படித்ததும் பிடித்ததும்

எப்பவோ ஒரு காலத்தில் நமக்குப் பிடித்தது இப்போது பிடிக்காமல் போவதும், அப்போது பிடிக்காமல் இருந்தது இப்போது பிடித்துவிடுவதும் நிகழத்தான் செய்கிறது. இதைத்தான் வேறு விதமாக “இப்பப் பாத்த புதுசு பாக்கப் பாக்கப் பழசாகி எப்பவுமே பாக்காத பழசு பாத்தவுடனே புதுசாத் தெரியும்” என்று மீனாட்சி சுந்தரனார் கூற முயற்சித்தார். ஆனால் இது முதல் வரிக்கு சம்பந்தமில்லாமல் இருப்பதால் அதிகம் யோசிக்காமல் அடுத்த பாராவுக்குப் போய்விடலாம்.

பொள்ளாச்சி சேரன் போக்குவரத்துக் கழகத்திலிருந்து யாரோ கொடுத்த 1988- ஆம் ஆண்டு டயரி, எதையோ தேடும்போது கண்ணில் பட்டது. புரட்டிப் பார்த்தபோது அதில் மணி மணியான கையெழுத்தில் அப்போது படித்தவைகளிலிருந்து பிடித்த பேராக்கள் அல்லது வரிகளை ’படித்ததில் பிடித்தது’ என்று போட்டு எழுதி வைத்திருந்தேன். என் அப்போதைய வாசிப்பானுபவ ரசனை ரொம்ப தத்துப் பித்தென்றெல்லாம் இல்லாமல் கொஞ்சம் பரவாயில்லையாக இருந்ததாக நிழலடிக்கிறது. இப்போது அவைகளைத் திரும்பப் படித்துப் பார்க்கும்போது எனக்குப் பிடித்ததை எழுதியவர்களின் பெயர்கள் எல்லாம் ஒரு கலவையாக அவியல் போல இருக்கிறது.

கார்த்திகா ராஜ்குமார், காண்டேகர், பாப்ரியா, அனுராதா ரமணன், இந்திரன், காப்ரியேல் ஒகாரா, சுந்தர ராமசாமி, லே ஹண்ட், மு.மேத்தா, மாலன், கார்ல் மார்க்ஸ், வண்ண நிலவன், சி.சு. செல்லப்பா, க.நா.சு, அப்புறம் ஜப்பானிய பழமொழிகள், பெயரில்லாத தத்துவங்கள் ஒன்றிரண்டு. யாரோ என்று போட்டு சில. இந்த யாரோ என்பது யாராக இருக்கும் என்று ரொம்ப நாட்களாக யோசித்துக் கொண்டிருக்கிறேன். இதில் லே ஹண்ட், ஒகாரா, மார்க்ஸ், காண்டேகர் போன்றவர்களின் பெயர்களைப் பார்த்து யாரும் பயப்படவேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன். அது சும்மாவாச்சும் அவர்களுடைய ஏதாவது ஒரு பேரா எங்கேயாவது தட்டுப்பட்டதை டயரியில் எழுதி வைத்திருப்பேன். மற்றபடி ரொம்ப தடிமனான புத்தகங்கள் படிக்கிற கெட்ட பழக்கம் எதுவும் அப்போது எனக்கு இருந்ததில்லை. பொன்னியின் செல்வன் கூட ரிடையர்மெண்டுக்கு அப்புறம் படிக்கலாம் என்று எடுத்துவைத்திருக்கிறேன்.

ஆனால் கிடைத்ததையெல்லாம் வாசிக்கிற வெறி ஒரு மானாவாரித்தனத்தைக் (பார்த்தீர்களா! தமிழில் புதிய சொல்லாடல்) கொடுத்திருந்தது. பாலகுமாரனை விழுந்து விழுந்து படித்துக் கொண்டிருந்த அதே நேரம் சைடுவாக்கில் க.நா.சு வருகிறார். கி.ராஜநாராயணன், தி.ஜா என்று வாசிப்பு அனுபவத்தை அடுத்த தளத்திற்குக் கொண்டு போகவேண்டுமென்று பிரயத்தனம் மேற்கொண்ட காலகட்டம் அது. பிடித்த எழுத்தாளர்கள் என்று ஒரு இறுதிப் பட்டியல் உருவாகுவதற்கு முன் வரை எல்லோருமே இதுபோல சகட்டுமேனிக்குப படித்து வைத்திருக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகியிருப்பார்கள்.

