புதிய முகங்கள். புதிய கதைகள்.

இருபத்தைந்து வருடங்களுக்குமுன் நான் படித்த கல்லூரியின் வகுப்பு தோழர்களுடன் சுத்தமாக தொடர்பு அற்றுப்போயிருந்த நிலையில் திடீரென்று இந்த இரண்டு நாட்களாக ஏகப்பட்ட தொலைபேசி அழைப்புகள். எப்படியெப்படியோ என்னைத் தேடிக் கண்டுபிடித்து ஒவ்வொருவராக பேசிக்கொண்டிருந்தார்கள். நான் எப்படி அவர்களைத் தேடிக்கொண்டிருந்தேனோ, அதே மாதிரி சில பேர் என்னையும் வெகுநாட்களாகத் தேடிக்கொண்டிருந்திருக்கிறார்கள். கூடப் படித்தவர்களில் ஒருவர் கூட தொடர்பிலில்லை என்ற நிலை மாறி இப்போது கிட்டத்தட்ட எழுபது பேரின் தொலைபேசி எண்கள் கிடைத்திருக்கின்றன.

நானும் சிலரை தொடர்புகொண்டு பேசினேன். பேச்சில் நிறைய பழைய, புதிய சுவாரஸ்யமான கதைகள் வலம் வந்தன. அதே உற்சாகம், அதே நட்பு, சில பேர் உழைப்பால் உயர்ந்த நிலைக்குப் போயிருக்கிறார்கள். சிலருக்கு வாழ்க்கை வேறுவிதமான அனுபவங்களைக் கொடுத்திருக்கிறது. காலம் ஒவ்வொருவரையும் ஒவ்வொரு இடத்தில் ஒவ்வொரு சூழ்நிலைகளில் ஒவ்வொரு மாதிரி வைத்திருக்கிறது என்பதை உணரமுடிந்தது.

’ரங்கராஜ் எங்கடா இருக்கான். அவனுக்கு நான் ரெண்டாயிரம் ரூபா கடன் தரணும்..” என்று எண்பதுகளின் இறுதியில் வாங்கின கடனை இப்போது திருப்பிச் செலுத்தத் துடிக்கிற ஒருவன். நான்கடி உயரத்தில் ஒல்லியாக, குள்ளமாக, ’ஷை’ டைப்பாக இருந்த, “குட்டி மணி” என்று ஒரு காலத்தில் அழைக்கப்பட்ட, ஆனால் இப்போது உயரமாய், வளர்த்தியாய் தமிழ்ப்பட ஆந்திரா வில்லன் போல சுமோவில் வந்திறங்கும் ஒருவன் என பலப்பல கதாபாத்திரங்கள். தோற்றங்களை மாற்றுவதற்கான சாத்தியக்கூறுகளை மீசை தாடியில்தான் ஆரம்பிக்கிறது இயற்கை. பின்னர் முன்வழுக்கையாக, தொந்தியாக தொடர்கிறது. அவர்களின் ஃபேஸ்புக் புகைப்படங்களிலிருந்து இன்னார் என்று அடையாளப்படுத்திக்கொள்வதே சிரமமாக உள்ளது. சிலபேர் அப்படியே இருக்கிறார்கள். அல்லது அது பழைய புகைப்படங்களாக இருக்கவேண்டும். ஓரிரு நண்பர்கள் இறந்துவிட்டார்கள்.

தொலைபேசியில் நண்பர்கள் “ஆனந்த் தெரியும்ல, செந்தில்குமார் நினைவிருக்கா.. அப்புறம் நம்ம மாணிக்கவாசகம் இருக்கான்ல..” என்றெல்லாம் கேட்கும்போது அவர்களின் முகங்கள் சட்டென்று ஞாபகத்தில் அகப்படாமல் மனதில் அலைக்கழிப்பு நிகழ்வது தர்மசங்கடம்தான். செந்தில்குமார் போன்ற பொதுவான பெயர்கள் தரும் குழப்பம் ஒரு புறம் இருக்க, நினைவில் பதிந்து போன முகங்கள் ஞாபகமறதியால் தேய்ந்துபோய்விட்டன. நண்பர்களுக்கும் அப்படித்தான். இருபத்தைந்து வருடங்கள் நிறைவதை முன்னிட்டு 2014-ல் ஒரு அலும்னி சந்திப்புக்கு ஏற்பாடுகள் நடக்கின்றன. பழைய நட்பின் புதிய முகங்களைக் காணவும், இன்னும் புதிய கதைகளைக் கேட்கவும் காத்துக்கொண்டிருக்கிறேன்.

1 comment:

  1. சூப்பர்..நான் முதுகலை முடித்து அடுத்த வருடம் 25 வருடங்கள் நிறைவு பெறுகிறது. தேடி தேடி 4 பேரை பிடித்து விட்டேன். ஆனால்,யாருமே ஃபேஸ்புக்கில் இல்லை என்பது தான் ஆச்சரியம். அலும்னி சிறக்க வாழ்த்துக்கள்.

    ReplyDelete

இந்தப் பதிவைப் பற்றிய உங்கள் கருத்து?