உலகத் தொலைகாட்சி

நான் முதன் முதலில் டி.வி பார்த்தது என் ஒன்பதாம் வகுப்புத் தோழன் நாகராஜ் வீட்டில்தான். என் வீடிருந்த தெருவுக்கு அடுத்த சந்தில், படுத்திருக்கும் ஒரு சில நாய்களைக் கடிவாங்காமல் தாண்டிப் போனால் அவன் வீடு வரும். தரையில் தாருக்குப் பதில் சிமெண்ட் ஸ்லாப்களாகப் பதித்திருக்கும் சந்திலிருந்து செங்குத்தாக ஐந்து படிகள் ஏறினால் அவன் வீட்டின் முன்னறை. அதற்கு நேராய்த் தெரியும் அதற்கு அடுத்த அறையில் அதை வைத்திருந்தார்கள். நீலச்சாம்பல் கலரில், வீட்டுக் கூரையின் ஆண்டென்னா உபயத்தில் அப்போதெல்லாம் தூர்தர்ஷன் மட்டுமே. நிகழ்ச்சிகளைவிட "தடங்கலுக்கு வருந்துகிறோம்"-ஐ அதிகம் ஒலிபரப்பின தொலைக்காட்சி. ஒரு நிகழ்ச்சி முடிந்ததும் கிடைக்கிற இடைவெளியில் ஒரு ரோஜாப்பூ ஸ்லைடு போட்டு லொட் லொட் என்று பட்டறையில் தட்டுகிற சப்தம் மாதிரி ஒரு ம்யூசிக் போடுவார்கள்.

நான் புதன் கிழமையானால் எட்டுமணிக்குத் தவறாமல் போய் அவன் வீட்டு முன்னறைப்படியில் உட்கார்ந்துவிடுவேன். (உள்ளே போகமுடியாதபடிக்கு எக்கச்சக்கமான கூட்டம் இருக்கும்) அங்கிருந்து பார்த்தாலே ஓரளவுக்கு ரிஷிகபூர், ஹேமமாலினி எல்லாம் தெளிவாகத் தெரிவார்கள். சித்ரஹாரைத்தான் சொல்கிறேன். சாட்டிலைட்டிலிருந்து புரியாத ஹிந்திப் பாடல் காட்சிகளை டெக்னாலஜித் தூண்டில் போட்டு இழுத்து திரையில் காண்பிக்கும் அந்தப் பெட்டியை எல்லோரும் வியந்து வியந்து பார்த்துக்கொண்டிருந்த காலம் அது. அதிலும் நீலம் என்று ஒரு நடிகை அடிக்கடி ஏதாவதொரு பாட்டில் வருவது பிடித்துப் போய் வாராவாரம் தவறாமல் பார்த்துக் கொண்டிருந்தேன். சித்ரஹார் போட்டாலே நாகராஜ் வீடு நிரம்பிவிடும். அவன் வீட்டை விட்டால் வேறு டி.வி அந்தத் தெருவில் எங்கும் இல்லாதிருந்தது.

டி.வி ஓடும்போது தவறாமல் விளக்குகள் அனைத்தையும் அணைத்துவிடுவார்கள். இருட்டுக்குள் நீலத்திரை மட்டும் ஒளிரும். சித்ரஹாரைத்தவிர அடுத்ததாய் அதிக மவுசு உள்ள நிகழ்ச்சியாய் கிரிக்கெட் மேட்ச்தான் இருந்தது. கிரிக்கெட் என்றால் ஒரு கஜம் என்ன விலையாகிறதென்று கேட்பவனாகிய நான், ஹிர்வானி என்ற பட்டையாய் கண்ணாடி போட்ட ப்ளேயர் ஓடி ஓடி வந்து பவுலிங் போடுவதை கண்கொட்டாமல் பார்த்துக்கொண்டிருந்தேன். நடுநடுவில் வருகிற "வா்ஷிங் பெளடர் நிர்மா" அப்புறம் கபில்தேவ் வருகிற "பூஸ்ட் - ஸீக்ரெட் ஆஃப் மை எனர்ஜி" எல்லாம் எத்தனை தடவை போட்டாலும் பார்ப்பேன். அப்புறம் கணேஷ் வீட்டில் அதைவிட பெரிய டி.வி வாங்கினதும் பெரிய செளகரியமாய் போய்விட்டது. 1. அவன் வீடு நாகராஜ் வீட்டைவிட இன்னும் கிட்டத்தில் இருந்தது. 2. தாண்டவேண்டிய கடிநாய்களின் எண்ணிக்கை குறைவு 3. கணேஷ் வீட்டு உள்ளறையிலேயே சேர் போட்டு உட்கார்ந்து பார்க்கலாம். 4. டி.வி நிகழ்ச்சிகளின் நடுவே அவன் அம்மாவின் அன்பான டீ கிடைக்கும். ஆனால், அதுவும் கருப்பு வெள்ளைதான். தவறாமல் அதற்கும் முகத்தில் ஒரு நீலக் கண்ணாடி அணிவித்திருந்தார்கள். அந்த கணேஷாகப்பட்டவன் பல சமயம் டி.வியை ட்யூன் பண்ணுகிறேன் பேர்வழி என்று புஸ் என்று சப்தத்துடன் எப்போதும் புள்ளி புள்ளியாய் ஓடவிடுவான். அது ஓரளவு அட்ஜஸ்ட் ஆகி திரையில் காட்சி தெரிவதற்கு ஒரு அரைமணி ஆகிவிடும். அவன் வீட்டு டிவியில் புள்ளிகளைத்தவிர என்னெல்லாம் பார்த்தேன் என்று தெள்ளத் தெளிவாக ஞாபகமில்லை. அசுவாரஸ்யமாகப் பாரத்த ஓரிரு கிரிக்கெட் மேட்ச்கள் மட்டும் ஞாபக நிழலில் துண்டு போட்டு உட்கார்ந்திருக்கின்றன.

