Showing posts with label பாட்டி. Show all posts
Showing posts with label பாட்டி. Show all posts

நடுநிசிப் பேய்கள்

எங்கள் பாட்டி கதை சொல்லி வளர்ந்தவளா இல்லை கதை சொல்லி வளர்க்கப்பட்டவளா என்று எனக்குத் தெரியாது. ஆனால் பாட்டி ஒரு நல்ல கதை சொல்லி. என் கதைவிடும் திறன்கூட பாட்டி தன் டி.என்.ஏ குணாம்சங்களை எனக்குத் தாரை வார்த்துக்கொடுத்ததுதானோ என்றொரு சந்தேகமுண்டு.

பாட்டி சொல்கிற கதைகளில் தொண்ணூற்றைந்து சதவீதம் அட்வென்சர், திரில்லர், ஹார்ரர் ரகமாகத்தான் இருக்கும். கேட்கிறவர்கள் அதிகபட்சம் சின்னப் பையன், பொண்ணுங்களாக இருந்ததால் நெஞ்சுறைந்து கேட்டுக் கிடப்பார்கள். பி.டி. சாமி ரேஞ்ஜில் அமானுஷ்யமான கதைகள் நிறைய சொல்வாள். ஊரில் நடந்தது. அக்கம்பக்கத்தில் நடந்தது என்று விழிகள் விரிய கதைசொல்லி பயமுறுத்துவாள். கேட்டால் இரண்டு நாட்களுக்குத் தூக்கம் வராமல் புரள வேண்டியிருக்கும்.

மோயாறு மின்சார வாரிய க்வார்டஸில் இருந்தபோது நிகழ்ந்தவை என்று சிலது சொல்வாள். அப்போது நான் ஒரு வயசுக் குழந்தையாம். மோயாறு - மலைமேல் அமைந்திருக்கிற ஒரு அடர் காடு. வனத்துறை மற்றும் மின்சார வாரிய ஆட்கள் மட்டுமே புழங்குகிற இடம். EB க்வார்டஸில் சொற்பமாய் வீடுகள். எல்லோரும் சாயங்காலம் ஏழு மணிக்கெல்லாம் கதவைச் சாத்தி விடுவார்கள் என்று பாட்டி சொல்வாள். காரணம் காட்டு யானைகள். கூட்டமாய் வீட்டு வாசலுக்கு வந்து முன்புற தோட்டத்தில் இருக்கிற வாழை மரங்களை தினசரி துவம்சம் செய்துவிட்டுப் போய்விடுமாம். ஜன்னல் கதவை நூல் இடைவெளியில் திறந்து வைத்து இருட்டுக்குள் யானைகளைப் பார்த்துக்கொண்டிருப்பார்களாம். அவைகள் கண்ணில் பட்டால் வாழை மரங்களுக்கு ஏற்படுகிற கதிதான் நமக்கும் என்றாள் பாட்டி. ஒரு முறை அப்பா நண்பர்கள் சிலருடன் எங்கேயோ போய்விட்டு வருவதற்கு லேட்டாக, திரும்பி வரும்போது இருளில் சடசடவென சப்தம் கேட்டதாம். ரொம்ப அருகில் ஒரு பெரிய காட்டு யானை மூத்திரம் பேய்ந்து கொண்டிருக்கிற சப்தம்தானாம் அது. அங்கிருந்து பிடித்த ஓட்டம் வீட்டுக்கு வந்துதான் நின்றார்களாம்.

