ன உருவம். பெரிய மனது.

இந்தியா சுடருக்கு வந்து சேரும் நன்கொடைத் தொகைகளின் ஒவ்வொரு பைசாவும் வழங்கியவர் பெயரோடு அதன் இணைய தளத்தில் கணக்கு வழக்குகளோடு வெளியிடப்படுகிறது. தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, அஸ்ஸாம் என்று வகை பிரித்து இதுவரை செய்து முடித்த ப்ராஜக்டுகளின் விவரங்களும் இருக்கின்றன. தன்னை இன்னும் விரிவாக்கும் பொருட்டு இணைய சாத்தியங்களான ட்விட்டர், ஃபேஸ்புக், பிகாஸா வெப், ஆர்குட் என்று சகலத்திலும் இணைந்துள்ளதுடன், உறுப்பினர்களுக்கு இதன் அனைத்து செயல்பாடுகளும், தகவல்களும் யாஹூ குழுமம் மூலமாக உடனடியாகத் தெரிவிக்கப்படுகின்றன.

நம் பாக்கெட்டிலிருந்து வெளிப்படும் வெறும் ஒரு நூறு ரூபாயானது மற்றவர் வாழ்வில் எவ்வளவு பெரிய வித்தியாசத்தை அளிக்கிறதென்று நேற்று மனப்பூர்வமாய் உணர்ந்துகொண்டேன்.

மேலும் விவரங்களை இந்தியா சுடரின் தளத்திலிருந்து அறியலாம் :
http://www.indiasudar.org
http://picasaweb.google.com/indiasudar

1 comment:

  1. மிக அருமை….எளிமையான விளக்கமும் வார்த்தைகளும்.
    சேவை தொடரட்டும்…தொடரும்

    ReplyDelete

இந்தப் பதிவைப் பற்றிய உங்கள் கருத்து?