முதல் பாடல்

‘ஆத்தாடி... ஒரு பறவ பறக்குதா...’

நான் எழுதிய முதல் திரைப்பாடல் இது. 2012 ஆம் வருடம் பிறந்த கையோடு ஒரு சுப தினத்தில் மதிப்பிற்குரிய முன்னாள் குடியரசுத் தலைவர் திரு. அப்துல் கலாம்  வெளியிட இதோ இந்தப் பாடல் இப்போது ஆங்காங்கே ஒலிக்கவும் ஆரம்பித்துவிட்டது. படம்: கிருஷ்ணவேணி பஞ்சாலை.

கல்கி இதழில் முதல் சிறுகதை வெளியானபோது மனம் எவ்விதமான குதூகலத்தில் மிதந்ததோ அதற்கு இணையாக இப்போதும் உணர்கிறேன். மனதுக்குள் ஒரு பறவை பறக்கிறது.

பரவசமும் பயமும் கலந்த ஓர் உணர்ச்சி வந்து சேர்ந்திருக்கிறது. நீண்ட வரலாறு கொண்ட தமிழ்த் திரையுலகில் எத்தனையோ கவி ஜாம்பவான்களுக்கு நடுவே ஒரு ஓரமாய் ஒரு துணுக்காக நானும் அறிமுகப்படுத்தப்படுகிறேன் என்பது பரவசம். அவர்கள் சாதித்ததில் ஒரு சில துளிகளாவது நானும் சாதிக்கவேண்டுமே என்பது பயம்.



இதன் மூலகாரணமாக இருந்த நண்பரும் இயக்குநரும் ஆன தனபால் பத்மநாபனுக்கும், இசையமைப்பாளர் என். ஆர். ரகுநந்தன் அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

குழந்தையாக இருந்தது முதற்கொண்டு இன்று வரை வாழ்வின் பின்னணியில் சதா ஒலித்துக்கொண்டிருந்த பல்லாயிரம் தமிழ்த் திரைப்பாடல்களை ரசித்துத் திளைத்திருந்த எனக்கு முதன் முதலாக நான் எழுதிய வரிகள் திரை இசையால் உயிர்பெற்று அதை நானே கேட்பதை உன்னதமான தருணமாக உணர்கிறேன்.

இந்தப் பாடல் ஒரு ரொமான்ஸ் டூயட்-டாக அமைந்தது நல்ல விஷயம். ஒரு பஞ்சாலையை பின்னணிக் களமாகக் கொண்டது. முதலில் திருகலான வரிகளுடன் கொஞ்சம் கவித்துவமாகத்தான் எழுதிக்கொடுத்தேன். இசையமைப்பாளரும் இயக்குநரும் எல்லோருக்கும் புரியும்படி எளிமையாக இருக்கட்டுமே என்று கேட்டுக்கொண்டதிற்கிணங்க முயற்சித்ததில் அனைத்து தரப்பினருக்கும் பிடிக்கும் ஒரு பாடலை எழுத முடிந்திருக்கிறது என்று நம்புகிறேன். இந்தப் பாடலைக் கேட்டுவிட்டு நண்பர்களிடமிருந்து வந்த பெரும்பாலான கருத்துக்களின் சாரம் இவ்வாறு இருக்கிறது. “தெளிவான, எளிமையான, சுகமான இசையுடன் என்பதுகளின் திரைப்பாடல் கேட்பதுபோன்ற இதமான அனுபவம்”. இந்தப் பாடல் பரவலாக எல்லோராலும் ரசிக்கப்படும் என்கிற நம்பிக்கையைத் தருகிறது இது.

பயணங்கள் முடிவதில்லை, நான் பாடும் பாடல் போன்ற படங்களில் மட்டுமே பார்த்திருந்த ரெக்கார்டிங் ஸ்டுடியோக்களில் விஜய் பிரகாஷ், சித்தாரா போன்ற முன்னணிப் பாடகர்கள் பாட அருகிலிருந்து பார்த்த பாடல் பதிவுகள் கூடுதல் அனுபவம்.