கொஞ்சநாள் கழித்து ஜாகை மாறி வேறு ஊருக்குப் போனபோது டி.வி என்கிற வஸ்துவின் உள்ளடக்கம் பொருளடக்கம் எல்லாம் மாறியிருந்தது. தூர்தர்ஷனில் ஒளியும் ஒலியும் என்று ஸ்லைடுபோட்டு வெள்ளிக்கிழமை அமர்களப்பட ஆரம்பித்தது. பெண்கள் அன்றைக்கு எட்டு மணிக்குள் அவசரமாய் கோவிலுக்குப் போய்விட்டு பறந்தோடி வீட்டுக்கு வர ஆரம்பித்தார்கள். டி.வி வைத்திருந்த பக்கத்துவீட்டுப் புண்ணியவான்கள் தயவில் கமலும் ரஜினியும் வீட்டுக்கு வந்துவிட்டுப்போனார்கள். நிகழ்ச்சிக்கு இடையிடையே ஸ்டேஷனில் ஒளி, ஒலி இரண்டும் கட்டாகும். முன்பு சொன்னதுபோல், தடங்கலுக்கு வருந்துவதாக தகரத்தட்டல் பிண்ணனி இசையோடு ஸ்லைடு போட்டுவிட்டு விட்ட இடத்திலிருந்து தொடர்வார்கள். டி.வியில் ஒலியும் ஒளியும் மட்டுமல்லாது ஞாயிறு மதியம் 1 மணிக்கு NFDC படங்கள் ஒலிபரப்பாகின்றன என்று தெரிந்தபிறகு எங்கள் ரசனை நரம்புகள் உசுப்பப்பட்டு அதையெல்லாம் நண்பர்கள் குழாமுடன் விழுந்து விழுந்து பார்க்க ஆரம்பித்தோம். இதில் பெரும்பாலும் மலையாள நடிகர் கோபி நடித்த கலைப்படங்கள். வாழ்க்கையில் நிறைய பொறுமையை கற்றுக்கொண்டது இந்த காலகட்டத்தில்தான் என்று சொல்லலாம். (ஒரு படத்தில் கோபி ஒரு பூங்காவின் இந்த கேட்டிலிருந்து அந்த கேட் வரை பதினைந்து நிமிடம் நடந்து கடந்ததை உதாரணத்துக்குச் சொல்லலாம்.) கலைப்படங்கள் பார்ப்பதற்கான வயது அது அல்ல என்பதனால் அவைகளை ரசிக்க முடியாமல் மனதில் ஒட்டாமல் போய்விட்டன.

