சின்ன வயதில் எனக்கு செடி வளர்ப்பது ரொம்பப் பிடிக்கும். நாங்கள் முன்பிருந்த ஊரில் குடியிருந்த வீட்டில் அடுக்களைக்குப் பின்பக்கமாய் நல்ல செம்மண் புஷ்டியுடன் ஒரு தோட்டம் இருந்தது. சிறிது காலம் வேலையில்லாமல் வெட்டியாய் வீட்டில் இருந்தபோது அப்பாவின் பார்வையைத் தவிர்ப்பதற்காய் அம்மாவுக்கு தோட்டத்தில் உதவுவது மாதிரி பாவ்லா பண்ணிக்கொண்டிருந்ததுதான் தாவரம் வளர்ப்பது குறித்தான எனது முதல் ஆவலைத் தூண்டியது எனலாம். அம்மா வெண்டைக்காய், கத்தரிக்காய், பச்சை மிளகாய் போன்ற தினசரி சமையல் வஸ்துக்களை எப்படி வீட்டுத் தோட்டத்திலேயே தயாரித்துக்கொள்வதென்கிற கலையை கற்று வைத்திருந்தாள். ஒரு தடவை தோட்டத்தில் காய்த்த அந்த முதல் பூசனிக்காயை சமைக்காமல் வைத்து வைத்துப் புளகாங்கிதமாய் பார்த்துக்கொண்டிருந்தாள்.
அம்மா காய்கறிகளை மட்டுமே பயிரிடுவது எனக்கு அத்தனை சுவாரஸ்யமில்லாமலிருந்தது. கொஞ்சம் பூச்செடிகள் வேண்டாமா? என் விருப்பத்தை அம்மாவுடன் சொன்னபோது தன் ஒரு சில காய்கறி அறுவடைகளை முடித்துக்கொண்டு எனக்கான இடம் ஒதுக்கினாள். ஒரு நண்பன் வீட்டில் பார்த்த அந்த மஞ்சள் பூச்செடியின் விதைகளை கொண்டுவந்தேன். மண்தோண்டி விதை விதைத்து, சிறிது தண்ணீரும் ஊற்றிவிட்டு பிறகு தினம் அது முளைக்கிறதா என்று வந்து வந்து பார்க்கிற சுகம் அலாதியாயிருந்தது. ஒரு துளிர் முளைத்ததைப் பார்த்துவிட்டபோது மனம் சந்தோ்ஷத்தில் துள்ளியது. ஒரு சில தினங்கள் கழித்து மஞ்சள் நிறத்தில் கொத்துக்கொத்தாய் பூத்த அதற்கு சைனா ரோஸ் என்று பெயர் சொன்னார்கள். திடீரென்று தோட்டத்துக்கு உயிர் வந்துவிட்டது. அதற்கப்புறம் ரோஜா, பட்டன் ரோஸ், குரோட்டன்ஸ்கள், நித்ய கல்யாணி, சூரியகாந்தி, செம்பருத்தி என்று என்னென்னவோ தோட்டத்தில் முளைத்துவிட்டதைப் பார்த்து அம்மா வியந்து நின்றாள். அப்பாவின் பார்வை இன்னும் கடுமையாய் மாறியது.
பிறகு திடீரென்று எனக்கு வேலை கிடைத்துவிட்டதும், வீடு மாறினதும், மாறின வீட்டில் செடிவைக்க அதிகமாய் இடமில்லாமல் போனதும் ஆக தாவரத்திட்டங்கள் பின்னாளில் கொஞ்சம் கொஞ்சமாய் கைவிடப்பட்டன. அப்பார்ட்மெண்ட் வாழ்க்கைக்குத் தாவினதற்கப்புறம் குழிதோண்டி விதைபோட்டு செடி வளர்ப்பது கற்பனையில் மட்டுமே முடிந்தது. வேண்டுமானால் தொட்டிச்செடிகளாய் சிலது வைத்து அழகுபார்த்துக்கொள்ளலாம். அவற்றிற்கு விதைகளும், கொம்புகளும், செடிகளும் கிடைத்தாலும், சுற்றிலும் சுவர்கள் மறைத்து காற்றுக்கே அனுமதி மறுக்கப்பட்டுவிட்ட அபார்ட்மெண்ட் வராண்டாவில் வெயில் எங்கேயிருந்து வரும்? பச்சையம் தயாரித்தல் எப்படி நிகழும்? இவையெதும் தேவையற்ற ஜீவனற்ற பிளாஸ்டிக் செடிகள் மேலோ அத்தனை விருப்பமில்லை.