தென்மேற்குப் பருவக்காற்று திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளரான என். ஆர். ரகுநந்தன் மிகத் துடிப்பான ஒரு மனிதர். தமிழ் திரையிசையின் நுணுக்கங்களை விரல் நுனியில் வைத்திருப்பவர். தெ.மே.பருவக்காற்றுக்கு அப்புறம் வரிசையாய் நிறைய படங்கள் கைவசம் சேர ஆரம்பித்தாலும், நல்ல ப்ராஜெக்ட்டுகளை மட்டும் தேர்ந்தெடுத்து கவனமாக இசையமைத்துக்கொண்டிருக்கிறார். கிருஷ்ணவேணி பஞ்சாலை படத்தின் பாடல்கள் தவிர இவர் அதற்கு அமைத்திருக்கும் பின்னணி இசையும் ரசிகர்களிடையே தனித்த கவனம் பெறும் என்பதிலும், ஒரு முன்னணி இசையமைப்பாளராக இவர் உருவாகிக் கொண்டிருக்கிறார் என்பதிலும் சந்தேகமே இல்லை.

தனபால் பத்மநாபன் வித்தியாசமான பின்னணியுடன் அமைந்த இத்திரைப்படத்தினை மிகுந்த சிரத்தையுடன் உருவாக்கியிருக்கிறார். தமிழ்த் திரைப்பட வரலாற்றில் முதல் முதலாக காஸ்டிங் டைரக்டர் என்ற ஒரு பதவியில் நடிகர் திரு சண்முகராஜாவை இப்படத்தில் அறிமுகப்படுத்தியிருக்கிறார். பாடல்களுக்கான காட்சிகளும் அதிசயராஜ் மற்றும் சுரேஷ் பார்கவ்-வின் ஒளிப்பதிவில் அருமையாக வந்துள்ளது. பிப்ரவரியில் வெளிவந்துவிடும் என்று தெரிகிறது.

பாடலைக் கேட்க:. http://soundcloud.com/info4u-chennai/aathaadi-oru

13 comments:

  1. இப்புதிய துவக்கம் நெடும்பயணமாய்த் தொடர வாழ்த்துகள் சித்ரன்.

    ReplyDelete
  2. முதல் முதலாக காதல் டூயட் பாடவந்தேனே..பாடல் ஞாபகத்துக்கு வருது..


    வாழ்த்துக்கள் ரகு சார் ! சீக்ரமே உங்க ஆட்டோகிராப் வாங்கி வச்சுக்கணும்..

    ReplyDelete
  3. ‘ஆத்தாடி... ஒரு பறவ பறக்குதா...’
    really it good song and other songs also good

    ReplyDelete
  4. all songs is good in this film.
    your songs also very good

    ReplyDelete
  5. very nice.weldon ragu. marai nj,usa

    ReplyDelete
  6. மகிழ்ச்சி..வாழ்த்துகள் தோழர்..தொடர்ந்து பயணியுங்கள்..

    ReplyDelete
  7. வாழ்த்துகள் சித்ரன். நல்ல பாட்டு, ரசித்தேன்!

    ReplyDelete
  8. நெடுநாட்களுக்கு பிறகு ரசித்து கேட்ட நல்ல பாடல். சொன்னதுபோல, 80களில் கேட்கும் பாடலின் தொனி மிகவும் அருமை. வார்த்தைகள் புரியும் விதமான இசையும் பாடலை ரசித்தமைக்கு முக்கிய காரணம். வாழ்த்துக்கள் .. மேலும் நிறைய எதிர்பார்ப்புடன்..

    ReplyDelete
  9. எனது முதல் பாடல் அநேகம் பேருக்குப் பிடித்திருப்பது மகிழ்வைத் தருகிறது. நண்பர்கள் அனைவருக்கும் நன்றிகள்.

    ReplyDelete
  10. raghu,
    This one will be a sure hit song.very nice to listen..
    congrats

    ReplyDelete
  11. பழய வரிகள்

    ReplyDelete
  12. very nice ragu. wish u all success.

    ReplyDelete

இந்தப் பதிவைப் பற்றிய உங்கள் கருத்து?