Showing posts with label சுஜாதா. Show all posts
Showing posts with label சுஜாதா. Show all posts

கீட்ஸ் படிச்சிருக்கியா?

கதைகளோ, நாவல்களோ படிப்பது என்பது சும்மா பொழுதுபோக்கிற்காகவா? அல்லது குறிப்பிட்ட எழுத்தாளர்களின் எழுத்து நடைக்கான ஆராதனை அல்லது ஆர்வமா? இலக்கிய (அல்லது கமர்ஷியல்) தாகமா? கதையில் வரும் சம்பவங்களோடு தன் வாழ்வில் எதையாவது பொருத்திப் பார்த்து மகிழ்ச்சி அல்லது துக்கப்படுவதற்கா? அல்லது தன் வாழ்வுக்கெட்டாத, கற்பனை செய்து பார்க்க இயலாத நிகழ்வுகளை கதைகளில் படித்துக் களிக்கிற திருப்தியா? பொது அறிவு வளர்ப்பதற்கா?

இது எல்லாமும் ஆக இருக்கலாம் அல்லது இவற்றில் ஏதாவது ஒன்று. ஆனால் கடைசியில் சொல்கிற பாயிண்டை கவனியுங்கள். பொது அறிவு வளர்ப்பது.

கதைகள், நாவல்கள் படிப்பதால் நம் பொது அறிவு வளருமா என்றால் நிச்சயம் ஓரளவுக்கு வளரும் என்பதற்கான பதிவு இது. எனக்கு கொஞ்சமாய் வளர்ந்திருக்கிறது. குறிப்பாக சின்ன வயசிலிருந்து படித்த வணிக எழுத்தாளர்களின் கதைகள், நாவல்கள் மூலம். பல்வேறு விஷயங்கள் பற்றிய ஞானத்தைப் பெற அவைகள் வெகுவாக துணை புரிந்திருக்கின்றன.

அப்போது பெருமளவில் வந்துகொண்டிருந்த பாக்கெட், மாத நாவல்களை எடுத்துக்கொள்ளுங்கள். (உடனே எடுக்கப் போய்விடாதீர்கள்). ராஜேஷ்குமாரிலிருந்து ஆரம்பித்தால் சுஜாதாவரை ஒரு பெரிய ரவுண்டு வரலாம். இந்த மாதிரி எழுத்தாளர்கள் தாராளமான ஆங்கிலக் கலப்போடு எழுதினார்கள் என்பது வாசகர்களின் வொக்காபுலரி அல்லது ஒக்கபிலேரியை முன்னேற்றப் பயன்பட்டன. நான் சொல்வது அதிகமாய் விஷய ஞானமற்ற வயதில் இவைகளைப் படிப்பவர்களுக்கு (அல்லது படித்தவர்களுக்கு). நான் ஆறாங்கிளாஸ் படிக்கும்போதே அம்புலிமாமா ரத்னபாலாவிலிருந்து ப்ரொமோஷன் ஆகி மாத நாவல்களுக்கு வந்துவிட்டேனாக்கும். அப்போது ராஜேஷ்குமார் “அவன் காரிடாரில் நடந்து வெளியே வந்தான்” என்று எழுதினால் எனக்கு காரிடார் என்ற புதிய வார்த்தை கிடைக்கிறது. அப்போது இவையெல்லாம் நான் கேள்விப்படாத வார்த்தைகளாகியிருந்தது. இப்போதுகூட எங்கேயாவது நீண்ட காரிடாரில் நடக்கும்போது ராஜேஷ்குமார் சிலசமயம் சட்டென்று நினைவுக்கு வருவதுண்டு. இதே போல் சில உதாரணங்களைச் சொல்லவேண்டுமென்றால். (சும்மா படித்த ஞாபகத்திலிருந்து உதாரணத்துக்கு மட்டுமே. சரியான வரிகள் அல்ல)

  • அவன் போர்டிகோவில் காரை செருகி நிறுத்தினான்.
  • அவள் லவுஞ்சில் காத்திருந்த மாதவனை நோக்கிக் கையசைத்தாள்.
  • அந்த விமானம் ஒரு அலுமினியப் பறவை போல மிதந்துவந்தது.
  • ஸ்க்வாட்ரன் லீடர் குமார் கீழே விழுந்தபோது ஒரு பந்துபோல தன்னைச் சுருட்டிக்கொண்டான்.
  • அவன் அவளை நரிமன் பாயிண்டிற்கு வரச் சொல்லியிருந்தான்.
  • வஸந்த் ஒருவித ரிஃப்ளெக்‌ஷ் இயக்கத்தில் செயல்பட்டு உடனே குனிந்துகொண்டான்.
  • அவன் யமஹாவை உதைத்துக் கிளப்பிச் சீறினான்.
  • சோடியம் வேப்பர் விளக்கு வெளிச்சத்தில் அவள் முகம் இன்னும் அழகாக இருந்தது.

