Showing posts with label சேவை. Show all posts
Showing posts with label சேவை. Show all posts

மனிதம் எனப்படுவது யாதெனில்

கருத்த தேகம். குழி விழுந்த இரு கண்கள். தன் போக்கில் காடு போல் அடர்ந்து படர்ந்த தாடி மீசைக்குப் பின்னால் தொலைந்து போன முக அடையாளம். சிக்குப் பிடித்த ஜடை முடி. எங்கேயோ வெறித்த பார்வை. எத்தனையோ வருடங்களுக்கு முன்னால் அணிந்த இன்னும் கழற்ற முடியாத கிழிந்து கந்தலான உடை. சிறியதும் பெரியதுமாய் உடம்பு முழுவதும் தொங்கும் அழுக்கப்பிய எண்ணற்ற மூட்டைகள். அதற்குள் பொறுக்கிச் சேகரித்த அழுக்குத் துணிகள் மற்றும் காகிதங்கள். ஒரு பொக்கி்ஷத்தைப் போல அவைகளை தன் உடம்பிலிருந்து இறக்க மறுத்து சுமையோடு அலைகிற கால்கள். புண்கள். புண்களின் அரிப்பை அடக்க வழி தெரியாமல் அதன் மேல் சுற்றிக் கட்டின, குப்பையிலிருந்து பொறுக்கின பாலிதீன் பைகள். புண்களில் நெளியும் புழுக்கள். எச்சில் வழிகிற வாயிலிருந்து சதா மந்திரம் போல திரும்பத் திரும்ப அலைகிற புரியாத வார்த்தைகள். எதையோ தேடிக்கொண்டும், சைகை செய்துகொண்டும் காற்றில் வளைந்து நெளிகிற விரல்கள்.

மன நிலை பிறழ்ந்து சுய நினைவற்று தான் யாரெனத் தெரியாமல் (அல்லது தெரிந்து) மேற்சொன்ன மாதிரியான தோற்றத்துடன் தெருக்களில் அலைகிற சிலரை நான் பார்த்திருக்கிறேன். அப்போதெல்லாம் எனக்கு மனதில் சில கேள்விகள் ஓடும். யார் இவர்கள்? ஏன் இப்படி ஆனார்கள்? பிறந்ததிலிருந்தே இப்படியிருக்க வாய்த்துவிட்டதா இவர்களுக்கு? அல்லது நடுவில் ஏதோ ஒரு சம்பவம் அவர்கள் வாழ்க்கையை இப்படி புரட்டிப் போட்டதா? எங்கே பிறந்து எப்படியெல்லாம் வளர்ந்தார்கள்?

உடுமலையில் வசித்தபோது மணி என்று ஒருவன் எங்கள் தெருவில் சுற்றிக்கொண்டிருப்பான். தவறாமல் அவன் தோளிலும் இரு மூட்டைகள். ஒன்றில் உடைந்த, உடையாத அல்லது உடைந்து ஒட்டவைக்கப்பட்டவை என வித விதமாய் ஏராளமான மூக்குக் கண்ணாடிகள். இன்னொரு மூட்டையில் முழுக்கப் முழுக்க ஐந்து பைசா, பத்துப் பைசாவாக சில்லறை நாணயங்கள். சாப்பாடு கொடுத்தால் வாங்கிக் கொள்வான். பாடச் சொன்னால் மூட்டைகளை இறக்கி வைத்துவிட்டு, இரு ஆள்காட்டி விரல்களையும் காதுக்குள் சொருகிக் கொண்டு ஆட்டியபடியே "கண்களும் கவி பாடுதே..." என்று தன்னை ஒரு பாகவதராய் உருவகப்படுத்திக்கொண்டு பாடுவான். தினம் ஒரு மூக்குக் கண்ணாடியைப் போட்டுக்கொண்டும் திரிவான். லூசு என்று எல்லோராலும் விளிக்கப்படுகிற அவன் தெருவிலேயே எங்காவது தூங்குவான். சில நேரம் சிறுவர்கள் அவன் மீது கல் வீசுவதும் உண்டு.

இன்னொருவன் இருந்தான். முதல் பாராவில் சொன்ன தோற்றமுடையவன் அவன். எப்போதும் விரல்கள் மடக்கி மடக்கி சதா கணக்குப்போட்டுக்கொண்டிருப்பான். அல்ஜீப்ரா ஃபார்முலா எதையாவது கேட்டால் தலைகீழாய் ஒப்பிப்பதைப் பார்த்து அப்போது பத்தாம் வகுப்புப் படித்துக்கொண்டிருந்த நான் மிக வியந்திருக்கிறேன். இம்மாதிரி ஆட்களின் தோற்றத்தையும், நடவடிக்கைகளையும், மன நிலையையும் பார்த்து பரிதாபப்பட்டு நாமெல்லாம் உடனே இடத்தை காலிசெய்து விடுகிறோம். அவர்களை அணுகி அவர்களின் பூர்வீகத்தையோ, பிறப்படத்தையோ, கடந்த காலத்தையோ அறிந்து கொள்ள நமக்கு ஒரு நாளாவது தோன்றியிருக்குமா? நமக்கோ ஆயிரம் வேலை. ஆறாயிரம் குடைச்சல்.