எல்லோர் வீட்டிலும் டி.வி வந்துவிட்டதே என்று குமார் எலெக்ட்ரானிக்ஸ்க்கு போய் ஃபிலிப்ஸ் போர்ட்டபிள் கருப்பு வெள்ளை ஒன்றை பூஸ்டருடன் சேர்ந்து என் அப்பாவும் வாங்கிவந்துவிட்டார். அன்றைக்கு மொட்டை மாடியில் ஒரு மிக நீளமான இரும்பு பைப்பின் உச்சியில் ஆன்டென்னாவை மாட்டுவதற்குப் பட்ட பாடு நன்றாய் ஞாபகமிருக்கிறது. பைப்பின் தலையில் ஆன்டென்னாவை மாட்டிவிட்டு அப்படியே புவியீர்ப்பு விசைக்கு எதிராய் அதை தூக்க வேண்டும். ஒரு கழைக்கூத்தாடியின் லாவகத்துடன் பாலன்ஸ் செய்து அது சரிந்து மண்டையில் விழுவதற்கு முன்பாக மொட்டைமாடிக் கைப்பிடிச்சுவரில் அடிக்கப்பட்டிருக்கும் க்ளாம்ப்-ல் சட்டென்று மாட்டிவிட வேண்டும். இப்படியாக எங்கள் வீட்டிலும் டி.வி.

அதற்கப்புறம் உலகம் படுவேகமாக சுருங்க ஆரம்பித்தது. ஆன்டென்னாவை கேரளத்தின் திசை நோக்கித் திருப்பினால் ஒளியும் ஒலியும் மற்றும் சித்ரஹாருக்கு கொஞ்சமும் குறைவில்லாத "சித்ர கீதம்" தெரிகிறது என்பதை என் அப்பா R&D பண்ணிக் கண்டுபிடித்தார். திருவனந்தபுரம் சேனல். வியாழக்கிழமை எட்டு மணிக்கு! ஆக கொஞ்சம் கொஞ்சமாய் எல்லோருடைய நேரத்தையும் சாப்பிட ஆரம்பித்தது டி.வி. நடுநடுவே Turning Point, The world this week போன்ற உருப்படியான நிகழ்ச்சிகள். ரேணுகா சஹானே மற்றும்... ம்ம்.. இன்னொருவர் பெயர் மறந்துவிட்டது... அவர்களிருவரும் சேர்ந்து நடத்திய "சுரபி" நான் வெகுவாக விரும்பிப் பார்த்த ஒன்று. அப்புறம் ்ஷாருக் கான் நடித்த ஃபாஜி மற்றும் சர்க்கஸ் என்ற ஸீரியல்கள். பங்கஜ் கபூர் நடித்த ஒரு சோக ஸீரியல். R.K. நாராயணின் மால்குடி டேஸ். மோகன் கோகலே நடித்த "மிஸ்டர் யோகி", திலிப்குமார் என்கிற ஒரிஜினல் பெயரில் ஏ. ஆர். ரஹ்மான் டைட்டில் மியூசிக் போட்ட உகாதி புரஸ்கார், அடிக்கடி ஒலிபரப்பின பூபேந்தர் சிங், மிடாலி கச்சேரி (பின்னாளில் இளையராஜா இந்த மிடாலியை "தளபதி" படத்தில் பாடவைத்ததற்கு நான் உளமாற பூரிப்படைந்தேன்), இடையிடையே ரெமோ ஃபெர்னாண்டஸ் பாப், ஜாவத் ஜாஃப்ரி நடனம் என்று கலவையாய் ஒரு மாதிரி பார்த்த வரைக்கும் நிறைவாகவே இருந்தது. டி.வியை மிக விரும்பிய காலகட்டம் அது. அருகில் போனால் அந்தக்கால ப்ளாக் அண்ட் ஒயிட் டி.விக்கு ஒரு வாசனைகூட இருந்ததாக ஒரு உணர்வு. பிரமையா என்று தெரியவில்லை. அதன் சேனல் செலக்டரை கடக் கடக் என்று திருப்பிப் பார்ப்பதில்கூட ஒரு சுகம் இருந்தது.