மேலுள்ளவற்றில் காணப்படும் வரிகளில் போர்டிகோ, லவுஞ்ச், அலுமினியத்தால் செய்யப்படும் விமானம், ராணுவத்தில் இருக்கிற ஸ்க்வாட்ரன் லீடர் என்ற பதவி, மும்பையின் நரிமன் பாயிண்ட், ரிப்ளெக்ஸ், இந்த மாதிரி புதிய வார்த்தைகள் எல்லாம் ஆறாங்கிளாஸ் தமிழ் மீடியம் படிக்கிற பையனுக்கு எதேஷ்டமான பொது அறிவா இல்லையா? நிச்சயம் நான் யமஹாவையோ, சோடியம் வேப்பர் விளக்கையோ அப்போது பார்த்ததில்லை. அப்புறம்.. மார்ச்சுவரி, போஸ்ட்மார்ட்டம், ஃபாரன்ஸிக், அப்ஜெக்‌ஷன் யுவர் ஆனர், வென்ட்டிலேட்டர், பாயிண்ட் 33 பிஸ்டல், ஸிர்ரஸ் மேகத்தீற்றல்கள், ஜானவாசக் கார், காக்டெயில், ப்ரீஃப்கேஸ், ஃபேக்ஸ், ரிகர்மாட்டிஸ், ரிஸீவர், மவுத் பீஸ், ஹேபியஸ் கார்பஸ், காஸனோவா, சாண்ட்லியர் விளக்குகள், வாய்ஸ் ரெகக்னிஷன், பீத்தோவனின் ஸிம்பனி, ஹாலோகிராம், அப்பெர்ச்சர், வியூஃபைண்டர், ஸாட்டின் பாவாடை இன்னபிற.

இது மட்டுமல்லாமல் மனிதர்களைப் பற்றி, சில பிரபலங்களைப் பற்றித் தெரிந்துகொள்வதும். சுஜாதா ஒரு கதையில் ‘அவன் ஒரு நவீன மெஸ்ஸையா போல தோற்றமளித்தான்’ என்று எழுதியிருப்பார். யாருடா இது மெஸ்ஸையா (
messiah) என்று ரொம்ப நாள் மண்டைக் குடைச்சலாக இருந்தது. கணேஷ் வஸந்திடம் “கீட்ஸ் படிச்சிருக்கியா” என்று கேட்கும்போது ஒரு பிரபல உலகக் கவிஞரைத் தெரிந்துகொள்ள முடிந்தது. (ஆனால் படித்ததில்லை). இந்த வரிசையில் ஷெல்லி, பைரன் எல்லோரும் அடிக்கடி வருவார்கள்.

நான் சென்னைக்கு வரும் முன்பே இந்த நகரம் எனக்குப் பரிச்சயமான இடமாகத் தோற்றமளித்ததற்குக்கூட மேற்கூறிய எழுத்தாளர்களுக்கு மிக முக்கிய பங்கு உண்டு. பொதுவாக அநேக கதைகள், மாத நாவல்கள் சென்னையைக் களமாக வைத்து எழுதப்பட்டன என்கிற வகையில் மிகக் கொஞ்சமாக அதன் பேட்டைகளைப்பற்றித் தெரிந்துகொள்ள முடிந்தது. ‘அவன் தேனாம்பேட்டை சிக்னலைக் கடந்து...’ அல்லது ‘மெரீனாவில் கண்ணகி சிலையருகே காத்திருந்தான்’ ‘மவுண்ட் ரோட்டில் ஜெமினி மேம்பாலத்துக்கு அருகே அவன் அலுவலகம் இருந்தது’ அல்லது ‘எலியட்ஸ் பீச்சின் மணலில் இருவரும் நடந்தார்கள்’ அல்லது ‘தம்புச் செட்டி தெருவில் உள்ள அவன் அலுவலகத்துக்குப் போனபோது...’ அல்லது ‘ஹிக்கின் பாதம்ஸின் அருகே காரை நிறுத்தினான்’ ‘கொத்தவால் சாவடிக்கு இடது பக்கமாக பைக்கை வளைத்துத் திருப்பினான்’ - இவை போதாதா சென்னையைப் பற்றி சும்மா போகிற போக்கில் தெரிந்து கொள்வதற்கு? (சென்னை கொத்தவால் சாவடி மார்க்கெட்டை கோயம்பேட்டுக்கு மாற்றின விஷயத்தை மக்களுக்கு அறிவிக்கும் விதமாக “கொத்தால் சாவடி லேடி நீ கோயம்பேடு வாடீ..” என்ற பொது அறிவுப்பாடலை கேட்டிருக்கிறீர்களா?).

