மீச்சாதான் அந்தப் பெண்ணை எனக்கு முதன் முதலில் காட்டினான். நான் ஸ்தம்பித்து நின்றுவிட்டேன். நான் வாழ்க்கையில் முதன் முதலாகப் பார்க்கிற அழகான பெண். அப்போது எனக்கு வயது சுமார் 20 இருக்கலாம். நான் முதன் முதலில் அவளைப் பார்க்கும்போது எப்படியிருந்தாள் என்று கொஞ்சமாய் வர்ணித்துவிடுகிறேன். மஞ்சள் புடவை. கையில் வெயிலுக்குப் பூப்போட்ட குடை. இன்னொரு கையில் சுருட்டப்பட்ட வெள்ளைத் தாள். அவள் நல்ல நிறம். மையிட்ட அழகான கண்கள். எடுப்பாய் திருத்தப்பட்ட புருவங்கள். ரோஸ் நிறத்தில் உதடுகள். ரூஜ் உபயத்தில் சிவந்த கன்னக் கதுப்பு. நடையில் இயற்கையாய் நளினம். நீள ஜடை. எங்கள் காலனியிலிருந்து டைப் ரைட்டிங் பழக டெய்லி பதினொரு மணிக்குப் இப்படிப் போவாள் என்றான் மீச்சு. அழகு என்றால் அப்படியொரு அழகு.
அவள் கடந்தவுடன் ரோட்டில் அவள் நடந்த புழுதியைத் மீச்சா தொட்டுக் கும்பிட்டுக் கொண்டான். என்னா பிகருடா என்று அங்கலாய்த்தான். தினம் பதினோரு மணிக்கு இந்த இடத்தில் ஆஜராகிவிடுவானாம். நான் மஞ்சள் புடவை கண்ணிலிருந்து மறைகிற வரை பார்த்துக்கொண்டிருந்தேன். மீச்சா தவிர அந்தக் காலனியின் இன்னபிற இளைஞர்களும் அந்தப் பெண்ணிற்கு பெரிய அளவில் ரசிகர் மன்றங்கள் வைத்திருந்தார்கள் என்று மெல்ல மீச்சா மூலம் தெரிய வந்தது. அவள் டைப் ரைட்டிங் போகும்போது, திரும்பி வரும்போது என தினம் இரண்டு தடவை அவன் ஜென்மம் சாபல்யமடைந்துவிடுவதாகச் சொன்னான் அவன். எனக்கே அந்தக் கணம் அப்படித்தான் இருந்தது.
சினிமா டைரக்டர் யாராவது பார்த்தால் கேள்வி கேட்காமல் கொத்திக் கொண்டு போய்விடுவார்கள். அவ்வளவு செளந்தர்யமாக இருந்தாள். கண்ணில் அறைகிற அழகு என்று சொல்லலாம். மேலும் ஓரிரு தடவைகள் மீச்சுவுடன் நின்றிருக்கும்பேது அவள் போவதைப் பார்க்க நேரிட்டபோது அவள் அழகு பற்றி ஓரிரு வார்த்தைகளில் நானும்கூட சிலாகித்ததுண்டு.
ஈதிப்படி இருக்க நாங்கள் வீடு மாற்றத் தீர்மானித்தோம். அப்பா நிறைய இடம் தேடி கடைசியில் ஒரு வீட்டை முடிவு பண்ணினார். ஒரு சுபயோக சுபதினத்தில் பால் காய்ச்சி புது வீட்டுக்குக் குடிபோனாம். மாடியில் ஒன்றும் கீழே இரண்டுமாக தனி காம்பவுண்டுக்குள் போர்ஷன்கள் இருந்தன. குடிபோனதற்கு அடுத்தநாள் காலை திண்ணையில் நின்று சுற்றுப் புறத்தை பார்வையால் அளவெடுத்துக் கொண்டிருந்தேன். மாடியிலிருந்து அந்தப் பெண் நைட்டியில் இறங்கிவந்தாள். பார்த்ததும் எனக்குள் மத்தாப்பு நட்சத்திரங்கள். "நிங்ஙளானோ இவிடெ வந்நிரிக்குந்நது?" என்றாள் புன்னகைத்தபடி. நான் என்னைக் கிள்ளிப் பார்த்துக்கொண்டேன்.
அடுத்த நொடி தகவல் பரவிவிட்டது. என்னைக் குசலம் விசாரிக்க நண்பர்களெல்லாம் அடிக்கடி வீட்டுக்கு வர ஆரம்பித்தார்கள். உனக்கு எங்கயோ மச்சம்டா என்றான் மீச்சா. ரமேஷ், குண்ஸ் எல்லாம் என் மூலம் அந்தப் பெண் பற்றி இன்னபிற தகவல்களைப் பெற்று அறிவு அபிவிருத்தி அடைந்தார்கள். அவள் பெயர் விஜி என்று தெரிந்தது. அவளுக்கு கல்யாணமாகி புருஷனோடு தனியே மாடியில் வசிக்கிறாள். தினம் ஹீரோ ஹோண்டாவில் வேலைக்குப் போகிற அவள் புருஷன் அவளைவிட கொஞ்சம் சுமாராகத்தான் இருந்தான். ரெண்டு பேருக்கும் ஊர் கேரளாவாம். ரெண்டுபேரும் வீட்டு சம்மதத்துடன் லவ் மேரேஜ் பண்ணிக்கொண்டவர்களாம்.