ஒரு வைல்ட் லைஃப் எக்ஸ்பெர்ட் மாதிரி மேலும் சில கதிகலக்குகிற விஷயங்கள் சொல்வாள். யானை தவிர இருட்டினதும் திருப்பதி லட்டு சைஸுக்கு ஒரு வண்டு டொக் டொக் என்று ராப்பூராவும் கதவில் மோதிக்கொண்டே இருந்தது, ஒரு சிறுத்தை தன் இரு குட்டிகளுடன் வீட்டுக் கூரையில் விடிகாலையில் உட்கார்ந்து கொண்டு கர் கர் என்று கத்திக்கொண்டிருந்தது என்று நிறைய சொல்வாள். நான் இதையெல்லாம் பின்னாளில் கதைகளாய்க் கேட்கும்போது ஆறாங்கிளாஸோ என்னமோ படித்துக்கொண்டிருந்தேன்.

மலையிலிருந்து இறங்கி டவுனுக்கு வந்த பிறகு பாட்டியின் கதைகளில் மாறுதல் வந்துவிட்டன. திடீரென்று ஒரு நாள் காலையில் எழுந்ததும், இரவு ஏதோ ஒரு அமுக்கான் (இது பற்றி தனியே எழுதவேண்டும்) தன் கழுத்தைப் பிடித்து மூச்சுத் திணறும்வரை வெகு நேரம் அமுக்கிக்கொண்டிருந்துவிட்டு பின் போய்விட்டதாக சொன்னாள். இன்னொரு நாள் எதற்கோ வீட்டுக்குள்ளிருந்து வெளியில் வந்தபோது வானத்தில் ஒரு தேர் வந்து நின்றதாகவும், அதிலிருந்து தேவர்கள் மாதிரி இருவர் பாட்டியை தம்முடன் வருமாறு அழைத்ததாகவும், பிறகு என்ன தோன்றியதோ சட்டென்று தேரைத் திருப்பிக்கொண்டு சர்ரென்று போய்விட்டதாகவும் சொன்னாள். அவர்கள் போனபிறகு வானத்தில் கழுத்தில் மட்டும் வெள்ளை நிறமிருக்கும் பருந்து வட்டமடித்துப் போனதாகவும் ரொம்ப உணர்ச்சிவசப்பட்டுச் சொன்னாள். அன்றைக்குக் காலை நாலு வீடு தள்ளி ஒரு பாட்டி பரலோக பதவியடைந்துவிட்டதை தன் கதையின் ஒரு அத்தியாயமாய் சேர்ந்துகொண்டு அதற்கு தெளிவுரையும் அளித்தாள். தன்னைக் கூப்பிட வந்த தேர் அந்தப் பாட்டியை அழைத்துக்கொண்டு போய்விட்டதாம். எதைச் சொன்னாலும் அப்படியே நம்புகிற வயதல்லவா? கேட்டதும் எங்களுக்கு அடிவயிற்றுத் திகில் அதிகமாகிவிட்டது.

பாட்டி பக்கத்துவீட்டில் லலிதா என்று ஒரு பெண் இருந்ததாகவும் அது ஒருநாள் தற்கொலை செய்து கொண்டதாகவும் அதன் ஆவி அந்த வீட்டுக்குள்ளேயே அலைவதாகவும் சொல்லி ஒருநாள் பயமுறுத்திவிட்டாள். நான் இரவில் எழுந்து பாத்ரூம் போவதைக்கூட நிறுத்திவிட்டேன். அவள் தினமும் நடுநிசியில் பின்புற சந்தில் இருக்கிற கதவைத் தட்டுவதாகவும், யாரும் திறக்காவிட்டால் லேசாய் தேம்பி அழுகிற சப்தமும் கேட்கும் என்றாள். மல்லிகைப் பூ வாசம் வரும். ஜல் ஜல் என்று கொலுசொலி எல்லாம் கேட்கும் என்பாள். பாட்டி இதையெல்லாம் சும்மா மேம்போக்காய் சொல்லிவிட்டுப் போக மாட்டாள். ஒரு சினிமாத் தயாரிப்பாளரிடம் ஒரு புது இயக்குநர் எப்படி கதை சொல்வாரோ அப்படி சொல்வாள். கைகாலெல்லாம் ஆட்டி, விழிகள் விரித்து முக பாவங்களோடு. கேட்கிற பொடிசுகளுக்கு குலை நடுங்கிவிடும்.