மேலும் ராஜேந்திரகுமார், புஷ்பா தங்கதுரை, சாண்டில்யன் கதைகளின் மூலம் கொஞ்சமாய் ‘அந்த’ அறிவு வளர்ந்ததையும், பட்டுக்கோட்டை பிரபாகரின் ஹீரோயின் சுசீலாவின் பனியன் வாசகங்கள் (I like Tennis, because they play with two balls) மூலம் டென்னிஸ்-ஸில் இரண்டு பந்துகளை வைத்து விளையாடுவார்கள் என்கிற மகா அறிவு கிடைத்ததையும் சொல்லியாக வேண்டும்.

வணிக எழுத்துக்களில் மட்டும்தான் என்றில்லை. இன்றைக்கும் ஆதவன் எழுத்துக்களைப் படித்தால் ஒரு அலுவலகத்தின் இயக்கம், அன்றைய ஹாலிவுட் ஹீரோக்கள், ஹீரோயினிகள் (ஆட்ரே ஹெப்பர்ன்), டெல்லியின் இடங்கள் என்று எத்தனையோ விஷயங்கள் தெரிந்துகொள்ள முடிகிறது. எவ்வகை எழுத்தாளராக இருந்தாலும் அவர்கள் கதையினூடாக லேசாகத் தெளித்துவிடும் விவரங்கள் இது மாதிரி நிறைய இருக்கும்தான்.

இப்படி நிறைய உதாரணங்களைச் சொல்லிக்கொண்டே போகலாம். ஆனால் நான் என்ன சொல்ல வந்தேன் என்று புரிவதற்கு இத்தனை போதும் என்று நினைக்கிறேன். படிப்பது என்பது நிச்சயம் அறிவை வளர்க்க உதவும் செயல். நிறைய ஆங்கில புத்தகங்களாகப் படித்துத் தள்ளியிருந்தால் இதைவிட மேம்பட்ட விஷயங்கள், விவரங்கள் எத்தனையோ கிடைத்திருக்கலாம்தான். நான் அதிகம் படித்தது தமிழ் புத்தகங்கள்தான். எனக்கு இப்போதிருக்கிற அறிவின் ஒரு பகுதி நிச்சயம் சின்ன வயசில் படித்த தமிழ் கதைகள், நாவல்களால் வந்ததுதான் என்று நிச்சயம் சொல்லமுடியும். நீங்களும் கூட இதை உணர்ந்திருப்பீர்கள். இல்லையா?

சுஜாதா... சுஜாதா

பல வருடங்களுக்கு முன்னால் எனக்கு அவசரமாய் ஒரு பாஸ்போ¡ட் சைஸ் புகைப்படம் எடுக்க வேண்டியிருந்தது. மதியம் ஒரு மணி வெயிலில் கோவை டவுன்ஹால் அருகில் ஒரு ஸ்டுடியோவுக்கு விரைந்தேன். என் அவசரத்தைத் தெரிவித்துவிட்டு, மேக்அப் அறைக் கண்ணாடியில் முக லட்சணங்களை சரிபார்த்துவிட்டு காமிரா முன் உட்கார, பளிச் என ஒரு மின்னலை என் மேல் சொடுக்கிவிட்டு ஒரு மணி நேரம் கழிச்சு வாங்க என்றார் ஸ்டுடியோக்காரர். வரவரவென்று அடிக்கும் இந்த மத்தியான வெயிலில் ஒரு மணி நேரத்தை எங்கே தொலைப்பது என்று வெளியில் வந்தவனுக்கு பக்கத்தில் புத்தகச்சுமைதாங்கி நிற்கும் நூலகக்கட்டிடம் தென்பட்டது. ஆஹா! இதைவிட வேறென்ன வேண்டும்? உடனே உள்நுழைந்தேன். மெல்ல முதல் மாடிக்கு படிகளில் ஏற கிரவுண்ட் ஃப்ளோரில் மாடிப்படிக்கு இந்தப்பக்கம் கும்பலாய் சில பேர். உற்றுப் பார்த்தால் நடுநாயகமாய் S டைப் சேரில் எழுத்தாளர் சுஜாதா உட்கார்ந்துகொண்டிருக்கிறார். என்னவோ உரையாடல் போய்க்கொண்டிருக்கிறது. நான் ஆர்வமாய் உடனே கீழே இறங்கி வந்து கும்பலில் தலை நுழைத்து எட்டிப் பார்த்தேன். எல்லோரும் ஆளாளுக்கு கேள்விகளை அவர்மீது வீசிக்கொண்டிருக்க பதிலுக்கு பதில்களை லாவகமாய்த் திருப்பி வீசிக்கொண்டிருந்தார். எனக்குப் மிகப்பிடித்த எழுத்தாளரை மிகப் பக்கத்தில் பார்த்த வியப்பிலிருந்து மீள முடியாமல் நின்றிருந்தேன். பாஸ்போர்ட் சைஸ் போட்டோ வாழ்க.