பொள்ளாச்சி லைப்ரரியில் மேற்படி இலக்கிய எழுத்தாளர்களின் புத்தகங்கள் இருக்கும். ஆனால் எல்லா புத்தகங்களிலும் வாசகர்கள் தனக்குப் பிடித்த வரிகளை பென்சிலாலோ பேனாவாலோ அடிக்கோடிட்டு அடிக்கோடிட்டு புத்தகம் முழுவதும் கோடு கோடாக இருக்கும். போதாதற்கு கடைசி பக்கத்தில் ‘அருமையான புத்தகம்” என்றோ, “மரணக் கடி. படிக்காதே” (இதை முதல் பக்கத்திலல்லவா எழுதியிருக்கவேண்டும்) என்றோ தங்களது உண்மையான விமர்சனத்தை பதிந்தும் வைத்திருப்பார்கள். ஆக அடிக்கோடு போடுகிற வேலையை நான் செய்யவேண்டாம் என்று படித்ததில் பிடித்ததை தனியாக சேரன் போக்குவரத்துக் கழக டயரிக்கு அனுப்பிக் கொண்டிருந்தேன்.

இந்த மாதிரி படித்ததில் பிடித்ததை தொகுத்து பொள்ளாச்சியிலிருந்து வெளிவந்து கொண்டிருந்த ‘மனிதம் செய்திகள்’ என்கிற சிற்றிதழில்(!) போட்டுக் கொண்டிருந்தோம். கோபால் பில்டிங் பக்கத்தில் கடை வைத்திருந்தவர்கள் எல்லாருக்கும் ஒரு காப்பி போகும்.

ப.பி-இல் ஒரு சில இப்போது படித்தாலும் பிடிக்கத்தான் செய்கிறது. அவைகளில் சில தத்துவார்த்தமாக இருப்பதே காரணம் என நினைக்கிறேன். ஒரு சிலது மரண மொக்கை.

படித்ததில் பிடித்ததில் சில இங்கே..

****
குழந்தைகள் உலக சத்தியங்கள். கையுயர்த்தித் தந்ததெல்லாம் கடைசிவரை காப்பாற்றுவேன் என்னும் நியாயப் பிரமாணங்கள். வாழ்க்கையையே விளையாட்டாய் கழித்ததுபோல் குதிபோடும் பையன் நாட்கள். இலக்குகள் பதுங்கியிருக்க அவற்றைக் கண் கட்டித் தேடக் கிளம்பும் வாழ்க்கை. ஜரூராய் இருந்து இடமாறிப் பிழைக்கும் கிளித்தட்டு. ஏமாந்தவனை எழுப்பிவிட்டுத் தான் உட்கார்ந்து கொள்ளும் கொக்கோ. மூச்சுப் பிடித்து மூலைவரை சென்று எதிரியை கால் தாக்கி எற்றித் திரும்பும் சடுகுடு. வளைத்து வளைத்து இரண்டு சக்கரத்தையும் பாலன்ஸ் செய்து ஓட்டிச் செல்லும் வாடகை சைக்கிள். வாழ்க்கை விளையாட்டாய்த்தான் ஆரம்பிக்கிறது.

- மாலன், நந்தலாலா நாவலில்

*****

எனது பூப்பு நாளில்
நான் கட்டிய பச்சைப் பட்டு
இன்னனும் நெஞ்சுக்குள் பசுமையாய்
நினைவிருக்க..
காலையில் சாப்பிட்டது நினைவில்லை.
மறதி.. பனித்துளி போல மறதி.
காலம் கரையுது. காலம் கரையுது.
காதுக்குள் பேரொலி.
என்னுள் என்னை நான் இழந்திருக்கையிலே..
உலகம் என்னை இழந்து கொண்டிருக்கிறது.

