மிளகாய்ப் பொடியும் மாங்கொட்டையும்


முன்பெல்லாம் பைக்கில் போகும்போது யாராவது லிஃப்ட் கேட்டால் உடனே எனது கருணை உள்ளம் விழித்துக் கொண்டு வண்டியை நிறுத்துவேன். சில போலீஸ்காரர்கள் வண்டியை கைகாட்டி நிறுத்தி அது அவருடைய சொந்த வாகனமேபோல் ஏறி உட்கார்ந்துகொண்டு ’அந்த பூத்தாண்ட விட்ருங்க’ என்று உரிமையாகச் சொல்வார்கள். அவர் கையிலோ சட்டைப் பாக்கெட்டிலோ வைத்திருக்கும் வாக்கி டாக்கியானது சகிக்க இயலாவண்ணம் இடையிடையே ஒரு பாம்புச் சீறல் சப்தத்துடன் அடித்தொண்டையில் கமறிக்கொண்டிருக்கும். அதே போல பெரியவர்கள் யாராவது கை காட்டினால் நிறுத்திவிடுவேன். சில டாஸ்மாக் பயனர்களும் அதில் அடங்குவர். (அதாவது அடங்க மாட்டார்கள்).

எனது கோவை நண்பரொருவர் ஒரு சம்பவத்தைச் சொன்னார். கோவையில் அவர் பைக்கில் போய்க்கொண்டிருக்கும்போது லிஃப்ட் கேட்டிருக்கிறார் ஒரு டிப்டாப்(!) ஆசாமி. இவரும் கொடுத்திருக்கிறார். ஒரு இருட்டான இடம் வந்ததும் ’இங்கே இறங்கிக் கொள்கிறேன்’ என்று நிறுத்தச் சொல்லி நண்பர் சுதாரிப்பதற்குள் அவர் கண்களில் ஆச்சி மிளகாப் பொடியைத் தூவி அவரை ஸ்தம்பிக்க வைத்து கத்தி முனையில் பர்ஸ், செயின் முதலானவற்றை வழிப்பறி செய்யப்பார்க்க, ஏற்பட்ட எரிச்சலில் சடாரென்று நடுரோட்டில் வண்டியை சைடு ஸ்டாண்ட் போட்டு இறங்கி கத்திவாலாவை நண்பர் நையப் புடைக்க ஆரம்பித்தாராம். அவனைக் கீழே தள்ளி மிதி மிதியென்று மிதித்து பிறகு அவ்வழியே வந்த ஒவ்வொருவராக இக்காட்சியைக் கண்ணுற்று தன் பங்குக்கு ’பொதுமாத்துக்’கலையை பயில ஆரம்பித்தார்களாம். இத்தனைக்கும் நண்பர் சீனாவிலுள்ள ஷாலின் டெம்பிளின் முப்பத்தாறு சேம்பர்களில் எந்த ஒன்றிலும் மழைக்குக் கூட ஒதுங்காதவர். ஆனால் மரண அடி கொடுத்தாராம்.

’அதனால யாருக்கும் லிஃப்ட் குடுக்கவே குடுக்காதீங்க” என்று அறிவுறுத்தினார். அசிடிட்டி காரணமாக எனக்கு மிளகாய்ப் பொடி அவ்வளவாக ஒத்துக்கொள்ளாது என்பதால் நிறைய யோசித்து பாதுகாப்புக் காரணங்களை முன்னிட்டு இனிமேல் யாருக்கும் லிஃப்ட் கொடுப்பதில்லை என்று தீர்மானம் நிறைவேற்றினேன்.

அதன் பிறகு என் வண்டிக்கு முன் நீண்ட கரங்கள் அனைத்தும் தோல்வியுடன் கீழே விழுந்தன. யார் கட்டை விரலை உயர்த்திக் காட்டினாலும் ஒரு தலையசைப்பைக் கூட வழங்காமல் விர்ரென்று ஸ்பீடைக்கூட்டிப் போய்விடுவேன்.

இன்று காலை ஒரு சாலைத் திருப்பத்தில் என் ஹோண்டா ஆக்டிவாவைத் திருப்பும்போது ஒரு எட்டுவயது மதிக்கத்தக்க ஒரு அழுக்கான பையன் ‘ண்ணா ..ண்ணா’ என்று கை நீட்டினான். ‘அங்க விட்ருங்கண்ணா..’ என்றான். நான் எனது லிஃப்ட் மறுப்புக் கொள்கையைத் தளர்த்தாமல் ஆக்ஸிலரேட்டரை முறுக்க அவன் வலது கையில் பிடித்திருந்த மாங்கொட்டையைச் சப்பியபடி கூடவே ஓடிவந்தான். திருப்பம் என்பதால் நான் வண்டியின் வேகத்தைக் குறைத்திருக்க அவனுக்கு வசதியாகப் போய்விட்டது. ஓடும் வண்டியைப் பிடித்து ஏறப்பார்த்தான். எனக்குப் பதறிவிட்டது. எங்கேயாவது விழுந்துவிடப்போகிறானே என்று வேகத்தை இன்னும் குறைத்த மறுகணம் லாகவமாக ஏறி பில்லியனில் உட்கார்ந்துவிட்டான்.

ஏறி உட்கார்ந்த மறுகணம் அவன் என் இடுப்பைப் பிடித்துக்கொள்ளப் பார்க்க, “எலேய்.. என்னப் புடிக்காம உக்காரு.. எங்கடா போணும்?” என்றேன். நான் நெளிய என் வாகனமும் நெளிந்தது. அவன் கையில் மாம்பழச்சாறு முழங்கை வரை வழிந்துகொண்டிருந்தது. நான் போட்டிருந்ததோ வெள்ளை நிறம் கலந்த ஒரு டீ-சர்ட். கறை நல்லதுதான். ஆனால் போகாது.

அடுத்த திருப்பத்தில் இறங்குவான் என்று பார்த்தால் அவன் பயணம் முடிவிலியாக இருந்தது. எனக்கு கவனம் முழுக்க அவன் மாங்கொட்டையில் மையம் கொண்டிருந்தது. திடீரென்று முப்பது கிமீ வேகத்தில் செல்லும் என் வாகனத்தை ஓவர்டேக் செய்து ஏதோ ஒரு வஸ்து மஞ்சளாக வந்து விழுந்ததைக் கவனித்தேன். வேறொன்றுமில்லை. தன் கடைசி ருசிவரை உறிஞ்சப்பட்ட மாங்கொட்டைதான். அடுத்ததாக அவனுக்கு தன் கையை என் டீசர்ட்டில் துடைக்கும் எண்ணம் உதிக்கும் முன்னே சட்டென்று நிறுத்தினேன். ‘எறங்கிக்கடா.. நான் இங்கே எறங்கணும்..”

அவன் நிறுத்திவிட்டு “தாங்ஸ்ண்ணா..” என்று குதிநடை போட்டு இலக்கில்லாமல் அடுத்த சந்தில் திரும்பினான்.

அவனை நிறுத்தி “எப்டியோ.. என் சட்டை பூரா மாம்பழக் கையத் தொடச்சிட்ட..” என்றேன்.

’இல்லண்ணா..’ என்று சொல்லிவிட்டு தொள தொள பாக்கெட்டில் கைவிட்டு எதையோ எடுத்தான். அவன் கை கொள்ளாத இன்னொரு பெரிய மாம்பழம். அதை பந்து போல தூக்கிப் போட்டுப் பிடித்துக் கொண்டே சினிமாவில் க்ளைமேக்ஸில் வருவது போல ஆடியன்ஸூக்கு முதுகைக் காட்டியவாறு நடந்து போய்க்கொண்டேயிருந்தான்.