எனக்கு ஒருநாள் நடுநிசியில் விழிப்பு வந்தது. மணி பன்னிரண்டரை இருக்கும். பாட்டி சொன்னது சட்டென்று ஞாபகம் வந்தது. உற்றுக் கேட்டபோது பக்கத்துவீட்டில் கதவைத் தட்டுகிற சப்தம் கேட்டது. எனக்கு உடலெங்கும் ஒரு முறை சிலிர்த்து அடங்கிவிட்டது. போர்வையை சர்ரென்று இழுத்து தலையோடு முக்காடிட்டுக் கொண்டேன். கொலுசு சப்தத்தைக் காதுகள் தேடின. மல்லிகைப் பூ வாசம் வருகிறதாவென பார்த்தேன். கொஞ்ச நேரத்தில் கதவு தட்டல் சப்தம் பலமாகிவிட்டது. பிறகு சட்டென்று நின்றுவிட்டது. பேய் போய்விட்டது போலும். நான் பிறகு இரவு முழுவதும் தூங்காமல் நடுங்கிக் கிடந்தேன். அதன்பிறகும் ஒரு சில நாட்களில் அந்தச் சப்தத்தை மறுபடி மறுபடி கேட்டிருக்கிறேன்.

பாட்டி இதுமாதிரி அதற்கப்புறம் சொன்ன நிறைய கதைகள் ராஜேஷ்குமாரின் "உலராத ரத்தம்" சுஜாதாவின் "கொலையுதிர் காலம்". இந்துமதியின் "ஒரு நிமிடம் தா ஒரு கொலை செய்கிறேன்" ஆகியவைகளை மிஞ்சுகிற திகில் கதைகளாக இருந்தன.

பிறகு ஒருநாள் தெரிந்துவிட்டது. டெக்ஸ்டைல் மில்கள் நிறைந்த ஊர் அது. பகல் மூன்று மணிக்கு மில்லுக்குப் போய்விட்டு நடுநிசி பன்னிரண்டு மணிக்குத் வீட்டுக்குத் திரும்பும் பணியாளர்களின் நடுநிசிக் கதவு தட்டல்தான் நான் தினசரி கேட்டுக்கொண்டிருந்தது.

நான் வளர்ந்தபிறகு என் வீடு இருக்கிற காலனிக்குப் போகிற குறுக்கு வழியான இருளடைந்த சோளக்காட்டுக்குள் பென் டார்ச் துணையுடன் தனியாக நடக்கும்போது பாட்டி சொன்ன பேய்க்கதைகள் ஞாபகத்துக்கு வரும். சிரித்துக்கொண்டே நடப்பேன். ஆனால் அந்த ஒற்றை மரத்தைத் தாண்டி நடக்கும்போது மட்டும் கொஞ்சம் அமானுஷ்யமாக இருக்கும்.

என் நண்பன் சதீஷ் எப்போது வீட்டுக்கு வந்தாலும் பேய்க்கத சொல்லுங்க பாட்டி என்று விரும்பிக் கேட்டு உட்கார்ந்துவிடுவான். ஜாலியாய் சிரித்துக்கேட்டு பாட்டியை கொஞ்சம் கிண்டல் பண்ணி விளையாடிவிட்டுப் போய்விடுவான்.

பாட்டி இப்போது இல்லை. பாட்டி சொன்ன கதைகள் அப்படியே நெஞ்சுக்குள் பத்திரமாய் அதே திகில் வாசனைகளோடு இருக்கின்றன.

