கலையும் கலை சார்ந்த இடமும்

சென்னை கவின் கலைக் கல்லூரிக்கு (Madras Collage of Fine Arts) எதையாவது சாக்கிட்டு ஒரு முறையாவது போய்வர வேண்டும் என்பது என் நீண்டநாள் ஆசையாக இருந்தது. பின்னே ஓவியத்தின்பால் கொஞ்சம் ஆர்வம் வைத்திருக்கிற நான், அதுவும் சென்னையிலேயே இருந்துகொண்டு இதைப் பண்ணாமலிருந்தால் எப்படி?

போன வாரம் அந்த வாய்ப்புக் கிடைத்தது. ஆபிஸில் திடீரென கரெண்ட் கட்டாகி சும்மா உட்கார்ந்திருந்த நேரத்தில் போகலாமா என்று பாஸ் கூப்பிட்டார். ஆனால் சும்மா அல்ல. சந்தோஷ் என்கிற ஒரு நண்பன் கவின்கலைக் கல்லூரி வளாகத்திற்குள் வைத்திருந்த புகைப்படக் கண்காட்சியை பார்ப்பதற்கு.

நான் முன்பே எதிர்பார்த்திருந்த மாதிரி இல்லாமல் வேறு விதமான தோற்றத்தோடு இருந்தது கவின் கலைக் கல்லூரி. ஒரு குறுகலான கேட்டைத் தாண்டிப் போனால் அதற்கப்புறம் அதிகம் நடக்கிறதுக்கு வகையில்லாமல் உடனடியாக கட்டிடங்கள் வந்துவிடுகின்றன. சந்தோஷின் புகைப்படக் கண்காட்சி வாசலை ஒட்டின ஒரு ஹாலிலேயே இருந்தது. நல்ல கான்ட்ராஸ்ட்டுடன் கூடிய அழகிய புகைப்பட முயற்சிகள். இன்னும் உழைத்தால் பெரிய அளவில் வர வாய்ப்பு உண்டு.

கல்லூரி வளாகத்தினுள் நிறைய மரங்கள். மரங்கள் உதிர்த்த ஏராளமான சருகுகள். வளாகம் சுத்தம் செய்யப்பட்டு ஒரு மாமாங்கம் இருக்கும் என்றாலும் அதுவே அந்த சூழ்நிலைக்கு ஒரு இயற்கை அழகுபோல் பொருந்தியிருக்கிறது. மரங்களுக்கு நடுவில் ஆங்காங்கே முழுசாகவும், சிதைந்தும் நிறைந்து கிடக்கிற சிலைகள். எல்லாம் மாணவர்களாலோ அல்லது ஆசிரியர்களாலோ உருவாக்கப்பட்டவை. பல கோணங்களில் பல போஸ்களில் ஒரு முதியவர் சிலை ஆங்காங்கே கண்ணில் பட்டது. அந்தப் பெரியவர் அந்த கல்லூரிக்கு மாடலாக வேலை செய்கிறவராம். ரொம்பத் தள்ளாடி பலவீனமாக நடந்துவரும் அந்தப் பெரியவர் ஓய்வு நேரங்களில் எப்போதும் ஏதாவது குறுகிய இடத்திலேயே உடலைச் சுருக்கிக் கொண்டு உட்கார்ந்து டீ குடிப்பாராம். ஆனால் மாடலிங் க்ளாஸ் நடக்கும்போது ஆயிரம் வாட்ஸ் வெளிச்சத்தில் ஒரே கோணத்தில் அசையாமல் மூன்று நான்கு மணி நேரம்கூட உட்கார்ந்திருப்பாராம்.

மரத்தடியில் அரட்டையடித்தபடி மாணவர்களில் அதிகம்பேர் பெண்பிள்ளை மாதிரி நடுமுதுகு வரை தலைமுடி வளர்த்தியிருந்தார்கள். சிலபேர் குடுமி அல்லது கூந்தலை நன்றாகச் வாரி ரப்பர் பேண்ட் போட்டிருந்தார்கள். (போனி டெய்ல்?) அதிக பட்ச உடை ஜீன்ஸ் மற்றும் பனியனாக இருந்தது. தாங்கள் கலைஞர்கள் என்றோ மற்றவர்களிடமிருந்து ஏதோ ஒன்றில் வித்தியாசப்படுகிறோம் என்கிற செய்தி அறிவிப்பு அவர்களின் நடை, உடை, பாவனைகளில் இருக்கிறது. எனக்குத் தெரிந்த ஓவிய நண்பர்கள் ஓரிருவர்கூட அவ்வாறேதான் இருக்கின்றனர். நிறைய தலைமுடியும், மீசையும் தாடியும் எப்போதும் கலையின் அடையாளச் சின்னம் போலும்.

