என்னைச் சுற்றி இத்தனை பறவைகளா?

Common Myna
இதை சென்ற பதிவின் தொடர்ச்சியாகக்கூடக் கொள்ளலாம். நண்பரும், பறவை ஆராய்ச்சியாளரும், புகைப்படக்கலைஞரும் ஆன கௌதம் இன்று வீட்டுக்கு வருகை புரிந்திருந்தார். அவர் கையோடு கொண்டுவந்திருந்த பையில் ஒரு நல்ல பைனாக்குலர் இருந்தது.

மொட்டைமாடியிலும் அருகிலுள்ள ஏரிக்கரையிலும் கொஞ்சநேரம் திரிந்ததில் இன்றைக்குக் கண்ணுற்ற பறவைகள் (நண்பர் உதவியோடு):

1. சிறிய நீர்க்காகம் (Little Cormorant)
2. மாடப்புறா (Blue Rock Pigeon)
3. சிறிய கரும்பருந்து (Black Shouldered Kite)
4. கூழைக்கடா (Spot Billed Pelican)
5. அரிவாள் மூக்கன் (Ibis)
6. இராக்கொக்கு (Night Heron)
7. கருங்கரிச்சான் (Black Drongo)
8. சிறு மீன்கொத்தி (Little Kingfisher)
9. வெண்மார்பு மீன்கொத்தி (White Breasted Kingfisher)
10. தையல் சிட்டு (Tailorbird)
11. ஊதாப்பிட்டத் தேன்சிட்டு (Purple Rumped Sunbird)
12. உண்ணிக்கொக்கு (Cattle Egret)
13. மைனா (Common Myna)

இதுவரை வாழ்நாளில் பார்த்திருந்த பறவைகளின் பெயர்கள் எனக்குத் தெரிந்திருக்கவில்லை. பெயர் மட்டுமே கேள்விப்பட்டிருந்த பறவைகளை இதுவரை பார்த்திருந்ததில்லை. பரபரப்பான இந்த நகர வாழ்க்கையில் என்னைச் சுற்றிப் பறக்கின்ற பறவைகளை பொறுமையாய் கவனிக்கவும் அவைகளைப் பற்றி விவரமாகத் தெரிந்துகொள்ளவும் வழிவகுத்த நண்பர் கௌதமுக்கு நன்றிகள்.

தொடர்புடைய பதிவுகள்: 1 | 2

திருட்டு மாங்காய்த் தோப்பு

நான் வசிக்கிற அபார்ட்மெண்ட்டை ஒட்டி சின்னதாய் ஒரு தோப்பு உள்ளது. ரியல் எஸ்டேட்காரர்களின் கண்களில் இன்னும் தென்படாத அல்லது தென்பட்ட பின்னரும் விற்பனை மறுக்கப்பட்டு நகரமயமாக்கலின் கரங்களில் தப்பிப் பிழைத்திருக்கும் தோப்பு. தென்னை, மா, வேம்பு, வில்வம் என பலவகையான மரங்கள் நிரம்பியது. தண்ணென்று நிழல். குளுகுளு காற்றில் சரசரவென தென்னை ஓலைகள் உரசும் ஒலி. பெயர் தெரியாத பறவைகள் கீச்சிக்கொண்டிருக்கும். நகர வாகன இரைச்சல்களிலிருந்து ஒதுங்கி, ஒரு சொல்லவொண்ணாத அமைதியுடன் இருக்கும்.

சில நேரங்களில் மரங்களுக்கு நடுவே தோப்புச் சொந்தக்காரர்களின் பிள்ளைகள் விளையாடிக் கொண்டிருப்பதைப் பார்க்கலாம். அல்லது மரங்களினிடையே கட்டிய கயிற்றில் யாராவது துணி உலர்த்திக்கொண்டிருப்பார்கள். அல்லது ஆயுள் முடிந்து வீழ்ந்துகிடக்கும் ஒரு தென்னை மரத்தின் மேல் உட்கார்ந்து ஒரு பாட்டி வேலை எதுவுமின்றி சாவகாசமாகக் காற்று வாங்கிக்கொண்டிருக்கும். மாமரங்களில் நிறைய (திருட்டு) மாங்காய்கள் தொங்கும்.