இப்போதுகூட எங்கள் அபார்ட்மெண்டில் நடுநிசியில் ஏதோ ஒரு வீட்டில் அடிக்கடி கதவு பலமாய் தட்டப்படும் சப்தம் கேட்டது. ஜல் ஜல் என்று கொலுசு சப்தம்கூட கேட்கிறது. பாட்டியை நினைத்துக்கொண்டு காலையில் மெதுவாய் விசாரித்தபோது "கால் சென்டர்ல வேலைங்க. நைட்டு வேன்ல கொணாந்து ட்ராப் பண்ணிருவாங்க" என தகவல் கிடைத்தது.

ஒரு கடிதம்

நான் என் முதல் கடிதத்தை எப்போது யாருக்கு எழுதினேன் என்பது நினைவில்லை. பத்தாம் வகுப்பு பரீட்சை முடிந்ததும் "தாஜ் தியேட்டரில் சினிமாவுக்குப் போகலாமா?" என்று நாலுவீடு தள்ளி இருக்கிற கணேஷூக்கு என் தம்பியிடம் கொடுத்தனுப்பிய துண்டுச் சீட்டுகூட என் முதல் கடிதமாக இருந்திருக்கலாம். எங்கேயோ எப்படியோ தொடங்கிவிட்டது அது. அடிக்கடி படிப்பு வேலையென எல்லோரும் இடம் மாற நேர்ந்த சூழ்நிலைதான் யாருக்காவது கடிதமெழுதுவதன் அவசியத்தைத் ஏற்படுத்தியது என்றாலும்.. சில முக்கியமான தகவல்களைத் தெரிவிப்பதற்கென என்று இல்லாமல்.. அது பின்னாளில் ஒரு சுவாரஸ்யமான விஷயமாகிவிட்டது. அப்போது கடிதமெழுதுவதென்பது ஒரு போதை மாதிரி. அந்த அனுவங்களையெல்லாம் சொல்ல இங்கே இடம் போதாது. கடிதமெழுதுவதில் என்னென்ன புதுமைகள் செய்ய முடியுமோ அத்தனையும் பண்ணி தபால்காரரிடம் வாங்கிக் கட்டிக்கொண்ட சம்பவங்களும் உண்டு. உதாரணத்துக்கு போஸ்ட் கார்டில் படம் ஒட்டி லே-அவுட் செய்து அனுப்புவதும், அட்ரஸை தலைகீழாய் பின்கோடிலிருந்து ஆரம்பித்து எழுதுவது.. இன்னபிற! இன்றைய தேதிக்கு நான் எழுத்துலகுக்கு நல்லமுறையில் அறிமுகமாயிருப்பதற்கு கடிதப் பயிற்சி முதல் மூலகாரணம். நானும் இலக்கியம் சார்ந்த என் நண்பர்களும் எழுத்துநடையைப் பக்குவப்படுத்திக்கொண்டதற்கு கடிதம் எழுதுவதை ஒரு கருவியாய் உபயோகித்துக்கொண்டோம் என்று நிச்சயம் சொல்லலாம்.

போஸ்ட் கார்டு, இன்லேண்ட் லெட்டர், என்வலப் என்று மாய்ந்து மாய்ந்து என் நண்பர்கள் எழுதிய கடிதங்களைக் கிழிக்க மனமில்லாமல் எடுத்துவைத்ததில் ஒரு சூட்கேஸ் நிறைய குவிந்து கிடக்கிறது. அதில் நிறைய கடிதங்கள் இப்போது நிறம் மங்கி பழுப்பேறத்துவங்கிவிட்டது, கொஞ்சமல்ல - ரொம்பவே வருத்தமாயிருக்கிறது. சந்தோஷப்பட வைத்தது, வேதனைகளைக் கொண்டுவந்தது.. தளர்ந்தபோது உத்வேகமும், உற்சாகமும் அளித்தது, எரிச்சலடைய வைத்தது, நெகிழ்வாய் கண்கலங்க வைத்தது.. துள்ளிக் குதிக்க வைத்தது... வாய்விட்டுச் சிரிக்க வைத்தது, தர்மசங்கடத்தில் நெளிய வைத்தது.. யாருக்கும் சொல்லாதே என்று ரகசியங்களைத் தாங்கி வந்தது.... இப்படி எண்ணற்ற கடிதங்கள். என்றோ, யாரோ எழுதிய கடிதத்தை இப்போது எடுத்துப்படித்துப் பார்ப்பது சுகமான விஷயம். ஆனால் ஒரு சில சமயம் என்றோ நடந்த ஒரு நிகழ்வுக்கு இன்று படிக்கும்போது மனசை கனக்கச் செய்யும்விதமான கடிதங்களும் அதில் உண்டு.