நான் ஏரிக்கரை மேலிருந்து..

சென்னையில் மடிப்பாக்கம் என்னும் ஊர் உண்டு. அதில் ஓர் ஏரி உண்டு. சுமார் முக்கால் கிலோமீட்டர் நீளம். இந்த ஏரிக்கரையில், ஒரு காலத்தில் அந்தப் பகுதியில் குடியிருப்பவர்களைத் தவிர வேறு ஆள் நடமாட்டமில்லாமல் இருக்கும்.  இப்போது அதே ஏரிக்கரை வேறு மாதிரி உருக்கொண்டுவிட்டது.

மக்கள் மேல் அக்கறை கொண்ட இந்தப் பகுதியின் கவுன்சிலரோ யாரோ ஏரிக்கரையோரமாக இருந்த சாலையை சரி செய்து, மின் கம்பங்கள் அமைத்து, பெஞ்சுகள் போட்டு மெருகூட்டியதில் அதிகாலையில் வாக்கிங், ஜாக்கிங் என களைகட்ட ஆரம்பித்தது. மாலையில் ஏகப்பட்ட குடும்பங்கள் காற்று வாங்க அங்கே வர ஆரம்பிக்க ஒரு மினி கடற்கரை போல் மாறிவிட்டது இந்த ஏரிக்கரை.

கூட்டம் சேர்ந்ததும் சூப், காளான் ஃப்ரை, பேல் பூரி, பானிப்பூரி கடைகள் முளைக்கத் தொடங்கின. நடைபாதையில் நடக்க முடியாத அளவுக்குக் கூட்டம்.

இன்று குடும்பத்துடன் ஒரு நடை போய்வந்தேன். கண்ணுக்கெட்டிய தூரம் வரை மக்கள் தலைகள். வரிசையாக டூவீலர்கள், கார்கள். நிறைய கல்லூரி மாணவர்களுக்கு ‘ஹாங்க் அவுட்’ இடமாகவும் இது மாறிக்கொண்டிருப்பதைக் காணமுடிந்தது. ஆனால் அவர்களெல்லோரும் தத்தம் நண்பர்களுடன் வந்திருந்தாலும் ஆளுக்கொரு மொபைலில் ஆழ்ந்திருந்தார்கள்.

ஏரியானது டிசம்பரில் பெய்த பெருமழையின் மிச்சத்தை இன்னும் தன் மடியில் தேக்கிவைத்து மின்விளக்குகளை அழகாய் பிரதிபலித்துக்கொண்டிருந்தது. ஜிலுஜிலுவென்று காற்று வீசியது. ஏரிக்குள் இருட்டில் அசை போட்டபடி எருமைகள் மிதந்தன. நிறைய குப்பைத் தொட்டிகள் இருக்க, காகித, ப்ளாஸ்டிக் குப்பைகள் ஏரிக்கரை சரிவில் பெருமளவில் வீசப்பட்டிருந்ததையும் காண முடிந்தது. அலங்கோலமாக இருக்கும் ஒரு இடத்தை அழகாக்கி மறுபடி அதை வேறுவிதத்தில் அலங்கோலமாக்குவதில் நம் மக்களுக்கு ஈடு இணை கிடையாது.

நடைபாதையில் ஓரிடத்தில் வரிசையாக ஆறு இளைஞர்கள்  உட்கார்ந்திருந்தார்கள். அவர்களை முதுகுப் பக்கமாக நாங்கள் கடக்கும்போது, ஆறு பேர் கையிலும் ஒவ்வொரு மொபைல் இருப்பது கண்ணில் பட்டது. ஆறையும் “லாண்ட்ஸ்கேப்” பொசிஷனில் வைத்திருந்தார்கள். ஆறிலும் ஒரே வீடியோ, ஒரே காட்சி ஓடிக்கொண்டிருந்தது. ஆறுபேரும் அதை வைத்தகண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்தார்கள்.

நான் என் மகனிடம் “ஒரே வீடியோவை தனித்தனியா ஒரே நேரத்துல ஓடவிட்டுப் பாக்கறாங்க. அதுக்கு எல்லோரும் ஒரே மொபைல்ல பாத்தா பேட்டரியாவது மிச்சமாகும்.” என்றேன்.

அதற்கு அவன் “அது வீடியோ இல்ல. மினி மிலிஷியான்னு ஒரு கேம். ஒரே நேரத்துல எல்லாரும் விளையாடறது. குண்டு போட்டுக்கிட்டே சுட்டுக்கிட்டே இருக்கணும். கடைசி வரை யார் தாக்குப் பிடிக்கறாங்களோ அவங்கதான் வின்னு.”

“அதுக்கு அவங்கவங்க வீட்லயே ஒக்காந்து விளையாடலாமில்ல..” என்றேன்.

பிறகு “நாங்கெல்லாம் அந்தக் காலத்துல..” என்று ஆரம்பிக்க வாய் துடித்ததை அடக்கிக்கொண்டேன். அப்புறம் அடுத்த தடவை ஏரிக்கரைக்குக் கூப்பிட்டால் வர யோசிப்பான்.

தேர்ந்தெடுத்த வலைப்பதிவுகள்: ஜவ்வரிசி வடாம், உள் பனியன் மற்றும் ஒரு ரேடியோ விளம்பரம்

http://freetamilebooks.com/ebooks/javvarasi-vadam/
ஜவ்வரிசி வடாம், உள் பனியன் மற்றும் ஒரு ரேடியோ விளம்பரம்” - எனது இந்த வலைப்பதிவுத் தளத்திலிருந்து எடுத்துக் கோர்க்கப்பட்ட பதிவுகளின் தொகுப்பு. இதில் சுமார் ஐம்பது பதிவுகள் உள்ளன. இதை இலவச மின்னூலாக வெளியிட்டிருப்பது Freetamilebooks,com

இதனை PDF, ePub மற்றும் Mobi வடிவங்களில் இங்கே தரவிறக்கிப் படிக்கலாம்.