ராமாயணம், மகாபாரதம் என்று மெகா சீரியல்கள் ஆரம்பித்தபிறகுதான் டி.வி தன் உண்மையான சொரூபத்தைக் காட்ட ஆரம்பித்தது. அப்புறம் சந்திரகாந்தா வந்தவுடன் வில்லனின் யக்க்கூ யக்க்கூ என்ற கூவல் கேட்டது. ஜூனூன் வந்து ரசிகப் பெருமக்களைப் புரட்டிப்போட்டதில். தமிழகத்திற்கு புதிய தமிழ் கிடைத்தது. அப்புறம் சேனல்கள் ஒன்றாகி இரண்டாகி பல்கிப் பெருகத் தொடங்கின. அபாயமான உடைகளில் M டிவியில் 11 மணிக்குமேல் மாவு அரைக்க ஆரம்பித்தார்கள். ஆங்கில எழுத்துக்களின் அத்தனை எழுத்துகளிலும், அத்தனை கோள்களின் பெயரிலும் சேனல்கள் வர ஆரம்பித்தன. டெலிபோனில் கால்போட்டு பிடித்தபாட்டு கேட்க ஆரம்பித்தார்கள் மக்கள். கால்மேல் கால்போட்டு திரைப்பட விமர்சனம். நன்கு சூடான தோசைக்கல்லில் ஒரு டம்ளர் தண்ணீரை விசிறி அடிக்கும்போது எழும் சப்தம் மாதிரி துவக்க ம்யூசிக் போட்டு பயமுறுத்துகிற குரலில் தலைப்புச் செய்தி சொன்னார்கள். விளம்பர இடைவேளைகள் அதிகமாயின. டி.வியை தூரத்திலிருந்தே இயக்கிக்கொள்கிற வசதி வந்ததற்கப்புறம் மனிதன் இன்னும் அலைபாய ஆரம்பித்தான். 100 சேனல்கள் அவனுக்குப் போதவில்லை. இப்போது திரும்பின பக்கமெல்லாம் ஒளியும், ஒலியும்தான். தோசைமாவு, முறுக்குக் கம்பி, பேரீட்சம்பழத் தயாரிப்பாளர்கள் நிகழ்ச்சிகளுக்கு உபயதாரர்களாக ஆனார்கள். இடுப்பு வெட்டுகிற குத்துப்பாட்டுகளும், உதட்டு முத்தமும், நீர்வீழ்ச்சியில் உடல்கள் நனைந்த டூயட்டும், மேலாடை துறந்த ஃபேஷன் சேனல்களும் நம் அருமைக் குழந்தைகளுக்கு காணக்கிடைத்தன. வீடுதோறும் சீரியல்களின் ஒப்பாரி. காமெடி ஷோக்களில் நாம் சிரிப்பதற்கு வேலை வைக்காமல் அவர்களே ரெகார்டட் சிரிப்பலையை கூடவே ஒலிபரப்பிவிடுகிறார்கள். உலகத்தொலைகாட்சிகளில் முதன்முறையாக திரைக்கு வந்து சில தினங்களே ஆன படத்தை போட்டு ஐந்தே மணிநேரத்தில் முடித்துவிடுகிறார்கள். பெண்களை கும்பலாய் ஆடவிட்டு ஜவுளிக் கடல் விளம்பரங்கள் எடுக்கிற யுக்தி நமக்கு பழகிவிட்டது. நவரத்தினக்கல், வாஸ்து, எண்கணிதம் என்று திரையின் ஒவ்வொரு சதுர செ.மீ பரப்பையும் வாடகைக்கு விட்டுவிட்டார்கள். சினிமாவை, சினிமா உலகத்தைப் பொடிபண்ணி திரைக்கு வெளியே தூவுகிறது சேனல்கள். ரசிகப்பெருமக்கள் விழுந்துகிடக்கிறார்கள்.

நான் விளம்பரத் துறையில் இருந்தபோது அங்கு "Black Box" என்று வீடியோ கேஸட்டுகள் இருக்கும். இந்திய, அகில உலக நாடுகளில் எடுக்கப்பட்ட அருமையான விளம்பரப்படங்கள் அடங்கின கேஸட் அது. அது ஓட ஆரம்பிக்குமுன் டைட்டிலில் "Advertisements without the interruption of stupid programs" என்று போடுவார்கள். நான் அந்த ஹாஸ்யத்தை ரசித்திருக்கிறேன்.

இப்போது என்னிடம் ஒரு நல்ல கலர் டி.வி இருக்கிறது. ரங்கநாதன் தெரு முக்கில் வாங்கின ப்ளாஸ்டிக் கவர் அணிவித்த ரிமோட் இருக்கிறது. எப்போதாவது நேரம் கிடைத்தால் நல்லதும் கெட்டதுமாய் வண்டி வண்டியாய் கொட்டிக்கிடக்கிற அத்தனை சேனல்களினிடையே சிலவற்றைத் தேர்ந்தெடுத்துப் பார்க்கிறேன். அதில் நல்லதும் இருக்கிறது. கெட்டதும் இருக்கிறது. எது எப்படியிருந்தாலும் நான் முதன்முதலில் தரிசித்த மற்றும் ஸ்பரிசித்த அந்த முதல் டி.வியின் வாசனையை இப்போது உணரமுடியவில்லை.

