குழலினிது

ஆடியோ ஸிஸ்டத்தில் கொஞ்சம் புல்லாங்குழலிசையை வழியவிட்ட பிறகே இந்தப் பதிவை எழுதுகிற மூடு வந்தது. அதுவும் புல்லாங்குழலிசை பற்றிய அல்லது அதற்கும் எனக்கும் உள்ள சொற்பமான தொடர்பு பற்றிய விஷயம் என்பதால் அது தேவைப்படுகிறது. எங்கேயோ காட்டில் விளைகிற மூங்கில் துண்டொன்றில் ஏழோ எட்டோ துளை போட்டு அதற்குள் கொஞ்சம் மூச்சுக் காற்றை அனுப்பி விரல்களால் வருடினால் மனதையும் உயிரையும் சுருட்டிப் போட்டுவிடுகிற மாயத்தை அது நிகழ்த்தி விடுகிறதெப்படி என்பது எனக்கு இன்னும் யோசித்துத் தீராத ஆச்சரியமாயிருக்கிறது.

சின்ன வயசிலிருந்தே இந்தக் காற்றுக்கருவி மீது அமோக மோகம். ஆல் இண்டியா ரேடியோவில் பாடல்கள் கேட்டு வளர்ந்த பருவத்திலிருந்தே பாடல்களை விட “கேப் ம்யூஸிக்” (Gap Music) என்று நானாகவே பெயர் வைத்துக் கொண்ட சரணங்களுக்கு நடுவே வருகிற இசையை உற்றுக் கேட்பது பழக்கம். அதிலும் முக்கியமாய் ஏதாவது குழலிசைத் துண்டு வந்தால் இன்னும் உன்னிப்பாக. எம்.எஸ். விஸ்வநாதனின் பாடல்களிலிருந்து இந்தத் தேடல் தொடர்ந்து வந்தது. இதன் விளைவாக என்றாவது ஒருநாள் நானும் என் விருப்ப இசைக்கருவியான புல்லாங்குழலை கற்றுக் கொண்டே தீருவேன் என்றொரு ஆசையோ வைராக்கியமோ ஏதோ ஒன்று மனதில் கூடு கட்டியிருந்தது. எம்.எஸ்.வி-யிலிருந்து இளையராஜாவுக்குத் தாவி அப்புறம் திரைப்படப் பாடல்களும் வாழ்க்கையும் பிரிக்க இயலாத ஜோடிகளான பிறகு பு.குழலின்மேல் அதை இசைப்பவர்களின் மேல் தனி மரியாதை தொடர்ந்தது.

இளையராஜா புல்லாங்குழலை பாடல்களில் பொருத்தமான இடங்களில் மிக்ஸ் பண்ணுவதில் கைதேர்ந்தவர் என்பதற்குச் சாட்சியாக பல பாடல்களைச் சொல்லலாம். இவருடைய ஃப்ளுட்டிஸ்ட் அருண்மொழி என்று கேள்விப் பட்டிருக்கிறேன். அதிகாலை நிலவே, நானென்பது நீயல்லவோ, ஆதாமும் ஏவாளும் போன்ற பாடல்களை இளையராஜாவின் இசையில் பாடியவர். இவர் புல்லாங்குழல் விளையாடின திரைப்படப் பாடல்கள் ஏராளம். அதென்னமோ இளையராஜாவின் புல்லாங்குழல் கேட்கிறபோது எங்கேயோ ஒரு கிராமத்தின் தென்னந்தோப்புக்குள் ஸ்லோமோஷனில் ஓடிக்கொண்டிருப்பது மாதிரி ஒரு எஃபெக்ட்தான் எப்போதும் கிடைக்கிறது. அவர் ’போவோமா ஊர்கோலம், இந்தமான் எந்தன் சொந்தமான் ’ மாதிரியான கிராமப் பின்னணியில் அமைந்த படங்களுக்கே இந்தக் கருவியை பிற்காலத்தில் நிறைய உபயோகப்படுத்தினார் என்பதனாலோ என்னவோ.

ஹரிப்பிரசாத் செளராஸியாவின் குழலிசையை இளையராஜா “Nothing but wind" மூலம் நம் காதுகளில் ஒலிக்கவிட்ட போது சோறு தண்ணியில்லாமல் திரும்பத் திரும்ப அதையே கேட்டுக் கொண்டு கிடந்தேன். அவர் புல்லாங்குழலை இன்னும் எந்தெந்தப் பாடல்களில் எப்படியெல்லாம் உபயோகப்படுத்தினார் என்றெல்லாம் இந்த ஒரே ஒரு பாராவுக்குள் சொல்லமுடிகிற காரியமில்லை என்பதால் இத்தோடு நிறுத்திக் கொள்கிறேன்.