இன்றைக்கு க்ளாஸ் எதுவும் இல்லையா என்று சந்தோஷிடம் கேட்டபோது, இரண்டாம் வருடம் முதல் அப்படியொன்றும் கட்டாயமாய் மாணவர்களை உட்கார வைத்து வகுப்பெடுக்கிற வழக்கம் கிடையாது என்றும், கல்லூரி நேரங்களில் புற உலகிற்குப் போய் தாமாகவே பார்த்தும், கேட்டும் பயிற்சி செய்தும் கற்றுக்கொள்கிற சுதந்திரம் மாணவர்களுக்கு அளிக்கப்பட்டிருக்கிறதென்றும் சொன்னான்.

அப்புறம் கொஞ்சமாய் அவர்கள் கவின்கலை உலகின் கூடங்களை ஒரு வலம் வந்தோம். முதலில் சிலைகள் உருவாகிற இடம். மான், மனிதன் என ஏகப்பட்ட ப்ளாஸ்டர் ஆஃப் பாரிஸ் மோல்டுகள். க்ளே மாடலிங் பண்ணுவதற்கு நிறைய களிமண் கொட்டப்பட்டிருந்தது. செய்கிற சிலைகளுக்கு சப்போர்ட்டாக வளைக்கப்பட்ட கம்பிகள் ஆங்காங்கே. குவிந்து கிடக்கிற மோல்டுகள். எல்லாக் கூடங்களும் இயற்கையாய் அதனதன் லட்சண சொரூபத்துடன் பழமை கவிந்து கிடக்கின்றன. நீங்கள் சினிமாவில் பார்த்து மகிழ்ந்திருக்கும் வில்லன்களின் அல்லது தீவிரவாதிகளின் கொட்டடி போன்ற தோற்றத்துடனேயே எல்லாக் கூடங்களும், அவற்றிற்குப் போகிற வழிகளும் இருந்தன என்றாலும் அப்படி இயல்பாய், இயற்கையாய் இருப்பதே அந்த கலை சார்ந்த இடத்தின் மதிப்பையும் சிருஷ்டிப்புத் தன்மையும் கூட்டுகிற விதமாய்த் தோன்றியது. எத்தனையெத்தனையோ பெரிய கலைஞர்களையும், ஓவியர்களையும் உருவாக்கிய இடமல்லவா அது.

திரும்பிய பக்கமெல்லாம் சுவர்களில் (ஒரு இடம் விடாமல்) ஓவியக் கிறுக்கல்கள். க்ளேஸ், களிமண், ப்ளாஸ்டர் ஆஃப் பாரிஸ் இன்ன பிற பொருட்கள் உபயோகித்து ஆங்காங்கே கூடங்களின் மூலைகளில் சில மாணவர்கள் சின்னச் சின்னதாய் சிலை முயற்சிகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். ஒரு க்ளே மாடலிங் கூடத்திலிருந்து சாவதானமாய் வெளிவந்த நாயைப் பார்த்து நான் புருவம் உயர்த்தியபோது, அது நாய் அல்ல எங்களின் மாடல் என்று பதில் வந்தது. உள்ளே மாணவர் ஒருவர் விதவிதமாக ஒரே நாயை பல போஸில் களிமண்ணால் சின்னச் சின்னதாக சிலையாகப் பண்ணிக்கொண்டிருந்தார். படுத்திருக்கிற மாதிரி, தலையை சொறிவது மாதிரி, சோம்பல் முறிப்பது மாதிரி, நின்று முறைப்பது மாதிரி என நிறைய. அந்த நாயை ஐந்து மாதமாக ஸ்டடி செய்து பண்ணினதாம். Every dog has a day என்று இதைத்தான் சொல்கிறார்களா?

