என் வீட்டிலிருந்து மகா தொலைவிலிருக்கும் சென்ட்ரல் ரயில் நிலையத்திலிற்கு இன்று காலை போக வேண்டியிருந்தது. நான் எப்பவும் தேர்ந்தெடுக்கிற பிரயாண உபாயம் முதலில் ஒரு பேருந்து பிடித்து பரங்கி மலை ரயிலடி வரை சென்று பிறகு எலெக்ட்ரிக் ட்ரெய்ன் பிடித்து ‘பார்க்’ -ல் இறங்கிக் கொள்வது.
இன்று அதேபோல் செய்ய நினைத்து வந்து நின்ற ஒரு பேருந்தில் ஏறி கண்டக்டரிடம் பத்து ரூபாயை நீட்டியபோது “இன்னும் ஒர்ருவா குடுங்க” என்றார். அதாவது ஏழு ரூபாய் டிக்கெட் இப்போது ரூபாய் பதினொன்று. வெறும் நாலேகால் கிலோமீட்டர் தூரத்திற்கு. ‘அட அநியாயமே..’ என்றார் பொது ஜனம் ஒருவர்.
பழக்க தோஷத்தில் கம்மியாக காசை நீட்டியவர்களிடமெல்லாம் ”பதினோரு ரூபா குடுங்க” என்று கட்டண உயர்வை நினைவு படுத்திக்கொண்டிருந்தார் கண்டக்டர். ஒரு மூதாட்டி “எப்பவும் ஏழு ரூவா தான? இன்னாத்துக்கு பதினோர்ரூவா கேக்குற?” என்று நியாயம் கேட்டதற்கு “இது டீலக்ஸ் பஸ்” என்றார் கண்டக்டர்.
இதைக் கேட்டதும் நான் பேருந்துக்குள் சுற்றுமுற்றும் பார்த்து ஏதாவது டீலக்ஸ்தனமான விஷயம் அகப்படுகிறதா என்று தேடினேன். சொல்லிக்கொள்கிறார்ப்போல் பெரிதாக ஒன்றும் இல்லை. சும்மா கைப்பிடிக் கம்பிகளுக்கு மஞ்சள் பெயிண்ட் அடித்து கல் மாதிரியிருக்கிற ரெக்ஸின் இருக்கைகள். அவ்வளவுதான். மற்றபடிக்கு சாதா பேருந்திற்கும் இதற்கும் என்ன வித்தியாசம் என்று புரியவில்லை. மாறாக, மெதுவாக ஓட்டினாலே அந்த பேருந்தை உருவாக்கப் பயன்படுத்தியிருந்த மொத்த தகரமும், ஃபைபர் சமாச்சாரங்களும், இன்னபிற முக்கிய உதிரி பாகங்களும் அநியாயத்துக்குத் தடதடத்தன. ட்ரைவர் ஒவ்வொரு தடவை கியர் மாற்றும் போதும் பிருஷ்டத்தில் “நங்”-கென்று ஒரு அதிர்வு ஓடியது. தவிர ஒவ்வொரு ஸ்டாப்பில் நின்று கிளம்பும் போதும் ”தடங்” என்று நடு ரோட்டில் எஞ்ஜின் தற்காலிக மரணமடைந்து கொண்டிருந்தது. “இன்னாப்பா ட்ரைவர்.. உன் டீலக்ஸ் வண்டிய எறங்கி தள்ளணுமா?” என்று பின்னாலிருந்து யாரோ குரல் கொடுத்தார்கள்.
கட்டணம் உயர்த்தப்பட்டு மூன்று நாட்களாகியும் மக்கள் அதிர்ச்சியிலிருந்து மீளவில்லையென்பது பேருந்தினுள்ளே கேட்ட சில சம்பாஷணைகளிலிருந்து தெரிந்தது. ஒரு சில பொதுஜனக் குமுறல்கள் நிஜமாகவே வருத்தத்தை வரவழைத்தன. விலைவாசி உயர்வு என்கிற ஏவுகணை நேரடியாக வந்து தாக்குமிடம் நடுத்தர மற்றும் அடித்தட்டு மக்களின் வயிறுதான் என்பது அவர்களின் பேச்சின் ஒவ்வொரு வரியிலும் வெளிப்பட்டுக்கொண்டிருந்தது. அங்கலாய்ப்புகளுக்குப் பிறகு அரசாங்கத்தைச் சபிக்கும் வார்த்தைகளும் வந்து விழுந்தன. நாலேகால் கிலோமீட்டரைக் கடப்பதற்குள் பேருந்துக் கட்டண உயர்வு பற்றி அநேகம் பேர் தங்களின் ஏகோபித்த எதிர்ப்பை காற்றில் பதிவு செய்திருந்தார்கள்.
பரங்கிமலை ரயிலடியில் இறங்கி மீதமுள்ள பதினேழேமுக்கால் கிலோமீட்டரை எலெக்ட்ரிக் ட்ரெய்னில் வெறும் ஐந்தே ரூபாய் மட்டும் கொடுத்து சென்றடைந்தேன். கூடிய விரைவில் இதையும் இரண்டுமடங்காக உயர்த்திவிட்டால் உலக அரங்கில் தமிழ்நாடு வல்லரசாக மாற பிரகாசமான வாய்ப்புள்ளது.
மக்களின் இந்தக் கட்டண உயர்வுக் கவலைகளை மறக்க நவீன எலைட் மதுபான பார்களைத் திறக்கவும் அரசு முடிவு செய்திருக்கிறதாகச் செய்திகள் கூறுகின்றன.
‘குடி’யுயர கோல் உயரும்தான்.
இன்று எனக்கும் இதே அனுபவம்தான். போ.கழகமும், அதில் போகும் மக்களும் பரிதாபம். திவாலிலிருந்து காக்க விலையுயர்வு தவிர்க்க முடியாமல் இருக்கலாம். ஆனால் எல்லா வகை பேருந்துகளுக்கும் ஒரே விலை நிர்ணயித்தால் நாம் பாக்கட் சற்று மூச்சு விடும்.
ReplyDeleteமக்களின் இந்தக் கட்டண உயர்வுக் கவலைகளை மறக்க நவீன எலைட் மதுபான பார்களைத் திறக்கவும் அரசு முடிவு செய்திருக்கிறதாகச் செய்திகள் கூறுகின்றன.
ReplyDelete‘குடி’யுயர கோல் உயரும்தான். super report - but not for me ( i don't drink)