ரஹ்மான் வந்த பிறகு இந்த புல்லாங்குழலிசையில் ஏதோ ஒரு மாற்றம் வந்து சேர்ந்துவிட்ட மாதிரி தெரிந்தது. அது இளையராஜாவினுடைது போலல்லாமல் வேறுமாதிரி இன்னும் கொஞ்சம் ஆழமாக, இன்னும் கொஞ்சம் உருக்கமாய் உயிரை நிரடியது. என்னவளே, மார்கழிப் பூவே, அஞ்சலி அஞ்சலி, பம்பாய் தீம் ம்யூசிக், வெள்ளி நிலவே, என் மேல் விழுந்த மழைத்துளியே, ஜாக்கி ஷ்ராஃப் ஊர்மிளாவைத் துரத்தும் ஹேராமா ஏ க்யாகுவா எல்லாவற்றிலும் ஏதோ கொஞ்சம் புதுசாய் இதுவரை கேட்காத ஒரு தவிப்பு துடிப்பு அழுத்தம் எல்லாம் சேர்ந்த கலவையாய் இருந்தது. எத்தனை முறை கேட்டாலும் சலிக்கவில்லை. அப்புறம் யாரோ சொன்னார்கள் நவீன் என்று ஒருத்தர்தான் ரஹ்மானின் புல்லாங்குழலார் என்று. மனதை லயிக்க வைக்கிற விதமாய் இப்படி அனுபவித்து வாசிக்கற ஆளைப் பற்றித் தெரிந்துகொள்ளலாம் என்று தேடியபோது விவரங்கள் சிக்கின. ஆசாமி கோலிவுட்டில் அநேகம் இசையமைப்பாளர்களால் தேடப் படுகிற படு பிஸியான ஃப்ளூட்டிஸ்டாம். ரஹ்மானுக்கு பாம்பே ட்ரீம்ஸ் வரை வாசித்திருக்கிறார். "Fluid" என்று ஒரு ஆல்பம் வெளியிட்டிருக்கிறார். இவர் சமீபத்தில் ஆனந்தத் தாண்டவம் படத்தில் இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமாருக்காக வாசித்த தீம் ம்யூசிக் கிறங்கடிக்கிறது. (காற்றலை சுழற்சியிலே என்ற பாடலின் இசை வடிவம்.) . நவீன் வாசித்ததனால் என்றில்லாமல் புல்லாங்குழலைப் பொறுத்தவரையில் ராஜாவைவிட ரஹ்மான்தான் என்னை அதிகம் உருக்கினதும் உலுக்கினதும். (ஆனால் நான் ஒரு தீவிர ராஜா ரசிகனும்கூட என்பதை தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.)

எம்.எஸ்.வி, ராஜா, ரஹ்மான் பாடல்களில் புல்லாங்குழலின் பயன்பாடு பற்றி யாரவது எழுதினாலோ சொன்னாலோ (அல்லது வாசித்துக் காட்டினாலோ நான் கேட்கத் தயாராக இருக்கிறேன்.)