இந்த மாதிரி ஆட்களை அழைத்துப் போய் அவர்களைக் கழுவிக் குளிப்பாட்டிச் சுத்தம் செய்து, சவரம் செய்து, மருத்துவ சிகிச்சை அளித்து, பளிச்சென்று நல்ல உடைகளை உடுக்கச் செய்து கொண்டு வந்து நிறுத்தினால் நிச்சயம் அவர்களது தோற்றம் என்னைப் போலவோ உங்களைப் போலவோதான் இருக்கும். அவர்களுக்குள் அத்தனை நாள் ஒளிந்திருந்த பழைய பொலிவான மனிதன் வெளிப்படும்போது நமக்கு நம்பமுடியாத திகைப்பும், அதிர்ச்சியும் காத்திருக்கும். ஆனால் இதையெல்லாம் யாராவது செய்வார்களா? அத்தனை கருணை உள்ளமெல்லாம் யாருக்கு வாய்த்திருக்கிறது இங்கே? எல்லோரும் விலகிச் செல்கிறபோது நெருங்கி முன்வந்து அதைச் செய்கிறவரை கடவுள் என்று கருதிவிட மாட்டோமா? அப்படி யாராவது இருக்கிறார்களா என்ன?

இருக்கிறார். அவர் பெயர் முகம்மது ரஃபி.

ரஃபி செய்து கொண்டிருக்கிற அரிய காரியம் இப்படிச் சாலையோரமாய் மனநிலை பிறழ்ந்து திரியும் ஜீவன்களை அழைத்துச் சென்று, அன்பு காட்டி அரவணைத்து, உரிய சிகிச்சை அளித்து அவர்களை மீண்டும் மனிதர்களாக்க முயற்சிப்பது. இது போன்றவர்களை வைத்துப் பராமரிக்க போதிய பண வசதி இல்லாத நிலையில் தன் குடும்பத்தாரை ஊருக்கு அனுப்பிவிட்டு தன் வீட்டையே காப்பகமாக்கினவர். இந்தியா பிளாஸ்டிக் என்ற பெயரில் சொந்தமாக தொழில் புரிந்துவரும் ரஃபி அதில் கிடைக்கும் வருமானத்தின் ஒரு பகுதியிலும், நண்பர்கள் அளிக்கிற நன்கொடைகளின் துணை கொண்டும் வளர்ந்த இந்தக் காப்பகம் பலருக்கு நல்ல வழியைக் காட்டியிருக்கிறது. ரஃபியின் சேவையைக் கண்டு வியந்த ஹிந்து பத்திரிக்கை ஒரு ஆம்புலன்ஸ் வண்டியை நன்கொடையாக வழங்கியிருக்கிறது. மேலும் சென்னை சில்க்ஸ் நிறுவனம் காப்பகம் கட்டுவதற்காக அன்பளிப்பாக அளித்த ஒரு நிலத்தில் நண்பர்களின் தன்னார்வம் மிக்க சிலரோடு சேர்ந்து ஒரு சேவை அமைப்பை ஏற்படுத்தி, நல்ல காப்பகம் ஒன்றை உருவாக்கி அதற்கு 'அன்பகம்' என்று பெயரிட்டிருக்கிறார். சென்னையிலிருந்து முப்பது கிலோமீட்டர் தொலைவில் உருவாக்கப்பட்டிருக்கிற அன்பகம் தற்போது 40 பேரை பராமரிக்கக் கூடிய வசதிகளோடு ஒப்பற்ற சேவையை செய்து வருகிறது. இதுவரை இங்கு பராமரிக்கப்பட்டு, சிகிச்சையாய் குணம் பெற்று அவரவர் குடும்பத்தோடு சேர்த்துவைக்கப்பட்ட மன நோயாளிகளின் எண்ணிக்கை 270. தற்போது 35 பேர் அன்பகத்தில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். முகம்மது ரஃபியின் சேவையைப் பாராட்டி மீனம்பாக்கம் ரோட்டரி சங்கம் அவருக்கு "For the Sake of Honour Award" என்னும் விருதை வழங்கி கெளரவப்படுத்தியிருக்கிறது.

முகம்மது ரஃபியின் காப்பகத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு குணமடைந்த மனநோயாளிகளின் சிகிச்சைக்கு முன்பும் பின்புமான புகைப்படங்கள் மட்டுமே இப்போதைக்கு காணக் கிடைத்தன. பார்த்தால் வியப்பில் நிச்சயம் நம் கண்கள் விரியும். முன்பு அழுக்குக் குப்பையாய் அவலட்சணமாய் அடையாளமற்றுத் திரிந்து கொண்டிருந்தவர்கள் ரஃபியின் கைபட்டு மறு அவதாரம் எடுத்திருக்கிற புகைப்படங்கள். அந்த புகைப்படங்களிலிருந்து ஒரு சாம்பிள் கீழே கொடுத்திருக்கிறேன்.

யாரும் செய்யத் துணியாத ஒரு காரியத்தைச் சேவையாய் செய்துவரும் திரு. முகம்மது ரஃபிக்கு என் சிரம் தாழ்ந்த வந்தனங்கள்.