மிகப்பெரிய விவசாய விளைநிலங்களாக இருந்த இடங்கள் ஆக்கிரமிக்கப் பட்டு வீட்டுமனைகளாக மாறிய இடம் இது. சுற்றிலும் உள்ள ஏரிகள் கரை சுருங்கி சுருங்கி சின்ன தண்ணீர் தேக்கங்களாய் மாறிக்கொண்டிருக்கின்றன.  அவற்றிலும் கழிவுநீர் கலக்க ஆரம்பித்துவிட்டதால் ஏரிகளில் உலாவரும் வெண் நாரைகளும் பெலிக்கான்களும் வேறு இடம் தேடிப் பறக்க ஆரம்பித்துவிட்டன. இன்னும் கொஞ்சநாட்களில் கூகிள் மேப்பில் இந்த ஏரிகளும் மறைந்து ஏரியல் வ்யூ-வில் கட்டிடங்கள் மட்டுமே தெரியும்.

பக்கத்து மினி தோப்புக்கு நிறைய பறவைகள் வருகின்றன. கிளிகள், மைனாக்கள், புறாக்கள். தோப்பில் நிரந்தர குடியிரிமை பெற்ற பறவைகள் காலை ஐந்து மணியளவில் மெதுவாய் தங்களது கதா காலட்சேபத்தைத் துவங்கிவிடுகின்றன. மனதைவருடும் இசைக் கச்சேரி அது. மொபைலில் அலாரம் வைக்கத் தேவையேயில்லாமல் ஜன்னலில் வந்தமர்ந்து தினமும் சப்தமாய் கீச்சிடுகிறது ஏதோ ஒரு பறவை. கொஞ்சம் குண்டாக ப்ரவுன் கலந்த கருப்பில் கண்களைச் சுற்றிலும் சின்ன மஞ்சள் வட்டத்துடன் அழகாய் இருக்கிறது. ஜன்னலோரம் பதுங்கி நின்று பார்த்தாலும் ஒரு சின்ன உள்ளுணர்வில் வேகமாய் இடம்பெயர்ந்து விடுகின்றது.

சாயங்காலங்களில் பால்கனியிலிருந்து பார்த்தால் ஒரு புறாக்கூட்டம் வீட்டைச் சுற்றிச் சுற்றிப் பறந்து வரும். அவைகளின் சுற்றுப்பாதையில் ஒரு பெரிய செல்ஃபோன் டவர் உள்ளது. அதை லாவகமாக ஒரு U-turn அடித்துவிட்டு மீண்டும் எங்கள் அபார்ட்மெண்டுக்கு மேல் பறக்கும். சொல்லிவைத்தாற்போல் எல்லாப் புறாவும் படபடவென இறக்கைகளை அடித்து வேகமாய்ப் பறப்பதும் பிறகு எல்லாமே ஒரே நேரத்தில் சிறகடிப்பை நிறுத்திவிட்டு ஜிவ்வெனப் மிதந்து பறப்பதுமாக ஒரு அரைமணிநேரம் உற்சாக விளையாட்டு. அவைகளுக்குள்ளாக ஏதோ ஒரு பாஷையில் இந்த டேக் ஆஃப், லாண்டிங், ஃப்ளைட் ரூட் தகவல்களை பரிமாறியபடி பறக்கின்றன. அசாத்தியமான புரிந்துணர்வு. தினசரி அதே சுற்றுப் பாதை. அதே நேரம். அதேபோல் விளையாட்டு. ஆச்சரியம்!! ’புறாக்கள் பறந்துகொண்டிருக்கும்” என்ற ஆதவனின் சற்றே பெரிய சிறுகதையொன்றின் தலைப்பு ஞாபகம் வருகிறது.

நகரத்தின் மத்தியில் பரபரப்புக்கு மத்தியில் அதிக காற்றும் வெளிச்சமும் இல்லாத ஒரு இடத்தில் ஏழெட்டு வருடங்கள் வசித்துவிட்டு வந்தவனுக்கு சென்னைப் புறநகர்ப் பகுதியில் இந்த சூழ்நிலை மிகப் பெரிய ஆசுவாசத்தைத் தந்திருக்கிறது. பசுமை என்பதை ப்ளாஸ்டிக் செடிகளில் மட்டுமே காணக் கிடைக்கிற நகரவாழ்க்கையில் இது ஒரு தற்காலிக அதிர்ஷ்டம்.