இந்தப் புத்தகத்தின் ’என்னுரை’-யிலிருந்து:
2004 ஏப்ரல் ஐந்தாம் தேதியை சுபதினமாக பாவித்து வலைப்பதிவு எழுத ஆரம்பித்தேன். ‘புள்ளி’ என்று நாமகரணமிட்டு பொட்டு பூவெல்லாம் வைத்து அமர்க்களமாகத்தான் துவங்கினேன். அப்போதிருந்த சக வலைப்பதிவர்களுடன் போட்டிபோட்டு (அப்போது சுமார் 50 பேர் தேறுவார்கள் என்று நினைக்கிறேன். குறுகிய காலத்திற்குள்ளேயே மளமளவென்று நான்கு ஐந்து பதிவுகள் எழுதிக் குவித்தேன்!) இதோ இத்தோடு பதினொரு வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. பல்லாயிரக்கணக்கான பதிவுகள் எழுதப்பட்டுவிட்டன. (அட எல்லோருடையதையும் சேர்த்துத்தான் சொல்கிறேன்). அதில் என்னுடையது எவ்வளவு என்று பார்த்தால் சற்றேறக்குறைய ஆயிரத்திலிருந்து தொள்ளாயிரத்தைம்பதை கழித்தால் எவ்வளவு வருமோ அவ்வளவு.
எண்ணிக்கையா முக்கியம்? என்ன எழுதினோம் என்பதுதானே முக்கியம் என்று எனக்கு நானே சமாதானம் செய்துகொள்கிறேன். முத்தோ குப்பையோ அவ்வப்போது எதையாவது கிறுக்கிக்கொண்டு, இன்னும் இழுத்து சாத்தப்படாத ப்ளாக்கர் மற்றும் வேர்டுப்ரஸ் கடைகள் உபயத்தில் என் வலைப்பதிவுகள் வாழ்ந்துகொண்டிருக்கின்றன. ஒரு நாளைக்கு தோராயமாக என்னையும் சேர்த்து பதினேழரைப் பேர் பார்க்கிறார்கள்.
‘புள்ளி’ என்ற என்னுடைய வலைத்தளம் தவிர சித்ரன் டாட் காம் மற்றும் “இன்று” தளங்களிலும் அவ்வவ்போது எழுதிக்கொண்டிருந்தேன். ‘இன்று’ என்பது ஒரு கூட்டு வலைப்பதிவு என்பதால் இதைவிட அங்கே வாசகர்கள் ஜாஸ்தி.
ஏன் அதிகம் எழுதுவதில்லை என்று நண்பர்கள் என்னிடம் கேட்கும்போது அதை ஒரு எதிரொலி போல உடனே என்னிடமே கேட்டுவிடுவேன். அப்போது வந்து குதிக்கும் பாருங்கள் சால்ஜாப்புகள்!! அப்பப்பா! எல்லோரும் பொதுவாகச் சொல்கிற காரணமான “எங்க சார்? எதுக்குமே டைமே கிடைக்கறதில்ல” என்ற ஒரு அருமையான சாக்கு இருக்கிறதே! சில சமயம் “ரைட்டர்ஸ் ப்ளாக்” (Writer’s block) என்கிற மிகப்பெரிய சவுகரிய வட்டத்துக்குள் உட்கார்ந்துகொண்டு பெரும்பாலும் வாழ்வாதாரத்திற்கான வேலைகளை மட்டும் சிரமேற்கொண்டிருந்தேன்.
இல்லாத ஒன்றை இருப்பதாகச் சொல்கிற சப்பைக்கட்டு அது என்று எனக்கே தெரியும்தான். ரொம்ப யோசித்துப் பார்த்தால் ஏதோ ஒரு சின்ன ஆயாசம். வாழ்க்கையில் எதையோ தேடி ஓடுகிற அவசரத்தில் “எழுத்துதானே? கிடக்கட்டும் கழுதை!” என்கிற அலட்சியம். இன்னும் பல காரணங்களைச் சொல்லலாம். எதுவும் எழுதாமலே “எழுத்தாளர்” என்கிற பட்டத்தைச் சுமப்பது தர்மசங்கடத்திற்குரியது. ஒரு நாளைக்கு ஐந்து KB கூட எழுதாதவன் எப்படி எழுத்தாளர் என்று சொல்லிக்கொள்ள முடியும்?
“சிறுகதை எழுதுதல்” என்கிற விஷயத்தில்தான் என் எழுத்துலகப் பிரவேசம் நிகழ்ந்தது. முன்னணிப் பத்திரிக்கைகளில் நிறைய சிறுகதைகள் வெளியானதும், கிழக்கு பதிப்பகம் வெளியாடாக ஒரு சிறுகதைத் தொகுப்பு பதிப்பிக்கப்பட்டதும், மின்னூலாக இன்னொரு சிறுகதைத் தொகுப்பை வெளியிட்டதையும் தவிர சொல்லிக்கொள்கிற மாதிரி வேறு கின்னஸ் சாதனைகள் இல்லை.
ஆயிரத்தெட்டு வேலைகளுக்கு நடுவில் ஆயிரெத்தெட்டு வலைப்பதிவுகளும், தொடர்களும், கதைகளும், புத்தகங்களும் எழுதிக் குவிப்பவர்கள் எப்போதுமே எனது மதிப்பிற்கும் பொறாமைக்கும் உரியவர்களாகவே இருக்கிறார்கள். அவர்களுக்கு மட்டும் எப்படி ஒரு நாளைக்கு இருபத்தைந்து மணி நேரம் வாய்க்கிறது?
ஆனாலும் இந்த எழுத்துக் கழுதை கூடவே வருகிற பிராணியாக இருக்கிறது. அதற்கு ஆகாரம், குடியிருக்கக் கொட்டாரம் என்றெல்லாம் கொடுத்து ரொம்பவும் சிஷ்ருஷை செய்ய முடியாவிட்டாலும் ஒரு ஓரமாய் படுத்துக்கிடக்கட்டுமே என்று தோன்றுகிறது. எதையாவது எழுதித் தொலையேண்டா என்று அரற்றுகிற மனக் குரல் இதனால் கொஞ்சம் சமாதானமடையலாம். அப்படியாக சின்னச் சின்னதாக சுவாரஸ்யமாக எதையாவது எழுத வேண்டும் என்கிற எண்ணத்தில் உருவானவைதான் இந்தப் பதிவுகள்.
பல வருடங்களுக்கு முன் மைக்ரோ ப்ளாகிங் ட்ரெண்டெல்லாம் வருவதற்கு முன்னால் எழுதப்பட்டவை என்பதால் இந்தப் பதிவுகள் எல்லாம் கொஞ்சம் நீளமாகவே இருக்கும். மேலும் இதில் நிறைய விஷயங்கள் அந்தந்த கால கட்டத்தைச் சார்ந்தவையாக இருக்கும் என்பது முன்கூட்டிய டிஸ்க்ளைமர்.
கணினி என்பது அலைபேசியாகவும், டேப்லட் ஆகவும் சுருங்கிவிட்ட இந்தக் காலத்தில் இனிமேல் தேவைப்பட்டாலொழிய நீளமான வலைப்பதிவுகள் எழுதுவதில்லை என்பது தீர்மானம். இந்த துரித உணவு உலகில் இரண்டு பேராக்களுக்குமேல் ஒரு வாசகரை உட்கார வைப்பது பாவச் செயல். அப்படிச் செய்தால் அடுத்த ஜென்மத்தில் கிண்டி உயிரியல் பூங்காவில் ஆமையாகப் பிறந்து ஊர்ந்து ஊர்ந்தே நூற்றைம்பது வருடங்கள் வாழவேண்டியிருக்கும்.