நேற்று அதுமாதிரி பழையவைகளை லேசாய் கிளறியபோது கண்ணில்பட்டது ஒரு கடிதம். 75 பைசா இன்லண்ட் லெட்டர். பதினைந்து வருடம் முன்னால் என் நண்பர் சரசுராம் எனக்கெழுதியது. படிக்கும்போது அந்தக் கடிதத்தில் புதைந்திருந்த, அது எழுதப்பட்ட காலத்தின் வேதனையை இப்போதுகூட உணரமுடிந்தது. அந்தக் கடிதம் அத்தனை பர்சனலாக இல்லாமல் பொதுவாய் ஒரு சிறுகதைத்தனத்துடன் இருந்ததால், இங்கே அதை பகிர்ந்துகொள்கிற விருப்பத்தை எனக்குக் கொடுத்தது. ஆக, சரசுராமின் அனுமதியுடன் அதை இதோ இங்கே...

-----------------------------------------------------------------------------------------------------
பொள்ளாச்சி
4-4-91

"வாழ்க்கை என்பது துவந்த யுத்தமா? விரிந்த கனவா? ஆச்சரிய நிமிடங்கள் அடங்கிய கதையா? தீக்குள் விரலை வைத்துத் தீண்டும் இன்பத்தைக் காணும் தவமா? எனக்கு இன்னும் விடை கிடைக்கவில்லை." - மாலன்.

*****

ப்ரிய ரகுவிற்கு....ராம்

இந்தக் கடிதம் முழுவதும் பாட்டியைப் பற்றியே எழுதும் எண்ணம் நான் முன்பே யோசித்ததல்ல. ஆனால் அது தவிர, தற்போதைய என் நினைப்பில் அல்லது ஏதோவொரு நியாயத்தில் இடமில்லை. போன வாரத்தின் ஒரு தினத்தில், புழு மாதிரி சுருண்டு கிடந்த பாட்டியை பார்த்துவிட்டு மாமா அழுதாரே பார்க்கணும். எல்லோரும் நிறுத்தச்சொல்ல.. முடியவே முடியாமல் அழுதார். எனக்கு சமாதானப்படுத்த விருப்பமேயில்லை. அழட்டும்! நிறைய அழட்டும் என்றுதான் இருந்தது. ஒரு துக்க நேரத்தில் சமாதானம் சொல்வதைவிட வேறென்ன அசிங்கம் இருந்துவிடமுடியும்? அழுகை நிஜமாய் மனதின் கவிதை. அது தரும் ஒத்தடம் வார்த்தைகளில் இல்லை. நம்மால் பிரியப்பட்டவர்களின் உயிர் நாட்கள் எண்ணப்படுவது எவ்வளவு கொடுமை? ஏழு வருட தண்டனைக்குப்பின், சாவின்போதுகூட ஒரு சின்ன சுகத்துடன் போக முடியாத அவர்களின் நிலைமை எதிரிக்குக்கூட ஏற்படக்கூடாது. ஒரு மனித உயிர் இவ்வளவு தூரம் சித்திரவதைக்கப்படுவதைக் நான் பார்ப்பது இதுவே முதன் முறை.