பக்கத்துத் தோப்பின் மாமரங்களுக்கு அடியில் கயிற்றுக் கட்டில் போட்டு கொஞ்சநேரம் உலகம் மறந்து உறங்கவேண்டுமென்று தோன்றுகிறது. சுற்றிலும் காம்பவுண்டும் அத்துமீறி நுழைபவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்கிற எழுதப்படாத மானசீக அறிவிப்புப்பலகையும் தடுக்கின்றன.

உங்களுக்கு நாடகங்கள் பிடிக்குமா?

‘பேய்க்காமனாக’ திரு. சண்முகராஜா
நேற்று மதியம் நடிகர் திரு. சண்முகராஜா அவர்களை சந்தித்து உரையாடும் வாய்ப்புக் கிடைத்தது. தனது இயல்பான, மிகையில்லாத நடிப்பின் மூலம் ஐம்பதுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்து தமிழ்த் திரையுலகில் தனக்கென ஒரு தனித்துவமான இடத்தைப் பிடித்திருப்பவர். விருமாண்டியில் ’பேய்க்காமன்’ எனும் பாத்திரத்தில் வந்து தன் நடிப்பாற்றலை மக்கள் மனதில் நிலை நிறுத்தியவர். தில்லியில் உள்ள தேசிய நாடகப் பள்ளியில் பயின்றவர். எளிமையான பேச்சுடன் இனிமையாகப் பழகும் சுபாவத்துக்குச் சொந்தக்காரர்.

நிகழ் நாடக மய்யம்
சினிமா மட்டுமின்றி நாடகக் கலையையும் தன் சுவாசமாக எண்ணி அதற்கென பல வேலைகள் பின்னணியில் செய்துகொண்டிருப்பவர். 2002-ல் மதுரையில் ‘நிகழ் நாடக மையம்’ என்ற ஒன்றைத் தொடங்கி அதன் மூலம் நாடகங்கள், பயிலரங்குகள், கருத்தரங்குகள். கலை விழாக்கள், நூல் வெளியீடுகள் ஆகியவற்றை நடத்தி நாடகக்கலையை பரவலாக்கிக்கொண்டிருப்பவர். இவரது தயாரிப்பிலும் இயக்கத்திலும் எண்ணற்ற நாடகங்களை அரங்கேற்றியிருக்கிறார். சண்முகராஜா தமிழ் இலக்கியத்தில் எம்.ஃபில் பட்டம் பெற்றவர்.

பேச்சினிடையே திரு. சண்முகராஜா, அவரது ஒருங்கிணைப்பில் ஜனவரி 11 முதல் 20 வரை பத்து நாட்களுக்கு தேசிய அளவிலும் உலக அளவிலுமான பல நாடகக் குழுக்களின் நாடகங்கள் சென்னையில் அரங்கேற்றப்படவுள்ளன என்பதைக் குறிப்பிட்டார். ஆர்வமேற்பட்டு மேற்கொண்டு அவரிடம் தகவல் சேகரித்ததில் கிடைத்த விவரங்கள் நாடகக் கலைப் பிரியர்களுக்கு நிச்சயம் உபயோகமாகும் என்கிற வகையில் கீழே கொடுத்துள்ளேன்.

டெல்லியிலுள்ள தேசிய நாடகப் பள்ளி (National School of Drama) “பாரத் ரங்மஹோத்சவ்” என்னும் அகில உலக நாடக விழாவை கடந்த பன்னிரண்டு வருடங்களாக நடத்தி வருகிறது. தேசிய அளவிலும் உலக அளவிலுமான நாடகக்குழுக்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடகங்கள் இந்த விழாவில் அரங்கேற்றப்படுவது வழக்கம். ஆசியாவிலேயே குறிப்பிட்டுச் சொல்லவேண்டிய நாடக விழா இது.

இந்த வருடம் தேசிய நாடகப் பள்ளியானது தமிழ்நாடு கலை மற்றும் பண்பாட்டுத் துறையுடன் இணைந்து பாரத் ரங்மஹோத்சவ்-13- இணை நாடக விழாவை (Parallel Theatre Festival) முதன் முறையாக சென்னையில் நடத்தவுள்ளது.