இதனால் அறியப்படும் நீதி

அது சினிமாவில் வரும் ஒரு ஸ்டண்ட் காட்சியை ஒத்திருந்தது. இன்று பல்லாவரம் - துரைப்பாக்கம் நெடுஞ்சாலையில் எனக்கு முன்னால் பைக்கில் போய்க்கொண்டிருந்த ஆள் திடீரென சறுக்கி, பைக் சாலையில் பல அடி தூரங்கள் சறுக்க்க்க்க்க்க்கிக்கொண்டே போக, அந்த ஆளும் வண்டியுடனேயே சர்ரென்று சாலையில் தேய்த்தவாறே இழுத்துச் செல்லப்பட்டு பிறகு ஒரு ஏழெட்டுத் தடவை கட கடவென உருண்டார்.
நல்லவேளையாக முன்னாலோ, பின்னாலோ கார்களோ, கனரக வாகனங்களோ எதுவும் இல்லை. நானும் இன்னும் ஓரிருவரும் வண்டியை நிறுத்தி அவரையும், அவர் பைக்கையும் ஓரம் கட்டினோம். அது ஒரு கல்லூரி மாணவன். முழங்கையிலும், முழங்காலும் சிராய்த்து சிவப்பாய் ரத்தத் திட்டுகள். அவனால் இடது கையைத் தூக்க முடியவில்லை. வலி முகத்தில் தெரிந்தது. ப்ராக்சர் ஆகியிருக்கலாம் என்று நினைத்தேன். தலை சுற்றுகிறது என்றான். நான் என் பையனின் கிரிக்கெட் கிட் பேகிலிருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்துக் குடிக்கக் கொடுத்தேன். பாதி மயக்கத்தில் சரிந்தவனை ஒரு லோடு அடிக்கும் மினி டெம்போவில் உட்காரவைத்தோம்.
தெளிந்தபின் ”எதுக்குப்பா இவ்ளோ வேகமா போற?” என்று கேட்டதற்கு, ”ரோட்டில் பள்ளம் இருந்ததை கவனிக்கவில்லை” என்றான். திரும்பிப் பார்த்தபோது பள்ளம் எதுவும் என் கண்ணில் படவில்லை.
உதவி செய்ய வந்த டெம்போ ட்ரைவரும், இன்னொருவரும் அவனை பக்கத்திலிருந்த மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதாகச் சொன்னார்கள். ’நீங்க கிளம்புங்க சார். நாங்க பாத்துக்கறோம்’ என்றார்கள். அவனிடம் ஃபோன் நம்பர் வாங்கிக்கொண்டு கிளம்பும்போது, ’தலைல ஏதாவது அடி பட்டுச்சாப்பா?” என்றேன். “இல்லை” என்றான்.
ஹெல்மெட் அணிந்திருந்தான்.

தொடர்பு எல்லைக்கு வெளியே - சிறுகதைகள் - மின்னூல்


http://freetamilebooks.com/ebooks/thodarbu-ellaikku-veliye/
கிழக்கு பதிப்பகம் வெளியிட்ட ’மனதில் உனது ஆதிக்கம்’ என்கிற எனது முதல் சிறுகதைத் தொகுப்பு தந்த உற்சாகம் மேலும் தொடர்ந்து சிறுகதைகள் எழுதுவதில் கவனம் கொள்ள வைத்தது. நிறைய இல்லாவிட்டாலும் எப்பொழுதெல்லாம் எழுத வேண்டும் என்று தோன்றுகிறதோ அப்போது மட்டுமே பத்திரிக்கைகளிலும், இணையத்திலுமாக எழுதிக்கொண்டிருந்தேன். அப்படி வெளியான சில சிறுகதைகளின் தொகுப்பு இது. இதில் இருபது கதைகள் உள்ளன.
இந்தச் சிறுகதைகளின் கருக்கள் பெரும்பாலும் அகண்ட வாழ்வின் சின்னத் துணுக்குகளால் கோர்க்கப்பட்டவை. எதிர்ப்படுகிற ஏதாவது சம்பவங்களில் கிளர்ந்த சிறு பொறிகள் சிறுகதைகளாய் வடிவம் பெற்றிருக்கின்றன. இந்தச் சிறுகதைகள் கடந்த ஏழெட்டு வருட கால கட்டங்களில் எழுதப்பட்டவை. இந்தத் தொகுப்பை மின்னூலாக வெளியிடுவதில் மகிழ்ச்சி கொள்கிறேன்.
இவைகளை வெளியிட்ட கல்கி, குமுதம், ஃபெமினா தமிழ், நம் தோழி ஆகிய பத்திரிக்கைகளுக்கும், தமிழோவியம்.காம், பதாகை.காம், செந்தமிழ்.காம் ஆகிய இணைய இதழ்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.
தொடர்பு எல்லைக்கு வெளியே - சிறுகதைத் தொகுப்பை இலவச மின்னூலாக தரவிறக்கிப் படிக்க இங்கே சொடுக்கவும்.
மின்னூல் வெளியீடு :http://FreeTamilEbooks.com
உரிமை – கிரியேட்டிவ் காமன்சு. எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.

குறுநூல் - சின்னதாய் ஒரு சிங்கப்பூர் விஸிட்

 சின்னதாய் ஒரு சிங்கப்பூர் விஸிட்
2008-ல் எனக்கு வாய்த்த சிங்கப்பூர் பயணத்தின்போது நான் பார்த்த விஷயங்களை, அனுபவங்களை சிறு சிறு குறிப்புகளாக வலைத் தளத்தில் எழுதினேன். இது என் முதல் வெளிநாட்டுப் பயணம் என்பதால் பின்னொரு நாளில் அந்த இனிய அனுபவங்களை நினைவு கூற வழிவகை செய்யும் வகையில் சும்மா டயரிக் குறிப்புகள் போலத்தான் அவற்றை எழுதிவைத்தேன். ஆனால் பின்னாளில் வாசகர்களால் அதிகம் தடவைகள் பார்வையிடப்பட்ட  பதிவுகளாக இவை இருப்பதைக் கவனித்தேன்.

பின்னர் ’குறுநூல்’ ஐடிவாவை திரு. சொக்கன் சொன்னபோது பேசாமல் இதை குறுநூல் ஆக்கிவிடலாம் என்று தோன்றியது. அவருக்கு என் நன்றிகள். 

இது விலையில்லாப் புத்தகமாக இப்போது கூகுள் புக்ஸில் கிடைக்கும். இதை நீங்கள் டவுன்லோடு செய்தபிறகு மற்றவர்களுக்கும்கூட பகிரலாம்.

சிங்கப்பூர் என்னும் அழகிய நாட்டுக்கு முதல் முறை செல்ல நினைப்பவர்களுக்கு அதன் அதிசயங்களை, சுற்றுலாத் தலங்களை அறிமுகப்படுத்துகிற அளவில் மட்டுமே இந்த நூல் இருக்கும்.

கூகுள் புக்ஸில் இந்த மின்னூலைப் பெற இங்கே க்ளிக்கவும்.

ஆரோக்கியமான உரையாடல்

ஆட்டு தாடி வைத்திருந்த ஒரு நண்பரிடம் 'அப்படியே உங்க தாடி கார்ல் மார்க்ஸ் மாதிரியே இருக்கு' என்று சொல்லப்போக துவங்கியது ஒரு உரையாடல்.

”கார்ல் மார்க்ஸ்க்கு தாடி இப்படி இருக்காது” என்றார்.

“அப்படியா.. இருங்க.. நெட்ல பாத்துரலாம்.”

நான் கூகுளில் கார்ல் மார்க்ஸ் என்று தேட புசுபுசுவென வெண்தாடியுடன் அவர் வேறு மாதிரி இருந்தார். நான் சமாளித்து “அப்ப லெனின்னு நினைக்கிறேன்.”

நல்ல வேளையாக நண்பரின் தாடி லெனினோடு கச்சிதமாகப் பொருந்தியது.

“ஆங்.. மார்க்ஸூன்னு வாய் தவறி தப்பா சொல்லிட்டேன்..”

“கம்யூனிஸம் படிப்பீங்களோ..?”

“நோ.. கத்தி படத்துல இட்லி சமாச்சாரம் அளவுக்குத்தான் தெரியும்.. ”

”புக்ஸ் நிறைய படிப்பீங்களா?”

“நிறைய படிச்சிட்டிருந்தேன்.. இப்ப ரொம்ப கம்மியாயிருச்சு.. ரெண்டு வருஷத்துக்கு முன்னால புக் ஃபேர்ல வாங்கினதெல்லாம் படிக்காம அப்படியே கிடக்குது..”

“எந்த மாதிரி புக்ஸ்?”