நான் வேலை செய்த ஒரு கம்பெனியின் மானேஜிங் டைரக்டர் கோவை பி.எஸ்.ஜி காலேஜின் இசைக்குழுவுக்குத் தலைமை வகித்தார் என்கிற வகையில் புல்லாங்குழல் நன்றாக வாசிப்பார். அவர் மேசையில் 3, 4 1/2 என்றெல்லாம் நம்பர் போட்டு நிறைய புல்லாங்குழல் வைத்திருப்பார். அலுவலகத்தில் என்றாவது ஒருநாள் திடீரென்று மின்சாரம் நின்று விட்டால் அப்புறம் கச்சேரிதான். அதாவது நான் அவரை வாசிக்கச் சொல்லிக் கேட்டுக் கொண்டிருப்பேன். ”அஞ்சலி அஞ்சலி” அவருடைய ஃபேவரிட். அப்புறம் அவரது இசை நண்பர் பாலு ஒருநாள் அங்கே வர திடீரென ஆர்வம் வந்து அவரிடம் புல்லாங்குழல் கற்றுக்கொள்ளச் சேர்ந்துவிட்டேன். சேர்வதற்குமுன் என்னிடம் குழலைக் கொடுத்து ஊதச் சொல்லி சப்தம் வருகிறதா என்று பரிசோதித்தார். பிரமாதமாக வந்தது. வெஸ்டெர்ன் கற்றுக் கொள்ளத்தான் நான் சேர்ந்தது என்றாலும் ஒரிஜினல் கர்நாடக புல்லாங்குழலை (இதில் எட்டு துளை இருக்கும். வெஸ்டெர்னில் ஏழுதானாம்.) எனக்குக் கொடுத்து வாசிக்கச் சொன்னார். எட்டாவது துளைக்கு என் சுண்டுவிரல் எட்டாமல் போனதாலோ, காலை ஆறரைக்கு தி.நகரிலிருந்து கோடம்பாக்கம் வரை போக சோம்பேறித்தனப் பட்டதாலோ இரண்டே மாதங்களோடு என் இசைப் பயணத்தை முடித்துக் கொண்டேன். அப்புறம்தான் தெரிந்தது எனக்கு இருந்தது கற்றுக் கொள்கிற ஆசை மட்டுமே தவிர வைராக்கியம் அல்ல என்று. ஆக உலக இசை ரசிகர்கள் ஒரு பெரிய ஆபத்திலிருந்து தப்பித்துக் கொண்டார்கள்.

அப்போது வீட்டுக்கு வருகிற விருந்தாளிகள் பார்வையில் படுகிறமாதிரி அந்த கர்நாடக புல்லாங்குழலை வரவேற்பறையில் தொங்கவிட்டிருப்பேன். அப்புறம் அதைப் பார்க்கிறவர்கள் என்னை ஒரு பெரிய சங்கீத சிரோன்மணி என்கிற தோரணையில் பார்க்கத் தொடங்கியபோது எடுத்து உள்ளே வைத்துக் கொண்டேன். பின் எவ்வளவு நாள்தான் எனக்குத் தெரிந்த ஒரே ட்யூன் ஆன “mary had a little lamb" -ஐ மட்டுமே அவர்கள் கேட்கிறபோது வாசித்துக் காட்டிக்கொண்டிருக்க முடியும்?.

அவரிடம் கற்றுக் கொண்ட வெஸ்டெர்ன் நோட்ஸ் அறிவை வைத்துக் கொண்டு பின்னாளில் கீபோர்டில் ”மலரே மலரே உல்லாசம்” (பல்லவியை மட்டும்) வாசிக்க முடிந்தபோது யாருக்கும் தெரியாமல் ரகசியமாய் என்னை நானே வியந்து பாராட்டிக்கொண்டேன்.

மாலி, சஷாங், சவுராஸியா போன்ற அருமையான புல்லாங்குழல் கலைஞர்கள் பற்றி இங்கே பேசவேண்டுமானால் அவர்களைப் பற்றியும், அவர்களது இசையைப் பற்றியும் நான் நிறைய தெரிந்து வைத்திருக்க வேண்டியிருக்கிறதென்று தோன்றுவதால் விட்டுவிடுகிறேன்.

ராகம் தாளம் என்று இசையை பகுத்துணர்ந்து கேட்கத் தெரியாது. சாஸ்திரிய சங்கீதத்தின் அடிப்படைகள் புரியாது. ஸ்ருதி லயம், ஆரோகணம் அவரோகணம், அபஸ்வரம் இன்னபிற சங்கீத சங்கதிகள் பற்றிய ஞானமில்லை. ஆனால் இசை என்பது அநேக சமயங்களில் காதுகளுக்குள் இறங்கி வட்ட வட்டமாய் அலைகள் பரவுகிற ஒரு குளத்தின் மேற்பரப்பு மாதிரி மனசுக்குள் அலையெழுப்பும்போது உணர்ந்து ரசிக்கத் தெரிந்தால் போதாதா? கேட்கத் தெரியும். ரசிக்கத் தெரியும். சொல்லப்போனால் பீச்சில், ரயிலில் புல்லாங்குழல் விற்பவர்கள் அத்தனை பேரும் சொல்லிவைத்த மாதிரி வாசிக்கிற “பர்தேஸி பர்தேஸி ஜானா நஹி” என்கிற ஒரே ட்யூனைக்கூட இன்னும் ஆச்சரியமாய் கேட்டுக் கொண்டிருக்கிறேன். இந்த வகையில் இந்த அளவிலான இசை ரசனையே எனக்குப் மிகப் பெரும் வாழ்வியல் திருப்தியைத் தருகின்றது. குழலைப் பொறுத்தவரையிலும் கூட அதுவேதான்.

