Showing posts with label கடற்கரை. Show all posts
Showing posts with label கடற்கரை. Show all posts

ஜீவித்திருப்பவர்கள்

சென்னையில் வசிப்பவர்களுக்கு, அதுவும் கடலிலிருந்து ஒரு பத்து கிலோமீட்டர்களுக்குள் வசிப்பவர்களுக்கு ஒரு செளகரியம் உண்டு. நினைத்தவுடனே அவரவர் செளகரியத்திற்கேற்ப ஏதாவதொரு வாகனத்தில் பயணித்து சடுதியில் கடற்கரையை அடைந்து கால் நனைத்துவிடலாம். கடற்கரை ஒரு அழகான பொழுது போக்கிடம். பெரியவர்கள் விரும்பினால் தங்கள் குழந்தைகள் சார்பாக ஒரு பட்டம் வாங்கிக்கொண்டு மணலில் ஒரு ஓரமாய் உட்கார்ந்து மீண்டும் குழந்தையாகி மகிழலாம். நானும் சில சமயம் அப்படியே. சென்னைக்கு வந்த இந்த நாலு வருஷத்தில் எத்தனை முறை கடற்கரைக்குச் சென்றேன் என்று கணக்கில்லை. கடற்கரைக்கு இன்னும் கொஞ்சம் பக்கமாய் வீடு மாறியபின் அநேக ஞாயிற்றுக் கிழமைகள் வண்டியை எடுத்துக்கொண்டு மெரீனாவுக்குப் போய்விடுவது வழக்கம். வார நாட்களில் கூட ஒரு சில நண்பர்களைச் சந்திக்கும் பொருட்டு இரவு எட்டு மணிக்குமேல்கூட அடிக்கடி அங்கே போவதுண்டு.

கடற்கரைக்குப் போகிற சமயங்களில் இருட்டுவதற்கு முன் சமுத்திரத்தை ஒரு முறை தரிசனம் பண்ணிவிடுகிற ஆசை எப்போதும் மேலோங்கியிருக்கும். அப்படி வாய்ப்பு அமைந்தால் என் நாலு வயசு வாண்டை மகிழ்விக்கிற சாக்கில் நானும் கொஞ்சம் அலைகளில் விளையாடுவதுண்டு. பேண்ட்டை மேலே சுருட்டிவிட்டுக் கொண்டு இறங்கி அவன் விரல்களை இறுகப் பிடித்துக் கொண்டு, முழங்காலளவு வந்து திரும்புகிற அலையில் காலடியில் மணல் சரசரவென்று நழுவ, பாதங்கள் புதைகிற அபத்திர உணர்வில் இருவரின் கைப்பிடியும் இறுகும். சில நேரம் எதிர்பாராமல் மிகப் பெரிய அலை வந்து அவனை முழுதாகவும் என்னை முகம் வரையிலும் நனைக்கிற போது உற்சாகத்தில் "க்ரீச்" என்று அருகாமை ஜனங்கள் நடுங்கிப் போகுமளவு கத்துவான். கடற்கரைக்கு போகும்போதே இருட்டியிருந்தால் இந்த விளையாட்டு ஆசையையெல்லாம் மூட்டை கட்டி வைத்துவிட்டு, வந்து திரும்பும் அலையின் மிஞ்சிய நுரையில் லேசாய் செருப்பை நனைப்பதோடு சரி. ஞாயிற்றுக் கிழமைகளில் அலைகடலென(!) திரண்டிருக்கிற கூட்டத்திற்கு கடலும் அலைகளும் ஒரு வேடிக்கைப் பொருளாக, ஒரு எக்ஸிபிஷன் தன்மையுடன் இருப்பதாக நான் எப்போதும் நினைத்துக்கொள்வேன்.

