2008-ல் வெளிவந்த ‘தி பாய் இன் த ஸ்ட்ரைப்டு பைஜாமாஸ்’ (The boy in the striped pajamas) என்கிற படத்தை இன்று பார்த்தேன். யூத இனப் படுகொலைகளை மையமாய் வைத்து உருவாக்கப்பட்ட எண்ணற்ற திரைப்படங்களில் இந்தப் படமும் ஒன்று என்றாலும் ஒரு வரலாற்றின் கொடுமையை இத்தனை நறுக்கென்று நெருடும்படி சொல்லிவிட முடியுமா என்று தெரியவில்லை.
இந்தப் படத்தைப் பார்த்துக்கொண்டிருக்கும் மாலை வேளையில் வெளியே ’சோ’வென்று மழை பெய்து கொண்டிருந்தது. இந்தப் படத்தின் இறுதிக் காட்சியும் மழையுடன் முடிகிறது. படம் முடிந்தவுடன் மழையும் முடிந்து ஜன்னல் வழி ஊடுறுவும் காற்றின் ஜில்லிப்பும் இந்தப் படம் பார்த்த நிகழ்வும் ஆக ஒரு இனந்தெரியாத பாரம் நெஞ்சைக் கவ்வுகிறது.
சிறுவர் சிறுமிகளை மையமாக வைத்து எடுக்கப்பட்டு வெற்றி பெற்ற கணக்கற்ற உலகப்படங்களில் இதுவும் ஒன்று என்பதை இங்கே சொல்லியாக வேண்டும். அதி அற்புதமான படங்களான “லைஃப் இஸ் பியூட்டிஃபுல், தி பியானிஸ்ட்’ வரிசையில் நிச்சயம் சேர்க்கப் படவேண்டியது இது. யூதர்களுக்கு எதிரான ஹிட்லரின் நாஜிப் படைகளின் “மரணக் கூடாரங்கள்” மற்றும் அங்கே நடைபெறும் கொடுமைகளையும் பதிவு செய்வது இந்தப்படத்திலும் களமாக இருந்தாலும் ஒரு சில மணித்துளிகள் தவிர அதையும் அது சம்பந்தப்பட்ட நடவடிக்கைகளையோ அதிகமாகக் காட்டாமலே மிக அழகான மற்ற காட்சிகளாலேயே அந்த துயரங்களை மவுனமாய் உணர்ந்து உறையச் செய்திருக்கிறார் இப்படத்தின் இயக்குநர்.
இரண்டாம் உலகப் போர் சமயத்தில் பணியாற்றும் ஒரு ஜெர்மன் ராணுவ அதிகாரியின் மகனான ஒரு எட்டு வயதுச் சிறுவனின் பார்வையில் நகருகிறது கதை. மிக ஒதுக்குப்புறமான தனியான இடத்தில் குடிவரும் ஜெர்மன் அதிகாரியின் மகனான ப்ரூனோ, காவலர்களால் நன்கு பாதுகாப்பு ஏற்படுத்தப் பட்ட வீட்டில் விளையாடத் தோழர்கள் இல்லாத சூழ்நிலையை அனுபவிக்கிறான். பெரியவனாகி உலகைச் சுற்றும் ஒரு எக்ஸ்ப்ளோரர் ஆக வேண்டும் என்பது அவனது ஆசை. திறந்திருக்கிற பக்கவாட்டுக் கதவை திறந்து யாருமறியாமல் பின் பக்கப் புதர்களையும், மரங்கள் அடர்ந்த பகுதிகளையும், சிறு ஓடையையும் கடந்து செல்கிற அவனது தேடல் ஒரு மின்சாரம் பாய்ச்சப்பட்ட வேலியருகே சென்று முடிகிறது. வேலிக்கு அந்தப்புறம் உள்ள காம்ப்-ன் உள்ளே முடி வெட்டப்பட்ட, கைதி எண்ணைத் தாங்கிய அழுக்கடைந்த பைஜாமாவை அணிந்த யூதச் சிறுவனைக் காண்கிறான். தினமும் அம்மா, அப்பாவுக்குத் தெரியாமல் ஸ்ம்யுல் என்கிற அந்தப் பையனுடன் ப்ரூனோ ஏற்படுத்திக் கொள்ளும் நட்பும் அதன் தொடர்ச்சியான விளைவுகளுமாகக் கொண்டு நகர்கிறது படம்.
யூதர்கள் என்பவர்கள் தங்கள் வாழ்க்கையின், நாட்டின் குடிகெடுக்க வந்தவர்கள் என்று சிறுவர்களுக்கு ஒரு ஆசிரியரால் போதிக்கப்படுவது, யூதர்கள் காம்ப்-பின் தூரத்துச் புகைபோக்கியிலிருந்து வரும் புகையும் நாற்றமும் என்ன என்று அறிந்து கொள்கிற அதிகாரியின் மனைவி உடைந்து போய் அழுவது, காம்ப்-பினுள் தூரத்தில் கேட்கும் விசில் சப்தத்தைக் கேட்டு யூதச் சிறுவன் பதறித் திரும்பி ஓடுவது போன்ற காட்சிகள் மூலமாகவே பின்புலமாய் என்ன நடக்கிறது என்பதை பார்வையாளர்களைப் புரிந்துகொள்ள வைத்திருக்கிறார் இயக்குநர்.
யூதர்களை சித்திரவதை செய்யவும், அடிமைகளாக வேலை வாங்கவும், சிறுவர்களை ஜெர்மன் டாக்டர்களின் கொடூரமான மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தவும், கும்பலாக காஸ் சேம்பர்களில் அடைத்துக் கொல்லவும் ஆக பெருமளவு பயன்படுத்தப் பட்ட Auschwitz கான்ஸண்ட்ரேஷன் காம்ப்-பை பிண்ணனியாகக் கொண்ட படம் என்று சொல்கிறார்கள். இசையும் அளவான வார்த்தைகளுடன் கூடிய வசனங்களும், ஒளிப்பதிவும் இந்தப் படத்தின் மிகப் பெரிய அம்சங்கள்.
இந்தப் படத்தைப் பார்த்து முடிக்கும் போது உங்கள் மனம் கனம் ஆகி கொஞ்ச நேரமாவது நெகிழ்வுடன் உத்தரத்தை வெறித்துக் கொண்டோ அல்லது கண்களில் துளிர்த்த கண்ணீரைத் துடைத்துக்கொண்டோ உட்கார வைக்கும் என்பது உறுதி.
இதைப்பற்றின மிக விரிவான கதை விமர்சனம் விரும்புபவர்கள் ஹாலிவுட் பாலா எழுதின பதிவைப் படிக்கலாம்.