“நிறைய தமிழ் நாவல்ஸ்..  சிறுகதைகள்... சுஜாதால ஆரம்பிச்சு, ஆதவன், வண்ணதாசன், அ.முத்துலிங்கம்..”

நான் முடிப்பதற்குள் நண்பர் குறுக்கிட்டு “எஸ். ராமகிருஷ்ணன், ஜெயமோஹன்..” என்று தொடர்ந்தார்.

“ஆமா.. ஆமா..” நான் தொடந்து “சதத் ஹஸன் மாண்ட்டோ..” என்று பீலா விட ஆரம்பிப்பதற்குள்..

”நான்கூட படிப்பேன்”

“எந்த மாதிரி?”

“ஓஷோ, சாருலதா.. இந்த மாதிரி”

“சாருலதாவா அது யாரு.. பெங்காலி ரைட்டரா?”

“தமிழ்தாங்க... சாரு... சாரு”

“நிவேதிதாவா..”

முகத்தில் இருபது வாட்ஸ் சி.எல்.எஃப் பல்ப் எரிந்து “ஆங்.. அவர்தான்..”

“ஓஷோன்னவுடனே ஞாபகம் வருது.. அவரோட ’கிருஷ்ணா எனும் மனிதனும் அவன் தத்துவங்களும்’ படிச்சிருக்கீங்களா?”

“இல்லையே.. நல்லாருக்குமா?”

“தெரியலை.. நானும் படிச்சதில்லை.. கேள்விப்பட்டிருக்கேன்.”

“அவரை மாதிரியே இன்னொருத்தர் இருப்பாரே.. ஜகதீஸ் வாசுதேவன்னு. விகடன்ல எழுதுவார்..”

“ஓஹோ..”

“இந்த மூச்சுக்காத்தை இழுத்து விட்டு.. அதுக்கு என்ன பேரு? அதெல்லாம் சொல்லித்தருவாங்க அவர் சென்டரிலே.. பிரயாணம்-ங்கற மாதிரி வரும்”

“பிராணயாமம்..”

“அதேதான்.. நான் ஒரு வாரமா பண்ண ஆரம்பிச்சிருக்கேன்... எங்கப்பா வளச்சு வளச்சு பண்ணுவார் யோகாசனமெல்லாம்... என்னையும் பண்ணச்சொல்வார்.. ”

“ரொம்ப நல்லது.. என்ஜினீயரா இருந்த என் நண்பர்கூட வேலையை ரிசைன் பண்ணி பல வித யோக நிலைகளைக் கடந்து...”

“யோகியாயிட்டாரா..”

“இல்ல மறுபடி என்ஜினீயரே ஆயிட்டார்..”

நண்பர் பதினெட்டு மூலிகைகள் அடங்கிய மெடிமிக்ஸ் சோப்பால் குளித்தமாதிரி உணர்ந்து ”சரி.. வேலையைப் பாப்போம்..மார்க்ஸ்-ல ஆரம்பிச்சு.. எங்கெங்கேயோ போய் முடிஞ்சிருச்சு பேச்சு.. நல்ல ஹெல்த்தியான கான்வெர்ஷேசன். மேலும் நிறைய பேசுவோம்..” என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார்.

தருணம் - குறுநாவல் - இலவச மின்னூல்

தருணம் என்ற தலைப்பிலான எனது குறுநாவல் இப்போது இலவச மின்னூலாக இங்கே கிடைக்கிறது.
1998 – ல் கல்கி வார இதழில் நான்கு வாரத் தொடராக வெளியான கதை இது. ஒரு சில காரணங்களுக்காக இதன் தலைப்பு மாற்றப்பட்டுள்ளது. 2004–ல் கிழக்கு பதிப்பகம் வெளியீடாக வெளிவந்த ’மனதில் உனது ஆதிக்கம்’ என்ற எனது சிறுகதைத் தொகுப்பில் இந்தக் கதையும் கடைசியாக இடம் பெற்றிருந்தது.
அலைபேசிகளும், இணையமும், மின்னஞ்சலும் பிரபலமடைந்திராத ஒரு காலகட்டத்தில் இதை எழுதினேன். இதில் உலவும் மனிதர்கள் கொஞ்சம் நடைமுறை நிஜங்களும், கொஞ்சம் கற்பனைகளும் சரிவிகிதமாகக் கலந்து படைக்கப்பட்டவர்கள். எந்த ஒரு புனைவையும் முற்றிலுமாக கற்பனையிலிருந்தே வடித்தெடுப்பதென்பதை எந்த எழுத்தாளனும் செய்ய முடியாதுதான். அமோகமாகவோ, அவலமாகவோ ஒவ்வொருவருக்கும் தனித்துவமாக, ப்ரத்யேகமாக அமைந்துவிடுகிற வாழ்க்கை எவ்வகைத் தருணங்களையெல்லாம் அவர்களுக்குக் கொண்டுவந்து தருகிறது? எதை அவர்களிடமிருந்து இரக்கமில்லாமல் சட்டென்று பிடுங்கிச் செல்கிறது? சூழ்நிலைகளின் கனத்தில், சட்டென்று ஒரு கணத்தில் எடுக்கப்படும் முடிவுகள் எப்படி வாழ்க்கையின் போக்கை திசை மாற்றுகின்றன? இவற்றையெல்லாம் இந்தப் புனைவு லேசாய்த் தொட முயற்சிக்கிறது. இதில் நிச்சயம் உண்மையின் துகள்கள் கலந்திருக்கின்றன. ஒரு சாதாரண புனைவுக்கு அசாதாரண உயிர்ப்பைத் தருவது அது மட்டும்தான்.
நான் கேள்விப்பட்ட, நடந்த சம்பவங்கள் கொடுத்த அதிர்வுகளின் ஆதார வரி என் மனதின் அடியுறைக்குள் ஒளிந்துகொண்டு எப்படியோ இதில் வெளிப்பட்டிருக்கிறது என்றுதான் சொல்லவேண்டும். அந்த அதிர்வுகளோடு சேர்ந்து, மனிதர்களின் அன்பும், காதலும், புரியாத உணர்வுகளும், நிஜ வலிகளும் இந்தக் கதையின் வரிகளுக்குள் புதைந்து கிடக்கின்றன. இதைப் படிக்கிறபோது அவைகளில் ஒரு பங்கையாவது லேசாக நீங்கள் உணர்கிறீர்கள் என்றால் இதை எழுதியதற்குக் கிட்டிய வெற்றியாக நான் நினைத்துக் கொள்வேன்.
இதை அன்று வெளியிட்ட கல்கி இதழுக்கும், இன்று மின் புத்தகமாக வெளியிடும் முன்னேர் பதிப்பகத்துக்கும், freetamilebooks.com ஸ்ரீனிவாசன் அவர்களுக்கும் நன்றிகள் பல.
இதை epub, Mobi, PDF ஆகிய வடிவங்களில் தரவிறக்கிப் படிக்க, பகிர: http://freetamilebooks.com/ebooks/tharunam/

ஒப்பணக்கார வீதியிலிருந்து ஒரு வாசகர் கடிதம்

95-ல் என் முதல் கதை கல்கி இதழில் வெளியானபோது எனக்கு ஏற்பட்டது புல்லரிப்பு என்றால், அதற்கு வந்த வாசகர் கடிதத்தை என் முகவரிக்கு ஒரு உறையில் போட்டு கல்கி அலுவலகம் அனுப்பிவைத்தது புளகாங்கிதம் என்று சொல்லலாம். கோவை ஒப்பணக்கார வீதியிலிலிருந்து சந்திரன் என்பவர் கதையை வெகுவாகப் பாராட்டி எழுதியிருந்தார். நானும் அப்போது கோவையில்தான் இருந்தேன். முதல் வாசகர் கடிதம் என்பதால் பத்திரமாக ரொம்ப நாள் அது என் பேகிலேயே இருந்தது.