விஜி என் அம்மாவை "சேச்சி" என்றழைத்து என் வீட்டுக்குள்ளேயே அடிக்கடி வளையவர ஆரம்பித்தாள். எங்கள் குடும்பத்துடன் நன்றாக ஒட்டிக்கொண்டும் விட்டாள். அவள் குடும்ப ஆல்பம் எல்லாம் எடுத்துவந்து காட்டினாள். சுபாவத்திலேயும், பழகுவதிலும் ரொம்ப நல்ல பெண். என்னிடம் சகஜமாய் பேச ஆரம்பித்தாள். நண்பர்கள் காதில் புகைவிட்டார்கள். "நிங்ஙளுடெ ப்ரெண்ட் எந்தினா என்னெ வெறுதெ மொறச்சு நோக்குந்நது?" என்றாள் குண்சைக் காட்டி. அவன் நார்மலான பார்வையே அப்படித்தான் என்றேன்.
அப்புறம் பிரசவத்துக்காக ஒரு ஆறுமாசம் பிறந்தவீடு போய்விட்டாள். புருஷனும் ஹீரோ ஹோண்டாவும் மட்டும் இங்கேயே இருந்தார்கள். விஜி திரும்பி வரும்போது அவளை மாதிரியே அழகான குழந்தையுடன் வந்தாள். நல்ல கொழுக் மொழுக்கென்று இருந்தது. அப்புறம் அவர்கள் குடும்பத்தில் கூடுதல் சந்தோஷம் கலகலக்க ஆரம்பித்தது.
அப்பாவுக்கு மறுபடி மாற்றலாகி நாங்கள் கோவைக்கு போகவேண்டியதாயிற்று. கிளம்புகிற நேரம் விஜி, கணவன் மற்றும் குழந்தையுடன் ஊருக்குப் போயிருந்தாள். ஆகவே அவர்களிடம் சொல்லிக்கொண்டு போகமுடியவில்லை.
கோவை வந்து ஒரு மாதிரி செட்டில் ஆகி பழைய ஞாபகத்தில் ஒருநாள் பழைய வீட்டுக்குப் போனபோது மீச்சா தகவல் சொன்னான். விஜி அவளது ஊரில் தூக்குப்போட்டுத் தற்கொலை செய்துகொண்டாளாம். என்ன நடந்ததென்று தெரியவில்லையென்றான் சோகமாய். நான் அதிர்ந்தேன். அந்தச் செய்தியை என்னால் நம்ப முடியவில்லை. ஏன் இப்படியொரு திடீர் முடிவு? அதுவும் அத்தனை பிஞ்சுக் கைக்குழந்தையை தனியாய் தவிக்கவிட்டு...என்ன காரணம் என்று மனதைக் குடைந்த கேள்விகளுக்கு இன்றுவரை விடை கிடைக்கவில்லை.
இதற்குமுன் நாங்கள் குடியிருந்த ஊரிலும் எதிர் வீட்டில் இதே மாதிரி ஒரு பெண் இருந்தாள். அவளுக்கு மாமியார் கொடுமை, புருஷன்காரனிடம் அடி என்று தினசரி பிரச்சனைகள் இருந்தன. அப்போது நான் இன்னும் ரொம்பச் சின்னப் பையன். என்றாலும் எல்லாக் காட்சிகளும் இன்னும் எனக்கு தெள்ளத் தெளிவாய் நினைவிலிருக்கின்றன. என்னக்கா பண்ணிட்டு இருக்கீங்க என்று வாசற்படியில் நிற்கிற அம்மாவிடமும் பாட்டியிடமும் கேஷூவலாக கேட்டபடி வீட்டுக்குள் வருவாள். உள்ளே வந்த மறுநிமிடம் கதவுக்குப் பின் சாய்ந்துகொண்டு குலுங்கிக் குலுங்கி அழுதபடி தன் துக்கத்தையெல்லாம் அம்மாவிடம் கொட்டுவாள். அம்மாவும் பாட்டியும் அவளுக்கு ஆறுதல் சொல்வார்கள்.
அந்த ஊரிலிருந்தும் அப்பாவுக்கு மாற்றல் ஆகி வேறு ஊர் போனோம். ஆறு மாசம் கழித்து யாரோ சொன்னார்கள். அந்தப் பெண் அவள் வீட்டுக்குள்ளேயே அதிகாலை நாலுமணிக்கு தூக்குப்போட்டுத் தற்கொலை செய்துகொண்டாள் என்று.
எனக்கு நன்றாக ஞாபகமிருக்கிறது. அவள் பெயரும்கூட விஜிதான்.
No comments:
Post a Comment
இந்தப் பதிவைப் பற்றிய உங்கள் கருத்து?