நேரமாகிவிட்டது என்பதால் ஓவியக் கூடங்களை இன்னொரு நாள் வந்து பார்க்கலாம் என்று ஆபிஸூக்குத் திரும்பி வந்துவிட்டோம். திரும்பும்போது வாழ்க்கையில் ஏதோ ஒரு பெரிய விஷயம் கிடைக்காமல் போனமாதிரி ஒரு இழப்பின் பரிதவிப்பு. இன்னும் அணையாமல் மனதின் ஏதோ ஒரு மூலையில் சுடராய் எரிந்துகொண்டிருக்கிற ஓவியத் தாகம்தான் அன்றைய தினம் என்னை அங்கே கொண்டு போயிற்று எனலாம். கதைகளும் நாவல்களும் படிக்க ஆரம்பித்தது மாதிரியே ஓவியம் வரைய ஆரம்பித்ததும் கூட ஆறாங்க்ளாஸில்தான் என்று சொல்லலாம். முதலில் ஒரு மான் வரைந்து கலரடித்தது ஞாபகம் இருக்கிறது. அப்படியே கிறுக்கிக்கொண்டிருந்ததில் சித்திரம் கைப்பழக்கம் ஆகியிருந்ததால் என்ஜினியரிங் படிக்கும்போது ட்ராயிங் க்ளாஸில் வரும் ஆர்தோக்ராஃபிக் ப்ரொஜக்ஷன், ஐஸோமெட்ரிக் ப்ரொஜக்ஷன் எல்லாம் என்னை அத்தனை பயமுறுத்தியிருக்கவில்லை. அரஸ், மணியம் செல்வம் போன்றோரின் ஓவியங்களையெல்லாம் பார்த்து அச்சு அசலாக வரைகிற என் கைத்திறனை மூக்கின் மேல் விரல்வைத்து வியக்கிறவர்களுக்கு அத்தனை ஓவிய ஞானம் இல்லாமலிருந்ததால் தப்பித்தேன். கிடைத்த இடத்திலெல்லாம் தவறாமல் பெண் படம் வரைகிற பழக்கத்தை அப்பாகூட எப்போதும் வன்மையாகக் கண்டித்தவண்ணம் இருந்தார். அப்புறம் எந்த வீட்டுக்குக் குடிபோனாலும் அடுப்புக் கரி கொண்டு சமையலறை சுவரில் தத்ரூபமாய் ஒரு கண் வரைந்து வைப்பேன். (பெண்ணின் கண்தான்). மனதில் இலக்கிய ஆர்வம் கவிந்தபிறகு நண்பர்கள் சேர்ந்து உருவாக்கிய கையெழுத்துப் பத்திரிக்கையில் நானே ஆஸ்தான ஓவியன்.

பின்னாளில் அட்வர்டைஸிங் துறைக்கு வந்ததும் அப்புறம் க்ராபிக்ஸ் மல்டிமீடியா என்று தாவினதுக்கும் என் ஓவியப் பயிற்சிகள்(!) நிச்சயம் துணை புரிந்தன எனலாம். இருந்தாலும் முறையாக ஓவியம் கற்றுக்கொள்ளவேண்டும் என்று மனதின் ஓரத்தில் லேசாய் ஒரு ஆசை இருந்தது. முடியவில்லை. இப்போதெல்லாம் என்றைக்காவது ஒரு நாள் பென்ஸிலையும் பேப்பரையும் எடுத்து வைத்துக்கொண்டு ஒரு அரைமணி நேரம் கிறுக்கினாலே ஜாஸ்தி. அத்தோடு என் ஓவிய தாகம் அணைந்துவிடுகிறது.

வாய்ப்பு அமைந்தால் எனக்கென்று ஒரு தனி அறை அமைத்துக்கொண்டு, அறை மத்தியில் (அல்லது மூலையில்) ஓவியம் வரைவதற்கான ஈஸல், பேலட்டுகள், தூரிகைகள், வாட்டர்கலர்கள், ஆயில் பெயிண்டிங் கலர்கள், கொஞ்சம் கேன்வாஸ், லின்ஸீட் ஆயில் இன்னபிறவற்றை கடைபரப்பிக் கொண்டு கொஞ்ச நாள் வாழவேண்டும் என்று என்னிடம் கனவொன்று இருக்கிறது. அங்கே நான் எதுவும் வரையாவிட்டாலும் பரவாயில்லை.

2 comments:

  1. மிக நன்றாக உள்ளது

    posted by: siva Pillai

    ReplyDelete
  2. last line 'dhool' maamu! ethuvum varaiyavitalum parava illai. great endpa!

    with love
    s.p.siva kumar trichy-20

    ReplyDelete

இந்தப் பதிவைப் பற்றிய உங்கள் கருத்து?