இந்தக் கடிதம் வந்த ஒரு மாதத்திற்குப் பிறகு நானும் என் நண்பன் சரவணனும் ஒரு சாயங்கால வேளையில் ஒப்பணக்கார வீதிப் பக்கம் ஒரு வேலையாகப் போனோம். வேலை முடிந்து ஒரு பேக்கரியில் தேநீர் குடித்துக் கொண்டிருந்தபோது திடீரென்று சந்திரன் என்கிற அந்த வாசகரின் நினைப்பு வந்தது. பேகிலிருந்து அவரின் அந்தக் கடிதத்தை எடுத்து முகவரியைப் பார்த்தால் பக்கத்தில்தான் எங்கேயோ இருக்கிறார் என்று தெரிந்தது. அலுவலக முகவரி போலும். தொலைபேசி எண்ணையும் கொடுத்திருந்தார். சட்டென்று ஒரு யோசனை வந்தது. சரவணனிடம் அதைச் சொன்னபோது முதலில் தயங்கிப் பின்னர் சரி என்றான். ஒரு சின்ன விளையாட்டு!

சரவணன் ஒரு பப்ளிக் டெலிஃபோன் பூத்திலிருந்து சந்திரனைக் கூப்பிட்டு, தன்னை சித்ரன் என்று அறிமுகம் செய்துகொண்டு அவரிடமிருந்து கடிதம் வந்ததைச் சொன்னான். ”உங்க ஏரியாலதான் இருக்கோம். இப்போ வந்தா உங்களப் பாக்க முடியுமா?” என்று கேட்டான். மறுமுனையில் சந்திரன் ”செம சர்ப்ரைஸ்ங்க.. வாங்க வாங்க..” என்றது எனக்கே கேட்டது.

நாங்கள் போனபோது சந்திரன் அவர் அலுவலகத்தில் எங்களுக்காக ஆவலோடு காத்துக்கொண்டிருந்தார். முன்பே பேசி வைத்துக்கொண்டபடி சரவணன் தன்னை ’சித்ரன்’ என்றும் என்னை ’சரவணன்’ என்றும் அறிமுகப்படுத்தினான். ”நீங்க என்னைப் பாக்க வந்தது ரொம்ப சந்தோஷம்..” என்று சரவணனின் கையைப் பிடித்து இறுக்கமாய்க் குலுக்கினார். என் கையை லேசாக. பின்னர் அலுவலகத்துக்குள்ளேயே அவர் தங்கியிருந்த ஒரு அறைக்கு எங்களைக் கூட்டிச் சென்றார்.

நான் ஒரு ஓரமாய் உட்கார்ந்து அங்கே கிடந்த பாக்யா வார இதழைப் புரட்ட ஆரம்பிக்க, அவர்களிருவருக்குமிடையே குதூகலமாக உரையாடல் தொடர்ந்தது. நான் சிரிப்பைக் கஷ்டப்பட்டு அடக்கிக்கொண்டு உட்கார்ந்திருந்தேன்.

சந்திரன்: “எப்படி உங்களுக்கு இந்த மாதிரி கதைக்கரு எல்லாம் தோணுது?”

சரவணன் (என்னை ஓரக்கண்ணால் பார்த்தபடியே): ”எல்லாம் அப்பப்ப அப்படி அப்படியே தோணும்! எழுதிருவேன்..”

சந்திரன்: ”நிறைய எழுதியிருப்பீங்க போல.. உங்க எழுத்துல ரொம்ப முதிர்ச்சி தெரியுது.”

சரவணன்: “இல்ல இது என் முதல் கதைதான். போனாப் போகுதுன்னு ஏதோ போட்டிருக்காங்க போல கல்கியில..”

சந்திரன்: சேச்சே.. அது அருமையான கதைங்க. திரும்பத் திரும்பப் படிச்சேன்.. என்ன இருந்தாலும் உங்களுக்குத் தன்னடக்கம் ஜாஸ்தி..”

இப்படியே மேலும் ஒரு பத்துப் பதினைந்து நிமிடங்களுக்கு சந்திரன் வீசிய கலை இலக்கிய பந்துகளை சரவணன் சரமாரியாக சமாளித்துக் கொண்டிருந்தான்.

சந்திரன் சட்டென்று “தி.ஜா படிச்சிருக்கீங்களா? நாஞ்சில் நாடன்? நம்மூருதாங்க அவரு” என்பது போன்ற டஃப்ஃபான கேள்விகளின்போது திருதிருவென்று முழித்து பிறகு ஒருவாறு சமாளித்து “பின்னே படிக்காம? என்னமா எழுதுவாங்க!” என்றான்.

சந்திரன்: “நாவல், தொடர்கதை எல்லாம் எழுதற ஐடியா இருக்கா? இல்லை சிறுகதைகள் மட்டும்தானா?”

“எழுதிட்டாப் போச்சு? என்னடா எளுத்தாளர் சித்ரன்.. என்ன சொல்ற!..” என்றான் என்னைப் பார்த்து. ”இந்தா.. இடத்தை மாத்திக்கலாம்.. இதுக்கு மேல முடியல..” என்று எழுந்தான்.

நான் பாக்யாவிலிருந்து நிமிர்ந்து சந்திரனைப் பார்க்க, அவர் புரியாமல் எங்களிருவரையும் மாறி மாறிப் பார்த்தார்.

நான் சிரித்தபடி “ஒரு சுவாரஸ்யத்துக்கு ஒரு சின்ன விளையாட்டு விளையாடலாம்னு நினைச்சோம்.. நாந்தான் சித்ரன். அவன் சரவணன். ஸாரி..” என்றேன்.

புரியாமையிலிருந்து குழப்பத்துக்குள் விழுந்து, சந்தேகத்துக்கு மாறி, ஏமாற்றத்தைத் தொட்டு பின் சட்டென்று விடுபட்ட சந்திரன் முகம் போன போக்கை விவரிக்கவே முடியாது.

”இவந்தான் இந்த ஐடியாவைச் சொன்னான். என்னைத் திட்டாதீங்க..” என்று சரவணன் என்னைக் கை காட்ட..

சந்திரன் உடனே சமாளித்துச் சிரித்து “அதான பாத்தேன்..  ஆரம்பத்திலிருந்தே எனக்கு ஏதோ சரியில்லைன்னு பட்டுச்சு..” என்றார்.

என். சொக்கனின் 'ஏ.ஆர் ரஹ்மான்'

’ஹைவே’ படத்திலிருந்து ஏ.ஆர். ரஹ்மானின் Implosive silence என்கிற இசையைக் கேட்டுக்கொண்டிருந்தபோது நண்பர் என். சொக்கன் எழுதிய ஏ.ஆர்.ரஹ்மான் புத்தகம் எனது ஃபோல்டருக்குள் (மின்புத்தகமாக) வெகுகாலமாகப் படிக்கப்படாமல் தூங்கிக்கொண்டிருப்பது ஞாபகம் வந்தது. இனியும் தாமதிக்கலாகாது என எடுத்தேன். ஒரே மூச்சில் படித்து முடித்தேன். இப்படிச் சொல்வதிலிருந்தே அது எவ்வளவு விறுவிறுப்பான நடையில் எழுதப்பட்டிருந்தது என்பதை சொல்லத்தேவையில்லை என்று நினைக்கிறேன். மிக அருமையாக, எளிமையாக, அரிய தகவல்களுடன்.