சுற்றி நிற்பவர்களில் ஒருவன் கேட்கிறான். "சார் குவாண்டம் தியரியை கொஞ்சம் விளக்க முடியுமா?". நான் அவனைப் பார்க்கிறேன். எல்லாரும் ஒரு முடிவுக்கு வந்துவிட்டார்கள் போல. சுஜாதா விளக்க ஆரம்பித்தார். அடுத்த ஆள் தேச ஒற்றுமை குறித்து கேட்க அதற்கும் பதில். (தேச ஒற்றுமை இருக்கிற இடங்கள் என்று சலூன் மற்றும் விபசார விடுதிகள் என்று குறிப்பிட்டது ஞாபகம் வருகிறது). ஒரு ஜீனியஸிடமிருந்து பதில்கள் கிடைத்த சந்தோ்ஷத்தில் அவர்கள் தலைகள் ஆடுகின்றன.

நான் சுஜாதாவை படிக்க ஆரம்பித்தது ஆறாம் வகுப்பு படிக்கும்போது என்று தெள்ளத் தெளிவாக ஞாபகம் இருக்கிறது. அறிமுகப்படுத்தியது அவருடைய "மறுபடியும் கணேஷ்" நாவல். மாலைமதியோ ராணிமுத்தோ நினைவில்லை. அப்போது தமிழ் அதிகம் பரிச்சியமில்லாத என் வீட்டுக்குள் அது எப்படி நுழைந்திருந்தது என்று தெரியவில்லை. கட்டிலுக்கு அடியில், அலமாரியில், அடுக்களையில் விறகு கொட்டப்பட்ட இடத்தில் என்று பூனையோல் எங்கேயாவது கிடக்கும் அதை மறுபடி மறுபடி தேடியெடுத்து கிட்டத்தட்ட 100 தடவைகளாவது படித்திருப்பேன். இன்றைய தேதிக்கு ஒப்பிடுகையில் அது ஒன்றும் சுஜாதாவின் முக்கிய படைப்பு அல்ல என்றாலும் என் அன்றைய வயசுக்கு மிகப்பெரிய ஆச்சரியத்தை அள்ளிக்கொணர்ந்தது அது. அதை ஏன் பேப்பர்காரனுக்கு போடாமல் அல்லது அடுப்பு மூட்ட உபயோகிக்காமல் வீட்டில் விட்டு வைத்தார்கள் என்பது மிக ஆச்சர்யம். இத்தனைக்கும் சுஜாதாவை வீட்டில் யாருக்கும் தெரியாது. புதுசாய் வாழ்க்கையில் எதையோ பார்த்துவிட்டமாதிரி ஏறக்குறைய பக்கங்கள் மஞ்சளாகியிருந்த அதை நேரம் கிடைத்தபோதெல்லாம் எடுத்துப் படித்தேன். அப்புறம் உடுமலை நூலகத்தில் கதைக் களஞ்சியமோ, சிறுவர் கதைப் பூங்காவோ தேடிக்கொண்டிருந்தபோது சுஜாதாவின் "மேற்கே ஒரு குற்றம்" கண்ணில் படுகிறது. ஒரு இன்ப அதிர்ச்சியுடன் அதைக் கவர்ந்துகொண்டு ஒரே பாய்ச்சலில் வீட்டுக்குவந்து அடுத்த ஒரு மணி நேரத்துக்குள் அதை படித்துமுடித்துவிட்டது ஞாபகத்துக்கு வருகிறது.