கடல் எல்லோருக்கும் பிடிக்கிறது. கடல் நீரில் கால் நனைப்பது, கடற்கரையில் கடலை சாப்பிடுவது, கடலின் விளிம்பில் உட்கார்ந்து கொண்டு காதல் பண்ணுவது, கடல் மணலில் கால் புதைய பேசிக்கொண்டே நடப்பது அல்லது வெறுமனே வேடிக்கை மட்டும் பார்ப்பது என எல்லோருக்கும் ஏதோ ஒரு விதத்தில் அல்லது எல்லா விதத்திலுமே கடலின் அருகாமை மிகப் பிடித்தமானதாக இருக்கிறது. எனக்கு கடலின் தூரத்து நேர்கோட்டு விளிம்பில் பார்வையை செலுத்தி எதையாவது யோசித்துக்கொண்டிருப்பது பிடிக்கும். கற்பனைக்கெட்டாத அதன் தூரம், ஆழம், அது மறைத்து வைத்திருக்கிற உயிரின ரகசியங்கள் எல்லாம் யோசிப்பின் தீவிரத்தில் ஆச்சரியங்களாய் விரியும். மனிதனின் பிரபஞ்ச எல்லையைப் பற்றிய வியப்பின் ஒரு மினியேச்சர் மாதிரிதான் இது. ஞாயிற்றுக்கிழமை அல்லாத மற்ற வார நாட்களில் மெரீனாவில் கடலுக்கு இன்னொரு முகம் இருப்பதுபோல் தோன்றும். அதிகம் கூட்டமில்லாமல், தன் பாட்டுக்கு ஏதோ யோசனையோடு அமைதியாய் வந்து போகிற அலைகள். அந்த எக்ஸிபிஷன் தன்மை இல்லாதிருப்பதுபோல் அல்லது கொஞ்சம் குறைந்திருப்பது போல் தோன்றும். அதுவும் இருட்டில் தூரத்துக் கப்பல் விளக்குகளோடு சேர்ந்து பார்க்கும் போது கருமை படர்ந்த கடலின் அமைதி மனதை என்னவோ செய்யும். அலைகளின் லேசான இரைச்சல் ஒரு தாலாட்டு மாதிரி இருக்கும். வாழ்க்கைக்கும் தினசரி பரபரப்புக்கும் இடையை இருக்கிற பிணைப்பு தற்காலிகமாய் அறுந்த மாதிரி கொஞ்சம் ஆசுவாசமாகத் தோன்றும். திரும்பி மெயின் ரோட்டுக்கு வரும்வரைதான் அந்த ஆசுவாசம் எல்லாம். டிசம்பர் 26க்கு ஒரு வாரத்துக்கு முன் மனைவி மகனுடன் ஒரு இருட்டின மாலையில் அலைகளுக்கு நெருக்கமாய் தூர வானத்தில் எரிநட்சத்திரம் விழுவதைப் பார்த்துக்கொண்டு உட்கார்ந்திருந்தபோதுகூட இதே ஆசுவாசம் மனதில் நிறைந்திருந்தது.

அதற்கப்புறம் ரொம்ப நாளைக்கு கடற்கரைப்பக்கம் போக முடியாமல் போய்விட்டது. போய்ப் பார்க்கவேண்டும் என்று நினைத்து ஏனோ தள்ளிப் போய்க்கொண்டேயிருந்தது. மெரீனாவை நினைக்கும்போது தினத்தந்தியின் டபுள் ஸ்ப்ரெட் ஏரியல் புகைப்படம் நினைவில் நிழலாடி மனதை பிசைகிறது. கடலையும் கடல் சார்ந்த இடங்களையும் மனதில் காட்சிப்படுத்திப் பார்க்கும்போது அந்தக் காட்சிக்குக் கீழே துக்கத்தில் தோய்த்தெடுத்த ஒரு ஸ்க்ரால் நியூஸ் ஓடுவது மாதிரி ஒரு பிரமை.