கடவுள் மீதான எண்ணத்தில் மேலும் விரிசல் விழுந்துகொண்டிருப்பதெல்லாம் இத்தகைய நிகழ்ச்சியின்போதுதான். பாட்டி கும்பிடாத சாமியா? அவர்கள் செய்யாத பூஜையா? அவர்களிடம் இல்லாத சுத்தமா? செய்யாத நல்லவைகளா? பிறகும் இவர்களுக்கு இப்படியொரு நிலைமை என்றால்...? தீர்க்கமுடியாத பிரச்சனைக்கு விதி என்று பெயரிட்டு... - எல்லாம் விதியெனில் கடவுள் எதற்கு?

தினம் தினம் எல்லோரும் சுற்றிலும் நின்று பாட்டியை வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். பாட்டிக்கு வந்தவர்களில் எத்தனைபேரை அடையாளம் கண்டுகொள்ள முடிந்தது என்பது தெரியாது. ஆனால் வந்தவர்களைப் பார்க்கும் அந்த ஸ்நேகமான பார்வை கொஞ்சமும் இன்னும் குறையவேயில்லை. வந்தவர்கள் நீ பிழைக்கவே மாட்டாய் என்கிற மாதிரிதான் ஆறுதல் சொல்கிறார்கள். தலையசைத்தால்... தண்ணி வேணுமா? என்கிறார்கள். கண் உருண்டால் காபியா வேணும்? என்கிறார்கள்.

பாட்டி எல்லோருக்கும் ஒரு குழந்தை. அவரின் ஒவ்வொரு அசைவுக்கும் காரணங்கள் திணிக்கப்படுகிறது. பாட்டி உயிருள்ள ஒரு ஜடம். பாட்டியை எண்ணுகிறபோதெல்லாம், அவர்கள் பற்றி நினைவுகள் தோன்றாமல் இருப்பதில்லை. ஒவ்வொருவரைப்பற்றியும் நினைக்க ஏதாவதொரு நினைவு நிச்சயம் இருக்கும். அது பெரியவர்களானாலும்.. ஒருவயது குழந்தையானாலும் கூட!

உள்ளே நுழைந்ததும் தனக்கு தெரிந்த முறையில் வரவேற்கும் பாங்கும், சாப்பிடச்சொல்லி, டீ குடிக்கச் சொல்லி.. திக்கிக் திக்கித் துண்டு துண்டாய் வந்து விழும் வார்த்தைகளும், அதை மறுக்கிறபோது.. அந்த முகச்சுருக்கம் மீறி தெரிகிற அசைவுகளும், (நான் கோபமென நினைத்துக்கொள்வதுண்டு!). இதற்கிடையில், சில சந்தோஷ நிமிடங்களில், அந்தக் கோணிப்போன வாயிலிருந்து வரும், இன்னும் மறந்துபோகாத சில பாடல்களும்... இன்னமும் சின்னச் சின்னதாய் என்னென்னவோ... மறக்க நாளாகும். எப்படி அழகு ததும்பின உருவம் அது! இப்போது முழுவதும் உருகிப்போய்.. வெறும் எலும்புக்கூடும், அதற்குப் பாதுகாப்பென மிக லேசாய் தொங்கும் தோலும்.. ச்சே.. வாழ்க்கை வெறுப்பாகிப் போகிறது.

திங்கட்கிழமை, நானும் மாமாவும், கோயிலுக்குப் போய் குங்குமத்துடன் வீடு திரும்ப, வீட்டில் கூட்டம். பாட்டி மூச்சுத்திணறிக் கொண்டிருந்தார்கள். வாயில் ஒரு வித சப்தம். கையிலிருந்த குங்குமம் வைக்கச்சொன்னார்கள். வைத்து ஐந்து நிமிடத்தில் உயிர் பிரிந்தது. அந்த உயிர் பிரிந்த நிகழ்வு, எல்லோருக்கும் அழுகையை வெளிப்படுத்த, எனக்கு மட்டும் சந்தோஷமாயிருந்தது.

அன்புடன்
-ராம்.