உதாரணத்திற்கு கலோனியல் கசின் ஆல்பத்தின் கிருஷ்ணா நீ பேகனே -வின் நடுவில் வருமே ஒரு flute interlude!! அதை பன்னிரண்டு வருடமாய் கேட்டுக்கொண்டே இருக்கிறேன். அதேபோல் ரன் படத்தின் பனிக்காற்றே தீம், போறாளே பொன்னுத்தாயி ஓபனிங்..

வேண்டாம்! பெரிய லிஸ்ட் அது!

4 comments:

  1. //இசை என்பது அநேக சமயங்களில் காதுகளுக்குள் இறங்கி வட்ட வட்டமாய் அலைகள் பரவுகிற ஒரு குளத்தின் மேற்பரப்பு மாதிரி மனசுக்குள் அலையெழுப்பும்போது உணர்ந்து ரசிக்கத் தெரிந்தால் போதாதா? //

    அருமை. அதுவே போதும்தான். பதிவைப் படித்து முடிக்கிற வரை பின்னணியில் ஒரு புல்லாங்குழல் இசை கேட்டுக் கொண்டேயிருந்தது.

    ReplyDelete
  2. I wanted to say the same thing as SRK.
    It is enough to get drenched in the music.

    You've written so well and sounded my opinion too. Only difference is
    "I still keep the flutes in the hall openly" and play sometimes.

    I like the interlude in the song "Oh Vennila" from "Kadhal Dhesam".

    I like the most in a Ghazal named "Madhushala" sung by "Manna De", written by Harivansh Rai Bachchan (father of Amithab Bachan).
    Pl. listen that full collection of ghazals. It made a great change in my life.I came across that song in 1990.

    ReplyDelete
  3. hai ji, what you said is very right.AR is defenitely a flute king.

    ReplyDelete
  4. இசை இன்பம் பிளாக்கில் உங்களின் பின்னூட்டத்தைப் பார்த்து விட்டு வருகிறேன். இசை இன்பத்தில் ​என் பின்னூட்டத்தில் புல்லாங்குழல் கலைஞர் நவீன் பற்றிக் குறிப்பிட்டிருந்தேன். இங்கே உங்களிடம் அவர் பற்றி நல்ல குறிப்புகள் கிடைக்கின்றன.
    இளையராஜா இசையில் புல்லாங்குழல் மெலடியாகத்தான் அதிகம் பயன்பட்டிருகிறது. சில ​பேக்ரவுண்ட் ஸ்கோர் அப்புறம் சுந்தரி கண்ணால் ஒரு சேதி போன்ற பாடல்களுக்கு புல்லாங்குழலை திடமாக உபயோகப்படுத்தியிருப்பார். நத்திங் பட் வின்டில் கூட கடைசியாக வரும்​கோர்வை மெட்டாலிக்காக மிக வித்யாசமாக இருப்பதைக் ​கேட்கலாம்.
    ஏ.ஆர்.ஆர். படத்தில் நீங்கள் ​சொன்ன எல்லாப் பாடல்களும் குழலிசைக்கு பிரசித்திப் பெற்றவையே.
    ரஹ்மான் புதுக்கருவிகளை நாடி பயன்படுத்துபவர். தனிக்கலைஞர்களுக்கு தன் இசையில் பங்கு​கொடுக்கிற அதே அளவுக்கு ஸிந்தஸைஸ் செய்தும் இசையை வேறுபரிமாணத்தில் கொடுக்கக் கூடியவர்.
    வித்யாசங்கர் இசையமைத்த சில பாடல்களில் புல்லாங்குழல் கவர்கிறது. உதாரணமாக, அன்பே சிவம் படத்தின் பூவாசம் புறப்படும் கண்ணே பாடல், அப்புறம் ரன் படத்தில் வரும் (ஆனா வராத) பாடலான பனிக்காற்றே பனிக்காற்றே (நீங்களும் குறிப்பிட்டது மகிழ்ச்சி!) உள்ள புல்லாங்குழல் இசை இவையும் ரசிக்கத்தக்கன.

    சுவாரஸியமாக எழுதியிருக்கீங்க, வாழ்த்துக்கள்!

    ReplyDelete

இந்தப் பதிவைப் பற்றிய உங்கள் கருத்து?