இருந்தாலும்... விட்டுவிடமுடியுமா? அலுவலக பால்கனி மணிப்ளாண்ட் செடியிலிருந்து கொஞ்சம் களவாடிவந்து ஹார்லிக்ஸ் பாட்டிலில் பிஸ்லெரி வாட்டர் (!) நிரப்பி செடியைப்போட்டு என் மூன்றாவது மாடி பால்கனி க்ரில்லில் அதை அபத்திரமாய் தொங்க விட்டேன். ஜென்மம் சாபல்யமடைந்ததுபோல் ஒரு உணர்வு. தினம் அதன் வளர்ச்சியை உற்றுக் கவனிக்க ஆரம்பித்தேன். ஒரு இலை, இரு இலை, என்று வெயில்தேடி மணிப்ளாண்டின் கைகள் பால்கனி க்ரில்லைத்தாண்டி விரிய ஆரம்பித்தது. ஆஹா! இந்த அபார்ட்மெண்டின் வரட்டு வாழ்க்கைக்கு அர்த்தம் வந்து விட்டது. ஆனால் இப்படியும் ஒரு செடி இருக்குமா? முளைத்து மூன்று இலை விடுவதற்குள், குடிப்பதற்கே தண்ணீர் இல்லாமல் மூச்சுத்திணறுகிற நகரத்தில் நான் என்னை பாரிவள்ளல் மாதிரி நினைத்துக்கொண்டு பாட்டிலில் ஊற்றுகிற பிஸ்லெரி வாட்டரை அந்தச் செடி அசுரவேகத்தில் குடித்துக் காலிபண்ணிக்கொண்டிருந்தது. பாட்டிலில் நிரப்பிவைக்கிற தண்ணீர் இரண்டு நாள் கழித்துப்பார்த்தால் பாதிக்கு வந்துவிடுகிறது. சரியான ராட்சஸ செடிபோல என்று நினைத்துக்கொண்டேன்.
ஒரு நாள் காலை அதன் தற்போதைய வளர்ச்சிநிலையை மேற்பார்வையிட பால்கனி கதவைத் திறந்தபோது எனக்கு அதிர்ச்சி காத்திருந்தது. பாட்டில் அப்படியே இருக்கிறது. மணிப்ளாண்டைக் காணவில்லை. எங்கே போயிற்று? உடனே தாமதியாமல் பால்கனி கிரில் வழியே எட்டிப்பார்த்தேன். கண்ணுக்கெட்டிய தூரம் வரை கீழே எங்கேயும் அதன் பச்சை தட்டுப்படவில்லை. இத்தனை உயரம் ஏறிவந்து இதை யாரேனும் திருடிக்கொண்டு போகவேண்டியதன் அவசியத்துக்கு வாய்ப்பிருக்கிறதா என்று யோசித்துப் பார்த்தேன். மின்கம்பிமேல் உட்கார்ந்திருந்த காக்கைமேல் எனக்கு சந்தேகம் வந்தது. பயங்கர சோகமாகிவிட்டது. கீழே போய்த் தேடிப்பார்த்தேன். எங்கேயும் காணோம்.
சரி எனக்குக் கொடுப்பினை அவ்வளவுதான்போல என்று மனம் சமாதானத்திற்கு வந்தது. மறுபடி இன்னொரு செடியை கொண்டுவருவதுபற்றிய யோசனையைக் கைவிட்டேன். இதெல்லாம் சரிவராது போல. தண்ணீர் பாதி தீர்ந்துபோன பாட்டிலை மட்டும் அப்புறப் படுத்தாமல் அப்படியே விட்டுவைத்திருந்தேன். அது அங்கேயே இருக்கட்டும். மணிப்ளாண்ட் சில நாள் என்வீட்டில் வாழ்ந்ததை நினைவுபடுத்திக்கொண்டு.
மறுநாள் எதற்கோ மறுபடியும் பால்கனி கதவைத் திறந்தபோது அதைப் பார்த்தேன். மணிப்ளாண்ட்டை அல்ல. ஒரு அணில். கிரில் கம்பியில் ஒரு சர்க்கஸ் லாவகத்துடன் தலைகீழாக தவழ்ந்துவந்து பாட்டிலுக்குள் தலை நுழைத்து தண்ணீர் குடித்துக்கொண்டிருந்தது. ஓஹோ! இப்போது எல்லா மர்மங்களும் பளிச் என்று விளங்கிவிட்டன. மணிப்ப்ளாண்ட்டாவது இவ்வளவு வேகமாய் தண்ணீரை உறிஞ்சுவதாவது. லேசாய் சிரிப்பு வந்தது. எல்லாம் இதன் வேலை! இந்த அணிலைக் கோபித்துக்கொள்ளமுடியுமா? தண்ணீர் குடித்துவிட்டு டுபுக் டுபுக் என்று உற்சாகமாய் வாலாட்டியபடி அணில் இடத்தைக் காலிபண்ணியது.
நான் யோசிக்கவேயில்லை. உடனே சமையலறைக்கு ஓடிப்போய் கேனிலிருந்து பிஸ்லெரி வாட்டர் எடுத்துவந்து பாட்டிலில் நிறைத்தேன்.
அணிலோ செடியோ.. ஏதாவது ஒன்று. வாழ்க்கை நிறைவாயிருக்கிறது.
No comments:
Post a Comment
இந்தப் பதிவைப் பற்றிய உங்கள் கருத்து?