- அனுராதா ரமணன்

***

கொஞ்சமாக தெரிந்து வைத்துக் கொண்டிருக்கும்போது தெரிந்து கொண்டுவிட்டோம் என்றும், அதிகமாகத் தெரிந்துகொண்டிருக்கும்போது தெரிந்து கொள்ளவில்லை என்ற எண்ணமும் ஏற்படுகிறது. ஒரு கதவு திறக்கும்போது திறக்காத பல கதவுகள் தெரியும் விசித்திரக் கோட்டை இது. அவற்றையும் திறக்கும்போது, மேலும் பல கதவுகள் மூடிக்கிடப்பதைப் பார்க்கிறோம். அப்படியானால் இதற்கு முடிவு என்ன? திறப்பதே திறக்காத கதவுகளைப் பார்க்கத்தானா? பெரிய சவால்தான் இது.

- சுந்தர ராமசாமி, ‘ஜே.ஜே சில குறிப்புகள்’ நாவலில்.

***

கடைசிக் கதவும் திறக்கப் போகிறது. நான் ஒரு சுதந்திர மனிதன் ஆகிவிடுவேன். அந்தக் கதவு நிலையிலிருந்து ஒரு எட்டு வெளியே எட்டிப் போட்டதும் என் இருதயம் நிரம்பி இருந்தது. நிம்மதியா அல்லது கனமா? இரண்டும் அல்ல. அது ஓர் அபிமான இருதயத்தின் அடியிலிருந்து எழும் அனுதாபக் குரலின் தொனி போல எனக்குப் பட்டது. அந்தத் தொனியோடு கடைசிக் கதவும் திறந்து கொண்டது. எதையும் நான் சொல்லிவிடக்கூடும். அந்த க்ஷணத்து உணர்ச்சியை மட்டும் சொல்ல முடியாது. அது இருதயத்தின் தனிச் சொத்து. அதற்கு பாஷையே இல்லை.

-சி.சு. செல்லப்பா

***

மூன்றாம் முறை முகத்தில் அறைந்தால் புத்தருக்கும் கோபம் வரும்.

-யாரோ

5 comments:

  1. அட நல்லா இருக்கே! :) ரொம்ப செலக்டட எழுதியதிலேர்ந்து சிலவற்றை மட்டுமே செலக்ட் செய்யும்போது ஹம்ம்ம் இன்னும் கூட நிறைய தேடி எழுதி வைச்சிருந்திருக்கலாம்ன்னு தோணியிருக்குமே!? :)
    நானும் நானும் வெட்டியாய் திரிந்த காலகட்டத்தில் ஒரு டயரியை வைச்சுக்கிட்டு லைஃப்ரரியில போயி அறிஞர்கள் பொன்மொழி புத்தகங்களாய் எடுத்து படித்து பிடித்த வரிகளை - பெரும்பாலும் நிறைய ரைட்டர்ஸ் RT செய்த பொன்மொழி புத்தகங்களே அதிகம் - எழுதி வைத்த டைரி இப்ப வூட்ல இருக்குது பின்னே எப்பவாச்சும் ரீலிசு செய்யலாம் :)

    ReplyDelete
  2. படித்ததும் அனைத்தும் பிடித்திருக்கு. கடைசி யாரே உண்மை. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. நானும் இது போல எழுதிய டைரி தொலைந்து விட்டது. அதை ஞாபகப் படுத்திட்டீங்களே!

    இப்பதிவு சற்றே இலக்கிய நடையில் அழகாக வந்துள்ளது.

    நீங்கள் குறிப்பெடுத்தது போல் மற்றவர் உங்கள் எழுத்துக்களை குறிப்பெடுக்கும்படி நிறைய நிறைய எழுதுங்கள். ஆவலோடு இருப்பேன்.

    ReplyDelete
  4. சுவாரஸ்யமான தொகுப்பு. நன்றி சித்ரன்!

    நான்கூட ‘தினம் ஒரு கவிதை’ காலத்தில் ‘சிந்தனை செய் மனமே’ என்ற தலைப்பில் தினம் ஒரு ‘படித்ததில் பிடித்தது’வைத் தொகுத்துக்கொண்டிருந்தேன், 30% நன்றாயிருக்கும் 70% மொக்கையாயிருக்கும், நல்லவேளை 100%ம் இப்போது இணையத்தில் இல்லை :)

    - என். சொக்கன்,
    பெங்களூரு.

    ReplyDelete
  5. மிக்க நன்றி! @ஆயில்யன், மதுரை சரவணன், காஞ்சி ரகுராம், சொக்கன்.

    ReplyDelete

இந்தப் பதிவைப் பற்றிய உங்கள் கருத்து?