பொள்ளாச்சியில் நண்பர்கள் குழுவுடன் இளையராஜா, மற்றும் இன்னபிற இசையமைப்பாளர்களின் பாடல்களை சிலாகித்தும், கேட்டுப் புளகாங்கிதம் அடைந்தும் திரிந்துகொண்டிருந்த காலகட்டம். பொள்ளாச்சியின் கிராமங்களில் சுற்றித் திரியும்போது பின்னணியில் எங்கேயாவது எப்போதும் ஒலித்துக்கொண்டிருக்கும் இளையராஜாவின் கிராமம் சார்ந்த படப்பாடல்கள் (கிழக்கு வாசல், சின்னத் தம்பி, மற்றும் பல ராமராஜன் படத்துப் பாடல்கள்) அந்தச் சூழ்நிலைக்குப் பொருத்தமானதாக, மனதுக்கு மிக நெருக்கமானதாக இருந்தன. 'மொட்டை.. சான்ஸே இல்ல..’ என்று அடிக்கடி சொல்லிக்கொண்டு வெளியாகும் ராஜாவின் பாடல்களை ஒன்று விடாமல் திரும்பத் திரும்பக் கேட்டுக்கொண்டு கிடந்த சமயத்தில் இனிய அதிர்ச்சியாக, அழகான ஆச்சரியமாக வந்து விழுந்தது “சின்னச் சின்ன ஆசை..”. ’யாருய்யா இது?’ என்று நிமிர்ந்து உட்கார்ந்தோம். முற்றிலும் புதிதாக, வித்தியாசமாக அதே சமயம் அட்டகாசமான பாடல்கள்.

சின்னச் சின்ன ஆசை வருவதற்கு முன்னரே DD-யில் வரும் உகாதி புரஸ்கார் என்னும் நிகழ்ச்சியில் ஏ.எஸ்.திலீப்குமார் இசைத்த அருமையான டைட்டில் இசைக்கு ரசிகனாக இருந்தேன். வாராவாரம் அதைக் கேட்பதற்காகவே அந்நிகழ்ச்சியைப் பார்ப்பேன். அந்த திலீப்குமார்தான் இந்த ரஹ்மான் என்றறிந்ததில் மேலும் ஆச்சரியமாகிப் போனது.

அடுத்தடுத்து வந்த ரஹ்மான் பாடல்கள் திரையிசையில் ஒரு புதிய துவக்கம் நிகழ்ந்திருப்பதை அறிவித்தவண்ணம் இருந்தன. அன்றைக்கு ஆரம்பித்து இன்றுவரை ரஹ்மானின் மகா ரசிகனாக ஆனவன் நான்.

ராஜாவைப் போலவே ரஹ்மானும் ஒரு மகா இசை ஆளுமை. ராஜாவை எவ்வளவு பிடிக்குமோ ரஹ்மானையும் அதே அளவு பிடிக்கும். ஒரு அபாரமான பர்சனாலிட்டியாகவும் ரஹ்மானை எனக்கு மிகவும் பிடிக்கும். ரஹ்மான் பிரபலமடையத் தொடங்கியிருந்த ஒரு காலகட்டத்தில் சென்னை ஸ்பென்ஸர் ப்ளாசா லாண்ட்மார்க் புத்தகக் கடைக்கு ஒரு முறை சென்றிருந்தேன். என் அருகில் நின்று ஷெல்ஃப்பிலிருந்து ஏதோ புத்தகத்தை மேய்ந்து கொண்டிருந்தவரை எங்கேயோ பார்த்த மாதிரி இருந்தது. பிறகு சட்டென்று புரிந்துகொண்டேன். அவர் பாடகர் ஸ்ரீநிவாஸ். அவரோ புத்தகத்தில் ஒரு கண்ணை வைத்துக்கொண்டு திரும்பித் திரும்பி யாரையோ பார்த்துக்கொண்டிருந்ததை கவனித்தேன். ஆர்வமேற்பட்டு நானும் திரும்பிப் பார்த்தால் ஒரு பத்து பேருக்கு மத்தியில் நடுநாயமாக நின்றுகொண்டு ஏதோ இசை ஆல்பத்தை வெளியிட்டுக்கொண்டிருந்தார் ரஹ்மான். அப்போது இந்த மனிதர் இவ்வளவு உயரம் போவார் என்று தெரிந்திருக்கவில்லை.

இந்தப் புத்தகத்தில் சின்னச் சின்னச் சுவாரஸ்யமான தகவல்களுடன் ரஹ்மானின் இசைப் பயணத்தை, வாழ்க்கையை, அவரது உழைப்பை, இசையில் இந்த உயரத்தை எட்ட ரஹ்மான் அனுபவித்த கஷ்டங்களை ஒரு சாதாரணனுக்குக் கதை சொல்வது போலச் சொல்கிறார் சொக்கன். இந்தப் புத்தகம் ஒரு சின்ன மன எழுச்சியைக்கூட தந்தது எனலாம். கடின உழைப்பு + வித்தியாசமான சிந்தனைகள் + தொடர்ந்து கற்றுக்கொண்டே இருத்தல் + செய்வதை புதிதாக, நேர்த்தியாகச் செய்தல் + எப்போதும் அமைதியாக, தளும்பாமல் ’என் கடன் பணி செய்து கிடப்பதே’ என்றிருத்தல் - இவைதான் மாபெரும் வெற்றிக்கான சூத்திரம். இதையும் இந்தப் புத்தகத்தில் ரஹ்மானின் வாழ்க்கையை படிப்பதினூடே உணர்ந்துகொள்ளவும் முடிவதே அந்த மன எழுச்சிக்குக் காரணம்.

இப்புத்தகத்தை இலவசமாக அளித்த என்.சொக்கனுக்கு நன்றிகள் பல.

இந்த இலவச மின்புத்தகத்தை PDF ஆக டவுன்லோடு செய்து படிப்பதற்கான சுட்டி கீழே:

http://600024.com/store/a-r-rahman-biography-free-tamil-e-book

புதிய முகங்கள். புதிய கதைகள்.

இருபத்தைந்து வருடங்களுக்குமுன் நான் படித்த கல்லூரியின் வகுப்பு தோழர்களுடன் சுத்தமாக தொடர்பு அற்றுப்போயிருந்த நிலையில் திடீரென்று இந்த இரண்டு நாட்களாக ஏகப்பட்ட தொலைபேசி அழைப்புகள். எப்படியெப்படியோ என்னைத் தேடிக் கண்டுபிடித்து ஒவ்வொருவராக பேசிக்கொண்டிருந்தார்கள். நான் எப்படி அவர்களைத் தேடிக்கொண்டிருந்தேனோ, அதே மாதிரி சில பேர் என்னையும் வெகுநாட்களாகத் தேடிக்கொண்டிருந்திருக்கிறார்கள். கூடப் படித்தவர்களில் ஒருவர் கூட தொடர்பிலில்லை என்ற நிலை மாறி இப்போது கிட்டத்தட்ட எழுபது பேரின் தொலைபேசி எண்கள் கிடைத்திருக்கின்றன.