பாரத் ரங்மஹோத்சவ்

இந்த விழாவில் ஃப்ரான்ஸ், ஈரான், சீனா, கொரியா, அர்ஜென்டினா, இங்கிலாந்து, போலந்து, நேபாளம் என எட்டு அகில உலக நாடகங்களும் பதினொரு இந்திய நாடகங்களும் பங்குபெறுகின்றன. இதைத் தவிர நாடகங்கள் மற்றும் நாடகக்குழு சம்பந்தப்பட்ட கண்காட்சியும் இடம்பெறுகிறது.

குறிப்பிட்ட நாடகம் முடிந்த அடுத்தநாள் காலை 10.30 மணிக்கு நாடகத்தில் பங்கு பெற்றவர்கள் மற்றும் இயக்குநருடன் பார்வையாளர் சந்திப்புக்கும் ஏற்பாடு செய்யப்படுகிறது.

அரங்கேற்ற நாட்கள் : ஜனவரி 11 முதல் 20 வரை.

நடைபெறும் இடங்கள்: சென்னை ம்யூசியம் தியேட்டர் மற்றும் சர் முத்தாவெங்கட சுப்பாராவ் அரங்கம் (லேடி ஆண்டாள்).

நேரம்: தினம் மாலை 6.00 மணி மற்றும் 7.45 மணி அளவில் (ஒவ்வொரு மாலையும் இரண்டு இடங்களில் இரண்டு நாடகங்கள் என்கிற விகிதத்தில் 19 நாடகங்கள் அரங்கேறுகின்றன.).

நாடகங்களின் மேலும் நாடகக்கலையின் மேலும் ஈடுபாடு கொண்டவர்கள் நிச்சயம் தவறவிடக்கூடாத நிகழ்வு இது என்று கருதுகிறேன்.

அரங்கேற்றப்படும் நாடகங்கள் பற்றிய விவரங்களுக்கு கீழேயுள்ள சுட்டியைக் கிளிக்கவும். நண்பர்களுக்கும் சொல்லுங்கள்.

நிகழ்ச்சி நிரல்

தேசிய நாடகப்பள்ளியின் இணையதளம்

பின்னே ஞானும்

'வாஸந்தியும் லக்ஷ்மியும் பின்னே ஞானும்' என்றொரு மலையாளப்படம் கொஞ்ச வருடத்துக்கு முன் வந்தது. ரொம்ப அருமையான தலைப்பு என்றெல்லாம் சொல்லமுடியாது. படம் வெற்றியடைந்து பிரபலமானதோ இல்லையோ இந்தத் தலைப்பு மெகா ஹிட் ஆகிவிட்டது. அதற்குப் பின் எழுத்தாளர்களுக்கு தன் படைப்புகளுக்குத் தலைப்பு வைப்பதில் உள்ள நீண்டகால சிக்கல் எளிதில் நீங்கிவிட்டது போலும். எப்படி? ரொம்ப சுலபம். படைப்போ உடைப்போ எழுதி முடித்தவுடன் அதற்கு ஒரு தலைப்பும் கிடைக்கவில்லையெனில் உடனே எழுதியவற்றில் உள்ள ஏதாவது இரண்டு விஷயங்கள் அல்லது வார்த்தை களை தேர்ந்தெடுத்து அத்தோடு 'பின்னே ஞானும்' என்று சேர்த்துக்கொண்டால் தீர்ந்தது பிரச்சனை. இன்ஸ்டண்ட் தலைப்பு. பொருத்தமாகவும் இருக்கும்.

இவ்வாறாக நான் ஒப்பேற்றிய ஒரு பதிவின் தலைப்பு 'பையனும் டார்வினும் பின்னே ஞானும்.' அதற்கப்புறம் இதே மாதிரியான நிறைய தலைப்புகள் அவ்வப்போது கண்ணில் பட்டுக்கொண்டிருந்தன. இன்றைக்கு நண்பர் ரவி ஆதித்யாவின் வலைப்பதிவை எதேச்சையாய் மேய்ந்துகொண்டிருந்தபோது இதே பாணியில் 'ஹரியுடன் நானும் பின்னே டிவி சமையலும்' என்று தலைப்பு வைத்திருந்ததைப் பார்த்தேன். திடீரென்று இப்போது உற்றுக் கவனித்ததில் அநேகம் பேர் இந்த 'பின்னே ஞானும்' டைட்டில் வைப்பதை தொடர்ந்து வழக்கத்தில் வைத்திருப்பதாகப்பட்டது. இப்போதைக்கு இது ஒரு ட்ரெண்ட்-ஆகவே மாறிவிட்டும் இருக்கிறது என்று நினைக்கிறேன். உலகின் மிக ஜாலியான தலைப்பு என்கிற அந்தஸ்தை இது பெற்றுவிட்டது போலும். தன் தலைப்பு இப்படி பிரபலமாகிவிட்டது ஒரிஜினல் 'பின்னே ஞானும்' இயக்குநருக்கே தெரியுமா என்று தெரியவில்லை.

