Showing posts with label தோப்பு. Show all posts
Showing posts with label தோப்பு. Show all posts

திருட்டு மாங்காய்த் தோப்பு

நான் வசிக்கிற அபார்ட்மெண்ட்டை ஒட்டி சின்னதாய் ஒரு தோப்பு உள்ளது. ரியல் எஸ்டேட்காரர்களின் கண்களில் இன்னும் தென்படாத அல்லது தென்பட்ட பின்னரும் விற்பனை மறுக்கப்பட்டு நகரமயமாக்கலின் கரங்களில் தப்பிப் பிழைத்திருக்கும் தோப்பு. தென்னை, மா, வேம்பு, வில்வம் என பலவகையான மரங்கள் நிரம்பியது. தண்ணென்று நிழல். குளுகுளு காற்றில் சரசரவென தென்னை ஓலைகள் உரசும் ஒலி. பெயர் தெரியாத பறவைகள் கீச்சிக்கொண்டிருக்கும். நகர வாகன இரைச்சல்களிலிருந்து ஒதுங்கி, ஒரு சொல்லவொண்ணாத அமைதியுடன் இருக்கும்.

சில நேரங்களில் மரங்களுக்கு நடுவே தோப்புச் சொந்தக்காரர்களின் பிள்ளைகள் விளையாடிக் கொண்டிருப்பதைப் பார்க்கலாம். அல்லது மரங்களினிடையே கட்டிய கயிற்றில் யாராவது துணி உலர்த்திக்கொண்டிருப்பார்கள். அல்லது ஆயுள் முடிந்து வீழ்ந்துகிடக்கும் ஒரு தென்னை மரத்தின் மேல் உட்கார்ந்து ஒரு பாட்டி வேலை எதுவுமின்றி சாவகாசமாகக் காற்று வாங்கிக்கொண்டிருக்கும். மாமரங்களில் நிறைய (திருட்டு) மாங்காய்கள் தொங்கும்.

மிகப்பெரிய விவசாய விளைநிலங்களாக இருந்த இடங்கள் ஆக்கிரமிக்கப் பட்டு வீட்டுமனைகளாக மாறிய இடம் இது. சுற்றிலும் உள்ள ஏரிகள் கரை சுருங்கி சுருங்கி சின்ன தண்ணீர் தேக்கங்களாய் மாறிக்கொண்டிருக்கின்றன.  அவற்றிலும் கழிவுநீர் கலக்க ஆரம்பித்துவிட்டதால் ஏரிகளில் உலாவரும் வெண் நாரைகளும் பெலிக்கான்களும் வேறு இடம் தேடிப் பறக்க ஆரம்பித்துவிட்டன. இன்னும் கொஞ்சநாட்களில் கூகிள் மேப்பில் இந்த ஏரிகளும் மறைந்து ஏரியல் வ்யூ-வில் கட்டிடங்கள் மட்டுமே தெரியும்.

பக்கத்து மினி தோப்புக்கு நிறைய பறவைகள் வருகின்றன. கிளிகள், மைனாக்கள், புறாக்கள். தோப்பில் நிரந்தர குடியிரிமை பெற்ற பறவைகள் காலை ஐந்து மணியளவில் மெதுவாய் தங்களது கதா காலட்சேபத்தைத் துவங்கிவிடுகின்றன. மனதைவருடும் இசைக் கச்சேரி அது. மொபைலில் அலாரம் வைக்கத் தேவையேயில்லாமல் ஜன்னலில் வந்தமர்ந்து தினமும் சப்தமாய் கீச்சிடுகிறது ஏதோ ஒரு பறவை. கொஞ்சம் குண்டாக ப்ரவுன் கலந்த கருப்பில் கண்களைச் சுற்றிலும் சின்ன மஞ்சள் வட்டத்துடன் அழகாய் இருக்கிறது. ஜன்னலோரம் பதுங்கி நின்று பார்த்தாலும் ஒரு சின்ன உள்ளுணர்வில் வேகமாய் இடம்பெயர்ந்து விடுகின்றது.

சாயங்காலங்களில் பால்கனியிலிருந்து பார்த்தால் ஒரு புறாக்கூட்டம் வீட்டைச் சுற்றிச் சுற்றிப் பறந்து வரும். அவைகளின் சுற்றுப்பாதையில் ஒரு பெரிய செல்ஃபோன் டவர் உள்ளது. அதை லாவகமாக ஒரு U-turn அடித்துவிட்டு மீண்டும் எங்கள் அபார்ட்மெண்டுக்கு மேல் பறக்கும். சொல்லிவைத்தாற்போல் எல்லாப் புறாவும் படபடவென இறக்கைகளை அடித்து வேகமாய்ப் பறப்பதும் பிறகு எல்லாமே ஒரே நேரத்தில் சிறகடிப்பை நிறுத்திவிட்டு ஜிவ்வெனப் மிதந்து பறப்பதுமாக ஒரு அரைமணிநேரம் உற்சாக விளையாட்டு. அவைகளுக்குள்ளாக ஏதோ ஒரு பாஷையில் இந்த டேக் ஆஃப், லாண்டிங், ஃப்ளைட் ரூட் தகவல்களை பரிமாறியபடி பறக்கின்றன. அசாத்தியமான புரிந்துணர்வு. தினசரி அதே சுற்றுப் பாதை. அதே நேரம். அதேபோல் விளையாட்டு. ஆச்சரியம்!! ’புறாக்கள் பறந்துகொண்டிருக்கும்” என்ற ஆதவனின் சற்றே பெரிய சிறுகதையொன்றின் தலைப்பு ஞாபகம் வருகிறது.

நகரத்தின் மத்தியில் பரபரப்புக்கு மத்தியில் அதிக காற்றும் வெளிச்சமும் இல்லாத ஒரு இடத்தில் ஏழெட்டு வருடங்கள் வசித்துவிட்டு வந்தவனுக்கு சென்னைப் புறநகர்ப் பகுதியில் இந்த சூழ்நிலை மிகப் பெரிய ஆசுவாசத்தைத் தந்திருக்கிறது. பசுமை என்பதை ப்ளாஸ்டிக் செடிகளில் மட்டுமே காணக் கிடைக்கிற நகரவாழ்க்கையில் இது ஒரு தற்காலிக அதிர்ஷ்டம்.

பக்கத்துத் தோப்பின் மாமரங்களுக்கு அடியில் கயிற்றுக் கட்டில் போட்டு கொஞ்சநேரம் உலகம் மறந்து உறங்கவேண்டுமென்று தோன்றுகிறது. சுற்றிலும் காம்பவுண்டும் அத்துமீறி நுழைபவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்கிற எழுதப்படாத மானசீக அறிவிப்புப்பலகையும் தடுக்கின்றன.