நானும் சிலரை தொடர்புகொண்டு பேசினேன். பேச்சில் நிறைய பழைய, புதிய சுவாரஸ்யமான கதைகள் வலம் வந்தன. அதே உற்சாகம், அதே நட்பு, சில பேர் உழைப்பால் உயர்ந்த நிலைக்குப் போயிருக்கிறார்கள். சிலருக்கு வாழ்க்கை வேறுவிதமான அனுபவங்களைக் கொடுத்திருக்கிறது. காலம் ஒவ்வொருவரையும் ஒவ்வொரு இடத்தில் ஒவ்வொரு சூழ்நிலைகளில் ஒவ்வொரு மாதிரி வைத்திருக்கிறது என்பதை உணரமுடிந்தது.

’ரங்கராஜ் எங்கடா இருக்கான். அவனுக்கு நான் ரெண்டாயிரம் ரூபா கடன் தரணும்..” என்று எண்பதுகளின் இறுதியில் வாங்கின கடனை இப்போது திருப்பிச் செலுத்தத் துடிக்கிற ஒருவன். நான்கடி உயரத்தில் ஒல்லியாக, குள்ளமாக, ’ஷை’ டைப்பாக இருந்த, “குட்டி மணி” என்று ஒரு காலத்தில் அழைக்கப்பட்ட, ஆனால் இப்போது உயரமாய், வளர்த்தியாய் தமிழ்ப்பட ஆந்திரா வில்லன் போல சுமோவில் வந்திறங்கும் ஒருவன் என பலப்பல கதாபாத்திரங்கள். தோற்றங்களை மாற்றுவதற்கான சாத்தியக்கூறுகளை மீசை தாடியில்தான் ஆரம்பிக்கிறது இயற்கை. பின்னர் முன்வழுக்கையாக, தொந்தியாக தொடர்கிறது. அவர்களின் ஃபேஸ்புக் புகைப்படங்களிலிருந்து இன்னார் என்று அடையாளப்படுத்திக்கொள்வதே சிரமமாக உள்ளது. சிலபேர் அப்படியே இருக்கிறார்கள். அல்லது அது பழைய புகைப்படங்களாக இருக்கவேண்டும். ஓரிரு நண்பர்கள் இறந்துவிட்டார்கள்.

தொலைபேசியில் நண்பர்கள் “ஆனந்த் தெரியும்ல, செந்தில்குமார் நினைவிருக்கா.. அப்புறம் நம்ம மாணிக்கவாசகம் இருக்கான்ல..” என்றெல்லாம் கேட்கும்போது அவர்களின் முகங்கள் சட்டென்று ஞாபகத்தில் அகப்படாமல் மனதில் அலைக்கழிப்பு நிகழ்வது தர்மசங்கடம்தான். செந்தில்குமார் போன்ற பொதுவான பெயர்கள் தரும் குழப்பம் ஒரு புறம் இருக்க, நினைவில் பதிந்து போன முகங்கள் ஞாபகமறதியால் தேய்ந்துபோய்விட்டன. நண்பர்களுக்கும் அப்படித்தான். இருபத்தைந்து வருடங்கள் நிறைவதை முன்னிட்டு 2014-ல் ஒரு அலும்னி சந்திப்புக்கு ஏற்பாடுகள் நடக்கின்றன. பழைய நட்பின் புதிய முகங்களைக் காணவும், இன்னும் புதிய கதைகளைக் கேட்கவும் காத்துக்கொண்டிருக்கிறேன்.

வட போச்சே - 2

அந்தப் பிரபல எழுத்தாளர் பொள்ளாச்சியில் ஒரு லாட்ஜில் பிற திரைப்படக் கலைஞர்களுடன் தங்கியிருந்தார். அப்போது உலக நாயகன் நடித்துக்கொண்டிருந்த ஒரு திரைப்படத்தில் அவர் பணியாற்றுவதற்காக வந்திருந்தார். முன்பே கடிதத் தொடர்புகள் மூலம் நண்பர் சரசுராம் அவருக்குப் பழக்கமாயிருந்தார். நாங்கள் எழுத்தாளரின் செல்வாக்கில் படக்குழுவினருடனேயே மூன்று நாட்கள் சிங்காநல்லூர், சூலக்கல் போன்ற இடங்களில் சுற்றிக்கொண்டிருந்தோம்.

சரசுராம், மீன்ஸ், நான் - மூவரும் அவரை சந்திப்பதற்காகச் சென்றிருந்தோம். சுமாரான அந்த லாட்ஜில் எழுத்தாளருக்கு ஒரு தனி அறை ஒதுக்கப்பட்டிருந்தது. அபாரமான எழுத்தாளராகிய அவர் எங்களுடன் அவரது கதை / திரைப்பட / அனுவங்களைப் பற்றி உற்சாகமாகப் பேசிக்கொண்டிருந்தார். வந்து நின்ற லாட்ஜ் பையனிடம் வடையும், டீயும் ஆர்டர் செய்தார். ஒரு பத்து நிமிடம் கழித்து ஆர்டர் செய்த உளுந்து வடையையும், அதனுடன் தேங்காய்ச் சட்டினியையும் டேபிளில் பரப்பிவிட்டுப் போனான் லாட்ஜ் பையன்.

இலக்கியம், சிறுகதைகள், சினிமா என்று கலந்து கட்டி சுவாரஸ்யமாகப் போய்க்கொண்டிருந்தது எங்கள் பேச்சு. அப்போது மிக ஒல்லியாக ஒருவர் உள்ளே வந்தார். எழுத்தாளரைப் பார்த்துச் சிரித்தார். இருவரும் என்னவோ பேசிக்கொண்டார்கள். அப்போது எழுத்தாளர் எங்களிடம் இவர் யார் என்று தெரிகிறதா என்று கேட்டார். எனக்கு சுத்தமாகத் தெரியவில்லை. ஆனால் சரசுராமும், மீன்ஸூம் லேசாக அவரை அடையாளம் கண்டுகொண்டு, ஒரு படத்தின் பெயரைச் சொல்லி அதில் நடித்தவர்தானே என்று கேட்டார்கள். அவரும் தான் இவ்வளவு சீக்கிரம் அடையாளம் காணப்பட்டது குறித்து மகிழ்ந்து ‘ஆமாம்’ என்றார். பிறகு நண்பர்களிருவரும் வளரும் நடிகரான அவர் நடிப்பு பற்றி பாராட்டி வாழ்த்துகள் சொன்னார்கள். எளிமையான அந்த நடிகர் சுற்றுமுற்றும் பார்த்தார். பிறகு இயல்பாக டேபிளிலிருந்த வடையொன்றை படக்கென்று எடுத்து அதை சட்னியில் முக்கிவிட்டு டபக்கென்று வாய்க்குள் தள்ளினார். இந்த எதிர்பாராத செய்கையின் மூலம் வடைகளின் எண்ணிக்கையில் ஒன்று திடீரென குறைந்தது ஒரு திடுக்கிடல் சம்பவமாக இருந்தது. வடை சாப்பிட்டவுடன் நடிகர் ’வரட்டா’ என்று கிளம்பிப் போய்விட்டார். பிறகு மறுபடியும் வடையை ஆர்டர் பண்ணினோமா, இல்லை இருந்த வடைகளையே ஆளுக்குக் கொஞ்சம் பிய்த்துத் தின்றோமா என்றெல்லாம் இப்போது நினைவில்லை. ஆனால் தமிழ்கூறும் நல்லுலகிற்கு இப்படியொரு டைட்டில் கிடைத்ததே அந்த நடிகரால்தான். அந்த எழுத்தாளர்: ம.வே.சிவகுமார்.

வடைபோச்சே - 1: