மாயாஜாலம்

எங்களுக்கு வில்சன் என்றொரு நண்பர் இருந்தார். கவனிக்கவும். 'எங்களுக்கு' என்று குறிப்பிட்டிருக்கிறேன். காரணம் எனக்கு மட்டுமே அவர் நண்பரல்ல என்பதுதான். எங்கள் செட்டான ஒரு ஐந்தாறு பேருக்கும் பொதுவான நண்பர் அவர். சுமார் பதினைந்து வருடங்களுக்கு முன் நாங்கள் வசித்துக் கொண்டிருந்த காலனிக்கு சற்றுத் தள்ளி நெடுஞ்சாலையில் அவர் வீடிருந்தது. வில்சன் எங்களையெல்லாம் விட பல வயது மூத்தவர் என்பதால் நாங்கள் எல்லோரும் அவரை அண்ணா என்றுதான் அழைப்போம். அவரும் ஒரு அளவிடற்கரிய ஸ்நேகத்துடன் 'தம்பிகளா..' என்று எங்களை அழைப்பது நன்றாய் இருக்கும். அடர்த்தியாய் தாடிவிட்டுக்கொண்டு, சற்றே உயரமாய் கொஞ்சம் மீடியம் உடம்புடன் இருப்பார். சற்றே பிசிறடித்த ஆனால் கம்பீரமான குரல் அவருடையது.

வில்சன் ஒரு மேஜிக் நிபுணர். கோவை மாவட்டத்துக்கு உட்பட்ட சுற்றுவட்டாரத்தில் அப்போதே 250-க்கும் மேற்பட்ட மேடைகளில் அவர் மேஜிக் நிகழ்ச்சி பண்ணியிருந்தார். நீங்கள் வழக்கமாய் மேஜிக் ஷோ-க்களில் கண்டு ரசித்திருக்கும் தொப்பிக்குள்ளிருந்து புறா எடுப்பது. சீட்டுக் கட்டுகளைக் கொண்டு வித்தை காண்பிப்பது, வாய்க்குள்ளிருந்து கோழி முட்டைகளை எடுத்துக்கொண்டேயிருப்பது, நியூஸ்பேப்பரை விரித்துக் காண்பித்துப் பின் அதை மடக்கி அதனுள்ளிருந்து தண்ணீர் கொட்டவைப்பது போன்ற வழக்கமான ஐட்டங்களோடு பெட்டிக்குள் ஆளை நிற்கவைத்து ரம்பம் வைத்து அறுத்து நாலைந்து துண்டாக்கிவிட்டுப் பின் ஆளை மறுபடி உயிரோடு(!) கொண்டு வருதல் போன்ற மெகா மாயாஜாலங்களையும் மேடைகளில் செய்வார். நிகழ்ச்சிகளின்போது கோட்டு சூட்டெல்லாம் போட்டு தலையில் நீளத் தொப்பி, கையில் மந்திரக்கோல் என்று ஃப்ரொப்ஷனலாகத்தான் தோன்றுவார். என்னதான் எங்கள் நண்பர் என்றாலும் எவ்வளவோ மன்றாடியும் அவர் பண்ணுகிற மேஜிக் ரகசியங்களைப் பற்றி மூச்சுவிட மாட்டார். போனால் போகிறதென்று ஒரு நாலணா காசை முழங்கையில் தேய்த்துத் தேய்த்து எப்படி மறைய வைப்பது என்கிற ட்ரிக்கை மட்டும் சொல்லிக் கொடுத்தார். வெகு சுலபமாக நான் கற்றுக் கொண்ட அந்த வித்தை குழந்தைகளிடம்தான் செல்லுபடியாகும். பெரியவர்கள் புத்திசாலிகளாக இருந்தால் கண்டுபிடித்துவிடுவார்கள். காலனி முக்கில் நாங்கள் கூடிப் பேசிக்கொண்டிருக்கிற இடத்துக்கு அவர் வந்து நின்றால் சடக்கென்று ஏதாவது எளிய வித்தை செய்து காட்டி அசத்துவார். உதாரணம் : என் சட்டைப் பாக்கெட்டில் கைவிட்டு பத்து ரூபாய்த்தாள் எடுத்து அதை நான்காக மடித்து வலது கை ஆள் காட்டி விரலுக்கும், நடு விரலுக்கும் இடையே வைத்து விஸ்ஸ்க் என்று இடதுகை உள்ளங்கையில் தட்டினார். மறுநொடி ரூபாய் நோட்டு அவரது இரண்டு கைகளிலும் இருக்காது. பத்து ரூபாயைத் திருப்பித் தரவேண்டுமானால் என் அப்பாவிடம் சொல்லி அவரிடம் டி.வி கேபிள் கனெக்ஷன் எடுத்துக் கொள்ள வேண்டும் என்றார். ஆம். அவர் அந்த ஏரியாவுக்கு கேபிள் கனெக்ஷன் கொடுக்கிற வேலையையும் பார்த்து வந்தார்.

கேபிள் கனெக்ஷன் என்றால் அப்போதெல்லாம் தூர்தர்ஷன் தவிர எதுவும் கிடையாது. ஆனால் அதில் வெள்ளிக் கிழமை எட்டு மணிக்குப் போடுகிற ஒலியும் ஒளியும் பார்ப்பதற்கே எல்லார் வீட்டிலும் அப்படியொரு முன்னேற்பாடு நடக்கும். வில்சன் ஒவ்வொரு மதியமும் சினிமா வீடியோ கேசட்டுகளை வைத்து அவர் வீட்டிலிருந்தே ஒளிபரப்ப அது காலனி முழுக்க எல்லோருடைய டி.வியிலும் தெரிகிற டெக்னலாஜியை வியந்துகொண்டிருந்தோம். ஒரு தடவை கார்த்திக் படமான இரட்டைக் குழல் துப்பாக்கி என்கிற படத்தை கேபிளில் ஒளிபரப்பி காலனி தாய்மார்களிடம் வாங்கிக் கட்டிக்கொண்ட சம்பவமும் உண்டு. அப்போது சன் டிவியெல்லாம் கிடையாது. ஆனால் வில்சன் சன் டி.வி-யின் (ராஜ்?) முதல் முயற்சியான 'பூமாலை' என்கிற கேசட்டை போட்டு அவ்வப்போது ஒளிபரப்புவார். நாட்டு நடப்புகள், இசை நிகழ்ச்சிகள், காமெடி ஷோ, சினிமா பாட்டு என்று கலவையாய் மாதமொருமுறை தொகுத்து கேசட் வடிவில் வெளியிடப்பட்டுக் கொண்டிருந்ததுதான் பூமாலை என்று பெயரிடப்பட்ட அந்த கேசட். அதுதவிர வில்சன் புண்ணியத்தில் தூர்தர்ஷனில் ஞாயிறு மதியம் 1.00 மணிக்கு NFDC படங்களான எல்லா ஆர்ட் ஃபிலிம்களையும் உட்கார்ந்து பார்ப்போம். ஒன்றும் புரியாவிட்டாலும்.

வில்சன் வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் விழா மேடைகளில் தோன்றி மைக் பிடித்து கம்பீரமாய்ப் பேசுவார். பேசுகிற விஷயங்களில் நிச்சயம் சமூக அக்கறை தொனிக்கும். அவர் பொள்ளாச்சியில் 'மனிதம் சேவை மையம்' என்கிற சமுக அமைப்புக்குத் தலைவராக இருந்தார். அவ்வப்போது நகரில் ரத்ததான முகாம், இலவச கண் பரிசோதனை முகாம் நடத்துவது, ஆதிவாசிகள் மற்றும் மலைவாழ் மக்களுக்கு உடைகள் சேகரித்துக் கொடுப்பது போன்ற காரியங்களில் தீவிரமாய் ஈடுபட்டிருந்தார். நாங்களெல்லோரும்கூட மனிதத்தில் உறுப்பினராகி அவருடன் சேர்ந்து சுற்றி சமுக சேவை செய்துகொண்டிருந்தோம். அவ்வப்போது ஆட்டோவில் மைக் வைத்து அறிவித்துக்கொண்டு சுற்றியிருக்கிற காலனிகளில் வீடுவீடாகப் போய் உடைகள் சேகரித்து ஆதிவாசிகளுக்கு கொண்டுபோய் வழங்குவோம். தவிர மனிதம் வெளியிட்டுக்கொண்டிருந்த "மனிதம் செய்திகள்" என்கிற சிற்றிதழில்(?) சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட சமுக ஆக்கப்பணிகள் பற்றிய விவரங்கள் போக மீதி இருந்த இடத்தில் நாங்கள் கதை, கட்டுரை, கவிதைகள், படித்ததில் பிடித்தது, ஜோக்ஸ் என்று எதையாவது எழுதுவோம். சரசுராம் இதற்கு ஆசிரியராய் இருந்தார். ராஜீவ் காந்தி இறந்த சமயத்தில் அவர் எழுதின உருக்கமான கட்டுரையை முன்னாள் சி.பி.ஐ இயக்குநர் D.R. கார்த்திகேயன்கூட படித்துப் பாராட்டினார்.

ஒரு தடவை சாயங்காலம் ஐந்து மணிக்கு வில்சன் வேகமாய் வந்து நெகமம் அருகில் சேரிபாளையம் என்கிற ஊரில் நடக்கிற நவராத்திரி கலை விழாவில் அன்றைக்கு அவரின் மேஜிக் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகவும், அதன்கூடவே நீங்களெல்லாம் சேர்ந்து சைடில் கலை நிகழ்ச்சி செய்கிறீர்களா என்று கேட்டார். ஏழு மணிக்கு ப்ரோக்ராம் என்றார். இரண்டு மணி நேரத்திக்குள் என்னத்தைத் தயார் பண்ணுவதென்று எங்களுக்கு ஒன்றும் புரியவில்லை. இருந்தாலும் அரை மனதாய் சரி என்று தலையாட்டிவிட்டு பரபரவென்று இரண்டு மணி நேரத்துக்குள் டாக்டர் கடீஸ்குமார் என்கிற காமெடி நாடகத்தை நான் மற்றும் நண்பர்களான ராம் (சரசுராம்), மீனாட்சி சுந்தரம் உட்கார்ந்து எழுதி முடித்துவிட்டோம். ஒரு சில நண்பர்களை வைத்து கடகடவென்று ஏழு மணிக்குள் ரிகர்சலும் பார்த்து வில்சனுடன் வேனில் கிளம்பிவிட்டோம். நான் அதில் ஒரு நோயாளி கேரக்டர். கூடவே நரம் தினசரி கேட்கிற ரேடியோ செய்திகளை நகைச்சுவையாய்த் திரித்து நான் அதை வாசிப்பது என்றும் முடிவு செய்து, வண்டி சேரிபாளையம் போய் சேர்வதற்குள் ராம் ஒரு முழு வெள்ளைத்தாளில் அதை இரண்டு பக்கத்துக்கு எழுதியும் கொடுத்துவிட்டார். அதோடு 'டிஸ்கோ டான்ஸ் ஆடிக் கலக்குகிறேன்' என்று தானாக முன்வந்த மஞ்சு என்ற பொடியனும் வேனில் ஜிகினா உடை சகிதம் தொற்றிக் கொண்டான்.

மின்நகர் கீதம் குழுவினரின் கலைநிகழ்ச்சிகள் இன்னும் சில நொடிகளில் ஆரம்பம் என்று மைக்கில் அமர்க்களமாய் அறிவித்துவிட்டு ஆரம்பித்தோம். அன்றைக்கு சேரி பாளையத்தை ஒரு வழி பண்ணிவிட்டோம் என்றுதான் சொல்லவேண்டும். மஞ்சு என்கிற அந்தப் பையன் அப்போது சக்கைபோடு போட்டுக்கொண்டிருந்த ஹாசன் ஜகாங்கீரின் "ஹவா ஹவா" பாட்டுக்கு அட்டகாசமாய் டான்ஸ் ஆடி பின்னி எடுத்துவிட்டான். அவசரகதியில் பண்ணின இந்த ஏற்பாடுக்கு அத்தனை வரவேற்பா என்று சத்தியமாய் நம்பமுடியவில்லை எங்களால். கொஞ்சம் கற்றுக்குட்டித்தனமாகவே இருந்தாலும் எங்கள் நாடகத்தையும், நியூஸையும் ரசித்துப் பார்த்த / கேட்ட சேரிபாளையப் பொதுமக்கள் சிரித்த சிரிப்பு இன்னும் மனதுக்குள் பத்திரமாய் இருக்கிறது. வில்சனுக்கோ ரொம்ப சந்தோஷம். இதற்கு நடுவே இப்போது நினைத்தாலும் நாங்கள் விழுந்து விழுந்து சிரிக்க நேரிட்ட சில வெளியே சொல்ல முடியாத சம்பவங்களும் நடந்தன.

அதற்கப்புறம் வில்சன் மேஜிக் ஷோ போகிற இடத்துக்கெல்லாம் எங்களைக் கூப்பிட ஆரம்பித்தார். நாங்கள் பிறகு நான்கைந்து மேடைகளில் வில்சன் தயவால் இன்னும் சில அயிட்டங்கள் சேர்த்து எங்கள் கலைத்திறமையைக் காட்டினோம். பிறகு பொள்ளாச்சி காந்தி மண்டபத்தில் நடைபெற்ற புத்தாண்டுக் கலைநிகழ்ச்சியில் நண்பனொருவன் டயலாக்கை முழுங்கிவிட்டு பேந்தப் பேந்த முழிக்க, ஆடியன்ஸிடமிருந்து விசிலும் கூக்குரலும் வர அத்தோடு எங்கள் கலைப் பயணம் முடிவுற்றது. இந்தக் கூத்துக்கெல்லாம் இப்போது இணையத்தில் எழுதும் எழுத்தாளர் ஒருவரும் சாட்சியாக இருந்தார்.

சுகமான நினைவுகளை ஞாபகப்படுத்தும் பழைய உருப்படிகளை எப்போதும் பத்திரப்படுத்தி வைக்க நினைக்கும் என்னிடம் 'மனிதம் செய்திகளின்' ஒரு சில பிரதிகளும், ஏழெட்டு மேடைகளில் நான் வாசித்த நகைச்சுவை செய்திகளின் பிரதியும் இருக்கின்றன. இரண்டு வருடங்களுக்குமுன் நான் பணியாற்றிய கம்பெனியின் "கெட்-டுகதர்" ஹோட்டல் ப்ரீஸில் நடந்தபோது செய்தி வாசித்ததில் கொஞ்சமாய் சிரித்துவைத்தார்கள். விரும்பிக் கேட்கிற நேயர்களுக்கு Footer-ல் காப்பிரைட் சித்ரன் என்று போட்டு அந்த செய்திகள் ரகசிய ஈமெயிலில் அனுப்பிவைக்கப்படும். செய்திகள் வாசிப்பது ரகுநாதவர்ம விஜயபுர சேதுபதி கணேச சுந்தரபாண்டிய குலோத்துங்க வீர வெங்கடேஷ்வர யோகி ஜகந்நாத சூர்யகாந்திப் பிரகாசராவ்....

நண்பர்கள் வேலை நிமித்தம் ஆளுக்கொரு திசைக்குப் பிரிந்தபிறகு வில்சனைப் சந்திக்கமுடியவில்லை. விசாரித்தபோது அவர் சொல்லாமல் கொள்ளாமல் வேறு ஏதோ ஊருக்கு குடும்பத்துடன் காலிபண்ணிவிட்டுப் போய்விட்டதாகப் பின் தகவல் கிடைத்தது. அவரிருக்கிற இடம் யாருக்கும் தெரியவில்லை. மனிதம் சேவை மையம் இப்போது இல்லை. வில்சனிடமிருந்து கற்றுக்கொண்ட ஒரே ஒரு நாலணா மேஜிக்கை இப்போது சமயம் கிடைக்கும் போதெல்லாம் என் பையனுக்கு செய்து காண்பித்துக் கொண்டிருக்கிறேன்.

இந்த மாதிரி நட்புகள் என்னிடமிருந்து காணாமல் போகிறதா அல்லது நான்தான் அவர்களிடமிருந்து காணாமல் போய்விடுகிறேனா என்று எப்போதுமே எனக்கு ஒரு சந்தேகம் உண்டு. ஏதாவது மேஜிக் பண்ணி அவர்களை என் முன்னால் வரவழைத்துவிட முடியாதென்பது தெரியும். தேடினால் நிச்சயம் கிடைப்பார்கள்.

No comments:

Post a Comment

இந்தப் பதிவைப் பற்றிய உங்கள் கருத்து?