12 comments:

  1. "டி.வி நிகழ்ச்சிகளின் நடுவே அவன் அம்மாவின் அன்பான டீ கிடைக்கும். ஆனால், அதுவும் கருப்பு வெள்ளைதான்,அபாயமான உடைகளில் M டிவியில் 11 மணிக்குமேல் மாவு அரைக்க ஆரம்பித்தார்கள்",
    போன்ற வரிகளை மிகவும் ரசித்தேன்.அருமை...!

    ReplyDelete
  2. நல்லா எழுதியிருக்கீங்க சித்ரன்..எனக்கும் டி.வி. நினைவுகள் மலர்ந்தன!! மாமா, மாமி வீட்டுக்கு விடுமுறைக்கு போகும் பொழுது மாமாவின் பெண் தான் டி.வி பார்க்கப் போகும் வீட்டிற்கு போய் 'என் அத்தைப் பெண்ணும் வரலாமா ஒளியும் ஒலியும் பார்க்க?" என்று முன்னாடியே சென்று பர்மிஷன் கேட்டுட்டு வருவாள். இப்ப என்னடாவென்றால் அறைக்கு ஒரு டி.வி இருந்தாலும் சண்டை வருகிறது!!

    ReplyDelete
  3. nalla irukku intha pathivu..
    :)

    ReplyDelete
  4. very good article.. i felt like i am talking about my experience.. i remember me going to my friends house to watch the mexican soccer world cup in the night..

    how do you remember the names of all these programs.. i remember nuthan .. in a serial called "kaliganj ki bahu".. she used to come in our paavadai thaavaNi and used to look like a 16 year old..

    thanks for reminding me of the good old days..

    i will try to write an article on my experiences too..

    anbudan vichchu

    neyvelivichu.blogspot.com

    ReplyDelete
  5. 'சுனௌதி' தொடர் பார்த்ததுண்டா?

    ---அந்த கணேஷாகப்பட்டவன் பல சமயம் டி.வியை ட்யூன் பண்ணுகிறேன் பேர்வழி என்று புஸ் என்று சப்தத்துடன் எப்போதும் புள்ளி புள்ளியாய் ஓடவிடுவான்---

    ஓ... ஞாபகார்த்தமாய் வலைப்பதிவின் பெயர் 'புள்ளி'யா?

    --வாழ்க்கையில் நிறைய பொறுமையை கற்றுக்கொண்டது இந்த காலகட்டத்தில்தான் என்று சொல்லலாம்--

    ஆஹா... இன்றும் இந்தப் படங்கள் பசுமையாய் இருக்கிறது

    ReplyDelete
  6. nice article...
    remineded me the days when we got the first BPL B&W TV Ajit 310.
    My parents wanted to sell it long back. But adamantly I told that I need it and it is still working along with other two color TVs in my home...

    ReplyDelete
  7. really a superb article. It bought live my school days. Especially oliyum oliyum and sunday evening picture.

    ReplyDelete
  8. Excellent article. The style is amazing and he has brought out the feeling of all of us. It just looked like a replay of my own life with respect to TV. hats off to 'Chithran' - V.Sridhar.

    ReplyDelete
  9. ஓ too much டி.வி feelings மாமா. Good.

    ReplyDelete
  10. டிவி வந்ததுலருந்து இப்ப வரைக்கும் அழகா படம் பிடிச்சு எழுதிருக்கீங்க.

    -இனியவன்

    ReplyDelete
  11. \\அருகில் போனால் அந்தக்கால ப்ளாக் அண்ட் ஒயிட் டி.விக்கு ஒரு வாசனைகூட இருந்ததாக ஒரு உணர்வு.// சரியாகச் சொன்னீர்கள். இந்த ஒரு வர்ணனையிலேயே நான் அந்தக் கால கட்டத்துக்கே போய்விட்டேன். அருமையாக எழுதியிருக்கிறீர்கள் சித்ரன். பை த பை, பிளாக் தலைப்பில் புள்ளி, சித்ரன் என்கிற எழுத்துக்கள் அத்தனை அழகு!

    ReplyDelete
  12. மிக்க நன்றி ரவிபிரகாஷ் சார். நான் ஒரு கிராஃபிக் டிசைனராகவும் இருப்பதானால் ஏற்பட்ட செளகரியம்தான் அழகான இந்த ப்ளாக் வடிவமைப்பு.

    ReplyDelete

இந்தப் பதிவைப் பற்றிய உங்கள் கருத்து?