அப்புறம் நான் தேடாமலே சுஜாதா புத்தகங்களாய் கிடைக்க ஆரம்பித்தது லைப்ரரியில். சுஜாதாவின் வசீகரமான எழுத்து நடையும், கதைக்களங்களும், கதை மாந்தர்களும், சயின்ஸ் கலந்த புதிய கொலை உத்திகளும், கணே்ஷும் வசந்தும் ராஜேந்திரனும், வித்தியாசமான தலைப்புகளும் பெரிதும் கவர சுஜாதாவின் கதைப்புத்தகங்கள் தேடி வெறிகொண்டு அலைய ஆரம்பித்தேன். பத்தாம் வகுப்பு தேறுவதற்குள் சுஜாதா வி்ஷயத்தில் நன்கு தேறியிருந்தேன். வளர்ந்தபிறகு நண்பர்களுக்கு நான் சுவாரஸ்யமாய் கடிதங்கள் எழுத முனைந்ததிலும், பின்னர் பிற்காலத்தில் சில சிறுகதைகள் எழுதினதிலும் சுஜாதாவின் பாதிப்பு இருந்ததாகக் கொள்ளலாம். அவரின் பதினாலு நாட்கள், ஜே.கே. சொர்க்கத்தீவு, வானமென்னும் வீதியிலே, பிரிவோம் சந்திப்போம், கொலையுதிர்காலம், வைரம், காகிதச்சங்கிலிகள் போன்ற மறக்க இயலாத நாவல்களில் மிரண்டதும், மேலும் கணையாழியின் கடைசிப்பக்கங்களில் ஆழ்ந்ததும் நினைவுக்கு வருகின்றன.

பிறகு ஒருநாள் சென்னையில் தசரா கணையாழியைத் தத்தெடுத்துக்கொண்ட விழாவில் அவர் பேசினதைக் கேட்கிறபோது சுஜாதா தாண்டி என் வாசிப்பு ரசனைகள் தி.ஜா, அசோகமித்ரன், ஆதவன், வண்ணதாசன் என்று மாறிப்போயிருந்தது. அதேபோல் புக்பாயிண்ட் அரங்கில் ஒரு சி.டி வெளியீட்டு விழாவில் இருமல்களோடு சேர்த்து இருபத்தி ஐந்து நிமிடம் அவர் பேசினதை கேட்டபோதும்.

இப்படியாக பல வருடங்கள் தாண்டி இப்போது சுஜாதா வீட்டுக்குப் பத்து வீடுகள் தள்ளி என் ஆபிஸ். ஒரு நாளைக்கு நான்கு தடவை சுஜாதாவின் வீட்டைத் தாண்டித்தான் போக வேண்டியிருக்கிறது. எப்போதாவது எதேச்சையாய் லஸ் சிக்னலில் நான் நிற்கும்போது பக்கத்தில் காருக்குள் அவர் உட்கார்ந்துகொண்டிருப்பார். எல்லா நிகழ்வுகளும் ஏதோ ஒரு காரியத்தின் பொருட்டே நிகழ்கின்றன என்று தோன்றுகிறது.

சுஜாதாவுடனான அம்பலம் ஆன்லைன் அரட்டையில் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தபோது யாரோ ஒருவர் அணுசக்தி, எனர்ஜி என்று ஏதேதோ சுஜாதாவிடம் சந்தேகம் கேட்டுக்கொண்டிருந்தார். லைப்ரரியில் கேள்விகேட்ட அதே ஆள்தானோ என்று சந்தேகம் வந்தது. சுஜாதாவும் சளைக்காமல் பதில் சொல்லிக்கொண்டிருந்தார். நானும் ஆசைக்கு ஓரிரு கேள்விகள் கேட்டுவிட்டு வந்துவிட்டேன்.

என்னைப் போல ஒரு குறு எழுத்தாளன் எங்கிருந்து வருகிறான் என்று தெரியப்படுத்துவதற்கு மேற்கண்ட நினைவுகூறல்கள் தேவைப்படுகிறது. நிறைய எழுத்தாளர்களைப் போலவே சுஜாதாவின் எழுத்தைக் கூர்ந்து கவனித்து ஏதோ கற்றுக்கொண்டதில் நானும் ஒருவன் என்று சொல்லலாம்.

"மறுபடியும் கணேஷ்" என்ற அந்தப் பழைய புத்தகம் கடைசியில் எங்கே போனது என்று இப்போது யோசித்துக்கொண்டிருக்கிறேன்.