சற்று சுவாரஸ்யம் கொண்டு கூகிளில் கொஞ்சம் ஆராய்ந்ததில் மேலும் சுவாரஸ்யமான டைட்டில்கள் பல கிடைத்தன. கொஞ்சம் பெரிய லிஸ்ட் என்றாலும் சும்மா படித்து வையுங்களேன்.

டெல்லி கணேஷும் பின்னே ஞானும்
தோப்பும் புங்கை மரமும் பின்னே ஞானும்.
சுஜாதாவும் ஜெயமோகனும் பின்னே ஞானும்.
Torrent-உம் Badminton உம் பின்னே ஞானும்.
நேசமித்ரனும் நண்பர்களும் பின்னே ஞானும்.
ஞானும் சயன்ஸூம் பின்னே கொறச்சு காமெடியும் .
அண்ணாகண்ணனும் மீராஜாஸ்மினும் பின்னே ஞானும்.
பரிசலும் கோவியும் பின்னே ஞானும்.
போப்பும் ஷோவும் முனியும் பின்னே ஞானும்.
நானும் ஜாக்கி சேகரும் பின்னே அனானியின் வாந்தியும்.
வால்பையனும் வாசிப்பும் பின்னே ஞானும்.
ஞானும் பின்னே ஞானும் நடுவே ஞானமும்.
ஒரு செல்போனும் கிப்ட் கவரும் பின்னே ஞானும்.
Black Label ம் noodles ம் பின்னே ஞானும்.
ராஜாவும் சாருவும் பின்னே ஞானும்.
மஹாராஷ்டிராவும் பொங்கலும் பின்னே ஞானும்.
ஆனந்த விகடனும் அட்டைப்பட அழகியும் பின்னே ஞானும்.
ஈரோடும் லேடீஸ் ஹாஸ்டலும் பின்னே ஞானும்.
ஃப்ராய்டும் ஃபிரான்சிஸ் சேவியரும் பின்னே ஞானும்.
அத்னான் சாமியும் ஆசாத் அண்ணனும் அய்யனாரும் பின்னே ஞானும்.
பார்வதி ஓமனக்குட்டனும் பின்னே ஞானும்.
டேனியும் ஞானும் பின்னே என்டெ ஹஸ்பென்டும்.
பாட்டும் கதக்கும் குச்சுப்புடியும் பின்னே ஞானும்.
ஜகன் மோகினியும் அதிஷாவும் பின்னே ஞானும்.
சுந்தராம்பாளும் கருணாநிதியும் கமல்ஹாசனும் பின்னே ஞானும்.
சுனாமியும் பல்வலியும் பின்னே ஞானும்.
மலையாளபூமியில் நிங்களும் கள்ளும் பின்னே ஞானும்.
ஞானும் தற்கொலையும் பின்னே கொலையும்.
வண்டிக்காரத் தெரு மாரியம்மனும் ஆயில்யனும் பின்னே ஞானும்.

குதிரைகள் நடக்கின்றன

நேற்று சென்னை கோட்டூர்புரத்தில் புதிதாகத் திறக்கப்பட்டுள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்திற்குச் சென்றிருந்தோம். நான், தங்கமணி, பையன். நான் வாழ்நாளில் பார்த்த மிகப் பெரிய நூலகம் இதுதான். ஒரு ஐ.டி பார்க் கட்டிடம் போன்ற அமைப்பு. மோஸ்தர். மெட்டல் டிடெக்டருடன் செக்யூரிட்டி. மிகப்பெரிய லாபி. ஒளி விளக்குகள். லிஃப்ட். கட்டப்பட்டுக்கொண்டிருக்கும் எஸ்கலேட்டர்கள். வெளிச்சத்தை பிரதிபலிக்கும் பளபளவென்ற தரை. கண்ணாடிக் கதவுகள், ஜன்னல்கள். சொகுசு இருக்கைகள். ஜம்மென்று சோபாக்கள்.