ரொம்ப நாள் கழித்து இந்த ஞாயிற்றுக்கிழமை மறுபடியும் நண்பர்களுடன் போனேன். பெசன்ட் நகர் கடற்கரை. போகும்போதே நன்றாய் இருட்டியிருந்தது. அன்றைய தினத்திற்கு கூட்டம் ரொம்பக் குறைச்சல் என்றுதான் சொல்ல வேண்டும். இன்னும் நிறைய பேர் இயல்பு நிலைக்குத் திரும்பியிருக்கவில்லையெனத் தெரிகிறது. கடற்கரை தன் முகத்தை மாற்றிக்கொண்டதுபோல் ஒரு உணர்வு. மணலில் கடலை நோக்கி நடக்கும்போது எல்லோருக்கும் கால்களில் தயக்கம் பின்னுக்கிழுக்கிறது. செருப்பைக் கழற்றிவிட்டு நடந்தால் அரைக் கிலோமீட்டருக்கு மணல்வெளியில் இன்னும் ஈரப்பதம். எப்போதும் நம்மை அற்பமாய் உணரச்செய்யும் கடல் இன்று அதன் கூடவே எல்லோர் மனதிலும் லேசான பய உணர்ச்சியையும் சேர்த்துவிட்டது. அன்று யாரும் அலையருகில் உட்கார்ந்து நான் பார்க்கவில்லை. அதுமாதிரியே கால் நனைத்து விளையாடுபவர்களும். அலைகள் தன் வழக்கமான எல்லைக் கோட்டை மாற்றி வரைந்திருந்ததாகப் பட்டது. யானொன்றுமறியேன் பராபரமே என்பதுபோல் தேமே என்றிருக்கும் கடற்பரப்பின் அகண்ட வெளியில் எல்லோர் பார்வையும் ஒரு சந்தேகத்துடன் குத்திட்டு நிற்கிறது. நாங்கள் போன அன்று பெளர்ணமிக்கு இரண்டு நாள் முந்தியாதலால் 98 சதவிகித நிலா வானத்தில் இருந்தது. பளிச்சிடும் வெண்மையான நிலவொளியில் அலுமினிய ஃபாயில்களை சுருட்டுவது போன்ற தோற்றத்துடன் இருளில் பளபளப்புடன் புரண்டு வந்த அலைகளில் கால் நனைத்தபோது உயிரின் நரம்பு லேசாக நடுங்கிச் சிலிர்த்தது. இந்தப் பிஞ்சு வயசிலேயே தொலைகாட்சிச் சேனல்களிலின் 'லைவ்' காட்சிகள் மற்றும் செய்திகள் மூலம் ஏதோ புரிந்து வைத்திருந்த என் பையன் ஒரு உறைந்த பார்வையுடன் கடலை கொஞ்சம் வெறித்துவிட்டு என் கைகளை இறுக்க்க்க்க்க்கிகொண்டு என்னை அண்ணாந்து பார்த்தவாறு மெதுவே அலை நுரைகளைக் கால் விரல்களால் தீண்டிப் பார்த்தான்.

அன்று அலையருகில் உட்காரவும் இல்லை. அதிக நேரம் நிற்கவுமில்லை. கொஞ்சம் பாதுகாப்பான தூரம் என்று பட்ட இடத்தில் மணல்வெளியில் உட்கார்ந்துகொண்டோம். பாதுகாப்பான இடம் என்பதும் பாதுகாப்பாய் இருக்கிறோம் என்கிற இந்த நினைப்பும் எத்தனை அபத்தம்!! புத்தாண்டுக்கு அடுத்தநாள் எனக்கு நேரிட்ட சின்னஞ்சிறு விபத்து கூட இதையேதான் சொல்கிறது.

கனத்த மனத்துடன் கடற்கரையிலிருந்து திரும்பி வரும்போதும் ஒரே சிந்தனை. இவ்வுலகின் இத்தனை கோடி ஜனங்களும் ஏதோ ஒன்றிலிருந்து தப்பிப் பிழைத்து இந்தக் கணம் ஜீவித்திருப்பவர்கள்தான் என்று திரும்பத் திரும்பத் தோன்றுகிறது.

இனி நல்லவையே நடக்க எல்லாம் வல்ல Super Nature Power அருள் பாலிக்கட்டும்.