ஓடிக்கொண்டிருத்தல்

மரத்தடி குளிர்காலப் போட்டியில் முதல் பரிசு பெற்ற கவிதை.

நள்ளிரவில் திடுக்கிட்டுக்
கனவோடு கரணம் தப்பிய
உறக்கத்தை
மறுபடி கண்களுக்குள் சொருக
எடுத்துக்கொண்ட பயிற்சிகள்
தோல்வியுற்றிருந்தன.

ஆக
உணர்வுநிலையில்
மல்லாந்தபடி
முதல் பறவையின்
குரலுக்காய் வெகுநேரம்
விழித்திருக்கவேண்டியிருந்தது.

மெல்ல ஒரு காகம் கரைந்தது.
தொடர்ந்து பல.

நட்சத்திர வைரங்களின்
எண்ணிக்கையை சரிபார்த்துவிட்டு
இருள் மையை
ஒரு ஆரஞ்சுக் கைக்குட்டையால்
ஆகாயம் துடைக்க ஆரம்பிக்கும்போது
எழுந்துகொண்டேன்.

இனி தாமதிக்கலாகாது.

பிறந்ததிலிருந்து எரிந்து தீர்த்த
உயிர்ப்பொருளின் மிச்சத்தில்
ஓட ஆரம்பித்தேன்.

நேற்று
விட்ட இடத்திலிருந்து.

வேகமாக. சீராக.

எனக்குமுன் ஓடியவன்
வேகத்தையும்
என்னை
முந்த நினைப்பவன் வேகத்தையும்
மிஞ்சியதா தெரியவில்லை...
உதிர்ந்து உலர்ந்த சருகுகள்
மிதிபடுகிற ஒலியுடன்
தொடரும்
என் ஒற்றை ஓட்டத்தின் உத்வேகம்.

ஓடிக்கொண்டிருக்கிறேன்.
எல்லோருடையதைப் போலவும்
தூரமும் எல்லையும்
நிச்சயமற்று நீண்டுகிடந்த
என்னுடைய பாதையில்.

காலிடறிக் கவிழ்ந்த இடத்தில்
நெற்றியின் இரத்தம்.
பெயர்ந்த நகங்களின் வலி.
நித்திரை இழந்த
கண்களின் எரிச்சல்.
உச்சந்தலை நரம்பில் எரிகிற
வெயில் தழல்.
கால் தசைகளின் பெருந்தளர்வு.
பெருக்கெடுத்த தாகம்.
எவையும் ஒரு பொருட்டல்ல.

ஓடிக்கொண்டிருத்தல் அவசியமானது.
ஒரு நதி மாதிரி...
உலரும் வரை.
அது தவிர்க்க இயலாததும் கூட.

மீண்டும் பறவைகள்
அடைகிற வேளைக்குமேலும்
கொஞ்சம் தாமதமாய்
பகலில் சேகரித்த கனவுகளோடு
வேர்கள் அடர்ந்த ஒரு
மரத்தின் மடிக்கு
இளைப்பாறத் திரும்புவேன்
என்பது நிச்சயம்.

அதுவரை
ஓடிக்கொண்டிருக்க வேண்டியிருக்கிறது.
உயிர்த்திருத்தலின்பொருட்டு.

No comments:

Post a Comment

இந்தப் பதிவைப் பற்றிய உங்கள் கருத்து?