முதல் மாடியில் குழந்தைகளுக்கென்று மிகப் பெரிய பிரிவு. ஒரு பிக்னிக் போன்று பெற்றோர்களுடன் மகிழ்ச்சியாக வாண்டுகள் வந்து செல்கிறார்கள். ஆயிரக்கணக்கான குழந்தைகளுக்கான புத்தகங்கள். மல்டிமீடியா சிடிக்களுடன் கம்ப்யூட்டர்கள். சுவர்களில் கார்ட்டூன் படங்கள்.

இரண்டாம் மாடியில் இரண்டு பிரிவுகளாக தமிழ் புத்தகங்கள். இலக்கியம், புதினம், சிறுகதைகள் என்று ரக வாரியாக பிரிக்கப்பட்டு அழகாக அடுக்கப்பட்டிருக்கின்றன. மூன்றாவது, நான்காவது, ஐந்தாவதிலெல்லாம் என்ன இருக்கிறதென்று பார்க்கவில்லை. இன்னும் திறக்கப்படாததால் அனுமதியில்லை.

லைப்ரரி என்று இப்படி ஒரு விஷயம் உலகில் இருப்பதை முதன் முறையாகப் பார்த்து பையன் மலைத்து நின்றுவிட்டான். தங்கமணிக்கோ அத்தனை புத்தகங்களைப் பார்த்து கண்ணில் நீர் துளிர்த்துவிட்டது. காரணம் தங்கமணி ஒரு ஓயாத புத்தகப் புழு. என்னைவிட அதிக புத்தகம் படித்த/படிக்கிற ஆள் என்ற வகையில் எனக்கு தங்கமணிமேல் லேசான பொறாமைகூட உண்டு.

புத்தகங்கள் தவிர கூட்டங்கள் நடத்துவதற்கென கூடங்களும், குறும்படங்கள் திரையிடுவதற்கான தியேட்டர் வசதிகளும் உருவாக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன. அது தவிர இன்னும் எத்தனையோ வசதிகள். கூடிய விரைவில் அவைகளும் பயன்பாட்டுக்கு வரும்.

தின/வார/மாத பத்திரிகைகள் பிரிவில் கணிசமான பேர் புத்தகங்கள் மேய்ந்துகொண்டிருந்தார்கள். தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் வெளிவரும் அத்தனை வாராந்திர, மாதாந்திரங்களும் அலமாரிகளில் பெயரிடப்பட்டு ஒழுங்காக வைக்கப்பட்டிருக்கின்றன. அங்கே இருக்கிற ஒரே பிரச்சனை காலடிச் சத்தம். ஹைஹீல்ஸ் அல்லது கட்டையான செருப்புப் போட்ட பெண்களும், ஷூ அணிந்த ஆண்களும் புத்தகம் தேடி அலமாரிகளிடையே நடக்கும்போது ஃப்ளைவுட் தரையில் டடக் டடக் என்று குதிரைக் குளம்படிகள் போன்ற சப்தம் அகாலமாய்க் கேட்கிறது. படிப்பவர் கவனம் சிதறுகிறது. அதுவே நிறைய பேர் நடக்கும்போது பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பெனிகள் குதிரைப்படையுடன் மறுபடி ஊருக்குள் உலவுகிற எஃபெக்ட் ஏற்படுகிறது. மற்ற தளங்களைப் போல இங்கேயும் தரையில் கார்ப்பெட் போட்டால் இந்தக் குதிரைகள் பூனைகள் ஆகும்.

மற்றபடி இது பிரம்மாண்டமான ஒரு ஹை-டெக் லைப்ரரி. உறுப்பினராகச் சேர விண்ணப்பங்கள் கொடுக்கப்படுகின்றன. ஜனவரி முதல் புத்தகங்கள் எடுத்துக்கொள்ளலாமாம்.

இந்த நூலகம் பற்றி நிறைய தெரிந்துகொள்ள விரும்புபவர்கள் இந்த வலைப்பதிவை அணுகலாம். இந்த நூலகம் பற்றி எக்கச்சக்கமான விவரங்கள் தரப்பட்டிருக்கிறது.